சிற்பக்கலையும் சுவாமிநாதனும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

வணக்கம்

 

2017 ஊட்டி காவிய முகாமில் திரு சுவாமிநாதன் அவர்களை சந்தித்து அவரின் உரையையும் கேட்டேன். சிற்பங்கள் அவற்றின் சிறப்புகள், கோவில் மற்றும், கோபுரக்கட்டுமானம், அதன் பின்னர்  IS THERE AN INDIAN WAY  குறித்தெல்லாம் விரிவான, எளிய மொழியிலான, அனைவரும் விளங்கிக்கொள்ளும் படியான உரையைக் கேட்க கொடுத்து வைத்திருந்தது அன்று..

 

பல நூற்றாண்டுகளுக்கு முந்திய சிற்பங்களும் அவற்றின் பல கோணங்களிலான விவரிப்பும் ஆய்வுமாக அவரின் முதல் உரை இருந்தது. பின்னர் அடுத்த நாள் கோவில்களும் கோபுரங்களும் வாஸ்து சாஸ்திரங்களும் என புதியதோர் உலகிற்குள் கூட்டிச்சென்றார். இன்னும் எனக்கு அந்த பிரமிப்பு அகலவில்லை

 

மிகக்குறுகிய ஒரு வட்டத்திற்குள் செயல்பட்டுக்கொண்டிருந்தவள் நான். அந்த உரைக்கு பின்னரே தாவரவியலை தாண்டியும் எத்தனை எத்தனை அரிய விஷயங்கள் உள்ளன நான் தெரிந்து கொள்ளவும்,  மாணவர்களுக்கு  கற்றுத்தரவும் என்று  அறிந்து கொண்டேன்.

 

உரையைவிட  அவரின் பெருந்தன்மை மிக மிக வியப்பூட்டுவதாயிருந்தது.ன் மிகப்பெருந்தன்மையானர் அவர்..  உரைக்கென தயாரித்த  PPT ஆகட்டும் அவரால் digitalize செய்யப்பட்ட பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களாகட்டும் எல்லாவற்றையும் அப்படியே அன்று  முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு தருவதாக சொல்லி,  அவ்வண்ணமே தந்தும் சென்றார் .

 

ஆசிரியம் என்பது ஒரு தொழில் அல்ல வாழ்வு நெறி என்பார்கள் அதற்கு உதாரணமாக  நான் சந்தித்த மிக முக்கியமான ஒருவர் திரு.சுவாமிநாதன் அவர்கள். காவிய முகாமிலிருந்த  அனைவரையும் விட வயதில் மூத்தவர் தான் தான் என்று  அப்போது சொல்லி கொண்டிருந்தார், ஆனால் என்னுடன் அங்கு முகாமிற்கு வந்திருந்த பத்தாம் வகுப்பிலிருந்த என் இளைய மகனிற்கும் அவருக்கும் எந்த வேறுபாடும்  தெரியவில்லை.

 

அத்தனை உற்சாகம், அப்படியொரு துடிப்பான உடல் மொழி, அத்தனை ஆர்வம் கற்றுத்தருவதிலும் கலந்துரையாடுவதிலும். அவரைச்சந்தித்ததிலும், அரிய உரைகளை கேட்டதிலும்  மகிழ்ச்சி மட்டுமல்ல அது பெரும் பாக்கியமென்றே  எப்போதும் கருதுவேன்

 

நான் பணி புரியும்  கிராமப்புறத்தைச்சேர்ந்த  கல்லூரி மாணவர்களுக்கு இவருடையதைப்போன்ற உரைகள் தரும் எழுச்சியும் ஆர்வமும், அவை திறக்கும் எண்ணற்ற வாசல்களும்   கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இருக்கும். எனவே முகாமிற்கு பிறகு  நான் அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டேன்.

 

அவர் எனக்கு அவர் அதுநாள் வரையிலும் செய்திருக்கும் பணிகளை, மட்டுமல்லாது  ஒவ்வொரு ஊருக்கான பாரம்பரியத்தை தொகுப்பதின் மூலம் செய்யமுடியும்  ’’பண்பாட்டு அடிப்படையிலான நிலவரைத்தொகுப்பு’’ (cultural atlas) என்பதைக்குறித்தும் அதை எப்படி செய்ய வேண்டும் என்றும்  ஏராளம் தகவல்களை இன்றைக்கு வரையிலும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். நான் அவரை சந்தித்த பிறகு கற்றுக்கொண்டவை மிக மிக அதிகம். மிகப் புதிதான, மிக அரிதான பலவற்றை  அவரிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்

.

