சமணமும் கல்வியும்

அழகியமரம்

அன்புள்ள ஜெமோ,

உங்களை அட்லாண்டாவில் சந்தித்து அளாவளாவியது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களின் எழுத்துக்களின் வாயிலாக உங்களை சில ஆண்டுகளாக தெரியும் ஆதலால் தயக்கமின்றி உரையாட முடிந்தது. உங்களிடம் கேள்விகளை நேரில் கேட்டு பதில் பெறுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை; இரண்டரை மணி நேர உரையாடல் பத்தவில்லை. உங்களின் விரல் மற்றும் தாடைகுணமாகி இருக்கும் என்று நம்புகிறேன்.

பௌத்தம் மற்றும் சமணம் குறித்து அன்று உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றேன். உங்களிடம் அன்று நேரமின்மையால் கேட்டக முடியாத கேள்விகள். நேரம் இருந்து பதில் கொடுத்தீர்களானால் மகிழ்வேன்.

1. சமணர்கள்சமணப்பள்ளிகள் அமைத்து கல்வி அளித்தார்கள் என்று ஒரு புறம் கேள்விப்படும்பொழுது, சுதந்தரத்திக்கு முன் கிட்ட தட்ட 90 சதவிகித மக்களுக்கு கல்வி அறிவு இல்லை என்றும் , குறிப்பிட்ட வெகு சில சமூகமே கல்வியில் முன்னுரிமை பெற்று இருந்தார்கள் என்றும் தரவுகள் உள்ளன . இன்றளவும் சமண மடங்கள் உள்ளது என்றால் , சமணர்கள் யாருக்கு கல்வி அளித்தார்கள்? ஏன் படிப்பறிவு மறுக்கப்பட்ட ஒரு பெரிய திரள் இருந்துள்ளது?

2. ஆசீவகம் பற்றியும் இந்த சில நாட்களாக கேள்விப்படுகிறேன். பல தரப்பட்ட விஷயங்கள் , முடிவில் குழப்பமே எஞ்சுகிறது. ஆசீவகம் என்பது என்ன ? ஆசீவகத்திற்கும் சமணத்திற்கும் தொடர்பு ஏதும் உண்டா? இவை இரண்டின் கொள்கைகள்என்ன?

உங்களின் விளக்கங்கள் எனக்கு இந்த இரண்டு சமயங்களை பற்றி புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன். உதவுங்கள்.

நன்றி
கவிதா

***

அன்புள்ள கவிதா

வரலாறு என்பது இருவகை பிழைகளால் நமக்கு திரிபுபட்ட நிலையிலேயே கிடைக்கிறது. நம் சார்புநிலைகளைக் கடந்து மெய்யான வரலாற்றைச் சென்றடைவதென்பது பெரிய அறைகூவல்.

முதல் பிழை என்பது ஒரு காலகட்டத்தின் பொதுவான வரலாற்றுப்புரிதல், ஓர் ஆசிரியரின் வரலாற்றுப் புரிதல் வரலாற்றுக் கருதுகோள்களில் உருவாக்கும் திரிபு. இரண்டாம் பிழை என்பது ஆதிக்க நோக்கத்திற்காக வேண்டுமென்றெ உருவாக்கப்படும் திரிபுகள்.

இவ்விரு திரிபுகளுமே இந்தியக் கல்வி குறித்த பேச்சுக்களில் உள்ளன. அக்காலகட்டத்தின் பொதுவான பிழை என்பது கல்வி என்பது இப்படித்தான் இருக்கமுடியும் என்னும் ஐரோப்பியமைய நோக்கு. ஆகவே இங்கே கல்வி இருக்கவில்லை என்னும் முடிவை ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களும் அவர்களைத் தொடர்ந்தவர்களும் சென்றடைந்தனர்

இரண்டாவது பிழையும் கல்வி சார்ந்த விவாதங்களில் உண்டு. இந்தியா ஐரோப்பியர்களின் ஆதிக்கநிலம். இங்கே பண்பாட்டை அவர்கள்தான் கொண்டுவந்தார்கள் என்னும் நிலைபாடு அவர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இன்றியமையாதது. ஆகவே அதை எப்போதுமே முன்வைத்தனர். திரும்பத்திரும்ப வலியுறுத்தினர். அதற்கான பதிவுகளை உருவாக்கினர். அதனுடன் ஒத்துப்போகும் தரவுகளை மட்டும் தொகுத்தனர்.

