வன்மேற்குநிலம்

கடவுள் இல்லாத நிலம்

அன்புள்ள ஜெ,

 

“கடவுள் இல்லாத நிலம்” கட்டுரை (https://www.jeyamohan.in/95874#.XdcWn-hKhPY) படித்தபின் உண்டான எண்ண அலைகள்…

 

வன்மேற்குக் கதைகள் எனக்குப் பிடித்தமான ஒரு கதை வகை. முதன் முதலில் நான் படித்தது முல்லை தங்கராசனின் முத்து காமிக்ஸில் வந்த சிஸ்கோ கிட் (Cisco Kid) சித்திரக் கதைகள்; பின் லோன் ரேஞ்சர் (Lone Ranger) சித்திரக் கதைத் தொகுப்புக‌ள். மாக்ஸ் ப்ராண்ட் என்ற புனைபெயரில் ஃப்ரெடெரிக் ஃபாஸ்ட் (Frederick Faust) எழுதிய முழு நீள நாவல்களிலிருந்து தொடங்கிப் பின்னர் ஆலிவர் ஸ்ட்ரேஞ்ச் எழுதிய ஸடன் (Sudden) தொடர் நாவல்களும், வளவளவெனப் போகும் ஜே.டி.எட்ஸனின் கதைகளும் படித்தேன்.

 

கௌபாய் கதாநாயகனின் துப்பாக்கி, அதன் முன் சரித்திரம், வேகமாக உருவிச் சுட ஏதுவாக இருக்கும் துப்பாக்கி உறையின் வடிவமைப்பு, ஜன நெரிசலான ஊரென்பதால் குறி தவறிப் போனாலும் அதிக தூரம் பறந்து போய் சம்பந்தமில்லாத ஒருவர் மேல் பாய்ந்து காயப்படுத்தாது இருப்பதற்காக அவன் பயன்படுத்தும் சக்தி குறைந்த town load வெடிகலங்கள் (cartridges), கால்களை அகட்டி ஊன்றி வைத்து முட்டிக் கால்களைச் சற்றே மடித்து  நின்று குறி வைத்த விதம் என, கதாநாயகன்  உறையிலிருந்து ஒரு துப்பாக்கியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் உருவிச் சுடும் நிகழ்வை எட்ஸன் மூன்று பக்கங்களுக்கு கதைப் போக்குக்கு சம்பந்தமற்ற தகவல்களால் நிறைத்து எழுதுவார். அநேக பேருக்கு சலிப்பூட்டும் நடை என்றாலும், எந்த வகைத் தகவலானாலும் ஈர்த்து வைத்துக்கொள்ளும் வேட்கை நிறைந்திருந்த‌ பத்துப் பன்னிரண்டு வயதில் எட்ஸனின் எழுத்து என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. எழுத்தில் வெளிப்படையான‌ நிறப்பாகுபாடு உணர்வு கொண்ட அந்த நாவல்கள் இன்று  பதிப்பில் இல்லை. நிறப் பாகுபாட்டின் வெளிப்பாட்டைக் குறைக்கும் சில திருத்தங்களுடன் வந்த ஒரு நாவலைச் சில வருடங்களுக்குப் பின்னர் படிக்க நேர்ந்தபோது அந்த பாணி எழுத்து அலுத்து விட்டிருந்தது.

 

நான் படித்தமட்டில் இந்த வகைப் புனைவெழுத்தில் ஆகச் சிறந்த படைப்பாளி லூயி லமோர் (Louis L’Amour).

 

லமோரும் ஸ்டீபன் கிங், ஜே.கே.ரோலிங் போல் வறுமையில் உழன்று, வணிக எழுத்து மூலம் வாழ்க்கையில் உயர்ந்தவர்.  வன்மேற்குக் கதாநாயகர்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளான குதிரையடக்கிப் பழக்குதல் (breaking horses), மதகு அமைத்துத் தங்கம் பிரித்தெடுத்தல் (prospecting/panning for gold), சரக்கு ரயில்களில் தொற்றி இலக்கற்றுப் பயணித்து கிடைத்த வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவும் ஹோபோ (hobo) வாழ்வுமுறை முதலிய‌வற்றைப்  பிழைப்புக்காக உண்மையிலேயே  செய்தவர். குத்துச் சண்டை பயின்று அநேக‌ சண்டைப் போட்டிகளில் வென்றவர்.