2018 ல் நான் பணி புரியும் கல்லூரியின் வைர விழாவில் அவரது உரையை ஏற்பாடு செய்ய நான் பெரிதும் விரும்பினேன், முயன்றேன். நான் கல்லூரிக்கு அழைத்த போதும் அதை தன் பாக்கியமாக கருதுகிறேன் என்றே சொன்னர்

 

அவர் வந்திருந்து உரையாற்றியிருந்தால், பல மாணவர்கள் பயன்பெற்றிருக்கக்கூடும் எனினும் அவர் கேட்டுக்கொண்டபடி ஒரு மேடை உரையாக அல்லாது சிறு குழுவுடன் (ஊட்டி காவிய முகாமைபோல)  கலந்துரையாடலாக என்னால் ஏற்பாடு செய்ய முடியாமல் போயிற்று. 7000 மாணவர்கள் படிக்கும் ஒரு கல்லூரியில் , மேடை [பேச்சுக்களையெல்லாம் தேசிய தர மதிப்பீடுகளின் பொருட்டு ஒரு சம்பிரதாயமாக செய்யவே தயராக இருக்கும் ஒரு சூழலில் நான் பலவிதங்களில் அவரை  அழைத்து வர வேண்டுமென்று முயற்சித்தும் பலனின்றி போய்விட்டது.

அவர் எனக்கு இதுவரை நூற்றுக்கணக்கான ppt மற்றும் கட்டுரைகளை அனுப்பித் தந்திருக்கிறார். சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், மகாபலிபுரம் சிற்பங்கள், கோவில்கள், அஜந்தா குகை ஓவியங்கள் சிற்பக்கலை, கோவில் கட்டுமானம் குறித்தெல்லாம் எனக்கு ஏராளம் தகவல்களும் புகைபடங்களும் அவர் தயாரித்த மிக அரிய உரைகளையும் அனுப்பியிருக்கிறார்.

 

அவற்றை பலரிடமும் பகிர்ந்துகொள்ளச்சொல்லி ஒவ்வொரு மின்னஞ்சலிலும் சொல்லியிருப்பார். இதுவும் ஆச்சர்யமான விஷயம்

 

.கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதியன்று  Tamil Heritage Trust,  திரு சுவாமிநதன் அவர்களின் 80 அகவை நிறைவை கொண்டாடும் பொருட்டு ‘’Being Swaminathan ‘’  என்னும் நிகழ்வினை சென்னை கோட்டூர்புரத்தில்  ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னையும் விழாவில் கலந்துகொள்ளும்படி அழைத்திருந்தார்கள் எனினும் பல காரணங்களினால் என்னால் சென்னைக்கு அந்த தேதியில் செல்ல முடியாமல் போய்விட்டது. திரு சுவாமினாதன் அவர்களை குறித்தான என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டிருந்தார்கள் நானும் ஒரு மின்னஞ்சலில் அவரைக்குறித்து எழுதியனுப்பினேன்

 

அவ்விழாவில் என் கடிதத்தையும் வாசித்திருக்கிறார்கள். விழாவின் காணொளியை எனக்கு திரு சுவாமினாதன் நேற்று  அனுப்பியிருக்கிறார். அத்தனை பெரிய மனிதருக்கான ஒரு முக்கிய விழாவில் என் கடிதத்தையும் வாசித்தது என் வாழ்வின் ஆகச்சிறந்த ஒரு கெளரவமாக கருதுகிறேன்.

 

விஷ்ணுபுரம் விழாவாகட்டும் காவியமுகாம்களாகட்டும் எனக்கு திரு சுவாமினாதனைப்போல, திரு.காட்சன் சாமுவேலைப்போல பல பெரிய மனிதர்களை அறிமுகம் செய்துகொள்ளவும்,  எனக்கும் என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கும் எத்தனையோ விதங்களில் அவர்களாலான உதவிகள் கிடைப்பதற்கும் உதவிக்கொண்டே இருக்கிறது.

 

அத்தனைக்குமாக உங்களுக்கு சொல்லிக்கொள்ள நன்றியைத்தவிர வேறேதுமில்லாததால்.

 

மனமார்ந்த நன்றிகளுடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி
அடுத்த கட்டுரைஇலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்