பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 9
கட்டற்றுப் பெருகி சாலையை நிறைத்துச் சென்றுகொண்டிருந்த மக்கள்திரள் சீப்பால் வகுந்ததுபோல எட்டு நிரைகளாக மாறி அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைமுகப்பு நோக்கி சென்றது. வலது ஓரம் எருதுகள் இழுத்த வண்டிகள். அதையொட்டி பொதியேற்றிய அத்திரிகளும் கழுதைகளும் அடங்கிய மக்கள்திரள். இடதுஎல்லை புரவிகளுக்குரியது. பிற நிரைகள் நடந்துசெல்பவர்களுக்குரியவை. நிரைகளின் நடுவே இரு வடங்கள் இணைசேர்த்து நீட்டிக் கட்டப்பட்டிருந்தன. அரசத்தேர்கள் செல்வதென்றால் அந்த இரு வடங்களையும் இழுத்து விலக்கி இடைவெளி உருவாக்கினர். நிரைபிளந்து உருவான பாதையில் தேர்கள் சகட ஓசையுடன் பட்டுத்திரைகள் நலுங்க, கொடிகள் துவள கடந்துசென்றன. அவற்றின் முன்னால் சென்ற கொம்பூதிகள் உரக்க ஓசையெழுப்பி செல்பவர்களை அறிவித்தனர்.
எட்டு நிரைகளும் அஸ்தினபுரி அஸ்தினபுரி என்று அலைபாய்ந்து கொப்பளித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் பிறரிடம் எதையேனும் சொல்ல விழைந்தார்கள், ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டார்கள். ஏனென்றறியாமல் வெற்று வியப்பொலிகளையும் களியாட்டொலிகளையும் எழுப்பினர். கொம்போசையுடன் எண்நிரை பிளந்து வழியமைய ஒரு சிறிய தேர் ஊர்ந்து சென்று விசைகொண்டது. அதன் கொம்பூதி அறிவித்தது என்ன என்று ஆதனுக்கு புரியவில்லை. ஆனால் படைவீரர்கள் பணிந்து வழிவிடுவதைக் கண்டான். “யார் அது?” என்று தன் அருகே நின்றிருந்த பாணனிடம் கேட்டான்.
“அரசகுடியினர்” என்று பாணன் சொன்னான். “அது தெரிகிறது, எக்குலத்தார்?” என்று அவன் கேட்டான். “நானறிந்த கொடி அல்ல” என்று பாணன் சொல்ல அவனுக்கு அப்பால் நடந்துகொண்டிருந்த முதியவர் “அது சிபிநாட்டுக் கொடி… அங்கிருந்து வந்திருக்கிறார்கள்” என்றார். “அங்கிருந்தா? அது பெரும்பாலைகளுக்கு அப்பாலுள்ள நிலமல்லவா?” என்றான் முன்னால் சென்றுகொண்டிருந்த வணிகன். “நெடுந்தொலைவிலிருந்தெல்லாம் வந்துகொண்டிருக்கிறார்கள். அந்தணர்கள்கூட வருகிறார்கள். நான் நேற்று பேசிய ஒர் அந்தணர்குழு காம்போஜத்தில் இருந்து நடந்தே வந்தது. அவர்கள் ஊர்திகளில் ஏறா நோன்பு கொண்டவர்கள்.”
