‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47

பகுதி ஏழு : தீராச்சுழி – 3

பூர்ணை குடிலுக்கு வெளியே முகமனுரையை கேட்டாள். “அரசியருக்கும் சேடியருக்கும் வணக்கம்” எனும் குரல் சற்று அயலாக ஒலிக்கவே சந்திரிகையிடம் விழிகளால் பார்த்துக்கொள் என்று காட்டிவிட்டு குடிலிலிருந்து வெளியே வந்தாள். அங்கு நின்றிருந்த மருத்துவர் அவளுக்கு முகமறியாதவராக இருந்தார். அவர் மீண்டும் தலைவணங்கி “நான் தங்களைத்தான் பார்க்க வந்தேன். அரசியர் இருக்கும் நிலையை நான் அறிவேன். தாங்கள் ஒருமுறை எங்கள் அரசியை வந்து பார்க்க இயலுமா?” என்றார். பூர்ணை திரும்பி நோக்கி “நான் இங்கே இருக்கவேண்டியிருக்கிறது. அவர்கள் உடல்கள் நைந்துகொண்டிருக்கின்றன. உள்ளமும் முற்றிலும் விசையழிந்து நின்றுவிட்டிருக்கிறது” என்றாள். “தாங்கள் எங்கள் அரசியரை நோக்கி ஏதேனும் சொல்லமுடியுமா?” என்று சற்றே குரல் தணித்து கேட்டாள்.

ரமிதன் “இனி நமக்குள் பேசிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை, செவிலியே. அவர்களை மீட்பது மிகவும் கடினம். உள்ளம் நின்றுவிட்ட பிறகு மெல்ல உடலும் நின்றுவிடுவதே நான் கண்டது. உள்ளத்தை செலுத்தும் கலை மருத்துவர்களிடமில்லை. அது முனிவர்களாலும் தேவர்களாலும் மட்டுமே இயல்வது” என்றார். “அவ்வுடல் மேலும் நைந்துபோகாமல் பார்த்துக்கொள்ளலாமல்லவா?” என்றாள் பூர்ணை. “ஆம், அதற்கு நிறைய மருத்துவமுறைகள் உள்ளன. ரத்தசந்தனம் தொடர்ச்சியாக பூசிக்கொண்டிருக்கலாம். நறுஞ்சுண்ணம் ஈரத்தைப் போக்கும். ஆனால் தோல் உலரவும் செய்யும். வேறு மருந்துகளும் உள்ளன. சோற்றுக்கற்றாழையால் செய்த குழம்பு ஒன்று என்னிடம் உள்ளது. அதை அளிக்கிறேன். ஆனால் நெடுங்கால அளவில் எதனாலும் எப்பயனுமில்லை என்பதே நான் இந்நாட்களில் கண்டுகொண்டது” என்றார் ரமிதன்.

பூர்ணை பெருமூச்சுவிட்டு தலையசைத்தாள். “இப்போது நான் வந்தது தாங்கள் ஒருமுறை வந்து யாதவ அரசியை பார்க்க முடியுமா என்று அழைப்பதற்காகத்தான்” என்றார் ரமிதன். “நானா? ஏன், யாதவ அரசியுடன் அவருடைய சேடியும் செவிலியரும் இருந்தனரே?” என்றாள் பூர்ணை. “இன்று காலை அவர்கள் இங்கிருந்து கிளம்பிச்சென்றுவிட்டிருக்கிறார்கள். முற்புலரியிலேயே சென்றுவிட்டார்கள் என்று அறிந்தேன்” என்றார் ரமிதன். பூர்ணை “சென்றுவிட்டார்களா? அரசியை கைவிட்டுவிட்டா?” என்றாள். “ஆம், இங்கு இருந்த அத்தனை யாதவர்களும் நேற்றிரவு கிளம்பிச்சென்றுவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ பேச்சு ஓடிக்கொண்டிருந்திருக்கிறது” என்று ரமிதன் சொன்னார். “தாங்கள் வந்து அரசியை பார்க்க வேண்டும்.”

“வருகிறேன்” என்றபின் அவள் தன் மேலாடையை சீரமைத்துக்கொண்டபடி அவருடன் நடந்தாள். அவளுடன் நடந்தபடி “நானும் யாதவன்தான். என் பெயர் ரமிதன், விருஷ்ணி குடியை சேர்ந்தவன்” என்றார். பூர்ணை அவர் மேலே பேசுவதற்காக தலையசைத்தபடி உடன் நடந்தாள். “நான் இளைய யாதவருக்கு என்னை அளித்தவன். அவரிடம் இன்றுவரை ஒரு சொல்கூட உரையாடியதில்லை. எந்தை மதுவனத்தில் பிறந்தார். இளைய யாதவருடன் துவாரகைக்கு குடிபெயர்ந்தார். மதுவனத்தில் சிறுமூங்கில் குடில்களில் வாழ்ந்தவர்கள் எங்கள் மூதாதையர். துவாரகையில் வெண்பளிங்குக் குன்று போன்ற மாளிகையில் நாங்கள் குடியிருந்தோம். எங்கள் வாழ்வு இளைய யாதவரால் அமைந்தது. ஆனால் அதை இன்று யாதவர்கள் மறந்துவிட்டிருக்கிறார்கள்” என்றார் ரமிதன்.

