‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 8

அஸ்தினபுரியின் எல்லைக்கு வெளியே புறங்காட்டில் ஆதன் ஏழு நாட்கள் தங்கியிருந்தான். அங்கு வெளியூர்களிலிருந்து வந்துகொண்டே இருந்த மக்கள் ஈச்சைஓலைத் தட்டிகளாலும் கமுகுப் பாளைகளாலும் இலைகளாலும் தாழ்வான குடில்களை அமைத்து தங்கியிருந்தார்கள். அவ்விடம் ஒரு சந்தையென இடைவெளியில்லாமல் இரைந்துகொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அலையலையென எழுந்த உளத்திளைப்பில் இருந்தனர். அக்கூட்டமே அஸ்தினபுரி அஸ்தினபுரி என்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு போர்க்குரல்போல. விண்ணை நோக்கிய அறைகூவல்போல. இரவுகளில் ஊழ்கம்போல. விண்ணிலிருந்து தேவர்கள் குனிந்து பார்க்கையில் “ஆம், அஸ்தினபுரி! அஸ்தினபுரியேதான்!” என மக்கள் அவர்களை நோக்கி கூவுவதுபோல் தோன்றியது.

அங்கிருக்கும் எவரும் அஸ்தினபுரியை பார்த்ததில்லை என்பது அவனுக்கு தெரிந்தது. கதைகளினூடாக அறிந்த பெருநகர். கதைகள் எப்போதுமே பெருகிக்கொண்டிருப்பவை. ஊழிப்பெருவெள்ளம்போல கதைகள் பெருகத்தொடங்கியபோது அவர்கள் தங்கள் ஊர்களிலிருந்து கிளம்பி வரத்தொடங்கினர். சொல்லென அறிந்து கனவென விரித்துக்கொண்ட அந்நகரை நோக்கி செல்கிறோம் என்ற உணர்வே அதுவன்றி பிறிதெதையும் எண்ணவிடாமல் ஆக்கியது. ஒரு சொல். அஸ்தினபுரி எனும் ஒற்றை ஒலி. அது எங்கே ஒலித்தாலும் செவி அங்கே திரும்பியது. அந்நகர் குறித்த அனைத்துச் செய்திகளையும் தொகுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்து பேருருவாக்கி அகநகர் ஒன்றை சமைத்தது.

அவர்கள் அங்கிருந்து செல்லவிருப்பது வெளியே அமைந்திருக்கும் ஒரு புறநகர் நோக்கி. கல்லால், மண்ணால், மரத்தால் ஆன நகர். விலங்குகளால், மானுடரால் ஆன நகர். அதை அவர்கள் தங்களுக்குள் திகழும் சொல்நகராக ஆக்கிக்கொள்ள முடியும். சொல் ஒளி. நொடியில் திசைதொட்டு திசைதாவும் விசை அதற்குண்டு. புவிநிறைக்கும் வீச்சு உண்டு. சுடர் எழுப்பும் ஒளி விண்ணை ஊடுருவலாம். அதன் முன் சுடர் பொருண்மையால் சிறையிடப்பட்ட சிறுநிகழ்வு. அவன் ஒவ்வொருவரையாக பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் அஸ்தினபுரியை எப்படி எதிர்கொள்வார்கள்? அவர்களுக்குள் இருப்பது கிளையும் விழுதும் நிறைந்த பெருமரம். அங்கே காத்திருப்பது அதன் விதை மட்டுமே. அவர்கள் அங்கு சென்று அந்நகரை பார்க்கையில் ஏமாற்றம் அடையாமலிருக்க முடியாது.

