யாழன் ஆதி
யாழன் ஆதி கவிதைகள்
அன்பின் ஜெ. அவர்களுக்கு
“கொங்குத்தேர் வாழ்க்கை-2” தொகுப்பில் என் பதின்ம பருவத்தோழன் இராம்.பிரபு என்கிற யாழன் ஆதியின் கவிதைகள் இடம்பெறாதபோது அவரைவிட அதிகமாக நான் வருந்தியிருக்கிறேன். வேலூர் ஊரிஸ் கல்லூரியிலிருந்து படித்துக் கொண்டிருந்த அந்த 1990-களிலிருந்து இன்றுவரை 6 கவிதை தொகுப்புகளும், பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்து தொகுக்கப்படாமல் உள்ள நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியவர் யாழன் ஆதி. இன்று உடல்நலம் குன்றி அதே வேலூரின் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் அபி அய்யாவின் கவிதைத் தொகுப்பை யாழன் ஆதிக்கு படிக்க கொடுத்தேன்.
அவர் அனுபவித்துக் கொண்டிருக்கிற உடல்வலியை, நொய்மையை எந்தவித புகாரும் இல்லாமல் உள்ளது உள்ளபடி அப்படியே ஏற்றுக் கொண்டுவருகிறார். சாதாரணமாக நம்மில் பலருக்கும் ஏதோவொரு மத நம்பிக்கையிருக்கும். அவ்வாறான எந்தவொரு பிடிமானமும் இல்லாத ஒரு மனிதனிடமிருந்து ஆன்மிக மணம் கமழும் விமர்சனமொன்று வந்துள்ளது. அதை தங்கள் இருவரின் மேலான பார்வைக்கு முன்வைக்கிறேன்.
நன்றி
கொள்ளு நதீம்
9442245023, ஆம்பூர். வேலூர் மாவட்டம்
***
அன்புள்ள கொள்ளுநதீம்,
யாழன் ஆதி அவர்களுடன் முன்பு அவ்வப்போது தனிப்பட்ட மின்னஞ்சலில் பேசிக்கொண்டதுண்டு. நலமாக இருக்கிறார் என நினைக்கிறேன்.
ஒரு தொகுப்பு என்பது எவருடையதானாலும் ஒரு விமர்சன நோக்கு மட்டும்தான். இலக்கியப்படைப்புக்கள் அவ்வாறு சமகாலத்தால் முழுமையாக அளவிடப்படுவதில்லை.
ஜெ
***