 

மாலுமியாகப் பணியாற்றிக் கடல்வழியாக உலகைச் சுற்றி வந்திருக்கிறார். பிச்சாவரம் வந்ததாக‌ “ஒரு நாடோடியின் பயணவழிக் கல்வி” (Education of a Wandering Man) என்ற   தனது  சுயசரிதைப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். (அதில் உலக எழுத்தாக்கங்களைப் பற்றிப் பேசும்போது போகிற போக்கில் வள்ளுவரைப் பற்றியும் ஒரு குறிப்பு வருகிறது.)

 

எனவே டெம்ப்ளேட் வணிக ஆக்கங்கள் என்றாலும், லமோரின் சொந்த அனுபவங்களினூடாகவும்,  அந்தந்த நிலங்களில் வாழும் எளிய‌ மக்களிடம் பேசிப் பேசிக் கேட்ட தகவல்களினூடாகவும்  காட்சியமைப்புகள் – கதைமாந்தர்கள்  உருவானதால் அவர் கதைகளைப் படிப்பதன் மூலம் அன்றைய அமெரிக்காவைப் பற்றி ஒரு பரந்த‌, விவரமான‌ காலச் சித்திரம் கிடைக்கும். ஒப்புநோக்க எட்ஸனும் ஆலிவர் ஸ்ட்ரேஞ்சும் ஐரோப்பாவில் இருந்துகொண்டு அமெரிக்க வன்மேற்குக் கதைகளை அனுமானமாக‌ எழுதியவர்கள்.

 

வன்மேற்கு என்பதை விட வரைமுறையற்ற மேற்கு என்பது பொருத்தமாக இருக்கும். இத்தகைய கதைகளின் காலகட்டத்தில், பண்பாட்டின் உயரத்திலிருந்த‌ வேல்ஸ், அயர்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி முதலிய தேசங்களிலிருந்து குடியேறிகளாக வந்தவர்கள், எந்தக் கட்டுப்பாடுகளுமற்று, எந்த வசதிகளுமற்று, பொதுப் பாதுகாப்புகள் அறவே இல்லாது, ததும்பும் உயிர் வளத்துடன் பரந்து கிடந்த‌ மேற்கு அமெரிக்கப் பெருநிலப்பரப்புகளில் அக்கட்டமைப்புகளை முடிந்தமட்டில் மறுவுருவாக்கம் செய்து, பண்பட்ட வாழ்வுமுறைகளை நிறுவி சமூகங்களை உருவாக்கம் செய்து கொண்டிருக்கிறனர். அரசுக் கட்டமைப்புகள், தேசிய சட்டச் செயலாக்கம் போன்றவை மேற்கு நிலங்களில் அப்போதுதான் உருப்பெற்றுக் கொண்டிருக்கிறன. இப்படித்தான் சட்டச் செயலாக்கம் இருக்கவேண்டுமென்றோ, இப்படித்தான் by-laws எனப்படும் துணைவிதிகள் எழுதப்படவேண்டுமென்றோ வரைமுறைகள் இல்லாததால் பல இடங்களில், ஏதோ ஒரு விதத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்தவர்கள் துக்ளக் தர்பார் நடத்திவந்தனர். புதிதாக உருவாகி சட்டதிட்டங்களை மெதுவாக அமலாக்கிக்கொள்ளும் இத்தகைய நிலைமையை  wild west of… என்று குறிப்பிடுதல் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது: உதாரணம் பிட் காயின் போன்ற மென்செலாவணி பணப் பரிமாற்ற முறைக‌ள்.