“நீரால் சுமக்கப்படும் படகுகளில் மட்டுமே அவர்கள் ஏறமுடியும். உயிர்கள் மேல் அவர்கள் ஏறலாகாது” என்றார் முதியவர் ஒருவர். “ஆம், ஆனால் அவர்களிடம் அதற்கு பணமில்லை” என்றான் வணிகன். பாணன் “இங்கே எதற்காக இப்படி பெருகி வருகிறார்கள்?” என்றான். முதியவர் “எண்ணிப்பார், அஸ்தினபுரியின் அரசகுடியினரில் எஞ்சியிருப்பவர் எவர்? கௌரவர் நூற்றுவரும் அவர்களின் மைந்தரும் களம்பட்டனர். பாண்டவ மைந்தரிலும் எவருமில்லை. அரசகுருதியினர் அனைவருமே களம்சென்று உயிர்விட்டிருப்பார்கள். ஆனால் நகர் என்றால் அரசகுடியினர் தேவை. அவர்களின் சொல்லுக்கே மறுக்கப்படாத விசை உண்டு. அவர்கள் இங்கே நூற்றுக்கணக்கில் தேவைப்படுகிறார்கள்…” என்றார். அவர் குரல் தழைந்தது. “ஆனால் ஷத்ரியநாடுகள் எங்கும் அரசகுடியினர் இல்லாமலாகிவிட்டிருக்கிறார்கள். பரசுராமரின் படையெடுப்புக்குப் பின் ஷத்ரியகுடி முற்றழிந்தது இப்போரில்தான் என்கிறார்கள்.” மேலும் குரல் தழைய “ஆகவேதான் சிபிநாட்டிலிருந்தும் மத்ரநாட்டிலிருந்தும் மலைக்குடியினர் அரசகுடியினர் என்று சொல்லி வந்து நகரில் நிறைந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
“அவர்கள் அரசகுடியினர் அல்லவா?” என்று பாணன் கேட்டான். “நீ தென்னகப் பாணன். உனக்கு நான் சொல்வது புரியாது” என்றார் முதியவர். இன்னொருவர் “அவர்கள் தங்களின் நிலத்தில் அரசகுடியினர். பாரதவர்ஷத்திற்கு அல்ல” என்றார். ஆதனுக்கு அது புரியவில்லை. அவன் “அப்படியென்றால்?” என்றான். “எண்ணுக, அசுரர், அரக்கர், நிஷாதர், கிராதர், யவனர் என எல்லா குலங்களிலும் அவர்களுக்குரிய அரசர்கள் உண்டு. அவர்கள் தங்களுக்குரிய நிலத்தை வென்று அங்கே அரசமைத்துக்கொண்டவர்கள். முடிசூடி கோலேந்தி அரியணை அமர்ந்து அப்பகுதியை ஆள்பவர்கள். ஆனால் அவர்கள் ஷத்ரியர்கள் அல்ல. பாரதவர்ஷத்தின் அரசகுடியினர் ஷத்ரியர்கள் மட்டுமே.”
ஆதன் “வெல்பவர்கள், ஆள்பவர்கள் அல்லவா ஷத்ரியர்கள்?” என்றான். “அல்ல” என்றார் முதியவர். “வேதத்தின்பொருட்டு வெல்பவர்கள், வேதத்தை நிறுவி ஆள்பவர்கள் மட்டுமே ஷத்ரியர்கள்.” அவர்கள் அனைவருமே குழம்பி ஒருவரை ஒருவர் நோக்கினர். “ஆகவேதான் ஷத்ரியர்களால் அரக்கர்களும் அசுரர்களும் பிறரும் தொடர்ந்து வெல்லப்படுகிறார்கள். ஆழிவெண்சங்கு ஏந்திய அண்ணலே ரகுகுலத்தில் ராமன் எனப் பிறந்து அசுரர்களையும் அரக்கர்களையும் வென்று வேதத்தை நிலைநிறுத்தினான்.”
ஒரு முதியவர் மெல்லிய நடுக்குடன் இருவரை தோளால் உந்தி முன்வந்தார். “ஆம், நான் வந்ததே அதை பார்க்கத்தான். இங்கே நடப்பதென்ன? இதோ ஷத்ரியர்கள் தங்களைத் தாங்களே கொன்று அழித்திருக்கிறார்கள். அந்த இடங்களில் மலைமக்களும் நிஷாதர்களும் கிராதர்களும் வந்து அரசகுடியென அமர்கிறார்கள். எஞ்சும் அரசகுடியினருக்கு வேறுவழியில்லை. அவர்களிடமிருந்து குருதிபெற்றாகவேண்டும். இனி இங்கே ஷத்ரியக்குருதி என்று ஒன்று இல்லை… ஆம்.” அவருக்கு மூச்சிரைத்தது. “குருதி செத்துவிட்டது. தூய குருதி என ஏதுமில்லை இங்கே.”
அவர் ஏதோ சொல்வதற்குள் இன்னொரு முதியவர் “ஷத்ரியர் அகன்ற நகரில் யாதவர் சென்று நிறைகிறார்கள். இன்று பாரதவர்ஷத்தில் வென்றுநின்றிருக்கும் குலம் யாதவர்களே. அவர்கள் தங்களை முதன்மை ஷத்ரியர் என அறிவித்துக்கொள்கிறார்கள். எதிர்க்க இங்கே எவருமில்லை” என்றார். இன்னொருவர் “ஆம், இங்கே முடிசூடியிருப்பதே யாதவ அன்னையின் குருதிதானே?” என்றார். இன்னொருவர் “நான்கு புரவிகள் கிளம்பிச் சென்றிருக்கின்றன. நான்கு புரவிகள். இந்த யாதவக்குருதியினரால் செலுத்தப்படுகின்றன அவை. அவை சென்ற இடங்களிலெல்லாம் ஷத்ரியர் தலைவணங்குகிறார்கள். கப்பம் கொண்டுவந்து காலடியில் குவிக்கிறார்கள். அவர்களை எதிர்க்க இங்கே ஷத்ரியர்களிடம் வாளும் வில்லும் இல்லை. யாதவர்கள் பாரதவர்ஷத்தை உரிமைகொண்டாடுகிறார்கள் இன்று…” என்றார்.
