அன்புள்ள ஆசிரியருக்கு….
.வணக்கம் .. நான் உங்கள் தொடர் வாசகன்.. சுருக்கமாக ஓர் ஐயம்… ஜாக்ரத் மனநிலை என்பது மனித தர்க்கத்துக்கும் புறவுலக யதார்த்ததுக்கும் அடிப்படையாக கொண்டது….சுஷுப்தி மனநிலை கனவு நிலை அல்லது ஆழ்மனதின் வடிவம் எனக் கொள்கிறோம். கனவுநிலையில் மட்டுமே இலக்கியம் படைக்கப்படுகிறது என்கிறிர்கள். நான் எழுதும் கதை என்னை மீறி நிகழும் ஒன்று எனவும், இந்த கதை ஏன் இப்படி முடிகிறது என்றும்,ஒரு வேளை நான் பேசுவதற்கு எதிராக என் கதை இருந்தாலும் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை என நேர்க்காணலில் கூறியிருக்கிறிர்கள்..அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.பிறகு எவ்வாறு ஆழ்மன வெளிபாட்டில் நிகழும் படைப்பில் அறம் வெளிப்படுகிறது..மனித மனம் அறத்தை தான்டி செயல்படாதா? அறமே இலக்கியத்தை படைக்கிறதா? தவறு சரி- க்கு அப்பாற்பட்டது தானே ஆழ்மன ஓட்டம்…நேரமிருந்தால் விளக்குங்கள்…
குமரவேல்.
கோவை.
***
அன்புள்ள குமரவேல்,
நான் உணர்வது இது, கனவுக்கு அறம் ஒழுக்கம் ஆகியவை இல்லை. ஆகவே இலக்கியத்திற்கும் அவை நிபந்தனை அல்ல. அது கனவுகள் போலவே கட்டற்றது. உலக இலக்கியத்திலேயே அறச்சார்பற்ற, ஒழுக்கமற்ற பேரிலக்கியங்கள் பல உள்ளன. மனிதாபிமானம், உயர்பண்புகள் போன்றவை கூட இலக்கியத்திற்கு இன்றியமையாத இலக்கணங்கள் அல்ல. அது ஆழுள்ளத்தை தோண்டி வெளியே போடுவது. அங்கே என்ன இருக்கிறதோ அதை.
ஆனால் அறம் என்பது ஒரு புறவயமான ஏற்பாடு அல்ல. ஓர் உலகியல் பண்பு அல்ல. அது அன்பு, கருணை என்றெல்லாம் நாம் சொல்லும் உணர்வுகளுடன், compassion எனறு சொல்லப்படும் அடிப்படை உணர்வுடன் பின்னிப்பிணைந்தது. அன்பும் கருணையும் மானுட உருவாக்கங்கள் அல்ல. பழக்கவழக்கங்கள் அல்ல. மானுடனின் அடிப்படை இயல்புகளில் அவையும் உள்ளன. மானுடன் இங்கே தலைமுறைகளாக பெருக, சேர்ந்து வாழ, உலகை அறிய அப்பண்புகள் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. பசி போல, காமம் போல. இன்றைய ஆய்வுகள் அத்தனை விலங்குகளுக்கும் அவ்வுணர்வுகள் வெவ்வேறு வகைகளில் உள்ளன என்பதையே காட்டுகின்றன.
அன்பும் கருணையுமே அறம் என உருமாற்றம் அடைகின்றன. அறமே நீதி என்றாகிறது.நீதியின் ஆணைகளே நெறி. நெறிநிற்பதே ஒழுக்கம். பெரும்படைப்புக்கள் எளிய ஒழுக்கங்களை, நெறிகளை பேசுவதில்லை. நேரடியாக அறவுரை சொல்வதுமில்லை. அவை அன்பு கருணை என்னும் பேருணர்ச்சிகளை மானுட ஆழத்திலேயே, கனவுக்கும் அப்பாலுள்ள துரியத்திலேயே, அல்லது நவீன அறிவியல்மொழியில் சொன்னால் மானுடம் என்னும் கூட்டுள்ளத்திலேயே, உயிர்களின் கூட்டுப்பிரக்ஞையிலேயே, கண்டடைகின்றன. அதையே வெளிப்படுத்துகின்றன. அதற்கு அறமோ நெறியோ ஒழுக்கமோ தடையாக அமைகையில் மீறிக் கடந்துசெல்கின்றன.
சரி ,அந்த கருணையும் அன்பும் இலக்கியத்துக்கான நிபந்தனைகளா? அப்படி அல்ல. வாழ்க்கையின் ஒரு முகத்தை, ஒரு கோணத்தை மட்டுமே முன்வைக்கும் படைப்புக்கள் உண்டு. அவை கருணைக்கும் அன்புக்கும் நேர் எதிரானவையாகவும் இருக்கக்கூடும். ஆனால் முழுமைநாடும் செவ்வியல் படைப்புக்கள் எப்படியோ கருணையையும் அன்பையும்தான் அறுதியாக சொல்கின்றன என்று மேலைவிமர்சகர்களால் சொல்லப்படுகிறது.
ஆனால் என் நோக்கில் அதுவும் உண்மை அல்ல. மகாபாரதம் போன்ற இந்தியப்பேரிலக்கியங்கள் அதையும் சொல்வதில்லை. அன்பு,கருணை ஆகியவையும் அவற்றுக்கு எதிரானவையும் நிகர்செய்ய நிகழும் ஒரு மாபெரும் இயக்கத்தை மட்டுமே அவை சொல்கின்றன. ஒட்டுமொத்தமாக அவை காட்டும் புவிச்சித்திரத்தில் அன்பு கருணை அறம் எல்லாமே ஒரு பகுதி மட்டுமே. அவை காட்டுவது ஒரு பெருக்கை. ஒரு சுழற்சியை. எல்லா அன்றாட அர்த்தங்களையும் அவை கடந்துசெல்ல வைக்கின்றன. அதற்கு அப்பாலுள்ள அர்த்தம் ஒன்றை உணரச்செய்கின்றன.
ஒன்பது உணர்ச்சிகளிலும் இறுதியானது சாந்தம். பேரிலக்கியங்கள் எட்டு உணர்ச்சிகள் வழியாக ஒன்பதாவது உணர்ச்சியை அடைந்துவிடவேண்டும் எனப்படுகிறது. அனைத்து வண்ணங்களும் வெண்ணிறமாக ஆகிவிடவேண்டும். அன்பு கருணை என்பதெல்லாம் பிற எட்டு உணர்ச்சிகளைச் சார்ந்தவை. சாந்தம் உணர்ச்சியற்றது, சார்பற்றது. முழுமை அறிவில் அலைகள் இருக்கமுடியாது. அன்பு கருணை அறம் அனைத்தும் அலைகளே.
ஜெ
***