 

அன்றாட சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த‌ சிற்றூர்களின் நிர்வாகக் குழு தங்களுக்குள்ளும் மற்ற பிரமுகர்களோடும் கலந்தாலோசித்து ஷெரிஃப் ஒருவரை தேர்ந்தெடுக்கிறனர். அவருக்கு உதவிட துணை ஷெரிஃப் ஒன்றிரண்டு பேரையும் நியமித்து வைக்கிறனர். ஊரின் திரளான பலம் அவர்களுக்குப் பின்னே இருக்கிறது. ஒரு கொள்ளையர் கூட்டத்தை ஒழிக்கவோ ஷெரிஃபை விடத் துப்பாகிச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற கேடிகளை ஊரை விட்டுத் துரத்துவதிலோ தேவைக்கேற்ப ஆட்களைச் சேர்த்துக் கொள்கிறார். இதை deputizing என்பர். ஊரின் வங்கி கொள்ளையிடப்பட்டாலோ முக்கிய பிரமுகர் கொல்லப்பட்டாலோ ஊரிலுள்ள ஆண்கள் ஆயுதமேந்தி posse என்ற குழுமமாகத் திரண்டு வந்து ஷெரிஃப்களுடன் குற்றவாளிகளைத் துரத்திப் போகிறார்கள்.

 

To Tame A Land என்ற நாவலில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து போன ஒரு ஊரில், நியாயவுணர்வு கொண்ட‌ துப்பாக்கித் திறனாளி ஒருவன் ஷெரிஃப் ஆக்கப்படுவதும், அவன் படிப் படியாக சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதும் சொல்லப்படுகிறது.

 

தொழில் மயமாகிக் கொண்டிருந்த மேற்கு அமெரிக்க நிலங்களில் வலுவுள்ள ஆண் தொழிலாளர்களின் தேவை இருந்துகொண்டே இருந்தது. தனிமச் சுரங்க வேலை, கால்நடை வளர்ப்பு, வளர்த்த கால்நடைகளை பலநாள் பயணத்துக்கு அப்பாலுள்ள சந்தைக்கு ஓட்டிப் போதல், காட்டு மரம் வெட்டுதல் (lumberjack), வெட்டிய பெருமரங்களைக் குதிரைகளைக் கொண்டோ கோவேறு கழுதைகளைக் கொண்டோ ஒரு சிற்றாறு வரை இழுத்துப் போய், அச்சிற்றாறுகளில் அவற்றை மிதக்கவிட்டு அவற்றில் ஒன்றின் மேல் வழுக்காமல் நின்றபடி அத்தனைக் கட்டைகளையும் ஆற்றோர‌ ஆலைக்கு வழிநடத்திப் போவது (log driver) போன்ற கடும் உடலுழைப்பைக் கோரும் பல வேலைகள் அவர்களை மேற்கு நோக்கி அழைத்தபடி இருந்தன.

 

அவ்வேலைகளில் சேர்ந்து பொருளீட்டும் நோக்கத்துடன் சிலர் குழுக்களாக‌ மேற்கு நோக்கி முடிந்தவரை பயணித்து, மேலும் செல்ல முடியாது போன இடத்தில் ஊர்கள் உருவாக்கிச் சேர்ந்து வாழ்ந்தனர்.  Bendigo Shafter என்ற கதையில் இப்படி ஒரு ஊர் உருவாவதன் விவரணை காணக் கிடைக்கிறது. இதற்கு நேர்மாறாகக் Kiowa Trail என்ற கதையில் ஒரு துணிச்சலான பண்ணைச் சொந்தக்காரி, தன் சகோதரன் சாகக் காரணமான ஊர்க்காரர்களை மொத்தமாகப் பழிவாங்க, அந்த ஊரின் பொருளாதார மூலங்கள் ஒவ்வொன்றையும்  படிப்படியாக‌ அழித்து, அந்த ஊரையே இல்லாமலாக்க முனைகிறாள்.

J. T. Edson

சொற்ப ஓய்வுடனே மாதக் கணக்கில் இத்தகைய வேலையாளர் கோஷ்டிகளில் இருந்துவிட்டு (பாலகுமாரனின் ‘சேவல் பண்ணை’ நினைவுக்கு வருகிறது!), சம்பாதித்த பணத்துடன் உடம்பில் ஏறியிருக்கும் மதர்ப்பைக் குறைப்பதற்கு ஆண்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு மதுபானம், வெந்நீர்க் குளியல், புது ஆடைகள் என்று மொத்தப் பணத்தையும் உறிஞ்சிக் கொள்ளப் பலர் காத்திருக்கிறார்கள். இதில் வேசிகளும் சூதாடுவதையே தொழிலாகக் கொண்டவர்களும் அடங்குவர்.

