மும்மொழிக்கொள்கை -இரண்டாம் மறுப்பு

மும்மொழிக்கொள்கை மறுப்புக்கு மறுப்பு

 

அன்புள்ள ஜெ,

 

புதிய கல்விக் கொள்கை மீதான விவாதங்களின் சூடு ஆறிய இந்த நேரத்தில் சாய் மகேஷ் அவர்களின் எதிர்வினை https://www.jeyamohan.in/127827#.XdzE_ugzZPY குறித்து சிலவற்றைச் சொல்லலாமென நினைக்கிறேன். அவருக்கு எழுதுவதால் எனக்கும் கற்க எதாவது கிடைக்கிறது.

 

புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிகழப்போவதாக அறிந்தேன். நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற அரசின் முடிவுகள் குறித்த விவாதங்கள் இந்த நேரத்தில் மீண்டும் இத்தளத்தில் முன்னுக்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  கடந்த ஆறு மாதங்களில் காலச்சுவட்டில் வந்த கல்வி தொடர்பான கட்டுரைகளை யாரும் வாசிப்பார்களெனில் கூடுதல் மகிழ்ச்சி.

 

இனி உணர்ச்சிகர ஊசலாட்டம்.

 

  1. மறுப்புக்கு மறுப்புக் கடிதம் படித்தபின் ‘தமிழில் தேசிய கல்விக் கொள்கை’ என கூகுளில் தேடினேன். நான்  மேற்கோள்காட்டிய மொழிபெயர்ப்பின் சுட்டி ஏழாவதாக வந்தது. இம்மொழிபெயர்ப்புக்கு வெளியீட்டுக் கூட்டமே நடத்தினார்கள். யூடியூபில் புதிய கல்விக் கொள்கை எனத் தேடினால் மாநாடுகள், போராட்டங்கள், கல்வியாளர்கள் வசந்திதேவி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர் கருணானந்தன் ஆகியோரின் காணொளிகள் கிடைக்கின்றன. இங்கு எதுதான் அதிகம் படிக்கப்படுகிறது? அதிகம் பகிரவோ, படிக்கவோ இல்லையென்றாலும் புள்ளிவிவரங்களுக்கும், அறிக்கையை படித்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் நான் முடிச்சிட மாட்டேன்.

 

  1. நண்பர் எதைப் ‘பரவலாக்கம்’ எனச் சொல்லிக் கடக்கிறாரோ, அதைத்தான் நான் திணிப்பு முயற்சி என்கிறேன். அது அவ்வளவு எளிதில் கடந்து போகக்கூடியதல்ல எனவும் எண்ணுகிறேன். திரும்பிப் பார்க்கையில், புதிய கல்விக்கொள்கையில் இந்தியைக் கட்டாயமாக்கும் விதிகளே இல்லை என அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் சொன்னது பொய் அல்லவா? ஒரு அரசுப் பிரதிநிதியின் வாக்கின் சத்தியம் இவ்வளவுதானா? (பார்க்க : முதல் மறுப்புக் கடிதம் , 2 ஆம் குறிப்பு)

 

மற்றபடி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் செய்த தவறுகளை பட்டியலிட்டு சமஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் http://writersamas.blogspot.com/2017/04/blog-post_60.html#more . அதை என்னுடைய கட்டுரையொன்றில் மேற்கோள் காட்டியுமிருக்கிறேன் https://sannaloram.blogspot.com/2019/04/blog-post.html . இதைப் ‘பொதுவான மத்திய அரசின் போக்கு’ எனக் கடந்து செல்லும் பெருந்தன்மை எமக்கு இல்லை.

 

ஒரு கொள்கையைப் பொதுவில் வைத்துக் கருத்துக்கேட்கையில் அதனைப் பாராட்டுவதும் குறைகளைப் பட்டியலிடுவதும் தனிநபர் அல்லது அக்குழுவின் பார்வையைப் பொறுத்தது. எதுவாயினும் அதற்கு முகங்கொடுக்கத்தான் வேண்டும். ஆனால், பாராட்டுகளின் பயன் என்ன?  இந்து ஆங்கிலப் பதிப்பில் பாராட்டுக்கட்டுரைகளே அதிகம் வந்தன. இந்து தமிழ் இருபக்கமிருந்தும் நடுப்பக்கக் கட்டுரைகளைக் கொண்டுவந்தது.

