கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு கவிஞர் இசை வருகிறார் என்று அறிந்தவுடன் அவரது நூல்களை சிங்கப்பூர் நூலகங்களில் தேடினேன். ‘சிவாஜி கணேசனின் முத்தங்கள்’, ‘லைட்டா பொறாமைப்படும் கலைஞன்’ இந்த இரண்டு நூல்கள்தான் இருந்தன. முதன் முதலில் ஒரு கவிஞனை அவனது கவிதை நூல் வழியாகத்தான் அணுக வேண்டும், இல்லாவிட்டால் தெய்வ குற்றமாகிவிடும் என்று எப்போதோ, யாரோ என் மனதில் ஏற்றியிருந்த (மூட)நம்பிக்கையால் ‘சிவாஜி கணேசனின் முத்தங்கள்’ நூலை எடுத்து வந்தேன்.

நான் ஒன்று நினைக்க தெய்வம் வேறு மாதிரி நினைத்துவிட்டது. ‘சிவாஜி கணேசனின் முத்தங்கள்’ நூலில் அவர் எழுதியுள்ள என்னுரையை முதலில் வாசித்தேன். திரும்ப, திரும்ப வாசித்தேன். நண்பர்களிடம் சொல்லி பரவசப்பட்டேன். அது உரைநடை வழியாக இசை என்ற கவிஞனை அடைந்ததால் வந்த பரவசம். சாமி கண்ணைக் குத்தினாலும் பரவாயில்லை என்ற முடிவோடு அவரது கட்டுரைத் தொகுப்பான ‘லைட்டா பொறாமைப்படும் கலைஞனை’ வாசிக்கத் தொடங்கினேன். நான் கவிதையை விட உரைநடையில் அதிகம் புழங்குபவள் என்பதால் இசையின் கட்டுரைகள் என்னை மிகவும் வசீகரித்தன. அந்த வசீகரம்தான் அவரது கவிதை உலகத்திற்கு என்னைக் கை பிடித்து அழைத்துச் சென்றது.

நான் கவிதை எழுதுபவள் கிடையாது (இதை Disclaimer ஆக சொல்லிவிடுவது நல்லது என நினைக்கிறேன்). ஆனால் நவீன கவிதைகளை வாசிப்பவள். ‘நவீன கவிதை வாசிப்பு’ என்று வரும்போது எனக்கு ‘ரஷோமான்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிதான் நினைவுக்கு வரும். இது ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசேவா இயக்கிய படம் (அப்பாடா…. நானும் உலக திரைப்படம் பார்ப்பவள் என்பதை வரலாற்றில் பதிவு செய்துவிட்டேன்). குதிரையில் காட்டைக் கடந்து கொண்டிருக்கும் வீரனையும் அவனது மனைவியையும் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் திருடன் பார்க்கும் காட்சிதான் அது.

அந்த வீரனைப் போலத்தான் ஒவ்வொரு நவீன கவிஞனும் தனது கவிதையை மொழி என்னும் குதிரையில் ஏற்றி அழைத்து வருகிறான். மரத்தடியில் ஒரு வித அலட்சியப் போக்குடன் படுத்திருக்கும் வாசகனுக்கு குதிரை மீது ஒய்யாரமாக அமர்ந்து பவனி வரும் கவிதையை அனுபவிக்க சில விஷயங்கள் அவசியமாகின்றன. முதலில் கவிதை கண்ணுக்குத் தெரியும் வகையில் சரியான போஸில் படுக்க வேண்டியிருக்கிறது. குதிரை சரியான வேகத்தில் அவனைக் கடக்க வேண்டியிருக்கிறது. அடர் வனத்தின் மரங்களுக்கிடையே அலைபாயும் மென் ஒளி அவனது முகத்தில் படர வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியம் சரியான நேரத்தில் இளந்தென்றல் வீசி கவிதையை மூடி இருக்கும் மென் திரையை விலக்கி ஓர் அற்புத தரிசனத்தைத் தர வேண்டியிருக்கிறது. இந்த விஷயங்களின் டைமிங் கொஞ்சம் முன்னே பின்னே ஆனால் கூட வாசகன் “அட போப்பா” என்று கூறியவாறு ஒருவித அலுப்புடனும் சலிப்புடனும் திரும்ப படுத்து தூங்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