இவ்விரு பிழைகளையும் இன்றுகூட நம் கல்வித்துறை கடக்கவில்லை. நம் பொதுப்புத்தியில் இப்பிழைகள் சார்ந்த பார்வை நிலைகொண்டுள்ளது

முதல் பிழை சார்ந்து சிலவற்றைச் சொல்லலாம். ஐரோப்பா பதினேழாம் நூற்றாண்டில்தான் பொதுக்கல்வி என்னும் கருத்தை வந்தடைந்தது. அதாவது ஒரு நாட்டில் உள்ள அனைவருக்குமே ஒரேவகையான பொதுக்கல்வியை அளிப்பது. அது பொதுத்தன்மை கொண்ட சமூகத்தை உருவாக்க இன்றியமையாதது என ஐரோப்பா கண்டடைந்தது

உண்மையில் பொதுக்கல்வி என்பது முதலாளித்துவ [capitalist] சமூகப் பொருளியல் அமைப்பின் தேவைகளில் ஒன்று. முதலாளித்துவம் ஒட்டுமொத்தமாக சமூகத்தை பொதுத்தரப்படுத்துகிறது [standardization ] பொதுத்தரப்படுத்தல் இல்லாமல் முதலாளித்துவம் நிலைகொள்ள முடியாது. ஏனென்றால் முதலாளித்துவ அமைப்புக்கு தேவையான உழைப்பாளர் – நுகர்வாளர் என்னும் பொதுவான ஒரு மானுடநிலை அந்தப் பொதுக்கல்வி வழியாகவே உருவாக முடியும்

முதலாளித்துவம் உருவாக்கிய பொதுக்கல்வியே அனைவருக்கும் ஒரேவகை கல்வியை அளித்தது. அதுவே ஜனநாயகத்தின் அடித்தளமாக அமைந்தது. முதலாளித்துவம் உருவாக்கியதே நவீன ஜனநாயகம்.

அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அமைப்பில் பொதுக்கல்வி என்ற அமைப்பே இல்லை. இங்கல்ல, ஐரோப்பாவிலும்கூட இல்லை. நிலப்பிரபுத்துவம் செயல்படுவதே சமூகத்தை பல அடுக்குகளாகவும் பல குழுக்களாகவும் பிரிப்பதன் வழியாகத்தான்.

ஐரோப்பாவில் பதினேழாம் நூற்றாண்டில் வந்த முதலாளித்துவம் இங்கே நூறாண்டு பிந்தியே வந்தது. ஆனா பொதுக்கல்வி ஐம்பதாண்டுகளுக்குள்ளாகவே இங்கே அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவை முதலாளித்துவப்படுத்துவது இங்கிலாந்து என்னும் முதலாளித்துவ நாட்டுக்கு அவசியமாக இருந்தது. அது இந்தியாவை ஆள, இந்தியாவை சுரண்ட அவர்களுக்கு தேவை. நவீன பொதுக்கல்வி, நவீன போக்குவரத்து, நவீன செய்தித்தொடர்பு ஆகியவை நவீன நிர்வாகத்தின் அடிப்படைத்தேவைகள்.

அவ்வாறு இங்கே பொதுக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அது ஐரோப்பியர் நமக்கு அளித்த கொடை என்பதை நான் மறுக்கவில்லை. நாம் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு வந்தது அவர்களால்தான், அது மாபெரும் முன்னோக்கிய நகர்வு. முதலாளித்துவம் அளித்த பொதுக்கல்வி, பொதுப்போக்குவரத்து, செய்தித்தொடர்பு ஆகியவையே நம்மை ஜனநாயகம் நோக்கி கொண்டுவந்தன

ஆனால் அதற்கு முன்னர் இங்கே கல்வி இல்லை என்றோ, சில உயர்சாதியினருக்கு மட்டுமே கல்வி இருந்தது என்றோ பொருளில்லை. இங்கே நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் என்ன கல்வி இருக்க முடியுமோ அந்த கல்வி மிகச்சிறப்பாகவே இருந்தது. சொல்லப்போனால் அக்கால ஐரோப்பாவைவிட மிகமிகச் சிறப்பாக இருந்தது. இது தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை

நிலப்பிரபுத்துவக் கல்வி என்பது அந்தந்த தொழிற்குழுவினருக்கு அவர்களுக்குத் தேவையான கல்வியை அளிப்பதுதான். அந்தணர்களுக்கு மதக்கல்வி அளிக்கப்பட்டது. சிற்பிகளுக்கும் தச்சர்களுக்கும் அவர்களுக்குரிய கல்விகள் இருந்தன. வணிகர்களுக்கு வணிகத்திற்குரிய கல்வி. இவ்வாறு ஒவ்வொரு சாதியினருக்கும் அவர்களுக்குரிய கல்வி அளிக்கப்பட்டது

