லா.ச.ராவின் பாற்கடல் – வெங்கி

பாற்கடல் லா.ச.ரா

லா.ச.ராமாமிர்தம்

அன்பு ஜெ,

 

அப்பா இறந்தபோது எனக்கு வயது பதினொன்று. பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் மூன்று பையன்கள். நான்தான் மூத்தவன். எனக்கடுத்து இரண்டிரண்டு வருட வித்தியாசங்களில் இரண்டு தம்பிகள். அப்பா பள்ளிக்கூட ஆசிரியர். தங்கை பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர். அம்மாவின் அம்மாவை நாங்கள் அத்தை என்று கூப்பிடலாம் என்றாலும், நாங்கள் பாட்டி என்றுதான் கூப்பிட்டோம். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பனிரெண்டு/பதினான்கு வருடங்கள் வயது வித்தியாசம். அம்மாவிற்கு திருமணம் ஆகும்போது, அம்மாவிற்கு வயது பதினைந்து. அம்மாவின் பதினாறாம் வயதில் நான் பிறந்தேன். கோவை வேளாண் கல்லூரியில் படிக்கும்போது, விடுதியில் தங்கியிருந்தேன். ஒருமுறை அம்மா பார்க்கவந்து, விடுதியின் விருந்தினர் தங்கும் அறையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். உடன் படிக்கும் நண்பிகள் ரேணுகா, நிர்மலா, சுகுணா-வை அறைக்கு கூட்டிச்சென்று அம்மாவிற்கு அறிமுகப்படுத்தியபோது, “வெங்கடேஷ் அம்மாவா நீங்க?; அக்கா மாதிரி இருக்கீங்க!” என்று அவர்கள் வியந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது.

 

அப்பா மிகவும் நல்லவர். எங்கள் மேலும், அம்மா மேலும் மிகப்பிரியம். ஓடைப்பட்டியிலும், களரிக்குடியிலும், புளியம்பட்டியிலும் “சீனி வாத்தியார்” என்றால் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். பெரும் மதிப்பு. எல்லோருக்கும் உதவுவார். ஊரின் கடைசியிலிருக்கும் காலனியிலும் நெருக்கமான நண்பர்களிருந்தார்கள். பக்கத்து ஊர், திருமங்கலம் விருதுநகர் சாலையிலிருக்கும், கள்ளிக்குடியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷ்னில், பள்ளியில், கடைவீதியில்…எல்லோருமே நட்புதான். அவரிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. குடி. அம்மா சொல்லி சொல்லி பார்த்தார்கள். அவர் குடிக்கும் ஒவ்வொரு முறையும் அம்மா அழுவார்கள். அம்மா அழும் நேரங்களிலெல்லாம் குடியை விட்டு விடுவதாக சொல்வார். குடியை அவர் கடைசி வரை விடவில்லை. விபரமறியா என் நான்கைந்து வயதுகளில், என் மனதில் பதிந்துபோன அந்தச் சித்திரம் இன்னும் என்னால் நினைவிலிருந்து அழிக்கமுடியாது… – அப்பா குடித்துவிட்டு வரும் நாட்களில், மச்சு வீட்டுக்குள் சென்று, கொடியில் தொங்கும் துணிக்ளுக்கிடையில், முகம் புதைத்து விம்மி அழும் அம்மா.

 

அப்பா ஈரல் பாதிப்பில், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் எங்களை விட்டுப் பிரிந்தபோது, அம்மாவுக்கு வயது இருபத்தாறு. அம்மா திருமணத்திற்கு முன் ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். அப்பா மறைவிற்குப் பின், அம்மா பத்தாம் வகுப்பு தனியாக வெளியிலிருந்து படித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, அப்பா-வின் அரசு வேலையினால், செங்கப்படை பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்கள். அம்மாவிற்கு உதவியாக, எங்களையும் பார்த்துக் கொள்வதற்கு, தாத்தாவும் பாட்டியும் களரிக்குடியிலிருந்து மாறி எங்களுடன் ஓடைப்பட்டியில் தங்கிக்கொண்டார்கள்.