அவர்கள் அந்நகரைக் கண்டதும் திகைத்து சொல்லிழந்துவிடக்கூடும். அது அஸ்தினபுரி அல்ல என்று அவர்கள் எண்ணக்கூடும். “இதுவா? இதுவா!” என ஒவ்வொருவரும் பிறரிடம் கேட்கலாம். அவ்வாறு கேட்பது இழிவென்று உணர்ந்தால் தங்களுக்குள் அச்சொல்லை முழக்கிக்கொள்ளலாம். அங்கிருப்பது ஒரு தொல்நகர். மாமதுரை போல், புகார் போல், காஞ்சி போல், விஜயபுரி போல். தொல்நகர்கள் அனைத்துமே சிறியவைதான். மூதாதையர் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே உருவாக்கிக்கொண்டார்கள். தங்கள் ஆணவத்திற்குரியதை அல்ல. ஆணவத்திற்குரியதை உருவாக்கிக்கொண்டவர்கள் அரக்கர்கள். மாகிஷ்மதியை, மகேந்திரபுரியை, இலங்கையை.

அசுரமாநகர்கள் அவர்களின் ஆணவம் போலவே எல்லையற்றவை. அவை விம்மி விம்மி மண்ணிலிருந்து விண்ணுக்கெழுந்தன. அத்தனை பேருருக்கொண்டு, அத்தனை ஒளிகொண்டு. அத்தனை செல்வம் செழிக்கையில் அவற்றுக்கு மண்ணில் பதிய இயலாதாகிறது. வேர்கள் ஒவ்வொன்றாக அறுந்து விடுபடுகின்றன. மாகிஷ்மதி விண்ணில் எழுந்தது என்பார்கள். பின்னர் அங்கிருந்து அது உடைந்து மண்ணில் சிதறியது. நூற்றெட்டுச் சிதறல்களாக அப்பெருநகர் பாரதவர்ஷத்தில் விழுந்து மண்ணில் அறைந்து புதைந்து உள்ளே சென்றுவிட்டது என்பார்கள். மண்ணுக்கடியிலிருக்கும் தங்கள் தொல்நகரின் துண்டுகளைப்பற்றி அசுரர்களின் பாடல்கள் மீள மீள சொல்கின்றன.

அங்கிருந்து அவை மீண்டும் முளைத்தெழும், மீண்டும் ஒளி கொண்டு பெருகி மண்ணிலுள்ள பிற அனைத்தையும் சிறிதென்றாக்கி நிலைகொள்ளும் என்று அவர்களின் கனவுகள் கூறுகின்றன. மீண்டும் அவை விண்ணுக்கெழும். விண்ணுக்கெழுபவை மண்ணில் உடைந்து விழுந்தாகவேண்டும் என்பது மாறா நெறி. அஸ்தினபுரி அரக்க நகரல்ல. அது மானுடர்கள் உருவாக்கியது. அது ஒரு எளிய உணவுக்கலம்போல அங்கு ஒழிந்து விண்நோக்கி வாய் திறந்திருக்கலாம். அல்லது நீர் பிடித்து வைத்த குடம். அல்லது ஒரு சிறு படைக்கலம். நகரங்கள் படைக்கலங்கள் அல்ல, நகரங்கள் சிறு ஊர்திகள்போல. அவை அசைவிலாதிருப்பதுபோல் தோன்றும், ஆனால் சென்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கணமும் தாங்கள் இருந்த இடத்தை பிறிதொன்றாக மாற்றிக்கொண்டு அவை காலத்தில் பயணம் செய்கின்றன.

இவர்கள் அனைவரும் அங்கு சென்றதுமே நிலைகுலையப் போகிறார்கள். விழிநீர் சிந்தப்போகிறார்கள். இத்தனை நாள் அவர்களை ஆட்டிப்படைத்த பெருங்கனவுகள் அனைத்தும் சிதறி கீழே விழுந்துகிடப்பதை காணவிருக்கிறார்கள். உண்மையில் அஸ்தினபுரியும் வீங்கி வீங்கி விண்ணுக்கெழுந்தது. பொன்னொளிர் முகிலென வானில் நின்றது. இறுதியில் தேவர்களால் அது உடைத்தெறியப்பட்டது. அங்கிருந்து மண்ணில் சுருண்டு விழுந்தது. பரவிக் கிடக்கும் பல்லாயிரம் துண்டுகளில் ஒன்றை நீங்கள் பார்க்கவிருக்கிறீர்கள். இது முளைத்தெழும் என்று நம்புக! இது மீளும், ஒளியும் ஆற்றலும் கொண்டு விண்ணிலெழும் என்று எண்ணுக!

