அறமெனப்படுவது…. கடிதம்

அறமெனப்படுவது யாதெனின்…

 

அன்புள்ள ஜெ வணக்கம்.

 

சிலநாட்களுக்கு முன்பு  தொலைக்காட்சி சிறு படத்தொகுப்பைப் பார்த்தேன். தொலைக்காட்சி நிழ்ச்சி தொகுப்பாளர், “கையில் காசில்லை, பசிக்கின்றது ஏதாவது சாப்பிட கொடுங்கள்“ என்று கேட்கின்றார். எல்லோருமே பெரும் பணக்காரர்கள். காரில் செல்பவர்கள். குடும்பத்தோடு செல்பர்வள். பைக்கில் செல்பவர்கள். யாரும் திருப்பி ஒருவார்த்தை கேட்கவில்லை யாருமே அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. பீச்சில் பச்ஜிவிற்கும் அக்கா ஒரு பச்ஜி கொடுக்கிறது. இறுதியாக பிச்சைக்காரர் ஒருவர் தனக்கு கிடைத்த பிச்சை உணவுப்பொட்டலத்தை கொடுத்து சாப்பிடசொல்கிறார்.

 

“உங்களுக்கு கிடைத்த உணவை என்னிடம் கொடுத்துவிட்டீர்களே, நீங்கள் என்ன செய்வீர்கள்”

 

“பரவாயில்லை. உனக்கு பசிக்கிதில்ல நீ முதலில் சாப்பிடு, எனக்கு கிடைக்கும், கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை” என்று சிரிக்கிறார்.

 

பசியை உணர்வதற்கு மனிதன் எவ்வளவு தூரம் வாழ்வை கடந்து, வாழ்வின் கடைமுனையில் சென்று வாழவேண்டி உள்ளது என்று நினைத்துக்கொண்டேன்.

 

பணம் இருப்பதால்.வசதி இருப்பதால், நித்தம் நித்தம் சாப்பிடுவதால், விருந்து சாப்பிடுவதால் மட்டும் ஒரு மனிதன் பசியை உணர்ந்து கொண்டவன் ஆவானா?

 

நாஞ்சில்நாடன் எழுதிய விரதம் சிறுகதையில். அம்மாவாசை அன்று உடம்புக்கு முடியாமல் மனைவி படுத்துவிட பழையசோற்றை சாப்பிடமுடியாது என்பதால் சின்னத்தம்பியா பிள்ளை மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் மகள்கள் வீட்டிற்கு செல்கிறார். துவைத்து கையில் பிடித்துக்கொண்டு நடக்கும்போதே வேட்டிக்காய்ந்துவிடுகிறது.

 

சாப்பாட்டு நேரம்.   பெரியமகள்  உச்சிவெயிலில் வந்தற்காக அப்பாவை உரிமையாக கோபித்துக்கொள்கிறாள். சின்னமகள் அக்காவீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் இங்கவருவியா என்று பாசத்தைக்கொட்டி கோபித்துக்கொள்கிறாள். இருபெண்களுமே சாப்பிடுப்பா என்று ஒருவார்த்தை சொல்லவில்லை. சின்னதம்பியா பிள்ளை சட்டைப்போடாதவர். வேட்டியும் துண்டுதான். வயிறு பார்க்கதெரியாத மகள்மகள். அதே வெயிலிலேயே நடந்து வீட்டுக்குவந்து அமாவாசையும் அதுவுமா பழையதை சாப்பிடுகிறார். தனது விபூதி பூச்சால்தான் மகள்கள் தான் சாப்பிட்டு விட்டதாய் நினைத்துக்கொண்டார்கள் என்று தனது சம்பிரதாயத்தின்மீது பசி குட்டுவதை சின்னத்தம்பியா பிள்ளை உணர்கிறார். பசியின் முன் விரதம் விரதம் எடுத்துக்கொள்கிறது.

 

நாஞ்சில்நாடன்  உயிரின் பசியின் முன் உறவு உலகு சம்பிரதாயம் எல்லாம் இடிந்துவிழுவதை காட்சிப்படுத்துகிறார். இறக்கிவைக்கவேண்டியவை எல்லாம் இடித்து தள்ளுபவையாக  இருப்பதை காட்டுகின்றார்.  சூடிக்கொள்ள வேண்டியவை  எல்லாம் சூட்டுக்கோல்களாக இருப்பதை காட்டுகின்றார். பசி வந்தால் பத்தும்பறந்துபோகும் என்கிறது முதிர்ந்தசொல்.