 

அந்த பதினோரு வயதில், எனக்கு அப்பாவின் மறைவின் வெற்றிடம், பெரிதும் உறைக்காதவாறு அம்மா பார்த்துக் கொண்டார்கள். அப்பா இறந்தபிறகு எங்கள் மூவரையும் படிக்க வைத்து வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்கள்…சொற்களால் விளக்க முடியாதவை. அப்போதிருந்த வயதில் எனக்கு உறைக்கவில்லை. அப்பா இறந்து, அடுத்த பதினாலு வருடங்களில் அம்மா தொண்டை புற்று நோயினால் 1997-ல் இறந்தார்கள். அப்போது எனக்கு வயது 25. அம்மாவின் மறைவு எனக்கு பேரிடியாய் மனதைத் தாக்கியது. அந்த வெற்றிடத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கடந்த பதினான்கு வருடங்கள் அவர்கள் பட்ட கஷ்டத்தையெல்லாம் முற்றாகத் துடைத்து அவர்களை நன்கு வைத்திருக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். அம்மாவிற்காக ஒரு துரும்பளவில் கூட ஒன்றுமே செய்யவில்லையே என்ற சுய வெறுப்பும், பச்சாதாபமுமே மனதை அறுத்து கொன்று கொண்டிருந்தது. அப்பா இல்லாத அம்மாவின் அந்த வாழ்க்கையை நினைக்கும்பொழுதெல்லாம், தொண்டை அடைக்கும்; மனது நிலையில்லாமல் தவிக்கும்.

 

லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை ஓசூரில் இருந்தபோது ஒருநாள் பின்னிரவில் வீட்டில் படித்துக் கொண்டிருந்தேன். மல்லிகாவும் இயலும் படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வெளியில் மழை பெய்து ஓய்ந்து தூறிக்கொண்டிருந்தது.

 

நான்கு தலைமுறைகள் கொண்ட கூட்டுக் குடும்பம். நான்காவது பையனுக்கு திருமணம் ஆகிறது. சாந்தி முகூர்த்தத்தை, நல்ல நேரம் கணித்து தை மாதத்திற்கு தள்ளி வைக்கிறார்கள். தீபாவளி வருகிறது. வேலை விஷயமாய் அவசரமாய் அழைப்பு வரவே கிளம்பிப் போகிறான் நான்காம் பையன். தலை தீபாவளிக்கு, வீட்டில் இல்லாத கணவனுக்கு கடிதம் எழுதுகிறாள் ஜெகதா. சிறுகதை முழுதுமே, ஜெகதா எழுதும் கடிதம்தான்.

 

சிறுகதையின் ஒவ்வொரு வார்த்தையும், வரியும் இத்தனை அன்பில் தோய்த்து எடுத்ததாய் இருக்க முடியுமா?. என் ஆச்சர்யங்கள் அதிகரித்துக்கொண்டேயிருந்தன. கூட்டுக் குடும்பத்தின் நிகழ்வுகளை ஜெகதா கடிதத்தில் எழுதுகிறாள். அம்மாவைப் பற்றி (கணவனின் அம்மா), மற்றவர்களைப் பற்றி…அம்மா தன் கால் பிடித்து மருதாணி வைத்தபோது தான் அழுததைப் பற்றி…தன் அப்பா தெருவில் போகும் வயதானவர்களைக் கண்டால், கைகூப்பி நமஸ்கரிப்பது பற்றி…கணவனின் அண்ணன், குடும்பத்தின் இரண்டாம் பையன் ஒரு தீபாவளியன்று பட்டாசுக் கடைக்குச் சென்று, விபத்தில் இறந்த விஷயம் தனக்குத் தெரியவந்தது பற்றி…

 

தலை தீபாவளிக்கு, அம்மா வந்து கூப்பிட்டும், தான் இங்கேயே இருந்துவிடுவதாக சொல்லிவிடுகிறாள் ஜெகதா. அம்மாவிற்கும் ஜெகதா இங்கேயே இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பமும். தீபாவளிக்கு இரண்டு/மூன்று நாட்கள் முன்னதாகவே பட்சணங்கள் தயாராகிறது.

தீபாவளியன்று, மூன்றாவது மாடியில் இருக்கும் கொள்ளுப்பாட்டியை கீழிறக்கி கூட்டிவந்து குளிக்கவைத்து, ஹாலில் இருத்தி, குடும்பத்தில் எல்லோரும் ஆசி வாங்குகிறார்கள்.