அஸ்தினபுரிக்குள் செல்லவிருந்த மக்கள் பெருக்கை நகரை அணுகும் பாதைகளில் அமைக்கப்பட்டிருந்த பெரிய காவல்மாடங்களில் புரவிப்படைகளை நிறுத்தி தடுத்திருந்தார்கள். பெரும்பாலான காவல்மாடங்களில் காவலராக பெண்டிரே இருப்பதை ஆதன் முன்னரே பார்த்திருந்தான். விதர்ப்பத்திலும் மாளவத்திலும்கூட காவல் பணியை பெண்டிரே புரிந்தனர். பெரும்பாலான ஆண்கள் உயிர்துறந்துவிட்டிருப்பார்கள் போலும். அவனுடன் வந்த முதிய வீரன் “படைக்கலம் எடுக்கும் கை கொண்ட அனைவருமே களத்திற்கு சென்றிருக்கிறார்கள். சென்றவர்களில் ஒருவர்கூட மீளவில்லை. இங்கிருப்போர் கோழைகள், உடல்குறை கொண்டோர், மூளை சிதைவடைந்தோர். இனி அவர்களின் குருதியே முளைக்கவிருக்கிறது” என்றார்.

இளைஞன் ஒருவன் நகைத்து “புதுவெள்ளம்போல பாரதவர்ஷத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் பெருகி அஸ்தினபுரிக்குள் நுழைகிறார்கள். புத்தம்புதிய குருதி” என்றான். ஆதன் அப்போதுதான் அந்தத் தெளிவை அடைந்து “ராஜசூயம் இயற்றப்படும் செய்தி பாரதவர்ஷம் முழுக்க எப்படி சென்றது? அஸ்தினபுரியிலிருந்து அனுப்பப்பட்டதா?” என்றான். “சூதர்கள் பாடி அலைகிறார்களே?” என்றான் ஒருவன். “சூதர்களை அவ்வாறு பாடச்செய்ய முடியுமா?” என்றான் ஆதன். முதியவர் “முடியும், எவ்வண்ணம் எதை சொன்னால் அவர்கள் எப்படி பாடுவார்கள் என்பதை அறிந்த ஒருவரால் இயலும். அச்செய்தி பாரதவர்ஷம் முழுக்க பரவவிடப்பட்டிருக்கிறது” என்றார்.

ஒரு வணிகர் “நாடெங்குமிருந்து திறனுடையோர் இங்கு வருகிறார்கள். இங்கு வருபவர் ஒவ்வொருவரும் இத்தொலைவு நடந்து கடக்கும் ஆற்றலுடையவர்கள். அத்தொலைவுக்கு அப்பாலிருக்கும் ஒன்றை கனவு காணும் உளமுடையவர்கள். எல்லை கடப்பவர்கள், புதுமை நாடுபவர்கள். அவர்களிடமிருந்து பாரதவர்ஷத்தின் குருதி மீண்டும் முளைத்தெழ வேண்டுமென்று எண்ணுகிறார்கள்” என்றார். “கைவினைஞர், வேள்வலர், ஆயர்முதல்வர், சொல்வலர்… இங்கு வருபவர்கள்தான் இன்றைய பாரதவர்ஷத்தின் வெண்ணை போன்றவர்கள்” என்றார் புலவர் ஒருவர். “ஆரியவர்த்தத்தின் குளம் நோக்கி ஓடைகள் எனப் பாயும் விந்து” என்றான் ஆதன்.

