காந்தி கூறிய ஒற்றை வரிக்கு உயிர்கொடுக்கும் பொருட்டு தரம் பால் அவர்கள் பெரும் சிரத்தை எடுத்து 18-ஆம் நூற்றண்டு இந்தியாவில் இருந்த பாரம்பரியக் கல்வி பற்றி மிக விரிவாகவும், தரமாகவும் ஆய்வு மேற்கொண்டு எழுதிய புத்தகம் “அழகிய மரம்”.
உணவில், உடையில், நடவடிக்கையில் முக்கியமாக சிந்தனையில் மேற்கத்தியவைகள் தான் சிறந்தது என்றும் நாம் சார்ந்த அனைத்திலும் பெரும் தாழ்வுணர்வுடனும் செயல்பட்டு வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் நம் கல்வி முறை. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் நம்மால் இந்த தாழ்வுமனப்பான்மையை கடக்க முடியாத அளவிற்கு ஆங்கிலேயரின் கல்வி முறை நம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
கல்லூரி ஒன்றில் உரையாற்றும் பொது நீங்கள் கூறியது, “நம் மாணவர்களால் எந்த கருத்தையும் (concept) புரிந்துகொள்ள முடியாது மாறாக அனைத்தையும் தகவல்களாக மட்டுமே உள்வாங்கி கொள்ளமுடியும்” அவ்வாறுதான் நம் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். நம் கல்வியின், சமூகத்தின் மிக முக்கிய பிரச்னை இது.
ஆங்கிலேயர்தான் நவீன கல்வி முறையை இங்கு அறிமுகப்படுத்தி அதன் மூலம் நாகரிக, நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்டார்கள் என்று நமக்கு தொடர்ச்சியாக சொல்லிக்கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இது ஒரு வடிகட்டிய பொய் என்பது மட்டுமன்றி ஆங்கிலேய காலனி ஆட்சிக்கு முன் இந்தியாவின் கல்வி முறை எவ்வாறு சிறப்பாக இருந்தது என்பதை மிக விரிவாகவும், மறுக்க முடியாத தரவுகளுடனும் அழகிய மரத்தில் நிறுவியிருக்கிறார் தரம் பால்.
பிரிட்டிஷார் இந்தியா வருவதற்கு முன்னால் உலகின் பிற பகுதிகளில் கல்வி எப்படி இருந்ததோ அதைவிட மேலான நிலையில் இந்தியாவின் கல்வி இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் காலனி ஆட்சியில் தான் இந்திய கல்வி நிலை மற்றும் தரம் பெரும் வீழ்ச்சி அடைந்தது என்பதை பல்வேறு ஆவணங்கள் மூலம் குறிப்பாக ஆங்கிலேய அதிகாரிகளின் அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் வழியாக நிருபிக்கிறார்.
ஒரு உதாரணத்திற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 15ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டுவரை கற்பிக்கப்பட்ட பாடப்பிரிவுகள், ஒவ்வொன்றிலும் ஆசிரியர், மாணவர்களின் எண்ணிக்கை என்று பல்வேறு தரவுகளை முன்வைத்து அதன்மூலம் இரு தேசங்களின் கல்வி நிலையை பற்றிய மதிப்பீட்டை முன்வைக்கிறார்.
1770களில் இந்திய அறிவு, கல்விமையங்கள் தொடர்பாக மூன்று அணுகுமுறைகள் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்த இந்தியப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறுகிறார். இவை மிக மிக முக்கியமான ஒன்று.
- பிரிட்டிஷாரின் அதிகார பெருக்கம் மற்றும் நிர்வாக தேவைகள்.
- இந்திய நாகரிகத்தை ஆக்கிரமித்து தோற்கடிப்பது
- மக்களை நிறுவனமயப்படுத்தி, எளிய, சட்டத்துக்குட்பட்ட கிறிஸ்துவ சமுதாயத்தை உருவாக்குதல்.
இவற்றின் அடிப்படையில்தான் இந்தியாவிற்கான கல்வி முறை வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக அதை காலனி இந்தியாவெங்கும் திணித்து காந்தி கூறியது போல் அழகிய மரத்தை அழித்துவிட்டார்கள்.
