‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் 3

கிளம்புவது என்று முடிவெடுத்தபின் ஆதன் ஊர்முதல்வரான முதுசாத்தனை சென்று பார்த்தான். அவரை அவன் இளமையிலிருந்தே பார்த்துவந்தாலும் மிகமிகக் குறைவாகவே பேசியிருந்தான். அவர் அவனை காணும்போதெல்லாம் பெரும்பாலும் இனிய புன்னகை ஒன்றுடன் கடந்துசெல்வதே வழக்கம். அவனும் அதை வெறுமனே நோக்கிய பின் விழிதாழ்த்திக்கொள்வான். முதுசாத்தன் பன்னிரு தலைமுறைகளாக அவ்வூரின் தலைக்குடியாக திகழும் மரபில் மூத்தவர். எங்கும் முதற்சொல் அவருடையதாகவும் தலைச்சொல்லும் அவருடையதேயாகவும் இருந்தாலும் எப்போதும் பணிவு மாறாத குரல் கொண்டிருந்தார். குடிமரபென கற்றறிந்த நெறிகளில் அச்சிற்றூரை நிலைநிறுத்தி வந்தார்.

அவர் அச்சிற்றூரின் குறுகிய எல்லைக்கு அப்பால் ஒரு போதும் கால் வைத்தவரல்ல. “மேற்கே செங்குன்று, கிழக்கே வெறித்த செம்புலம், தெற்கே கடல், வடக்கே ஆரல்கணவாய் திறந்திருக்கும் இந்திரமலை. இவ்வெல்லைக்குள் திகழ்வது ஒரு முழு உலகம்” என்று அவர் கூறுவதுண்டு. “எல்லையற்றது காற்றுவெளி. எல்லையற்றது புவி. நாம் அள்ளும் மூச்சு சிறிதே. நாம் அமையும் இல்லமும் சிறிதே. எல்லை வகுத்துக்கொள்ளாமல் வரையறை செய்ய இயலாது, வரையறுக்கப்படாமல் நெறி திகழ முடியாது. நெறி திகழும் நிலத்திலேயே வாழ்க்கை எழ முடியும்.” அவன் அவர் பேசுவது பல தருணங்களில் தனக்காகவே என்று உணர்ந்திருந்தான். “பதியெழு அறியா பழங்குடிகளிலேயே நெறி திகழ முடியும். நிலைக்கோளே நெறி. நிலைகொள்வதே நிலம்.”

ஆலயமுகப்பின் ஆல்மேடையில் அமர்ந்து அவர் சொன்னார் “என் எல்லைக்கு அப்பாலிருந்து ஒரு சொல்லும் என்னை வந்து அடைந்ததில்லை, ஏனென்றால் வந்தடைந்த அத்தனை சொற்களையும் நான் என் சொற்களாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். என் இல்லத்திற்குள் எனக்கு உற்றாரன்றி எவருமில்லை.” புன்னகையுடன் நரைமீசையை நீவியபடி “ஏனென்றால் எவர் என்னை நாடி வந்தாலும் வாசல் நிலையிலேயே அவர்களை என் உறவினராக்கிக் கொள்கிறேன்” என்றார். அவன் அவர் விழிகளை அஞ்சினான். அவற்றில் அவன் தவிர்க்க விழைவன இருந்தன. அவை அவனை நோக்கி எப்போதும் புன்னகை கொண்டிருந்தன. அப்புன்னகையை எப்போதேனும் அவன் கனவில் காண்பதுண்டு.

அவர் இல்லத்திண்ணையில் தன் பெயர்மகவுகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார். பின்னுச்சிப்பொழுது மயங்கிக்கொண்டிருந்தது. அவர் கனைத்ததும் அவருடைய இல்லமகள் வந்து குழவியரை வாங்கிக்கொண்டு சென்றாள். அவர் கையசைவால் அவனை வரவேற்று அமரச்சொன்னார். அவன் அமர்ந்ததும் இல்லச்சிறுமி ஒருத்தி அவனுக்கு குளிர்மோர் கொண்டுவந்து தந்தாள். அவன் விடாயமைந்த பின்னரும் சொல்லெடுக்காமல் அமர்ந்திருந்தான். அவர் அவனை புன்னகையுடன் நோக்கியபடி காத்திருந்தார். அவன் இயல்பாக விழிதூக்கி அவர் கணகளை நோக்கிய பின் திரும்பிக்கொண்டு “நான் கிளம்புகிறேன்” என்றான். அவர் ஏதும் கேட்கவில்லை. அவனே அனைத்தையும் சொன்னான். “இங்கிருந்து கிளம்பியாகவேண்டும். இங்கே நான் இனி இருக்கமுடியாது. அச்சொல் என்னை அழைக்கிறது. தொலைவிலுள்ள அந்த ஊர். அதைப்பற்றி ஏதுமறியேன். ஆனால் அதிலிருந்து என்னால் தப்ப முடியாது.”