 

லமோர் சொந்த வாழ்வில் புத்தகங்களைப் படித்துச் சேகரித்தார். அவரது கதாநாயகர்கள் அதே போல் அறிதல் வேட்கை கொண்டிருந்தனர். படிப்பதற்கு எது கிடைத்தாலும் வாங்கிப் படித்து தனியாக இருக்கும்போது மீண்டும் மீண்டும் படித்தனர். மாதக் கணக்கில் மரம் வெட்டும் முகாம்களில் தங்கியிருக்கும் ஆண்கள், அந்தந்த நாளின் வேலை முடிந்து குளிர் காய்கையில் முன்பு படித்ததைக் கொண்டு கதையளந்தனர். சிலர் படிக்க ஏதுமின்றி இருந்தபோது, உணவுப் பொருட்கள் அடைத்து வந்த தகர டின்களின் லேபிள்கள் போன்றவற்றைப் படித்துப் படித்து மனப்பாடமே செய்து வைத்திருந்ததால் அவற்றை உள்ளபடியே ஒப்பிப்பதில் போட்டி போட்டனர். நெடுந்தூரம் பயணிக்கும் கௌபாய்கள் வழியில் சந்திப்போருடன் செய்திதாள்கள், புத்தகங்கள் போன்றவற்றை பரிமாற்றம் செய்துகொண்டனர். பல கைகள் மாறியதால் கிழிந்து நைந்து போயிருந்தாலும் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி வைத்துக் கொண்டார்கள். குறைந்த அளவே குதிரையின் மேல் சுமையேற்றிப் பயணிக்க முடியுமென்றாலும் வால்டர் ஸ்காட், ப்ளூட்டார்க் போன்ற எழுத்தாளர்களின் ஒன்றிரண்டு புத்தகங்களுடன் லமோரின் கதைகளில் கௌபாய்கள் வலம் வருகிறார்கள்.

 

ஆரம்பத்தில் குடியேறிய‌ பலர் தாயக நிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்கவோ, சொத்து ஈட்டவோ, சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவோ வந்தவர்கள். சிலர் தனியர்களாக விருப்பப்பட்டு இருந்து கொண்டனர். அவ்வாறு நெடுநாள் தனியாக இருந்துவிட்ட சிலரில் மனித இயல்பு சற்று கீழிறங்கி விலங்கு குணம் மேலோங்கி நிற்கிறது. ஓநாயினது  போன்ற‌ ஊடுருவும் பார்வையும், அதீத எச்சரிக்கையுணர்வும் கொண்ட தனியர்களாக ஆகிவிடுகிறார்கள்.

 

தன்னந்தனியனாக அலையும் நாடோடியாக இருந்த நாயகன், வீடமைத்து ஓரிடத்தில் வாழ முடிவு செய்து, பண்ணையமைக்க நீர்ப் பாசன வசதியுடன் கூடிய‌ ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பதும், கடும் உழைப்புடன் சிறுகச் சிறுக அதனை உருவாக்குவதும்  பல கதைகளில் சொல்லப் படுகிறது. பண்ணையில் ஆங்காங்கு ஓடும் சிற்றோடைகளுக்குக் குறுக்காகப் பாறைகளை டைனமைட் வெடி வைத்துச் சரித்து, சிறு அணைகள் உருவாக்கி, வறட்சிக் காலத்திலும் கால்நடைகள் நீர் தேடி அதிக தூரம் அலையாது கொழுத்து வளர வகை செய்து வைக்கப்படுகிறது.

 

வீடு கட்டும்போதே அதனுள் முற்றுகையிடப்பட்டு அடைந்திருக்கக் கூடிய சாத்தியத்துக்குத் தயார் செய்துகொள்கிறார்கள். வீட்டிலிருந்து அதிக தூரம் செல்லாமல் தண்ணீர் எடுத்து வரும் விதத்தில் வீடமைத்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. தாக்குபவர்கள் ஒளிந்து முன்னேறி சமீபிக்க ஏதுவாக இருக்கும் மரங்களும் புதர்களும் நீக்கப்படுகிறன. சுவர்களில், ரைஃபிள் வைத்துச் சுட ஏதுவாகத் துவாரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறன. சமையலுக்கு என எளிதாக விளையக் கூடிய வெள்ளைப் பூசணி போன்ற காய் வகைகள் வீட்டுத் தோட்டத்தில் விதைக்கப்படுகிறன. முக்கியமாகக் குதிரைகளுக்குப் பாதுகாப்பான இடம் அமைக்கப் படுகிறது.