ஆனால் இசையின் கவிதைகளை வாசிக்ககூடிய வாசகன் ஒருபோதும் அப்படியெல்லாம் தூங்கிவிட முடியாது என்பதுதான் அவரது தனித்துவம். ஏனென்றால் அவர் தனது கவிதையை குதிரை மீது ஏற்றி மென் திரை போட்டு மூடி எடுத்து வருவதில்லை. தலையில் சும்மாடு கட்டி ஒரு பானை பனங்கள் போல தனது கவிதைகளைத் தானே சுமந்து வந்து வாசகனின் அருகில் அமர்ந்து “எதுக்கு தோழர் இப்படி சலிச்சுக்கிறிங்க? இந்த கள்ளைக் குடிங்க” என்று கூறியவாறு சிறு கலயத்தில் அவனுக்கு ஊற்றிக்கொடுத்து, குடித்து முடித்துவிட்டு பைத்தியக்காரன் போல சிரிக்கும் அவனோடு சேர்ந்து சிரித்து, துக்கம் பீறிட அழும் அவனோடு சேர்ந்து அழுது, “ஒண்ணுமே புரியலைப்பா” என்று பிதற்றும் அவனோடு சேர்ந்து “எனக்கும்தான் நண்பா. எல்லாமே ஒரே கொழப்பமா இருக்கு” என்று பிதற்றி “என்னதான்பா செய்யுறது?” என்று அவன் பரிதாபமாக கேட்கையில் “வாங்க ட்யூட்! ஒரு குத்தாட்டம் போடலாம்” என்று இசை அழைக்கையில் வாசகன் எப்படி தூங்க இயலும்?

அன்றாடங்களை, சராசரிகளை எழுதுவது நவீன படைப்பாளியின் வேலை அல்ல  என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுவார். அப்படி என்றால் தனது தினசரிகளை ஒன்று விடாமல் கவிதை ஆக்கும் இசை நவீனத்திற்குள் வரமாட்டாரா என்ற கேள்வி எழாமலில்லை. ‘மகிழ்ச்சியான மனிதன்’ என்ற அன்டன் செகோவ் சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது. தேன்நிலவுக்கு தனது மனைவியோடு ரயிலில் பயணிக்கும் கதை நாயகன் தனது பழைய நண்பனைச் சந்திக்கிறான். மகிழ்ச்சியாக இல்லாதது மனிதனின் குற்றமென்றும், இந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானால் கூட மகிழ்ச்சியை இழக்கமாட்டேனென்றும் சொல்லிக் கொண்டு வரும் அவன் தான் ரயில் மாறி ஏறிவிட்ட உண்மை தெரியவரும்போது முகம் வெளுக்க தலையைப் பிடித்துக்கொண்டு தன்னைத்தானே முட்டாள், முட்டாளென திட்டிக்கொள்கிறான். மனைவி தனியாக அந்த ரயிலில் பயணிக்கிறாளே, கையில் காசு இல்லையே என்று புலம்பித் தவிக்கிறான். ஒரு சராசரி நிகழ்வைப் பேசும் இக்கதையில் செகோவ் தனக்கே உரிய அங்கதத்துடன் மனிதனின் அற்பத்தனத்தை அம்பலப்படுத்துகையில் கதை வாசகனை வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.

அசோகமித்திரனின் ‘விடிவதற்குள்’ சிறுகதை, இரவு கண் விழித்து தண்ணீர் பிடிக்கும் ஓர் அன்றாடத்தைப் பேசிக்கொண்டே வந்து இறுதியில் அத்தண்ணீரை கன்றுக்குட்டி குடிக்க அனுமதிக்கும் பங்கஜத்தின் வழி மனிதனின் மேன்மையை காட்டுகையில் வாசகனுக்கு நெகிழ்வான ஒர் அனுபவத்தை அளிக்கிறது. இது போலத்தான் இசையின் கவிதைகளும். அவை அன்றாடங்களின் மீது கட்டி எழுப்பப்பட்டாலும் வாழ்வின் அபத்தங்களை வாழ்பவர்கள் யாருமே மறுக்க இயலாதவாறு பகடியோடு முன்வைப்பதன் மூலம் நவீன இலக்கியமென்னும் சிம்மாசனத்தில் ஜம்மென்று உட்கார்ந்து கொள்கின்றன.

இசை எளிமையாக எழுதுகிறார் என்பதை மிக எளிதாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். எளிமை அத்தனை எளிதா என்ன? கவிதை என்ற பெயரில் வரும் கணக்கில்லா முகநூல் பதிவுகளிலிருக்கும் எளிமையும் இசையின் எளிமையும் ஒன்றா? முன்னவை எளிதான எளிமை என்றால் இசையுடையது கடின எளிமை எனலாம். அவரது கவிதைகளில் பொதுவான அம்சம் பகடி. எழுத்தில் பகடி என்பது அத்தனை இலகுவானதா? கவிதை என்ற உறைக்குள் எளிமை, பகடி என்ற இரண்டு வாள்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு முறை வீசும்போதும் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வீசும் கலையை அறிந்தவராக அவர் இருப்பதால்தான் அவரது கவிதைகளின் வீச்சு வீரியமாக இருக்கிறது.