ஊரில் எவரிடமும் அதை அவன் சொல்லியிருக்க இயலாது என அவன் அறிந்திருந்தான். முன்பு அவன் அவ்வாறு சொல்வதுண்டு. “இங்கே இருப்பதில் பொருளில்லை” என்று. “கிளம்பவேண்டியதுதான்” என்று. பேச்சுவாக்கில் அவன் நாவில் அச்சொற்கள் எழும். உடனே கேட்பவர்களின் விழிகள் அதிர்ச்சியுடன் மாறுபடுவதை அவன் கண்டிருந்தான். மறுகணமே அவன் கையை பற்றிக்கொண்டு “நீ உதறிச்செல்வது உன் அன்னையை. நீ சென்ற பின்னர் உன் அன்னை இங்கு பாழடைந்து இழிந்தழியும் இல்லம்போல் ஆவாள். எண்ணுக, கிளம்பிச்சென்றவர்கள் திரும்பி வரவே முடியாது! மறுசொல் எண்ணி நீ திரும்பி வரலாம். வென்று மீளலாம். ஆனால் நீ விட்டுச் சென்ற எதுவும் இங்கிருக்காது. கிளம்புகையில் அக்கணம் வரையான வாழ்க்கையை முற்றாக தவிர்த்துவிட்டு துறந்துவிட்டே கிளம்புகிறாய்” என்பார்கள்.

கிளம்புதல் என்னும் சொல் ஊரில் ஏன் அவ்வளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று அவன் எண்ணியதுண்டு. பின்னர் அறிந்தான், ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திற்குள் மீளமீள கிளம்பிச்சென்றவர்கள் என்று. கிளம்பிய மறுகணமே துறக்கவிருப்பவை அனைத்தும் பல்லாயிரம் கைகொண்டு பற்றியிழுத்து அவர்களை அங்கேயே நிறுத்திவிடுகின்றன. அனைவருமே கிளம்புதல் என்னும் சொல்லை அவன் சொன்னதுமே சென்று மீள்வதைக் குறித்தே பேசினார்கள். மீளாதுசெல்லுதல் என ஒன்று அவர்களின் உள்ளத்தில் எழவே இல்லை. “நான் மீளப்போவதில்லை” என்று அவன் சொன்னான். “மீளாது செல்லுமிடம் ஒன்றே… சாவு” என்றார் ஒருவர். “நான் செல்லப்போவது தொலைவுக்கு… தொலைவு என்பது சாவுதான்” என்று அவன் சொன்னான்.

ஊர்நாவுகளில் இருந்து அவன் அன்னை அவனுள் இருந்த அவ்விழைவை தெரிந்துகொண்டிருந்தாள். ஒருபோதும் அவள் அவனிடம் கேட்டதில்லை. ஆனால் எப்போது அவள் கண்களை பார்த்தாலும் அதில் அந்த மன்றாட்டு இருந்தது. அவன் நெஞ்சைப் பிழிவது போன்ற துயர். “உனக்கென்ன வேண்டும்? இனி நான் என்னதான் அளிக்கவேண்டும்?” தன் அன்பின் முழு மாயத்தாலும் அவனுக்கென ஓர் உலகை உருவாக்க அவள் சித்தமாக இருந்தாள். தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாதவளாக, அவனையன்றி எதையும் அறியாதவளாக. காற்றென்றும் ஒளியென்றும் பொருள்வெளி என்றும் அவனை முற்றாகச் சூழ்ந்திருப்பதே தன் இயல்பென. அன்னையர் எப்படி பொருள்வெளியாக, இயற்கையாக, ஊராக, வீடாக உருமாற்றம் கொள்கிறார்கள்?

அன்னையரில் தனித்தவர்கள் உண்டா? தனிமை கொள்கையில் அவர்கள் அன்னையர் அல்லாமல் ஆகிறார்கள். கைவிரித்து உலகனைத்தையும் அணைக்கவும் முற்றாக சூழ்ந்துகொள்ளவுமே அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அப்போது மட்டுமே அன்னையென்றிருக்கிறார்கள். தொலைவு திரண்டு எழும் அறியாச் சொல்லின் அழைப்பைக் கேட்ட அனைவருமே அன்னையரிடமிருந்து பிடுங்கப்படுகிறார்கள். அன்னையிலிருந்து கிளம்பாமல் எவரும் அச்சொற்களை சென்றடைய இயலாது. அவன் அன்னையால் பற்றப்பட்டிருந்தான். ஆனால் ஏதோ ஒரு கணத்தில் மரம் கனியை கைவிட்டுவிடுகிறது. அதைத்தான் நாடி ஏங்கியிருந்தான். ஆனால் அக்கணத்தில் துணுக்கென்றிருந்தது. அதில் ஆணவம் புண்பட்டது. செல்க என்னும் சொல்போல் இரக்கமற்றது வேறில்லை.