இதற்கு மற்றொரு முக்கிய காரணம் மேற்கத்திய கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்றுபோல் இந்தியாவை ஒன்றும் தெரியாத, பழமைவாதத்தில் மூழ்கிய, நாகரிகமற்ற கிட்டத்தட்ட காட்டுமிராண்டி கூட்டம் என்பதுபோலவும் தங்களை இந்த பாவிகளை இரட்சித்து, காப்பாற்றவேண்டிய பொறுப்பும், கடமையும் தங்களுக்கு உள்ளது என்றும் கண்மூடித்தனமாக நம்பினார்கள். இந்தியாவை பற்றி மார்க்ஸ் போன்றவர்கள் கூட கொண்ட எண்ணம் அதிர்ச்சியளிக்கிறது.
இங்கு புகுத்தப்பட்ட கல்வி என்பது இந்தியர்கள் எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பினார்களோ அவற்றையும் பிரிட்டிஷ்காரரின் புதிய கோணத்திலான விளக்கங்களையும் மட்டுமே.
இந்திய பாரம்பரிய கல்வியானது எவ்வாறு பரந்துபட்டு, சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தது என்பதையும், அந்தந்த கிராம/நகரதில் உள்ள கல்வி மையங்கள் அங்கிருந்த அனைத்து மக்களின் பங்களிப்போடும் எவ்வாறு நடைபெற்றது என்பதையும் விளக்கமாக விவரிக்கிறார். பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் வருமானமானது மைய அதிகாரத்தின் கீழ் குவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தப் பாரம்பரிய அமைப்பு சிதைந்து அழிந்துவிட்டது என்பது மிக முக்கியமான அவதானிப்பு.
பள்ளி/கல்லூரிகளின் எண்ணிக்கை, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை, படித்த மாணவர்களின் ஜாதி, மதம் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாட பிரிவுகள், சமூகத்தால் கல்வி நிலையங்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு, பொருளாதார உதவி அனைத்து தகவல்களும் பிரமிப்பாகவும், ஆச்சர்யமூட்டுவதாகவும் உள்ளது. இன்றுவரை நம் சமூகத்தின் பொதுபுத்திக்கு மேல் சொன்ன தகவல்களுக்கு முற்றிலும் மாறான பிம்பம்தான் உள்ளது என்பது மிகவும் வருத்தமான, வெட்கப்படவேண்டிய விஷயம்.
இந்த புத்தகத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்பது 18ம் நூற்றாண்டு கல்வி நிலையை பற்றி விளக்கும் வேளையில் அன்றைய சமூகத்தின் நிலையையும் ஓரளவு புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
சசிதரூரின் இந்தியாவின் இருண்ட காலம் புத்தகமானது ஆங்கிலேயர் எவ்வாறு நமது வளமான பொருளாதார நிலையை சீரழித்து இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்து சென்றார்கள் என்பதை பற்றி மிக விரிவாக, ஆதாரபூர்வமாக நிறுவுகிறது.
தரம்பாலின் அழகிய மரம், இந்திய பாரம்பரிய கல்வியை அழித்து அதன்மூலம் பல்வேறு சமூக அவலத்திற்கு காரணமாயிருந்த ஆங்கிலேயரின் அராஜகத்தை எடுத்துரைக்கிறது.
ஆங்கிலேய காலனி ஆட்சிக்கு முன் இருந்த இந்தியாவையும், ஆங்கிலேய ஆட்சியின் அவலத்தை பற்றியும் இந்த இரு புத்தகங்கள் நமக்கு ஒரு பெரிய தெளிவை அளிக்கின்றன. குறைந்தது தற்போதுள்ள அரசு இந்த புத்தங்களை ஆசிரியர் பயிற்சி பள்ளியின் பாட திட்டத்தில் கட்டாயப்பாடமாக வைக்கவேண்டும். முதலில் ஆசிரியர்கள் நம்மை பற்றி உண்மை நிலை தெரிந்து அதை மாணவர்களுக்கு போதிக்கட்டும். அதே வேளையில் வெற்று கூச்சலையும், போலி பெருமிதங்களையும் இனங்கண்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.
செந்தில்குமார், சென்னை
***