“நான் பிறந்தபோது எந்தை என்னை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு சென்று இளைய யாதவரின் தேர் செல்லும் வழியில் வைத்து காத்திருந்தார்” என்றார் ரமிதன். “தேர் நின்று இளைய யாதவர் தலை நீட்டி என்ன செய்கிறாய் என்று உரக்க கூவ தங்கள் கைகளால் என் மைந்தனை ஒருமுறை தொட வேண்டும், அவன் பிறவிக்கொரு இலக்கு இத்தருணத்தில் உருவாக்க வேண்டும் என்றார் எந்தை. அவன் பிறவியை வடிவமைக்க நீ யார் என்று இளைய யாதவர் கேட்டார். இலக்கிலாது வாழ்வது வீண் என்று அறிந்த தந்தை நான். பிறப்பதற்கு முன்னரே இலக்கு கொண்டவர்கள் நல்லூழ் கொண்டவர்கள், அவர்கள் தேடுவதற்கு ஒன்றுமில்லை. தலை கொடுப்பதற்கான பலிபீடம் முன்னரே ஒருங்கியிருக்கிறது என்றார் எந்தை.”

“இளைய யாதவர் இறங்கி எந்தை கையிலிருந்து என்னை வாங்கி என் புன்மயிர்த் தலையில் தன் உதடுகளால் முத்தமிட்டு வாழ்க என்றுரைத்து என் கைகளுக்குள் ஒரு சிறு கணையாழியை வைத்தபின் திரும்பி தேரிலேறிக்கொண்டார். அரசர் எனக்களித்த அந்தக் கணையாழி எந்தையிடமிருந்தது. எனக்கு பதினெட்டு ஆண்டு அகவை நிறைந்தபோது என் கைகளில் அதை வைத்து உன் கைக்கு இப்போதுதான் இது பொருந்துமாறாகியிருக்கிறது என்று கூறினார். இளமையிலிருந்து நான் இளைய யாதவரின் கதைகளன்றி பிறிதொன்றையும் கேட்டதில்லை. எந்தை விழைவுப்படி இலக்கு முன்னரே வகுக்கப்பட்டவனாகவே வாழ்ந்தேன். குருக்ஷேத்ரக் களத்திலும் அவ்வாறே இருந்தேன்.”

“என் தொழில் மருத்துவம். அதில் தேர்ச்சி கொள்வதே எனது போர். இக்கைகளின் வழியாக பலநூறு படைவீரர்களின் உயிரை காப்பாற்றினேன். அதைவிட பத்துமடங்கு வீரர்கள் வலியிலாது மண் நீங்க உதவினேன்” என்றார் ரமிதன். பூர்ணை “நன்று” என்று மட்டும் சொன்னாள். “போருக்குப் பின் யாதவர்களில் பெரும்பகுதியினர் கிளம்பி துவாரகைக்கும் மதுவனத்துக்கும் மதுராவுக்கும் சென்றுகொண்டிருக்கிறார்கள். போரில் பெரும்பாலான யாதவர்கள் அஸ்தினபுரியின் தரப்பிலிருந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இளைய யாதவருடன் நின்றவர்கள் தனிப்பட்ட முறையில் அவருடன் உளஇசைவு கொண்ட என்னைப்போன்ற சிலரே. இப்போரில் யாதவர்களில் படைக்கலம் எடுத்துவந்தவர்கள் முக்காலும் அழிந்தனர்.”

“போரில் எஞ்சியவர்கள் மிகச் சிலர். புண்பட்டவர்கள், உறுப்பிழந்தவர்கள், சித்தம் பிறழ்ந்தவர்கள், தப்பியோடி காடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தவர்கள் என எஞ்சியிருந்த யாதவர்கள் அனைவரும் துளித்துளியாக திரளத்தொடங்கினர். காட்டுக்குள் இரு தரப்பிலிருந்தும் யாதவர்கள் சந்தித்து அக்கணமே பகைமறந்து ஒன்றாகத் திரண்டனர். அவர்களுக்கு சிறு சிறு தலைமைகள் உருவாயின. எவ்வண்ணம் இவ்வாறு ஒற்றை எண்ணம் உருவாகிறது என்பது விந்தையானது. இந்தப் போரே யாதவர்களை அழிக்கும்பொருட்டு உருவானது என்றும், அதை இரு தரப்பில் இருந்தவர்கள் கூடி அமைத்தார்கள் என்றும் ஒரு பேச்சு நிகழ்கிறது. யாதவர்களை அழிப்பதற்காக அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வார்களா என்ற எளிய வினாவைக்கூட யாரும் கேட்டுக்கொள்ளவில்லை.”

