‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் 6

பெருங்கந்தர் எழுந்து சென்றபின் சற்றுநேரம் அங்கே அமைதி நிலவியது. அனல் வெடித்து வெடித்து உலைந்தாடிக்கொண்டிருந்தது. உண்டு முடித்து ஓரிருவர் எழுந்து படுக்கும்பொருட்டு சென்றார்கள். அழிசி பூதியிடம் “பாணரே, அஸ்தினபுரியைப் பற்றி மேலும் பாடுக!” என்றான். “நாங்கள் இருவரும் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறோம்.” பூதி ஆதனை நோக்கி புன்னகைத்துவிட்டு “அது பெருங்களிறுகளின் நகரம்” என்றார். குறுமுழவில் விரலோட்டி அதை பேசவிட்டு அதனுடன் தன் பேச்சையும் இணைத்துக்கொண்டார்.

“அஸ்தினபுரி மண்ணுக்கு அடியில் ஆயிரத்தெட்டு மாபெரும் யானைகளால் தாங்கப்படுகிறது. அஸ்தினபுரியின் அமைப்பே யானைகளாலானது. அதன் கிழக்கே ஐராவதமும் அதன் பிடியாகிய அஃபுருமையும் வெள்ளிக்குட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கே புண்டரீகன் அவன் துணைவி கபிலையுடன் செம்புக்குட வடிவில் நிறுவப்பட்டுள்ளான். தெற்கே வாமனன் என்னும் திசையானை தன் பிடியாகிய பிங்கலையுடன் வெள்ளீயத்தால் உருளைவடிவில் வார்க்கப்பட்டு நிறுவப்பட்டிருக்கிறான். தென்மேற்கே குமுதன் துத்தநாக உருளையாக வடிக்கப்பட்டான். அவன் துணைவி அனுபமை அருகே நின்றிருக்கிறாள். மேற்கே காரீய உருளையாக அஞ்சனன் தன் துணைவி தாம்ரகர்ணியுடன் அமைந்தான். வடமேற்கே புஷ்பதந்தன் ஒரு இரும்புக்கிண்ண வடிவில் துணைவி சுஃப்ரதந்தியுடன் நிறுவப்பட்டான். வடக்கே சார்வபௌமன் அங்கனையுடன் பாதரச உருளை வடிவில் நின்றிருக்கிறான். வடகிழக்கே சுப்ரதீகன் தன் பிடியாகிய அஞ்சனாவதியுடன் பொற்குடத்தின் வடிவில் அமைந்தான்.

ஹஸ்திபதன் தன் சங்கை எடுத்து ஒலித்ததும் அதைக் கேட்டு எட்டு திசையானைகளின் மைந்தர்களாகிய ஆயிரத்தெட்டு மதகளிறுகள் தங்கள் துணைவியருடன் காடுகளிலிருந்து இருள்பெருகி வழிந்தோடி வருவதுபோல வந்தன. தங்கள் துதிக்கைகளால் பெருங்கற்களைத் தூக்கி அடுக்கி அந்நகரை கட்டின. அவை பிற யானைகளைவிட எட்டு மடங்கு எடைகொண்டவை. ஏனெனில் தவத்தால் தங்கள் உடம்பை அவை இரும்பென ஆக்கிக்கொண்டிருந்தன. யானை பாறையாக முயல்கிறது, பாறைகள் அனைத்தும் இரும்பாக முயல்கின்றன. தவம் கனிந்து தங்களை இரும்பாக ஆக்கிக்கொண்டவை அவை. அந்த ஆயிரத்தெட்டு யானையிணைகளும் வந்து நின்றபோது நிலம் தழைந்து அவற்றை உள்ளிழுத்துக்கொண்டது. அவை மண்ணுக்குள் புதைந்தன. அந்த யானைகளின் மேல் அமைந்திருக்கிறது அந்நகர். அவற்றால் தாங்கப்படுகிறது.

அரிதாக யானைகளில் ஒன்று மத்தகம் விலக்கிக்கொள்ளும்போது அந்நகர் சற்றே திடுக்கிடுகிறது. அதன் மாட மாளிகைகளிலிருந்து காரைகள் உதிர்ந்து விழுகின்றன. அங்குள்ள பறவைகள் திகைத்து சிறகடித்து வானில் எழுகின்றன. குழவிகள் கனவு கண்டு விழித்தெழுந்து அழுகின்றன. அப்போது இறந்துபோன எதையோ நினைவுகூர்தல்போல ஒரு திடுக்கிடல் ஏற்படும் என்கிறார்கள். இரவில் சுடர்கள் துணுக்குறுவதை காணலாகும். அது ஓர் அறிவிப்பு. அரசர் தலைமையில் மூத்த குடிகள் சென்று எட்டு திசையானைகளுக்கும் மைந்தர்களுக்கும் பலியும் கொடையும் அளித்து வணங்குவார்கள். அந்த யானைகள் பொறையிழக்கும்வரை அஸ்தினபுரி மண்மேல் நிலைகொள்ளும்.