 

ஊரில் நடந்த அரிச்சந்திர  நாடகத்தில், அரிச்சந்திரன் தனது சத்தியத்தை காக்க தன் மனைவி சந்திரவதி மகன் லோகிதாசனை காலகண்டர் வீட்டில் அடிமையாக விற்றுவிடுகிறான்.  ஓரு நாள் காட்டில் நாணல் பறிக்கச்செல்கிறான் லோகிதாசன். கூட வந்த குழந்தைகள் எல்லாம் கட்டுசோறு திங்கின்றார்கள்.  லோகிதாசன் பசியால் கங்கைநீர் குடிக்கிறான். அந்த கொடும்பசியிலும் ஆற்று தண்ணீரை இரண்டு கையாலும் அள்ளி ஒரு கைநீரை “உலகோருக்கு ஆகுக“ என்று ஆற்றிலேயே விட்டுவிட்டு ஒரு கைநீரை மட்டுமே குடிக்கிறான்.  அவன் தண்ணீர் குடித்து முடிக்கும்வரை அந்த பழகத்தையே செய்வான். “ஐயமிட்டு உண்” என்கிறாள் தமிழ்தாய்.  அந்த ஒரு காட்சிதான் அன்று நாடகம் நடந்துமுடியும்வரை மனதில் சித்திரமாக நின்றது. அது என்பசி நான் அறிந்த காலமில்லை. என்தாய் அறிந்த காலம். ஆனலும் அன்று பசி தன் பெரும் தீநாவால் தீண்டியதை உணர்ந்தேன். அந்த பெரும் நெருப்புக்கு எதிராக அறம் தண்ணீராய் இறங்கி குளிர்வித்ததையும் உணர்ந்தேன்.ஒரு பெரும் மானிட அறத்தை ஒரு காட்சியில் எத்தனை ஆழமாக நமது முன்னோர்கள் பதியவைத்திருக்கிறார்கள் என்பது நினைத்துப்பார்க்கிறேன்.லோகிதாசன் கைநீர் ஆற்றில் மானிடஅறமாக விழுந்து உயிரறமாக பரவிப்பாய்ந்து  பாய்ந்து உள்ளத்தை வெள்ளமாக மூழ்கடித்தது அன்று.

 

உங்களுடைய அறமெனப்படுவது யாதெனின் கட்டுரையில் அய்யப்பண்ணன் வந்துசேரும் இடம் மானிட அறத்தின் உச்சமான உயிரறத்தின் இடத்தில்தான்.

 

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்-

 

என்கிறார் வள்ளுவர்.  அகம்மகிழ்ந்து கொடுத்தாலும், தெரியாமல்கொடுத்து மகிழ்தாலும் உள்ளத்தில் செய்யாள் உறைகிறாள். இந்த திருக்குறள் அகம்மகிழும் இடத்தி்ல் ஒரு அறசூத்திரமாக நிற்கின்றது. அது அய்யப்பண்ணன் வழியாகி வெளிப்படுகிறது என்பதை சிறப்பாக எடுத்து வைத்து உள்ளீர்கள்.

 

அறம் வாழ்வின் அடிப்படையாகி, வரலாறாகி, மொழியில் அது ஒரு விதையாக சென்று உறங்கும் இடம்வரை சென்று இந்த கட்டுரையை கொண்டு சென்று, அந்த அறவிதையை வனமாக்கி உள்ளீர்கள்.

 

அறம் குடும்ப அறமாகி, குலஅறமாகி, சமுகஅறமாகி மானிட அறமாகி தழைக்கும் விதம் காட்டி,  அறமும் மறமும் அன்பின் துணையால் சமதளத்தில் துலாக்கோல் முள்ளாகி நிற்கும் இடத்தை வள்ளுவன் காட்டும் இடத்தை கட்டுரை சுட்டும்போது  ஒளிமலர்கள்.

 

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை

 

அன்பும் நன்றியும்.

ராமராஜன் மாணிக்கவேல்.

 

 

முந்தைய கட்டுரைவெயில் கவிதைகள்
அடுத்த கட்டுரைமாபெரும் மலர்ச்செண்டு – கடிதங்கள்