பகுதி எட்டு: விண்நோக்கு – 3
சுகோத்ரன் இருளில் மெல்லிய அசைவொன்று தெரிவதைக்கண்டு விழி கூர்ந்தான். அசைவு உருவென மாறுவதற்கு உள்ளம் சென்று அதைத் தொடவேண்டியிருக்கிறது. உரு பொருள்கொள்வதற்கு மேலும் ஒரு சிறு தாவல். விதுரர் என்று உணர்ந்ததும் அவன் எழுந்து நின்றான். மெல்லிய கூனலுடன், விரைந்த சிற்றடிகளுடன் விதுரர் நடந்து வந்தார். அவருடைய கால்களில் ஏதோ சிறு குறைபாடு இருப்பதுபோல் நடை ஒருபக்கமாக இழுத்தது. அருகணைந்து, நடந்து வந்ததன் அலுப்புடன் நீள்மூச்செறிந்து “விழித்திருப்பீர்களா என்ற ஐயம் ஏற்பட்டது” என்றார். “துயில்கொள்ள இயலவில்லை” என்று சுகோத்ரன் சொன்னான்.
“ஆம், இன்று இந்த பகுதியில் எவரும் துயில்கொள்வார்கள் என்று தோன்றவில்லை. அனைவருமே பதற்றத்திலிருக்கிறார்கள்” என்றார் விதுரர். “ஏன்?” என்று கேட்டான் சுகோத்ரன். அவனுக்கு அவர் கூறப்போவதில் ஆர்வமிருக்கவில்லை. அவரிடம் பேசவே பிடிக்கவில்லை. எவரிடமும் பேசப் பிடிக்கவில்லை. “மிகையான ஆட்சியின் சிக்கல்” என்றார் விதுரர். “ஒரு செயல் சிறப்பாக நடக்கவேண்டுமென்றால் முதன்மைமேலிடத்திலிருந்து மிகக் குறைவான ஆணைகள் இடப்படவேண்டும். வழிகாட்டுதல்கள் மட்டுமே அந்த ஆணையில் இருக்கவேண்டும். செயல்முறையை அதைச் செய்பவர்களே முடிவெடுக்கவேண்டும். செய்பவர்களுக்குள் முரண்பாடுகள் வரும். அவற்றை அவர்களே தீர்த்துக்கொள்ளவேண்டும். அதனூடாகவே அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுகொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் நிரப்பி இசைந்து ஓர் செயல்படும் அமைப்பாக மாறுகிறார்கள்.”
“மேலிடத்தில் இருந்து மிகையாக ஆணைகள் அளிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் இறுக்கமான செயல்முறைகள் அமைந்துவிடுகின்றன. மீற முடியாதவை. அவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தருணத்தில் அளிக்கப்பட்டவை. எனவே அவை பிறிதொன்றுடன் இசைவு கொள்வதில்லை. ஆகவே ஒவ்வொரு செயல்தளமும் பிறிதொன்றுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்வதே அறுதியானதென்றும், முறையான ஆணைப்படி இயங்குவதாகவும் எண்ணிக்கொண்டு பிறரை முழுமையாகவே புறக்கணிப்பார்கள்” என்று விதுரர் சொன்னார்.
அவனுக்கு ஆர்வம் வந்தது. “இங்கு இதை தெரிந்தவர் எவருமில்லையா?” என்றான். “யுயுத்ஸுவுக்கு தெரியும். நெடுங்காலம் என்னுடன் பணியாற்றியவன். ஆனால் அவன் இங்கு பெரிதாக எதுவும் செய்ய இயலாது. யுதிஷ்டிரன் அனைத்தையும் தானே செய்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி புதிய ஆணைகளை அளிக்கிறார். அந்த ஆணைகளை அவரே மாற்றுகிறார். அனைவராகவும் நின்று அவரே எண்ணி அனைத்தையும் முற்றாக வடித்துவிடுகிறார். முற்றாகவே வடித்துவிட்ட ஒன்று எப்படி பிழையாகும் என அவர் சினம்கொள்கிறார். முற்றாக வடிக்கப்பட்ட பின் அது இயங்கமுடியாது, பிழை என்று மட்டுமே அதில் இயக்கம் இருக்கமுடியும் என்று அவருக்குச் சொல்ல முடியவில்லை” என்றபடி விதுரர் திண்ணையில் சாய்ந்து அமர்ந்தார்.