“அஸ்தினபுரி கங்கையால் ஏழு முறை வளைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஏழுமுறை கங்கையைக் கடந்தாலன்றி அதை எவரும் அடையமுடியாது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளில் அஸ்தினபுரியை எவரும் வென்றதே இல்லை” என்று பூதி சொன்னார். இரு விரல்களால் சீரான தாளத்தை மீட்டி அஸ்தினபுரியின் கதையை பாடத்தொடங்கினார். அதன் மதில்நிரைகளின் அமைப்பை, சாலைகளின் பின்னலை, அங்காடிகளின் நெரிசலை, ஆலயங்களின் அமைதியை, அணிக்காடுகளின் குளிரை, மாளிகைகளின் செறிவை, அரண்மனையின் நிமிர்வை. அவர்கள் விழிகளும் செவிகளுமாக அதை கேட்டிருந்தனர்.

ஆதன் எழுந்துசென்று மரத்தடியில் படுத்துக்கொண்டான். சற்றுநேரத்தில் நாடோடியும் எழுந்து அவன் அருகே வந்து படுத்தார். இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார்கள். “உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று மெல்ல நாடோடி கேட்டபோது ஆதன் திடுக்கிட்டான். “அந்நான்கு கோட்டைமுகப்புகளில் எது தெய்வங்களால் இயற்றப்பட்டது என எப்படி கண்டடைவீர்கள்?” ஆதன் “தெரியவில்லை” என்றான். “அங்ஙனம் நான்கு வாயில்கள் இருக்குமென்றால் நான்கில் எது அழகு குறைந்ததோ அதுவே தேவர்களால் கட்டப்பட்ட அமராவதியின் தோற்றம்” என்றார்.

ஆதன் “ஏன்?” என்றான். “தேவர்களின் அந்நகரின் நிழலே மண்ணில் விழுந்தது. அது குறைவுபட்டதே. மண்ணுக்காக இறங்கிவந்தமையாலேயே அது மானுடத்தன்மைகொண்டது. அதைக் கண்டு தேவருலகை கற்பனை செய்து சிற்பி சமைத்தது அவன் எல்லைகளைக் கடந்து அமரத்தன்மை கொண்டது. அவன் அமரனாகி நின்று அமைத்த பிற மூன்றும் தேவருலகுக்கு நிகரானவை, அல்லது அவற்றையும் கடந்துசெல்பவை.” ஆதன் புன்னகை செய்தான். அவர் “இவ்விரவில் துயில முடியுமெனத் தோன்றவில்லை. சற்று குளிர்கிறது, எனவே நாளை வெயில் கடுமையாகவே இருக்கும்” என்றார்.

ஆதன் “நீங்கள் எங்கு செல்கிறீர்?” என்றான். நாடோடி மறுமொழி சொல்லவில்லை. ஆனால் சற்றுநேரம் கழித்து “நீங்கள் அஸ்தினபுரிக்குச் செல்வது உறுதியா என்ன?” என்றார். “ஆம்” என்றான் ஆதன். “நீங்கள் செல்கையில் அங்கே அஸ்தினபுரி இருக்குமா என்பதே ஐயம்தான்” என்றார். ஆதன் திகைப்புடன் “ஏன்?” என்றான். “அங்கே பெரும்போர் தொடங்கிவிட்டது. எத்தனை காலம் அது நிகழும், எவ்வண்ணம் முடியும் என எவரும் இன்று சொல்லிவிட முடியாது” என்றார் நாடோடி. ஆதன் திடுக்கிட்டான். “போரா?” என்றான். “ஏன், நீர் அங்கே போர்மூளுமென எண்ணவே இல்லையா?” என்றார் நாடோடி.

“இல்லை, அங்கே போர்சூழ்ந்துகொண்டிருப்பதை அறிந்தேன். ஆனால் இரு தரப்பும் இணையான வல்லமையுடன் எழுந்தால் போரிடத் தயங்குவார்கள் என்று எண்ணினேன். அதன் அழிவை எண்ணி இரு தரப்பிலும் முனிவரும் அறிஞரும் சான்றோரும் சொல்லி விலக்கிவிடுவார்கள் என்றுதான் தோன்றியது.” நாடோடி “அது நடந்தது, நெடுங்காலம். இப்போர் உண்மையில் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. அன்று முதல் முனிவரும் அறிஞரும் சான்றோரும் சொல்லிச் சொல்லி அதை தவிர்த்தனர். தெய்வ வடிவமான யாதவர் அவரே மும்முறை தூதுசென்று போர் ஒழியும்படி முயன்றார். ஆனால் போர் அகத்தே தொடங்கிவிட்டதென்றால் அதை எவராலும் புறத்தே நிகழாமல் நிறுத்திவிட முடியாது” என்றார்.

