பிரபலஎழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்- இசை
ஆசிரியருக்கு,
உங்களது சமீபத்திய சினிமா பேட்டியில் தமிழகத்தில் பொது வெளியில் ஒரு புத்தக வாசகனுக்கு மதிப்பில்லை, வாசிக்கும் ஒருவனிடம் அவன் குடும்பமும் சரி சுற்று வட்டமும் சரி அதை கைவிட அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள், நாம் ரகசியமாக தான் வாசிக்க வேண்டும் என்று கூறினீர்கள்.
அப் பேட்டியின் பின்னூட்டத்தில் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான் உங்களது கருத்தை ஏற்கவில்லை. (குடும்பத்தை பொறுத்து இதை ஓரளவு ஏற்கலாம்) ஆனால் வாசகன் மீது தமிழக வெகுஜனத்திற்கு வாசிப்பு குறித்து கருத்தில்லை என்கிற தரப்பும் அல்லது ஒரு வாசகன் மீது மதிப்புள்ளதுஎன்கிற தரப்பும் தான் உண்டு. வாசகனை கீழாக பார்த்து அவனை திருத்த முயலும் தரப்பு மிக அரிது. அவ்வாறு தங்களிடம் கூறப்படுவதாகக் கூறும் வாசகர்கள் கூட ஒடுங்கிய ஆளுமையுடன் இருக்கும் தன்மையினர் என்பது என் கருத்து. எப்படி கணித்தாலும் தமிழகத்தின் பெருவாரியான மக்களால் ஒரு வாசகன் மதிக்கப்படுகிறான்.
தமிழகத்தில் அறிவு சேகரச் செயல்பாட்டுக்கு வெகுஜனத்தின் ஆதரவும் மதிப்பும் உண்டு என்பதும் கூட எனது கருத்தாகும். (அது புத்தக விற்பனையில் ஏன் தெரிவதில்லை என்பது தனியான ஆய்வுக்கு உரியது.)
இதற்கு என்னை போன்ற வாசகர்களின் எதிர்வினை தேவையாகிறது. இதை தமிழ் உலகின் அறிவு சேகர ஆரோக்கிய நிலை குறித்த ஒரு புள்ளி விபர சேகரிப்பாக கூட கொள்ளலாம். ஆகவே இக்கடிதத்தை தளத்தில் வெளியிட்டு பெருவாரியான வாசகர்கள் அவர்களது குடும்பம், நண்பர்கள் மற்றும் பொது வெளியில் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்கிற சுய அனுபவ கடிதங்கள் எனக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் உங்களது கணிப்பை திருத்திக் கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.
கிருஷ்ணன், ஈரோடு.
அன்புள்ள கிருஷ்ணன்
இதற்கெல்லாம் அகவயமான மதிப்பீடு மட்டுமே உள்ளது, கணக்கெடுப்பு நடத்த முடியாது. அம்மதிப்பீட்டைச் சொல்பவன் மேல் உங்களுக்கு மதிப்பு உள்ளதா, அவருடைய கணிப்பை ஏற்குமளவுக்கு உங்கள் சொந்த அனுபவம் ஒத்துப்போகிறதா என்பது மட்டுமே கேள்வி.
நான் சொல்வது என் அனுபவம். நான் தொடர்ச்சியாக ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கிறேன். ரயில் பயணங்களில் நான் பெரும்பாலும் எவரிடமும் பேச்சில் இறங்குவதில்லை. இறங்கினால் உடனே நான் என்ன எழுதுகிறேன், என்ன படிக்கிறேன் என்பதே கேட்கப்படும். அடுத்த கணமே ‘சொன்னா தப்பா நினைக்கப்பிடாது, நான் வயசிலே மூத்தவன்…”
பெரும்பாலும் ரயிலில் உயர்வகுப்புகளில் வருபவர்கள் ‘வாழ்க்கையில் வெற்றிபெற்ற’ முதியவர்கள். அதாவது வேலைசெய்து, சேமித்து, பிள்ளைகளை வேலைகளில் அமர்த்திவிட்டவர்கள். அவர்கள் பிறருக்கு ஆலோசனை சொல்லும் தகுதி கொண்டவர்கள் என தங்களை எண்ணிக்கொள்பவர்கள். இந்தப் ‘பெரியவர்களில்’ ரயிலில் என்னை ஓர் எழுத்தாளர் என அடையாளம் கண்டுகொண்ட எவரும் இந்த பத்தொன்பதாண்டுகளில் இல்லை. அரிதாக வாசகர்கள் வந்து அறிமுகம்செய்துகொள்வார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அப்போது இவர்களுக்கு நான் ஓர் எழுத்தாளன் என தெரியவரும். அப்போதுகூட எந்த ஞாபகமும் வருவதில்லை. ஆனால் எழுத்தாளன் ‘சமூகநன்மைக்காகப் பாடுபடவேண்டியவன்’ என்ற எண்ணம் உருவாகும். உபதேசம் தொடங்கிவிடும். மக்களுக்குப் பயனுள்ளதை எப்படி எழுதவேண்டும் என்றெல்லாம்.