அவன் முதுசாத்தனிடம் சொன்னான் “இங்கு கிளம்பியவர்களே மிகுதி, அகன்றவர்கள் அரியர். நான் அறியாச் சொல்லொன்றின் அழைப்பால் இங்கு அமர்ந்திருக்க முடியாதவனாகிவிட்டேன்.” முதுசாத்தன் சிரித்து “இங்கே முழுதமைந்தவர்கள் சிலர், உதறி எழுந்தவர்கள் அதனினும் சிலர், இரண்டுக்கும் நடுவே அலைக்கழிவு கொள்பவர்களே அனைவரும். அமைந்தவர்களால் கிளம்புபவர்களை புரிந்துகொள்ள இயலும்” என்றார். “அவன் நான் கிளம்பலாமா?” என்றான். “அதற்கு உனக்கிருக்கும் தடை என்ன?” என்றார். “என் அன்னையை காட்டுகிறார்கள். பெரும்பழி இயற்றியவன் ஆவேன் என்கிறார்கள். என்னை அச்சுறுத்துவது நான் செல்லவிருக்கும் நெடுந்தொலைவு. இவ்வழியெங்கும் இக்குற்ற உணர்ச்சியை கொண்டு செல்வேன் எனில் கணந்தோறும் பெருகி என் முதுகெலும்பை ஒடிப்பதாக அது ஆகிவிடக்கூடும்” என்றான்.

“அக்குற்றவுணர்ச்சியை கடக்க உன்னால் இயலும். அது ஒரு வெறும் ஆணவம். மானுடர் பிறருக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக எண்ணுவது ஆணவத்தால் மட்டுமே. எவரும் பிறரை இயற்றவில்லை, எவரும் பிறரை சுமந்திருக்கவும் இல்லை. ஒவ்வொருவரையும் அவ்வாறு நம்பவைத்து அவரவர் இடங்களில் அவரவர் வலைக்கண்ணிகளில் அமைய வைத்திருக்கிறது மாயை. எழுக!” அச்சொல் அவனை விதிர்ப்படையச் செய்தது. எழுக! அவன் அவரிடம் “நான் இவ்வண்ணம் பலமுறை வந்து இச்சொற்களை உங்களிடம் சொல்வதை என்னுள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறேன். பிறிதொன்று எண்ணாமல் இங்கிருந்து கிளம்ப இயலுமென்று எனக்கு இப்போதுதான் தோன்றுகிறது. பிறிதொருபோதும் மீள முடியாமல் செல்வதும் எனக்கு இயல்வதே” என்றான். “எனில் கிளம்புக!” என்று அவர் சொன்னார்.

அவன் வணங்கி எழுந்தான். பின்னர் தயங்கிநின்று “நான் மிளையரை சந்திக்க விழைகிறேன்” என்றான். “அவரைச் சந்திப்பது குறித்து அஞ்சிக்கொண்டிருந்தேன். அந்த அச்சத்துடன் இங்கிருந்து செல்லக்கூடாது என இப்போது தோன்றுகிறது. அவர் அளிப்பது சிறுதுளி நஞ்சு என்றால் அதுவே எனக்கு வழித்துணையாகவேண்டும்.” முதுசாத்தன் புன்னகைத்தார். அவன் அங்கிருந்து மிளையனை தேடிச்சென்றான். அவர் ஊருக்கு வெளியே இருக்கும் சோலைக்குச் சென்றிருப்பதாக சொன்னார்கள். அவன் அங்கே சென்றபோது மரங்களிலிருந்து உதிர்ந்துகிடக்கும் வேப்பம்பழங்களை பொறுக்கிச் சேர்த்துக்கொண்டிருந்தார் .அவனைக் கண்டதும் புன்னகைத்து “கிளம்புகிறாயா?” என்றார். “துரியோதன மாமன்னர் நூறு கைகள் கொண்டவர் என்கிறார்கள். நூறு கைகளுக்கு ஒற்றைத்தலைதானா என்று என் பெயர்மைந்தன் கேட்டான். நூறு கையிருந்தால் தலையே தேவையில்லை என்று நான் சொன்னேன்” என்றார்.

அவன் “நான் கிளம்புகிறேன்” என்றான். அவர் “எனில் கிளம்புக!” என்றபின் உரக்க நகைத்து “கிளம்புவது நன்று. கிளம்பி மீண்டவர்கள் தொலைவு என்னும் அந்த மாயைக்குள் மீண்டும் செல்லாமல் அதை ஒரு கனவென்றாக்கி அங்கே வேறொருவராகப் புழங்கியபடி இங்கே வாழ்கிறார்கள். அதுவும் ஒரு விடுதலையே” என்றார். அவன் சில கணங்கள் அவரை நோக்கி நின்ற பின் மீண்டும் “நான் கிளம்புகிறேன்” என்றான். அவர் சிரிப்பு மறைய கண்களைச் சுருக்கி “நன்று” என்றார். அவன் அவரை வணங்கி திரும்பி இடையிலிருந்த கச்சையை அவிழ்த்து தலையில் கட்டிக்கொண்டு அங்கிருந்தே கிளம்பி நடந்தான். ஒற்றையடிப்பாதையில் நடந்து உமணர்களின் வண்டிப்பாதையை சென்றடைந்தான். அவன் செல்வதை மார்பில் கைகளைக் கட்டியபடி மிளையன் பார்த்திருந்தார். ஒருமுறைகூட அவன் திரும்பவில்லை.