அவர் அருகே சுகோத்ரன் அமர்ந்தான். “நாளைக் காலை சடங்குகள் தொடங்கவிருக்கின்றன. உண்மையில் இது ஒரு பெரிய நிகழ்வே அல்ல. அரசர்கள் ஐவர் நீர்க்கடன் அளிக்கிறார்கள். அதன்பின் இங்குள்ள படைவீரர்களும் ஏவலர்களும் பிறரும் நீர்க்கடன் அளிக்கிறார்கள். இதைவிட பலநூறு மடங்கு பெரிய நீர்க்கடன் நிகழ்வுகள் அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் பாரதவர்ஷம் முழுக்கவும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றை எவரும் ஆணையிட்டு ஒருங்கிணைத்து நடத்துவதில்லை. தன்னியல்பாகவே அவை நிகழ்கின்றன, நன்றாகவே முடிகின்றன” என்று விதுரர் சொன்னார்.
“பிறகு இங்கு மட்டும் ஏன் ஒருங்கிணைப்பு?” என்று சுகோத்ரன் கேட்டான். “ஒருங்கிணைக்காவிட்டால் ஒவ்வொன்றும் தன்னியல்பாக நிகழும். மேல்கீழ் என்னும் அடுக்கு உண்மையில் எவ்வாறோ அப்படி அமையும். அங்கே முறைமைகள் நிகழாது” என்றார் விதுரர். “சிதைவுகள் இருக்குமா?” என்றான் சுகோத்ரன். “இருக்காது. ஏனெனில் என்ன செய்யவேண்டுமென்பதிலும் எவ்வாறு அதிலிருந்து மீள்வதென்பதிலும் அங்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒரு தெளிவிருக்கிறது. அதற்கு ஊறு விளைவிக்கும் எதையும் செய்யக்கூடாது என்று அவர்கள் அறிவார்கள். ஆகவே முட்டி மோதி ஒருவரை ஒருவர் நிகர் செய்துகொண்டு ஒரு அமைப்பாக மாறி அச்செயலை செய்து மீள்வார்கள். மிகக் குறைவான குழப்பங்களும் அரிதாக சில முரண்பாடுகளும் மட்டுமே எழும்.”
“நான் வரும் வழியில் கங்கைக்கரை முழுக்க அவ்வாறு நீர்க்கடன்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதை கண்டேன். பலர் கங்கையில் விழுந்து உயிர் துறக்கிறார்கள் என்று அறிந்தேன்” என்று சுகோத்ரன் சொன்னான். “ஆம், அது அவர்களின் முடிவு. அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதையும் இந்நீர்க்கடனின் ஒரு பகுதியாகக் கொள்வதே முறையாகும்” என்றார் விதுரர். அவர்கள் அப்பேச்சால் இயல்புநிலைக்கு மீண்டுவிட்டிருந்தனர். சுகோத்ரன் முன்பிருந்த உள இறுக்கத்தை இழந்து தானும் உடலை எளிதாக்கி இயல்பாக அமர்ந்தான். விதுரர் பெருமூச்சுவிட்டார். இயல்படைந்ததுமே சுகோத்ரன் சோர்வையும் அடைந்தான்.
“போருக்குப் பிந்தைய தற்கொலைகள்… அதைப்போல விந்தையான பிறிதில்லை” என்று சுகோத்ரன் சொன்னான். “போருக்குப் பின் எஞ்சுபவர்களில் ஒரு பகுதியினர் தங்களை அழித்துக்கொள்கிறார்கள். இரு வகையில்” என்று விதுரர் சொன்னார். “களத்திலேயே உடனடியாக வாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சிக்கொள்பவர்கள் சிலர் உண்டு. பின்னர் ஏதோ ஒரு கணத்தில் உடனடியாக முடிவெடுத்து நீரில் பாய்ந்து மறைபவர்கள், எரிபுகுபவர்கள் என பலர் உண்டு. அது ஒரு உள அழுத்தத்தின் உச்ச வெடிப்பு. ஆனால் கொடியது ஒன்றுண்டு, கணந்தோறும் அத்துயரத்தை ஒத்திப்போடுதல். அதன் பொருட்டு ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொள்ளுதல். அகிபீனாவை, மதுவை, சிவமூலியை.”
