சிலநினைவுகள் பழைய காலத்திலிருந்து எழுந்து வருவதற்கு சினிமாப்பாடல்களைப்போல உதவுபவை வேறில்லை. ஆராதனா என் பழைய திருவனந்தபுரம் நினைவுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அன்று திருவனந்தபுரம் நியூ திரையரங்கில் நூறுநாட்கள் ஓடியபடம். பாட்டுக்காகவே ஓடியது என்பது ஒரு மரியாதைக்கூற்று. ஷர்மிளா டாகூர் என்னும் பேரழகிக்காக ஓடியது என்பது மேலும் கொஞ்சம் உண்மை. அவருடைய ஒற்றைத் தெற்றுப்பல்லுக்காக ஓடியது என்று சொன்னால் அதுவே கடவுளுக்குச் சம்மதமான உண்மையாக இருக்க முடியும்
அன்றைய திருவனந்தபுரம் பெரும்பாலும் ஓட்டுக்கட்டிடங்களால் ஆனது. தாழ்வானகூரை கொண்டவை. மேலே ஒரு மச்சு. அதற்கும் சன்னல்கள் உண்டு. அங்கே பலர் குடியிருப்பார்கள். போக்குவரது நெரிசல் என்பதே கிடையாது. நாலைந்து அம்பாசிடர் கார்கள் கரமனை சந்திப்பில் எப்போதும் ஆமைபோல நின்றிருக்கும். ஓட்டுநர்கள் பெரும்பாலும் கேரள கௌமுதி வாசித்து பீடிபிடித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலான நாட்களில் மழை பெய்து கூரை சொட்டிக்கொண்டிருக்கும்
அன்றெல்லாம் திருவனந்தபுரத்தில் ஒரு ரூபாய்க்கு மரவள்ளிக்கிழங்கு கூட்டுடன் கஞ்சி கிடைக்கும். எழுபத்தைந்து பைசாவுக்கு சினிமா. இரண்டு ரூபாய் இருந்தால் பரோட்டா, மாட்டிறைச்சிப்பொரியல். தலைமைநூலகத்தில் ஏராளமான வார இதழ்களை நூலில் கட்டி மேஜையுடன் பிணைத்திருப்பார்கள். வாசித்துவிட்டு படம்பார்த்துவிட்டு கேரளப் பேருந்தில் திரும்பி வரலாம். பழைய திருவனந்தபுரத்தில் எப்படியும் எங்கேனும் யானை கண்ணுக்குத் தட்டுப்பட்டுவிடும்.
ஆராதனாவின் பாடல்களில் கோரா காகஸ் , குன்குனா ரஹே இரண்டுமே இரண்டு வகை. இரண்டிலுமே ஷர்மிளா தாகூரின் சிரிப்பின் அழகு. பழையகாலங்களின் தவிர்க்கமுடியாத அழகு. நிரந்தரமானவையும் அழிபவையும் என ஒரே சமயம் மாயம் காட்டுபவை நினைவுகள்.