பகுதி எட்டு : விண்நோக்கு – 7
சுகோத்ரன் கண்களை மூடி அந்தக் காலத்தையும் இடத்தையும் கடந்து வேறெங்கோ இருந்தான். உஜ்வலன் அசைந்து அசைந்து அமர்ந்தான். அவ்வப்போது சுகோத்ரனை நோக்கினான். வேள்வி தொடர்ந்து நடக்க வெளியே பறவைக்குரல்கள் மாறுபட்டன. கீழே கங்கையிலிருந்து எழுந்த காற்று மாறுபாடு கொண்டது. அதில் நீராவியின் வெம்மை கலந்திருப்பதை உடல் உணர்ந்தது. அதுவரை காட்டிலிருந்து கங்கை நோக்கிச் சென்று சுழன்று வந்த காற்று வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியது. புகையை அது முழுமையாக அள்ளிச்சென்றமையால் வேள்விச்சாலைக்குள் மூச்சுத்திணறல் குறைந்தது.
சாவே,
தேவர்கள் அணுகாத தனிமைகொண்டதும்
உனக்கு மட்டுமே உரியதுமான
வழியினூடாக அகன்று செல்க!
கண்கள் கொண்ட உன்னிடம்
செவிகள் கொண்ட உன்னிடம்
நான் மன்றாடுகிறேன்
எங்கள் மைந்தர்களையும் வீரர்களையும் வருத்தாதே
சாவின் வழியிலிருந்து அகலுங்கள்
தேவர்கள் செல்லும் வழியில் செல்லுங்கள்
நீண்ட நலமான வாழ்நாளை கொள்ளுங்கள்
வேள்விசெய்பவர்களே
செல்வத்துடனும் மைந்தர்களுடனும் செழித்திருக்க
தூயவர்களாக இங்கே தோன்றுங்கள்
கால்கள் மரத்துப்போகுமளவுக்குப் பொழுது கடந்துவிட்டிருந்தது. இறுதியாக எமனுக்குரிய தெற்குதிசையில் கரிய பட்டாடையை பரப்பி அதன்மேல் எருமைக்கொம்புகளை வைத்து எமனை அங்கே நிறுவினார்கள். காலவடிவனை அழைக்கும் வேதச்சொல் ஒலிக்கலாயிற்று.
எமனே
அங்கிரீசர்களான மூதாதையருடன்
இணைந்திருப்பவனாகிய நீ
இந்த வேள்வியிலே வந்து அமர்க!
கவிஞர்களால் பாடப்படும் இந்தச் சொற்கள்
உன்னை ஏந்தி இங்கே கொண்டுவருக!
அரசனே
உன்னை இந்தப் படையல்கள் மகிழ்வுறுத்துக!
எமனுக்குரிய அவி படைக்கப்பட்டது. பாண்டவர் ஐவரிடமிருந்தும் பெறப்பட்ட பொருட்கள் அனலில் இடப்பட்டன. வேள்விநிறைவு செய்து தௌம்யர் கைகளால் ஆணையிட வைதிகர் அனைவரும் இணைந்து வேதச்சொல் எழுப்பினர். கைகள் நாவுகள் என அசைந்து சொற்களாயின. அனல் எழுந்து குதித்து தலைசுழற்றியது.
வேதத்துணைவனே
நீ இந்த உலகில் இல்லாதவர்களும் இருப்பவர்களும்
அறியப்பட்டவர்களும் அறியப்படாதவர்களும் ஆகிய
எல்லா மூதாதையர்களையும் அறிந்தவன்
இங்கே முறையாகச் செய்யப்படும் வேள்வியை
ஏற்றருள்க!
அனலால் எரிக்கப்பட்டவர்களும்
அனலால் எரிக்கப்படாதவர்களும்
இச்சுடரின் அளிக்கப்படும் கொடையால்
விண்ணிலிருந்து மகிழ்வுகொள்க!
நீ அவர்களுடன் இணைந்து
மூச்சுலகை அடைக!
அங்கே நிறைவுகொள்க!
ஆம் அவ்வாறே ஆகுக!
ஆம்! ஆம்! ஆம்!
தௌம்யர் எழுந்துகொண்டு ஆணையிட யுதிஷ்டிரனும் இளையோரும் எழுந்து கைதொழுது நின்றனர். தௌம்யர் அவர்களின் தலைக்குமேல் அரிசியும் மலருமிட்டு வாழ்த்தினார். அவர்கள் அவரை அடிபணிந்து வணங்கினர். மும்முறை எரிகுளங்களைச் சுற்றிவந்து வணங்கி நிற்க தௌம்யர் அவர்கள் நெற்றியில் வேள்விக்கரியால் மங்கலக் குறியிட்டார்.