“வெறியுடன் ஒன்றை நம்பத்தொடங்கினால் மானுடர் முதலில் தங்கள் கல்வியையும் உசாவும் திறனையும் இழந்துவிடுகிறார்கள். அவற்றை சுருட்டிக்கட்டித் தூக்கி அப்பால் வீசிவிடுகிறார்கள் என்றுகூட சொல்லலாம். அந்நம்பிக்கை அவர்களை எவ்வகையிலோ காக்கிறது. கேடயமாகவும் ஊன்றுகோலாகவும் ஊர்தியாகவும் அதுவே ஆகிறது போலும். இன்று யாதவர்கள் நடுவே யாதவர்களை முற்றழிப்பதற்கான ஒரு சூழ்ச்சியே குருக்ஷேத்ரப் போர் என்றும், எஞ்சியிருப்பவர்கள்தான் யாதவ குலத்தை இப்புவியில் நிலைநாட்டும்பொருட்டு தெய்வங்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்றும் உறுதியான எண்ணம் நிலவுகிறது” என்றார் ரமிதன்.

பூர்ணை “உயிருடன் எஞ்சியவர்கள் அவ்வாறு தெய்வங்களையோ ஊழையோ துணைக்கொள்ளாமல் இப்புவியில் எவ்வாறு வாழமுடியும்?” என்று கேட்டாள். “அதைத்தான் நானும் எண்ணினேன்” என்று அவர் சொன்னார். “ஆனால் அதனூடாக அவர்கள் தங்களை மேலும் அழித்துக்கொள்ளக்கூடும் என்று தோன்றுகையில் அஞ்சவா நகைக்கவா என தெரியவில்லை.” பூர்ணை புன்னகைத்தாள். “அவர்கள் ஓடைகள் பெருகி நதியாவதுபோல இன்று பெரிய படையாக மாறிவிட்டிருக்கிறார்கள். யாதவ குலத்தை இனி காக்கும் ஆற்றல் கிருதவர்மன் ஒருவருக்கே உண்டென்றும், அவர் தன் நாட்டுக்கு சென்றுவிட்டாரென்றும், அங்கே யாதவர்கள் காடுகளிலிருந்து வந்து ஒரு பெரும்படையாக திரண்டுகொண்டிருக்கிறார்கள் என்றும் இங்கு செய்தி பரவியிருக்கிறது.”

“கிருதவர்மன் தனது படையுடன் கிளம்பிச்சென்று துவாரகையை கைப்பற்றி முடிசூடவிருக்கிறார் என்கிறார்கள். இங்கு அத்தனை ஷத்ரிய அரசுகளும் ஆற்றல் இழந்துகிடப்பதனால் துவாரகை முன்னிலும் விசைகொண்டு பேரரசென எழுந்து பாரதவர்ஷத்தை ஆளப்போகிறதென்று நேற்று ஒரு முதியவர் சொல்லிக்கொண்டிருந்தார். எனது பிழை, இந்தப் பொருளின்மை அனைத்தையும் எதிர்த்துப் பேசியதுதான். ஆகவே மெல்ல மெல்ல என்னை அவர்கள் தங்கள் வட்டத்திலிருந்து விலக்கினார்கள். அவர்களுக்குள் என்ன நிகழ்கிறதென்று எனக்கு முற்றிலும் தெரியாமலிருந்தது. இன்று புலரியில் அரசியின் குடிலிலிருந்து எனக்கு செய்தி வந்தது, அங்கே ஏவற்பெண்டுகள் எவருமில்லை என்று. அதன்பின்னரே நானும் அறிந்தேன், இங்கு முக்தவனத்திலிருந்த யாதவர்களில் ஏழு பேர் தவிர பிற அனைவருமே இங்கிருந்து கிளம்பிச்சென்றுவிட்டார்கள் என்று.”

“பிறிதொரு செய்தியும் இங்கு பரவிக்கொண்டிருக்கிறது. வடபுலம் சென்ற பலராமர் அங்கிருந்து ஒரு படையுடன் வந்துகொண்டிருப்பதாக. தனது முதல் மாணவர் துரியோதனனின் சாவுக்கு பழிநிகர் செய்யும்பொருட்டு அவர் வருகிறார் என்று சொல்லப்படுகிறது” என்றார். பூர்ணை “இப்போரிலிருந்து ஒருபோதும் மானுட உள்ளம் விலகாது போலும்” என்றாள். “ஆம், ஒரு பெரும்போர் போரின்மையை உருவாக்கும் என்று எண்ணுவோம். ஆனால் அது தற்கொலை எண்ணத்தையே உருவாக்குகிறது. இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்களை கொன்றுகொள்கிறார்கள். தனி மானுடர்கள் உளம் நைந்து உடல் இற்று உயிர் அழிவதை காண்கிறேன். இனி நாடுகளும் நகரங்களும் கூட அவ்வாறு அழியும்போலும்” என்றார்.