அக்கோணத்தில் முதியவர் எண்ணியிருக்கவில்லை. திகைப்புடன் ஆதனை பார்த்த பின் வாய்விட்டு நகைத்து “நன்று! நீங்கள் உங்கள் மைந்தர் பிறக்கும் நிலம் நோக்கி செல்கிறீர்கள்” என்ற பின் சூழ நோக்கி “எத்தனை ஆயிரம் பல்லாயிரம் பிறவா உயிர்கள். அவைதான் இவ்வுடல்களை ஊர்தியாகக் கொண்டு அங்கே சென்றுகொண்டிருக்கின்றன. தங்கள் இலக்கை நாடி பொறுமையிழந்து கொண்டிருக்கின்றன. பிரம்மத்தின் ஆணை” என்றார். அனைவரும் வெடித்து நகைக்க முதியவர் “அவைதான் போரை உருவாக்கி அங்கிருந்தோரை அழித்து தாங்கள் சென்றமையும் இடத்தை உருவாக்கிக்கொண்டனவா?” என்றபின் மீண்டும் வெடித்து நகைத்தார்.

ஆனால் பிறர் திகைப்புடன் அவரை நோக்கினர். ஆதன் தன்னுள் ஓர் அச்சத்தை உணர்ந்தான். அங்கு வந்து சேர்வதற்கு சில நாட்களுக்கு முன்னரே அஸ்தினபுரி எனும் சொல்லை அவன் அஞ்சத்தொடங்கிவிட்டிருந்தான். அச்சொல் இனித்து இனித்து வளர்ந்து பேருருக்கொண்டு அவனை தன் கையில் எடுத்து விளையாடி பின் அவனை சலித்து வீசிவிட்டிருந்தது. அச்சொல்லின் பேருரு அவனை அச்சுறுத்தியது. அது தன்னை ஈர்த்து கொண்டு செல்வதும் நல்லதற்கல்ல என்று அவன் எண்ணினான். செல்ல வேண்டியதில்லை என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். தொடக்கத்திலேயே அதை உணர்ந்து விலகிச்சென்ற அழிசி தன்னைவிட வாழ்வு குறித்த தெளிவு கொண்டவன் போலும். அவனைவிட அதிகம் கற்றிருந்தாலும் அவனைவிட அதிகம் சொல்லாடத் தெரிந்திருந்தாலும் அவனளவுக்கு தெளிவு தனக்கு வந்திருக்கவில்லை போலும்.

அழிசி நூல் கற்காதவன். ஆகவே ஆணவமற்றிருக்கிறான். ஆணவத்தால் மறைக்கப்படாத தெளிவுடனிருக்கிறான். இப்போதுகூட பிந்திவிடவில்லை. இந்த மையச்சாலையில் வந்து சேரும் ஒவ்வொரு கிளைச்சாலையும் பிரிந்து செல்வதும் கூடத்தான். ஒவ்வொன்றிலும் சிற்றூர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அறியா நிலங்கள், புதிய மானுடர். ஆனால் ஒவ்வொரு சிற்றூரிலும் அங்கிருந்து கிளம்பிச்சென்ற சிலர் இருப்பார்கள். அங்கு சென்று சேரும் ஒருவன் அவர்கள் இடத்தை தான் அடைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் விட்டுச் சென்றதை அவன் அடையக்கூடும். இல்லங்களை, குழந்தைகளை, துணைவியரைக்கூட. எதை தாளமுடியாமல் அவர்கள் விட்டுச் சென்றார்களோ அவற்றை அடைவதுதான் அத்தனை நீண்ட பயணத்தின் பயனா?

இப்படியே முன்னால் செல்லத்தான் தன்னால் முடியும். சென்று கொண்டிருப்பவன். அஸ்தினபுரியை அடைந்து அங்கிருந்தும் கடந்து சென்றால் நான் விடுபட்டேன். இதை என்னால் விடமுடியாது. இத்தனை தொலைவுக்கு உருவேற்றி வளர்த்த பின்னர் இந்நகரை சென்று காணாமல் என்னால் கடந்து செல்ல இயலாது. நெடுந்தொலைவிலிருக்கிறது களிற்றுப்பெருநகர். களிற்றுப்பெருநகர். அவன் அங்கே செல்வது வகுக்கப்பட்டுவிட்டது. அவன் அவ்வூரை தெரிவுசெய்யவில்லை. அது அவனை எடுத்துக்கொண்டது.

