வெயில் கவிதைகள்

ஒருமுறை ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த போது ஒருவரிடம் பேச்சுக்கொடுக்க நேரிட்டது — நேரிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் நான் வலிந்து அவரிடம் பேச்சுக்கொடுக்கவில்லை.  நான் ரயிலில் எவரும் என்னிடம் பேசுவதை நீண்ட நேரம் அனுமதிப்பதும் இல்லை . ஏனென்றால் பெரும்பாலானவர்கள் மிக மிக வழக்கமான பேச்சுக்களைத்தான் பேசுவார்கள்.  ‘இப்பல்லாம் எந்தப்புள்ளைதான் சார் சொன்னபேச்சுக் கேக்குது’ என்ற பாணியில். அவர்கள் இயல்பாக வெளிப்படவேண்டும். ஆகவே கவனித்துக்கொண்டிருப்பேன்.

 

என் முன் அமர்ந்த அவர் பேசவிரும்பினார் தன்னைச்சுற்றி இருந்த ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வார்த்தை கேட்டார் என்னிடமும் கேட்டார். பிறகு  நான் எழுதிக்கொண்டிருப்பதென்ன என்று விசாரித்தார். என் எழுதும்விசை பொதுவாக பிறரைக் கவர்கிறது. பொதுவாக நான் சொன்ன பதில்களை மீண்டும் மீண்டும் தூண்டி நான் பாபநாசம் படத்திற்கு எழுதியவன் என்பதைக்கண்டுகொண்டார்.   பாபநாசம் படத்திலிருந்துந்து தொடங்கினார்.

 

அவரும் சுயம்புலிங்கம் போலவே அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கியவர். அவருடைய அப்பா பூனை தன் குட்டிகளை கொண்டு போடுவது போல தன்னுடைய குழந்தைகளை ஒவ்வொரு ஊராக கொண்டு போட்டுவிட்டு போனார். அவரை ஒரு சிற்றூரில் ஒரு மளிகைக்கடையில் விட்டார்.  “பேசிகிட்டே பொட்டலம் கட்டுவங்க .ஏன்னா நம்ம கை எழுதப்படிக்க கத்துக்கிட்டதுக்கு  முன்னால பொட்டலம் மடிக்க கத்துகிட்டதாக்கும்” என்றார். மளிகைக் கடையின் அனைத்து சூட்சுமங்களையும் கற்றுக்கொண்டார். வழக்கம் போல ஒரு கட்டத்தில் ஒரு மளிகைக்கடையின் முழுப்பொறுப்பையும் தாங்குபவரானார்

 

மளிகை கடை உரிமையாளருக்கு அந்த மளிகைகடையின் எதிர்காலத்தை முன்னெடுத்து செல்பவனாகவும், மிகச் சுளுவில் கிடைத்த ஒரு மாப்பிளையாகவும் அவர் தோன்றியதில் ஆச்சரியமில்லை. அவருடைய ஒரே பெண்ணுக்கு கணவனானார்.  “அதற்கு பிறகு  வாழ்க்கை என்பது ஒரு நாடகம் மாறி ஆயிப்போச்சு சார்”

 

“என்னென்னு சொல்றது நான் அந்த கடையிலயும் வீட்லயும் சாணி அள்ளிப்போட்டு பொட்டலம் மடிச்சு ராத்திரி கடையை கூட்டி பெருக்கி அந்த மளிகைக்கடை குப்பைக்குள்ளேயே படுத்து தூங்கி எந்திரிச்சவன். அவ சின்ன நாள்லயே கார்ல பள்ளிக்கூடத்துக்கு போனவ. முந்நூறு பவுன் நகைய போட்டு எனக்கு கெட்டிக்குடுத்தார் அவங்கப்பா .வீடு இருந்திச்சு. வாடகைக்கு பத்து வீடு விட்டிருந்தார். தோப்பு உண்டு. அவளுக்க கூடப்படிச்ச பொண்ணுகள்லாம் கோட்டு சூட்டு போட்டுகிட்டு அமெரிக்க ஆப்பிரிக்கான்னு போனாளுக. அப்படி இவ போயிடக்கூடாதுங்கறதுக்காகதான் அவங்கப்பா எனக்கு கட்டி வெச்சாரு. அந்த மளிகைக் கடையில அந்த ஊர்ல அவளக் கட்டிப்போடக்கூடியது அவங்கப்பால்ல நானாக்கும்னு நெனச்சிகிட்டா. அங்க தொடங்கினது எல்லாம். என் வாழ்க்கைய அழிச்சவன் நீ அதுதான் மொத ராத்திரில எங்கிட்ட சொன்னது. கடைசி வரைக்கும் அதேபேச்சுதான்”

