நலமறிதல்,குக்கூ…

 

நான்கரை வருடங்களுக்கு முன்பாக எங்கள் முத்து வெங்கட் குக்கூ நிலத்தை வந்தடைந்தான். ஆம்பூருக்கு அருகிலிருக்கும் சின்னவரிகம் கிராமத்தில் வசிக்கும் எளியகுடும்பம் முத்துவுடையது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, தன் நண்பர்களின் உதவியால் அலோபதி மருந்துகளை விற்கும் விற்பனை-பிரதிநிதியாக பணிக்குச் சேர்ந்தான். பின்பு, முத்துவும் ஒருசில மருத்துவர்களும் கூட்டாக இணைந்து ஒரு மருந்துக்கம்பெனி நிறுவனத்தைத் துவங்கினார்கள். அந்த நிறுவனம் சொற்பமான விலைக்கு மருத்துகளை வாங்கி, மிக அதிகமான இலாபம் ஈட்டும் இலக்கை கொண்டிருந்தது. இருபது காசு, முப்பது காசு விலைகளில் மாத்திரைகளை வாங்கி, நூறு இருநூறு ரூபாய்க்கு விற்பதாக அதன் விற்பனை தந்திரம் இருந்தது.

மெல்லமெல்ல இந்நிறுவனம் தனது பரவலை விரிவாக்க ஆரம்பித்தது. மருத்துவர்கள் துவங்கி மருந்துக்கடை வரைக்கும் முத்து தந்த மாத்திரை மருந்துகள் பெருகின. விற்பனையை மாவட்டம் தாண்டி அதிகரிக்கும் ஒரு பெரிய தொழில் வலைபின்னலே இதற்கு உருவானது. அந்தச்சமயம், முத்துவுக்கு ஏற்கெனவே பழக்கமாகியிருந்த மருந்துத்துறை மேலாளர் ஒருவர், “இதுல ரொம்ப சைடு எஃபெக்ட்ஸ் இருக்குடா…” எனத் திரும்பத் திரும்ப முத்து வழங்கும் மருந்துகள்பற்றி எச்சரித்துள்ளார். காலம் இப்படியாக நகர்ந்துகொண்டே இருக்கையில், முத்துவால் இத்துறையில் மேற்கொண்டு மனம் ஒன்றிப் போகமுடியாத சூழல் அடுத்தடுத்து உருவானது. அறம் தவறுகிறோமோ என்ற அச்சம் ஏதாவதொரு நிலையில் எல்லா மனிதர்களிடமும் வந்துசெல்வதைப் போல.

முழுக்கமுழுக்க, முத்து அனுப்பும் மாதப்பணத்தை மட்டுமே அவனது குடும்பம் நம்பியிருக்கும் சூழலில் திடீரென ஒருநாள் முத்து பணியிலிருந்து நீங்கிவிடுகிறான். காற்றிலையாக வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு இடங்களுக்குப் பயணித்து, எதேச்சையாக ஒருநாள் நம்மாழ்வார் பற்றிய நிகழ்வொன்றில் குக்கூகாட்டுப்பள்ளி பற்றி அறிந்து அன்றே கிளம்பி வெயில்விரிந்த ஒரு கோடைகாலத்தின் மாலைநேரத்தில், முதன்முதலாக குக்கூ நிலத்தை வந்தடைந்தான். வந்தவன், இங்கேயே தங்கத் தொடங்கினான். விவசாய வேலைகள், பராமரிப்பு, துப்புரவு என அடிப்படையான வேளைகளில் தன்னைக் கரைத்துக்கொண்டு அங்கேயே சிரிப்புநிறைந்து வாழத்தொடங்கினான் முத்து.

கிடைத்த சிறப்பான வேலையை விட்டுவிட்டு ஒரு மலையடிவாரக் காட்டில் சென்று கஷ்டப்படுவதை முத்துவின் பெற்றோர்கள் அப்போது முற்றிலும் விரும்பவில்லை. “வந்திடுப்பா… வந்திடுப்பா” என்ற தினந்தோறும் அழைப்பு வந்துகொண்டே இருக்கும். அப்பொழுது ஒருநாள், அவன் அப்பாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. குக்கூ வாசலில் இருக்கும் புளியமரத்தினடியில் நின்றுகொண்டு, தன் அப்பாவிடம் தொலைபேசியில் முத்து பேசிக்கொண்டிருப்பது ஏதேச்சையாக காதில்கேட்டது.