அவியன்னம் பகுக்கப்பட்டது. அதில் வேள்விக்காவலர்களுக்குரிய பங்கு தனியாக எடுக்கப்பட்டு ஐந்தாக பங்கிடப்பட்டது. தௌம்யர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அளித்த வேள்வியன்னத்தை புதிய சுடுமண் தாலங்களில் எடுத்து தலையில் வைத்துக்கொண்டனர். பச்சையிலை மேல் வைக்கப்பட்ட தாலங்களுடன் கங்கை நோக்கி அவர்கள் சென்றனர்.
அவர்களுக்கு முன்னால் வெண்சங்கு ஊதியபடி ஒரு காவலன் சென்றான். தொடர்ந்து இரு ஏவலர் தரையில் வெள்ளைத் துணியை விரித்துச்செல்ல அதன்மேல் முதலில் யுதிஷ்டிரனும் பின்னர் மூப்புமுறைப்படி பிற பாண்டவர்களும் நடந்தனர். தொடர்ந்து அந்தணர் செல்ல இறுதியாக ஏவலர் சென்றனர். இருபுறமும் ஏவலர்களும் காவலர்களும் வாளும் வேலும் தாழ்த்தி தலைகுனிந்து நின்றனர்.
சுகோத்ரன் உஜ்வலனிடம் “வருக!” என கைகாட்டிவிட்டு முன்னால் சென்றான். அரசர்கள் சென்றபின் அந்த வழியில் அங்கே நீர்க்கடன் கொடுக்கும்பொருட்டு வந்துசேர்ந்திருந்தவர்கள் அனைவரும் நீண்ட நிரையாகச் சென்றனர். அவர்களுடன் சுகோத்ரனும் உஜ்வலனும் இணைந்து சென்றனர். சுகோத்ரனின் விழிகள் நிலைநட்டு நோக்கிழந்திருந்தன. உஜ்வலன் சூழ நோக்கிக்கொண்டு நடந்தான்.
கங்கைக்கரையில் விதுரரும் காவலர்தலைவர்களும் நின்றிருப்பதை சுகோத்ரன் கண்டான். விதுரர் கைகளை அசைக்க அதற்கேற்ப அங்கிருந்தவர்கள் செயலாற்றினர். அவருடைய முகம் கண்கள் சுருங்க, கடுமையான தோற்றத்துடனிருந்தது. சுகோத்ரன் அங்கே இளைய யாதவர் வரக்கூடுமா என எதிர்பார்த்தான். அவர் வரப்போவதில்லை என உணர்ந்திருந்தான். அவர் அங்கே என்ன செய்துகொண்டிருப்பார் என்று ஓர் எண்ணமெழுந்தது. அங்கிருப்பவர்கள் அனைவருமே ஒரு கணமேனும் அவரை நினைத்துக் கொள்ளாமலிருக்க மாட்டார்கள். அவன் பெருமூச்சுவிட்டான்.
அவர்கள் அணுகியபோது கூடிநின்றவர்களிடமிருந்து சொல்லில்லாத முழக்கம் ஒன்று எழுந்தது. சங்கொலி விம்மல் என எழுந்து ஓங்கி தேம்பி ஒலித்தது. வேதியர் எழுவர் அவர்களை எதிர்கொண்டு அழைத்துச்சென்று கங்கைநீரை அடைந்தனர். அவர்களுடன் பாண்டவர்கள் ஐவரும் நீரில் இறங்கி இடைவரை மூழ்கி நின்று வேள்வியன்னத்தை கங்கை நீரில் தலைக்குப் பின்புறம் சரித்துப் போட்டு ஏழுமுறை மூழ்கி எழுந்தார்கள். கரையில் நின்றிருந்த வேதியர் வேதச்சொல் உரைத்தனர். அவர்கள் படியேறி வந்தபோது சங்குகள் முழங்கின.
கரையேறி வந்த பாண்டவர்களை சூதப்பூசகர் எழுவர் வரவேற்று அழைத்துச்சென்றார்கள். வேதியர் எழுவரும் திரும்பிநோக்காமல் மேலேறிச்சென்று ஒற்றைத்திரளாக நடந்து விழிகளிலிருந்து மறைந்தனர். ஏழு சூதர்களும் வழிகாட்ட பாண்டவர்கள் நடந்துசென்று காட்டுவிளிம்பில் புதர்களை விலக்கி அமைக்கப்பட்டிருந்த சிறிய வெளியில் களிமண் குழைத்து உருவாக்கப்பட்டிருந்த மேடையை அடைந்தனர். அதன்மேல் ஐந்து சிறிய பசுமண் கலங்கள் செம்பட்டு கொண்டு வாய்மூடிக் கட்டப்பட்டு, செங்காந்தள் மலர்சூட்டி வைக்கப்பட்டிருந்தன.