 

இரண்டு குழந்தைகள் மாமனார் இறந்துவிட்டார். திடீரென்று ஒரு நாள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டாள் கூடவே மாமியாரும். தேடிச்சென்றால் தெரிகிறது அவள் பெயரில் உள்ள சொத்துகளில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே விற்றுவிட்டிருந்தாள். சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியிருந்தாள். பலமுறை  கெஞ்சி கூத்தாடியும் இங்கே வரவில்லை ஆகவே இங்கே இவர் மளிகைக்கடையை பார்த்துக்கொண்டு இங்கு இருந்தார். அந்தம்மாள் சென்னையில் வேறொரு வாழ்க்கையை தொடங்கினார். மிக விரைவிலேயே விவாகரத்துக்கான நோட்டீஸ் வந்தது. அவளுக்கு இன்னொரு காதல் தொடர்பும் இருப்பது உறுதியாயிற்று .வழக்கு சென்னையில் நடக்கிற்து அதற்காக சென்று கொண்டிருக்கிறார். மளிகைக்கடையும் உடனடியாக காலி செய்யவேண்டும் என்று நோட்டீஸ் வந்திருக்கிறது.

 

இதை ஏன் சொல்லுகிறார் என்று திகைப்பு ஏற்பட்டது .ஆனால் ஒவ்வொரு முறையும் மிக அந்தரங்கமான வாழ்க்கைக் கதையை ஏதோ ஒருவர் சொல்லாமல் இருப்பதில்லை. மிக அந்தரங்கமான ஒன்றை எடுத்து வெளியே வைப்பதற்கு எல்லாரும் விரும்புகிறார்கள். முற்றிலும் தெரியாதவர்களிடம் எடுத்து வைக்கும்போதுதான் சொன்ன நிறைவு ஏற்படுகிற்து போலும்.

 

அவர் சொன்னார். ”இன்னும் எத்தன நாள்னு தெரியாது. நானும் சரக்கு ஒவ்வொண்ணா கொறச்சுட்டு வாறன் .கடையை கொடுத்துர வேண்டியதுதான். இருபத்தெட்டு வருசமா நான் நின்ன கடை. ஆனா தொழில் இருக்கு நம்ம கையில. ஒத்த பைசா இல்லாம வேறெங்க போனாலும் இன்னொரு தொழில உருவாக்கிக்குவேன். ஒரு கடை வெச்சு சம்பாரிக்கறது  ஒரு காரியமில்ல. ஆனால் பிள்ளகள நெனச்சாதான்…” என்று சொல்லி வரும்போது இடை வெளிவிட்டு அழுகையை அடக்கி கைகளை கட்டி ஒருகணம் உறைந்து உடல் தசைகளை எல்லாம் இறூக்கி அமர்ந்திருந்தார் உடனே நிமிர்ந்து சிரித்து வேடிக்கையாக சொன்னார். ”அந்த சொப்ப்னம் கலஞ்சதுக்கு பிறகு ஒருமாதிரி நல்லாத்தான் இருக்கு” என்றார்

 

நான் அந்த சிரிப்பு என்ன என்று தான் யோசித்தேன். மிக அந்தரங்கமான ஆழமான ஒன்றை சொல்லும்போது அதை ஏன் சிரிப்பில் கொண்டு முடிக்க வேண்டியிருக்கிறது? அந்த சிரிப்பு எதை நிகர் செய்கிறது?