“போர் நிகழ்கிறது என எவர் கூறினார்கள்?” என்று அவன் கேட்டான். நாடோடி ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவர் பேசுவதற்காக எதிர்பார்த்திருந்தான். அப்பால் பாணன் பாடி முடிக்க ஒவ்வொருவராக படுக்கைக்கு சென்றுகொண்டிருந்தனர். “நானே பார்த்தேன்” என்று நாடோடி சொன்னபோது ஆதன் திடுக்கிட்டான். “ஆம், என் விழிகளால் நானே நேரில் பார்த்தேன். நான் அங்கே சென்ற தென்புலப் பாணர்களில் ஒருவன். நாங்கள் ஏழுபேர் ஒரு சூதர்குழுவாக குருக்ஷேத்ரத்திற்கு சென்றோம். குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்குவதுவரை நாளும் இரவில் போர்க்கதைகளை சொன்னோம். வீரர்கள் போர்க்கதைகளை கேட்க விரும்பினார்கள். கதைகளைக் கேட்டு கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். அவர்கள் ஒரு மாபெரும் விழாவில் இருப்பதைப்போல் களிகொண்டிருந்தார்கள்.”

போர் தொடங்குவதற்கு முந்தையநாள் இரவில் நாங்கள் விருத்திரனை இந்திரன் வென்ற கதையை சொன்னோம். அன்றிரவு அனைவரும் துயின்ற பின்னர் நாங்கள் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஒளிப்பந்தங்களின் நிரையாக விரிந்துகிடந்த குருக்ஷேத்ரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அன்று நான் அறிந்த அந்த இனிமையையும் நிறைவையும் பிறிதெப்போதும் அடைந்ததில்லை. ஏன் அவ்வாறு என இன்றுவரை எண்ணிக்கொண்டே இருக்கிறேன். உள்ளம் அனைத்து விசைகளையும் இழந்து இனிய சோர்வுடன் தளர்ந்துகிடந்தது. ஒரு சொல் எஞ்சவில்லை. இருத்தல் அத்தனை எடையின்றி இருந்தது. அத்தனை மென்மையாக இல்லையென்றேபோல உடல் மண்ணில் படிந்திருந்தது. மண்ணில் எவருக்கும் விண்ணில் எவருக்கும் எவ்வகையிலும் கடன்பட்டவனல்ல என்று தோன்றியது. நேற்று முற்றாக அகன்று நாளை என்பது சற்றும் தோன்றாமல் ஒரு பெருநிலை.

மறுநாள் போர் தொடங்கியபோது நாங்கள் ஒரு பின்புலத்துக் காவல்மாடத்தில் ஏறி அமர்ந்திருந்தோம். இரு படைநிரைகளும் வண்ணப்பெருக்காக அணிவகுத்து எதிரெதிர் நின்றதைக் கண்டு அது ஒரு பெருவிழவு என்றே என் உள்ளம் எண்ணிக்கொண்டிருந்தது. அதன் அழகையும் நேர்த்தியையும் கண்டு விழிவீசி நோக்கி நோக்கி அள்ளி அள்ளி எடுத்து ஆற்றாமைகொண்டு தவித்தது. இன்னும் சற்றுநேரம் இன்னும் சற்றுநேரம் என்று தெய்வங்களிடம் இறைஞ்சியது. கதிர்விளிம்பு எழுந்ததும் போர்முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. விண்பேருருக் கொண்ட இரு விலங்குகள் பெருங்காதலுடன் ஒன்றைஒன்று தழுவிக்கலந்தன.

அதை அங்கிருந்து நோக்கிக்கொண்டிருந்தபோது நெடுநேரம் அந்நிகழ்வின் அழகைத்தான் அறிந்துகொண்டிருந்தேன். அது கட்டின்மையின், வடிவின்மையின் அழகு. பெருங்காடுகள், மலைத்தொடர்கள் அவ்வாறு எண்ணம் மலைக்கும் அழகு கொண்டவை. கடல் அவ்வாறான அழகு கொண்டது. அப்படைப்பெருக்கின் வழிவுகளை ஒழுக்குகளை சுழிப்புகளை நோக்கிக்கொண்டிருந்தேன். தன்னைத்தான் தழுவி தன்னைத்தானே கவ்வி தன்னுள் தானே ததும்பி அது அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. மெல்லமெல்ல என் உள்ளம் குருதியை உணரத்தொடங்கியது. செம்மண் தரை குருதியை எளிதில் வெளிக்காட்டுவதில்லை. இறுதித்துளிவரை உறிஞ்சி குடித்துவிடுகிறது. ஆனால் மெல்ல மெல்ல அதன் களங்களும் நிறைந்தன. செம்மண் நிணச்சேறாகியது. மிதிபட்டுக் கொப்பளித்தது.