“அது வெளித்தெரிவது. வெளித்தெரியாதவை மேலும் சில உண்டு” என்றார் விதுரர். “பலர் ஏதேனும் செயல்களை அவ்வாறு பற்றிக்கொள்கிறார்கள். தெய்வங்களைப் பற்றிக்கொள்பவர்களும் உண்டு” என்றார். “அது நன்றல்லவா?” என்றான் சுகோத்ரன். “இல்லை, அவ்வாறு எதையேனும் ஒன்றை பற்றிக்கொண்டு ஒன்றையே மிகுதியாக செய்பவர்கள் தங்கள் ஆளுமையை ஒடுக்கிக்கொள்கிறார்கள். கையையோ காலையோ சேர்த்துக்கட்டி நெடுநாட்கள் வாழ்வதுபோல அது. விரைவிலேயே அவர்கள் ஆளுமை குறுகிவிடுகிறது. அதுவும் ஒருவகையான தற்கொலைதான். போருக்குப் பின் பெரும்பாலானவர்கள் எவ்வாறோ குறுகிச் சிறுத்துவிடுகிறார்கள்” என்றபின் “பாண்டவர்களும் அவ்வாறே ஆகிவிடுவதற்கான வாய்ப்புகளே மிகுதி” என்றார் விதுரர்.
“ஐவருமா?” என்று சுகோத்ரன் கேட்டான். “ஆம், அவர்களுக்கு வேறு வழியில்லை” என்று விதுரர் கூறினார். சுகோத்ரன் பெருமூச்சுவிட்டான். “யுதிஷ்டிரன் நிலையழிந்திருக்கிறார். அவர் பிறப்பிக்கும் ஆணைகளிடம் எந்த ஒத்திசைவும் இல்லை. அதைக் குறித்து என்னிடம் ஏவலர்கள் வந்து முறையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். என் நாள் முழுக்க அவர் இடும் ஆணைகளுக்குள் எவ்வாறு ஒரு ஒத்திசைவைக் கண்டடைவது என்பதிலேயே செலவிடப்படுகிறது. அரசரின் ஆணையை தவிர்க்கும் ஆற்றல் எனக்கில்லை. அதை நான் இயற்றுவதும் கூடாது. ஆகவே அவருடைய ஆணைகளுக்குள் ஓர் இசைவு ஏற்படும்படி புதிய சில ஆணைகளை நான் இடவேண்டியிருக்கிறது. மிக எளிய ஒரு செயல் இவ்வாறு சில செயல்சார்ந்த முரண்பாடுகளினால் ஆற்றுவதற்கரிதாக மாறிவிட்டிருக்கிறது” என்றார்.
சுகோத்ரன் மெல்ல நகைத்து “இதை நான் தௌம்ரரின் கல்விநிலையத்தில் கற்றபோது சொல்வார்கள். எடையற்ற ஒரு பொருளை கீழே வைத்து ஐவர் அழுத்த ஐவர் தூக்கவேண்டும் என்பார்கள். எவராலும் அதை தூக்க இயலாது. அசைக்க கூட சில தருணங்களில் இயலாது” என்றான். “ஆம், அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று விதுரர் கூறினார். சுகோத்ரன் மேலும் சிரித்து “விந்தைதான். பல லட்சம் பேர் கூடி போரிட்டு வென்ற ஒரு பெருநிகழ்வு இங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு சின்னஞ்சிறு நிகழ்வை ஒருங்கிணைக்க தடுமாறிக் கொண்டிருக்கிறோம்” என்றான். “இன்றிருப்பவர்களே வேறு… போர் ஒரு சூளை… எரிந்து உருகி உருவழிந்தவர்கள் இங்கே இருப்பவர் அனைவரும்” என்றார் விதுரர்.