யுதிஷ்டிரரும் இளையோரும் அதை கைகூப்பி வணங்கியபடி நின்றனர். “ஏழு பிடி சாம்பல்” என்று உஜ்வலன் மெல்லிய குரலில் சொன்னான். “குருக்ஷேத்ரத்தில் எரிந்த அனைவருக்காகவும். அது நன்று. தீ அனைவரையும் ஒன்றெனக் கருதுகிறது. ஒரே சாம்பலென ஆக்குகிறது.” சுகோத்ரன் திரும்பி நோக்கவில்லை. யுதிஷ்டிரனும் இளையோரும் அக்கலங்களை நிலம்படிய விழுந்து வணங்கினர். சூதர்கள் அவற்றை எடுத்து அளிக்க தலையில் ஏற்றிக்கொண்டனர்.
ஈமநிகழ்வுகளுக்குரிய தளர்தோல் குறுமுழவும் சிறுபறையும் எருதுக்கொம்புகளும் முழங்கின. வலிகொண்டு தேம்புவனபோல் இருந்தது அவற்றின் ஓசை. இசைக்கலன்களுடன் ஈமச்சூதர் பன்னிருவர் முன்னால் வர ஐவரும் சாம்பற்கலங்களை தலைக்குமேல் ஏற்றிக்கொண்டு தொடர்ந்து நடந்துவந்தனர். யுதிஷ்டிரன் நடை தள்ளாடினார். பிற நால்வரும் துயிலில் நடப்பவர் போலிருந்தார்கள்.
கங்கையின் படித்துறைக்கு அருகே காடு வெட்டி விலக்கி, நிரப்பாக்கப்பட்டு மணல் விரித்திருந்த நீள்வட்ட வடிவ நிலத்திற்கு அவர்களை அழைத்துச்சென்றனர் சூதர். ஐவரும் அமர்வதற்கான தர்ப்பைப்புல் விரிக்கப்பட்ட பீடங்கள் இருந்தன. செம்பாலான கலங்களும் நீர்க்குடங்களும் ஒருக்கப்பட்டிருந்தன. மண்ணாலான ஏழு திரி இடப்பட்ட விளக்கு நிறைந்த எண்ணையின்மேல் சுடரொளி பரவியிருக்க எரிந்துகொண்டிருந்தது. அவர்கள் அக்கலங்களை இறக்கி வைக்க அவை வரிசையாக மண்ணில் அமைக்கப்பட்டன.
பாண்டவர்கள் சூதர் வழிகாட்ட அமர்ந்ததும் சூதர்கள் எதிரே அமர்ந்தனர். மும்முறை சங்கு முழங்கி அமைந்தது. கலங்களுக்கு மலர்மாலை சூட்டி வணங்கினர். ஈமச்சடங்குக்குரிய இசைக்கலன்களின் ஓசை வயிற்றை அதிரச் செய்தது. யுதிஷ்டிரன் திரும்பி நோக்க ஸ்ரீமுகர் அருகே சென்று பணிந்தார். அவர் சொற்களைக் கேட்டு திரும்ப ஓடிவந்து சுகோத்ரனிடம் “நீங்கள் பலியன்னம் சமைக்க வரவேண்டும் என்று அரசர் கோருகிறார்” என்றார்.
சுகோத்ரன் விழித்தெழுந்து “என்ன?” என்றான். “பலியன்னம் சமைக்க வந்து அமர்க என்கிறார் அரசர்” என்றார் ஶ்ரீமுகர். “செல்க இளவரசே, இதுவே உகந்த தருணம்… இதைவிட ஓர் அடையாளச்செயல் பிறிதில்லை” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் மேலும் தயங்கிய பின் “இல்லை, நான் என் ஆணையைப் பெறவில்லை” என்றான். ஸ்ரீமுகர் “இது இரண்டாவது அழைப்பு. இம்முறையும் அரசர் அதை வேண்டுகோளாகவே முன்வைக்கிறார்” என்றார்.
