கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1

2. நடிக்கும் காலாதீதம்

 

பிரமிளின் கவிதையில் இந்தமூன்று சரடுகள் எப்படி முயங்குகின்றன என்பதை இரு தளங்களில் காணவேண்டும். அவரது வெற்றி பெறாத – கவித்துவ எழுச்சி நிகழாத – கவிதைகளிலும் கவித்துவம் கைகூடிய சிறந்த கவிதைகளிலும். வெற்றி பெறாத கவிதைகளில் அவரது தன்முனைப்பு மேலோங்கி நிற்கிறது. அதை நிறுவும் தர்க்கக் கட்டுமானமாக மீபொருண்மை சுருங்கி விடுகிறது. ஆன்மிக தரிசனமோ அத்தன்முனைப்பை நியாயப்படுத்தும் வெற்றுச்சொற்களாக கோஷமாக பாவனையாகச்சுருங்கிச்சிறுத்துக் காணப்படுகிறது.

 

எங்கிட்டுவெங்கிட்டு?

எங்கிட்டுப்பாக்கிறே
வெங்கிட்டுவிமர்சகா
என்னைப் பார் என்
கவிதையைப் பார் என்றேன்
குனிந்து நின்றுன்
செருப்பைத்தேய்க்கிறாய்

எங்குட்டுப்பாக்குறே
வெங்கட்டுவிமர்சகா
என்னைப் பார் என்
கதைகளைப் பார் என்றேன்
திரும்பிநின்று தலை
மயிரைச்சிலுப்பினாய்

என்னைப் பார் என்னைப் பார் என்று
உன்னைக் கேட்பது
மடத்தனம் என்று
என்னைப் பார்க்கிறேன்
கால் நிற்கிறது
எல்லையற்ற ராத்திரியில்
தலைக்குள்தகிக்கிறது
ஓயாத பெரும்பகல்

இப்போது என்னைப் பார் என்றேன்
பேச்சு எழுந்தால்
புயல் மூச்சு

அதில் அடிபட்டு
அட்ரஸ் இல்லாமல்
பறக்கின்றன உன்
செருப்பும்மயிரும்.

 

இக்கவிதை (?)யை பிரமிள் எழுதுவதற்கான காரணம் என்ன? இக்கவிதையில் ஒங்கி நிற்கும் உணர்வு என்ன? வெங்கட் சாமிநாதன் மீதான கோபம், அவருடனான பூசல். வெங்கட் சாமிநாதன் தான் விரும்புவதுபோல தன்னைப் புகழவில்லை என்ற ஆதங்கம். அதிலிருந்து வந்த காழ்ப்பு. மிக எளிமையான, சல்லித்தனமான இவ்வுணர்வே இந்தவரிகளை நிகழ்த்துகிறது. கவிதையின் உருவாக்கத்துக்குக் காரணமாக நல்ல கவிதைகளில் நாம் அறியும் ஆழமான உளஎழுச்சியோ, ஆன்மிகமான திறப்போ, தத்துவார்த்தமான வினாவோ, மெய்யான அறச்சீற்றமோ இக்கவிதையில் இல்லை. ‘என்னை நீஎப்படி அங்கீகரிக்காமலிருக்கலாம்?’ என்ற எளிமையான சீற்றம். ஆனால் தன் அடிப்படை இயல்பு காரணமாக பிரமிள் அந்த ‘நான்’ஐ விரிவுபடுத்திக்கொள்ள முயல்கிறார். தன்னை ஒரு கவிஞன் என்று முன்வைக்கிறார். கவிஞன் கவிதை என்ற முடிவின்மையின், அக்கவிதையின் தேடல் சென்று தொடும் விரிவைக்குறிப்பவனாக ஆகிறான்.

‘என்னைப் பார்க்கிறேன்
கால் நிற்கிறது
எல்லையற்ற ராத்திரியில்
தலைக்குள் தகிக்கிறது
ஓயாத பெரும் பகல்’

என்று அதை விரிவுபடுத்தும் பிரமிள் அந்தத் தளத்தில் தன்னைக் கற்பிதம்செய்தபடி வெங்கட்சாமிநாதனுக்குப் பூச்சாண்டிகாட்டுகிறார்.

பேச்சு எழுந்தால்
புயல் மூச்சு
அதில் அடிபட்டு
அட்ரஸ் இல்லாமல்
பறக்கின்றன உன்
செருப்பும் மயிரும்.

