பகுதி ஐந்து- அறாவிழிப்பு
அபியின் கவிதைகளின் முதன்மையான பலவீனம் ஒன்றைச்சுட்டி இக்கட்டுரையை முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஒரே ஒரு மையப்புள்ளியைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் எய்யப்படும் அம்புகள் அவை என்பதே அவற்றின் பலவீனம். அந்த மையப்புள்ளி தவிர பிற திசைதிரும்புதல்கள் இல்லை. பொருளற்ற முயற்சிகள், சரிவுகள் மிகவும் குறைவு என்பதும் அப்புள்ளியைத் தீண்டும்போதெல்லாம் அவர் கவிதைகள் சிறந்த மொழிநிகழ்வுகள், மெய்மையறிதல்கள் ஆகின்றன என்பதும் உண்மையே. ஆயினும் கவிதை என்பது தியானம் மட்டுமல்ல. கவிஞன் என்பவன் யோகி மட்டுமல்ல. அவன் மெய்மையைநாடி தன் ஆழத்தை நோக்கித் திரும்பியிருக்கலாம், கூடவே உலகியலின் அலைகளை நோக்கி தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு பகுதியும் அவனிடமிருக்கும். முதல் தளம் கவிதையின் உச்சத்தை நிகழ்த்துகிறது. இரண்டாம் தளம் கவிதையில் வண்ணங்களை உருவாக்குகிறது. பெருங்கவிஞன் வாழ்வினூடாக வாழ்வைப் பற்றிப் பேசுகிறவன். வாழ்வினூடாக வாழ்வுக்கு அப்பால் செல்லத் துடிப்பவனும்கூட.
வியாசனை அதற்கு உதாரணமாக நம் மரபு கூறும். பெருங்காவியத்தை எழுதியவன், ஐந்தாம் வேதமென போற்றப்படும் மெய்மைவெளியை உருவாக்கியவன் அவன். ஆனால் யோகியாகிய அவன் மைந்தன் சுகன் காமத்தைக் கடந்தவன். அவனோ காமத்தை முதுமைவரை கடக்காதவனாகவே வாழ்ந்தான். வியாசன் என்றே தல்ஸ்தோயைச் சொல்லமுடியும். உச்சகணங்களில் தோயும் பல தருணங்களை உருவாக்கிய அம்மாகவிஞன் தேர்ந்த லெகீக ஞானியின் நோக்குடன் காம் குரோத மோகங்கள் மண்டிய மானுட வாழ்விலும் விரிவாகப் பயணம் செய்கிறான். பிறிதொரு உதாரணம் மறு எல்லையைச் சேர்ந்த நம்மாழ்வார், ‘உளன் எனின் உளன் இலன் எனில் இலனாகிய’ ஒருவனை தாள் பணிதலன்றி வேறெதுவும் இலக்காக்காத அவருடைய கவியுலகில் எத்தனை உலகியல் சித்திரங்கள் உள்ளன என்று பார்க்க நேரும் பிரமிப்பு கொள்வான். சொல்லப்போனால் பெருங்கவிஞன் என்பவன் ஆன்மிகத்திற்கும் உலகியலுக்கும், மெனத்திற்கும் ஒலிக்கும், அருவத்திற்கும் உருவத்திற்கும் இடையே உள்ள பெரும்வெளியைத் தன் சொற்களால் நிரப்புகிறவன். ஒரு எல்லைநோக்கி பிறிதை உதறி நகர்பவனல்ல. அபி அப்படி நகர முயன்ற கவிஞர்
எழுவதுஇத்தகைய குறுகல் அபி ‘நான்’ என்று ஒரு கவிஞன் தன் கவியுலகில் தன்னை எவ்வண்ணம் உருவகித்துக்கொள்கிறான் என்ற வினா வாசிப்பில் முக்கியமானது. ‘வரலாற்றின் பக்கங்களில் போடப்பட்ட காற்புள்ளி ‘யாக (எம்.யுவன்) தன்னை உருவகித்துக்கொள்ளும் ஒரு எல்லையும் ‘கடலைப் புணரும் உணரும் தடையின்மைகள்’ கொண்ட அறைவாசியாக கற்பனை செய்து கொள்வதுமாக (மனுஷ்யபுத்திரன்) இரு எல்லைகள் தமிழில் உள்ளன. ‘பேரழுகையின் உப்புநதியில் பல நூற்றாண்டுகளாக கரைதொடாத பாய்மரமாக (பிரேம்) அபூர்வமாக உச்சப்படுத்திக் கொள்வதுமுண்டு. அபி இப்போக்குகளுக்கு நேர் எதிரான திசையில் தன்னிலையின் எல்லைகளை அழித்துக் கொள்வதன்மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயலும் உத்தியைக் கையாள்கிறார்.