“நீங்கள் எதை அஞ்சுகிறீர்கள்?” என்று உஜ்வலன் சீற்றத்துடன் கேட்டான். சுகோத்ரன் மறுமொழி சொல்லாமல் நிற்க ஸ்ரீமுகர் அவன் சொல்லுக்காகக் காத்தார். சுகோத்ரன் “என் சொல் எழுமெனில் நான் வருகிறேன்” என்றான். ஸ்ரீமுகர் தலைவணங்கி திரும்பிச்சென்றார். அவர் சென்று சொல்ல யுதிஷ்டிரன் சலிப்பு கொண்டவர்போல திரும்பி நோக்கினார். “இங்கே நீர்க்கடனுக்கு நீங்கள் அமரவில்லை என்றால் ஒருவேளை ஒருபோதும் நீங்கள் குடித்தொடர்பை கோரமுடியாமலாகலாம்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் பெருமூச்சுவிட்டு உடலை எளிதாக்கி கைகளை மார்பில் கட்டிக்கொண்டான்.
சூதர்கள் கொண்டுவந்த மண்கட்டிகளைக் கொண்டு, அவர்கள் வழிகாட்ட பாண்டவர்கள் அடுப்புகளை அமைத்தனர். அதன்மேல் புதிய கலங்களை அமைத்து எரிமூட்டினர். நீரூற்றி கொதிக்கவைத்து புல்லரிசியும் எள்ளும் நீரில் கழுவிக் களைந்து உள்ளே போட்டனர். அன்னம் கொதிக்கத் தொடங்கியதும் ஐந்துவகை காய்களை உள்ளே போட்டனர். பலியன்னங்களுக்கே உரிய கறைமணம் எழத்தொடங்கியது. புகையை காற்று வடக்காக அள்ளிக்கொண்டு சென்றது. காற்று நின்றபோது புகை சூழ யுதிஷ்டிரன் இருமினார்.
தொலைவில் கொம்பொலி கேட்டது. திரும்பி நோக்கிய உஜ்வலன் “மூதரசர்” என்றான். ஒரு இரட்டைக் குதிரைத்தேர் வந்து நின்றது. அதன் முன் கொம்பூதியபடி வந்தவர்கள் முன்னால் வந்து நிலைகொண்டனர். தேருடன் நடந்துவந்த யுயுத்ஸு பின்பக்கம் சென்று படிகளை பொருத்தினான். தேருக்குப் பின்னால் வந்த சங்குலன் திருதராஷ்டிரரின் தோள்களைப் பிடித்து மெல்ல இறக்கினான். அவர் நின்று உடலை நிமிர்த்தி தலையை உருட்டி ஏதோ சொன்னார். பின்னர் அவன் தோளைப்பற்றியபடி கால் வைத்து நடந்து வந்தார்.
அவனுடன் வந்த சஞ்சயன் திருதராஷ்டிரரின் இடப்பக்கம் நடந்தான். அவர்களுக்கு முன் யுயுத்ஸு நடக்க அவர் நின்று நின்று நடந்து வந்தார். கொம்புகளுடன் வந்தவர்கள் அங்கேயே நின்றுவிட சங்கு முழக்கியபடி ஒரு வீரன் மட்டும் முன்னால் வந்தான். திருதராஷ்டிரர் மூச்சிரைப்புடன் பல இடங்களில் நின்றார். அங்கிருந்த மணத்தை உணர விழைபவர்போல மூக்கைச் சுளித்தபடி சுற்றுமுற்றும் நோக்கியபின் மீண்டும் நடந்தார். கூடிநின்ற அனைவருமே அவரையே நோக்கிக்கொண்டிருந்தனர்.
கங்கைக்கரையை அடைந்ததும் அவரை படித்துறையில் அமரவைத்தனர். அவர் கைகளை மடியில் கோத்து தலைகுனிந்து அமர்ந்தார். சுகோத்ரன் அவருடைய உடலின் பெருந்தோற்றத்தை விழிமலைக்க நோக்கிக்கொண்டு நின்றான். பாதாளப் பெருநாகங்கள் பின்னிப்பிணைந்து ஓர் உடலென்றானதுபோல, அவை முறுகி நெளிந்து நெகிழ்ந்து மீண்டும் முறுகிக்கொள்வதுபோல. உள்ளே சிக்கிக்கொண்ட பாறை ஒன்றை அவை இறுகி உடைத்து தூளாக்கிவிட முயல்வதைப்போல. அல்லது அவை தங்களைத் தாங்களே நெரித்துக்கொள்கின்றன.