பின்னர் “நான் தங்களை அழைக்க வந்தது பிறிதொன்றுக்காக” என தொடர்ந்தார். “யாதவ அரசி எந்நிலையிலிருக்கிறார் என்பதை தாங்கள் கேட்டு அறிந்திருப்பீர்கள். மைந்தனை இழந்த பின்னர் பல நாட்கள் வெறிகொண்டவர்போல் கொதித்து கொந்தளித்துக்கொண்டிருந்தார். அவர் அருகே சென்ற அனைவரையும் கைகளாலும் படைக்கலங்களாலும் தாக்கினார். கூச்சலிட்டு அழுவதும் தன்னைத்தானே படைக்கலங்களால் புண்படுத்திக்கொள்வதும் வழக்கமாக இருந்தது. ஆகவேதான் தொடர்ந்து அகிபீனா மயக்கத்திலேயே வைக்க வேண்டியிருந்தது. நல்லவேளையாக அவர் துவாரகையில் இருந்தார். ஆனால் இப்போது நீர்க்கடனுக்கு இங்கே வந்தாகவேண்டியிருந்தது.”

“இங்கு வரும் வரைக்கும்கூட அவர் எங்கு வருகிறோம் என்பதை அறியாதவராக இருந்தார். ஆனால் இன்று காலை குடிலில் விழித்தபோது அவர் மிகவும் உளத்தெளிவோடு இருக்கிறார். அத்தெளிவுதான் அச்சுறுத்துகிறது. அவருடன் பேசுமளவுக்கு கல்வி கொண்ட எவரும் சேடியர் நிரையில் இல்லை. அரசியர் எவரும் பேசும் நிலையில் இல்லை. அப்போதுதான் உங்களைப்பற்றி சொன்னார்கள். சிபிநாட்டு பூர்ணை அரசியரைவிட உளத்தெளிவு கொண்டவள் என்றார்கள். ஆகவே உங்களை அழைத்துவர வந்தேன்” என்றார் ரமிதன். “அரசி அனைத்தையும் அறிந்தமைந்தவராக, அனைத்து உளக்கொந்தளிப்பையும் இழந்து தெளிந்தவராகத் தெரிகிறார்.”

“அரிய தருணங்களில் அகிபீனா அவ்வாறு நோயாளருக்கு உளத்தெளிவை அளிப்பதுண்டு” என்று பூர்ணை சொன்னாள். “இது அகிபீனாவிலிருந்து வந்த எதிர்வினை அல்ல. அவர் ஏதோ ஒரு தெளிவை அடைந்திருக்கிறார்” என்றார் ரமிதன். “தெளிவு நல்லதுதானே?” என்றாள் பூர்ணை. “ஆம், ஆனால் வாழவேண்டுமென்ற தெளிவெனில் மட்டுமே அது நன்று” என்றார் ரமிதன். “வாழ்வதற்கான விழைவு அதற்குரிய அனைத்து சொற்களையும் அதுவே படைத்துக்கொள்ளும். வாழ்வுமறுப்பும் அதற்கான சொற்களை உருவாக்கிக்கொள்ளும். விழிளைக் கொண்டோ நடத்தையைக் கொண்டோ அதை கணிக்க இயலாது. தவறாக கணித்தலும் ஆகும். இதை மருத்துவர்கள் நன்கு அறிவார்கள்” என்றார் ரமிதன்.

“மிக அரிதாக உளம் கலங்கிய நோயாளிகள் எண்ணியிராக் கணத்தில் தெளிவு கொள்கிறார்கள். மகிழ்ந்து பேசுபவர்கள் உண்டு. இயல்பு நிலைக்கு முற்றிலும் மீண்டவர்கள்கூட உண்டு. உற்றவர்களுக்கும் சூழ்ந்தவர்களுக்கும் உரிய அனைத்தையும் சீரான முறையில் முடித்துவிட்டு அவர்கள் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். அறியாத மருத்துவர்கள் அந்த விந்தையை எண்ணி திகைப்பார்கள். பல தற்சாவுகளில் நீங்கள் பார்த்திருக்கலாம், அதை கண்டிருந்த எளிய உள்ளம் கொண்டோர் சாவுக்கு முன் அவர்கள் மிகத் தெளிவடைந்திருந்ததாகவும் அனைத்தும் சீரடைந்துவிட்டதென்ற நம்பிகையை அளித்ததாகவும் ஆகவே சாவு முற்றிலும் நம்பமுடியாததாக உள்ளதாகவும் கூறுவார்கள். மருத்துவரோ அந்த ஒவ்வாத் தெளிவே அதற்கான சான்றென்று கொள்வார்கள்” என்றார் ரமிதன். பூர்ணை “ஆம், அதற்கான வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னாள்.