என்னோடு ஐந்தாம் வகுப்பு வரை அன்பு ராஜா என்றொரு மாணவன் படித்தான். மிக, மிக குறும்புக்கார பையன். ஆனால் அவனை விரும்பாத ஆசிரியர்கள் கிடையாது. அவனது சேட்டைகளை, விஷமத்தனங்களை ரசித்து, பேசி மகிழ்வார்கள். என்றாவது ஒருநாள் அவன் அமைதியாக இருந்தால் “என்னாச்சு அன்பு! உடம்பு சரியில்லையா?” என்று அக்கறையோடு விசாரிப்பார்கள். இசை தனது கவிதைகளில் தீவிர விஷயத்தைப் பேசுகையில், பகடி அற்ற ஒப்பாரியாக அல்லது கோபமாக அது இருக்கையில் “என்னாச்சு இசை! உடம்பு சரியில்லையா?” என்று அதே பதற்றத்துடனும் அக்கறையுடனும் விசாரிக்கவே மனது விழைகிறது. அன்பு ராஜாவின் அமைதியைப் போல பகடி ராஜாவின் தீவிரத்தையும் தாங்கிக்கொள்ள இயலவில்லை. “இது சரியா? தவறா?” என்ற விவாதத்திற்குள் போவதை விட பகடி எழுதும் கவிஞனுக்கு ஏற்படும் துர்பாக்கியம் இது என்று கடப்பதுதான் ஒரே வழி.

ஒரு கவிஞனின் கவிதைகளை ஒட்டுமொத்தமாக ஒரு சட்டகத்திற்குள் அடைத்துவிட முடியாது. இது போன்ற சட்டகங்களை கவிஞன் அறவே விரும்புவதில்லை என்றாலும் ஒரு வாசகன் தனக்கு விருப்பமான வகையில் சில, பல கவிதைகளை கருணை, காதல், காமம், மரணம், அதிகார எதிர்ப்பு, குழந்தைமை, வாழ்வின் குரூரம், பகடி இப்படி ஏதாவது ஒரு சட்டகத்திற்குள் அடைத்து தொகுத்துக்கொள்ளும் உரிமை உள்ளவன்தானே! பெண் விடுதலை கிடைத்துவிட்டதா, இல்லையா என்ற குழப்பம் எப்போதுமே எனக்கு உண்டு. தெளிவற்ற ஒரு சமூக சூழலில் என்னைப் போலவே தவிக்கும், தத்தளிக்கும், தடுமாறும் இன்றைய பெண்களின் பிரச்சனைகளை அவர்களது உளவியலை ஓர் ஆணால் புரிந்து கொள்ள இயலுமா என்ற கேள்வியோடு இசையின் படைப்புகளை அணுகி நான் உருவாக்கி கொண்ட சட்டகம் “நவீன பெண்களின் பாடுகள்”.

‘தேன்மொழிகளின் ஸ்கூட்டிகள்’ என தலைப்பிட்ட கவிதையில் ‘அவள் ஸ்கூட்டி வாங்கிக்கொண்டாள். அது இல்லாத இடத்திலிருந்து இருக்கும் இடமெங்கும் அவளைக் கூட்டிப்போனது’ என்ற வரி எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஸ்கூட்டி ஓட்டவே அனுமதிக்கப்படாத பெண்களையும், ஸ்கூட்டியைத் தனக்குப் பின்னால் அமர்ந்திருப்பவரின் விருப்பத்திற்காக மட்டுமே ஓட்டும் பெண்களையும், பறக்கும் வேகத்தில் ஓட்ட எத்தனித்து பள்ளத்தில் விழுந்த பெண்களையும், நிதானமாக  ஓட்டினாலும் மற்றொருவரின் பிழையால் விபத்துக்குள்ளான பெண்களையும் இல்லாத இடத்திலிருந்து இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல கடவுள் விரைவில் வேறு ஏதாவது ஒன்றை சந்தையில் இறக்கி விடுவாராக.