திருதராஷ்டிரர் மெல்ல முனக யுயுத்ஸு குனிந்து அவர் சொல்லை கேட்டான். பின்னர் ஓடிச்சென்று விதுரரிடம் கூற அவர் அருகே வந்து நின்றார். திருதராஷ்டிரர் கைநீட்டி விதுரரை தொட்டார். அவருடைய கைகள் விதுரரின் தலையையும் தோளையும் வருடின. விதுரர் அழுகையை அடக்கிக்கொண்டவராக கங்கையை நோக்கி முகம் திருப்பிக்கொண்டார். அமைச்சர் ஸ்ரீமுகர் ஓடி அருகணைய விதுரர் திருதராஷ்டிரரிடம் சொல்லிவிட்டு அப்பால் சென்று அவருக்கு ஆணைகளை இட்டார். அவர் பலிச்சோறு சமைக்கப்படும் இடம் நோக்கி சென்றார்.
சூதர்கள் அருகே நின்று மெல்லிய குரலில் வழிகாட்ட பாண்டவர்கள் அன்னத்தை சமைத்தனர். கலங்களிலிருந்து அன்னத்தை ஐந்து இலைகளில் படைத்தனர். அவற்றை ஏழு சிறு உருளைகளாக ஆக்கினர். அங்கே பேச்சென ஏதும் எழவில்லை. கங்கையின் அலைகளின் ஓசையும் அப்பாலிருந்து காட்டின் காற்றோசையும் எழுந்துகொண்டிருந்தன. எங்கோ முறுகக்கட்டியிருந்த எதுவோ அசைந்து அசைந்து முனகலோசை எழுப்பிக்கொண்டிருந்தது. நீரோட்டத்தில் இழுபட்ட படகா என சுகோத்ரன் திரும்பி நோக்கினான்.
கங்கைப்பரப்பில் ஒளி எழத் தொடங்கியிருந்தது. கரையோரக் காடு இருட்டுக்குள்தான் இருந்தது. கங்கையின் கரை முழுக்க மானுடர் செறிந்திருந்தனர். முதுசூதர் பாண்டவர்களின் குடித்தெய்வமான கொற்றவையை ஒரு கிடைக்கல் மேல் நீள்கல்லாக பதிட்டை செய்தார். அக்கல்லின்மேல் செந்நிறக் களபமும் குங்குமமும் பூசி செந்நிற பட்டுத்துணியை அணிவித்தார். செம்மலர்களைச் சூடி அவள் முன் சிறுநெய்விளக்கு ஒன்றை ஏற்றிவைத்தார். “குடித்தெய்வத்தை வணங்குக!” என்று சூதர் கூறியபோது யுதிஷ்டிரன் திரும்பி விழிகளால் துழாவி சுகோத்ரனை பார்த்தார். மெல்லிய குரலில் அவர் ஏதோ சொல்ல அங்கே நின்றிருந்த சிற்றமைச்சர் மாதவர் தலைவணங்கியபின் பதற்றத்துடன் ஓடி சுகோத்ரன் அருகே வந்தார். “அரசர் அழைக்கிறார், வருக!” என்றார்.
“செல்க!” என்று உஜ்வலன் சொன்னான். “சென்று அமர்க… நீர்க்கடன் செய்வதற்குத்தான் நாம் வந்துள்ளோம்.” சுகோத்ரன் தயங்கிய காலடிகளுடன் நடந்து மாதவருடன் சென்றான். அவனுடன் உஜ்வலன் உடன் சென்றான். சுகோத்ரன் அணுகுவதை முதுசூதர் ஓரவிழியால் நோக்கியபடியே தங்கள் சடங்குகளை தொடர்ந்தார்கள். சுகோத்ரன் யுதிஷ்டிரன் அருகே சென்று நின்றான். அவர் அவனிடம் அமரும்படி கைகாட்டினார். அவன் கைகூப்பியபடி நின்றான். அவர் அமர்க என மீண்டும் கைகாட்டினார். சகதேவன் அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அமரப்போகிறவன்போல கால்களை சற்றே மடித்தான்.