 

யோசித்து பார்த்தால் அது இந்த காலகட்டத்தின் ஒரு பிரச்னை .நூறண்டுகளுக்குமுன் அவர் அதை ஒரு சாவடியில் அமர்ந்து சொல்லியிருந்தால் பெரியவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லியிருப்பார்கள். வழக்கமான வரிகளாகத்தான் இருக்கும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நாம் செய்ததன் பலனை அறுவடை செய்கிறோம். அவர்கள் செய்ததன் பலனை அவர்கள் அறுவடை செய்வார்கள். எது வந்தாலும் கடவுளை பிடித்துக்கொள். எதுவுமே நிலையானதல்ல. இன்றைக்கு பெரிதாக தெரிவது நாளைக்கு சிறிதாகிவிடும் .மனித வாழ்க்கையில் எப்போதுமே மீட்சிக்கும் ஆறுதலுக்கும் இடமிருக்கிறது …..நானே அத்தனை ஆறுதல் மொழிகளை பலமுறை கேட்டவன்தான்

 

ஆனால் அந்த ரயில் பெட்டியிலிருந்து அப்படி ஒரு வார்த்தை கூட எழவில்லை. துணுக்குற்றவர்கள் போல அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கேட்டுக்கொண்டிருந்தவர்களில் இருவர் வயதானவர்கள். அவர்களுக்கும் ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை.  ஒருவேளை தங்கள் வாழ்க்கையை எண்ணிக்கொண்டார்களோ என்னவோ .நானும் எதையும் சொல்லவில்லை. அத்தனை அந்தரங்கமான நெகிழ்ச்சியான கொந்தளிப்பு ஒன்று சொல்லப்பட்டதும் உருவானது ஒரு ஒவ்வாமையும் பதற்றமும்தான். சீக்கிரம் அவர் சொல்லி முடித்துவிடவேண்டும் என்றும் சீக்கிரம் அதிலிருந்து வெளியே வந்துவிடவேண்டும் என்பதும் தான்

 

இது எப்படி நிகழ்கிறது? இன்னொருவருடைய துயரம் ஏன் அந்த விலக்கத்தை உருவாக்குகிறது? நாம் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாகிவிட்டோம் .நமக்கு நம்முடைய பிரச்னைகள், நம்மைச்சார்ந்தவர்களுடைய பிரச்னைகள் மட்டுமே மொத்தமாக தெரிகின்றன. அதற்கப்பால் ஒரு பிரச்னை நமக்குத்தெரியவேண்டுமென்றால் அது நம்மையும் நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக இருக்கவேண்டும். பிறன் துயரம் பிறன் துயரமேதான். நம் துயரம் அல்ல அது. மானுடர்கள் ஒற்றைத் திரளாக வாழ்ந்த அந்த காலத்தில் பிறன்துயரம் நம் துயரமாக இயல்பாகவே மாறியது .அனைத்து மானுட துயரங்களோடும் நம்மால் இணைய முடிந்தது.

 

அன்று ஒருவருக்கு கிடைக்ககூடிய செய்திகள் அவருடைய சுற்றத்தை சார்ந்தவையாகத்தான் இருந்திருக்கும். இன்று துயரங்களின் அழிவுகளின் சித்திரம் உலகம் முழுக்க இருந்து நமக்கு கிடைக்கிறது. சிரியாவில் ஒரு குழந்தை சாகிறது. ஆஸ்திரேலியாவில் காடு பற்றி எரிகிறது. நமக்கு ஒன்றுமில்லை .

 

இந்த விலக்கம் இந்த உணர்ச்சியின்மை கலைஞனில் ஒரு விந்தையான உணர்வை உருவாக்குகிறது. தன்னுடைய ஆழத்தை கொந்தளிப்பை தனிமையை வலியை அவன் சொல்லி முடித்த உடனேயே கண்ணைத் துடைத்துக்கொண்டு அவன் சிரித்தாகவேண்டியிருக்கிறது. அதை சொல்வதற்கே உணர்ச்சியற்றதும் தன்னை நோக்கிய எள்ளல் கொண்டதுமான விளையாட்டுத்தனமான ஒரு மொழியை அவன் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

இசையின் கவிதைகளை படிக்கும்போது அதுதான் எனக்கு மீண்டும் தோன்றியது. இசையை அவருடைய கவிதை மொழிக்காக நாம் ஒரு முன்னுதாரணமாக கருதலாம். அவருடைய முன்னோடி என்று நாஞ்சில்நாடனும், சி மணியும், ஞானக்கூத்தனும் இருக்கிறார்கள். இதில் நாஞ்சில் நாடனை ஏன் சொல்கிறேன் என்பது முக்கியமானது. துயரங்களை சொல்லத் தொடங்கி தன் காலம் மாறூவதை உணர்ந்து அத்துயரத்துடன் சற்று எள்ளலையும் சேர்த்துக்கொண்ட முன்னோடியான கலைஞர் அவர். ஞானக்கூத்தனுடையது அங்கதம் மட்டும்தான். மணியுடையதும் அங்கதம் மட்டும் தான். வெயில் கவிதைநடைக்கு அவர்களுக்கு கடன்பட்டிருந்தாலும் உளநிலைக்கு பெரும்பாலும் நாஞ்சில் நாடனை ஒட்டியே வருகிறார் என்று தோன்றுகிறது.