என் வாசகர்களிடம் என் முன்னால்வைத்தே ‘வாசிப்பதனால் குடும்பம் கெட்டுவிடும்’ ‘நமக்கு தொழில்தானே முக்கியம்’ ‘இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவுமா?’ ‘பரீட்சையில் பயன்படுமா?’ என்றெல்லாம் கேட்டவர்கள் இருக்கிறார்கள். இதோ நேற்றுமுன்னாள் திருச்சி பயணத்தில்கூட ஒரு வாசகர் என்னிடம் மழைப்பாடலில் கையெழுத்து வாங்கினார். அதற்கு தவிட்டுநிறத் தாளில் அட்டை போட்டிருந்தார். கதைபுத்தகம்னு தெரிஞ்சா அட்வைஸ் பண்ணியே கொன்னிருவாங்க சார் என்றார்.
அதற்கேற்ப எங்கள் பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த எதிரிலிருந்த ஓய்வுபெற்ற அரசூழியர் ‘தம்பி சொன்னா தப்பா நினைக்கமாட்டீங்களே, இதெல்லாம் படிச்சா…” என்று ஆரம்பிக்க இவர் என் முன்னால் வைத்தே “வாயை மூடுடா …ண்ணி” என்று கத்தினார். நானே அதிர்ந்துவிட்டேன். “இப்டித்தானுங்க சார் நாயிங்க மனுஷன வாழவிடமாட்டாங்க” என்றார். அவரை சமாதானப்படுத்தி அனுப்பினேன். அவர் போனபின் அரசூழியர் என்னிடம் “அவன் நன்மைக்காத்தான் சொன்னேன் சார்…” என ஆரம்பிக்க நான் திரும்பி கணிப்பொறியில் மூழ்கிவிட்டேன்.
அரசு அலுவலகங்கள் எதிலும் எவரும் கையில் ஒரு நூலுடன் செல்லமுடியாது என நான் பணியாற்றிய காலத்தில் அறிந்திருக்கிறேன். கல்லூரி ஆசிரியர்களான நண்பர்கள் கூட கல்லூரியிலேயே நூலகம் சென்று வாசித்தால் கேலிக்கிடமாகும் என்பார்கள். தங்கள் பணியிடங்களில் ஓய்வுநேரத்தில் ஏதேனும் நூலை வாசிக்கமுடியும் என்னும் சூழல் உள்ள எவரையேனும் நம் நண்பர்சூழலில் அறிந்திருக்கிறீர்களா? நான் திரும்பத்திரும்ப கேட்டிருக்கிறேன். ஒருவர் கூட ஆம் என்று சொன்னதில்லை. “நாம அன்னியமா ஆயிடுவோம்சார், வேலைச்சூழல் கெட்டுப்போயிரும்” என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
இணைய அறிமுகம் உங்களுக்கு இல்லை. சும்மா தமிழ் இணையத்தில் ஒரு சுற்று வாருங்கள். ஒருநாளில் சராசரியாக வாசிப்புக்கு, அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு, சீரிய இலக்கியத்திற்கு எதிரான நையாண்டிகள், எதிர்ப்புகள் எவ்வளவு பதிவாகின்றன என்று பாருங்கள். திகைப்பீர்கள். இங்கே ஐம்பதுலட்சத்திற்குமேல் முகநூல் கணக்குகள் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில், மிகமிகமிகக் குறைந்த அளவிலேனும், அறிவார்ந்த செயல்பாடுகளை ஒட்டியோ ஏதேனும் வாசிப்பைப் பற்றியோ எழுதப்படும் முகநூல்கணக்குகள் எப்படிப்போனாலும் ஐநூறுக்குள்தான் இருக்கும் என்கிறார்கள். அந்த ஐநூறு கணக்குகள்மேல் மற்றவர்களின் தாக்குதலைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.
ஏன் சமூக வலைத்தளங்களில் பாருங்கள். எவராவது ஏதாவது நூலைப்பற்றி எழுதிவிட்டால் கீழே என்னவகையான எதிர்வினைகள் பதிவாகின்றன என்று கேட்டுப்பாருங்கள். பெரும்பாலும் நக்கல், நையாண்டி. வாசிப்பவன் ஏதோ தோரணைகாட்டுகிறான் என்னும் பாவனையிலான கேலி. அல்லது ‘இதனால் மக்களுக்கு என்ன பயன்?’ ‘படித்தால்தான் அறிவாளியா?’ ‘மக்களுக்குப்புரியாததனால் எந்த பயனும் இல்லை’ என்பதுபோன்ற அபிப்பிராயங்கள். வாசகன் என்பதனால் சூழலில் எந்த மதிப்பையேனும் பெற்றதாக எவரும் எழுதி நான் வாசித்ததே இல்லை. நேர்மாறாகத்தான் தொடர்ச்சியாக பதிவாகின்றன- சமீபத்தில் இசையின் கட்டுரை உட்பட.