சாரைப்பாம்பு சீறிப்படமெடுப்பது போலவோ, வான்கோழி சிலிர்த்து வீங்குவது போலவோ பிரமிள் காட்டும் இந்தப்’படம்’ அவரைக் கேலிக்குரியவராக மட்டுமே மாற்றுகிறது.

இக்கவிதையில் தன் வீங்கிய தன்முனைப்பை வெளிப்படுத்தும் உத்தியாக பிரமிள் மீபொருண்மை சார்ந்த உருவகங்களை உபயோகித்திருக்கிறார்.பிரமிள் இங்கு பயன்படுத்தும் அந்த ‘விஸ்வரூப’த் தோற்றம் ஒன்றும் புதிதல்ல நம் மீபொருண்மை மரபில் மிக ஆழமாக வேரூன்றிய – திரைப்படங்களில் கூட செயற்கையாகக் காட்டப்பட்ட – ஒன்றுதான். ரிக்வேதசூத்திரத்தில் உள்ள ‘விராடபுருஷன்’ என்ற கற்பிதத்திலிருந்து தொடங்கி பகவத்கீதையின் விஸ்வரூபதரிசனம் வழியாக வளர்ந்து வந்த இதை பிரமிள் பல கவிதைகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார்.

‘எனது பிடரியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் காலத்துரும்பை ஏற்றி எடுத்து எரித்து நீறாக்கி நிற்க வேண்டாமா கவிதை*. (பிறவாத கவிதை) ‘கூரை வழியாக வெற்று வெளியாக மேல்கீழ் கீழ். மேலாயிற்று நாபியிலிருந்து எல்லையற்று எஃகு நூலிழையாய் எங்கோ ஏதோ ஒரு துகள் ஒடிற்று ஒளிர்ந்து’ (வார்டு) ‘சிறகுகள் கதவுகளற்ற. கதவுகளாய் விரிய திசையற்றுப் பெருகும் பளிங்கு திறக்கிறது’ (புதிர்கள்). என இதை அவர் கவிதைகளில் கண்டுகொண்டேதான் இருக்கிறோம்.

கவிதையனுபவத்தை மெய்மையனுபவத்தின் பிரதிநிதியாக ஆக்குவது இது. பிரமிளுக்குப் பிரியமான ஒரு மீபொருண்மை உருவகம் என்று தோன்றுகிறது. அவரது. சிறந்த கவிதைகளில் அது உக்கிரமாக, மெய்யாக வெளிப்பட்டுள்ளது. தரக்குறைவான கவிதையில் அதில் உள்ள தன்முனைப்புக்கு ஒர் ‘ஆழத்தை’ செயற்கையாக உருவாக்கியளிக்கும் பொருட்டு தன் நல்லகவிதைகளைப் போலி செய்து பிரமிள் இவ்வரிகளை எழுதிச் சேர்க்கிறார். தன்முனைப்பும் மீபொருண்மையும் ஒன்றோடொன்று முரண்பட்டுத் திரிந்து நிற்கும் சொற்பரப்புகள் என்று பிரமிளின் இத்தகைய கவிதைகளைக் கூறலாம். இத்தகைய கவிதைகளே அவரிடம் எண்ணிக்கையில் அதிகம் என்பதும் துரதிர்ஷ்டவசமானதே.

பிரமிள் எழுதியவற்றில் பெரும்பகுதி இந்தத் தன்முனைப்புக் கூறு மேலோங்கிய திரிபுக்கவிதைகளே. அவரது நீள்கவிதைகளான ‘மேல்நோக்கிய பயணம்’. இத்தகைய ஓர் ஆக்கம்தான். இதன் உச்சகட்ட சீரழிந்த வெளிப்பாடுகள் ‘அதிரடிக் கவிதைகள்’ என்ற பெயரில் அவரால் எழுதப்பட்ட குப்பைகள். என்னைப் பொறுத்தவரை இக்குப்பைகளைப் குப்பை என்று அடையாளம் காணும் நுண்ணுணர்வும் அஞ்சாமல் அதைக் கூறும் தன்னம்பிக்கையும் கொண்டவனே பிரமிளைத் தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் உருவாக்கிய தலைசிறந்த கவிஞன் என்று கூறும் தகுதி கொண்டவனாகிறான்.