அந்த உணர்ச்சிகள் ஆதனுக்கு விந்தையாக இருந்தன. அப்படியொரு எதிரெழுச்சி அங்கே இருக்கும் என்பதை அவன் எண்ணியதே இல்லை. அவன் அவர்களின் முகங்களை மாறிமாறி நோக்கினான். எத்தனை சீற்றம்! எத்தனை கண்ணீர்! அவர்கள் அனைவருமே முதியவர்கள். பெரும்பாலானவர்கள் வேளாண்குடியினர். அவர்கள் எதன்பொருட்டு அஸ்தினபுரிக்கு செல்கிறார்கள்? இதை கேட்கத்தான் என்று அவர்களே சொன்னாலும் அப்படி கேட்கும்பொருட்டு கிளம்புபவர்கள் அல்ல அவர்கள். வேளாண்குடியினர் ஒருபோதும் தனித்தனியாக எதிர்ப்பதில்லை. ஒட்டுமொத்த அலையாக எழுந்து அவ்வண்ணமே அடங்குவதே அவர்களின் இயல்பு. அவர்கள் நிலத்துடன் கட்டப்பட்டவர்கள். ஒருபோதும் புதியன நாடி எழும் உளம்திரளாதவர்கள். எத்தனை திறையிட்டாலும் எவ்வளவு சூறையாடினாலும் மீண்டும் அரசுக்கு அடிபணிபவர்கள் உழவர்களே.
அவர்கள் நிலம்நாடி அன்றி ஊரிலிருந்து கிளம்பியிருக்க முடியாது. ஆனால் வந்த வழியில் யாதவர்களின் மேன்மையைக் கண்டு உளம் நைந்திருப்பார்கள். இந்தப் பாதையில் நகரை அணுக அணுக அந்த உணர்ச்சியை எதன்பொருட்டோ மிகையாக்கிக் கொள்கிறார்கள். ஏற்பவர்களுக்கு உருவாகும் தன்னிழிவினாலாக இருக்கலாம். தாங்கள் தாழ்ந்து இறங்கவில்லை என தங்களுக்குள் சொல்லிக்கொள்ள விழையலாம். யாதவர்கள் வென்றெழுவதை வேளாண்குடியினர் பல தலைமுறைகளாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். யாதவ நாடுகள் முன்னரே உருவாகிவிட்டன. யாதவ அரசுகள் புகழடைந்துவிட்டன. அவன் புன்னகையுடன் “ஆனால் இப்போது ஆழிமணிவண்ணனே யாதவர்குலத்தில் பிறந்துவிட்டதாக அல்லவா சொல்லப்படுகிறது?” என்றான்.
அவர்கள் அமைதியடைந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். முகங்களில் எச்சரிக்கையும் இறுக்கமும் தோன்றியது. ஓர் இளைஞன் “ஆனால் அவரை யாதவர்கள் அரசர் என ஏற்றுக்கொள்ளவில்லை. போர்முடிந்து மூன்று மாதங்கள் கடந்தும் அவர் இங்கே அஸ்தினபுரியில்தான் இருக்கிறார். துவாரகைக்கு அவர் இங்கிருந்து படையுடன் செல்வார் என்று எதிர்பார்த்தார்கள். இதோ இதோ என்று பேச்சிருக்கிறது. கிளம்பவில்லை” என்றான். முதியவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. இன்னொரு இளைஞன் “தன் மைந்தருக்கு எதிராக அவர் படைகொண்டு செல்லவேண்டுமா என்ன?” என்றான். “ஆனால் வேறுவழியில்லை. அவர் தன் நகரை கைவிட்டால் அவருக்கு எங்கே இடம்?” என்றான் முதல் இளைஞன்.
முதியவர்கள் இளைய யாதவரைப் பற்றி பேச அஞ்சுவதை அவன் கண்டான். இளைஞன் “அவர் ஏதோ திட்டம் வைத்திருப்பார். அவர் காத்திருக்கிறார். இப்போது அஸ்தினபுரியின் நான்கு மாவீரர்களும் நான்கு திசைகளையும் வென்று வந்துகொண்டிருக்கிறார்கள். யுதிஷ்டிரன் இங்கே மும்முடிசூடி சக்ரவர்த்தியாக அமர்ந்த பின்னர் துவாரகையால் எதிர்த்து நிற்கமுடியாது…” என்றான். முதல் இளைஞன் “ஆனால் அவர்களையும் சிலர் ஆதரிக்கக்கூடும்” என்றான். “வாய்ப்பே இல்லை. அவர்கள் யாதவர்கள். எதிர்த்துப் படைகொண்டு செல்வது ஷத்ரியர்களான அஸ்தினபுரியினர் என்றால் எவரும் அங்கே சென்று சேரமாட்டார்கள். எப்படியாயினும் இன்னும் ஒரு போர் காத்திருக்கிறது.”