அவன் இரவுகளில் விண்மீன்களைப் பார்த்தபடி அச்சொல்லை மிக அருகிலும் எல்லை கடந்த வெளிக்கப்பாலும் என உணர்ந்து கொண்டிருந்தான். “நீங்கள் அஞ்சுகிறீர்கள். நீங்கள் எண்ணியிருக்கும் பெருநகர் அங்கு இல்லை என்று ஏமாற்றம் அடைவீர்கள். அந்த ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக அதை ஒத்திப்போட எண்ணுகிறீர்கள்” என்று அவனுடன் வந்த இளம் நாடோடியான காமன் சொன்னான். “ஏன், நீ எண்ணவில்லையா? நீ எண்ணியிருக்கும் நகர் அங்கு உள்ளது என்று எண்ணுகிறாயா?” என்றான் ஆதன். அவன் வெடித்து நகைத்து “இங்குள்ள ஒவ்வொருவரும் அவர்கள் எண்ணியிருக்கும் நகர் அங்கு இருக்காது என்பதை அறிவார்கள். கற்பனையில் அந்நகரை வளர்த்துக்கொள்வது தங்கள் விழைவாலும் சலிப்பாலும்தான் என்பதை அறியாத எவருளர்?” என்றான்.

“தென்னகத்தாரே, ஒவ்வொருவரும் இங்கு சூழ்ந்திருந்திருக்கும் பருவடிவப் புவியால் சலிப்புற்றிருக்கிறார்கள். ஆகவேதான் இதை கதைகளால் நிரப்பிக்கொள்கிறார்கள். மொழியை அறியும் குழவி சூழ்ந்திருக்கும் உலகை அறியும்போதே கதையை அறியத்தொடங்குகிறது. உலகை அறிவதற்கும் மேலாக கதைகள் அதற்கு தேவைப்படுகின்றன. எக்குழவியாவது சூழ்ந்திருக்கும் கதையை அவ்வண்ணமே விரித்துச் சொல்லும் ஒரு கதையை விரும்பியிருக்கிறதா? பொருண்மையின் எல்லைகளை கடத்தல், இயல்கையின் மறு எல்லை வரை செல்லுதல். அதுதானே இன்றுவரை கதைகளாக இங்கு உள்ளன? இங்குள்ள அனைவருமே பகற்கனவுகளில் வாழ்பவர்கள். கதைகளில் வாழ்பவர்கள். கதை வேறு கனவு வேறு. அவை வாழ்வல்ல என்று அறியாத எவருளர்?”

“பெருந்திரளென இவர்கள் சென்று அந்நகரை பார்ப்பார்கள். அங்கே மழையால் கருகிய கோட்டையும், தாழ்ந்த தொன்மையான குவைமாடங்களும், குறுகிய தெருக்களும், ஒன்றோடொன்று தோள் ஒட்டி நின்றிருக்கும் தொன்மையான சுதை பூசிய மாடங்களும் கொண்ட ஒரு சிறு நகர் இருக்கும். அது அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது. ஏனெனில் அது பருப்பொருள். அது வேறு. அதுவே அங்கிருக்கும் என்று அவர்கள் நன்கு அறிவார்கள். அது ஒருபோதும் அவர்களுக்குள்ளிருக்கும் அஸ்தினபுரி எனும் கனவை கலைக்காது. மிக இயல்பாக அங்கு சென்று அங்குள்ள சிறு இடங்களில் அடித்துப்புரண்டு தங்களை செருகிக்கொண்டு தங்கள் வாழ்க்கைக்கான வழிகளைக் கண்டடைந்து பிளவுகளில் வேரோடி இலை விரித்தெழும் ஆலமரம்போல அந்நகரில் தங்களை நிறுவிக்கொள்ள ஒவ்வொருவரும் முயல்வார்கள்.”

