யானை டாக்டர் – கடிதங்கள்

ராகுலும் யானைடாக்டரும்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

 

ராம் தங்கம் யானை டாக்டர் குறித்து எழுதிய கடிதம் வாசித்தேன்.

 

நான் யானை டாக்டர் முதலில் வாசிக்கும் போது அது என்னை கவரவில்லை. ஆனால் சில வருடங்களுக்குப் பின் இரண்டாம் முறை வாசித்த போது, பல இரவுகள் அதனுடன் கழித்தேன்.

 

பல சிறுகதைகளை வாசித்தாலும், யானை டாக்டர், நூறு நாற்காலிகள், ஊமைச் செந்நாய், புலிக்கலைஞன் போன்ற சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எதுவும் ஏற்படுத்தவில்லை..

 

நன்றி

அதிரன் சாா்த்தன்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

ராம் தங்கம்  யானை டாக்டர் குறித்து எழுதியிருந்த பதிவை வாசித்தேன்.  வாசிப்பில் ஆர்வமிருக்கும், இயற்கையை நேசிக்கும், அதன் அருமையை கொஞ்சமேனும் உணர்ந்தவர்களால் மறக்கவே முடியாது யானை டாக்டரை.

என் மகன்கள் இருவரும் யானை டாக்டரை நான் சொல்லச் சொல்ல கேட்கையில் 7 லும் 5 லுமாக படித்துக்கொண்டிருந்தார்கள். ஐந்தாம் வகுப்பில் அப்போது இருந்த தருண் யானையின் காலில் பீர் பாட்டில் குத்தி ஏறியதை கேட்டதும் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழத்துவங்கினான். அதுகுறித்தும் இன்னொரு கதையில் வரும் கேசவன் யானைக்குட்டியைபோலவே  வீட்டில் எல்லோரையும் தருண் முட்டித்தள்ளிக் கொண்டிருப்பதையும்  அவன் அக்கதையின் பின்னால் காட்டிலகா அதிகாரியாக வேண்டும் என்று முடிவு  செய்திருப்பதையும் அப்போது 7 ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சரண் உங்களுக்கு உடைந்த ஆங்கிலத்தில் எழுதியிருந்தான்.  நீங்கள் அவனுக்கு பதிலும் எழுதியிருந்தீர்கள் ’’உன் தம்பி சிறந்த காட்டிலகா அதிகரியாக வர வாழ்த்துகிறேன்’’ என்றும் சொல்லி இருந்தீர்கள். அக்கடிதம் தளத்திலும் பிரசுரமாயிருந்தது’’ஒரு சிறுவனின் கடிதம்’’ என்று.

இப்போது  ஒரு பன்னாட்டு உறைவிடப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் தருண் அக்கதையை ஒருபோதும் மறக்கவேயில்லை. இன்னும் அதே உறுதியுடன் தான் இருக்கிறான். இளங்கலை காட்டியல் மட்டுமே படிக்கப்போவதாக இருக்கிறான். கோவை விவசாயக்கல்லூரி, கேரளாவில் கண்ணூர், திருச்சூர், டேராடூன் என்று எல்லா இடங்களிலும் விண்ணப்பித்திருக்கிறான். அவனுக்கு அதிர்ஷ்டமிருப்பின அப்படிப்பில் சேர அவனுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும். எப்போதோ கேட்ட ஒரு கதையென்று யானை டாக்டரை அவனால் மறக்கவோ விட்டுவிடவோ முடியவில்லை என்பதில் எனக்கு ஆச்சர்யம் மற்றும் மிகுந்த மனநிறைவும் கூட. காட்டிலாகா அதிகாரியாக தருண் வரவேண்டும் என்றே நானும் மனதார விரும்புகிறேன்

அந்த கதைக்குப் பிறகு அவனுக்கு யானைகளின் மீது அபாரமான பிரியம் ஏற்பட்டுவிட்டது. யானை சிவா என அழைக்கப்படும் யானைகளின் காதலனான  என் மாணவன் ஒருவனும் அவனுக்கு முன்மாதிரி. சிவாவும் காட்டில் இருக்க பிரியப்பட்டு இப்போது காட்டில்தான் பணியில் இருக்கிறான். தருணுக்காகவே யானைகளை பார்க்க டாப்ஸ்லிப் சென்று வருவோம் எப்போது நேரம் கிடைத்தாலும்

சமீபத்தில் மூணாறு சென்றிருந்த போது அங்கு சுற்றுலாப்பயணிகள் யானை சவாரி  செய்யும் இடத்திற்கும் போயிருந்தோம்.. எப்போதும் தருண் யானைகளின் மீது அமருவதை விரும்பியதில்லை. ஓய்வின்றி யானைகள் நடந்துகொண்டே இருந்ததையும் அதில் ஒரு யானை  பயணிகள் அதன் மீது அமரும் இடைவேளையில், கால் வலிக்கும் போது நாம் செய்வதைப்போலவே காலை ஒசித்து நின்று தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டதையும் வேதனையுடன் கவனித்தான். யானைச்சவாரி செய்பவர்களின் உற்சாகத்தில் இவன் எரிச்சலுற்றான் ’’என்னத்தை இவங்க என்ஜாய் பண்ணறாங்கன்னே எனக்கு தெரியலைம்மா’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான்

அங்கு குழுமியிருந்த அவன் வயதினை ஒத்த கேரளப்பெண்களையோ யானைகளில்  சவாரி செய்யும் சிறுவர்களின் உற்சாக கூச்சல்களையோ  அவன் பார்க்கவில்லை. கருத்தாக யானைகளின் வால் முடிகளை 50க்கும் 100க்குமாக பாகன்கள் கத்தரித்து,  வந்திருந்த சில சுற்றுலா பயணிகளுக்கு விற்றுக்கொண்டிருந்ததையும்  முடிகளின்றி மொட்டையாகிக்கொண்டிருந்த இருந்த  யானை வாலையுமே புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான்..

ராம்தங்கம் ’’இனிவரும் காலங்களில் இக்கதையை படிக்கும் மாணவர்களினால் மாற்றம் வர வாய்ப்புண்டா’’? என்று உங்களிடம் கேட்டிருக்கிறார்.

வருமென்றுதான்  நான் நினைக்கிறேன் வரவேண்டும் என்றும் விரும்புகிறேன்

அன்புடன்

லோகமாதேவி

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57
அடுத்த கட்டுரைவெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு கூடலே’- ஆஸ்டின் சௌந்தர்