 

கருத்துக்கேட்பிற்கு அளித்த கால அவகாசம் என்ன? முதலில் முப்பது நாட்கள் மட்டும் கொடுத்தார்கள்; கோயம்புத்தூரில் மூடிய கதவிற்குள் சொற்ப நபர்களை வைத்துக் கூட்டம் நடத்தினார்கள். காலம் நீட்டிக்க வேண்டுமெனவும் பிராந்திய மொழிகளில் வெளிவிட வேண்டுமெனவும் தமிழகத்தில் போராட்டங்கள் நிகழ்ந்தன. அவை நியாயமானவை இல்லையா? ஒரு கொள்கை வெளியிடுவோர் கால அளவு, மொழிப்பிரச்சினைகளையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?

 

இவற்றையெல்லாம் சிந்திக்காமல் கருத்துக்கேட்டால் விமர்ச்சிக்கத்தான் செய்வார்கள். நண்பரையே பாருங்கள், முதலில் முடியாதென மறுத்தாலும் மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டிருக்க வேண்டுமென்கிறார். ஒரு கூட்டாட்சி அமைப்பில் அதைத்தானே செய்ய வேண்டும்?! அதுதானே சமத்துவப் பார்வை?

 

//மத்திய அரசு வெளியிடும் ஒவ்வொரு அறிக்கை, கோப்புகளையும் 22 மொழிகளில் வெளியிட்டு மொழிபெயர்ப்புக்கும் பொறுப்பேற்பது நடக்காத வேலை. மொழிபெயர்ப்பு பொறுப்பை மாநில அரசுகளிடம் கொடுத்து உரிய கால அவகாசம் கொடுத்து அவை தயாரானவுடன் ஒன்றாக வெளியிடலாம்.//

 

  1. வரைவு அறிக்கையும் நண்பரும் ‘மொழிகள்’ எனப் பன்மையில் குறிப்பிடும்போது, முதல் வகுப்பிலிருந்தே பயிற்சிப்புத்தகங்கள் மும்மொழிகளுக்கும்தான் என எண்ணத் தோன்றுகிறது. நண்பர் விளக்கும்போது புரிந்துகொள்கிறேன். இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம். அதைத் கவனிக்கத் தவறியிருக்கிறேன்.

 

//மேலும், அவர்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்க எல்லாப் பெற்றோராலும் இயலுமா? அவர்களுக்கும் மூன்று மொழிகள் தெரிய வேண்டுமே?!  என்கிறார்.
இது என்ன மாதிரியான வாதம் எனப் புரியவில்லை. எனில், படிக்காத அல்லது ஆங்கிலம் தெரியாத பெற்றோர் எனில், இருமொழிக் கொள்கை உள்ள பள்ளிகளில் கூட படிக்க வைக்க முடியாதே!//

 

களநிலவரத்தைப் பார்த்துவிட்டு இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன். நண்பரே சொல்கிறார், தமிழ் தெரியாமல் எட்டாம் வகுப்பைக் கடக்கிறார்கள் என்று. தமிழகத்தில் நிலவும் இருமொழிக்கொள்கையே தோல்வி என்கிறார் பள்ளி ஆசிரியரும், கவியுமாகிய சுகிர்தராணி. பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு தமிழும் ஆங்கிலமும் சரளமாக வரவில்லை. ஒரு குழந்தையின் கற்றலுக்கு பள்ளிச்சுழல் மட்டும் போதாது. அன்றாட வாழ்வில் ஆங்கிலம் அளவுக்கு சம்பந்தமில்லாத பிறமொழி ஒன்றை ஏன் பிள்ளைகளிடம் திணிக்க வேண்டும்? கற்றலில் வீடும், சுற்றமும் பெரும்பங்கு வகிக்கின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச்செல்வோர் உள்ள வீடுகளைப் பாருங்கள். அவர்கள் தனிப்பயிற்சி நிலையங்களை நாடவேண்டுமெனெத் தோன்றவில்லையா? அது குடும்பத்தின் மீது சுமத்தவிருக்கும் நிதிச்சுமை என்ன?