“நீங்கள் அவரிடம் பேசவேண்டும், செவிலியே” என்று ரமிதன் சொன்னார். “நீங்கள் இதை இளைய யாதவரிடம் கூறினீர்களா?” என்று கேட்டாள் பூர்ணை. “இல்லை, எனக்கு நேரிடையாக அவரிடம் பழக்கமில்லை. அவர் செல்லும்போது அகன்று பார்த்து நின்று வணங்குவது என் வழக்கம். அவரிடம் என்னால் முறையான சொற்களை எடுக்க முடியும் என்று தோன்றவில்லை. நான் தங்களை அழைத்தது அதன்பொருட்டும் கூடத்தான். நான் என்ன செய்யவேண்டும், எவரிடம் தெரிவிக்கவேண்டும் என்று நீங்களே கூறுக!” என்றார் ரமிதன். “நாம் அதை நம் உள்ளுணர்வின் பாற்பட்டே முடிவெடுக்கவேண்டும். இப்போது எண்ணித்தெளிவதெல்லாம் எவருக்கும் இயல்வதல்ல” என்றாள் பூர்ணை. “உள்ளுணர்வா? எனக்கு அது சாம்பல்மூடிக் கிடக்கிறது” என்றார் ரமிதன்.

ஒரு கணத்திற்குப்பின் பூர்ணை “இளைய பாண்டவர் பார்த்தன் வந்து யாதவ அரசியை பார்த்தாரா?” என்றாள். “ஒருமுறை” என்றார் ரமிதன். “பின்னிரவில் அவர் உள்ளே நுழையும்போது அங்கு இளைய அரசி மயக்கத்தில்தான் இருந்தார். மயங்கிய நிலையிலேயே அரசியைப் பார்த்துவிட்டு அவர் மீள்வது நன்றென்று நானும் எண்ணினேன். ஆனால் குடில் முற்றத்திற்கு அவர் வந்தபோது எவ்வகையிலோ அதை உணர்ந்தவர்போல் யாதவ அரசி எழுந்து உரக்க கூச்சலிட்டு அழுதார். மஞ்சத்திலிருந்து எழுந்து கதவை நோக்கி ஓடிவந்து அதை பிடித்து இழுத்து கட்டியிருந்த கயிறு தெறிக்க வெளியே பாய்ந்தார். இரு சேடியர் அவரை பற்றிக்கொள்ள இளைய பாண்டவர் பின்னடைந்து இருளுக்குள் புதைந்து தன் புரவியை நோக்கி சென்றார். அவர் புரவியிலேறி வெளியே செல்லவும் யாதவ அரசி சேடியரை உதறியபடி கூச்சலிட்டுக்கொண்டு ஓடி வந்து முற்றத்தில் முகம் அறைந்து விழுந்தார். அவர்கள் சந்தித்துக்கொள்ளவில்லை. அல்லது நாமறியாத எங்கோ அவர்கள் சந்தித்துக்கொண்டனர்.”

பூர்ணை நீள்மூச்செறிந்து “நான் செய்வதற்கொன்றுமில்லை என்றே தோன்றுகிறது. எனினும் முயல்கிறேன்” என்றாள். அதன்பின் அவர்கள் பேசவில்லை. அவர்களின் காலடியோசைகள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தன.

 

பூர்ணை சுபத்திரையின் குடிலை அடைந்தபோது அங்கே ஏற்கெனவே ஓர் இளம் சேடி நின்றிருந்தாள். அவள் பூர்ணையை நோக்கி விரைந்துவந்து “அரசி தன் மூத்தவரை பார்க்க வேண்டுமென்று கூறுகிறார். உடனடியாக அழைத்து வரும்படி ஆணை. அவ்வாணையை தலைக்கொள்வதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே அரசிக்குத் தெரியாமல் இங்கு நின்றிருக்கிறேன்” என்றாள். அவள் குரல் பதறிக்கொண்டிருந்தது. “அரசி இருக்கும் உளநிலை என்னவென்று அறியக்கூடவில்லை. நான் பாஞ்சாலத்து அரசியின் சேடி. இங்கு யாரும் இல்லையென்பதனால் என்னை இங்கு வர ஆணையிட்டார்கள். யாதவ அரசியை நான் ஓரிரு முறைதான் பார்த்திருக்கிறேன். என் முகமும் அவர்களுக்கு நினைவில்லை” என்றாள்.

பூர்ணை சில கணங்களுக்குப்பின் “நான் உள்ளே சென்று யாதவ அரசியிடம் பேசுகிறேன். அதுவரை நீ இங்கே வாயிலில் என்னை எதிர்பார்த்து அமர்ந்திரு. நீ சென்று இளைய யாதவரை அழைக்கவேண்டுமா என்பதை நான் கையசைவால் காட்டுகிறேன்” என்றாள். மருத்துவரிடம் விடைகொள்ளும் பொருட்டு தலையசைத்துவிட்டு பூர்ணை குடிலுக்குள் நுழைந்தாள். அவள் காலடி ஓசை கேட்டு தலைநிமிர்ந்த சுபத்திரையிடம் தலைவணங்கி “சிபிநாட்டு முதுசேடியாகிய என் பெயர் பூர்ணை. தங்கள் பணிக்காக இங்கு அமர்த்தப்பட்டுள்ளேன்” என்றாள். “பிறிதொருத்தி இங்கு வந்தாளே?” என்று சுபத்திரை கேட்டாள்.