“இதற்குள் இப்போரின் பேருரு பற்றி முடிவிலாத கதைகளை சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டிருக்கிறார்கள். எங்கள் நிமித்திக நிலையில் அவ்வாறு பாடல்களை பாடுவதற்கும் போர்ப்பரணிகளை உருவாக்குவதற்கும் தடை உள்ளது. ஆயினும் ஒவ்வொருவரும் அதை கேட்க விழைகிறார்கள். எப்போதேனும் எவரேனும் சூதர் அவ்வழியாக வந்தால் அவரை இழுத்துக்கொண்டுவந்து அருகிலிருக்கும் காட்டில் அமர்ந்து இளைஞர்கள் கூடி சூழ்ந்து அதைக் கேட்டு மகிழ்கிறார்கள். உளம்கிளர்ந்து தங்களுக்குள் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றான் சுகோத்ரன்.
“ஏன் போர்ப்பரணிக்கு தடை?” என்று விதுரர் கேட்டார். “சூதர்களின் இரு பணிகள் இசைபாடுவதும் நிமித்திகம் நோக்குவதும். நிமித்தம் நோக்குபவனுடைய வழி வேறு, இசை பாடுபவனுடைய வழி வேறு. நிமித்தம் நோக்குபவன் புறத்தை முற்றாக மறுத்து உள்ளே குவியவேண்டும். இசைப்பாடகன் புறம் நோக்கி விரிந்துகொண்டே இருக்கவேண்டும். இசைப்பாடலுக்குச் செல்பவன் தன் நிமித்தத்தில் ஒரு பகுதியை இழந்தே அங்கு செல்கிறான் என்கிறார்கள். இங்கு என்ன நிகழ்கிறது என்பது ஒரு நிமித்திகனுக்கு எவ்வகையிலும் பொருட்டல்ல, இங்குள்ள அனைத்தும் கருக்கொள்ளும் அங்கு என்ன நிகழ்கிறது என்பதே அவனுடைய கணிப்பு. அங்கு நிகழ்வனவற்றின் நிழல்கள் தான் இங்கு ஆடுகின்றன என்று நிமித்தநூல்கள் கூறுகின்றன” என்று சுகோத்ரன் சொன்னான்.
சில கணங்கள் அவனை கூர்ந்து நோக்கிவிட்டு “மைந்தா, நீ நிமித்தநூல் கற்க செல்வதற்கு என்ன தேவை இருந்தது?” என்று விதுரர் கேட்டார். “அறியேன். அது நானறியா அகவையில் எந்தை எடுத்த முடிவு. நான் நினைவறிந்த நாள் முதலே தௌம்ரரின் கல்விச்சாலையிலேயே இருக்கிறேன்” என்றான் சுகோத்ரன். “அவருடன் அமர்ந்து நிமித்தநூலை பிறிதொன்றறியாமல் கற்றேன். இப்போது எண்ணுகையில் அவர் நிமித்தநூல்களை படித்துக் கொண்டிருக்கையில் அவர் முகத்திலிருக்கும் அந்தப் பெரும் உவகையை அருகிலிருந்து கண்டதுதான் எனக்கு அதில் ஆர்வத்தை உருவாக்கியது என்று தோன்றுகிறது. பிற தருணங்களில் எவரிடமும் அந்த பேருவகையை நான் கண்டதில்லை” என்றான் சுகோத்ரன்.
“மனிதர்கள் அறியும்தருணத்தில் அன்றி வேறு எப்போதும் அத்தனை மகிழ்ச்சியுடன் இருப்பதை நான் பார்த்ததில்லை” என சுகோத்ரன் தொடர்ந்தான். “உணவுண்கையில், விளையாடுகையில், போர் பயில்கையில், பெண்களுடன் விளையாடுகையில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்திருக்கிறேன். நான் என் தந்தையர் ஐவரையும் அரிதாகவே கண்டிருக்கிறேன். ஆகவே அவர்களை என் கற்பனையில் வரைந்துகொண்டேன். அம்பு தொடுக்கையில் வில்லவரிடம் கூடும் ஆழ்ந்த அமைதியே மூத்த தந்தை அர்ஜுனன். கதை சுழற்றுகையில் மூத்த தந்தை பீமசேனனின் உடலெங்கும் தசைகள் அலைகொள்வதை அத்தனை மல்லரிடமும் கண்டேன். அரசர் யுதிஷ்டிரன் நூல் நவில்கையில் அவர் முகத்தில் உவகையும் ஆவலும் திகைப்பும் மாறி மாறி எழுவதையும் குருநிலையிலேயே சிலரிடம் கண்டிருக்கிறேன். ஆனால் எந்தையின் உலகு தௌம்ரருடையது. அது நிமித்தநூல்களில் இருந்தது. ஒளியுடன் வெடித்து எரியத் தொடங்கிய ஒன்று அவ்வண்ணமே உறைந்து நின்றாற்போலிருக்கும் அவர் முகம்.”