“ஐயம் தேவையில்லை. அந்நகரைக் கண்டு விழிநீர்விட்டு நெஞ்சறைந்து எவரும் அழப்போவதில்லை. எவரும் இது அல்ல நான் தேடி வந்த நகர் என்று அங்கிருந்து திரும்பிப் போகப்போவதும் இல்லை” என்றான் காமன். அதுவும் உண்மையென்றே அவனுக்கு தோன்றியது. அவன் தன்னைச் சூழ்ந்து அலைகொண்டு அங்கே சென்றுகொண்டிருந்த மக்களை பார்த்தான். அவர்கள் இதற்கு முன் இத்தனை பெருங்கனவுகளை கண்டிருக்கமாட்டார்களா என்ன? ஒவ்வொரு முறை வயலில் விதைக்கும்போதும் கூடவே பெருங்கனவுகளை விதைப்பதுதான் வேளாண்குடியின் வழி என்பார்கள். நூறு முறை அவர்களின் வயல்கள் கருகியிருக்கும். மறுமுறை விதைக்கையில் விதையுடன் கனவையும் சேர்த்து அள்ள கை குவியாமல் இருப்பதில்லை.

இதோ இந்தப் பெண்மணி தன் இளமையில் கண்ட கணவனைத்தான் அடைந்திருக்கிறாளா? இவ்விளைஞன் தான் எண்ணிய இல்லத்தைத்தான் அமைத்திருக்கிறானா? கனவுகளை மிக ஆழத்தில் நுரை என வளரவிட்டு, அதில் ஓர் உலகை அமைத்து, அங்கு சென்று இளைப்பாறக் கற்றிருக்கிறார்கள் மனிதர்கள். சிறுகால் வைத்து மண்ணில் இரைதேடும் பறவைகள் நொடிப்போசைக்கும் அஞ்சி சிறகடித்தெழுந்து தங்கள் மரங்களுக்குத் திரும்பிவிடுவதுபோல் கனவுகளை நாடுகிறார்கள்.

ஆனால் அவனால் அஸ்தினபுரியை தன் உள்ளம் எளிதாக எதிர்கொள்ளும் என்று எண்ணிக்கொள்ள இயலவில்லை. மிகத் தெளிவாகவே அஸ்தினபுரியின் மெய்யான வடிவை அவன் தன்னுள் வகுத்துக்கொண்டிருந்தான். அதை கூறவும் சூதர்கள் இருந்தனர். இளிவரல் சூதர்களிடம் எந்த மிகையும் இருக்கவில்லை. இசைப்பாடல்களும் பரணிகளும் பாடுபவர்கள் பாடிப் பாடிப் பெருக்கி, உணர்வுச்சங்களில், கனவின் ஒளியில் நிறுத்திவிட்ட ஒன்றை மறுகணமே திருப்பி களியாட்டென, பொருளின்மையென, இளிவரலென, இழிவென மாற்றிக்காட்டிவிட்டார்கள்.

உண்மையில் அங்கிருந்த அனைவருக்கும் அதுவும் தேவைப்பட்டது. போர்க்களத்தில் அஸ்வத்தாமனின் இணையற்ற வீரத்தைக் கேட்டு உளம் நெகிழ்ந்து விழிநீர் சிந்தும் ஒருவன் அன்று மாலை ஓர் இளிவரல் கவிஞன் அஸ்வத்தாமனின் உடலில் பத்து துளைகள் உள்ளன, ஐந்தவித்து பத்தை மூடி தவம்செய்கிறான் என்று பகடி உரைக்கையில் வெடித்து நகைத்தனர். அப்பகடியினூடாக நெடுந்தொலைவு சென்று இளைப்பாறி மீண்டு அக்கனவுகளுக்கு வந்தனர். அவன் அப்பகடிகளையும் அஞ்சினான். அக்கனவுகளிலிருந்தது அவர்களின் எளிமையும் இயலாமையும் என்றால் அப்பகடியில் கசப்புடன் காழ்ப்புடன் வெளிப்பட்டது அவ்வெளிமையும் இயலாமையும்தான்.