 

குட்டிப் பையன் சேகர், ”வீல்” என்று அலறி கத்திக்கொண்டே ஓடி வருகிறான். அம்மா அடித்துவிட்டதாய் சொல்கிறான். சேகர், பாட்டி செல்லம். விபத்தில் இறந்துபோன இரண்டாமவனின் பையன். கணவர் இறக்கும்போது, சேகர் காந்திமதியின் வயிற்றில் மூன்று மாதம். கோபத்துடன் அம்மா காந்திமதி அறைக்குப் போகிறாள். காந்தி விரித்த தலையுடன் ரேழி ஜன்னலில் உட்கார்ந்திருக்கிறாள். ஜெகதாவிடம், மற்றொரு மன்னி “காந்திக்கு வெறி பிடித்துவிட்டது” என்று காதில் கிசுகிசுக்கிறாள். கணவன் இறந்ததிலிருந்தே, காந்திக்கு ஆறேழு மாதங்களுக்கு ஒருமுறை இம்மாதிரி ஆகிவிடுவதாக சொல்கிறாள்.

 

லா.ச.ரா-வின் வார்த்தைகளில்…

 

அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச்  சற்றுக் குரல் தணிந்தது.

ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கல்லே? வா வா, எழுந்திரு – குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக்கையே, இது நியாயமா?”

நியாயமாம் நியாயம்! உலகத்தில் நியாயம் எங்கேயிருக்கு?”

காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று.

அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?”

பாட்டி! பாட்டி! நான் ஒண்ணுமே பண்ணல்லே. ஊசி மத்தாப்பைப் பிடிச்சுண்டு வந்து இதோ பாரு அம்மான்னு இவள் முகத்துக்கெதிரே நீட்டினேன். அவ்வளவுதான்; என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனிய வெச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ்சுட்டா, பாட்டீ!பையனுக்குச் சொல்லும் போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவனை அணைத்துக் கொண்டார்.

இங்கே வா தோசி, உன்னைத் தொலைச்சு முழுகிப்பிடறேன்! வயத்திலே இருக்கறபோதே அப்பனுக்கு உலை வெச்சாச்சு, உன்னை என்ன பண்ணால் தகாது?”

அம்மாவுக்குக் கன கோபம் வந்துவிட்டது.

நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தைக் கொண்டாடிக்க? நானும் தான் பிள்ளையத் தோத்துட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளையவில்லை?”

மன்னி சீறினாள். உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?”

 

என் மனம் ஒரு கணம் உறைந்துபோனது இங்குதான். அம்மாவின் உருவமும், அம்மாவின் அந்த பதினான்கு வருட வாழ்க்கையும், தத்தளிப்புகளும், துயரங்களும் மனக் கண் முன் நிழற்படங்களாய் வந்துபோயின. எனக்கு அப்பா போனதும், என் தாத்தா, பாட்டிக்கு மருமகன் போனதும், அம்மாவிற்கு கணவன் போனதும் ஒன்றாகுமா?. மனம் நினைவு திரும்பியதும் பெரும் கேவல் எழுந்தது. மல்லிகாவும், இயலும் விழித்துக் கொண்டு விடுவார்களோ என்று பயந்து கதவு திறந்து வெளியில் வந்தேன். இன்னும் தூறிக் கொண்டுதான் இருந்தது. இரண்டு தெரு தள்ளி,ரோடு தாண்டியிருக்கும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் ஒன்று கிளம்பிச் செல்லும் சத்தம் கேட்டது. இறங்கி தெருவில் மழையில் நின்றேன். வாய்விட்டு அழ வேண்டும்போலிருந்தது. அழுது கரைத்துவிட்டு, வீட்டினுள் வந்து தலை துவட்டிவிட்டு, மறுபடி புத்தகத்தை எடுக்கும்போது, இயல் தூக்கத்தில் புரளும் கொலுசோசை கேட்டது. எழுந்து சென்று, படுக்கையறையில், இரவு விளக்கு வெளிச்சத்தில் இயலைப் பார்த்தபோது, குட்டியாய் இடதுபக்கம் திரும்பி படுத்திருந்தது. மெலிதாய் விரல்களைப் பிடித்துக்கொண்டேன். மெத்தென்றிருந்தது.

 

அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழேயிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார்.

மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக் கொண்ட குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின

 

அன்பு ஒரு ஒட்டுவாரொட்டிதான், இல்லையா ஜெ?  

வெங்கடேஷ்

 

மின்னல் மலர்த்திடும் தாழை

முந்தைய கட்டுரைஒரு சினிமாப் பேட்டி
அடுத்த கட்டுரைகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4