அந்தியில் போர் முடிந்தபோது கொம்போசை கேட்டுத்தான் பொழுதுணர்ந்தேன். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. மலமும் நீரும் விந்துவும் வெளியேறியிருந்தது. கைகளைக் கூப்பி நெஞ்சோடு அணைத்து இறுக்கியிருந்தேன். என்னுடனிருந்த சூதர்களில் மூவர் மட்டுமே நிலையழிவில்லாதவராக இருந்தனர். அவர்களில் ஒருவர் களிவெறி கொண்டிருந்தார். கைகளை விரித்துக்கொண்டு “எழுந்தாள் அன்னை! செங்குருதி கொழுங்குருதி நாடும் கொற்றவை! கொல்வேல் வெல்வேல் கொடுங்காளி!” என்று கூவியபடி வெறிநடனமிட்டார். மற்றவர்கள் அவருடன் இணைந்துகொண்டார்கள். நாங்கள் நால்வர் கால்குழைந்து நின்றோம். பாடிவீடு திரும்பும் வீரர்கள் கருவறைக்குருதிபூசி வெளிவந்த மகவுகள் என்று தோன்றினர். உலகம் அவர்களுக்கு முற்றிலும் புதியதாகத் தெரிந்ததுபோல அவர்கள் விழிகள் திகைப்பு கொண்டிருந்தன.

எங்களில் ஒருவர் நெஞ்சைப் பற்றிக்கொண்டு விழுந்தார். அவரை எழுப்ப முயன்றபோது வாயில் குருதிவழிய அவர் இறந்துவிட்டிருப்பதை கண்டேன். அங்கிருந்து உடனே விலகிவிடவேண்டும் என்றே தோன்றியது. எஞ்சிய இருவரும் என்னுடன் வருவதாகச் சொன்னார்கள். நாங்கள் காட்டுக்குள் செல்வதை எவரும் தடுக்கவில்லை. குருக்ஷேத்ரத்தை விட்டு விலகுவது வரை எங்கள் உள்ளம் மலைத்து செயலற்றிருந்தது. விலகியதும் பதறித்தவிக்கத் தொடங்கியது. நாங்கள் காட்டுக்குள் அஞ்சிய எலிகள்போல புதர்களை ஊடுருவி ஓடினோம். எங்களைப் போலவே பலர் அவ்வாறு அஞ்சி ஓடிக்கொண்டிருப்பதை கண்டோம். படைவீரர்கள் ஏவலர் காவலர் சூதர் என அவர்களில் அனைவருமே இருந்தனர். அனைவரும் முற்றிலும் தனிமையில் பிற எவரையும் விழிநோக்காமல் சென்றுகொண்டிருந்தனர்.

காட்டில் நெடுந்தொலைவு வந்து ஓர் ஓடைக்கரையில் அமர்ந்தோம். ஓடைநீரையும் கைக்குச் சிக்கிய கிழங்குகளையும் உண்டோம். புல்பரப்பில் படுத்து துயின்றோம். விழித்துக்கொண்டபோது என்னுடன் வந்த சூதர்களில் ஒருவர் எழுந்து அமர்ந்திருப்பதை கண்டேன். “என்ன?” என்று கேட்டேன். “கனவு” என்றார். நானும் கனவில் குருக்ஷேத்ரத்தைக் கண்டு விழிப்படைந்திருந்தேன். “நான் கிளம்புகிறேன்” என அவர் எழுந்தார். “எங்கே செல்வீர்? இவ்விருளில் எங்கும் செல்ல முடியாது” என்றேன். “நான் மீண்டும் குருக்ஷேத்ரத்திற்கே செல்கிறேன்” என்றார். “என்ன சொல்கிறீர்?” என்று நான் திகைப்புடன் கேட்டேன். அவர் பதைப்புடன் “அன்றாடத்தின் வெறுமைக்கு திரும்புவதா? வெறுமைதான் மெய்மை என்றால் அதையே துறப்பதுதான்” என்றார். “உங்கள் உள்ளம் குலைந்துள்ளது, அமர்க!” என்றேன்

“என் உள்ளம் நிலைகொண்டுதான் உள்ளது. சொல்லுங்கள், நான் மீண்டுசென்றால் எனக்கு என்னதான் எஞ்சுகிறது அங்கே? பயின்றுதேறிய பழகிய சொற்கள், கைத்தடம் விழுந்த கிணைப்பறை. வேறென்ன? அங்கே முற்றிலும் நானறியாத ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அழிவே ஆயினும் கொடிதே ஆயினும் அது ஒரு பெருந்தோற்றம். பெருந்தோற்றங்கள் எல்லாமே தெய்வங்கள்தான். மண்ணில் தெய்வம் நிகழ்கையில் எதற்காக அஞ்சி ஓடவேண்டும்? உயிருக்காகவா? நான் இழப்பதற்கு ஏது உள்ளது, உயிரன்றி?” என்றார். அவர் சொல்வது அத்தனையும் உண்மை என்று தோன்றியது. ஏனென்றால் நான் அப்போது அவ்வண்ணம்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