“இதையெல்லாம் நாம் பேசுவதில் பொருளில்லை” என்று முதியவர் சொன்னார். “இவற்றை நம்மால் கணிக்கவே முடியாது. நாம் பேசுவதெல்லாம் நமது கற்பனைகளையும் ஆற்றாமைகளையும்தான்.” இளைஞர்கள் அமைதியடைந்தார்கள். “இங்கே நிகழவிருக்கும் மும்முடிசூடுதல் ஷத்ரியர்களுக்குரியதல்ல” என்று இன்னொரு முதியவர் சொன்னார். “இது வேதம் நிறுவப்படுவதற்கான வேள்வி அல்ல. இந்த ராஜசூய வேள்வியை அந்தணர்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாரதவர்ஷத்தின் தொன்மையான அந்தணகுலங்கள் எதிலும் இருந்து எவரும் இங்கே வேள்விக்கென வரவில்லை. ஆகவேதான் தொலைவிலிருந்து அறியாக் குலத்து அந்தணர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.”
“ஏனென்றால் இங்கே நிறுவப்படவிருப்பது மலைகள் உருவாவதற்கு முன்னரே, மொழிகள் நாவில் திரள்வதற்கு முன்னரே, மானுடசித்தம் நான் என உணர்வதற்கு முன்னரே எழுந்த நால்வேதம் அல்ல. இது துவாரகையின் யாதவன் உரைத்த ஐந்தாம் வேதம் என்கிறார்கள். வேதமுடிபு என அதை அவர்கள் சொல்கிறார்கள். குருக்ஷேத்ரத்தில் நிகழ்ந்த போரில் அது வென்று இந்நிலத்தில் நிறுவப்பட்டுவிட்டது என்று அறைகூவுகிறார்கள்.” எவரும் அதை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை. “வேள்விக்குதிரையின் மேல் அந்த ஐந்தாம்வேதத்தின் அடையாளமாக ஒரு தர்ப்பைச்சுருள் முடிச்சிட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆரியவர்த்தம் முழுக்க ஷத்ரியர்கள் நிரைநிரை என வந்து வணங்கி தலைசூடுவது அதைத்தான். கப்பம் கட்டுவது அதற்குத்தான். நான்கு திசையும் எழுந்து வென்றுகொண்டிருப்பது அந்தப் புதிய வேதத்தின் சொல்லே” என்றார் முதியவர்.
“அந்த வேதத்தை அறிந்தவர் எவர்?” என்று ஆதன் கேட்டான். “எவருமில்லை. அவர் மட்டுமே அறிவார்” என்றார் ஒருவர். இளைஞன் “அது செருவென்றது மெய்” என்றான். “அதற்கு எதிராகவே ஷத்ரியர் வாளெடுத்தனர். அணியணியாகச் சென்று குருக்ஷேத்ரத்தில் உயிர்கொடுத்தனர். இங்கே தம்பியர் நூற்றுவர் சூழ அமர்ந்து கோலோச்சிய மாமன்னர் துரியோதனன் நால்வேத நெறியின்பொருட்டு நின்று பொருதியவர். அவருடைய துணைவர் அங்கநாட்டரசர் கர்ணன் அதன்பொருட்டே களம்பட்டார். பிதாமகர் பீஷ்மரும் ஆசிரியர் துரோணரும் வேதம் காக்கவே வில்லேந்தினர். அவர்கள் வீழவேண்டும் புதிய வேதம் எழவேண்டும் என்பது ஊழின் நெறி.”
“புதிய வேதம்” என்று ஒருவன் சொன்னான். “பழைய வேதமும் நாம் அறியாததுதான். தலைமுறை தலைமுறைகளாக அது நம்மை ஆண்டது. ஆளவிருப்பது புதிய வேதம். அது நம்மை எங்கு கொண்டுசெல்லும் என்றும் அறியோம். அதற்கு எப்படி நம்பி ஒப்புக்கொடுத்தோமோ அதைப் போலவே இதற்கும் நம்மை ஒப்புக்கொடுப்பதொன்றே செய்யக்கூடுவது.” அவர்கள் அனைவரும் எண்ணிக்கொண்டிருந்ததாக அது இருந்தமையால் இயல்பாக அமைதியடைந்தனர். அவர்களின் காலடியோசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. காற்றில் மிக அப்பாலிருந்து மக்களின் ஓசைகள் வந்து பொழிந்தன.
