ராகுலும் யானைடாக்டரும்

அன்புள்ள ஜெயமோகன் சார்.

 

எனது நண்பர் குலசேகரம் பகுதியை சேர்ந்த ராகுல்.அவரை நான் முதன் முதலாக நேரில் சந்திக்கும்போது அவர் கையில் உங்கள் காடு நாவல் இருந்தது. அதன்பின் உங்களை நேரில் வீட்டில் சந்தித்து பேசியதாக சொன்னார். நீங்கள் கொடுத்த அறம் புத்தகம் அதனுடைய கதைகள் குறித்து மிகவும் சிலாகித்து சிலாகித்து பேசினார். குறிப்பாக யானை டாக்டர் கதை ,வணங்கான் கதை, அறம் கதை என எல்லா கதையும் மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார் இது ஒரு வாசகனுக்கு ஏற்படும் நிகழ்வு தானே என்று நான் பெருமை பட்டுக் கொண்டேன் காரணம் எனக்கும் அறம் தொகுப்பில் உள்ள கதைகள் பிடித்திருந்தது. நாகர்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர். ராமதாஸுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கும் போது அதில் பேசிய ஒரு பேராசிரியர் ஜெயமோகன் எழுதிய அறம் தொகுப்பில் இருக்கும் வணங்கான் கதையை கண்டிப்பாக வாசித்து விடுங்கள் என்று அழுத்தமாக சொன்னார்.

 

மறுமுறை ராகுல் என்னை சந்திக்கும் போது அவருக்கு நீங்கள் எழுதிய ரப்பர், ஊமைச்செந்நாய் ,கன்னியாகுமரி, பனி மனிதன் போன்ற பல புத்தகங்களை வாசிக்கக் கொடுத்தேன். அதன்பின் அவர் ரப்பர் நாவலில் வரும் பல பகுதிகளுக்கு சென்று வந்ததாக சொன்னார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நான், ராகுல் மற்றும் ராகுலின் சில நண்பர்களோடு லோயர் கோதையார் பகுதிக்கு சென்றிருந்தோம்.வனத்துறை செக்போஸ்டில் எங்களது வாகனத்தில் மது பாட்டில்கள் இருக்கிறதா என்று செக் பண்ணி அனுப்பினார்கள். செல்வதற்கான நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு தான் சென்றோம். நாங்கள் மேல் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும்போது குளிப்பதற்கான அருவிகள் வந்தது. குளிக்கலாம் என்று நாங்கள் எங்களது உடைகளை களைந்து விட்டு டவ்வலை கட்டிக்கொண்டு குளிக்க தயாரானோம். அப்போது தான் ராகுல் கொஞ்சம் நேரத்தில் காணாமல் போனார். அவரைத்தேடி நாங்கள் செல்லும்போது வனத்தில் கிடந்த பீர் பாட்டில் குடித்துவிட்டு போட்ட மது பாட்டில்களின் உடைந்த துண்டுகளை பொறுக்கிக் தன் மார்போடு சேர்த்து அள்ளிக்கொண்டு வந்தார். என்ன ராகுல் காணாமல் போய்ட்டீங்க என்று கேட்டோம். இல்லை ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் கதை படித்தேன் அதில் வனவிலங்குகளுக்கு பாட்டில்கள் எவ்வளவு பிரச்சனை யாக இருக்கிறது என்பதை படித்ததும் என் மனதுக்கு அதை தாங்கும் சக்தி இல்லை. அதனால் யானையோ மற்ற வன விலங்குகளும் எந்த காயமும் அமடைந்தவிடாதபடி மதுபாட்டில்களை எல்லாம் பொறுக்கிக் கொண்டு வந்தேன் என்று சொன்னார்.வந்திருந்த நண்பர்களுக்கு ஒரு முறை யானை டாக்டர் கதையை சொல்லத் தொடங்கினார். மறுபடி நாங்கள் சேர்ந்து அந்தப் பகுதியில் கடந்த சில பாட்டில்களை எடுத்து ஒரு மரத்தில் ஒதுக்கி போட்டோம்.

 

வனத்தில் நுழையும்போது வனக்காவலர்கள் சோதனை செய்துதான் அனுப்புகிறார்கள் அதன்பின் மதுபாட்டில்கள் எப்படி கணிசமான அளவு இந்தப் பகுதிக்கு வந்தது என்கிற கேள்வி தான் எங்களுக்குள் இருந்தது. உடனே அதை போட்டோ எடுத்து கீழே இறங்கி வரும்போது செக்போஸ்டில் போய் கேட்டோம்.

அவர்கள் ஏதேதோ காரணங்களைச் சொன்னார்கள் .அப்போது வனக்காவலர்களிடமும் ராகுல் ‘யானைடாக்டர்’ கதையை பற்றி சொல்லத் தொடங்கினார். அந்த கதை பெரும் தாக்கத்தை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு சாதாரண ஒரு வாசகன் இந்த அளவுக்கு அந்த கதைக்குள் ஊறிப்போய் இருப்பது அந்த கருத்துக்களை எடுத்து அவன் கையாள்வது என்பது வெறும் வாசித்துவிட்டு கடந்து செல்வது அல்லாமல் தன்னுடைய செயலிலும் ராகுல் காட்டியது என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. மீண்டும் ஒருநாள் வனத்திற்குச் சென்று பாட்டில்களை பொறுக்கி வரவேண்டும் என்கிற திட்டம் ராகுலுக்கு இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. நகர்ப்புற பகுதிகளில் சுத்தம் செய்து கொண்டிருந்த ராகுல் உங்கள் கதையால் வனத்தையும் சுத்தம்செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இப்போது உங்களது யானை டாக்டர் கதை பள்ளிக்கூட பாடத்திட்டத்திலும் இருக்கிறது. இதனால் வரும் காலங்களில் இப்போது இந்த கதையை படிக்கும் மாணவர்களால் ஒரு மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? சார்.

ராம் தங்கம்
நாகர்கோவில்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-52
அடுத்த கட்டுரைவெள்ளையானை- கடிதம்