 

நம்மூரில் நார்த்தங்காய்த் தோலை சுருள் சுருளாக வெட்டி உலர் ஊறுகாய் செய்து வைப்பது போல், மாட்டிறைச்சியையோ மானிறைச்சியையோ மெலிந்த நீள நீளமான துண்டுகளாக அரிந்து, கெட்டுப் போகாதிருக்க‌ உப்பிட்டு விறகுப் புகையில் வாட்டிச்  சேமித்து வைக்கிறார்கள்.  Jerked meat எனப்படும் எடையற்ற இந்த உணவை, குதிரைப் பயணம் போகும்போது சேணத்தில் வைத்துக் கொண்டு பசியெடுக்கும்போது ஒவ்வொரு துண்டமாக‌ அசைபோட்டபடி போகிறார்கள். பொறுமையாகச் சவைத்து ஊறவைத்துச் சாப்பிடவேண்டிய உணவு.

 

லமோரின் பண்ணைவாழ் கதைமாந்தர்கள் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு மிக அருகாமையிலேயே வாழ்கிறார்கள். மிகச் சிறு வயதிலிருந்தே முழுப் பொறுப்புடன் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அடுத்த வேளை உணவுக்கு சிறு விலங்கு எதையாவது வேட்டையாடிக் கொண்டு வர மஸ்கெட் வகைத் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு போகும் சிறுவன், செலவான ஒவ்வொரு குண்டுக்கும் கணக்குக் கேட்கும் தந்தையை நினைத்துப் பார்க்கிறான். இலக்கு வைத்தது ஏன் கைவிட்டுப் போயிற்று என்பதை உணர்ந்து விவரித்துச் சொல்ல நேரும்போது அடுத்த முறை அந்தத் தவறு இயல்பாகவே தவிர்க்கப்பட்டு விடும் போலும். நேராகக் குண்டு பாய்ந்தால் சிதறிப் போகும் சிறிய உடல் கொண்ட அணிலை அத்துப்பாக்கியால் வேட்டையாடும் லாவகம் அவனுக்கு அந்த வயதிலேயே  சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறு வயது முதலே முயல்கள், சிறு பறவைகள், ஆற்றுமீன்கள் முதலியவற்றைப் பிடிப்பதற்குத் த‌க்க‌ பொறி அமைக்கும் கலையைக் கற்றுக் கொள்கிறார்கள்.

நிலத்தை உழுது பயிரிடுபவர்கள் sod busters என்றழைக்கப்பட்டார்கள். கைவிடப்பட்ட பண்ணைகளில் சில சமயம் இத்தகையவர்கள் வந்து குடியேறி விவசாயத்தைத் தொடர முற்பட்டனர். Squatters என இவர்களைக் குறிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இவர்களை மாட்டுப் பண்ணைக்காரர்கள் மதிக்கவில்லை. அவர்களை விரட்டி விட்டுப் புதுப் பண்ணை அமைக்கவோ அதனை அடுத்திருக்கும் தன் பண்ணையை விரிவுபடுத்திக் கொள்ளவோ குறியாயிருக்கிறார்கள்.

 

நூற்றுக்கணக்கான மாடுகளை வளர்க்கும் பண்ணைகளில், மாடுகள் மேய்ந்தபடியே அடுத்த பண்ணையின் நிலத்திற்குப் போவதும், அந்தப் பண்ணையின் மந்தைகளுடன் கலந்து விடுவதும் சகஜம். எனவே கன்றுகளாயிருக்கும்போதோ புதிதாக வாங்கியவுடனோ சூட்டுத் தழும்பாக ஒவ்வொரு மாட்டின் மேலும் தங்கள் பண்ணைக்குரிய‌ ஒரு குறியீடு செய்து வைக்கிறார்கள். இதனை branding என்கிறார்கள்.