ஆதன் “இதை அந்தணர் ஏற்பார்களா? முனிவர் ஒப்புவார்களா?” என்றான். முதியவர் “தெய்வங்கள் ஒப்பவேண்டும், பிறகெல்லாம் நிகழும்” என்றார். “தெய்வங்கள் எல்லா வேதங்களையும் ஒப்புகின்றன” என்று இன்னொரு முதியவர் சொன்னார். “அசுரவேதத்திற்கும் அரக்கவேதத்திற்கும் தெய்வங்கள் தோன்றி நற்சொல் அளித்தமையை கதைகள் சொல்கின்றன.” ஓர் இளைஞன் “இந்தப் புதிய வேதம் அசுர, நாக, அரக்க வேதங்கள் அனைத்திலிருந்தும் சொல்திரட்டி எழுந்தது என்கிறார்கள். ஆகவே அனைத்துக் குடிகளுக்கும் உரியது என்கிறார்கள்” என்றான்.
“எவர்?” என்று முதியவர் சீற்றத்துடன் கேட்டார். “எவர் சொல்வது அதை?” இளைஞன் மறுமொழி சொல்லவில்லை. “யாதவர், வேறு யார்?” என்றான் இன்னொருவன். “இனி பாரதவர்ஷத்தில் வேதத்தின்பொருட்டு போர் நிகழப்போவதில்லை. இனி இங்கே மானுடர் அனைவரும் ஒற்றைச்சொற்சரடால் கோக்கப்படுவார்கள் என்கிறார்கள் சூதர்கள்” என்றான். “யாதவர்களின் பொருள்பெற்று பேசிக்கொண்டிருக்கும் சூதர்கள்” என்றார் முதியவர். “ஆம், அதனாலென்ன? சூதர்கள் எவராயினும் எங்கேனும் பொருள்பெற்றுக்கொண்டிருப்பார்கள்.”
ஆதன் “மெய்யாகவே அஸ்தினபுரி எதிர்கொள்ளும் இடர் என்பது இந்த வேதத்தை அந்தணரும் முனிவரும் ஏற்கவேண்டும் என்பதே” என்றான். “ஆகவேதான் இந்த ராஜசூயம் குறித்த செய்தி பரவவிடப்படுகிறது. இங்கே வருபவர்கள் தங்கள் பழைய வாழ்க்கையை உதறி எழுந்து அணைபவர்கள். மாற்றத்துக்கான உளப்பாங்கு கொண்டவர்கள். அவர்கள் புதிய வேதத்தை ஏற்பார்கள். பொருள் கொடுத்து ஏற்கவைக்கவும் முடியும். இத்தனை பெரிய மக்கள்பெருக்கு புதிய வேதத்தை ஏற்றுக்கொண்டதென்றால் எவராலும் அதை மறுக்க முடியாது. மறுத்தாலும் அம்மறுப்பு காட்டுக்குள் ஒலித்து அடங்கவேண்டியதுதான். இத்திரளே அனைத்தையும் மண்ணில் நிறுவிவிடும்” என்றான்.
முதியவர் “அவ்வண்ணம் அனைத்தையும் உதறிவிட்டுச் செல்ல நாங்கள் சித்தமாகப் போவதில்லை” என்றார். “நாங்கள் எங்களூரில் இருந்து கிளம்பியது நிலம்கொள்ளத்தான். ஆனால் அதன்பொருட்டு ஆயருக்கும் பாலைநிலத்து நாடோடிகளுக்கும் அடிபணிந்து வாழ எங்களால் இயலாது.” ஆதன் “எவரும் எவருக்கும் அடிபணியவேண்டியதில்லை” என்றான். “புதிய வேதம் எவரும் எவருக்கும் கீழல்ல என்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பனைத்தும் செய்தொழிலால் மட்டுமே என்கிறது.” இளைஞன் “நீர் அதை அறிவீரா? கற்றறிந்தீரா?” என்றான். “இல்லை, ஆனால் அதை என்னால் உணரமுடிகிறது” என்றான் ஆதன்.