 

கவிஞர் இசையின் பாணியை சேர்ந்தவர்கள் என்று சொல்லத்தக்க கவிஞர்களாக சிலரை சொல்லலாம். இசையை முன்னோடி என்றெல்லாம் சொல்லவரவில்லை – அந்தப்பாணி ஓங்கிய கவிதைகள் அவை என்பதனால் சொல்கிறேன். லிபி ஆரண்யா, சாம்ராஜ் என அந்த வரிசையில் தான் நான் வெயிலை வைப்பேன். அவற்றின் முதன்மையான பொது அடையாளம் எள்ளல்- விளையாட்டு கலந்த மொழி.

 

வெயிலின் கவிதைகள் அதே கரிசல் மண்ணிலிருந்து எழுந்தவை. உச்சகட்ட துயரத்தின் வெளிப்பாடான ஒன்றாகவே இலக்கியத்தில் பதிவான ஒன்று இந்த கரிசல் மண். மனிதன் மேல் கருணையற்ற்ற நிலம். வெயில் பட்டு விரிந்து கிடப்பது. தாகம் தாகம் என்று வானத்தை நோக்கி கிடப்பது . தெய்வமே வெயிலுகந்த அம்மன்தான்.  கருகிய மனிதர்கள் கண்ணீருடன் நிலத்தை விட்டு சென்று கொண்டே இருப்பவர்கள். எத்தனை கதைகள்! விட்டுச்செல்வதன் கதையான வண்ணநிலவனின் எஸ்தர், தாகத்தின் கதையான பூமணியின் ரீதி, கைவிடப்படுதலின் கதையான  கி ராஜநாராயணனின் கறிவேப்பிலைகள், சுரண்டலின் கதையான கோணங்கியின் கருப்புரயில்…

 

ஆனால் அந்த உலகிலிருந்து அந்த வாழ்க்கையை சொல்வதற்காக வந்த ஒரு கவிஞனின் கவிதைகளில் எப்படி இந்த மெல்லிய எள்ளல் குடியேறியது? எந்த ஒரு துயரத்தையும்  “அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க அதாவது….” என்று எப்படி ஆரம்பிக்க தோன்றுகிறது?. தன்னுடைய நிலத்தின் பாடகனாக எழுந்து வந்த ஒரு கவிஞன் இந்த மொழியை ஏன் தேர்ந்தெடுத்தான்.  ஒடுங்காத பெரும்பசியைச் சொல்லும்போது

 

என்னிடம் இருப்பதிலேயே

பெரும் பிரச்னைக்குரிய உறுப்பபென்றால் அது

எனது இரைப்பைதான்

 

 

என்று சொல்லும் மொழிநடை எப்படி அமைகிறது?

 

 

ஒரு வகையில் பார்த்தால் வெயிலின் இன்னொரு முன்னோடி என்று சுயம்புலிங்கத்தை சொல்லலாம் . “தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்”  என்ற கவிதையிலிருந்து ஒரு கோடு வெயிலின் கவிதைகளுக்கு நேரடியாகவே வருகிறது. ”நாங்க சௌக்கியமாகத்தான் இருக்கோம் .பசி யெடுத்தா களிமண் சாப்பிடுகிறோம் தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள் சந்தையிலே சகாயவிலைக்கு கிடைக்கின்றன .ஒருகுறையும் இல்லை” என்ற அந்த நெஞ்சு உருகிய எள்ளல் வெயிலின் வெவ்வேறு கவிதைகளில் வெளிப்படுகிறதென்று தோன்றுகிறது

 

என் மூதாதையின்

திரமான முதுகெலும்பால் செய்யப்பட்ட

கூரிய அம்பு

பெருந்தாகம் கொண்டிருக்கிறது

…மண்டியிடு

என் வரண்ட பூமியில் ரத்தம் சிந்து

 

என்று தொடங்கிய கவிதைப்பயணம் வெயிலுடையது. அது சென்றடைந்த இடம்

 

அறவுணர்ச்சியை

நான் கல்லின் கூர்மையாலேயே கீறினேன்

கல் மிகுந்த பயன்பாடுள்ளது நண்பர்களே

 

என்னும் வரியில் தெரியும் மெல்லிய அங்கதம். அறவுணர்ச்சியை கைவிடுவது பற்றிய பாடல் அல்ல. அதன் தொன்மையைப்பற்றிய வரி. அந்தக் கல் முன்பு கற்கால மூதாதை எடுத்த கற்கோடரிதான்.