“ஏஞ்சாமீ அங்கபோய் இருக்குற… வந்துரு சாமீ” என குரலுடைந்து அழுகிறார் அவர். அதற்கு முத்து, “இல்லப்பா, இங்கவொரு பள்ளிக்கூடம் கட்றாங்க. வேல நடந்துட்டிருக்கு. நான் கூட இருக்கனும்ப்பா” என்கிறான். “இவ்ளோ சம்பளம் கெடச்ச வேலய விட்டுப்போட்டு அங்கபோய் கஷ்டப்படுறீயேப்பா” என அவர்சொல்ல “அப்பா… எம்மனசுக்கு தப்பான வேலயா தோனுதுப்பா, பாவம் ப்பா நான் பண்ண வேல” என்கிறான். “எந்த வேலயில சாமீ தப்பில்ல. எல்லா வேலயுலயும் தப்பு இருக்கத்தான செய்யும். நீ செய்யலன்னாலும் வேறோருத்தன் அத செய்யத்தான போறான்” என அவர்சொல்ல “இல்லப்பா… கடைசியா நான் வித்த மருந்த பொம்பளைங்களுக்கு அவ்ளோ கஷ்டத்தக் கொடுக்கும்ப்பா” எனக் கலங்கிச்சொல்கிறான்.

சிறிதும் சமரசமாகாத அவனுடைய அப்பா மீண்டும் “நீ் விக்கலைன்னா அந்த மருந்த இப்ப விக்கவேமாட்டாங்களா… எப்படியும் யாரோ ஒருத்தன் அத விப்பான்ல” என விடாமல் முத்துவின் அப்பா பேசப்பேச, முத்து சொல்கிறான் “அப்பா… அந்த மருந்து, பொம்பளைங்க மாதப்போக்குக்காக சாப்டுறது. ரெண்டு கருக்கலைப்பு அடுத்தடுத்து நடக்கும்ப்பா. அவ்ளோ பவரான மருந்து அது. லோக்கல்ல தயாரிக்குறது, சைட்எஃபெக்ட் ஜாஸ்தி ப்பா” எனக் குரலுயர்த்தி கத்துகிறான். மீண்டும் ஏதோ பதில்செல்ல அவன் அப்பா முற்பட்டபொழுது, “அப்பா ஒன்னே ஒன்னுப்பா… சரிப்பா, நம்ம பாப்பாவுக்கு இத கொடுக்கலாமாப்பா” என்ற கேள்வியை மட்டும் வைத்து குரலுடைகிறான். தொலைபேசியின் எதிர்முனையில் அவன் அப்பா ஏதும்பேசாமல் மெளனித்திருந்தார்.

ஒரு நெருக்கடிச்சூழலில் தன்னை முன்வைத்து முடிவெடுக்கும் மனமுடையவனாக முத்து எங்கள் எல்லோருக்கும் நெருக்கமானவனாக ஆனான். அதன்பின் ஒரு பெரும்காத்திருப்பு அவனுக்கிருந்தது. அதுசார்ந்த தவிப்புகளும் தத்தளிப்புகளுமாக நாட்களைக் கடத்தினான். மருத்துவம் சார்ந்த அவனுடைய உளவிருப்பத்தில் மட்டும் சிறுதும் மாற்றமில்லை. சின்னச்சின்ன கைவைத்தியம் பற்றியும், பாதையோர மூலிகைகள் பற்றியும், இயற்கை வைத்தியமும் அவனது ஆழ்மனம் இயங்குவதை உணரமுடிந்தது.

