ஹராரியின் கலகச்சட்டகம்

அன்பு ஜெயமோகன்,

யுவால் ஹராரியின் சேப்பியன்ஸ் நூல் குறித்து சா.கந்தசாமி அவர்கள் பேசியதைக் காணொலியாய்க் கண்டு கேட்கும் வாய்ப்பு அமைந்தது.

அறிவு, ஞானம் என்ற இரு சொற்களை எடுத்துக் கொண்டு அவற்றை சா.க நேர்த்தியாய் விளக்கினார். அறிவும், ஞானமும் ஒன்றாகவே புரிந்து கொள்ளப்படும் அவலத்தை ஆதங்கமாகப் புலப்படுத்தினார்.

தகவல்களைத் திரட்டுவதோடு அவற்றைப் புறவயமான புரிதலுக்கு நகர்த்துவது அறிவின் பணி. தகவல்களைக் கொண்டு அகவயமான உணர்தலுக்கு நகர்வது ஞானத்தின் வழி. நகர்த்துவது, நகர்வது எனும் சொற்களை ஊன்றிக் கவனிக்க வேண்டுகிறேன்.

மனிதமையத்தை முதன்மைப்படுத்துவதை அறிவு குறிக்கோளாகக் கொண்டிருக்க, பிரபஞ்சமையத்தை நினைவூட்டுவதையே ஞானம் தன் கடமையாகக் கொள்ளும்.

”அறிபவன் அறிஞன்; உணர்பவனே ஞானி” என்று தன் தரப்பை எளிமைப்படுத்தவும் செய்தார் சா.க. அதற்கு காந்தியையும், நேருவையும் உதாரணங்களாகக் கொண்டார். அவரின் வார்த்தைகளில் நேரு அறிஞனாகவும், காந்தி ஞானியாகவும் முன்வைக்கப்பட்டனர்.

சா.க. ஹராரியை அறிஞன் என்று சொல்வதோடு, அவரின் சொல்முறை தன்னைத் திகைக்க வைப்பதாகவும் வியக்கிறார். அபுனைவு நூலான சேப்பியன்ஸ்-ல் தென்படும் புனைவுபாணியே அந்நூலை பிரபலப்படுத்தி இருக்கின்றன என்பது என் தரப்பு. உயிரியல், தொல்லியல், மானிடவியல், சமூகவியல், நிலவியல் போன்ற அறிவுத்துறைகளைக் கொண்டு தன் நூலுக்கான அடிப்படைகளைத் திரட்டி இருக்கிறார் ஹராரி. அவரின் உழைப்பு பாராட்டத்தக்கது. எனினும், அந்நூல் முன்வைப்பது அவரின் கோணத்திலான வரலாற்றுப் புறத்தோற்றம் மட்டுமே. வேறுசில தரவுகளைக் கொண்டு, அக்கட்டுமானத்தைப் பிறிதொருவர் கட்டுடைக்கும் சாத்தியமும் இருக்கிறது. அதை நாம் கண்டுகொள்ளவும் இல்லை; உரையாடவும் இல்லை.

சேப்பியன்ஸ் நூலுக்கு வருகிறேன். வேளாண்மையைக் கண்டடைந்த போதே மனிதனின் வீழ்ச்சி துவங்கி விட்டதாக ஹராரி குறிப்பிடுகிறார். உலக அளவில் ஏற்கப்பட்ட புள்ளிவிபரங்களைக் கொண்டு ஹராரி அதை வரலாற்றுத்தரப்பாக நிறுவவும் செய்கிறார். என்னால் அப்படி எளிமையாக ஒப்புக்கொண்டுவிட முடியவில்லை. மேலும், எதை எல்லாம் மனிதகுல மேம்பாடு எனச்சொல்லி வந்தோமோ அதை எல்லாம் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்பதைப் போன்று அவரின் தரப்பு வாதங்கள் இருக்கின்றன. ஒருவர் வெள்ளை நிறத்தைப் பூச, மற்றவர் கருப்பைப் பூசுவது போன்ற முயற்சி அது. வெள்ளையும், கருப்பும் பூசுபவரின் பார்வை சார்ந்தது. இடைநின்று அலசுபவனே நல்ல ஆய்வாளனாக இருக்க முடியும்.

தமிழ்சினிமாவின் எம்.ஆர்.ராதாவைப் போன்ற ஒரு கலகக்காரராகவே ஹராரியை நான் பார்க்கிறேன். ஒரு விறுவிறுப்பு நாவலின் பாணியைக் கொண்டு தகவல்களை அடுக்கி மனிதகுல வரலாற்றின் சுருக்கத்தைச் சொல்லி இருக்கும் ஹராரி மூன்றுவிதப் புரட்சிகளை முன்வைக்கிறார். அறிவுப்புரட்சி, வேளாண் புரட்சி மற்றும் அறிவியல் புரட்சி. இம்மூன்று புரட்சிகளையும் குறித்து பொதுச்சித்திரம் ஒன்றை உருவாக்கி அதையே வரலாறாக நிறுவும் வேலையைக் கட்டுடைத்தல் முறையில் மேற்கொண்டிருக்கிறார் அவர். தன் புரிதலில் மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு என்று அவர் தலைப்பிட்டிருக்கலாம்.

பல மொழிகளில் கோடிக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்ன்றன என்பதாலேயே அந்நூல் சரியான திறப்பை அளிக்கும் என்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை. இன்றைய நவீனச்சூழல் நெருக்கடிகளைக் கண்டு அதற்கான ஆணிவேர் கடந்த காலத்தில் இருப்பதாகச் சொன்னதாலேயே அதற்கு பிரபலத்தன்மை கிடைத்திருக்கிறது என்பது என் அனுமானம்.

மேலும், அந்நூல் ஒரு கோட்பாட்டு அடிப்படையிலான சட்டகத்தை முன்மொழியவில்லை. தகவல்களைத் தொகுத்து அதன்வழி ஒரு கலகச் சட்டகத்தையே நமக்களித்து இருக்கிறது. சமூக ஊடக எதிர்வினைகள் போன்றது அக்கலகச் சட்டகம். எப்போதும் சமூக ஊடகப் பதிவுகள் அச்சமயத்துக்கானவை மட்டுமே. இந்நூலும் இச்சூழலுக்கானதே.

சத்திவேல்

கோபிசெட்டிபாளையம்.

***

முந்தைய கட்டுரைகூண்டுகள் விடுதலைகள்
அடுத்த கட்டுரைரேஸ் உலகின் கர்ணன்