அவர் செல்வதை வெறுமனே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். அவரை அழைக்கவேண்டும் என்றும் அவருடன் செல்லவேண்டும் என்றும் மாறி மாறி தோன்றிக்கொண்டிருந்தது. என்னுடன் இருந்த சூதர் எழுந்து “வயல்களில் அறுவடை எப்போது?” என்றார். நான் துணுக்குற்றேன். “என்ன கேட்கிறீர்?” என்றேன். “கன்றுகளை எப்போது கட்டுவார்கள்? அதன் பிறகுதானே கதைசொல்லல்?” என்றார். அவருடைய உள்ளம் பேதலித்திருப்பதை கண்டேன். அது என் ஊசலாட்டத்தை நிறுத்தியது. அங்கே சென்றால் நானும் அவ்வண்ணமே ஆகிவிடுவேன். அவரை அங்கேயே விட்டுவிட்டு நான் மட்டும் கிளம்பி கங்கைக்கரைக்கு மீண்டேன்.

“கங்கை வழியாக வங்கநாடு வந்தேன். பீதர்மரக்கலம் ஒன்றில் தொற்றிக்கொண்டு பூம்புகாருக்கு மீண்டேன். அங்கிருந்து மேலும் தென்புலம் நாடினேன். மதுரை செல்லும் வணிகர்குழுவை தேடினேன். இவர்களை கண்டேன். வேங்கடம் செல்லலாம் என இவர்களுடன் சேர்ந்தேன்” என்றார் நாடோடி. “அதன்பின் நான் போர்ச்செய்திகள் எதற்கும் செவிகொடுக்கவில்லை. கப்பலிலும் கரையிலும் வெறிகொண்டு பணியாற்றுவதே என் வழக்கம். இந்நேரம் அங்கே போர் முடிந்துவிட்டிருக்கக்கூடும். ஏனென்றால் இரு சாராருமே ஒருவரை ஒருவர் முற்றழிக்கும் ஆற்றல்கொண்டவர்கள். அங்கே களத்தில் எவரும் உயிருடன் எஞ்ச வாய்ப்பே இல்லை.”

ஆதன் “ஒவ்வொருநாளும் என செய்தி பெருகியே வருகிறது” என்றான். “ஏன் இதை உம்மிடம் சொல்கிறேன் என எண்ணிக்கொண்டேன். உம் வடிவில் நான் மீண்டும் அஸ்தினபுரிக்குச் செல்கிறேன் என்று படுகிறது” என்றார் நாடோடி. பின்னர் கண்களை மூடிக்கொண்டு நீள்மூச்செறிந்தார். “தெய்வங்களே” என்று முனகிக்கொண்டார். ஆதன் அவரை நெடுநேரம் நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு முகம் பழைய கிழிந்த மிதியடிபோல் ஆகிவிடமுடியும். அது நடந்த தொலைவெல்லாம் அதில் திகழ முடியும். அம்முகம் போலத்தான் தன் முகமும் ஆகப்போகிறது என எண்ணியபோது அவன் இருளில் புன்னகை புரிந்தான்.

 

விஜயபுரியை அடைந்தபோது ஆதன் அஸ்தினபுரியில் நடந்த அப்பெரும் போரைப்பற்றிய செய்திகளை விரிவாக அறிந்தான். அப்போது நாடோடி அவனுடன் இல்லை. அவர் வழியிலேயே திரும்பி வேங்கடத்தை நாடி சென்றுவிட்டிருந்தார். வடபுலத்திலிருந்து வந்த சூதர் ஒருவர் அப்போரின் கதையை சிறுதுடியை விரல்களால் மீட்டி பாடிக்கொண்டிருந்தார். முதலில் அவன் வழக்கமான போர்ப்பரணிகளில் ஒன்றென்றே எண்ணினான். பின்னர் அதில் ஒலித்த ஒற்றைச்சொல் அவனைக் கவர அருகணைந்து அதை கேட்டான். அஸ்தினபுரி! போர் முடிந்துவிட்டிருந்தது. அஸ்தினபுரி பாற்கடல் கடைந்தபோது அமுதம் திரண்டு எழுந்ததுபோல் அப்போரிலிருந்து எழுந்துவிட்டது.

சூதர் உணர்ச்சி மிகுந்த குரலில் போர்க்களக் காட்சியை விரித்துரைத்தார். “உத்தரனை நோக்குக! அவன் களத்தை அறிந்துவிட்டான். வெற்றிவேல்! வீரவேல்! என்று பெருங்குரலெழுப்பியபடி செல்க! செல்க! என்று தன் பாகனை ஊக்கினான். தேர் அதற்கென படைபிளந்துகொண்டு அமைந்த பாதையினூடாக விரைந்து முன்னகர்ந்தது.” அவர் கைமுழவின் ஒலியில் தேர்ச்சகட தாளம் எழுந்தது. “விம் விம் விம் என ஒலித்தது அவன் கையிலிருந்த வில். விராடநாட்டில் பிறந்து உயிர்துறந்த மூதெருமை ஒன்றின் தோலில் ஈர்ந்த நாண் அது. எருமை அதில் தோன்றி உறுமியது.”