அப்படியெல்லாம் இல்லை என நம்ப நீங்கள் ஆசைப்படலாம் அது உங்களுக்கு உதவலாம். ஆனால் தமிழ் உள்ளம் பொதுவாக வாசிப்பை மதிக்கிறது என நம்ப ஒரு ஆதாரத்தைக்கூட என் இதுவரையிலான வாழ்க்கையில் நான் கண்டதில்லை. ஏற்கனவே வாசகன் அல்லாத ஒருவர் நான் எழுத்தாளன், வாசகன் என்று கண்டதனால் மதிப்புடன் பேசிய ஒரு தருணம்கூட அமைந்ததில்லை. நையாண்டியுடன் பேசுவது அல்லது அறிவுரைகூறி நல்வழிப்படுத்த முயல்வது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் நிகழ்கிறது.
புகழ்பெற்ற சில பொதுக்கூற்றுக்கள் உண்டு. ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இப்டித்தான் படிச்சிட்டே இருந்தான். மெண்டலாயிட்டான்’ ‘இப்டித்தான் நம்ம சொந்தக்காரப் பையன் ஒருத்தன் எப்ப பார் படிப்பு. அப்றம் வேலையெல்லாம் விட்டுட்டு சுத்திட்டிருக்கான்’ ‘நல்லா படிச்சிட்டிருந்த பையன். புக்கு படிச்சுப் படிச்சு இப்ப வெட்டியா இருக்கான்’. தமிழ்ச்சூழலில் புக் என்பது வாரஇதழ், புத்தகம் இரண்டுக்கும் பொதுவான பெயர். வாரஇதழும் புத்தகமும் வேறுவேறு என்பதே கணிசமானவர்களுக்கு தெரியாது.
எந்த ஒரு சிறுசந்தர்ப்பத்திலும் எழுத்தாளர்களை வசைபாட, இளக்காரம் செய்ய படைபடையாக இங்கே மக்கள் கிளம்பிவருவதை நீங்கள் பார்க்கலாம். இத்தனைபேருக்கு அவன் பெயர் தெரியும் என்பதையே அப்போதுதான் நாம் அறிவோம். அவனுக்கு ஒரு சிறு வாழ்த்தைச் சொல்ல, ஒர் எளிய மரியாதையைச் செய்ய சிலரைக்கூட நாம் காணமுடியாது. அனைவராலும் மதிக்கப்படும் நாஞ்சில்நாடனே கூட எத்தனைபேரால் வாழ்த்தப்பட்டிருக்கிறார்? இதுவே பொதுவான தமிழ் உளநிலை.
தமிழகத்தில் புகழ்பெற்ற அறிஞர்கள், சாதனையாளர்களை தேடிப்போன அனுபவம் நூற்றுக்கணக்கில் எனக்கு உண்டு. அவர்களை அறிந்த அண்டைவீட்டாரைக் கண்டதில்லை. மதிப்புடன் ஒரு சொல் சொன்ன ஒருவரைக்கூட அவருடைய சூழலில் சந்தித்ததே இல்லை. என் சூழலிலும் அப்படித்தான். ஏன் இங்கே மறைந்த எத்தனை அறிவியக்கவாதியும் அவர்களின் வாரிசுகளால் மதிப்புடன் நினைவுகூரப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் அரசியல்வாதிகள் என்றால், அதனூடாக பணம் சம்பாதித்தவர்கள் என்றால் வாரிசுகளால் மதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளர், நூறுநூல்களுக்குமேல் எழுதியவர் அ.கா.பெருமாள். அவர் ஓய்வுபெற்றபோது அவருடைய கல்லூரியில் ஒரு எளிய வழியனுப்புதல்கூட நிகழவில்லை. நான் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன். அதை ‘தற்செயலாக’ கேள்விப்பட்டு வந்த அவருடைய கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என்னிடம் அவருக்கு அந்த விழா ஏன் எடுக்கப்படுகிறது என்று கேட்டார். அவர் ஓர் ஆய்வாளர் என்று நான் சொன்னதும் ‘அப்டியா?” என ஐயமாக கேட்டார்.
சரி அதிரடியாகக் கேட்கிறேன். தமிழ் எழுத்தாளர்களின் மைந்தர்களில் தங்கள் தந்தையின் எழுத்தை வாசிப்பவர்கள், அவர்மேல் எழுத்தாளராக மதிப்பு கொண்டவர்கள் எத்தனைபேர்?
வெறுமே மனமயக்கங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் சுட்டிய அந்த இணையப்பேட்டியின் பின்னூட்டங்களிலேயே பெரும்பாலானவர்களுக்கு நான் இலக்கியவாதி என தெரியாது. அந்தப்பேட்டியிலேயே அது சொல்லப்பட்டபின்னரும் கூட அவர்கள் மனதில் அது பதியவில்லை.
ஜெ