சுதந்திரத்தின் நிறம்
நுழைவு
காந்தியம் துளிர்க்கும் இடங்கள் – செந்தில் ஜெகன்நாதன்
தன்னறம் – கடிதம்
பூதான் சாதி
திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்
ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி
ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
லாரா அவர்களின் “சுதந்திரத்தின் நிறம்” படித்து முடித்தேன் – உணர்வுபூர்வமானதாக அதே நேரத்தில் சாமான்யர் ஒரு போதும் நெருங்கவியலாத ஒரு லட்சிய வாழ்வின் முழுமை மலைப்பை தந்தது , ஒரு போதும் எனக்கு சாத்தியப்படாத வாழ்க்கை முறை குறித்த ஏக்கமும் சலிப்பும் சேர்ந்து கொண்டது.
வாழ்வின் ஆதார தேவைகளான உணவு உடை உறைவிடம் , அன்பு தேவைகள் பூர்த்தியாகும் விதம், உபரி நேரம் செலவிடப்படும் விதம் , அசையும் அசையா சொத்துக்களின் மீது உள்ள மோகம், இவ்விஷயங்களை சம காலத்தில் உள்ள நடப்புகளையும் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியரின் வாழ்வுடன் ஒப்பிட்டால் மலைப்பாக இருக்கிறது.
சுய தேவைகள் என்பது மிக மிக குறைவானதொரு அளவிலேயே கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியர் வாழ்ந்திருக்கின்றனர்.
உணவு விஷயத்தில் , ஒரு மசால் வடையை கூட வேண்டாம் என்று சொல்ல மனது வருவதில்லை – ஆயிரம் மசால் வடைகளுக்கு பிறகும்,
இதே போன்று உடை உறைவிடம் சொத்து முதலிய விஷயங்களில் “எவ்வளவு வேண்டும்” என்ற கேள்விக்கு இறுதியான விடை காந்தியத்தில் இருப்பதாகவே நம்புகிறேன் – அநேக கோட்பாடுகள் போல் அறிவுஜீவிகளில் தொடங்கி மேலிருந்து கீழு என்னும் போக்கு இல்லாமல் தற்சுட்டுவதால் மேலே பேசிக்கொண்டே செல்ல இடமில்லலால் செயலிலேயே முழு சாரமும் இருக்கிறது – தற்சுட்டுவதாலே பெரும்பாலும் தூற்றப்படுகிறது –
சிவராம் காரந்த் அவர்களின் சுயசரிதையில் அவர் குறிப்பிடுவதும் இதையே -எதிலும் செட்டில் ஆகாமல் தொடர்ந்து இயங்கி கொண்டே இருப்பது – பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் தொடர்ந்து இயங்கிய சிவராம் அவர்களும் காந்தியத்துடன் பல இடங்களில் முரண் பட்டாலும் சுய தேவைகள் என்று வருகையில் பெரிதாக அலட்டிக்கொள்ளாத தன்மை , வெறும் கஞ்சி மாவுடன் ரொட்டி மாவுடனும் நடையாய் நடந்த நினைவுகள் மிகவும் மனதை கனக்க செய்தது
வினோபா பாவே போன்ற தூய காந்தியத்திலிருந்து முரண் பட்டாலும் ஜெகந்நாதன் தம்பதியர் யாரையும் எந்த துருவப்படுத்தலுக்கும் இடமளிக்காது கண்ணெதிரே நடைபெறும் விஷயங்களுக்காக நடைமுறை தீர்வுக்காக தொடர்ந்து இயங்கி கொண்டே வந்துள்ளனர்
தமிழகத்தில் பிராமண X இடைச்சாதி X தலித் என்ற துருவப்படுத்தல் ஊடக தளங்களிலும் சில நேரங்களில் அறிவுஜீவிகளின் சொல்லாடல்களிலும் வெளிப்படுகிறது – காந்தியம் சொல்லும் சமரச வழி செயல் வழி இவ்வனைவரையும் இணைக்கும் ஒரு அற்புத சரடு – சுதந்திர வேட்கையின் போது அனைத்தையும் சேர்த்து கட்டிய இந்த அற்புதம் யந்திர மயமாக்கல் மற்றும் அள்ளிப் பதுக்கும் நுகர் பண்பாட்டை , அர்த்தமற்ற துருவப்படுத்தும் சொல்லாடல்கள் அளிக்கும் பாவனைகளை உடைத்தெறிய வல்லது –
காந்தி கூறிய ஒரே ஒரு சொல் லட்சுணம ஐயர் வாழ்நாள் லட்சியம் ஆனது – வினோபா பாவே அவர்களின் பூதான் நடை பயண மற்றும் கிராமங்களில் மக்களுடன் உரையாடுவதுவதன் சித்திரம் அற்புதம் – அவர் ஒரு தேவதூதர் போல் மனதில் பதிகிறார் வினோபா பாவே – லாரா / மகாதேவன் அவர்கள் எழுத்து நடை நன்கு கூடி வந்திருக்கிறது – ஒரு நல்ல திரைக்கதையின் அம்சம் கூடி வந்துள்ளதால் இந்நூல் ஒரு கலை வெற்றியும் கூட.
கிருஷ்ணம்மாள் அவர்கள் இயற்கையுடன் ஒன்றி ஒவ்வொரு நாளையும் தொடங்குவதாக கூறுகிறார் – இது நவீன நகரங்களில் வாழும் அனைவரும் அறிய வேண்டிய ஒரு சிறிய செயல்பாடு – நவீனம் அளிக்கும் தனிமையை போக்க வல்லது இயற்கை – கை எட்டும் தூரத்தில் உள்ள இயற்கையே – கவிஞர் சங்கர் ராமசுப்பிரமணியன் கூறும் நகராக காட்சிகளை – இப்பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை என்று உணரும் அற்புத நேரங்கள்
புத்தகத்தின் தலைப்பு மிகவும் பிடித்திருந்தது – நான் இப்படி வகுத்துக் கொள்கிறேன் யாரையும் பெரிதாக சாராமல் அதே நேரம் கூட்டு வாழ்க்கையில் குறைவான சுய தேவைகள் மூலம் , செயல் மூலம் உள்ளொளி காண்கையில் தெரியும் நிறம் எதுவோ அதுவே சுதந்திரத்தின் நிறம்.
அன்புடன்
மணிகண்டன்