 

மாடு மேய்ப்பவர்கள் கம்பி வேலிகளை வெறுத்தார்கள். ஏதோ காரணத்தால் ஓடத் துவங்கிவிட்ட ஒரு மந்தை, வேலி போன்ற ஒரு குறுக்கீடு வந்தாலும் நிற்காமல் அதன் மேல் மோதி மோதி ரண காயப்பட்டுக் கொள்ளும். சில கதைகளில் கம்பி வேலி போட முயலும் அண்டைப் பண்ணையாளர்களிடையே range war என்னும் யுத்தம் உண்டாகிறது.

 

லமோரின் கௌபாய்களுக்குத் துப்பாக்கிகள், பிழைப்புக்கும் தற்காப்புக்குமான கருவியாகவே உபயோகப்பட்டன. டெனஸி, கொலொரடோ போன்ற மாநிலங்களில் காடுகளடர்ந்த மலைப்பகுதிகளில் கரடிகளும் காட்டுப் புலிகளும் ஓநாய்க் கூட்டங்களும் தாக்க வரலாம். சீறும் பாம்பையோ முட்ட வந்த மாட்டையோ கண்டு வெருண்ட ஒரு குதிரை, சவாரி செய்த கௌபாயை நிலைதவ‌றி விழச் செய்து, சேண வளையத்தில் கணுக்கால் மாட்டித் தொங்கும் அந்தக் கௌபாயுடன் நான்கு கால் பாய்ச்சலில்  ஓடலாம்; அத்தகைய நேரத்தில் குதிரையைக் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது ஒன்றே கௌபாய்க்கு வழி. படுகாயப்பட்டு விட்ட குதிரையைக் கருணைக் கொலை செய்யவும் துப்பாக்கி பயன்படுகிறது.

 

கௌபாய்கள் மேய்த்த மாடுகள், கொட்டகைகளில் இல்லாது பரந்த வெளியிலேயே மேய்ந்து திரிந்து, அதிக மனிதப் புழக்கம் இல்லாது, நூற்றுக்கணக்கான வேறு பல மாடுகளுடன் இருந்து வந்தமையால் அவை பெரும்பாலும் காட்டு விலங்குகளின் தன்மையுடனே இருந்தன. ஏழடி வரை விரிந்திருக்கக் கூடிய நீண்ட‌ கொம்புகளைக் கொண்ட ஒரு லாங் ஹார்ன் வகை மாடு, குதிரை மீதிருக்கும் கௌபாயை முழு வேகத்துடன் புழுதி பறக்க ஓடித் தாக்க வருவதைக் கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய வேலையில் ஈடுபடும் துணிவு வருவதற்கே துப்பாக்கியைத் தரித்திருப்பதன் பாதுகாப்பு உணர்வு தேவைப்பட்டிருக்கும்.

 

துப்பாக்கியைத் தரித்திருப்பதன் மூலம் வரும் பொறுப்பைப் பற்றியும் பல கதைமாந்தர்கள் பேசுகிறார்கள். லமோரின் இளைய கதாநாயகர்களுக்கு அடிக்கடி தரப்படும் அறிவுரை: சுடும் நோக்கம் இருந்தால் மட்டுமே துப்பாக்கியை எடு. சுட்டால் கொல்லும் நோக்கத்துடன் சுடு (Never draw unless it is to shoot; never shoot unless it is to kill).

Louis L’Amour

மேய்ச்சல் மாடுகளை வழிப்படுத்தக் கௌபாய்களின் குதிரைகள் பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றைக் cutting horse என்பார்கள். மாடு ஓட்ட‌ அவ்வாறு நன்கு பழக்கப்படுத்தப்பட்ட‌ குதிரை, அதன் எடைக்கு எடை தங்கம் கொடுக்கும் அளவு ஒரு விவரமறிந்த கௌபாய்க்கு மதிப்புடையது என்பதை லமோர் மீள மீளச் சொல்கிறார்.

 

குதிரையுடன் அவர்கள் உள்ளத்தளவிலும் நெருங்கியிருந்தார்கள். ஒளிந்திருக்கும் பனிக்கரடியோ இன்னொரு குதிரைப் பயணியோ கௌபாயின் கண்ணுக்குப் புலப்படவில்லையெனினும் அவன் குதிரை அதனை மோப்பம் பிடித்து, காது விறைத்தல், கனைத்தல், உடல் பதட்டம் முதலான அசைவுகள் மூலம் தெரிவித்து விடும்.