போர்முரசுபோல குறுமுழவை மீட்டி சூதர் பாடினார் “அம்புகளை ஆவக்காவலரிடமிருந்து வாங்கி வாங்கி நாணேற்றி காதளவு இழுத்துச் செலுத்தினான். ஒவ்வொரு அம்புடனும் தன்னுள் ஒரு துளி எழுந்து விம்மிச்செல்வதை கண்டான். அது சென்று தைத்து சரித்த வீரனை முற்பிறவிகளில் அறிந்திருந்தான். கொல்பவனுக்கும் கொல்லப்படுபவனுக்கும் நடுவே அவ்விறுதிக் கணத்தில் நிகழும் விழித்தொடர்பு எத்தனை விந்தையானது! தெய்வங்கள் தெய்வங்களை அங்ஙனம்தான் அணுகுகின்றன போலும்.”

“பீஷ்மரை அணுகுக! பீஷ்மரை அணுகுக!” என்று உத்தரன் கூவினான். பாகன் சவுக்கை வீசி புரவிகளை ஊக்கி தேரை அணிபிளந்து செலுத்தி பீஷ்மரை நோக்கி கொண்டுசென்றான். அதோ பீஷ்மரின் முதிய முகம். பின்புறம் எழுந்த சூரியனின் ஒளியில் பொற்கம்பிகளாக கூந்தலிழைகள் மின்ன வெண்ணிறத் தாடி பறக்க மூதாதை தெய்வம் ஒன்று எழுந்து வந்ததுபோல் தெரிகின்றது அது” என்று சொல்லி நிறுத்தி நீண்ட அகவலாக சூதர் பாடினார்.

“நீரலைபோல் மின்னிக்கொண்டிருந்தது அவர் ஊர்ந்த தேர். துள்ளி நடமிடும் வில்லை விழிகொண்டு நோக்க எவராலும் இயலவில்லை. வலக்கை அம்பறாத்தூணிக்கும் நாணுக்குமென சுழல்வது பறக்கும் பறவையின் சிறகென ஓர் அரைவட்டமாக, பளிங்குத்தீற்றலாக, நீர்வளையமாக தெரிந்தது. அவரிலிருந்து எழுந்த அம்புகள் தீப்பொறிபோல் இருபுறமும் சிதறித் தெறித்து படைவீரர்களை சாய்த்தன. ஒற்றைக்கணத்தில் வெடித்து விழிநோக்கவே பதினாறு முப்பத்திரண்டு அறுபத்துநான்கு என்று பெருகும் அம்புகளை அவர் வில் தொடுப்பது போலிருந்தது. அவர் சென்ற வழியெங்கும் எரிசென்ற பாதை என வெறுந்தடமே எஞ்சியது.”

அவர் பாடப்பாட ஆதன் அவர் அருகே சென்று “சூதரே, இப்போரை நீங்கள் நேரில் பார்த்தீர்களா?” என்று கேட்டான். விரல்கள் கிணை மேல் அசைவற்று நிற்க அவனை திரும்பி நோக்கிய சூதர் தன் சிவந்த விழிகள் நிலைக்க நோக்கி “சூதர்கள் தங்கள் ஊன் விழிகளால் பார்ப்பதில்லை” என்றார். “பின் எவர் பார்த்தார்கள்?” என்றான் ஆதன். “சூதன் என்பது ஒரு பேருருவம். பல்லாயிரம் விழிகளும் செவிகளும் கொண்டது. பல்லாயிரம் பல்லாயிரம் நாவுகள் கொண்டது. முடிவிலா நினைவுகொண்டது. அதை நிறைக்கும் மொழிகொண்டது. எங்கோ ஒருவர் பார்த்தால் அனைவரும் அறிவோம். ஒருவர் பாடும் சொல் அனைவர் நாவிலும் திகழும்” என்றார் சூதர்.

“மெய்யாகவே இப்போர் நிகழ்ந்ததா? இப்பேரழிவிற்குப் பின் அங்கு நகரென ஏதேனும் எஞ்சியுள்ளதா?” என்று அவன் கேட்டான். “அஸ்தினபுரி அழிவதில்லை. அது அழிந்தால் இங்கு மானுடர் வாழ்வதற்கான இலக்கென்று ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுகிறது. இங்கு இத்தனை பேர் உண்டும் நுகர்ந்தும் அழித்த பின்னரும், பூசலிட்டும் போரிட்டும் சிதைத்த பின்னரும் நிலமெங்கும் திரு எஞ்சுகிறது” என்று சூதர் சொன்னார். “தெய்வங்கள் மானுடரை முற்றாகக் கைவிடுவதே இல்லை என்பதாலேயே இங்கு மானுடம் வாழ்கிறது.”

