ஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்

ஒரே ஆசிரியரை வாசித்தல்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

 

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

 

பெண்கள் அணியும் ஆடையில் ஒரு சிறு மாற்றம் வந்தாலும் முதல் எதிர்ப்பு பெரும்பாலும் பெண்கள் பக்கமிருந்துதான் வருகிறது என்று நினைக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவ்வாறு தமிழ் கலாச்சாரப்படி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடை நேர்த்தி பற்றிய ஒரு விவாதம் என் மனைவியின் பெண் நண்பர்கள் மட்டுமே கொண்ட வாட்சப் குழுமத்தில் நடந்தது. அதில் பெரும்பானவர்கள் என் மனைவியின் ஆடையில் ஏற்படுத்திய சிறு மாற்றத்தையும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதாகவே  விமர்சனம் செய்திருக்கிறார்கள். பின்னர் அதைப்பற்றிய ஒரு நீண்ட கலந்துரையாடலை என் மனைவியுடன் மேற்கொண்டேன். ஆனாலும் அவளால் சமாதானம் கொள்ள முடியவில்லை, அவள் தோழிகளின் விமர்சனம் அப்படி. பிறகு கூகிளில் தேட கடைசியில் அது உங்கள் தளத்திற்குத்தான் அவளை கூட்டிவந்துள்ளது.

 

“ஜெயமோகன் சொன்னதை அப்படியே சொல்லிருக்க” என்பது தான் நான் வீட்டில் நுழைந்ததும் அவள் என்னிடம் சொன்னது. எனக்கு மகிழ்ச்சி இல்லை, மாறாக மிக  அதீத மன உளைச்சலுக்கு உள்ளானேன், உங்கள் எழுத்து என்னை வேறு கோணத்திலும், சுயமாக சிந்திப்பதையும்  தடுத்து உங்கள் பார்வையிலேயே என்னை சிந்திக்க வைக்கிறதோ என்றும், என் சுயத்தை அழிக்கிறதோ என்று  நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். அருண் பிரகாஷ் -ன் “ஒரே ஆசிரயரை வாசித்தல்” என்ற கடிதம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முந்திய என் மன உளைச்சலை நியாபகப்படுத்தியது. உங்களை பின் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முழுதுமாக முடிந்துவிட்டது, கிட்டத்தட்ட உங்கள் அனைத்து படைப்புகளையும் அனைத்து கட்டுரைகளையும் வாசித்து இருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனாலும் உங்கள் சிந்தனையில்  கால்வாசி கூட இன்னும் என்னுள் நிரம்பி கொள்ளவில்லை.

 

என் மனைவி சொன்ன பிறகு, அவள் சுட்டிய உங்கள் கட்டுரைகளை தொகுத்து படித்தேன் (தலைப்பு நியாபகம் வர வில்லை), அவள் சொன்னது முற்றிலும் உண்மை, நான் அவளிடம் “கலாச்சார உடை” பற்றி சொன்ன அனைத்துமே அங்கு உங்கள் எழுத்தில் அச்சு அசலாக இருந்தது. அந்த கட்டுரையை முன்னரே நான் படித்து இருந்திருக்கலாம் அல்லது படிக்காமலும் இருந்திருக்கலாம், ஆனால் என் சிந்தனையில் உங்கள் செல்வாக்கு  இருந்தது, இருந்து கொண்டிருக்கிறது என்பதே நான் அறிந்த உண்மை. எந்த விவாதத்திலும் என் கருத்திற்கு “ஜெயமோகன் காப்பி, உங்க ஆள் சொன்னதையே திரும்ப சொல்லாதீங்க, சுயமா சிந்திங்க, அந்த ஆள் உங்கள மூளைசலவை செய்றாரு”  என்ற விமர்சனமே நண்பர்களிடம் இருந்து வருவதை கண்டு, நிறைய விவாதத்தில் பேசாமல் அமைதியாக இருக்க ஆரம்பித்துவிட்டேன். சில நேரங்களில் உங்கள் சமகால கட்டுரை மீது நிகழ்த்தப்படும் நண்பர்களின் தவறான வாசிப்பை சுட்டிக்காட்டி விளக்க முயற்சித்து கொண்டிருக்கிறேன். அங்கும் பரவலாக “பொங்காதிங்க, சமாளிபிகேஷன், முட்டு கொடுக்காதீங்க” போன்ற எதிர் வினைகளே வருகின்றன.