 

வெயில் ஓரிடத்தில் சொல்வது போல அவருடைய ஊரிலிருந்து மிக விலகி வேறொன்றாக வாழத்தலைப்பட்டவர். கோயில்பட்டி சாத்தூர் விருதுநகரின் கரிசல் மண்ணிலிருந்து எழுந்த இந்த செடிகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நான் பயணங்களில் இந்தியாவின் பல பெயர் நினைவில்லில்லாத நகர்களில் கூட சாத்தூர் விருதுநகர்காரர்களை பார்த்திருக்கிறேன். சாலையோரம் டீக்கடை நடத்துவார்கள். பரோட்டா கடை நத்துவார்கள் சமீபத்தில் ராஜஸ்தான் பயணத்தில் கூடா பூஜ் என்ற நகரில் ஒருவரை பார்த்தோம். அங்கு வந்து ஒரு தள்ளுவண்டி கடையை தொடங்கி சொந்தக்காரர்களை கூட்டிவந்து இருபத்தைந்து குடும்பங்களாக அவர்கள் பெருகியிருக்கிறார்கள். சுடச் சுட மசால்வடை சாப்பிட்டோம்.

 

அவர்கள் தங்கள் வெற்றிக்கதையை ஒரு மெல்லியகோடாக தீற்றிக்காட்டுகிறார்கள். ஆனால் அதற்கு அப்பால் பேசுவதில்லை .ஊருக்கு வருவதுண்டா என்று கேட்டால்  “ஆமாமா அது எப்படியும் வருஷத்துக்கு ஒருமுறை சாமிகும்பிடணுமில்ல?” என்பார்கள். சாமிகளை இங்கு விட்டுச் செல்பவர்கள். முன்னோர்களை அடையாளத்தை இங்கு விட்டு செல்பவர்கள். எதையெல்லாம் நான் என்று சொல்ல முடியுமோ அதை அனைத்தையும் இங்கு விட்டுவிட்டு உயிர் வாழ்வதை மட்டும் அங்கு செய்துகொண்டிருக்கிறார்கள்.

 

வசந்த பாலன் வெயில் படத்துடன் ஷாங்காய் திரைப்பட விழவுக்கு சென்றபோது அங்கே விருதுநகர்காரர்க்ள் அங்கே வரவேற்பு கொடுத்ததாக சொன்னார். அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் என்று கேட்டேன். “பரோட்டாதான் ஆயிரம் கடைகளுக்கு மேல் இருக்கும் ஷாங்காயில்” என்றார் . “அப்படியே  மானசீகமா விருதுபட்டியில் வாழ்ந்துட்டிருக்காங்க சார்” என்றார் ஜப்பானில் ,அமெரிக்காவில் பார்த்திருக்கிறேன். அவ்வாறு வெளியே உமிழப்பட்டவர்களில் ஒருவர் வெயில். கரிசலிலிருந்து ஒரு பறவை கொத்தி விழுங்கி சென்னைக்கோ மதுரைக்கோ கொண்டு எச்சமிட்டு முளைக்க வைக்கும் ஒரு செடி .

 

ஒப்பிட கரிசலை விட சிறந்த நிலங்கள் தான் எவையும். அதனால் எங்கும் அது முளைக்கும். எவ்வண்ணமோ தக்க வைத்துக்கொள்ளும். ஆனால் இழந்தவற்றைப்பற்றிய ஒரு நினைவு அதில் இருக்கும். அதைச் சொல்ல வரும்போது தன்னை ஒரு எள்ளலுக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியதன் வெளிப்பாடுதான் இக்கவிதைகள். துயரம் கேலிப்பொருளாகிவிடககூடாது என்னும் எச்சரிக்கையா? துயரத்தை கடந்தபின் வரும் விலக்கமா?