மையச்சாலைக்கு வந்து அங்கிருந்து உமணர்களின் வண்டித் தொடரொன்றை அடைந்து அவர்களுடன் இணைந்துகொண்டபோது அவன் ஒன்றை உணர்ந்தான். ஓர் மெல்லிய ஆடையை உடலிலிருந்து அகற்றும் அளவுக்குக்கூட அந்த விட்டுச்செல்லுதல் அவனுக்கு கடினமாக இருக்கவில்லை. துளியும் இழப்புணர்வு தோன்றவில்லை. கிளையசையாது எழுந்து பறக்கும் ஒரு பறவைபோல் அவன் அனைத்தையும் விட்டு நீங்கினான். அவ்வாறு நீங்குபவர்களை உமணர்கள் முன்னரும் கண்டிருந்தார்கள். அவர்கள் எங்கிருந்து அவ்வெண்ணம் தோன்றியதோ அங்கிருந்து அக்கணத்திலிருந்து கிளம்பியவர்களாக இருப்பார்கள். மறுகணத்திற்கென எதுவும் அவர்களிடம் இருப்பதில்லை.

ஆகவே அவர்களிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்கலாகாது என்ற உளப்பயிற்சி அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அவனுக்கு உணவளித்தார்கள். இயல்பாகவே அவர்களுடன் அவனும் பணியாற்றினான். சுமைகளை வண்டியிலேற்றினான். வண்டிமாடுகளை சுனைநீரில் கழுவிக் கட்டி புல்லூட்டினான். வடக்கே திறந்த பெரும்பாலையில் அவர்களுடன் செல்கையில் அறிந்தவையும் கொண்டவையும் ஒவ்வொன்றாக அகன்று மறைந்த பின்னரும் அவனிடம் எஞ்சிய அச்சொல் மேலும் மேலும் தெளிவுகொண்டபடியே வந்தது. அஸ்தினபுரி.

 

ஆதன் கிளம்பி ஒன்பது மாதங்களுக்குப் பின் வேங்கடத்தைக் கடந்து விஜயபுரியின் நகர்எல்லைக்கு வெளியே முதற்காவல்மாடத்தின் அருகே தொலைவணிகர்களுக்காகக் கட்டப்பட்டிருந்த கொட்டகைக்கு வெளியே வெறும் வெளியில் தங்கியிருந்த நாடோடிகளுடன் தங்கியிருந்தபோது சூழ ஒலித்துக்கொண்டிருந்த ஒலி கரைந்து ஒற்றை ரீங்காரம் என்றாகி அவனை சுழியிழுத்து மூழ்கடித்துக்கொண்டிருந்தபோது ஒன்றை உணர்ந்தான். அங்கே ஒலித்த மொழிகளில் ஒவ்வொரு வார்த்தையும் பிறிதொன்றை நிகர் செய்து ஒலியின்மையை உருவாக்கிக்கொண்டிருக்க எஞ்சியது ஒரு சொல் – அஸ்தினபுரி.

அப்போது நெடும்பயணத்தின் முதிர்வால் உளமயக்குகள் ஒழிய எங்கிருந்து அச்சொல் தன்னை வந்தடைந்தது என்று புறம்கணித்து நோக்க அவனால் இயன்றது. ஊரில் அச்சொல்லை எங்கோ எவரோ எப்போதும் சொல்லிக்கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். நினைவறிந்த நாளிலேயே ஊருக்குள் வரும் கதை சொல்லிகளிடமிருந்து அதை கேட்டிருந்தான். பெருங்களிறுகளின் நகர். அனைத்து நகரங்களுமே பெருங்களிறுகளுக்குரியவை. கோட்டைகளை கூத்தர் களிற்றியானைநிரை என்பதுண்டு. அங்காடியை மணிமிடைபவளம் என்பார்கள். அரண்மனைச்சூழலை நித்திலக்கோவை என்று. மாநகர் மதுரையின் இல்லங்கள் யானை முதுகுகள்போல என்று அவர்கள் பாடுவார்கள். எழுந்த மத்தகங்கள் என காவல்மாடங்கள். யானை உயிர்கொண்ட கல்மண்டபம். யானைகளின் நகர். அச்சொல்லைக் கேட்டிராத எவரேனும் ஊரிலிருக்க இயலுமா?

