இந்துமதமும் வலதுசாரி அரசியலும்

 

அன்புள்ள ஜெ

 

இந்தக்குறிப்பு உங்கள் நண்பர் [?] அனீஷ் கிருஷ்ணன் நாயர் முகநூலில் எழுதியது. ஒரு சம்பிரதாயமான மதநம்பிக்கையாளர், சொல்லப்போனால் பழைமைவாதி, இதை எழுதியது ஆச்சரியமாக இருந்தது. நான் இவ்வெண்ணத்தையே இன்னும்கொஞ்சம் குழப்பமாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் கருத்து என்ன

 

எம்.

 

இந்துமதமும் வலதுசாரி அரசியலும்

 

ஹிந்து மதமும் வலதுசாரி சித்தாந்தமும் ஏன் இணைத்து பார்க்கப்படுகிறது என்று புரியவில்லை .இது குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன் .இது போன்ற பல விஷயங்களை குறித்து திட்டமிட்டவாறு எழுத முடியாதது மட்டுமல்ல எழுத வேண்டியது என்ன என்பதையும் மறந்தும் விடுகிறேன் . அதனால் ரத்ன சுருக்கமாக ஒரு முகநூல் பதிவு .

 

ஹிந்து மதமும் ஹிந்து அறமும் மக்கள் நல அரசாங்கத்தையே மையமாக வைக்கின்றன . பசிப்பிணி தீர்த்தல் நோயுற்றவர்களுக்கு இலவச மருத்துவம் அனைவருக்கும் இலவச கல்வி / கல்வியில் உதவித் தொகை என்பதே ஹிந்து அரசர்களின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது .பலமான மைய அரசு , மைய அரசின் எழுச்சி வீழ்ச்சிகளால் பாதிக்கப் படாத நெகிழ்வு தன்மை கொண்ட ஸ்வதந்திரம் கொண்ட ப்ரதேச அரசு ஆகியவற்றையும் நாம் நமது பழைய ஆவணங்களில் பார்க்க முடிகிறது .

 

மருத்துவம் கல்வி மக்கள் நலன் போன்றவற்றில் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் .தனியார் இத்துறையில் இருக்கலாம் .ஆனால் அரசு இத்துறைகளை விட்டு செல்லக்கூடாது . வரி வசூல் என்பது வசதியாக இருப்பவர்களிடம் இருந்து கொள்ளை அடிப்பது அல்ல ; யாருக்கும் வரி ஏய்ப்பு செய்யும் எண்ணம் வராத வண்ணம் சீரான வரியை எளிமையாக வசூலிப்பது . குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருமானம் எவ்வளவு இருந்தாலும் 10% தான் வரி என்றால் பலர் வரி ஏய்ப்பு செய்ய முயல மாட்டார்கள் .

 

அது போல வளர்ச்சி திட்டங்களை திணிப்பது எல்லாம் நம் மரபு அல்ல . பெரிய சாலை அமைக்க கோவில்களை இடிப்பேன் என்றால் எப்படி ? 10,000 மரங்களை அழித்து வளர வேண்டும் என்பது ஹிந்து மதம் அல்ல .தனி மனித சொத்துரிமை , தனி மனித சுதந்திரம் ஆகியவை ஹிந்து மதத்தின் முக்கிய விஷயம் . வளர்ச்சி என்ற பெயரில் அவற்றை பிடுங்குவது தவறு . செல்வந்தர்களை ஒழித்து கட்டுவோம் என்று கூறும் இடதுசாரிகள் எப்படி நமக்கு அன்னியமானவர்களோ அதே போல பெரும்பசிக் கொண்ட பாம்பு போல வரும் வலதுசாரி பொருளாதாரிகளும் நமக்கு அந்நியமானவர்களே .

 

இடதுசாரிகளை எதிர்க்கிறோம் என்பதற்காக ஹிந்துக்கள் வலது சாரியாக வேண்டியதில்லை . ஹிந்து மதத்தை பொறுத்த வரையில் செல்வத்தை சேர்க்க விரும்புகிறவனுக்கு தார்மீகமாக செல்வத்தை சேர்ப்பதற்கு தடை இருக்கக் கூடாது .அதே சமயம் வாழ்க்கை முழுக்க பிச்சைக்காரனாக இருக்கும் ஸ்வதந்திரமும் ஒருவனுக்கு உண்டு . ஓடு இல்லை சாவு என்னும் வலதுசாரி பொருளாதார சிந்தனை நமக்கு பயன் தராது .இதை உணர்ந்து தான் ஆர் எஸ் எஸ் பிதாமகர்கள் இந்திய எண்ணம் உடைய பொருளாதார – வளர்ச்சி கோட்பாட்டை உருவாக்கினர் .அதை ஆர் எஸ் எஸ் மறந்து தசாப்தங்கள் ஆகி விட்டது .இப்போது மீண்டும் உதவிக்கு காந்தி தான் வருகிறார் . கற்க வேண்டியவற்றை காந்தியிடம் கூட கற்கலாம் .ஆனால் நீங்கள் சீன பாடங்களை கற்கவே ஆவல் கொண்டுள்ளீர்

 

அனீஷ் கிருஷ்ணன் நாயர்

[முகநூலில்]

 

அன்புள்ள எம்

 