 

முன்பொருமுறை சென்னை பிளாட்பாரத்தில் இரவு பத்துமணிக்கு ஒரு பாடகன் பாடுவதைக்கேட்டேன். “ஏரிக்கரை மேலே போறவளே பொன்மயிலே” என்று பாட்டு. அதன்பிறகு  “சின்னக்குட்டி நாத்தனா” என்ற பாட்டு. அந்த இரு பாடல் வழியாக் பலரைக்கவர்ந்த பிறகு கரிசலின் நாட்டார்ப் பாடல். பூசாரிப்பாட்டு அது. அந்த பாட்டு தான் அவர் பாட விரும்பியது அதை நோக்கி வருவதற்கு அத்தனை ஜாலங்கள் தேவைப்படுகின்றன.

 

ஆனாலும்  வெப்பமடங்காத அந்திச் சாலையில்

என்னையறியாமல் என் நா அந்தப் பாடலை ஏன் பாடுகிறது?

அந்த ராகத்திற்கு இந்த மனம் ஏன் அலைகிறது?

உண்மையைச் சொல்லுங்கள்

அது தோற்றுப் போகிறவர்களின் பாடலா அப்பா?

 

என்ற வரி நேரடியானது அல்ல. அந்தமொழியில் பாவனையில் அது இல்லை. அது கொஞ்சம் மொழியாக்கச் சாயலை, கொஞ்சம் நாடகத்தன்மையை கொண்டிருக்கிறது. அதன் வழியாக கொஞ்சம் அங்கதத்தை கொண்டிருக்கிறது.

 

தன்னை நோக்கி ஒவ்வொருத்தரையும் ஈர்ப்பதற்காக மெல்லிய நகைச்சுவை அல்லது விளையாட்டுத்தனம் என்று ஒரு கொடியை நட்டுவைத்திருக்கும் கவிதைகள் வெயிலுடையவை. கிலுகிலுப்பைப் பாம்புபோல தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கின்றன. வாலை தலையென காட்டுகின்றன. அதை ஒரு கிலுகிலுப்பை என ஆட்டிக்காண்பிக்கிறது. அருகணையும்போது தலையை வெளியே எடுத்து கொட்டிவிடுகிறது.

 

 

எங்களிடம் இருநூறு பனைமரங்கள் இருந்தன

எம் குடிலின் உத்திரமும் கூரையும் கதவும்

பனைகளாலானவை

சுவர்ப்பூச்சிலும்கூட பனஞ்சோறும் பதநீரும் கலந்திருந்தன

கள்ளோடு களித்தாடி

கருக்கோடு மூர்க்கம் பழகிவந்தோம்

கிழங்குகள் முளைத்தெழும் மார்கழியின் முடிவில்

மட்டையை நசுக்கி மண்சுவர்களுக்குச் சுண்ணம் பூசுவோம்

புத்தோலையில் பொங்கும் பாலில் தை மணக்கும்

அம்மா குருத்தோலைகளை மாதா கோயிலுக்கு எடுத்துச்செல்வாள்

ஊர் மீது இறங்கிய இடியை

தலை மீது வாங்கிக்கொண்ட ஒற்றைப்பனை

எங்களின் குலசாமியாக இருந்தது

அதன் பொந்தில் கண்கள் திறக்காத

மூன்று கிளிக்குஞ்சுகள் இருந்தன

‘அவர்கள்’ எப்போது வந்தார்கள்…

எப்படி வந்தார்கள்?

விழித்தபோது பனங்காடு விளையாட்டுத் திடலாகியிருந்தது

நான் விடாமல் விரட்டிச்சென்றேன்

முரட்டு லாரிகள் வெகுதூரம் போய்விட்டன

மூச்சிரைத்துத் திரும்பும் வழியில்

மூன்று முதிய கிளிகளைப் பார்த்தேன்

அவை என் தோள்களில் இறங்கின

நிமித்தமாய் கடலில் சூறை எழுந்து தணிந்தது

நான் பனைகளின் பிள்ளையானேன்

என் ரத்தத்தைப் பதநீராக… கள்ளாக மாற்றுவேன்

உங்களது குடிலின் சுவர்க் கீறலுக்கு பூச என் தசைகளையும்

கூரைக்கு உத்திரமாய் என் எலும்புகளையும் தருவேன்

என் இதயம் இம்மண்ணில் பனைகளாய் முளைக்கும்

சிறுமிகள் தோண்டித் தின்னும் நுங்காய் என் கண்கள் கனியும்

உங்களின் கோடைகளுக்காக

நீர்மையோடு சாகாதிருக்கும் என் வேர்கள்

நான் பனைகளின் பிள்ளை

அம் முதிய கிளிகள் அப்படித்தான் என்னை வாழ்த்தின.