ஒரு சொல் திறந்துகொள்வதென்பது இப்புவியை கட்டியிருக்கும் பொருள்வயப் பெருக்கு தன் அடிப்படை நெறிகளில் ஒன்றை இல்லாமலாக்கிக்கொள்வதுதான். ஒன்று உடைகையில் பிறிதொன்றை உடைக்கிறது. கணம் கோடியென உடைந்து பொருளில்லா பெருவெளியாக மாறிவிடுகிறது. அச்சொல் என்று தன்னுள் உடைவு கொண்டது என்று அவன் எண்ணிக்கொண்டான். கூர்கொண்ட சொல்லில் இருந்து எவரால் விடுபட இயலும்? அது மறுக்க முடியாத அழைப்பு. தட்ட முடியாத நச்சு உபசரிப்பு.

அவன் பயணம் முழுக்க அஸ்தினபுரி என்னும் சொல் அவனுடன் வந்தது. அவன் அதையே எண்ணினான். எண்ணிச்சலிக்கையில் உதறமுயன்றான். உதறமுடியாதென உணர்ந்து சினம்கொண்டு தன்னை பழித்தான். சற்றேனும் அச்சொல் அகன்றதென்றால் அதை இழந்துவிட்டோமோ என்று எண்ணி அஞ்சி ஓடிச்சென்று அதை அள்ளி எடுத்து ஆரத்தழுவிக்கொண்டான். காதலர் அவ்வாறு துணையர் பெயரிலேயே திளைத்து வாழ்வதுண்டு என்று அவன் பாணர்பாடல்களில் கேட்டிருந்தான். காதலூட்டும் ஒவ்வொன்றும் அவ்வண்ணமேதான் போலும் என தெளிந்தான். அனைத்துக் காதல்களும் உளப்பிறழ்வுகளே. இன்பமென்றோ துன்பமென்றோ வகுக்கவொண்ணா அலைக்கழிதல்களே. இன்பமென்றும் துன்பமென்றும் மாறிமாறி நிகழும் மாயங்களே.

அவன் தன் வழியெங்கும் அவ்வண்ணம் எங்கோ சென்றுகொண்டிருப்பவர்களை கண்டான். திருவரங்கத்திற்கும் அண்ணாமலைக்கும் செல்பவர்கள். பிறிதனைத்தையும் துறந்து காசிக்குச் செல்பவர்கள். அனைவரும் அவ்வூரின் பெயரால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள். ஊரே அத்தெய்வமென்றாகிவிட்டிருந்தது. அரங்கனும் அண்ணாமலையனும் காசிநாதனும் என தெய்வங்கள் முகம்கொண்டன. அவர்கள் பெருநெகிழ்வுடன் விழிமல்க முகம்மலர கூவி அழைப்பது அவ்வூரைத்தான் என்று அவனுக்குத் தோன்றியது. அவ்வண்ணமே தன்னுள்ளும் அஸ்தினபுரி திகழ்கிறது. அவன் அஸ்தினபுரியின் பெயரை ஒழியாமல் சொல்லிக்கொண்டிருந்தான். சொல்லச்சொல்லப் பெருகுவதே எச்சொல்லும். சொல்லுந்தோறும் சொல்லென்றாகி நின்றிருப்பது சொல்லை விலக்கி தன்னைக் காட்டுகிறது.

அவன் பன்னிரு நகர்களின்வழியாக மதுரையை அடைந்து அங்கிருந்து நகர்களினூடாக காஞ்சிக்கு வந்து வேங்கடத்தைக் கடந்து மேலும் சென்றபோது தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு எப்படி முடிவில்லாத மர்மங்கள் அமைகின்றன என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தான். அறியாத ஊர்களைப் பற்றிய கனவுகளே இல்லாதவர்கள் ஒருவகையில் நல்லூழ் கொண்டவர்கள். வாழும் நிலம் அவர்களை முழுமையாக கவ்விக்கொள்கிறது. அவர்களின் வேர்கள் ஆழத்துளைத்துச் செல்கின்றன. அந்நிலமே கணம் ஒன்றென தன்னை மாற்றிக் காட்டி அவர்களை மகிழ்விக்கிறது. அங்கேயே வைத்திருந்து அமையும் கணத்தில் வாங்கி அமிழ்த்திக்கொள்கிறது. அறியாத நிலங்கள் சொல்சூடாதவை. வண்ணங்களும் வடிவங்களும் உயிர்த்துடிப்பும் மட்டுமாக எஞ்சுபவை. சொற்களில் ஏறி நெடுந்தொலைவு செல்பவை.