“அது என் கற்பனைதான். நான் அந்நாட்களை எண்ணி எண்ணி வளர்த்து பெரிதாகப் புனைந்து கொண்டிருக்கிறேன் இன்று. சாளரங்களினூடாக ஆசிரியர் நூல்நவில்வதை நோக்கிக்கொண்டிருப்பேன். அது அவர் மட்டும் அடைவதா என்று முதலில் ஐயம் கொண்டிருந்தேன். அத்தனை நிமித்திகர்களிடமும் அது கூடுவதைக் கண்டேன். நிமித்திகன் நிமித்தம் உரைப்பதற்காக வரும்போது வெளிப்படுபவன் அல்ல. அது அவனுள் இருக்கும் ஏரியிலிருந்து ஒரு குடம் நீரை மொண்டு வெளியே அளிப்பதுதான். நிமித்திகனின் எல்லாச் சொற்களிலும் ஏரியின் அலையும் துமியும் திகழ்கிறது. அவன் விழிகளில் அதன் ஒளி வெளிப்படுகிறது.”
நிமித்திகர்கள் தங்கள் இல்லத்தில் ஒவ்வொரு நாளும் நிமித்தநூல் தேர்கிறார்கள். தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை நூல்களில் செலவிடுகிறார்கள். தங்களை சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றுக்கும் நிமித்தமென்ன என்று எண்ணுகிறார்கள். இப்புடவி நிமித்தங்களால் ஒன்று சேர்ந்து கட்டப்பட்டிருக்கிறது என்று அவர்களின் நூல்கள் கூறுகின்றன. இங்குள்ள மேடையில் ஆடும் பாவைகளை அவற்றின் சரடுகளினூடாகவும், சரடுகள் வழியாக அவற்றை ஆளும் விரல்களையும் அறியமுயல்பவர்கள். அவர்களிடம் இருக்கும் அந்த பேருவகையை கண்டு அதற்குள் நுழைந்தேன். குருநிலைக்குச் சென்றபோது எனக்கு சொல்திருந்தவில்லை, மொழி படியவுமில்லை. ஆகவே சுவடிகளை படிப்பதுபோல் நடிப்பேன்.
குருநிலையில் நான் பிறருடைய விளையாட்டுக்குரிய குழவியாக வளர்ந்தேன். ஒவ்வொருநாளும் நூல்நவில்கை நிகழ்கையில் சென்று அமர்ந்துகொள்வேன். எண்ணும் எழுத்தும் பயிலும்போதே நாற்களக் கணக்குகளையும் கற்றேன். என்னை நிமித்திகனாகவே எண்ணத்தலைப்பட்டேன். ஒருநாள் நான் ஆசிரியர் தன் தனியறையில் அமர்ந்து நூலாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவர் எழுந்து சென்றபின் அவருடைய கையிலிருந்த நூலை எடுத்து பிரித்து அதன் சொற்களைப் படிக்கத் தொடங்கினேன். அது சூரியதேவரின் பிரஹதாங்கப் பிரதீபம். துருவநிமித்தநெறியின் முதல் நூல். துருவனின் கதையை நான் அறிந்திருந்தேன். அந்நூல் நிமித்திகர் மட்டுமே அறிந்த துருவம் என்னும் மொழியில் அமைந்தது. அதன் சில எழுத்துக்களே எனக்குத் தெரிந்திருந்தன.