“இப்பெரும்போருக்குப் பின் அங்கு நகரென ஏதும் எஞ்சுவதற்கு வாய்ப்பில்லை என்றார்கள்” என்று ஆதன் மீண்டும் சொன்னான். சூதர் “மானுடரால் ஆனதல்ல அஸ்தினபுரி. மானுடர் அதன்மேல் வீசிச்செல்லும் காற்றும் தூசும் போன்றவர்கள்” என்றார். ஆதன் “அறியேன். நான் அங்கு சென்று அதை பார்க்கலாம் என்று இருக்கிறேன்” என்றான். சூதர் வெடித்து நகைத்து “இல்லாத நகரையா?” என்றார். அதிலிருந்த வேடிக்கையை அதன் பின்னரே உணர்ந்து ஆதனும் உரக்க நகைத்தான்.

அக்கதையைக் கேட்டு திரும்பி வருகையில் அழிசி அவனிடம் “மெய்யாகவே அத்தனை பெரும்போர் நிகழ்ந்திருக்கலாகுமா?” என்றான். “ஏன்?” என்றான் ஆதன். “அவ்வாறு நிகழ வாய்ப்பே இல்லை. அத்தனை பெரிய போர் நிகழ்ந்தால் அதன் அழிவைக் கண்டதுமே அதை நிறுத்திவிடமாட்டார்களா என்ன? அவர்கள் கற்றோர், நெறியறிந்தோர் அல்லவா? தங்களைத் தாங்களே முற்றழித்துக்கொள்ளும் வரை அப்போரை நீட்டிக்கொண்டு செல்வார்களா?”

ஆதன் திரும்பி அவன் கண்களைப் பார்த்து “மனிதர்கள் அப்படி எதையேனும் எப்போதேனும் பாதியில் நிறுத்தியிருக்கிறார்களா?” என்றான். அவன் உள்ளம் திகைப்படைவது தெரிந்தது. பின்னர் மெல்லிய குரலில் “மாட்டார்களா?” என்றான். ”நீ இன்னும் அகவை நிறைவை அடையவில்லை. மெல்ல உணர்ந்துகொள்வாய்” என்றான் ஆதன். அழிசி தலையசைத்தான். எண்ணி ஆழ்ந்து உழன்றபடி உடன் நடந்தான். அவன் ஒரேநாளில் மாறிவிட்டிருப்பதாகத் தெரிந்தது. அவன் நடையே மாறிவிட்டிருந்தது. பலமடங்கு எடைகொண்டவன்போல. அகத்துலா நிலையழிவு கொண்டதுபோல.

இரண்டுநாள் அழிசி அவன் அருகே வரவேயில்லை. பெரும்பாலும் தனித்து அமர்ந்திருந்தான். விஜயபுரிக்கு மேலும் ஒருநாள் இருக்கையில் அவன் ஆதனின் அருகே வந்தான். ஆதன் புன்னகைத்து அருகமர கைகாட்டினான். அவன் அமர்ந்தபின் “நான் ஒன்று எண்ணினேன்” என்றான். “சொல்” என்றான் ஆதன். “அஸ்தினபுரி வரைக்கும் நாம் எதற்கு செல்லவேண்டும்? நாம் செல்லும்போது அங்கு அவ்வாறு ஒரு நகர் இல்லையெனில் இதுகாறும் நாம் இருந்த அனைத்தையும், பெருக்கிக்கொண்டு வந்த அனைத்தையும் இழந்தவர்களாவோமே?” என்று அழிசி கேட்டான்.

ஆதன் வெறுமனே நோக்க அழிசி சொன்னான் “நாம் அங்கு செல்லாமல் இருக்கலாம். நம்மில் அந்நகர் அழியாமல் இருக்கும்.” ஆதன் “ஆனால் செல்லாமல் தவிர்ப்பது நமக்கு இயல்வதல்ல” என்றான். “ஏன்?” என்று அழிசி கேட்டான். “இதுநாள் வரை மானுடனை இயக்கும் விசை அதுதான். தனக்கு அழிவையே துயரையே அளிப்பதாயினும் அறிவை ஒருபோதும் மனிதனால் வேண்டாமென்று சொல்ல இயலாது. அறிவின் நுனி தெரிந்துவிட்டால் முழுமை வெளியாகும் வரை அமைதிகொள்ளவும் இயலாது” என்றான் ஆதன்.

“மெய்யாகவா? தன்னை அழிக்கும் அறிவையும் மானுடர் விரும்புவார்களா?” என்றான் அழிசி. “அறிவில் பெரும்பகுதி மானுடனை அழிப்பதே. அதை வேண்டி விரும்பி இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கும் மானுடர்களே இப்புவியில் மிகுதி” என்று ஆதன் சொன்னான். “எனில் ஏன் அறிவை நாடுகிறான் மானுடன்?” என்று அழிசி கேட்டான். “அறிவில்லை என்றால் அவன் மானுடனாக உணரமாட்டான் என்பதனால்” என்று ஆதன் சொன்னான். அழிசி அவன் இளம்விழிகளில் திரண்ட துயருடன் நோக்கினான்.