மலைச்சாரலில் பூத்து ஊருக்குள் நறுமணத்தை காற்றில் அனுப்பிவைக்கும் பாலைமரம் போன்றது அறியா நகர். பாலையின் மணம் கூரியது. தொலைவில் நறுமணம், அணுகுந்தோறும் கெடுமணம் என மாயம் காட்டுவது. பாலையை மரங்களில் ஒரு தெய்வமென்றே ஊர் எண்ணியது. யக்ஷிகளின், கந்தர்வர்களின் ஊர்தி. தொலைவில் இருந்து பார்க்கையில் மலை தன் மடியில் வைத்திருக்கும் சிறு பொற்கலம் போன்றிருக்கிறது பூத்த கள்ளிப்பாலை. அணுகிச்செல்கையில் மலை சூடிய குடைபோல் மாறுகிறது. அருகே நெருங்குகையில் மலர்களாலான கூடாரம்போல் இருளை உள்ளடக்கி காத்திருக்கிறது. உள்ளே நுழைந்தபின் அதன் மலர்கள் அல்ல, நறுமணமே உடைக்க முடியாத பெருஞ்சுவர் என்று உணர்கிறோம். நள்ளிரவில் பாலைமரத்தை சென்று கண்ட எவரேனும் திரும்பி வந்ததுண்டா?

ஒரு சொல் முடிவிலாது வளரவேண்டுமெனில் அது நோக்கும் கருத்தும் சென்று எட்டாத தொலைவில் இருந்து வரவேண்டும். ஒரு நூறு நாவுகளும் செவிகளும் கடந்து அணுக வேண்டும். ஒரு சொல்லென ஒரு ஊர் சுருங்கலாகும். அச்சொல்லிலேயே அவ்வூரின் அனைத்தும் இருக்கும். அவ்வூரின் பருவடிவங்கள் ஒருவேளை இருக்காது. வண்ணங்கள் இருக்காது. இயல்புகளும் திகழ்கையும்கூட இல்லாமல் இருக்கக்கூடும். அவ்வூரிலிருந்து எழுந்து சொல்லென பரவுவது எது? அவ்வூர் தன் கனவில் தன்னை எப்படி கண்டுகொண்டிருக்கிறதோ அப்படி. அவ்வூரை விண்வாழ் தேவர்கள் எப்படி பார்க்கிறார்களோ அப்படி. காலம் கடந்து தலைமுறைச் சரடின் மறு எல்லையில் எவரோ அந்த ஊரை எப்படி அறியப்போகிறார்களோ அப்படி.

தொலைதூர ஊர்கள் நச்சுப்பொய்கைகள். உலகெங்குமிருந்து மானுடரை அவை மாபெரும் சுழியென ஈர்த்து கொண்டுவந்து உள்ளடக்கிக்கொள்கின்றன. அறியா ஊர்கள் தீச்சொற்கள்போல. ஒருமுறை வந்தடைந்த பின் அள்ளிக்கொண்டு செல்லாமல் அவை நீங்குவதில்லை. அறியா ஊர்களாலானது இப்புவியெனும் பெருவெளி. அறிந்த ஒவ்வொரு ஊரையும் உதற வைக்கின்றன அறியாத ஊர்கள். அறிந்த ஊர் அன்னைபோல் கனிந்தது, அன்னமூட்டுவது, அணைப்பது, ஆறுதல் கூறுவது. அறியா ஊர் வஞ்சக் காமமகள். விளையாடுபவள், ஆட்கொள்பவள், அலைக்கழிப்பவள், அழிப்பவள். அள்ளி தன்னுள் அடக்கிக்கொண்டு, அகன்று செல்கையிலும்கூட முகமறிவிக்காதவள். தன்மேல் பித்துகொண்டு அணையும் எவரையும் தான் சற்றும் அறிந்திராதவள்.

அத்தனை பேரிடமும் அஸ்தினபுரியெனும் சொல் திகழ்வது எங்ஙனம்? இச்சொற்ச்சுழலைச் சலித்து என் செவி அதைமட்டும் தொட்டு எடுத்துக்கொள்கிறதா என்ன? அப்போது முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் அவன் காதில் விழுந்துகொண்டிருந்தன. கிளம்பி நிலங்களைக் கடந்து வர வர மொழிகளும் செறிந்தன. ஒரு மொழி பிறிதொரு மொழியை மதகளிறு பிறிதொன்றையென வெருண்டு விலக்குவதை அவன் கண்டான். புது மொழியை பொருளிலா ஓசையென்றாக்குவது அறிந்த மொழி. மத்தகத்தால் முட்டி வெளித்தள்ளுகிறது, சினந்து தன் எல்லைக்குள் துதிக்கை செவி விசிறி தலைகுலுக்கி அலைக்கழிகிறது. பிளிறி ஆர்ப்பரிக்கிறது. தம் எல்லைகளின்மேல் முழு விசையுடன் முட்டிக்கொண்டே இருக்கின்றன அனைத்து மொழிகளும்.