அதன்பின் எவரும் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அப்போது பேசியவை அவர்களின் உள்ளங்கள் அல்ல. அவர்களின் எண்ணங்களும் அல்ல. கோட்டைநோக்கி சென்றுகொண்டிருந்த அந்தத் தருணத்தின் கொந்தளிப்பை கடக்க விழைந்தனர். அந்த உணர்வுகளின் அயன்மையை, ஒவ்வாமையை அதனூடாக நிகர்செய்துகொண்டனர். பேசிப்பேசி உணர்வுகளைப் பெருக்கி அவை பெருகியதுமே நேருக்குநேர் எனக் கண்டு அவை பொய்யென உணர்ந்து திரும்பிக்கொண்டனர். சொல்லவிந்ததும் ஒவ்வொருவரும் தனித்தவர்களானார்கள். தங்கள் அகத்தே ஒலித்த எண்ணங்களும் அவிய ஓசையில்லா பெருக்காக அகம் சென்றுகொண்டிருக்க எடையிலாதாகிக்கொண்டிருந்த உடல்களுடன் அவர்கள் நடந்தனர்.
ஆதனின் அருகே நடந்த ஓர் இளைஞன் தணிந்த குரலில் கேட்டான் “தென்னகத்தாரே, பழைய வேதத்திற்கும் இப்புதிய வேதத்திற்கும் நீர் காணும் வேறுபாடு என்ன?” அவன் திரும்பி நோக்கி “இரண்டையும் நான் கற்கவில்லை” என்றான். “நீர் உணர்வதென்ன? அதை சொல்க! நாம் என்றுமே அவற்றை கற்கப்போவதில்லை” என்றான். “பழைய வேதம் படைக்கலம் ஏந்தியது. இப்புதிய வேதம் அருள் மட்டுமே கொண்டது” என்றான் ஆதன்.
கோட்டையை அணுக அணுக அக்கூட்டத்திலிருந்த தவிப்பும் அலைத்திளைப்பும் அடங்கின. ஓசைகள் முற்றழிந்தன. காலடி ஓசைகளும், சகட ஓசைகளும் மட்டுமே கேட்கும் ஒரு உடற்பெருக்காக நகர் நோக்கி செல்லும் பாதையில் வழிந்தனர். ஒவ்வொருவரும் தங்களை முற்றிழந்தபோது அவர்கள் ஒருவரோடொருவர் முட்டித்ததும்பவில்லை. எங்கும் நிரை முடிச்சு விழவில்லை. தேனொழுக்கு என அதை ஆதன் எண்ணிக்கொண்டான். பெருந்திரள் மானுடரை கரைத்தழிப்பது. இன்மையென்று ஒருகணமும் பேருரு என மறுகணமும் அவர்களை எண்ணவைப்பது.
தொலைவில் அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பை ஆதன் பார்த்தான். கரிய யானைகள் மத்தகங்கள் முட்டி சேர்ந்து நிரையாக நிற்பது போலவே தோன்றியது. ஒவ்வொரு காவல் மாடமும் ஒரு மத்தகம். அம்பாரியில் விற்களும் வேல்களும் ஏந்திய வீரர்கள் அமர்ந்திருந்தனர். இருபுறமும் கோட்டை மதில் அலையலையாக எழுந்தமைந்து சென்று எல்லைகளில் மடிந்து மறைந்தது. கோட்டையை ஒட்டி அமைந்திருந்த குறுங்காடுகளிலிருந்து பறவைகள் எழுந்து கோட்டைமேல் பறந்து அப்பால் சென்றன. அவர்கள் தள்ளாடி நடந்தமையால் கோட்டை மெல்ல மிதந்து அசைவதுபோல, மாபெரும் மரக்கலம்போல தோன்றியது. அதன் உப்பரிகைகளில் எல்லாம் கூரிய படைக்கலங்கள் பின்காலை வெயிலொளியில் மின்னிக்கொண்டிருந்தன. கொடிகள் காற்றில் எழுந்து பறந்து தொய்ந்து மீண்டும் உதறிக்கொண்டன.
அவன் தான் பார்த்த கோட்டைகளை எண்ணிக்கொண்டான். அந்தப் பயணத்தில் அவன் நூற்றுக்கு மேற்பட்ட கோட்டைகளை பார்த்தான். முதன்முதலாகப் பார்த்தது நெல்வேலிக் கோட்டை. அது தொலைவிலிருந்து நோக்கியபோது கரிய பாறைவரிசை என்றே தோன்றியது. அதற்குள் நுழையும்போது மறுபக்கம் மீண்டுமொரு வெளி இருக்கும் என்றே எண்ணினான். உள்ளே சென்ற பின்னர்தான் கோட்டை அவ்வூரைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்தான். பெரிய கலம் ஒன்றுக்குள் வாழ்வதுபோல என்று தோன்றியது. அரக்கப் பேருரு ஒன்றின் கைகளின் அணைப்புக்குள் வாழ்வதுபோல. அவனுக்கு அது அச்சத்தையும் திணறலையும் உருவாக்கியது. அவன் அக்கோட்டைக்குள் அந்தியுறங்கவில்லை.