ஆம், ஒரு ஆசாரமான சிந்தனையாளரிடமிருந்து இந்த எண்ணம் எழுவது ஒருவகையில் தொடக்கம்தான். உண்மையில் அவர் கூறும் ஒரு காலகட்டம் இருந்தது. பாரதிய ஜனதாக் கட்சி முப்பதாண்டுகளுக்கு முன்பு  இடதுசாரி சாய்வுள்ள ஒரு காந்தியப்பொருளியலை தேசக்கட்டுமானத்திற்கான கொள்கையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. அது தன் நிலைபாட்டை இன்று மாற்றிக்கொண்டிருக்கலாம். அதை உருவாக்கியவர்கள் இன்று அங்கே செல்வாக்குடன் இல்லை. இன்றைய பாரதியஜனதாவின் கொள்கை வலதுசாரிப் பொருளியலாக இருக்கலாம். அதை தெரிவுசெய்வது மக்களின் பொறுப்பு

 

ஆனால் இங்கே நிகழ்வது ஒரு நுட்பமான இணைப்பு. அதாவது இந்துமதம் [அல்லது இந்துமெய்யியல்] நேரடியாக பாரதிய ஜனதாவின் அரசியலுடன் சொல்லிச் சொல்லி இணைக்கப்படுகிறது. ஒருபக்கம் பாரதிய ஜனதா அதைச் செய்கிறது. இன்னொருபக்கம் அதன் கடும் எதிர்ப்பாளர்கள் அதைச் செய்கிறார்கள். பாரதிய ஜனதாவின் அரசியல்-பொருளியல் -சமூகவியல் நோக்கு வலதுசாரி அணுகுமுறை கொண்டது. விளைவாக  இந்துமதமே வலதுசாரித்தனமானது என வகுக்கப்படுகிறது

 

எந்த மதமும் மதக்கட்டுமானம் – மெய்யியல் என இரு பிரிவாகவே அணுகப்படவேண்டியது. மதக்கட்டுமானம் பழைமைத்தன்மை கொண்டிருக்கலாம். மெய்யியல் காலந்தோறும் தன்னை மீட்டெடுத்துக்கொள்ளும் அடிப்படை தரிசனமாகவே இருக்க இயலும். இந்துமதத்தின் மெய்யியல் என்பது அடிப்படையில் எளியவர்களுக்குச் சாதகமான அறவியல்கொள்கைகள் கொண்டது. ஆகவே அது இடதுசாரி பொருளியல் , அரசியல், சமூகவியல் அணுகுமுறைக்கே நெருக்கமானது என நான் நினைக்கிறேன்.

 

இந்துமதம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவாலே இன்றைய இந்துத்துவ அரசியலுடன் அது  இணைக்கப்படுவதுதான். இவர்களின் பிழைகள்,  குற்றங்கள் அனைத்துக்கும் அது பொறுப்பேற்கவேண்டியிருக்கிறது. இந்துத்துவம் என்பது  ஓர் அன்றாட அரசியல், அதிகார அரசியல். ஆனால் இந்து மதம் என்பது மெய்யியல்  என்று திரும்பத் திரும்ப இந்துக்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.

 

இந்துமதமே நாராயணகுருவை வள்ளலாரை உருவாக்கியது  காந்தியை உருவாக்கியது. பலநூறு காந்தியர்களை உருவாக்கியது.இன்னும் பலரை உருவாக்கக்கூடும். . நாராயணகுருவை ஒரு இடதுசாரி என்று அன்றி வரையறுக்க முடியாது. வள்ளலாரையும் அவ்வாறே. நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் என்றும் இடதுசாரிகளுக்கே அணுக்கமானவர்கள். இந்துமதம் இன்றைய வெறியர்களால் வலதுசாரி அமைப்பாக ஆக்கப்படுந்தோறும் அவர்கள் இந்துமதத்தால் வெளியே தள்ளப்படுவதே நடக்கும்.

வேறெதையும் பார்க்கவேண்டாம், இந்த இந்துத்துவ அரசியல்வாதிகளின் மொழியை நடத்தையை மட்டுமே பாருங்கள். அதிலிருக்கும் உச்சகட்டக் காழ்ப்பு, எந்தப் பண்பாட்டுநெறிகளுக்கும் அடங்காத அவர்களின் வசைகள். நம் மூதாதையர் நமக்களித்த இந்துமதம் என்பது இதுவா? இந்த கீழ்மையினூடாகவா நாம் இந்த மதத்தை பேணவேண்டும்? இதுவாக நம் மதத்தை மாற்றிவிட்டு நாம் நீத்து வான்புகுந்தால் நம் மூதாதையரை எதிர்கொள்ள முடியுமா என்ன?

 

மதத்தை அரசியலாக்க அனுமதிப்பதென்பது மதத்தை அரசியல்வாதிகளிடம் விட்டுக்கொடுப்பது. மதவெறியர்களுக்கு, அவர்களின் உலகியல் வெறிக்கு விட்டுக்கொடுப்பது. வரலாற்றுக்கு அப்பாலிருந்து இன்றுவரை நம் கைக்கு வந்துசேர்ந்திருக்கும் ஒரு மாபெரும் மரபை குறுக்கிச் சீரழித்து அழிப்பது.

 

இது பல்லாயிரம்காலத்து பயிர். நம் கண்முன் அழிந்தது என வரலாகாது.நம் பங்கும் அதற்கு இருந்துவிடக்கூடாது என்று மட்டும் இத்தருணத்தில் நமக்கே ஆணையிட்டுக்கொள்வோம்

 

ஜெ

முந்தைய கட்டுரைதிராவிட இயக்கம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61