கதைகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

இது என்னோட இரண்டவது ஈமெயில். உங்களோட சிறுகதைகள் அறம், சோற்றுக்கணக்கு, மத்துறு தயிர் படித்தேன். மூன்றுமே மனதை நெகிழ்த்து, தொண்டை
அடைக்கவைத்து, கண்ணீருடன், உள்ளே இழுத்து சென்றன.
இனிமேல் ஆபீசில் படிக்கும்போது சுத்தி பாத்துதான் படிக்கணும்.
சோற்றுக்கணக்கு முடிவ பத்தி எனக்கும் ஒரு சின்ன ஏற்றுக்கொள்ளமை இருந்தது. இன்னிக்கு உங்களோட முடிவு பதில் பார்த்தேன். அப்போதான் எவ்ளோ கன்சூமர் attitude -ல ஊறிபோயிருகேன்னு புரிஞ்சுது. இந்த அடிப்படை கூட தெரியாம கதை படிக்றோம்.

சங்க சித்திரங்கள் மூலம்தான் உங்களோட எழுத்து அறிமுகம். விஷ்ணுபுரம் ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் ஒரு ஒபெனிங்/ பரிமானம் குடுக்குது. இப்போஎதை பாத்தாலும் எழுத்தாளர் இப்டி சொல்வாரு. இப்டி சொன்னாருன்னு ஒரே ஜெயமொஹநிசம்தான்.

காலேஜ் படிக்கும்போது ஒரு வாக்ககியத்தை அடிக்கடி பயன்படுத்துவோம். நல்லதோ கேட்டதோ “chanc-ஏ illa”. தோழியோட அப்பா இது என்ன எல்லாத்துக்கும் இதையே சொல்றிங்க அப்டிம்பாரு. இப்போ உங்க கதை படிக்கும்போது அதுதான் சொல்லிகறேன் கம்ப்யூட்டர் டெர்மினல பார்த்து அடிக்கடி. தொடரட்டும்.

ராஜி

அன்புள்ள ராஜி

நன்றி

கதைகளின் வடிவத்தைப்பற்றி நமக்கு சில சமயம் ஒரு வகை முன்முடிவு இருக்கும். அதை ஒட்டி மானசீகமாகக் கதைகளை வெட்ட ஆரம்பிப்போம். அது கதை வாசிப்பை குலைக்கும். எனக்கே அப்படி இருந்தது. சிறுகதைகள் அச்சில் 70 பக்கம் கூட நீளமுடியும் என சமீபத்தில் பல அமெரிக்கக் கதைகளை வாசிக்கும்போது உணர்ந்த போது ஆச்சரியமாக இருந்தது. அந்தமாதிரி ஒரு விஷயம்தாம் சோற்றுக்கணக்கின் முடிவு. அதில் இன்னொரு கதை இருக்கிறதென நம் மனம் ஏற்பதில்லை. அந்த கடைசி வரிக்கு முன்னால் அவன் மனதில் என்ன நிகழ்ந்தது என ஒரு குறிப்பு கொடுத்திருந்தால் அந்த குழப்பம் வந்திருக்காது. ஆனால் அந்த மௌனமே அந்தகதையின் அழகு

ஜெ

ஜெ மோ சார்,

படிக்கப் படிக்க வற்றிப்போன இருதயம் கூட கண்ணீர்விடும் கலை, உங்கள் எழுத்து கற்றிருக்கிறது. நமஸ்காரங்கள்.

அன்புடன்,
ரேவதி.
http;//naachiyaar.blogspot.com

 

அன்புள்ள ஜெ

ஒரு தனிப்பட்ட கேள்வி,

இதுவரை வந்த கதைகளில் அருண்மொழிக்கு பிடித்த கதை எது?

சிவம்

சிவம்,

தாயார்பாதம்தான்.

அந்தக்கதையின் மையத்தை உடனே தொட்ட முதல் வாசகரும் அவள்தான். அதில் எனக்குப் பெருமிதம் உண்டு. அந்தப்பாட்டியின் மௌனம்தான் கதை. தேள்கொட்டியும் அவள் சத்தம் போடவில்லை. புறம் காட்டி அமர்ந்து மௌனமாகச் செத்தாள் என்ற ஆக்ரோஷமான எதிர்ப்பே அதன் மையம். அதை அருண்மொழி உடனே சொன்னாள் . எனக்கு அந்த நிமிடம் ‘இதோ எழுதிவிட்டேன்’ என்ற எண்ணம் வந்தது

ஜெ


கதைகள்


கோட்டி

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

 

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரைஎழுதுதல்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைசார்லஸின் நஞ்சுபுரம்