அறியா மொழியை அறிந்த மொழியினூடாகவே உணர முடிகிறது. அறியா மொழி பொருளிலா ஓசையென அலைக்கொப்பளித்துக் கொண்டிருக்கையில் தெறித்து துமியென வரும் ஒரு சொல் அறிந்த மொழியில் சென்று அமைகிறது. கடல் பவளத்தை உதிர்ப்பதுபோல். ஓடிச்சென்று அதை எடுத்து இது அறிந்த சொல் அல்லவா, இது நான் பொருள்கொள்ளும் ஒலியல்லவா என்று உளம் கொப்பளிக்கையில் அறியா மொழி அப்பால் பெருகி நின்று புன்னகைக்கிறது. அதன் கோட்டைவாயில் திறக்கிறது. அறிந்த சொற்களினூடாக அறியா மொழிகளுக்குள் நுழைகிறோம். மேலும் மேலும் தன்னை நிகழ்த்தி அறிதலாக மாறும் புதிய மொழி அறிந்த மொழியுடன் உருகி இணைந்து ஒற்றை மொழியாக ஆகிறது.

அப்போது அவனுள் பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் திரண்ட ஒரு மொழி நிறைந்திருந்தது. அது வெளிப்படும் தருணத்திலேயே தன் சொற்களை கண்டடைந்தது. அவனுடன் பேசுபவன் எந்த மொழியில் பேசினானோ அந்த மொழியை அவன் உணர்வதற்குள்ளாகவே நா தெரிந்தெடுத்தது. தனித்துப் படுத்திருந்து தன்னைச் சூழ்ந்து ஒலிக்கும் மொழிகளைக் கேட்டபடி இருக்கையில் அவன் ஒன்றை உணர்ந்தான். ஒரு மொழி பிறிதொரு மொழியிடமிருந்து மிகச் சிறிய அளவிலேயே வேறுபடுகிறது. ஒலிகளில், கட்டமைப்பில். ஆகவே ஒரு மொழியிலிருந்து பிறிதொரு மொழிக்குச் செல்வதைப்போல் எளிது பிறிதொன்றில்லை. அமைந்த மொழியை கைவிட கற்றுக்கொண்டிருக்க வேண்டும், அவ்வளவுதான். மொழியை உதறுபவனுக்கு மொழிகள் எளிதாக வசப்படுகின்றன.

இனி எனக்கு புது மொழி தேவையில்லை என்று அவன் விஜயபுரியை வந்தடைந்தபோது எண்ணிக்கொண்டான். அப்போதே அவனுக்கு பதினேழு மொழிகள் நெஞ்சில் நிறைந்திருந்தன. இன்னும் மொழிகள் உள்ளே சென்று அமையும் என்றால் என் அகமொழி மலைத்தொடர்களைப்போல் ஒருபோதும் முழுதுறப் பார்க்க இயலாததாக மாறிவிட்டிருக்கும். நான் அதன் மேல் சிற்றெறும்பென ஊர்ந்துகொண்டிருக்க நேரிடும். ஆனால் மொழிகள் உள்ளே வருவதற்கான அனைத்து வாயில்களையும் அவனே திறந்துவிட்டிருந்தான். அவனை மீறி அவை உள்ளே வந்து பெருகி நிறைந்துகொண்டிருந்தன. மொழிகளை அகத்தே வராது தடுப்பதற்கு ஒரே வழி அறிந்த மொழியில் ஓயாது பேசுவதுதான் என்பதை அவன் அறிந்தான்.

ஆனால் அவன் கிளம்பிய நாளிலிருந்தே பேச்சு நின்றுவிட்டிருந்தது. பிறர் பேச்சை கேட்பதற்காகவே அவனுக்கு மொழிகள் பயன்பட்டன. மொழி தன்னைச்சுற்றி நிரம்பி ததும்பிக்கொண்டிருக்கையில் நடுவே ஒரு சொல்லின்மையின் சுழிப்பென அவன் அமர்ந்திருந்தான். மனிதர்களை அவர்களின் மொழி வழியாக சென்று தொட்டான். அவர்கள் பேசும் மொழிகள் அவர்களின் விழிகளை பொருளுள்ளவையாக்கின. அவர்கள் புன்னகைகளில் ஒளி நிரப்பின. அம்மொழியினூடாகவே அவர்கள் உள்ளமும் முன் வாழ்வும் வாழ்ந்த நிலமும் கொண்டவர்களாக மாறினார்கள். அவர்களை மீண்டும் விலக்கி வெறும் முகங்களாக, வெற்றுத்திரளாக ஆக்கினாலொழிய மொழிகளிலிருந்து விலக முடியாது.

அந்தச் சொற்களை தவிர்ப்பதற்கு ஒரே வழி அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒற்றைப்பெரும் முழக்கமென எண்ணிக்கொள்வதுதான். ஒற்றைப் பெருமுழக்கம் என்ற சொல்லை தனக்குத்தானே சொல்லி தன் செவிகளுக்கு அவ்வாணையை அனுப்பினான். பருந்தெடுத்துச் செல்லும் கோழிக்குஞ்சை கல்லெறிந்து கீழே வீழ்த்திப் பிடிப்பது அவன் சிற்றூரில் வழக்கம். அது எழுந்த திகைப்பில் விழுந்த அதிர்ச்சியில் தான் இறந்துவிட்டதாக தானே நம்பிக்கிடக்கும். வெண்கலப்பானையை அதன் மேல் கவிழ்த்து சிறு கரண்டியால் மெல்ல அடித்து சூழும் ரீங்காரத்தை எழுப்புவார்கள். பின்னர் கலம் விலக்கி நோக்குகையில் எழுந்து திகைத்து நின்றிருக்கும்.