மேலே கூறப்பட்ட திரிபுநிலைக் கவிதைகளில் இரு தளங்கள்தான் எப்போதும் உள்ளன. ஒன்று, தமிழ்ச்சிற்றிலக்கியச் சூழலின் இலக்கியப்பூசல். இன்னொன்று, பிரமிளின் மீபெருண்மை உலகம். இலக்கியப்பூசலில் குரோதமும் தன்முனைப்புமாக நுழையும் பிரமிள் அங்கே தன் ஆகிருதியை முன்வைக்கவும், தன்தரப்புக்கு ஒரு தர்க்கத்துக்கு அதீதமான நீயாயம் தேடவும் மீபொருண்மை சார்ந்த சுய உருவகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். இதற்கு மாற்றாக உள்ள சிறந்த கவிதைகளில். பிரமிளின் முக்கியமான ஆர்வமான இலக்கிய வம்பரசியலின் உலகம் முற்றாகவே இல்லை என்பதைக் காணலாம். நான், மோஹினி, மண்டபம், பியானோ, தெற்கு வாசல், கிழக்கு வாசல், முடிச்சுகள், திசைமாற்றம், சம்பவம், உள்தகவல் முதலிய கவிதைகளை இதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம்.

இக்கவிதைகளில் கீழ்க்கண்ட இயல்புகள்உள்ளன:

அ. பிரமிளின் தீவிரமான ஆன்மிகத்தேட்டமே அவரைக் கவித்துவமான மன எழுச்சி கொள்ளச் செய்கிறது. கவிதைகளை. நிகழ்த்தும் ஆதார விசையாகஅமைகிறது.

ஆ. கவித்துவ எழுச்சியைப் படிமங்களாகவும் உருவகங்களாகவும் ஆக்கும் களமாக மீபொருண்மை நோக்கு அமைகிறது. அது பெரும்பாலும் இந்து- இந்திய மரபான மீபொருண்மை நோக்குதான். அது அவருடைய கவிதைக்கு வற்றாத கச்சாப்பொருள் கிடங்காக அமைகிறது.

இ. மீபொருண்மை மூலம் ஆன்மிக எழுச்சியை அடையும் கணம் பிரமிள் தன்னை ஒரு முழுமையாக அல்லது முழுமை தேடும்துளியாக உணர்கிறார். அதிலிருந்து உருவாகும் தன்முனைப்புதான் மிகுந்த மனவேகத்துடன் அவரை ‘நான்!’ என்று சொல்லவைக்கிறது. அவ்வெழுச்சி அக்கவிதையால் முற்றாக நியாயப்படுத்தப்படுகிறது.

 

உள்த் தகவல்

முதலில் சுருங்கி
மகிஷ முகமாகியது
மனித இதயம்
பிறகு விரிந்த
அதனுள் கிளர்ந்த
மூவிலைத் தளிராய்
மலர்ந்தன முட்கள்
வினாடித்துளி அறுபது
சேர்ந்து நிமிஷத்துள்
மூவாயிரத்தறுபதாய்
பெருகி மணிக்குள்
பிரவஹித்தது உதிரம்
பெளர்ணமிக் கடிகார
இலைகளுக்குள் இருளும்
வெள்ளியும் பதற
‘வயது நூற்றெட்டு எனக்கு’
என்றது மரநிழல்
அதன் வலைவழிகளில்
த்சொ த்சொ என்று
துடித்தது ரத்தம்
இதயத்துக் கால்வாய்
உள்வெளியாய்
உதிரத்தை விழுங்கி
உமிழும் துடிப்பில்
நிலவு பெருகிப் பெருகி
வடிய வருகிறது கடல்
கரையின் ஈரம்
கண்ணாடியாய் நிலைத்த
ஒரு நிமிஷத்திற்குள்
பிரதிபலித்த
நிலவின் மேல் கிடக்கும்
மீன்கள் மூன்றும்
மூச்சிலே காலத்தைக்
கவ்விப்பிடிக்க
வாய்பிளந்து துடிதுடிக்கின்றன
துடிப்பற்று நிற்கிறது இக்கணம்
நடிக்கிறது அதில் காலாதீதம்.