அக்கணத்தில் வாளை உரசி உருவும் ஓசையுடன் ஒரு சிறு பறவை ஊடாகச் சீறிப்பறந்தது. திடுக்கிட்டு சுகோத்ரன் திரும்பி நோக்கினான். அப்பறவையை நோக்க முடியவில்லை. அவன் திரும்பி நோக்கியபோது கரையில் ஒரு கலைவைக் கண்டான். அங்கே மீண்டும் ஒரு கொம்பின் ஒலி எழுந்தது. அனைவரும் திகைப்புடன் திரும்பி நோக்க ஒற்றைக்குதிரை பூட்டப்பட்ட தேர் வந்து நின்றது. கொம்பூதி மீண்டுமொருமுறை ஊதி நுனி தழைத்து உடல் வளைத்து அகன்றான். தேரின் திரையை விலக்கி பூர்ணை இறங்கினாள். தொடர்ந்து இன்னொரு இளம்சேடி இறங்கி நின்றாள். இருவரும் உள்ளே கைநீட்டிப் பற்றி மிக மெல்ல குந்தியை இறக்கினார்கள். கூட்டத்திலிருந்து திகைப்போசை எழுந்தது.
விதுரர் பரபரப்புடன் சூழநோக்க ஸ்ரீமுகர் அருகே ஓடிவந்தார். அவர் விரைந்த சொற்களில் ஆணையிட ஸ்ரீமுகர் உடல் குலுங்க குந்தியை நோக்கி ஓடினார். விதுரர் யுதிஷ்டிரனின் அருகே சென்றார். யுதிஷ்டிரன் எழமுயல முதுசூதர் “சடங்கின் நடுவே எதன்பொருட்டும் எழலாகாது, அரசே” என எச்சரித்தார். யுதிஷ்டிரன் தவிப்புடன் அமர்ந்துகொண்டார். விதுரர் “அவர்கள் இங்கே வரட்டும், அரசே” என்றார். “அவர்கள் இங்கே வரலாமா?” என்றார் யுதிஷ்டிரன். “வரலாகாது, ஆனால் வந்தபின் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார் விதுரர்.
குந்தி மிகமிக மெல்ல வந்துகொண்டிருந்தாள். “எதற்காக வருகிறார்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “எதன்பொருட்டென்றாலும் வந்துவிட்டார். அதை எதிர்கொள்வோம்” என்றார் விதுரர். “அவரால் இனி நன்றென ஏதும் நிகழ்வதற்கில்லை” என்றார் யுதிஷ்டிரன். “கடுஞ்சொல் உரைக்கும் இடமல்ல இது” என்றார் முதுசூதர். யுதிஷ்டிரன் சீற்றத்துடன் தலையை அசைத்தார். பின்னர் “நான் அவரை சென்று பார்க்கிறேன் என செய்தியனுப்புங்கள்” என்றார். பீமன் “மூத்தவரே, பொறுங்கள்” என்றான்.
ஸ்ரீமுகர் ஓடிவந்து “அமைச்சரே, இங்கே வரவேண்டியதில்லை, அரசரே அவரைப் பார்க்கவருவார் என்று அரசியிடம் சொன்னேன். அரசி என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த முதுசேடி அரசி இங்கே வரவே விழைகிறார் என்றாள்” என்றார். “வரட்டும்” என்றார் விதுரர். “என்ன இது, அமைச்சரே? என்ன நிகழ்கிறது இங்கே? நீர்க்கடன் என ஒன்று நிகழுமா இல்லையா?” என்றார் யுதிஷ்டிரன். சினத்தில் அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். பீமன் “மூத்தவரே, சொல் காக்க!” என்றான். யுதிஷ்டிரன் உறுமலோசையை எழுப்பினார்.
குந்தி நின்று விழப்போகிறவள் என சாய பூர்ணை பிடித்துக்கொண்டாள். “அவரால் நடக்க இயலாது. அவருடைய உடலில் உயிர் தொற்றி நிற்கிறது… ஏன் இத்தனை நீண்ட நடை? நான் எழுந்து செல்கிறேன்” என்றார் யுதிஷ்டிரன். “என்ன ஆகும்? அனைத்துச் சடங்குகளையும் மீண்டும் செய்யவேண்டும், அவ்வளவுதானே?” முதிய சூதர் “அல்ல, அது மட்டும் போதாது. இங்கே நீத்தோர் வந்து கூடியிருக்கிறார்கள். அவர்களின் கண்களும் செவிகளும் நாவுகளும் காத்திருக்கின்றன. அவர்களை உதறிவிட்டுச் செல்வதென்றால் அவர்கள் அதை ஏற்கவேண்டும். மீண்டும் அழைத்தால் அவர்கள் வரவேண்டும்” என்றார்.
