இசையின் கவிதை,அழகுநிலா -கடிதங்கள்

கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா

அன்புள்ள ஜெயமோகன்

 

வணக்கம். நலம்தானே?  இசையின் சிவாஜிகணேசனின் முத்தங்கள் கவிதைத்தொகுதி பற்றி அழகுநிலா எழுதியிருந்த கட்டுரையைப் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.  தான் அடைந்த மகிழ்ச்சியையும் பரவசத்தையும் தங்குதடையின்றி எழுத்தில் முன்வைக்கத் தெரியும் அளவுக்கு கச்சிதமான மொழி.  உண்மையிலேயே  அழகுநிலாவின் மொழியனுபவத்துக்காகவே நான் அக்கட்டுரையை இரு முறை படித்தேன். படித்த நாவல்களிலின் காட்சிகள், பார்த்த படத்தின் காட்சிகள் என பல தருணங்களோடு இணைத்து கவிதையை மேலதிகமாக உள்வாங்கிக்கொண்டு தன் மகிழ்ச்சியை மேலும் விரிவாக்கிக்கொள்ளும்  மனத்தை அவரிடம் நான் பார்க்கிறேன். வாசிப்பனுபவம் என்பது முதன்மையாக தன் மகிழ்ச்சியையும் அனுபவத்தையும் மேலும் மேலும் விரிவாக்கிக்கொள்ளவும் உதவுகிறது. பிறகு மொழியின் உதவியோடு பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் துணைநிற்கிறது. அழகுநிலாவின் பரிந்துரையை இனி அனைவரும் நம்பிப் படிக்கலாம். அந்த உறுதியை அவருடைய இக்கட்டுரை வழங்குகிறது. முதன்மைநிலை வாசகரான அழகுநிலாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

 

அன்புடன்

பாவண்ணன்

 

 

அன்புள்ள ஜெ,

 

இசையினைப் படித்தபின்னத்திய பரவச நிலையில் எழுதப்பட்ட அழகுநிலாவின் கட்டுரை வாசித்தேன். அது நம் குற்றவுணர்வெலாம் களைந்தபின் வரும் பரவசம். இப்படித்தான் ஒரு சனிக்கிழமை இரவில் “எழுத்தாளனுக்கும் பொம்பளப்பொறுக்கிக்கும் பத்து வித்தியாசம் கேட்டால் என்னவென்று சொல்வேன் எம்மானே!” என்றெழுதி ஃபேஸ்புக்கில் இட்டார். அதுதான் என்னைப் போன்ற பொம்பளப்பொறுக்கியையெல்லாம் நிம்மதியாயிருக்கச் செய்கிறது. கலைஞனென்பவன் பரிசுத்த ஆவியெழுப்புவன்தானே!

 

அழகுநிலாவின் கட்டுரை இசையின் தொனியிலேயே அந்த விடுதலையுணர்வைத் தொட்டுச் சென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது; பொறாமையாகவும்.

 

விஜயகுமார் சாமியப்பன்

 

அன்புள்ள ஜெ

 

கவிதைகளைப்பற்றி குறைவாகவே இங்கே பேசப்படுகிறது, பெரும்பாலும் கவிஞர்கள் எழுதும் முன்னுரைகளிலேயே அத்தகைய பேச்சுக்கள் காணக்கிடைக்கின்றன. வாசகநோக்கில் கவிதை பற்றி எழுதுபவர்களே இல்லை. உங்கள் இணையதளத்தை வாசித்தால்தான் கவிதைக்கு வாசகர்கள் இருக்கிறார்கள் என்ற தகவலே கிடைக்கிறது

 

இசை பற்றி அழகுநிலா எழுதிய கட்டுரை உற்சாகமானது, அழகானது, ஆழமானது

 

சித்திரன் சுந்தரம்

 

 

பிரபலஎழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்- இசை

நீ எனும் தற்சுட்டு- அபி கவிதைகள் பற்றி…. இசை

 

முந்தைய கட்டுரைஆரோக்கிய நிகேதனத்தின் கண்ணீர்
அடுத்த கட்டுரைநீங்களும் புதுக்கவிதை எழுதலாம்