உள்ளே பிறிதொரு சுவடி தேடச்சென்றிருந்த ஆசிரியர் திரும்பி வந்து என் பின்னால் நின்றிருந்தார். அவர் நிழலைக் கண்டு நான் திடுக்கிட்டு எழுந்தேன். ஆசிரியர் புன்னகையுடன் என் அருகணைந்து “மைந்தா, இவற்றில் உனக்கு மெய்யாகவே ஆர்வம் உள்ளதா?” என்றார். “ஆம்” என்றேன். “நிமித்தநூல் நோக்குபவன் ஒருபோதும் வாளெடுத்து போரிட இயலாது என்பார்கள்” என்றார். “எந்தை போரிடுகிறாரே” என்றேன். “ஆம், அவர் போரிடுகிறார். ஆனால் உண்மையான போராளி அல்ல. சூதர் பாடல்களில் அவரும் வீரர் என புனையப்பட்டுள்ளது. ஏனென்றால் அஸ்தினபுரியின் மணிமுடி அவர்களிடம் அமைந்துள்ளது. ஆனால் அவரால் போர்நடத்த இயலாது” என்றார்.
“ஏன்? அவருடைய தோள்கள் ஆற்றல் அற்றவையா?” என்று நான் கேட்டேன். “மைந்தா, நாம் கொல்லவிருப்பவனின் முற்பிறவியும் வருபிறவியும் நமக்குத் தெரியுமெனில் அந்த வாளை எப்படி ஏந்துவோம்? எப்படி அவன் தலைமேல் இறக்குவோம்?” என்றார். நான் திகைத்து அமர்ந்திருந்தேன். “நீ ஷத்ரியன். உன் ஷத்ரியப் பண்பில் பெரும்பகுதியை திரும்ப அளித்தே நீ நிமித்திகப் பண்பை பெறமுடியும். நிமித்திகன் ஆகுகையில் நீ அரசநிலையிலிருந்து எப்போதைக்குமென இறங்குகிறாய்” என்றார். “எனில் எந்தை ஏன் அதை கற்றார்?” என்று நான் கேட்டேன். “அவரை நீங்கள் ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்?” என்றேன். “அவர் பிற நால்வரிடமிருந்தும் விலகவிரும்பினார்” என்றார்.
“விலகவா? ஏன்?” என்று நான் கேட்டேன். “அவர்கள் நால்வரும் ஆள்வது ஷத்ரியர்களுக்குரிய நான்கு உலகங்களை. தொல்நெறி தேர்தலும், தோள்திறன் பேணுதலும், விற்கலையும், புரவிக்கலையும் ஷத்ரியர்களுக்கு வகுக்கப்பட்ட நான்கு தளங்கள். ஐந்தாவது ஒன்று இருந்தது, அது அரசுசூழ்தல். அதைக் கற்றுக்கொள்ளும்படி சகதேவனிடம் பீஷ்மர் கூறினார். ஆனால் உன் தந்தை பிறிதொரு முடிவை எடுத்தார். நிமித்தநூலை தெரிவுசெய்தார்…” என்றார் தௌம்ரர். “அத்தருணத்தில் எது அவ்வாறு ஆணையிட்டதென்று தெரியவில்லை. அவர்கள் நால்வரிடமிருந்தும் முரண்பட்டு பிறிதொருவனாக ஆகவேண்டும் என்று தோன்றியிருக்கலாம். நாம் வாழ்க்கையில் எடுக்கும் சிறிய முடிவுகளுக்கே காரியகாரண விளக்கம் உண்டு. பெரிய முடிவுகளை நம்முள் எழுந்து நம்மை ஆளும் நாமறியா விசைகளே எடுக்கின்றன.”
“ஷத்ரியக் குடியில் பிறந்தவனிடம் ஷத்ரியப் பண்பு இயல்பாகவே இருக்கும். இக்கலையினூடாக அது அகலும். அதன்பின் வென்றெடுக்கவோ, வெற்றியில் திளைக்கவோ, இயற்றியவை அனைத்தையும் எண்ணி எண்ணி நிகர் செய்துகொள்ளவோ, பிறர்மேல் உனக்கு இயல்பான கோன்மை உள்ளதென்று எண்ணிக்கொள்ளவோ இயலாது. நீ இந்நூலை தேர்வு செய்வாய் என்றால் உன் பதினான்கு தலைமுறை மூதாதையர்கள் தங்கள் வீரப்பண்புநலன்களால் சேர்த்தளித்த அனைத்தையும் கைவிடுகிறாய்” என்றார் தௌம்ரர்.