 

1998-ல் லயம் பிரமிள் நினைவிதழில் இக்கவிதை வெளிவந்தபோது இது பிரமிளின் மகத்தான கவிதைகளில் ஒன்று என்று கூறி நான் பலருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். உண்மையில் இதுவே பிரமிளின் கடைசிக் கவிதை, முத்தாய்ப்பு என்று எனக்குப்படுகிறது. பிரமிள் கவிதைக்குள் பொதுவாகத் தென்படும் எக்குறைகளும் இல்லாத, அடர்த்தியும் சரளமும் முழுமையாகக் கூடிய, வரிகளிலிருந்து அகவரிகள் விரிந்து விரிந்து தங்களுக்குள் தாங்களே பிரதிபலித்துச் செல்கிற கவிதை இது. இதன் வாசிப்புச் சாத்தியங்களுக்குள் நுழைய விரும்பவில்லை. இக்கவிதையை இங்கு உதாரணததிற்கு எடுத்துக் கொண்டமைக்குக் காரணம் இதில் மீபொருண்மைக் கூறு மிகமிக உள்ளடங்கி உள்ளது என்பதும், தன்முனைப்பு கிட்டத்தட்ட. நுண்ணணு அளவுக்குச் சுருங்கி விட்டிருப்பதும்தான்.தன் வாழ்நாள் முழுக்க பிரமிளைத் துரத்தி அலைக்கழித்த ஆன்மிகத் தேடல் அதன் உக்கிர. நிலையிலேயே உச்சம் கொண்டிருப்பதும் இதில் காணக் கிடைக்கிறது.

இதயத்தைப் பற்றியதாகத் தொடங்குகிறது. இக்கவிதை. இதயத்தின் துடிப்பு காலத்துடிப்பாகிறது, காலம் மரணமாகிறது, மரணம். மரணமின்மையாக மாறி உச்சம் கொள்கிறது இக்கவிதையில். ஆனால் இதயத்துடிப்பைக் காலமாகக் கண்ட மனமின்னல் நிகழ்ந்த அக்கணமே இதயம் காலனின் வாகனமாகிய மகிஷமாக மாறி அவருக்குத் தெரிவதைக் கவனிக்கலாம். இதயம் ஓர் எருமைமுகம் என தெரிவதிலுள்ள குழந்தைமையே மாபெரும் கவிதைகளின் இயல்பு. உடுக்கை இழந்தவன் கைபோல பிரமிளுக்கு இந்திய மீபொருண்மையானது படிமங்களை அள்ளித் தருவதற்கு இது சிறந்த உதாரணம்.

அதற்கு அடுத்த படியில் இதயம் மீது கிளைத்த தமனிகள் சிரைகள் மூன்றுதளிராகத் தெரிய இதயம் முளைத்தெழும் விதையாகப் படிமம் கொள்கிறது. அந்த விதைக்குள் காலம் கொந்தளித்து அலையலையாக உதிரமாகப் பாய்கிறது. எந்தவிதமான தனி முயற்சியும் இன்றி இரத்தஅலை என்ற படிமத்தைக் கடலாகமாற்றுகிறது அடுத்த வரி. அக்கடலில் உதிக்கிறது நிலவு. நிலவு எழுந்தோறும் ஒதம் கொண்டு நுரைத்து மேலெழும் கடலில் அலை ஒன்று திரண்டு கரையை அறைந்து வடிய அக்கணத்தில் கண்ணாடியாக நிலைத்த மணற்பரப்பின் மீது நிலவு பிரதிபலித்துக் கிடக்கிறது.

அதன்மீது கிடக்கும் மூன்று மீன்கள் மூச்சிலே காலத்தைக் கவ்விப்பிடிக்க வாய்பிளந்து துடிதுடிக்கின்றன. ஒரு மென்நினைவாகச் செந்நிலவு இதயமாக, மூன்று மீன்களும் அதன்மீது எழுந்த உதிரக்குழாய்களாக நம் கற்பனையில் விரியக்கூடும். மீன்கள் அள்ளி அள்ளி வெறுமையைக் குடித்து ஓயும் அந்த அறுபடாத கணத்தில் துடிப்பற்று நிற்கும் காலத்தில் நடிக்கிறது பிரமிள் அவ்வப்போது தொட்டுத் தொட்டு மீளும் காலாதீதம்.

பிரமிளின் அனைத்துக் கவிச்சாதனைகளிலும் உள்ள முக்கியமான சில இயல்புகள் இக்கவிதையில் நுட்பமாகவும் மிகையின்றியும் உள்ளன.