உதாரணமாக உழவர்களுக்கு உழவுத்தொழிலுக்குத் தேவையான கல்வி அளிக்கப்பட்டது. இக்கல்வி அடிப்படை அளவீடுகள், கணக்குகள், பருவகாலம் குறித்த செய்திகள், விவசாயம் குறித்த செய்திகள் என விரிந்திருந்தது. நானே இதைக் கண்டிருக்கிறேன். விவசாயிகளுக்கு அவர்களுக்கே உரிய நில அளவுகள், எடை அளவுகள், பருவ அளவுகள் குமரிமாவட்டத்தில் இருந்தன. சில கணக்குகள் சோதிடநூலுடன் தொடர்புள்ளவை. நானே இவற்றைப்பற்றி எழுதியிருக்கிறேன்[முகில்வண்ணம்]

இவை எப்படி கற்பிக்கப்பட்டன? இளஞ்சிறுவர்களுக்கு திண்ணைப்பள்ளிக்கூடம் போன்ற அமைப்புகள் கற்பித்தன. பின்னர் தொழிலிடங்களே கல்விநிலைகளுமாக செயல்பட்டன. மூத்தவர்களிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்டார்கள். இதைத்தவிர அவ்வப்போது ஆலயங்கள், சாவடிகள் சார்ந்து கல்வி அளிக்கப்பட்டது. ஓரு புலவரோ துறவியோ ஊருக்கு வந்தால் அவர் சிலநாட்கள் தங்கி கல்விகற்பித்து திரும்பிச்செல்வது வழக்கமாக இருந்தது. இதற்காகவே ஊர்ச்சாவடிகள் உருவாக்கப்பட்டன.

இந்தியாவில் வெள்ளையர் வருவதற்கு முன்பு கல்வி எப்படி இருந்தது? அதை தெளிவாக விளக்கும் ஆய்வுநூல் காந்தியரான தரம்பால் எழுதியது. A Beautyful Tree. அழகியமரம் என்ற பேரில் தமிழிலும் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு , காஞ்சிபுரம் வட்டாரங்களில் கிடைத்த தரவுகளைக்கொண்டு இந்த நூல் எழுதப்பட்டது. தரவுகளில் பெரும்பாலானவை ஐரோப்பியர்களால் பதிவுசெய்யப்பட்டவை.

தரம்பாலின் நூல் பதினேழாம்நூற்றாண்டு இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய கல்வி அளிக்கப்பட்டதை நிறுவுகிறது. அதை இன்றைய பொதுக்கல்வியுடன் ஒப்பிடக்கூடாது. அது வேறுவகை கல்வி, நிலப்பிரபுத்துவ காலகட்டத்திற்குரியது, அவ்வளவுதான்.

தமிழ் வரலாற்றை எடுத்து நோக்கினால் சங்ககால கவிஞர்களில் கொல்லன் அழிசி என்னும் பெயர் காணக்கிடைக்கிறது. இரும்புக்கொல்லன் பெருங்கவிஞனாக இருந்திருக்கிறான். எல்லாவகை உடலுழைப்பாளர்களும் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். அதுவே சமணத்தின் கொடை.

சமணம் எந்த வகையான கல்வியை அளித்தது? அது நெறிநூல்களை உருவாக்கியது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்போல. இலக்கண நூல்களையும் அகராதிகளையும் உருவாக்கியது. நன்னூல் , வீரசோழியம், திவாகரம் போல. இவ்வாறு கல்விக்குரிய அடிப்படைகளை உருவாக்கியது சமணம். அது தன் கல்விநிலைகளில் உயர்தத்துவத்தைக் கற்பித்தது. அங்கே கற்றவர்கள் சிற்றூர்களில் ஆசிரியர்களாக ஆனார்கள். அன்றிருந்த சிறந்த கல்வியை மக்களுக்கு அளித்தனர். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய கல்வி.

இதில் தலித்துக்கள் கற்றிருந்தார்களா? தலித் மக்களின் கல்வி உயர்நிலையில் இருந்தது என்பதற்கான இலக்கிய சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. சமணர் காலகட்டத்தில் தலித்துக்களின் கல்வி மிகச்சிறப்பாக இருந்தது என்றும் பின்னர் அது வீழ்ச்சி அடைந்தது என்றும் விரிவாக நிறுவும் அயோத்திதாசர் பின்னர் அவருடைய காலகட்டத்திலும்கூட தலித் மக்களிடையே கல்விக்குரிய ஏராளமான பாரம்பரிய அமைப்புக்கள் இருந்ததை பதிவு செய்கிறார். அவரே அத்தகைய அமைப்புக்களை நடத்தியிருக்கிறார்

அக்காலகட்டத்தில் உலகின் பிற பகுதிகளில் இருந்ததை விட இங்கே கல்விநிலை உயர்வாகவே இருந்திருக்கிறது. அதற்கு பெரும்பங்களிப்பை சமணர்கள் ஆற்றினார்கள்.

ஜெ

***

ஐரோப்பாவின் கண்களில்…

முந்தைய கட்டுரைவெள்ளையானை- கடிதம்
அடுத்த கட்டுரைபொன்னீலன் 80- விழா