இக்கவிதைகளில் அவருடைய ‘நான்’ மேலும் மேலும் நிறமற்றதாக ஊடுருவும் ஒரு பரப்பாக மாற்றப்படுகிறது. அதாவது இன்மை எனும் நிலை வரை தன் இருப்பைக் கொண்டுசெல்ல விழையும் ஓர் எத்தனமே இக்கவிதைகளில் காணக்கிடைக்கிறது. மிகமிக அருவமான நுண்மையான ஒன்றுடன் தன்னிலையை அடையாளப்படுத்தியபின் அதை ரத்துசெய்து நோக்குவதனூடாக இதை அபி சாதிக்கிறார்
மனசின் மேய்ச்சல் நின்றுவிட்டது
(தோல்வி)
ஏனெனில்
நீர்ப்பரப்பு இப்போது
என்மீது ஓடிக் கொண்டிருக்கிறது
(லயம்)
நானும் இந்தக் கவிதையும்
நண்பர்களே அல்ல
அப்படித் தோன்றக்கூடும்
(நானும் இந்தக் கவிதையும்)
என்று அபியின் கவிதைகள் உணரும், உருவகிக்கும் நான் என்பது தன்னை இழக்கும், அழிக்கும் கணத்தையே முழுமையாக உணர்கிறது. அவ்வப்போது ஒரு துணுக்குறலாக
யாரென்று என்னவென்று
நினைக்கிறீர்கள்
எல்லாரும்
(யாரென்று என்னவென்று)
என்று அது கூவிக்கொள்கிறது. இந்த நான் தன்னை ஒர் இடத்தில் காலத்தில், கருத்தில், தனித்துவத்தில் அமர்த்திக்கொள்வதைத் தவிர்த்துவிடுகிறது
இத்தகைய ஒரு சுய உருவகம் எதையும் பிரதிபலிக்க இயலாத்தாகி விடுகிறது. துல்லியமான கண்ணாடிபோல தன்னை சூழலில் முழுமையாக கரைத்து இல்லாமலாகிவிடுகிறது. கவிதையில் நாமறிவது மொழியும்தன்னிலையை மட்டுமே. அந்நிலையில் சூழலே இல்லாமலாகிவிடுகிறது. துயரங்களும் உவகைகளும் இல்லாமலாகின்றன. அலைகளின் வடுக்களை மட்டும் கொண்டகடற்பாறைபோல. இதன் அசைவின்மையில் சிலவகை சொற்தடங்களாகவே வாழ்க்கை அடையாளம் காட்டிக்கொள்கிறது. இக்கவிதைகள் நான் என்னும் நிலையின் அசைவற்ற சித்திரத்தையே தொடர்ந்து அளிக்ன்றன. சீரான மந்திரஸ்தாயியில் அனைத்துக் கவிதைகளும் யாராலோ யாரிடமோ சொல்லப்படுபவை போலுள்ளன. இந்த இயல்பை இவற்றின் தனித்தன்மையாக, சிறப்பியல்பாகக்கூட அடையாளப்படுத்துகிறேன். இவற்றை மிகவும் குறுகிய தளத்தில் நிற்க வைத்து விடுவதும் இவ்வியல்பே என்று சுட்டிக்காட்டுகிறேன்
ஏன், என்ற வினாவுக்கு எனக்குப் பிரியமான அரவிந்தரின் கோட்பாட்டுக்குச் செல்ல விழைகிறேன். சிறந்த கவிதை என்பது அரற்றல் (பterance). உன்னத கவிதை என்பது உச்சகட்ட அரற்றல் (Supreme Poetic Utterance) அத்தகைய ஓர் உச்சகட்ட அரற்றல் பொருளின்மையின் ஒருதளத்தில்தான் தன் பெரும் தொடர்புறுத்தலை நிகழ்த்துகிறது. ”யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியில் பொருள் என்பது வரையறைக்கு உட்பட்டதுதான். ஒரு கருத்துதான் அது. ஆனால் ‘ஊரே’ என்ற எடுப்பில் உள்ள ஆக்ரோஷமானை அலையெழுச்சி மூலமே நூற்றாண்டுகளாக அது தன் மகத்தான செய்தியைச் சொல்லி வந்துள்ளது. இருகை வீசி திறந்து கூவவேண்டிய வரி அது. அபியின் இக்கவிதைகளில் அரற்றலின் தொனி எப்போதும் உள்ளது என்பதைக் காணலாம். இறுகிய சொற்கள் மவுனம் நோக்கி நகர்ந்து மேலும் இறுக்கம் கொள்ளும் போக்கில் நிகழ்கிறது இத்தகைய அரற்றல். ஆனால் எப்போதுமே திடமான ஒரு பிரக்ஞைத்தளம் இந்த அரற்றலில் உள்ளது. கவிதையிலிருந்து பிய்ந்து, தன்காலத்திலிருந்தும் பிய்ந்து, எப்போதைக்குமான ஒலியாக, வெறும் சொற்களாக மாறும் வரிகள் அனேகமாக இல்லை – விதிவிலக்கு ‘யாருடையதென்றிலாத சோகம்’ என்ற சொற்கூட்டு; ஓரளவுக்கு.