“என் ஊழ் இது” என்று யுதிஷ்டிரன் உடைந்த குரலில் சொன்னார். “மூதாதையருக்கும் நீத்தார்க்கும் நீர்க்கடன் செய்யக்கூட தகுதியற்ற பழியன் ஆகிவிட்டிருக்கிறேன். இப்புவியில் என்னைப்போல் கீழோன் எவருமில்லை.” அவர் விம்மி முகம் தாழ்த்திக்கொள்ள எவரும் எதுவும் சொல்லவில்லை. சுகோத்ரன் நடுங்கிக்கொண்டு நின்றிருந்தான். அந்தப் பறவை எது என அவன் எண்ணம் தவித்தது. அது மெய்யாகவே பறவையா? பிறிதொரு பறவையும் அங்கே எங்கும் இல்லை. அது ஓர் ஒலி உடலென எழுந்தது.
குந்தி அணுகிவர அவர்கள் அவளை விழிமலைத்து நோக்கி நின்றனர். அவள் ஒற்றை அடிகளாக வந்துகொண்டிருந்தாள். வெண்ணிற புகைச்சுருள்போல எடையற்றிருந்தாள். சில தருணங்களில் அவள் காற்றிலாடுவது போலிருந்தது. சில தருணங்களில் அவள் உருவழிந்து வெளியில் கரைந்துகொண்டிருப்பது போலிருந்தது. வெண்ணிறக் கொடிபோல நின்ற இடத்திலேயே துவள்வது போலிருந்தது. நோக்கி நோக்கி சித்தம் எடைகொண்டது. அவன் நோக்கை விலக்கிக்கொண்டு கங்கையை பார்த்தான். மீண்டும் நோக்கியபோதும் அவள் வந்துகொண்டிருந்தாள்.
குந்தி அருகணைந்தபோது அவன் உளம்களைத்து சலிப்புற்றுவிட்டிருந்தான். அங்கிருந்த அனைவருமே அவ்வண்ணம் ஆகிவிட்டிருந்ததை உடல் தளர்வுகள் காட்டின. குந்தி நின்றபோது அவள் கால்கள் தரையில் தொடவில்லை. இரு சேடியரும் அவளை தோள்பற்றித் தாங்கியிருந்தார்கள். அவள் மயங்கி விழிமூடி அவர்களின் மேல் படிந்திருந்தாள். பின்னர் மெல்ல முனகினாள். அவர்கள் அவளை மேலும் சுமந்து முன்னால் கொண்டுவந்தனர். அவள் முனகிக்கொண்டே இருந்தாள். தீராப் பெருவலி கொண்டவள்போல.
அவள் உடலெங்கும் மெல்லிய தசைத்துடிப்பு இருந்தது. மெலிந்து நரம்புக்கொத்துபோல் ஆகிவிட்டிருந்த கைகள் முறுக்கிக் கொண்டிருந்தன. உள்ளங்கைகள் வாடிக்கூம்பிய மலர்கள்போல உள்நோக்கித் திரும்பி சுருண்டிருந்தன. கால்களும் அவ்வாறே முறுகியிருக்க இரு பாதங்களும் வெவ்வேறு திசைகளில் திரும்பியிருந்தன. அவள் முகத்தின்மேல் மேலாடை விழுந்து கிடந்தது. அவளை ஏந்தி வந்த பூர்ணையின் விழிகள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன.
பூர்ணை குந்தியை கால்களில் நிறுத்தி ஒற்றைக்கையால் பற்றிக்கொண்டாள். “அரசே, பேரரசி குந்தி உங்களிடமும் இங்கே கூடியிருக்கும் அனைவரிடமும் ஒன்று சொல்ல விரும்புகிறார்” என்றாள். கைகூப்பியபடி அமர்ந்திருந்த யுதிஷ்டிரன் அறியாமல் எழப்போக முதுசூதர் கையமர்த்தி அமரச்செய்தார். விதுரர் “கூறுக, அரசி!” என்றார். முதுசூதர் “இது ஈமநிலம். இங்கே நீத்தாருக்குரிய சொற்களன்றி எதுவும் சொல்லப்படலாகாது. இடுகாட்டிலும் ஈமநிலத்திலும் எடுக்கப்படும் வஞ்சினங்கள், விடுக்கப்படும் ஆணைகள் எவையும் நிலைகொள்ளவேண்டிய தேவையில்லை” என்றார்.
குந்தி மெல்லிய குரலில் ஏதோ சொன்னாள். பூர்ணை “அரசி ஈமநிலத்திற்குரிய சொற்களைச் சொல்லவே வந்திருக்கிறார்” என்றாள். பின்னர் அவள் கைகாட்ட ஏவலன் ஒருவன் நீர்க்குடுவையுடன் ஓடிவந்தான். அதை அவள் குந்தியின் வாயருகே நீட்டினாள். அவள் முலைக்காம்பை நாடும் கைக்குழவி என வாய் நீட்டி அதனைப் பற்றி உறிஞ்சினாள். நாலைந்து மிடறு உண்டதும் கண்களை மூடிக்கொண்டாள்.