 

என அரிதாக நேரடியாக விலகிச் செல்லுதலும் மீள்தலும் வெளிப்படும் கவிதைகள் வெயிலின் கவியுலகில் உள்ளன. கரிசல் நிலம் வழியாகச் செல்லும்போதெல்லாம் நான் பனைமரத்தைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பேன். தொன்மையான ஒரு நாட்டார்கதை உண்டு. பஞ்சம் தாளமுடியாமல் தன் பத்துக் குழந்தைகளை தூக்கி கிணற்றில்போட்டாள் ஒரு பெண். தானும் குதித்தாள். ஆனால் அது நாக உலகுக்கான பாதை. பெருநாகங்கள் மண்ணுக்கு வரும் வாசல்.

 

தன்மேல் வந்து விழுந்த குழந்தைகளைக் கண்டு திகைத்த நாகராஜாவான வாசுகி அந்தப்பெண்ணிடம் கருணை கொண்டான். உனக்கு என்னவேண்டும் என்று கேட்டார்ன். பஞ்சத்தில் தன் குழந்தைகள் பட்டினி கிடப்பதை சொல்லி அந்தப்பெண் கதறி அழுதாள். சரி, உனக்கு ‘எடுக்குமளவுக்கு’ பொன் தருகிறேன் என்று வாசுகி சொன்னான். ”அந்தப்பொன்னை வைத்து நான் எத்தனைபேருக்குச் சோறூட்டுவேன்? என் ஊரிலெங்கும் பிள்ளைகள் பட்டினி கிடக்கையில் என் பிள்ளைகளுக்கு மட்டும் சோறுபோடுவது அறமா?” என்று அந்தப்பெண் கேட்டாள்

 

ஆகவே வாசுகி இரண்டு பாதாளநாகங்களை அவளுக்கு துணையாக மேலுலகுக்கு அனுப்பினான். கன்னங்கரிய நாகங்கள். அசுரசக்திகள். ஒன்று எருமை, இன்னொன்று பனை. பசுவுக்கும் தென்னைக்கும் பாதாள உலகில் உள்ள மாற்றுவடிவங்கள் அவை. அவை பஞ்சத்தை போக்கின. எருமையும் பனையும் இருந்தால் பட்டினியே இருக்காது

 

இன்று கரிசலெங்கும் பனைகள் கைவிடப்பட்டு நிற்கின்றன. முலைமுலையாக நுங்கும் பனம்பழமும். ஆனால் உண்ண ஆளில்லை. அன்னைமுலை தூர்கிறது. பனை தரும் எதையும்  வாங்க எவரும் தயாராக இல்லை. பனைகள் வெட்டி அழிக்கப்படுகின்றன. தமிழ்ச்சமூகம் வெறியுடன் பனைகளுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறது என்று தோன்றும். நேற்று நம் பசி தீர்த்த கற்பகத்தருவிடம் நமது போர்

 

பனந்தத்தை என்று அழைக்கப்படும் அந்தச் சின்ன பறவை. காற்றில் எம்பி எம்பி தாவும் அம்புமுனை போன்றது. அது குடியேறி கவிஞனை பனையாக ஆக்குகிறது.  நான் பனைகளின் பிள்ளை என்ற தன்னுணர்வை அளிக்கிறது. இவை மொட்டைக் கரிசலில் வேரோடி உடலே செதிலாகி இரும்பாகிப் போயிருந்தாலும்   தலையில் அமுதைச் சூடிய பனைமரம் எழுதிய கவிதைகள்

 

ஆத்மாநாம் விருது பெற்ற கவிஞர் வெயிலை வாழ்த்தி 23-11-2019 அன்று சென்னையில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்

வெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்

ஃப்ராய்டின் குடலை பசியால் குடையும் தோழர் வெய்யில் என்னும் தற்காலப் பாணனின் வண்டுகள்

 

முந்தைய கட்டுரைசாகேத் ராமனின் பெயரால் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஅறமெனப்படுவது…. கடிதம்