சுகோத்ரன் சிரித்து “அன்று என்னிடம் அவர் பேசிய ஒவ்வொரு சொல்லையும் நினைவுகூர்கிறேன்” என்றான். “எல்லைகடந்த நினைவாற்றல் கொண்டவர்களே நல்ல நிமித்திகர்” என்றார் விதுரர். “ஆம், நான் எதையுமே மறப்பதில்லை” என்றான் சுகோத்ரன். “அன்று நான் திகைத்து அமர்ந்திருந்தேன். அதனை நான் எண்ணியிருக்கவே இல்லை. என்னுள் அப்போது வீரக்கனவுகளே நிறைந்திருந்தன. என் தந்தையரின் போர்வெற்றிகளையும் புகழையும் ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டிருந்தேன். தாங்கள் அறிந்திருப்பீர்கள், அஸ்தினபுரியில் அத்தனை பேருமே அவர்களைப்பற்றி எண்ணிஎண்ணித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவ்வாறு எண்ணும்பொருட்டே இங்கு கதைகள் சொல்லப்பட்டன. நானும் அவ்வாறே வளர்ந்தேன்.”
நான் அஸ்தினபுரியின் இளவரசர்களில் ஒருவன் என்பதை அறிந்திருந்தேன். ஆகவே எனக்கு எந்நிலையிலும் மணிமுடியோ நிலமோ கிடைக்கப்போவதில்லை. ஒரு சிறு படையுடன் கிளம்பிச் செல்வதைப்பற்றி, கிழக்கிலோ தெற்கிலோ மேற்கிலோ விரிந்து கிடக்கும் ஆளில்லா நிலங்களில் அரசொன்றை அமைப்பதை பற்றி, என் குருதியிலிருந்து புகழ் பூத்த அரசகுலம் ஒன்று பெருகி வளர்வதைப்பற்றி, எனது பெயர் அவர்களின் குடிநினைவுகளில் நிலைகொள்வதைப்பற்றி, அவர்களின் இல்லமுற்றங்களில் தெய்வமாக நான் நின்றிருப்பதைப்பற்றி, எனக்கு அவர்கள் குருதி பலியும் அன்னமும் நீரும் அளித்து வணங்குவதைப்பற்றி, அந்த அகவையிலேயே நான் கற்பனை செய்துகொண்டிருந்தேன்.
நான் வெல்ல வேண்டிய எதிரிகளை உருவாக்கிக்கொண்டேன். அவர்களை வெவ்வேறு வகையில் களப்போர்களில் வென்றேன். அவர்களை கொன்று குவித்தேன். வென்று என் குலத்துடன் சேர்த்துக்கொண்டேன். அவர்களின் மேல் கோன்மை கொண்டேன். ஆகவே ஆசிரியரின் அக்கூற்று எனக்கு திகைப்பை அளித்தது. “தந்தை போரில் வெல்வதைப்பற்றி எண்ணியிருக்கவேயில்லையா? உடன்பிறந்தார் நால்வரையும் உதறிவிட்டு கிளம்பிச்சென்று வென்று தனக்கான அரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு உருவானதே இல்லையா?” என்றேன்.
“அதை நான் கேட்கவில்லை. ஏனென்றால் நான் மானுட உள்ளத்தை நன்கறிவேன்” என்றார் ஆசிரியர். “உன்னிடம் இப்போதிருக்கும் கனவு அவரிடமும் இருந்திருக்கும். நிமித்தநூல் வழியாக அதை கடந்து சென்றிருப்பார். அதை கடந்து செல்லும்பொருட்டே நிமித்தநூலைக் கற்றிருப்பார்” என்றார். நான் அவரை வெறுமனே நோக்கியபடி அமர்ந்திருந்தேன். ஆசிரியர் புன்னகை செய்து “இளையோனாக இருப்பதென்பது சில தருணங்களில் துறவுக்கு நிகர்” என்றார். நான் மெல்லிய அதிர்ச்சியை அடைந்தேன். “நன்று. நீ ஒருநாளை எடுத்துக்கொள். உன் வாழ்வின் மிக முதன்மையான முடிவை எடுக்கப்போகிறாய். அதை நீயே எடுக்கவேண்டும்” என்றார்.