அதன்பின் அவன் அத்தனை கோட்டைகளையும் தவிர்த்தே வந்தான். இரவில் கோட்டைக்கு வெளியே வந்து துயில்கொண்டான். மதுரைக்கோட்டை மலையடுக்குகள்போல் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து வான்தொட பெருகியிருந்தது. புகாரின் கோட்டைக்கு அப்பால் கடல் பெருகி வந்து அறைந்து நுரை சிதறிக்கொண்டிருந்தது. காஞ்சியின் கோட்டைக்குச் சுற்றும் மேலும் மேலுமென ஏழு கோட்டைகள் இருந்தன. விஜயபுரியின் கோட்டை மலையடிவாரத்தில் மலையின் ஒரு சிறுபகுதி என தோன்றியது.
அவன் அத்தனை கோட்டைகளிலிருந்தும் அஸ்தினபுரியை வேறுபடுத்த முயன்றுகொண்டே இருந்தான். அது பிறிதொன்று, முற்றிலும் இன்னொரு வகையானது என மீளமீள சொல்லிக்கொண்டான். ஆனால் அஸ்தினபுரி அவன் கண்ட அத்தனை கோட்டைகளையும் போலத்தான் இருந்தது. அதை பலமுறை முன்னரே கண்டுவிட்டான் என்றே உணர்ந்தான். உள்ளே சென்றால் அதன் அனைத்து இடங்களும் அவன் ஏற்கெனவே சென்றமைந்ததாகவே இருக்கும். ஆனால் அது அவ்வண்ணம் இருப்பது அவனுக்கு நிறைவளித்தது. அவன் அதை நோக்கியதுமே உள்ளே சென்றுவிட்டான். கணம் கணம் என பல வாழ்க்கைகளை அதற்குள் முடித்துவிட்டான்.
அவன் முதலில் தன் உள்ளம் சொல்லின்றி, அசைவின்றி இருப்பதைப்போல் உணர்ந்தான். பின்னர் தன்னிடம் இருக்கும் ஆழ்ந்த அமைதியை எண்ணி தானே வியந்தான். அங்கிருக்கும் அனைவரும் ஆலய முகப்பிற்குச் சென்று நிற்கும் பக்தர்கள்போல தோன்றினார்கள். சிலர் விழி விரித்து வாய் திறந்து நோக்க, பலர் உளம் கசிந்து அழுதனர். அவர்கள் அதைக் கண்டு ஏமாற்றம் அடையவில்லை. அது கருவறைக்குள் நின்றிருக்கும் தெய்வம். கருவறைத்தெய்வங்கள் சிறிதாயினும் ஏமாற்றம் அளிப்பதில்லை. தெய்வத்தை வழிபடுபவர்கள்போல அவர்கள் நெஞ்சை கையுடன் அழுத்தி தள்ளாடும் கால்களுடன் கோட்டையை நோக்கி சென்றனர். அருகே ஒரு பெண் விம்மியழுதுகொண்டிருந்தாள். அவளை அழச்செய்வது எது? கேட்டறிந்த கதைகளா? அன்றி அதன் பேரமைப்பா? அவன் அதை எப்போதும் கண்டிருந்தான். எளிய மக்கள், துயர்மிக்கவர்கள், எழுந்து ஓங்கிய எதன் முன்னரும் உளம்சோர்ந்து அழுதுவிடுகிறார்கள். அது கொலைவெறிகொண்டு எழும் கொடுந்தெய்வமே ஆனாலும். தங்கள் எளிமையாலேயே அவர்கள் வல்லமை முன் அடைக்கலம் தேடுபவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
அணுகுந்தோறும் கோட்டை பெரிதாகி வந்தது. அது ஒரு முதிய அன்னைபோல் தோன்றியது. மானுட அன்னையல்ல, பிடியானை. பெற்றுப் பெருக்கி உடல் நைந்து சோர்ந்து நிலம் படிய விழுந்து துதிக்கை செவியசைத்துச் கிடக்கும் மெலிந்த பேருரு. ஏன் இந்த கோட்டை இத்தனை அமைதியை தனக்குள் ஏற்படுத்துகிறது என்று அவன் கேட்டுக்கொண்டான். பதற்றம் இல்லை. அக்கோட்டைக்கு அப்பால் என்ன உள்ளது என்னும் ஆவல்கூட இல்லை. முன்பு அந்நகர் நோக்கி வந்த அத்தனை சூதர்களும் அது முதற்கணத்தில் எழுப்பும் அச்சத்தைப் பற்றி கூறியிருந்தார்கள். புதர் மறைவிலிருந்து கூர்ந்து நோக்கும் களிற்றின் பார்வையை அதில் முன் உணர முடியுமென்று சூதர்கள் பாடினார்கள். அதன் செவியசைவை, மூச்சொலியை பின்னர் கேட்போம். ஆனால் அவன் உள்ளம் இனிய சோர்வுபோல் அமைதிகொண்டிருந்தது.