 

க‌டும் தாகத்துடன் குடிக்க நீர் தேடி அலைகையிலும் குதிரையின் மோப்பத்தை நம்பி அதன் போக்கில் விட்டு, அவ்வாறு தேடிய‌டைந்த குட்டையில் குறைந்த நீரே இருக்கும் போது, கதாநாயகன் தன் குதிரையை முதலில் குடிக்க விடும் காட்சி சில‌ கதைகளில் வருகிறது.

 

குதிரையைப் பராமரிக்கத் தெரியாதவன் ஆண்மையுள்ளவனாக‌ மதிக்கப் படவில்லை. அப்பலூஸா போன்ற அரியவகைக் குதிரைகள் வைத்திருப்பவர்கள் மற்றவர்கள் பொறாமைக்கு ஆளானார்கள். சில ஊர்களில், ஒருவனது குதிரையைத் திருடுவதோ தேவையின்றி ஒரு குதிரையைக் கொல்வதோ தூக்கிலிடப்படும் அளவுக்கு பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.

 

முதுகில் அமர‌ முயல்பவரைத் திமிறித் திமிறி வீசிறியெறியும் குதிரையின் இயற்கையான சுபாவத்தை அடக்கி, அதன் உள்ளத்தின் உத்வேகம் தொலையாமல் சவாரிக்குப் பழக்கப்படுத்துவது ஒரு கலையாகக் கருதப்பட்டது. உயிருக்கும் எலும்புக்கும் மிக ஆபத்தான இந்த வேலையைப் பல கதைநாயகர்கள் வேறெங்கோ போகும் வழியில் கைச்செலவுக்காகவும், வேளாவேளைக்குக் கிடைக்கும் உணவுக்காகவும்  குதிரைகளின் சொந்தக்காரருடன் சில வாரங்கள் தங்கியிருந்து செய்து கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

 

சாலை மற்றும் ரயில் வசதிகள் பெருகியிராத‌ அக்காலங்களில் வெல்ஸ் ஃபார்கோ (Wells Fargo) நிறுவனம் நான்கு முதல் ஆறு குதிரைகள் பூட்டிய கோச் வண்டிகளை இயக்கி வந்தது (இன்று அமெரிக்காவின் பெரும் நிதி நிறுவனங்களில் ஒன்றாகப் பரிணமித்து இருந்து கொண்டிருக்கிறது). லமோரின் கதைகளை விட எட்ஸனின் Rangeland Hercules போன்ற‌ கதைகளில் இவற்றைப் பற்றி நீள‌மான‌ விவரணைகள் உள்ளன‌. எட்ஸனின் முக்கிய கதாநாயகிகளில் ஒருத்தியான Calamity Jane, கோச் வண்டி ஓட்டும் முரட்டுப் பெண்.

 

வழிப்பறி நடக்கும் சாத்தியம் இருந்தால் இரட்டைக் குழல் துப்பாகி ஏந்திய ஒரு காவலன் கூடவே வருவான். ஏதாவதொன்றைச் செலுத்துபவருக்கு அடுத்து அமர்ந்திருப்பதற்கு அமெரிக்க ஆங்கிலத்தில், riding shotgun என்று சொல்வதன் வேர் இதுதான். கார்களின் முன் இருக்கை வரிசையில், ஓட்டுனருக்கு அடுத்த இருக்கையை shotgun seat என்று இன்றும் சொல்கிறார்கள்.

 

வெகு தொலைவு போகும் அத்தகைய வண்டிகளின் பயணிகள் இளைப்பாறவும், உணவருந்தவும், மாற்றுக் குதிரைகளைப் பராமரிக்கவும் வழியிலுள்ள‌ சில பண்ணைகளுடன் வெல்ஸ் ஃபார்கோ ஒப்பந்தம் செய்து வைத்திருந்தது. களைத்துப் போன குதிரைகளைக் கழற்றி விட்டுப் புதிய பரியணியை சாரதி பூட்டிக் கொள்கிறார்.