“நிமித்தநூல் கற்பதற்கு ஓர் அகவை உள்ளது. முதிரா இளமைக்குள் நிமித்தநூலை கற்றாகவேண்டும். அதன்பிறகு பழகும்போது சிந்தை பழகுமே ஒழிய ஆழம் பழகாது. இன்று நீ சிறுவன். உன் முடிவை இப்போதே வகுத்தாகவேண்டும்” என ஆசிரியர் சொன்னார். “சிறந்த கல்வி என்பது குழவிப்பருவத்திலேயே தொடங்குவது. ஆனால் அக்கல்வியை தெரிவுசெய்வதில் ஓர் இடர் உள்ளது. அம்முடிவை கற்பவனே எடுக்க இயலாது. இது ஒரு தீய கூறு. நிமித்திக குலத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சிக்கல்கள் இல்லை. அவர்கள் அக்குலத்தில் பிறந்ததனாலேயே இயல்பாக அம்முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு செல்கிறார்கள். அருங்கலைகள் அனைத்துமே அவ்வண்ணம்தான் கற்கப்படுகின்றன. அதன்பொருட்டே அவர்களுக்கான குலங்கள் வகுக்கப்பட்டுள்ளன.”
“ஷத்ரியன் அனைத்தையும் கைவிட்டு அதைப் பற்றிக்கொள்ளவேண்டும். அம்முடிவை அவனே எடுக்கவேண்டும். தந்தையோ ஆசிரியரோ அம்முடிவை எடுத்தால் அது பெரும்பழி என ஆகக்கூடும். ஆகவே உன் முடிவை நீயே எடு” என்றார் தௌம்ரர். நான் வெறும்விழிகளாக அமர்ந்திருந்தேன். “இந்த சிற்றகவையிலேயே நீ உன்னை வாழ்நாள் முழுக்க நடத்தும் முடிவை எடுக்கவிருக்கிறாய். எதை நீ உசாவுவாய், எவ்வண்ணம் நீ அங்கு சென்றுசேர்வாய் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீ அம்முடிவை எடுக்காமல் இருப்பதே உகந்ததென்று எண்ணுகிறேன். ஏனெனில் நீ ஷத்ரியன் என்பதனால் நீ அதற்குள் நுழைவதால் இழப்பதே மிகுதி” என்று அவர் தொடர்ந்தார்.
நான் அவரை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு என்ன எண்ணுவதென்றே புரியவில்லை. என் உள்ளத்தில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கலைந்துகொண்டிருந்தன. வாழ்க்கையின் பெருமுடிவுகளை எடுக்க நேர்கையில் மொத்தப் புடவியின் சிக்கலையும் ஒரே கணத்தில் எதிர்கொள்கிறோம். கடுவெளி திறந்துகொண்டதுபோல. உள்ளம் மலைத்து நின்றுவிடுகிறது.
“நீ என்ன முடிவை எடுத்தாலும் அது பெரும்பிழையாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதி” என தௌம்ரர் சொன்னார். “எடுத்த முடிவிலிருந்து ஒருவேளை நீ வெளியேற விழையவும் கூடும். அப்போது நீ வெளியேற முடியாமல் உன்னை அது கட்டுப்படுத்தலாம். அதன் பொருட்டு நீ இழந்த அனைத்தும் உன் முன் வந்து நின்று உனக்கு பெரும் சலிப்பையும் உருவாக்கலாம். ஆயினும் இப்போது எனக்கு வேறு வழியில்லை. அம்முடிவை நீயே எடுக்க வேண்டும். ஏனெனில் பிறிதொரு நாள் எண்ணும்போது அம்முடிவு உன்னால் எடுக்கப்பட்டதென்றே எண்ணம் உனக்கு இருக்கவேண்டும்” என்றபின் ஆசிரியர் அகன்று சென்றார்.
“நான் அச்சிற்றறையில் என் ஊழை எதிரே நோக்கியபடி அமர்ந்திருந்தேன்” என்று சுகோத்ரன் சொன்னான். “என் முடிவை அன்றுதான் எடுத்தேன். தாதையே, அது நான் எடுத்த முடிவு அல்ல.”