இப்போது எது மாறியிருக்கிறது? இன்று அது எதை இழந்திருக்கிறது? அல்லது எதை அடைந்திருக்கிறது? அவன் அதை எவரிடம் கேட்பதென்று எண்ணி பின்னர் தவிர்த்தான். கோட்டையின் முகப்பு எழுந்து பெருகி கரிய பரப்பாகி இருளாகி அருகே அணைந்து வந்தது. எட்டு நிரைகளாக வந்தவர்கள் காவலர்களின் வேல்களால் பகுக்கப்பட்டு காவல்வீரர்களால் உசாவப்பட்டு, உளம் கணிக்கப்பட்டு, தோளில் கடுக்காய்மையின் அழியாக் கறையால் முத்திரையிடப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டனர்.
அந்த முத்திரையைப் பெறுவதற்கு முன் ஒவ்வொருவரும் இறுக்கமாயினர். அது பதியும்போது விதிர்த்தனர். பெற்றபின் இயல்படைந்து உடல் தளர மறுபக்கம் சென்றனர். தங்கள் உற்றாருக்காக அங்கே காத்திருக்கையில் விடுதலை பெற்ற முகத்துடன் புன்னகைகொண்டிருந்தனர். அந்த முத்திரையை பலமுறை நோக்கினர். அது அக்கோட்டையின் தொடுகை. அது அவர்களை ஏற்றுக்கொண்டுவிட்டிருக்கிறது. அவன் அந்தப் பெண்ணை பார்த்தான். அவள் அப்போதும் அழுதுகொண்டுதான் இருந்தாள். ஆனால் முகம் சிரிப்பது போலிருந்தது. எவரையோ கைவீசி அழைத்தாள். அவளை சிலர் திரும்பிப்பார்த்ததும் முகத்தின்மேல் ஆடையை இழுத்துப்போட்டுக்கொண்டு நாணினாள்.
“முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது அஸ்தினபுரியின் கோட்டை” என்றொருவன் சொன்னான். அவன் வணிகன் என்பதை ஆதன் உணர்ந்தான். திரும்பி அவனை பார்த்தான். பெருந்திரள் என்று ஆகும்போது மானுடர் தனித்தனியாக எண்ணம் ஓட்ட இயலாது போலும். அங்கிருக்கும் அனைவரும் அதைத்தான் எண்ணிக்கொண்டிருப்பார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் பார்த்ததும் வணிகன் புன்னகைத்து “முன்பு கோட்டைக்கு அப்பால் கைவிடுபடைகள் கொலையம்புகளைத் தாங்கி நாணும் வில்லும் இறுகிச்செறிந்து காத்து நின்றிருந்தன. இது தாக்கும் பொருட்டு கொம்பு தாழ்த்தி தலை தாழ்த்தி நின்றிருக்கும் யானை என்று எனக்கு பலமுறை தோன்றியிருக்கிறது. படைக்கலம் ஏந்திய கோட்டை என்று இதை என் முன்னோடிகள் சொல்லியிருக்கிறார்கள். படமெடுத்த நாகம் என்றும், உகிர்கொண்ட யக்ஷி என்றும் சொல்வார்கள். இக்கோட்டைமுகப்பையே சினம்கொண்டு சொல்லுக்குத் திறந்த வாய் என்று ஒரு சூதன் பாடினான். இன்று அக்கைவிடுபடைகள் அங்கில்லை” என்றான்.
“ஏன்?” என்று ஆதன் கேட்டான். “அவையனைத்தும் செலுத்தப்பட்டுவிட்டன. இக்கோட்டை தான் காத்திருந்த குருதிபலியை அடைந்துவிட்டது. ஆகவேதான் அம்பு எழுந்த வில்லென அஸ்தினபுரி தளர்ந்து நின்றிருக்கிறது.” ஆதன் மீண்டும் பார்த்தபோது அவனுக்கு அந்தக் கோட்டை ஏன் அந்த அமைதியை உருவாக்குகிறது என்று புரிந்தது. புன்னகையுடன் அவன் அக்கோட்டைவாயிலை நோக்கி சென்றான்.