அ. இக்கவிதையில் உள்ள படிமங்கள் எவையும்அருவமானவை அல்ல. அதாவது அவை எவ்வளவு சிக்கலாக, நுண்மையாக இருப்பினும் அவற்றை நாம் காட்சிவடிவிலேயே பார்க்க முடிகிறது! இதயம் கொம்புகளுடன் கூடிய எருமை முகமாவதும் சரி, ரத்தக்குழாய்களின் பரவல் மரம்போலத் தெரிவதும் சரி, மூச்சை அள்ளும் மீன்களின் இறுதித்துடிப்பும். சரி. ஜான் டன் போன்ற புகழ்பெற்ற மீபொருண்மைக் கவிஞர்கள் நின்றுவிடும் இடத்திலிருந்து பிரமிள் மேலெழும் இடம் இது. அவர்களின் மீபொருண்மை அறிவார்ந்தது. ஆகவே தர்க்கபூர்வமானது. விளைவாக உருவாகும் படிமங்கள் அருவமானவை. பிரமிளின் மீபொருண்மைக்குரிய படிமங்களை அவருள் வாழும் அழியாத குழந்தையே எடுத்தளிக்கிறது.

ஆ. படிமங்கள் ஒன்றோடொன்று முயங்கி உருமாறுகின்றன. பிரமிளின் சாதனைகளில் முதன்மையானதே இதுதான். தமிழில் தொடர்ந்து சலனநிலையில் உள்ள படிமங்களை அவரால் மட்டுமே அடைய முடிந்துள்ளது. புதுக்கவிதை உருவாக்கும் பெரும்பாலான படிமங்கள் துல்லியமானவை. கண்ணாடிச்சிற்பம் போல, தனக்குள் பார்வையை ஊடுருவ விடும்போதே எந்நிலையிலும் வடிவத்தை இழக்காதவை. பிரமிளின் படிமம் புகையின் உருமாறும் சிற்பத்தோற்றம். இக்கவிதையில் இதயம் மரணமுகமாக, உயிரின் வளர்ச்சியாக, பொங்கும் அலைகடலாக, நிலவொளி நுரைப்பாக, கணத்தில் துடிப்படங்கும் காலமாக, அதில் நடிக்கும் காலாதீதமாக மாறியபடியே உள்ளது படிமத்தொகை. ஒருபடிமத்தை நிறுவியதுமே அதைக் கடந்து அடுத்த படிமத்துக்குப் போவதில்லை பிரமிள். மாறாக அதைக் கலைத்து அடுத்ததைக் கட்டுகிறார். அதுவே உருமாறி இன்னொன்றாகிறது

இ.அறிந்தவற்றில் தொடங்கி அறியாத, அறியவே முடியாத ஒன்றில் முட்டிச் செயலிழப்பவை பிரமிளின் சிறந்த கவிதைகள். இதயத்தின் ஒயாததுடிப்பு உருவாக்கும் பிரமிப்பு அனைவருக்கும் உரியதே. இரவின் தனிமையில் இதயத்தின் மீது கைவைத்து அமர்ந்திருக்கும்போது ஒரு கணம் அது நின்றுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் வந்து உலுக்கப்படாதவர் சிலரே. அதிலிருந்து தொடங்கும் கவிதை இதயக்கடிகாரம் அளவிடும் காலத்தை அளவிட முயன்று தோற்கும் காலாதீதத்தை தொட்டு நிற்கிறது. நிலவொளியில் கிடந்து மூச்சுக்குத் துடிதுடிக்கும் மீன்களில் அந்த ஒருதுளியின் உக்கிரத்தை பிரமிள் காட்டிவிடுகிறார்.

பிரமிள் கவிதைகளில் சிறுதுளிக்குள் இந்த சாத்தியங்களையெல்லாம் அடைந்த அற்புதமான படைப்புகள் பல உள்ளன. சைத்திரீகன், பல்லி, காவியம், தன்னழிவு, கவிதை, நீரகம், வண்ணத்துப். பூச்சியும்கடலும் ஆகிய கவிதைகளை நான் தெரிவுசெய்து முன்வைப்பேன். அதேபோல தீவிரமான ஆன்மிகத் தேடலின் தளத்துக்குப்பதில் காதலோ காமமோ குமுறி எழும் உக்கிரமான கவிதைகள் சிலவற்றை பிரமிள் படைத்திருக்கிறார். அவையே அவரது கவிதைகளுள் பிரபலமானவை. கன்னி, முதல் முகத்தின் தங்கைக்கு, பசுந்தரை. பச்சைக்கதை, உன் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கூறலாம். இக்கவிதைகளிலும் பிரமிளின் படிமஉருவாக்கத்தில் மீபொருண்மைத்தளம் பெரும் பங்காற்றியிருப்பதைக் காணலாம்.

 

[மேலும்]

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை
அடுத்த கட்டுரைகே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்