அதன்பின், கோயம்புத்தூரில் கிளாடிஸ் அண்ணன் வாயிலாக Reflexology என்னும் பாதஅழுத்த சிகிச்சையைக் கற்றுக்கொண்டான். கால்பாத நரம்புகளை அழுத்தித் தூண்டி குணப்படுத்தும் மருத்துவமுறை. இம்மருத்துவமுறையை ஏற்கெனவே நிறைய நண்பர்கள் கற்றிருந்தாலும்கூட, தனிப்பட்ட அளவில் முத்துவுக்கு இம்மருத்துவம் மிகவும் உளமார்ந்த தேர்ந்தெடுப்பாக மாறிப்போனது. தான் பிரார்த்திக்கும் ஒரு செயலாக தன் மருத்துவத்தை மாற்றிக்கொண்டான்.

பாதஅழுத்த சிகிச்சை, சித்தா, வர்மம், டான் தெரபி, மலர் மருத்துவம் உள்ளிட்டவைகளைக் கற்றுத்தேர்ந்தான். அதுமட்டுமில்லாமல் அத்தியாவசியமான நேரங்களில் அல்லோபதி மருத்துவ முறையையும் நோய்ப்பட்டவர்களுக்கு பரிந்துரைத்தான். அனைத்து மருத்துவமுறைமைகளையும் கலந்து, எது தேவையோ எது நோயாளிக்கு நம்பிக்கை அளிக்குமோ அதைத் தயங்காமல் தர ஆரம்பித்தான். கிளாடிஸ் அண்ணனிடம் முத்து சென்றடைவதற்கு முன்பான  காலகட்டத்தில் அவனிடம் நாங்கள் கையளித்த புத்தகம் தான் உங்களுடைய ‘நலமறிதல் – சில அவதானிப்புகளும் விவாதங்களும்’.

அப்புத்தகத்தை அவன் தொடர்ந்து காலஇடைவெளிகளில் வாசித்தான். அலோபதியின் எல்லைகுறித்தும், இயற்கையான மருத்துவ முறைமைகளின் தன்மைகுறித்தும், வீட்டில் அடிப்படையாக நாமே உருவாக்கிக்கொள்ளும் சில எண்ணெய் வகைமைகள் குறித்தும், ஒரு நோயை மனமார்ந்து அணுகுவது குறித்தும், பிணியாளருடன் உரையாடுவது எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் குறித்தும் நிறைய திறப்புகளை இப்புத்தகத்தின் வழியாக முத்து அடைந்தான். அவனுடைய விருப்பநூல்களில் ஒன்றாக இது மாறிப்போனது. வெள்ளைச்சீனிக்கு நம் மூளை அடிமையாக இருப்பதின் அடிப்படையை நீங்கள் இப்புத்தகத்தில் விளக்கியிருப்பதை எங்கள் எல்லோருக்கும் எடுத்துரைத்து, சில அடிப்படை பழக்கவழக்கங்களை மாற்றினான். மீட்சி கட்டுரை அவனுக்கான மானசீக ஆசானைக் கண்டடைய வைத்தது. குரலில்லாதவர்களில் துவங்கி முதலாற்றலில் முடியும் கண்டடைதல் வார்த்தைவெளிக்கு அப்பாற்பட்டது.

குக்கூ நிலத்தில், தற்போது வாரத்திற்கு நான்கு நாட்கள் மருத்துவநாளாக இருக்கிறது. முத்துவுக்குப்பின் மருத்துவம் கற்றுக்கொண்ட சில நண்பர்களும் ஓரிருநாள் வந்து மருத்துவம்பார்த்துச் செல்கிறார்கள். பாத அழுத்த சிகிச்சை, வர்மம், டான் தெரபி, மலர்மருத்துவம், மண்சிகிச்சை என இயற்கைமுறை மருத்துவத்தை முன்னெடுக்கும் முத்து அவைகள் எதற்குமே தொகை பெறுவதில்லை. பொதுவாக ஒரு உண்டியல் வைக்கப்படிருக்கிறது. விருப்பம் இருந்தால் அதில் காசு போடலாம். மாதத்தின் ஏதாவதொரு நாளில் அந்த உண்டியல் காசை எடுத்து அம்மாதத்திற்கான மூலிகை நீவு எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்காக வருபவர்களிடம் முத்து முன்னெடுக்கும் உரையாடல்களில் இப்புத்தகத்தின் சாரம் மிகுந்துள்ளதை நாங்கள் இன்றறிகிறோம். தர்மச்சாலையாக மாறும் கனவின் முதற்படி இது.