 

இப்படிப்பட்ட சூழலில் ஒரு 20 வயது பையனாக இருந்திருந்தால் அறியாமையிலும் ஆணவத்திலும் அல்லது சூழ இருக்கும் சமூகத்தின் சராசரி சிந்தனை ஓட்டத்திலுருந்து உங்களை எதிர்த்து உங்களுக்கு எதிராகவே நின்று என் சிந்தனையை கட்டமைத்து இருந்திருப்பேன். அது தவறு என்று என் ஆழ்மனம் சொல்லிருந்தாலும், காழ்ப்பினால் எதிர் இருக்கும் சாக்கடையில் முத்துகுளித்து சமூக ஊடகத்தில்  பல லைக்குகளை அள்ளி போராளியாகவும்  வீட்டில் அப்பாவி இளைஞனாகவும் வாழ்திருந்திருந்திருப்பேன். எனக்கு வயது தற்போது 32, ஒரு தமிழ் சூழலில் சிந்திக்கும் சிறுவன் கடந்து வரக்கூடிய பாதைகளனான நாத்திகம், திராவிட சித்தாந்தம், இந்து மத காழ்ப்பு, தமிழ் மொழி வெறி, கம்யூனிச சித்தாந்தம் ஆகிய அனைத்து பற்றிலும் வாழ்ந்து கடந்து தான் இலக்கியத்தையும் ஆன்மீகத்தையும் தத்துவத்தையும் உங்கள் மூலம் கண்டடைந்திருக்கிறேன். எனக்குள் தொடர்ந்த மாற்றத்தையும், உடைவையும் புததகங்களே உருவாக்குகின்றன. இளம் வயதில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே என்னை முன்வைத்தேன், ஆகவே அதிகம் புத்தகம் வாசித்தேன். என்னுள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விதையாக ஊன்றியதற்காகவே கம்யூனிச சித்தாந்தத்திற்கு என் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மாறாக நான் ஒரு தி. க  வாக இருந்திருந்தால் இன்றய சூழலில் சமூகம் சொல்றதை வேறு மாதிரி சத்தமாக சொல்லியே பெருமிதம் கொண்டு இறுகி வாழ்ந்திருப்பேனோ என்று நினைக்கிறேன்.

என் நண்பர்கள் சொன்னது மாதிரி நீங்கள் சொன்னதை தான் நான் திரும்ப சொல்கிறேனா?. அல்லது என் கருத்தாக முன் வைக்கிறேனா?. இங்கு தான் நீங்கள் சொன்ன “நிரப்பி கொள்ளுதல், நீட்சி அடைதல்” என்ற கருத்து பெரிய திறப்பாக அமைந்தது. நீங்கள் எழுதியவற்றையே வசித்து, புரிந்து என் அனுபவத்துக்கும் மொழிக்கும் கொண்டு வந்து அதை ஒரு கருத்தாக முன்வைக்கிறேன். நான் சொல்லிக்கொண்டிருப்பவை அனைத்தும் உங்கள் தளத்த்தில் இருக்கும் ஆனால் நான் சொல்லாத, பார்க்காத கோணத்தில் பார்த்து சொல்லப்பட்ட  பலவும் அங்கு இருக்கும் என்பதே என்னை தொடர்ந்து உங்களை நோக்கி செலுத்துகிறது. என் மனைவி சுட்டிய அக்கட்டுரை தொகுப்புகளை படிக்கும்போதே இதை கண்டுகொண்டேன், என் மனைவி சொன்னது மாதிரி நீங்கள் சொன்னதை தான் என் கருத்தாக நான் சொல்லிருந்திருக்கிறேன், ஆனால் அனைத்தையும் அல்ல. அங்கு நான் சொன்னதற்கு மேலாக பல இருந்தன, அவை நான் பார்க்காத, பார்க்கவே யோசிக்காத பல கோணங்கள்.  ” அட இதையும் சொல்லிருக்கலாமே, இதை யோசிக்காம விட்டுட்டோமே, இந்த கோணத்தில் நம்ம பார்க்கவே இல்லையே” என்று தான் உங்கள் ஒவ்வொரு கட்டுரையும் இன்றளவிலும் எனக்கு படுகிறது. இது இருக்கும் வரை உங்களை நிரப்பிக்கொண்டு தான் வாழ வேண்டி  இருக்கும் என்று நினைக்கிறன். இன்றய தினங்களில் ஜெயமோகன் தளத்தில் வரும் கடிதங்களை வாசிக்கையில், முதலில் வாசகர் கேள்வியை வாசித்ததும் நிறுத்திவிடுவேன். அக்கேள்விக்கு என் பதில் என்னவாக இருக்கும் என்று சிந்தித்து ஒரு நீண்ட பதிலை மனதில் ஓட்டிக்கொள்வேன். பிறகு உங்கள் பதிலை வாசிப்பேன் . படித்து முடித்ததும் வருவது பெருமூச்ச்சு தான் “மதுரை கெட்ட வார்த்தையுடன் – யாருயா இந்த ஆளு, எங்கிருந்தியா வந்தாரு , கண்ணா பின்னான்னு யோசிக்கிறாப்புல” என்று நினைத்து கொள்வேன்.

தங்கள் நலம் விரும்பும் வாசகன்

பாண்டியன் சதீஷ்குமார்

கொரியா

முந்தைய கட்டுரைராமனின் பெயருடன்
அடுத்த கட்டுரைபொன்னீலன் 80- விழா