“விலங்கல்லாமல் தன்னை ஆக்கிக்கொள்ளும் பொருட்டு மானுடன் இயற்றியவையே பண்பாடு என நாம் அறிவன அனைத்தும். ஸ்ரீதமரின் சொல்லை கேட்டிருப்பாய். நேற்றும் நாளையும் இல்லாது அறிவது விலங்கியல்பு. அதிலிருந்து மீளும்பொருட்டு நாம் அனைத்தையும் நேற்றுடனும் நாளையுடனும் பிணைக்கிறோம். அதன்பொருட்டு அறிவை உருவாக்கிக்கொள்கிறோம். அறிவை சுமந்தலைகிறோம். செல்வமாக, படைக்கலமாக, வசிப்பிடமாக. அறிவன அனைத்தையும் அறிந்தவற்றினூடாக மட்டுமே அறியும்நிலையை சென்றடைகிறோம். உலகையே கைவிடுவோம், ஈட்டிய அறிவை கைவிடமாட்டோம்.”

அன்று அழிசி அவனருகே படுத்து பெருமூச்சுகள்விட்டபடி புரண்டுகொண்டிருந்தான். பின்னிரவில் அவன் விழித்துக்கொண்டபோது அழிசி கண் திறந்து விண்மீன்களைப் பார்த்து படுத்திருப்பதை கண்டான். “என்ன?” என்று கேட்டான். “மூத்தவரே, நான் இங்கிருந்தே கிளம்புகிறேன்” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “என்னால் உங்களுடன் வர இயலாது. உங்களுக்குள் நான் அஞ்சும் பிறிதொன்று உள்ளது. அந்த அச்சம்தான் இதுவரை உங்களிடம் என்னை ஈர்ப்புகொள்ள வைத்தது. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் அது என்னை கொல்லும் அறிதல்.”

ஆதன் “ம்” என்றான். “நான் இங்கிருந்து வேறெங்காவது செல்ல இருக்கிறேன்” என்றான் அழிசி. “வேறெங்காவது என்றால்?” என்று ஆதன் கேட்டான். “நீர் நிறைந்த பசுமை திகழும் ஒரு சிற்றூர்” என்றான் அழிசி. ஆதன் புன்னகைத்து “அழகிய பெண்கள், சிறிய இல்லம், சில பசுக்கள்” என்றான். “ஆம், அதற்கென்ன? எளிய இனிய வாழ்க்கையைப் பற்றி உங்களைப் போன்றோர் கொள்ளும் இந்த இகழ்ச்சி என்னை சீற்றமடையச் செய்கிறது” என்று அழிசி சீற்றத்துடன் சொன்னான். “எளிய வாழ்க்கையில் வாழ்பவர்கள் நின்றுவிட்டவர்கள் என்றே நீங்கள் எண்ணுகிறீர்கள். அதனூடாக அவர்கள் செல்லும் தொலைவைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

“நான் எதையும் இகழவில்லை. எனக்குரியதை தேர்வு செய்கிறேன். நீ உன் வழி செல்க!” என்றான் ஆதன். “என்றேனும் நீங்கள் திரும்பி வருகையில் இங்கு நானிருப்பேன். நீங்களும் நானும் சென்ற தொலைவு என்ன என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வோம்” என்று அழிசி சொன்னான். அது என்ன வகையான வஞ்சினம் என்று ஆதனுக்குப் புரியவில்லை. “நான் வரவே வாய்ப்பில்லை” என்றான். “வந்தால்…” என்றான் அழிசி. “எனில் நாம் சந்திப்போம்…” என்று ஆதன் சொன்னான். “உறுதியாக சந்திப்போம். அவ்விழைவு இருக்குமெனில் அச்சந்திப்பு நிகழும்” என்றான் அழிசி.

மறுநாள் காலையில் ஆதன் விழித்து நோக்கியபோது அக்குழுவில் அழிசி இல்லை. முதிய வணிகர் காத்தன் “இன்று முதற்காலையிலேயே தன் தோல் முடிச்சுடனும் கழியுடனும் அவன் கிளம்பிச்சென்றுவிட்டான். உங்களுக்குள் ஏதேனும் பூசலா?” என்று கேட்டார். “இல்லையே” என்று அவன் சொன்னான். “பூசல் நிகழ்ந்து செல்வதாயின் திரும்பி வருவார்கள். பூசல் நிகழாது விட்டுச் செல்வதெனில் அவன் திரும்பி வரப்போவதில்லை” என்றார். “நன்று” என்று ஆதன் கூறினான்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி : தருமபுரம் ஆதீனம்
அடுத்த கட்டுரைஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?