அவள் குரல் முற்றிலும் மாறிவிட்டிருந்தது. எப்போதுமே அவள் குரல் சற்று தடித்தது. ஆயினும் தடித்த பெண்குரல்களுக்குரிய இனிமையும் அவளுக்கிருந்தது. தடித்த பெண்குரல் பெரியகுடம் கொண்ட வீணைக்குரிய கார்வையை சூடியிருப்பது. அவ்வினிமை முற்றாக மறைந்து ஆண்குரலாகவே அது அப்போது ஒலித்தது. மஞ்சத்தில் கால்களை சேர்த்து வைத்து மார்பில் கைகளை கட்டிக்கொண்டு நிமிர்ந்த தோள்களுடன் அவள் அமர்ந்திருந்தாள். பெரிய வெண்ணிற உடல், மற்போராளிகளுக்குரிய திரண்ட திண்தோள்கள். நீலநரம்போடிய பருத்த கைகள். கழுத்தில் ஒரு நரம்பு புடைத்து அசைந்தது. கன்னத்திலும் நீலநரம்புகள் தெரிந்தன. மின்நீலம் கலந்த சிறிய விழிகள். அவள் குழல்சுருள்கள் அவிழ்ந்து மஞ்சத்தில் விழுந்து கிடந்தன. அவள் மெலிந்திருந்தாலும்கூட பேருருக்கொண்டவளாகவே தோன்றினாள்.

“தங்கள் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள மூத்த சேடி நான். எனக்கு செய்தி வருவதற்கு முன் இங்குள்ள சிறு வேலைகள் செய்யும் பொருட்டு அவள் அமர்த்தப்பட்டாள்” என்றாள் பூர்ணை. “நீ தேவிகையின் செவிலியா?” என்று சுபத்திரை கேட்டாள். “அரசியின் மூத்த தோழி. அவர்கள் வரும்போது சிபி நாட்டிலிருந்து வந்தேன்” என்றாள் பூர்ணை. சுபத்திரை அவளை சிலகணங்கள் உற்று நோக்கியபின் “நான் என் மூத்தவரை உடனே சந்திக்கவேண்டும். அவ்விளைய பெண்ணிடம் சேதி சொன்னேன். அவளால் அவரை சந்தித்து அழைத்துவர முடியுமா என்று தெரியவில்லை. நீ சென்று அழைத்து வா” என்றாள். “ஆணை” என்றாள் பூர்ணை. “இத்தருணத்தில் மூத்தவரை சந்திப்பது அனைத்து வகையிலும் உகந்ததே.”

“ஆனால் இப்போது சற்று பதற்றத்தில் இருப்பார் என்பது மட்டும்தான் நான் கூறவேண்டியது. தாங்கள் அறிந்திருப்பீர்கள், இங்கிருந்த அனைத்து யாதவக் குடிகளும் இங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். அவர்கள் அனைவரும் இளைய யாதவரிடம் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கொண்டு இங்கு இத்தனை நாள் இருந்தவர்கள். இவ்வண்ணம் அவர்கள் இறுதிக் கணத்தில் விட்டுச்செல்வார்கள் என்பது உகந்த செய்தி அல்ல.” சுபத்திரை “அதை மூத்தவர் எவ்வகையிலேனும் பொருட்படுத்துவார் என்று எண்ணுகிறாயா?” என்றாள். “பொருட்படுத்தமாட்டார். அவருக்கு இதெல்லாமே விளையாட்டுதான். அவரிடம் நாம் எதையும் எப்போதும் சொல்லலாம்.”

“ஆயினும், விளையாட்டே என்றாலும்கூட அவருக்கு ஒரு நிலைகுலைவை உருவாக்கும் இச்செய்தி என்றே தோன்றுகிறது” என்றாள் பூர்ணை. “ஏனெனில், அவர்கள் இங்கிருந்து கிளம்பியதற்கு சொல்லப்படும் ஏதுக்களில் ஒன்று மூத்தவர் படையுடன் இங்கு வருகிறார் என்னும் செய்தி. அது மெய்யல்ல. எனக்கு அது தெரியும். மூத்தவர் ஒருபோதும் இளையவருக்கு எதிராக படையுடன் வரமாட்டார். ஆனாலும் அவ்வாறு ஒரு செய்தி எழுந்தமை உகந்தது அல்ல. கிருதவர்மன் பெரும்பகையுடன் யாதவர்களை ஒன்று திரட்டிக்கொண்டிருக்கிறார் என்பதும் வெறும் செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.”

“எனக்கு இந்தச் செய்திகளில் எந்த அக்கறையுமில்லை. நான் இங்கிருப்பது வேறொன்றுக்காக. நான் என் மைந்தனை நேற்று கனவில் பார்த்தேன்” என்றாள் சுபத்திரை. பூர்ணை “இங்கு அனைவருமே மைந்தர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சில தருணங்களில் அது கனவென்றும் சில தருணங்களில் மெய்நிகர் என்றும் தோன்றுகிறது” என்றாள். சுபத்திரை மேலும் சொல்லெடுப்பதற்குள் பூர்ணை “இங்கு அவர்கள் நிறைந்திருக்கிறார்கள். நீர்க்கடனுக்கு முந்தைய நாள் அவர்கள் தங்கள் மூத்தவர்களை அறுதியாக தொடர்பு கொள்ள முயல்வார்கள் என்றும், விடைபெறும் சந்திப்பு அது என்றும் சொல்வார்கள்” என்றாள்.