மனத்தின் அனைத்து அடையாளங்களும் எல்லைகளும் ஒரே அடியால் சிதறுண்டு தெறிக்க அபியை அகாலப் பெருவெளியில் தெறிக்கச் செய்யும் வரி எதையும் அவர் அடையவில்லை. தமிழில் பாரதியில் ( ‘நேற்றிருந்தோம்’ ‘துள்ளிவருகுது வேல்’ ‘வெந்துதணிந்தது காடு’ ‘நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்’) அத்தகைய பெரிய வரிகள் நிகழ்வதைக் கூர்ந்து பார்க்கும் ஒருவர் இவ்வேறுபாட்டை அவதானிக்கலாம். அபிக்குச் சமானமாகவே ஆழ்ந்த மெளனத் தளத்தை தொடுபவை பாரதியின் கவித்துவ உச்சமனநிலைகள். ஆனால் அவர் மறுமுனையில் உலகியலின் பெருங்கடலில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளவில்லை. அனைத்திலும் சிக்கிச்சீரழிந்து விலகி நின்று நோக்கி மனம் விரிய நெஞ்சு அலைகொண்ட , அனைத்திற்கும் அப்பாற்பட்ட மனிதர் அவர். அவரது ஆளுமையை உருகிக் கொந்தளிக்கும் பாறை எனலாம். அசைவின்மையே பாறை. அசைந்தால் அது லாவாவாகவே இருக்க இயலும். அந்த உக்கிரத்திலிருந்தே மேலே கூறிய வரிகள் நிகழ்ந்தன. அபியின் எல்லை என்று அவரது சுயத்தின் அசைவற்ற மோனத்தைச் சுட்டிக்காட்டியமைக்குக் காரணம் இதுவே. அது அவரது பயணத்தின் அதிகபட்சத்தை நிர்ணயித்துவிட்டிருக்கிறது
பகுதி ஆறு – இடம் தொலைத்த ஆழ்வெளி
தன் அதிகபட்சத்தை படைப்பியக்கத்தில் திரட்டி முன்வைத்த தமிழ் ஆளுமைகள் மிகவும் குறைவு. நிகழ்ந்த குறுகிய காலத்தில் பாரதி அதை சாதித்தார். புதுமைப் பித்தனும் சரி பிரமிளும் சரி, அவர்கள் செல்லச் சாத்தியமான தொலைவுக்கு மிகக் குறைவாகவே சென்றவர்கள் என்றே அவர்களுடைய படைப்புக்கள் காட்டுகின்றன. பாரதிக்கு நோயும் பிரமிளுக்கு மிதமிஞ்சிய தன்முனைப்பும் தடைகளாயின. தமிழில் அதிகமாக கவனிக்கப்படாவிடினும் அபி தன் மெளனம் மிக்க சிறு உலகினுள், தன்ஆளுமையின் பெரும்பாலானவற்றை கவிதைகளில் நிகழ்த்துவதில் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே படுகிறது. குறுகிய, சிறிய கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்த பல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி ஒரு தமிழ்ச் சாதனையே. தமிழ்ச்சூழலில் மட்டும் அல்ல உலக இலக்கியச் சூழலில் கூட மாபெரும் கவிஞர்களிடம் ஒப்பிட்டே அபியின் வெற்றிகளையும் எல்லைகளையும் இக்கட்டுரையில் மதிப்பிட்டிருக்கிறேன்.
ஒரு வகையில் அபி கவனிக்கப்படாமை குறித்து வருத்தம் கொள்ள ஏதுமில்லை. இத்தகைய அருவக் கவிதைகள் எந்த ஒரு பண்பாட்டிலும் தேர்ந்த சிறுபான்மையின்மையினருக்கு மட்டுமே உரியவை. அவர்கள் கூட பேசி விவாதித்து மெல்ல மெல்லத்தான் இவ்வுலகை அறிந்துகொள்ள முடியும். அபி எதிர்காலத்தில் தமிழ்க் கவிதையின் சாதனையாளராகக் கருதப்படுவார் – அதற்கு வழியமைக்கும் தொடக்கக் குறிப்பாக இக்கட்டுரை அமையவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்
1998ல் எழுதப்பட்ட கட்டுரை. 2000த்தில் வெளிவந்த உள்ளுணர்வின் தடத்தில் என்னும் நூலில் இடம்பெற்றது
***