எளியோராக இருக்கையில் மட்டுமே திகழும் கசப்பு அது. பெரியவை, உயர்ந்தவை, அரியவை எவையும் தங்களுக்குரியவை அல்ல என்று தங்களைத் தாங்களே முடிவெடுத்துக்கொண்டவர்களின் கருவியே பகடி என்பது. பகடியினூடாக துயரங்களை கடந்து செல்கிறார்கள். சிறுமைகளை கடந்து செல்கிறார்கள். பகடியினூடாக கடந்து செல்ல முடியாத ஒன்றே ஒன்றுதான் உண்டு, கழிவிரக்கம். கழிவிரக்கம் இல்லாத பகடியாளர்கள் எவரும் புவியில் இருக்க இயலுமா என்ன?

அஸ்தினபுரியின் காவல்மேடையில் நின்றிருந்த பெண்டிர் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் பெருங்கூட்டத்தைக் கண்டு சலிப்புற்றிருந்தார்கள். அவர்களை எப்படி கையாள்வதென்று பயின்றும் இருந்தார்கள். அஸ்தினபுரிக்குள் செல்ல வேண்டியவர்களை அவர்கள் தெரிவு செய்து உள்ளே அனுப்பினார்கள். ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் உள்ளே செல்லவேண்டுமென்பதை முன்னரே கணித்து அவர்களுக்கு ஆணை அனுப்பப்பட்டிருந்தது. உள்ளே செல்பவர்களை எண்ணி அவ்வெண்ணிக்கையை ஓலைகளில் பொறித்து ஒவ்வொரு காவல்மாடத்திலிருந்தும் அஸ்தினபுரிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது.

மூன்று நாழிகைகளுக்கு ஒருமுறை காவல்மாடத்திலிருந்து புறாக்கள் எழுந்து பறப்பதை அவன் கண்டான். அங்கு வரும் அனைவருமே அஸ்தினபுரிக்குள் செலுத்தப்பட்டனர். பின்னர் ஓரிரு நாட்களுக்குப் பின்னர் அங்கிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களை நோக்கி நடத்தப்பட்டனர். செல்லும் அனைவருக்கும் நிலமும் பரிசும் கிடைக்கும் என்பது அதற்குள் அங்கு அனைவருக்கும் பேச்சாக வந்துவிட்டிருந்தது. அஸ்தினபுரியின் புரவிகள் சென்ற திசை அனைத்துமே அஸ்தினபுரி நாடென்பதனால் உள்ளே வந்து பெய்துகொண்டிருந்த மக்கள்திரள் அனைத்தும் சென்று அடங்கிய பிறகும் மேலும் மேலுமென அஸ்தினபுரி திறந்திருந்தது.

உள்ளே சென்றுகொண்டிருந்த திரளைப் பார்த்தபடி அவன் மரத்தடியில் தலைக்கு கை கொடுத்து அமர்ந்திருந்தான். அவனுடன் வந்தவர்கள் முதல் நாளே உள்ளே சென்றுவிட்டார்கள். “நீங்கள் வரவில்லையா, தென்னகத்தாரே?” என்று முதியவராகிய ஊஷ்மளன் கேட்டார். “செல்லுக! நான் இன்னும் சற்று பிந்தும்” என்றான். “ஏன்?” என்றார் ஊஷ்மளன். “நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்றான். “என்ன முடிவு?” என்றார் ஊஷ்மளன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “நகருக்குள் செல்லவா வேண்டாமா என்ற முடிவா?” என்று ஊஷ்மளன் நகைத்தார். ஆமென்று அவன் தலையசைத்துச் சொன்னதும் திகைத்து பின் மீண்டும் நகைத்து “பொய்!” என்றார்.

“மெய்யாகவே” என்றான் ஆதன். “மெய்யாகவே அந்த முடிவை எடுத்துவிடாதீர்கள். இங்கிருந்து ஒரு வெறியில் கிளம்பி திரும்பச் சென்றுவிடவும் கூடும் நீங்கள். உங்கள் இயல்பு அது என்று இத்தனை காலம் உடன் வந்த எனக்கு தெரியும். ஆனால் அது நல்ல முடிவல்ல. பின்னர் அஸ்தினபுரியை மட்டுமே எண்ணிக்கொண்டிருப்பீர்கள். அஸ்தினபுரி பெருகி உங்களை சிறைப்படுத்திவிடும். அஸ்தினபுரியை உதறவேண்டுமெனில்கூட அதை நீங்கள் பார்த்தாக வேண்டும்” என்றார். “செல்க!” என்று ஆதன் சொன்னபோது அவனுக்கு சினம் எழுந்திருந்தது. அச்சினம் அது உண்மை என்பதனால் என்று உணர்ந்தான். அவர் சிரிப்புடன் திரும்பி அஸ்தினபுரி நோக்கி சென்றார்.

