திராவிட இயக்கம் – கடிதங்கள்

மனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம்

 

அன்புள்ள ஜெ

 

ஒரு வேடிக்கையான விஷயம்

 

எனக்கும் நண்பர்களுக்கும் ஒரு போட்டி. திமுகவினரின் வாசிப்புப் பழக்கம் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ’எந்த ஆதாரத்துடன் இப்படிப் பேசுகிறார்?”என்று நண்பர் கேட்டார். “அவர் தன் மனப்பதிவைச் சொல்கிறார். திமுகவினரே பாய்ந்துவந்து அவருக்குச் சாதகமான ஆதாரங்களை அள்ளி அள்ளி வைப்பார்கள்” என்று நான் சொன்னேன்

 

அப்படியே பேச்சு வளர்ந்தது. ஒரு பந்தயம் வைத்தேன். நான்  சொன்னது இது. “அத்தனை திமுகக்காரர்களும் ஒன்றே போலத்தான் எதிர்வினை புரிவார்கள். புளிச்சமாவை வைத்து ஒரு அசட்டு வசவை ஒருவர் சொல்வார். அத்தனைபேரும் அதையே திரும்பத்திரும்பச் சொல்வார்கள். புளிச்சமாவு என்பதற்குமேல் ஒருவார்த்தை ஒருவராவது சொல்லிவிட்டால் நான் பத்தாயிரம் ரூபாய் பணம் தருகிறேன்:”

 

மெய்யாகவே பத்தாயிரம் ரூபாய் கைக்கு வந்துவிட்டது. திமுக செல்லங்கள் என்னை இதுவரை ஏமாற்றியதே இல்லை

 

எம்.ராஜேந்திரன்

 

 

அன்புள்ள ஜெ,

திராவிட இயக்கம், மனுஷ்யபுத்திரன் பற்றிய உங்கள் கருத்து தெளிவானது. அதன் இடத்தை மறுக்கவுமில்லை. அதன் இயல்புகளை சொல்லாமல் விடவுமில்லை. அதற்கு ஒரு கருத்தியல் செல்வாக்கு உள்ளது. பி.ஏ.கிருஷ்ணன் சொல்வதுபோல அது ஃபாஸிஸ்ட் இயக்கம் அல்ல. அதேசமயம் முற்போக்கு இயக்கமும் அல்ல. அது ஒரு பாப்புலிஸ்ட் இயக்கம்.

பாப்புலிஸ்ட் இயக்கம் முற்போக்குக் கருத்துக்களை எடுத்துக்கொள்ளும். கூடவே மக்களிடமிருக்கும் இனவெறுப்பு சாதிவெறுப்பு போன்ற எதிர்மறைப் பண்புகளையும் எடுத்துக்கொள்ளும். கூடவே மக்கள் நம்பும் சாதிவெறி, மொழிவெறி, வட்டராவெறி ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து குழைத்து ஒரு அரசியலை உருவாக்கும்.

அந்த அரசியலை அதனால் தர்க்கபூர்வமாக முன்வைக்க முடியாது. ஏனென்றால் அது ஒரு மாபெரும் முரண்பாடு. ஒருபக்கம் முற்போக்கு. இன்னொரு பக்கம் பிற்போக்கு. திராவிட இயக்கம் பற்றி பார்த்தாலே தெரியும். கண்ணகியை போற்றுவார்கள். கற்பு கற்பு என்பார்கள். பழம்பெருமை பேசுவார்கள். பெண்விடுதலையும் பேசுவார்கள். உழைப்பாளர் விடுதலையும் பேசுவார்கள். தர்க்கபூர்வமாக இவற்றை இணைக்க முடியாது. ஆகவெ எப்போதுமே மிகையான உணர்ச்சி அரசியல்தான். அதையும் நக்கல் நையாண்டி அடாவடி ஆகியவற்றையும்தான் அவர்கள் முன்வைப்பார்கள்.

ஆனால் அவர்கள் சமூகத்தில் ஒரு பாத்திரத்தை ஆற்றுகிறார்கள். மக்களிடையே ஒருவகையான ஜனநாயகக் கருத்துக்களை கொண்டுசென்று சேர்க்கிறார்கள்.ஏனென்றால் அவர்கள் ஜனநாயகத்தில்தான் செயல்படுகிறார்கள். பாப்புலிஸ்ட் இயக்கம் ஜனநாயகத்திற்குள் மட்டுமே செயல்பட முடியும். ஆகவே வன்முறை இல்லாத ஒரு சமூக இயக்கமாகவே இருப்பார்கள். வெறுப்பை பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் வன்முறையை நடத்தமாட்டார்கள்.

அவர்களின் நோக்கம் அழிப்பு அல்ல. அதிகாரத்தை அடைவதுதான். அதிகாரத்தை அடைந்தபின்னர் அவர்கள் எவரையெல்லாம் எதிர்த்தார்களோ எல்லாருடனும் சமரசம் செய்துகொள்வார்கள். அவர்கள் மக்களின் சில அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். அந்த அபிலாசைகளை அரசியல்சக்தியாக ஆக்கி ஜனநாயகத்தில் நிலைநிறுத்துகிறார்கள். ஆகவேதான் அவர்கள் ஓர் அரசியல் கருத்தியல் சக்தி.