அது ஓங்காரம் என்று மிளையன் கூறுவதுண்டு. “இங்குள்ள ஒலிகள் அனைத்தும் சென்று விழுந்து ஒன்றான பெருங்கடல். ஒற்றைச் சொல்லின் முடிவிலி. ஒவ்வொரு உயிருக்கும் அது வாழ்வதற்கான ஒற்றைச் சொல்லொன்று உள்ளது. பிறிதெவருக்கும் இல்லாத சொல். அப்பெரும் பரப்பிலிருந்து அவர்களிடம் வந்து மீண்டும் சென்றுவிடுகிறது. அது அச்சொல்லை இழந்து இங்கே கிடந்தது. இவ்வோங்காரத்திலிருந்து அச்சொல்லை மீண்டும் பெற்றுக்கொண்டது. இனி அதை அது தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும். ஒருமுறை சொன்னதை மீண்டும் சொல்ல இயலாது. அணுவிடை வேறுபாடுகளால் ஒரு சொல்லையே மொழியென ஆக்கிக்கொள்ள முடியும். அகமென பெருக்க முடியும். முடிவிலி வரை கொண்டு செல்ல முடியும்.”

“மானுடருக்கு மட்டுமல்ல புழு பூச்சிகளுக்கும் இடையறா மொழிப்பெருக்கென்று அகம் அமைந்துள்ளது என்று உணர்க! சிறு கோழிக்குஞ்சு வெளிவந்ததும் சலிக்காது ஒற்றைச் சொல்லை சொல்லிக்கொண்டிருக்கிறது. பிறகு அச்சொல் அதன் உள்ளே வாழத்தொடங்குகிறது. அச்சொல் என அதற்குரிய தெய்வம் எழுகிறது, ஆட்கொண்டு அழைத்துச்செல்கிறது.” அவன் மிளையனின் சொற்களைத்தான் அடிக்கடி நினைத்துக்கொண்டான். அன்னையர், நல்லறிவூட்டும் ஆசிரியர்கள், சான்றோர்கள் சொன்னவை அனைத்தும் கரைந்தழிந்த பின்னரும் அவருடைய சொற்கள் மட்டும் எஞ்சியிருந்தன. அவற்றிலிருந்த நஞ்சு அவற்றை அழிவற்றவையாக்கியது. அவன் அவருடைய விழிகளின் கூர்புன்னகையுடனேயே அச்சொற்களை நினைவுகூர்ந்தான்.

“அஸ்தினபுரியையும் குருக்ஷேத்ரத்தையும் பிரிக்கமுடியாதென்று உணர்க! திருதிகழ் மாநகர் அக்குருதிநிலத்தால்தான் ஊட்டப்படுகிறது, காக்கப்படுகிறது. செங்குருதிநிலம் அங்கே எழவிருக்கும் பெரும்போர் ஒன்றுக்கென காத்திருக்கிறது என்கிறார்கள். உன் குருதியும் அங்கு விழவேண்டும் என தெய்வங்கள் எண்ணுகின்றன போலும்.” அவர் தயங்காத சிரிப்புடன் அவன் விழிகளை நோக்கி சொன்னார். “நம் ஏரியின் முதலைகளுக்கு உணவாக வடபுலத்திலிருந்து வந்துசேர்கின்றன பறவைகள். அவை கிளம்பும்போதே அனைத்தும் வகுக்கப்பட்டுவிட்டிருக்கின்றன. பறவை அவற்றை அறியமுடியாது. சிறகு விரித்தெழுக, பறந்து திசைகொள்க என்று மட்டுமே தெய்வங்கள் அதனிடம் சொல்கின்றன.”

சிதறிச்சிதறி பொருளென்றும் பொருளின்மையென்றும் சென்றுகொண்டிருந்த எண்ணங்களில் உழன்று அவன் விழி அயர்ந்து துயில்கொண்டபோது அவன் முகம் மலர்ந்திருந்தது. தன் கனவுக்குள் அவன் அஸ்தினபுரியை கண்டான். அதன்மேல் ஓசையே இல்லாமல் செங்குருதிமழை பொழிந்துகொண்டிருந்தது. செம்பட்டுநூல்கள் என மழைத்தாரைகள் நின்றுலைந்தன. குவைமாடங்கள் வெட்டிஎடுத்த நெஞ்சக்குலைகள். கூரைவிளிம்புகளிலிருந்து அரளிமொட்டுகள் என குருதித்துளிகள் சொட்டின.

முந்தைய கட்டுரைகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5
அடுத்த கட்டுரைஓர் உண்மைக் குரல்