  1. //எதற்கு மூன்று மொழிகள்? வேறெந்த நாட்டிலாவது இதுகுறித்த முன்னுதாரணங்கள் உள்ளனவா?//

 

உடன் பயிலும் நண்பர் நைஜீரியர். 520 மொழிகளைக் கொண்ட நாடு என்கிறார்; அவற்றுள் பெரும்பான்மையினர் பேசும் மொழிகள் மூன்று. பள்ளிகளில் மாநில மொழியும் பிற பாடங்கள் ஆங்கிலத்திலும் பயிற்றுவிக்கப்படுவதாகக் கூறுகிறார். நிறைய மொழிகள் கற்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நமக்கு ஆய்வுகள் வேண்டும். ஆய்வுகளிருந்தாலும் அவை தனிமனிதத் தெரிவுகளுக்கு விடப்படவேண்டும். பள்ளிக்கூடங்கள் சோதனைச்சாலைகள் அல்ல.

 

பல மொழிகள் கற்பதால் கிடைக்கும் பயன்கள் யாருக்கும் தெரியாமலில்லை. கேரளத்தில் மும்மொழிக் கொள்கை உண்டு; இந்தி படிக்கத் தெரிந்தவர்கள். ஆனாலும் கல்வி நிலைய நூலகத்தில் இந்தி புத்தகங்கள் காற்று வாங்குகின்றன. நடைமுறையில் அவையெல்லாம் தனிமனிதரின் ஆர்வம் பொறுத்தது. நான் மூன்றாண்டுகளாகத் திருவனந்தபுரத்தில் வசிக்கிறேன். இலக்கியம் வழியாகவும் அனுபவம் வழியாகவும் சுகுமாரன் அளவிற்கோ, சாம்ராஜ், சமஸ் அளவிற்கோ இம்மண்ணை உள்வாங்கியிருக்கிறேனா என்றால் இல்லை. இங்கேயே இடம்பெயர்ந்தபின்பும் மலையாளம் எழுதப் படிக்கக் கற்காதவர்கள் உண்டு. அவர்களுக்கு மலையாளம் தேவையாகத் தோன்றவில்லை. அவர்கள் பால் சாகரியாவையும் உண்ணி ஆரையும் வாசிக்கவில்லை என்று சொல்லி நாம் வருந்திக்கொண்டிருக்க இயலுமா? எல்லா மொழியிலும் வளங்கள் உள்ளன. இயற்றப்பட்ட மொழியிலேயே படிப்பதில் இன்பம் இருக்கலாம். தேவையென்றால் அதைத் தேடி வருவார்கள், ஜி யு போப் போல, டேவிட் ஷுல்மன் போல.

 

  1. குஜராத் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஐஐடி நுழைவுத்தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தோடு குஜராத்தியிலும்  நடத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்கள் கேட்டால் செய்வார்கள். ஆனால், யாரையும் கேட்காமலேயே தபால் துறைத்தேர்வில் மற்ற மொழிகளை நீக்குவார்கள். இதன் பெயர் சம வாய்ப்பு; குடிமக்களை சமமாக நடத்துதல்.

 

  1. சமஸ்கிருதம் பற்றிய குறிப்பை தமிழ்ப் பார்வையில் இருந்துதான் எழுதினேன். இப்போதும் அது தமிழின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எவ்வகையில் உதவுமெனத் தெரியவில்லை. நண்பர் மேற்கோள் காட்டியவற்றை வாசிக்கிறேன்.