அவர்களை புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். இங்கே உள்ள காட்டுக்கூச்சல் சூழலில் இதையெல்லாம் பேசுவதே கடினம். மார்க்ஸியம்பேசவே இங்கே ஆளில்லை. லும்பனிசம்தான் மார்க்ஸியக்குரலாக வெளிப்படுகிறது. அதற்கு வெச்சால்குடுமி சிரைச்சால் மொட்டைதான். இந்தச்சூழலில் தொடர்ச்சியாக இந்த முரண்பாட்டுநிலையை விளக்கிக்கொண்டே இருக்கிறீர்கள்.

திராவிட இயக்கம் ஒரு அறிவியக்கம் என்று நீங்கள் சொன்னதும் விலைபோய்விட்டார் என்றார்கள் இந்துத்துவர்கள். அது பாப்புலிஸ்ட் இயக்கம் என்றதும் இந்தப்பக்கம் நீங்கள் இந்துத்துவா என்பார்கள். இன்றைய சூழலில் எந்த ஒரு கருத்தையும் சொல்வதற்கு சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கும் பொறுமைதேவை. அது உங்களிடமிருக்கிறது

எம்.சந்தானகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ..

அமேசான் நடத்தும் குப்பைகளின் போட்டி என்னைப் போன்ற பலருக்கும் உவப்பில்லை என்றாலும் உங்களது எதிர்ப்பு சற்று மிகை என்றே அப்போது தோன்றியது. ஆனால் அது சரியான எதிர்ப்புதான் அங்கே நடக்கும் பல விஷயங்கள் உணர வைத்தன

மனுஷ்யபுத்திரனின் தெரு முனைப்பேச்சுக்கு உங்கள் எதிர்வினை சரியானதே என்றாலும் தற்போதைய திமுகவின் குறைகளை ஒட்டு மொத்த திராவிட இயக்கத்தின் மீது போடுவது சற்றே வருத்தம்தான்.

அண்ணா அரசாண்ட ஆண்டுகளில் அந்த திமுக ஆட்சியில் இப்படிப்பட அடாவடி ஏதும் கிடையாது. அதிமுக , மதிமுக , தபெதிக , திக என யாரை எடுத்தாலும் இந்த அளவு அடாவடியெல்லாம் அவர்களிடம் இல்லை

ஜெயலலிதாவை , எம் ஜி ஆரை , வை கோவை , வீரமணியை பல நேரங்களில் தனிப்பட்ட முறையில் உடல் உருவ ரீதியாகவெல்லாம் திமுக வினர் பேசியதுண்டு. ஆனால் அத்தகைய பதிலடிகள் அதன் மேல் மட்ட தலைவர்கள் இறங்கியதில்லை

உண்மையை சொல்ல வேண்டுமானால் . கலைஞர் அவர்களின் சின்ன உடல் குறை , அவர் மறைவுக்கு பிறகான அஞ்சலி குறிப்புகளில்தான் மக்கள் கவனத்துக்கே வந்தது. அது ஜெயலலிதாவிடம் இருந்து இருந்தால் திமுக என்னவெல்லாம் எகத்தாளமாக பேசி இருக்கும் என ஒப்பிட்டுப்பார்த்தால் , திராவிட இயக்கம் சுமக்கும் வீண்பழி புரியும்

அதே கலைஞரை இந்த நாகரிகத்தை பின்பற்றாமல் , ஹிந்துத்துவ , தமிழ் தேசிய தரப்பினர் , திமுக மொழியிலேயே பதிலடி கொடுக்கிறார்கள். இதை அதிமுகவோ , மதிமுகவோ , ( திமுகவுகு எதிர் நிலையில் இருந்த கால கட்டத்தில் ) திகவோ செய்ததே இல்லையே…

உண்மையில் நீங்கள் மனுஷ்யபுத்திரனுக்கு பதில் அளித்து நேரம் ஒதுக்குவதைக்கூட அதிமுக செய்வதில்லை.. எப்படியும் இதை எல்லாம் படிப்பவன் தனக்கு ஓட்டுபோடவதில்லை.. நாம் ஏன் இதில் ஏன் நேர விரயம் செய்ய வேண்டும் என்பது எம் ஜி ஆர் அவர்களுக்கு கற்பித்த பாடம்..

இந்த தெருமுனைப்பேச்சுகளால் யாரையும் கவர முடியாது என மனுஷ்யபுத்திரன் போன்றோருக்கே தெரியும். ஆனால் இருப்பவர்களை மகிழ்விக்க இப்படி பேசி மகிழ்ந்து கொள்கிறார்கள்

பெரிய நிறுவனம் ஒன்று வியாபார நோக்கம் கருதியாவது எழுத்துக்கு ஏதாவது செய்ய மேற்கொண்ட முயற்சியை. நாசமாக்கிய கட்சியை ஒரு அறிவுத்தரப்பு என நீங்கள் சொல்வது தர்க்கரீதியாக சரியானதுதான். வேறு எந்தக்கட்சியும் இந்த கேவலத்தை செய்ய நினைத்தாலும் செய்ய முடியாத நிலையில் இருப்பது நகைப்புக்குரிய நிலை..

அன்புடன்

பிச்சைக்காரன்

முந்தைய கட்டுரைகாசியின் காட்சிகள்
அடுத்த கட்டுரைஇந்துமதமும் வலதுசாரி அரசியலும்