அவள் முகத்திரை விலகி பின்னால் சரிந்தது. ஒடுங்கி வற்றிவிட்டிருந்த முகம் மிகமிகச் சிறிதாகத் தெரிந்தது. கன்னங்கள் குழிந்து வாய் முன்னால் நீட்டியிருந்தது. உதடுகள் இருப்பதாகவே தெரியவில்லை. சிறிய மூக்கு வெண்மெழுகாலானதுபோலத் தோன்றியது. அவள் கண்களை மூடி நின்றாள். நெற்றியின் இருபுறமும் நீலநரம்புகள் துடிப்பது தெரிந்தது. கழுத்தின் நரம்புகள் அசைந்தன. குரல்வளை பதைத்தது.
முனகலோசை எழுந்ததும் பூர்ணை அவளை நோக்கி குனிந்தாள். குந்தி எதிர்பாராதபடி தெளிவான குரலில் “யுதிஷ்டிரா, என் வயிற்றில் பிறந்த உன் தமையன் கர்ணனுக்கும் உரிய நீர்க்கடன்களைச் செய்க!” என்றாள். யுதிஷ்டிரன் கைகளைக் கூப்பியபடி, ஒடுங்கும் தோள்களுடன், நடுங்கும் உதடுகளுடன் கேட்டு அமர்ந்திருந்தார். “அனைவரும் அறிக… இதை இவ்வுலகே அறிக! நான் ஈன்ற மைந்தன் கர்ணன். கதிரவனை நோற்று என் வயிற்றில் அவனை ஏந்தி பெற்றெடுத்தேன்.”
அவள் குரல் நடுக்குடன் மேலும் ஓங்கியது. “அஸ்தினபுரியின் முதல் மைந்தன் அவனே. மணிமுடிக்குரியவனும் அவனே. அவன் அதை அறிந்திருந்தான். அவனிடம் நான் சென்று இரந்து பெற்ற இறுதிக்கொடையே பாண்டவர்களின் போர்வெற்றி. அவர்களின் உயிர் அனைத்தும் தமையன் தம்பியருக்கு அளித்த பரிசு மட்டுமே.” பீமன் எழுந்துவிட்டான். முதுசூதர் கைநீட்ட அவன் அவரை கையை அசைத்து விலக்கினான். அர்ஜுனன் தலைகுனிந்து நிலம்நோக்கி அமர்ந்திருந்தான். சகதேவனும் நகுலனும் கைகளை பற்றிக்கொண்டார்கள்.
“குடியச்சத்தால் அவனை நான் துறந்தேன். முடிவிழைவால் அவனை மறந்தேன். அவனுக்கு நான் முலையூட்டவில்லை. ஓர் இன்சொல்கூட கூறவுமில்லை. இன்று இந்த ஈமநிலையில் இந்தக் குடியவைமுன் சொல்லும் இச்சொற்களே என் மைந்தனுக்கு, என் மைந்தர்களில் தலைமகனுக்கு, நான் செய்யும் ஒரே கடன். அவன் இவ்வன்னையை பொறுத்தருளட்டும். தன் இளையோரை வாழ்த்தட்டும். விண்ணில் தன் மூதாதையருடன் அவன் நிறைவுற்று அமரட்டும்.” அவள் கைகூப்பினாள். விழிகள் வறண்டிருந்தன. செல்வோம் என தலையசைத்தாள். பூர்ணை அவளை பற்றிக்கொண்டாள். அவர்கள் திரும்ப நடந்தனர்.
யுதிஷ்டிரன் பெருமூச்சொலி எழுப்பினார். ஏதோ சொல்லவருபவர்போல விம்மி ஒரு விக்கலோசையுடன் இடப்பக்கமாகச் சரிந்து நினைவழிந்து விழுந்தார். சூதர்கள் அவரை நோக்கி கூடி குனிய “விலகுக… ஒன்றுமில்லை, விலகுக!” என்றார் விதுரர். அச்செய்தி ஒரு முழக்கமாக அங்கே கூடியிருந்தவர்கள் நடுவே பரவுவதை கேட்கமுடிந்தது. எதையும் உணராதவளாக இரு சேடியரால் தாங்கப்பட்டு குந்தி தன் தேர் நோக்கி சென்றாள்.