‘வள்ளுவன் – வாசுகி – கிணறு’ கவிதையில் கணவன் அல்லாத வேறொருவனுடன் சல்லாபிப்பதாய் கனவு கண்டு தவிக்கும் பெண்ணுக்கு வள்ளவன்-வாசுகி கதையே கொடுங் கிணறாகி பயமுறுத்துகிறது. எழுத்தாளர் கணேசகுமாரன் ‘தடம்’ இதழில் எழுதி இருந்த ‘துர்சலை’ கதை நினைவுக்கு வருகிறது. நூறு சகோதரர்களோடு பிறந்த அவள் தான் காணும் எல்லா ஆண்களிலும் ஏதாவது ஒரு சகோதரனின் சாயலைக் கண்டு துயருறும் துர்பாக்கியத்தைப் பேசும் கதை. கனவில் காமத்தோடு தான் அணுகும் ஆடவன் தனது சகோதரனென அறிக நேர்கையில் சொல்ல இயலா வேதனையில் அவள் வெம்புகிறாள். புராணக் கதாபாத்திரத்தை நவீன காலத்திற்கேற்ப மீட்டுருவாக்கம் செய்திருக்கும் இக்கதையின் துர்சலையைப் போலத்தான் ‘வள்ளுவன்-வாசுகி-கிணறு’ கவிதையிலும் அப்பெண் பதற்றமடைகிறாள். பதறும் இவளை நவீன பெண்களின் பிரதிநிதி என அறுதியிட்டுச் சொல்லாமென்றால் ‘இச்சா சக்தி’ கவிதை அறுதியைக் குலைத்துப் போடுகிறது.

 

இக்கவிதையில் ‘எனில், அந்த ராத்திரியில் நான் பக்கத்தில் இல்லாததுதான் பிழையா என்று கத்தினான். கண்களைத் தாழ்த்தியவாறு, “அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள்’ என்ற வரி ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் “எப்படி ஆரம்பிச்சதுன்னே தெரியலை. நாங்க மேட்டர் பண்ணிட்டோம்” என்று ஃபகத் பாசிலிடம் சமந்தா கூறுமிடத்தோடு சேர்த்து நவீன பெண்ணின் வேறொரு சித்திரத்தை நம்முன் கொண்டு வருகிறது. நவீன பெண்களது சுதந்திரமற்ற இருப்பையும், குழப்பங்களோடு கூடிய சுதந்திரத்தையும் ஓர் ஆணாக இசை மிகத் தெளிவாக புரிந்துகொண்டு தனது கவிதையில் பேசு பொருளாக்கி வெற்றி கண்டிருக்கிறாரென உறுதியாகச் சொல்லலாம்.

“எனது பொறாமைகளை அவிழ்த்து விடப்போகிறேன்”, “எல்லா அநீதிகளுக்கு எதிராகவும் இரண்டு முறை குரைத்துவிடும் நாய் நான்”, “கரணமிட்டுக் கையேந்தும் குரங்கு நான்”, “999 வாழ்க்கை வாழ்பவள் நான்”, “அப்பாக்களைச் சாமிக்கு கொடுத்த குழந்தைகளின் மீது இரக்கம் கொண்டு KIT-KAT வாங்கி கொடுத்தவள் நான்” இப்படி பலகாலமாக நான் மறைத்து வந்த உண்மைகளைத் தயக்கமே இல்லாமல் வெளியில் சொல்ல முடிவெடுத்துவிட்டேன். இப்படி நான் சொல்கையில் என்னை நோக்கி நீட்டப்படும் துப்பாக்கி  குண்டுகளிலிருந்து தப்பிக்க புல்லட் புருஃப் ஆடையாக இருக்கப் போவது இசையின் கவிதைகள்தான்.

“கவிதையெல்லாம் புல்லட் புரூஃபா?” என்று கேட்டு துப்பாக்கி வைத்திருப்பவன் சிரித்தால் எனக்கு முன் இசையை நிறுத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. கவிஞரே! தெரிந்தே செய்யும் இப்பிழைக்காக என்னை மன்னித்தருள்க. ‘காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீ’ என்று கவிதை எழுதி இதை உங்களால் எளிதில் கடந்துவிட இயலும். ஆனால் என்னைப் போன்ற எளிய உயிரினம் எண்ணெய் கொப்பரைக்குப் போகும் வழியில் தலையைப் போர்த்தியிருக்கும் சிவனாண்டியைப் போல அல்லாமல் தொப்பியைக் கழற்றிவிட்டு உங்களோடு நடனமாடிக்கொண்டு வர தற்போது உங்கள் முதுகுக்குப் பின்னால் ஒளியத்தான் வேண்டி இருக்கிறது.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58
அடுத்த கட்டுரைசுதந்திரத்தின் நிறம் – கடிதம்