“இது அவ்வாறல்ல” என்று சுபத்திரை சொன்னாள். “ஒவ்வொரு நாளும் அவனை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். பலமுறை என் அருகே நின்றிருந்திருக்கிறான். என் கைகளை பற்றிக்கொண்டிருந்திருக்கிறான். விளையாட்டாக என்னை பலமுறை குடிலிலிருந்து வெளியே அழைத்துச் சென்றிருக்கிறான். ஒருமுறைகூட அவன் என்னிடம் உரையாடியதில்லை. நேற்று அவன் என்னிடம் உரையாடினான்.” உணர்வுகளைக் காட்டாமல் “கூறுக!” என்றாள் பூர்ணை. “அவன் குரலை நான் நினைவுறுகிறேன். அன்னையே உனக்கு அந்த தாமரைச்சூழ்கையிலிருந்து வெளியேறும் வழி தெரியுமா என்று அவன் கேட்டான்.” அவள் விழிகள் பித்துகொண்டோரின் நோக்கென அலைபாய்ந்தன.

“அவன் மிகச் சிறுவனாக இருந்தான். விளையாட்டுச் சிறுவன்… விளையாடும் சிறுவர்களிடம்தான் எத்தனை உளவிசை! எவ்வளவு உடலாற்றல்! அவர்கள் பேசுவதே இல்லை, கூச்சல்தான். நான் அவனை துரத்திக்கொண்டிருந்தேன். இருவரும் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மலர்ச்சூழ்கைக்குள் நுழைந்தோம். நீ அதை பார்த்திருக்க மாட்டாய். துவாரகையில் என் அரண்மனையின் மலர்த்தோட்டத்தில் அது அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச்செடிகளாலும் பாறைகளாலும் அமைக்கப்பட்ட வட்டச்சுழற்பாதை. பெண்டிர் விரும்பி விளையாடும் ஆடல். இளமையில் நான் அதிலிருந்து மிக எளிதில் வெளிவந்துவிடுவேன். ஏனென்றால் மேலிருந்து நோக்கி நோக்கி அதன் வழிகளை உளப்பாடம் செய்துவைத்திருந்தேன்.”

“அவன் உள்ளே ஓடினான். நான் துரத்திச்சென்றேன். அவனை பிடித்துவிட்டேன். இடையில் தூக்கி வைத்துக்கொண்டு அம்மலர்ச்சூழ்கையின் வட்டங்களுக்குள் நடந்து வெளிவர முயன்றேன். ஆனால் வழி குழம்பிவிட்டது. எங்கே என்று தெரியவில்லை, ஏதோ ஒரு வளைவில் ஒரே ஒரு சிறு பிழை செய்துவிட்டேன். என் உள்ளத்திலிருந்த வழிப்பாடம் இழை கலைந்துவிட்டது. நினைவுகூருந்தோறும் அது மேலும் குழம்பியது. பதற்றம் கொண்டபோது முற்றாகவே சிதறியது. திரும்பத் திரும்ப அதிலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். என்னால் வழி கண்டுவிட முடியவில்லை. களைத்து சோர்ந்து அமர்ந்தேன். என்ன இது இவ்வளவு எளிய ஒரு வட்டத்திலிருந்து வெளிவர இயலவில்லை என்று எண்ணினேன்…”

“வளர்ந்த பின் நான் அதில் ஆடியதில்லை. சிறுவர்கள் விளையாடுவதை உப்பரிகையில் எனது அறையிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருப்பேன். மாடத்தில் இருந்து பார்க்கையில் அது மிக எளிய ஒரு சுழல்பாதை என தெரியும். அதில் வழி கண்டுபிடிப்பதற்காக குழந்தைகள் முட்டி மோதுவதை பார்க்கையில் தாள முடியாத சிரிப்பு எழும். மிக அருகில் வந்து திசைமாறிச் செல்வார்கள். நின்று ஒருமுறை எண்ணினாலே கண்டுபிடித்துவிடக்கூடும் வழியை தவறவிட்டு அதன் அருகிலேயே நின்று தயங்கி மீண்டும் இறுதி வரை தேடிக்கொண்டிருப்பார்கள். அஞ்சி அங்கேயே அமர்ந்து கூக்குரலிட்டு அழும் குழந்தைகள் உண்டு. வெறிகொண்டு அலைந்து களைத்து விழுந்துவிடும் குழந்தைகள் உண்டு. தற்செயலாக வெளியே வந்துவிட்டு அதில் திகைத்து உவகைக்கூச்சலிட்டு மீண்டும் உள்ளே சென்று சிக்கிக்கொள்ளும் குழ்ந்தைகளும் உண்டு.”