அதன்பின் ஒவ்வொரு நாளும் காலையில் அன்று கிளம்பி உள்ளே சென்றுவிடவேண்டியதுதான் என்றுதான் எழுந்தான். அதை ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு அந்தியாக்கினான். மறுநாள் “ஆம், இன்று” என்று விழித்தெழுந்தான். அஸ்தினபுரிக்குச் செல்பவர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். அங்கிருந்து திரும்பும் எவரும் அவ்வழியே வரவில்லை. அவர்களுக்கு வேறு வழிகள் வகுக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரியிலிருந்து வெளியேறுபவர்களை சென்று கண்டு அவர்களுடன் சற்று தொலைவு நடந்து மீண்டால் நன்று என்று அவனுக்குத் தோன்றியது. அவர்கள் அங்கே கண்டதென்ன, எதை பெற்றார்கள், அதற்கு முன் எதை இழந்தார்கள்?

பலமுறை அவன் அங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரியை விட்டு நீங்கும் வழிகளில் எதையோ ஒன்றை சென்றடையலாம் என்று எண்ணிக்கொண்டான். அதற்கும் அவனால் இயலவில்லை. அங்கேயே அவன் உள்ளம் தயங்கி தேங்கி நின்றது. ஏழாம் நாள் அவன் மிகத் தொலைவில் ஒரு முரசொலியை கேட்டான். அது அவனை திடுக்கிடச் செய்தது. அந்த முரசொலியின் பொருளென்ன என்று அறிவதற்குள்ளாகவே அவன் அதை ஒரு ஆணையாக எடுத்துக்கொண்டான். உள்ளே செல்வதற்கான நீண்ட நிரையில் சென்று நின்றான். அதன் பின்னரே அம்முரசொலியின் பொருள் என்ன என்று கேட்டான்.

“வடதிசைக்கு புரவியுடன் ஏகிய இளைய பாண்டவர் பீமன் திரும்பி வருகிறார்” என்றான் ஒருவன். “நான்கு வேள்விப்புரவிகள்! நான்கு புரவிகள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. அனைத்துப் புரவிகளும் நகர் திரும்பிய பின்னர் ராஜசூயம் நிகழும்.” அவன் சூழ நோக்கியபின் “வைதிகர்களும் பிறரும் கண்ணுக்குப் படவில்லையே?” என்று கேட்டான். “அவர்களுக்குரிய பாதை வேறு. இன்று அஸ்தினபுரி நூறு பாதைகளின் மைய முடிச்சு மட்டுமே” என்றான் ஒரு சூதன்.

அவன் காவல்முகப்பை அடைந்தபோது அங்கிருந்த முதிய பெண்மணி அவனிடம் “எங்கிருந்து வருகிறீர்?” என்றாள். “தெற்கே குமரிமுனையிலிருந்து” என்று அவன் சொன்னான். “குமரி!” என்றபின் “நெடுந்தொலைவு!” என்றாள். “ஆம், மலைகளுக்கும் நதிகளுக்கும் அப்பால்” என்றான். “எங்கு செல்கிறீர்?” என்றாள். “அஸ்தினபுரியின் வழியாக கடந்துசெல்கிறேன். செல்லுமிடம் அறியேன்” என்றான். அவள் புன்னகைத்து “முன்பும் குமரியிலிருந்து இங்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வழி சென்றவர்கள் பற்றிய பல கதைகள் இங்கு உள்ளன” என்றபின் “செல்க!” என்றாள். அவன் தலைவணங்கி உள்ளே செல்லும் குழுவுடன் இணைந்துகொண்டான்.

முந்தைய கட்டுரைஇலக்கியவிழாக்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்