 

லமோரின் கதைகளில் பொதுவாக எல்லாப் பெண்களும் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறார்கள். வில்லன்கள் உட்பட எல்லோரும் அவர்களைக் கண்ணியமாக நடத்துகிறார்கள். குதிரை மேலமர்ந்திருக்கும் ஒரு பெண் இறங்கிட வசதியாகக் கை கொடுக்கும்  பேராண்மையைப் பெண்க‌ளும் எதிர்பார்க்கிறார்கள்; அவ்வாறு முன்வராத ஆணை அதட்டவும் செய்கிறார்கள். Kiowa Trail, Ride the Dark Trail, Ride the River போன்ற கதைகள் அழுத்தமான கதாநாயகிகளை மையமாகக் கொண்டவை. (எதிர்மாறாக, எட்ஸனின் கதைகளில் பெண் உடல் பற்றிய கொச்சையான வர்ணனைகள் விரவியிருக்கும். இரு பெண்கள் கட்டிப் புரண்டு ஆடைகள் கிழிய சண்டை போடுவதைப் பற்றி எச்சில் வழிய வர்ணிப்பது அவரது பல கதைகளில் வரும் ஒரு முத்திரை அம்சம்.)

 

லமோர் கதைகளில் அடிக்கடி வரும் மேற்கோள்: நியாயவுணர்வால் உந்தப்பட்டு, தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சிப்பவனை நிறுத்தவே முடியாது (there ain’t no stopping a man who knows he is in the right and keeps a’coming). Tucker என்ற நாவல் இதற்கு உருக்கொடுக்கிறது. தன்னிடமிருந்து பணத்தைத் திருடியவர்களை, எங்கேனும் தங்கி திருட்டுப் பணத்தைச் செலவு செய்யக் கூட நேரம் தராமல் வருடக்கணக்கில் ஊர் ஊராகத் துரத்திக் கொண்டே இருக்கும் நாயகனால் நிம்மதியற்றுப் போய், கடைசியில் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டு ஓடிப் போகிறார்கள் வில்லன்கள்.

 

லமோரின் கௌபாய் கதாநாயகர்கள் சூரியோதத்தின் முதல் வெளிச்சத்துடன் எழுவார்கள். அரைத்த காஃபி பொடியை வெறும் தண்ணீரில் கொதிக்க வைத்து அவர்கள் தயாரிக்கும் வறட்டுக் காஃபி (black coffee), ஒரு இரும்பு லாடம் விழுந்தால் மிதக்க வைக்கும் அளவு செறிவாக இருக்கும் என்றும், செத்தவர்களைக் கூட விழித்தெழச் செய்யும் என்பதும் லமோரின் கதைகளில் அடிக்கடி வரும் உயர்வு நவிற்சிப் பிரயோகங்கள்.

 

தமது கைக்கத்தியைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கதாபாத்திரங்கள் பண்டைய இந்தியாவில் உலோக வார்ப்புத் தொழில்நுட்பத்தின் உயர்வு பற்றித் தவறாது பேசுகிறார்கள். இன்றும் நிலைத்து நிற்கும் அசோகர் ஸ்தூபி பற்றிச் சிலாகித்துப் பேசுகிறார்கள்.

 

வன்மேற்குக் கதைகளன்றி வேறு சில கதைக் களங்களிலும் Sitka, Hills of Homicide போன்ற‌ சில நாவல்களும், Yondering, Bowdrie முதலான‌ சிறுகதைத் தொகுப்புகளும் லமோர் எழுதியிருக்கிறார்.

 

ஜேம்ஸ் முயிர் (James A. Muir) போல் வெறும் ரத்தக் களறியையும் பாலுணர்வையும் நிறைத்துக் கதையமைக்காமல், தன்மானம், கடமையுணர்வு, மனம் தளராமை, பொறுப்பு, பேராண்மை, ஆண்மைத்தன்மை போன்ற நற்குணங்கள் நிறைந்த கதாபாத்திரங்களைக் கொண்ட லூயி லமோரின் வன்மேற்கு நாவல்களைப் படித்தால் பல சிறு சமூகங்களின் கூட்டுத் தொகையாக ஒரு நாடு உருவாவதன் அதிசயத்தை உணரலாம்.

 

 

அன்புடன்,

சுப்பிரமணியன்

 

ஜே.டி.எட்ஸன்

லூயிஸ் லமோர்

முந்தைய கட்டுரைஅமிர்தம் சூர்யா – விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-2
அடுத்த கட்டுரைஉலகம் யாவையும்-கடிதங்கள்