“தெய்வங்கள் விண்ணிலிருந்து பார்க்கையில் மானுட வாழ்க்கை அவ்வாறுதான் தோன்றும் என்று என் சேடி ஊர்மி ஒருமுறை சொன்னாள். அதில் நான் அவ்வாறு மீட்பின்றி சிக்கிக்கொள்வேன் என்று எண்ணவே இல்லை. மீண்டும் மீண்டும் பலமுறை முயன்ற பின்னர் களைத்து அமர்ந்தேன். இறுதியாக ஒருமுறை, இம்முறை மீண்டும் ஒருமுறை, இம்முறை நிகழும் என எண்ணி எண்ணி முயன்று சலித்தேன். மைந்தன் என் தோளைத்தட்டி என் கன்னத்தைப் பற்றி அசைத்து அன்னையே உங்களுக்கு மெய்யாகவே மீளும் வழி தெரியுமா என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் இதற்கு முன்பும் வந்தேன் என்றேன். எனக்கும் வழி தெரியவில்லை என்று அவன் சொன்னான்.”

“அதன் பின் நான் விழித்துக்கொண்டேன். அனைத்தும் தெளிவடைந்திருந்தது. இத்தனை நாள் எனக்குள் இருந்த கொந்தளிப்பென்ன என்று உணர்ந்தேன். ஆகவேதான் மூத்தவரை பார்க்க வேண்டுமென்று விழைந்தேன்” என்றாள். “அவர் அதற்கு என்ன செய்ய இயலும்?” என்று பூர்ணை கேட்டாள். “நீ கற்றறிந்தவள் என்று எண்ணுகிறேன். என் மைந்தன் இங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் மறைந்தவன். அவன் சிக்கிக்கொண்ட மலர்ச்சூழ்கைக்குள்ளிருந்து மீளும் வழி இப்போதும் அவனுக்குத் தெரியவில்லை. இப்புவியில் அத்தனை பெரிய வினாவை எஞ்சவிட்டு மறைந்தவன் எவ்வண்ணம் விண்புகமுடியும்? அவன் அடையவேண்டியவை இங்கேதானே உள்ளன? எனில் அவனுக்கு நீர்க்கடன் அளிப்பதென்றால் என்ன பொருள்?”

பூர்ணை “மண்ணில் வினை முடித்து எவருமே விண்புகுவதில்லை. ஊழ்கத்தில் நிறைவுகண்ட முனிவர்களைத் தவிர. எஞ்சும் கடன்களே மானுடரின் பிறவிச்சரடின் அடுத்த கண்ணியை முடிவுசெய்கின்றன” என்றாள். “ஆம், வாழ்வு அத்தனை இனியது. அத்தனை துயர் மிக்கது. அத்தனை சொல்லி முடியாத புதிர்களும் பதிலாக வினாக்களும் கொண்டது. அவை ஒவ்வொன்றையும் வரும் பிறவிகளில் மானுடர் மீட்க முடியும். ஆனால் இப்பிறவியில் இத்தனை பெரிய விடையின்மையுடன் ஒருவன் விண்புகுந்தானெனில் அவனுக்கு மறுபிறவியிலும் மீட்புண்டா? இதே விடையின்மை அவனை ஊழ் எனத் தொடரும். மறுபிறவியிலாவது அவன் மீட்படையவேண்டும். எனவே அவனிடம் இச்சூழ்கையிலிருந்து வெளிவரும் வழி இப்போதே சொல்லப்படவேண்டும்.”

“என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் பூர்ணை “இப்பிறவியில் அவன் அதை அறிந்துவிட்டு செல்லட்டும். இன்னும் அதற்கு ஒரு நாளே உள்ளது. இன்றிரவுக்குள் எவ்வண்ணமேனும் அவனுக்கு அதை தெரிவித்தாகவேண்டும். நாளை நீர்க்கடன் பெற்று அவன் மூச்சுலகில் கலக்கையில் இங்கு அவன் ஆடிய ஆட்டத்தை நிறைத்துவிட்டுச் செல்லட்டும்” என்றாள் சுபத்திரை. பூர்ணை “அரசி, வாழ்க்கையை வாழ்ந்துதான் அறியமுடியும். பிற அறிதல்கள் அனைத்தும் மேலும் வினாக்களையே உருவாக்கும்” என்று சொன்னாள். “நான் அதை அவரிடம் பேச விரும்புகிறேன். அவரால் இயலும்… அவர் வரட்டும்” என்று சுபத்திரை கூறினாள். “நன்று அரசி, நான் அவரிடமே அதை கூறுகிறேன்” என்றபின் பூர்ணை தலைவணங்கி வெளியே வந்தாள். அவளை நோக்கி நின்ற இளஞ்சேடிக்கு கைகாட்டினாள்.

முந்தைய கட்டுரைஇருத்தலின் ஐயம்
அடுத்த கட்டுரைபூமணியை தொடர்தல்…