ஒருநாள், மூத்திரப்பை தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு தந்தையின் ஒரு கையை அவருடைய சிறுமகளும், இன்னொரு கையை பக்கத்துவீட்டுக்காரரும், கால்களை அவருடைய மனைவியும் இறுகப்பிடித்துத் தூங்கிவந்து… முத்துவின் நேரிருக்கும் இருக்கையில் அவரை உட்காரவைத்தார்கள். பக்கவாதம் வந்து கைகால்கள் உணர்வற்றுப்போன தனது தந்தையையே அந்தச்சிறுமி பார்த்துக்கொண்டிருந்தாள். முத்து, அவருடைய கால்பாதத்தை கைவிரல்களால் நீவும் அச்செயல்கணமும் அவனுரைத்த ஆறுதல் சொற்களும் அவர்களின் அழுகையைப் போக்குவதை அருகிருந்து அறிந்தோம். ஒரு புத்தகம் உரையாடலாக மாறி, அவ்வுரையாடல் யாரோவொருக்கு குணம்நீக்கியாக மலர்ந்தது அன்று.

 

நலமறிதல் – நோய்சார்ந்து நாம் நம்பிக்கொண்டிருக்கும் நிறைய மனப்பொய்களை தகர்த்து உண்மையின் நெருப்புக்கு அருகில் நம்மை அமரச்செய்து நம் உறைநிலையைக் கலைக்கிறது. ‘எனது தனிப்பட்ட அவதானிப்புகள்’ என நூலின் பல இடங்களில் நீங்கள் குறிப்பிட்டாலும் அது நிறைய மனங்களுக்கான அகச்சொல்லாக மாறுகிறது. இன்னும் இரு மாதங்களில் முத்துவின் திருமணம். அந்த நல்மலர்வுக்கான பிரார்த்தனையாக அவனும் அவனுடைய துணையும் இணைந்து இப்புத்தகத்தை தன்னறம் நூல்வெளி மூலம் மீள்பதிப்பு செய்ய விழைந்தார்கள். உங்களிடம் நாங்கள் தெரிவித்ததும் அவ்வளவு மகிழ்வோடும் வாஞ்சையோடும் நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். புத்தகம் அச்சுநிறைவுற்று தேர்ந்த நேர்த்தியோடு வெளிவந்திருக்கிறது. ஒரு நல்லசைவுக்கான ஆசீர்வாதக்கரம் போல.

எல்லாவற்றுக்கும் மேலாக, விஷ்ணுபுரம் நிகழ்வுக்கான ஒரு சமர்ப்பணமாகவே இப்புத்தகத்தை நினைக்கச்சொல்கிறது மனது. எங்களைப் பொறுத்தவரையில் பெருங்கணங்களின் திறப்பாகவே அந்நிகழ்வு எப்போதுமிருக்கிறது. இலக்கியக்கண்களின் வழி மானுடம் சிந்தும் வெளிச்சத்தின் மகிழ்ச்சிப்பரவலை நாங்கள் அங்கு கண்டிருக்கிறோம். அதற்கான நன்றியாகவும் கைமாறாகவுமே நலமறிதல் புத்தகம்.

ஆயிரமாயிரம் விசைகளை அகத்துள் எழுப்பும் உங்கள் சொல்லுக்கும், மனதுக்கு உகந்த துறையில் பயணிக்கத் துணைநிற்கும் உங்கள் படைப்புக்கும் மகிழ்வுபூத்த நன்றியைச் சொல்லிக்கொள்கிறோம்.

கரங்குவிந்த நன்றிகளோடு,
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைமும்மொழிக்கொள்கை -இரண்டாம் மறுப்பு
அடுத்த கட்டுரைகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1