சமஸ்க்ருதத்திற்காக செலவிட்டவை எத்தனை? https://www.vikatan.com/government-and-politics/politics/120688-essays-tamilian-as-political-identity-suguna மற்ற மொழிகளுக்குச் செய்தவை என்ன? அரசின் மொழிக்கணக்கெடுப்பில் எங்கே பிழைகள் நிகழ்கின்றன? https://www.thehindu.com/opinion/lead/getting-the-language-count-right/article24454570.ece

 

  1. இடைநிற்றலுக்கும் பயிற்றுமொழிகளுக்கும் உத்திரப்பிரதேசத் தோல்விகளுக்கும் பிரஜ், போஜ்புரி,அவதி, பன்டேல்கந்தி மொழிகளில் புத்தகங்களை அச்சிடுவதற்கும் பந்தம் உண்டு; அதை இங்கே சான்றுடன் குறிப்பிட்டிருக்கிறேன். https://sannaloram.blogspot.com/2019/04/blog-post.html
  2. பாரதி புத்தகாலய முன்னெடுப்பில் நிகழ்ந்த தமிழ் மொழிபெயர்ப்பிலுள்ள பிழைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கான பதில் அம்மொழிபெயர்ப்பின் நான்காம் பக்கத்தில் உள்ளது. https://bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf

 

  1. உதவிப் பேராசிரியர் பணி நியமன முறை குறித்த தனிக்கட்டுரை. https://www.jeyamohan.in/126672#.Xd05mugzZPY

 

  1. தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில், தனியார் நிறுவனங்கள் பன்மொழிகளில் செயல்படுகையில் மொழிப்பன்மைத்துவம் பேணுவதில் பெரிய சிரமங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. சிரமங்கள் இருந்தாலும் சமூக நீதிக்கான விலையை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.அதற்காக தொடர்வண்டி நிலையப் பெயர்ப் பலகைகளில் 22 மொழிகள் இருக்கவேண்டுமென்பதில்லை. இங்கு எத்தனை மாநிலங்களில் தொடர்வண்டி பயணச்சீட்டை பிராந்திய மொழிகளில் அச்சிடுகிறார்கள்? தமிழிலும் மலையாளத்திலும் இருப்பதைத் தமிழகத்திலும் கேரளத்திலும் கண்டிருக்கிறேன். எல்லா மாநிலங்களிலும் அவ்வாறு உண்டா? பதில் எதுவெனினும் அதன் பின் ஒரு போராட்டம் நிச்சயம் இருக்கும்.

மற்றபடி நண்பரின் -லாம் விகுதியுள்ள வார்த்தைகளுக்கும், காலம் கனிந்து வர வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கும் என்னிடம் பதில் இல்லை.

இன்று (26-11-2019) இந்திய ஒன்றியத்தின் அரசியல் நிர்ணய சபையால் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம். அதன் முகப்பு சமத்துவம் என்னும் வார்த்தையைத் தாங்கி நிற்கிறது. ஆனால், மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை சமத்துவம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தொனிப்பதாக நம்முடைய ஒன்றிய அரசாங்கங்களின் (முந்தைய மற்றும் தற்போதைய) செயல்பாடுகள் இருந்தனவா/இருக்கின்றனவா என்றால் நிச்சயம் இல்லை. பெரும்பான்மைவாதம் திரும்பத்திரும்ப தன் சுட்டுவிரலை அதிகாரத்துடன் நீட்டுகிறது. அதனால்தான் ஆங்கிலத்தில் பேசும் ஒரு நடிகரைப் பார்த்து நீங்கள் இந்தி நடிகர்தானே இந்தியில் பேசுங்கள் என அதிகாரம் விரல் நீட்டுகிறது. அதுவே அடுத்தமுறை பெரும்பான்மையினர் புரிந்துகொள்ளும் மொழியில் பேசுங்கள் என்று வாதிடுகிறது. ஒரு பத்திரிக்கையாளருக்கு இந்தப்பார்வையைக் கொடுத்தது யார்? அதில் அரசின் பங்கு இல்லையா? இந்தப்பின்புலத்திலதான் நாம் அரசின் மொழிக்கொள்கையைப் பார்க்கவேண்டுமென நினைக்கிறேன்.

 

 

விஜயகுமார் சாமியப்பன்

முந்தைய கட்டுரைஅஞ்சலி உரை : ஆற்றூர் ரவிவர்மா
அடுத்த கட்டுரைநலமறிதல்,குக்கூ…