அறம் வாங்க
வணக்கம் ஜெமோ ! நலமா ?
உங்களை கடந்த மாதத்தில் சந்தித்த பிறகு நீங்கள் கொடுத்த யானை டாக்டர் ஒரே இரவில் படித்து முடித்தேன். அப்படியே Dr. K உடன் நானும் காட்டிலேயே நடந்த உணர்வு. அருமையான பதிவு. இன்று அறம் நூலை முடித்து விட்டேன். அருமையான மனிதர்களைப் பற்றிய அரிய பொக்கிஷம். நாகர்கோவிலில் வளர்ந்து இன்று பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் வாழும் என்னைப் போன்றவர்களுக்குக்கு நினைவுப்பாதையில் சென்றுவந்த அனுபவம் .
பூமேடை ராமசாமி அவர்களை வேடிக்கை பார்த்த சிறுவர்களில் நானும் ஒருவன். அந்த மகத்தான மனிதனிடம் இத்தனை நகைச்சுவை இருந்தது தெரிந்து ஆச்சர்யப்பட்டேன் ! நேசமணி ஒரு தலைவர், கன்யாகுமரி மாவட்டம் உதயமாக போராடியவர், அதனால் போக்குவரத்து கழகம் அவர் பெயர் கொண்டது தவிர வேறு எதுவும் தெரியாத எனக்கு அவர் எத்தனை பெரிய புரட்சியாளன் என தெரிய வைத்ததற்கு நன்றி..அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கே உரிய வட்டார மொழியோடு …அற்புதம்
உங்கள் சமீபத்திய அமெரிக்கா பயணம் தனிப்பட்டது என்றதால் எனக்கு தங்களை தொடர்பு கொள்வதா இல்லையா என்ற குழப்பம். உங்கள் பயண கட்டுரையை விரைவில் எதிர்பார்க்கிறேன். அடுத்தமுறை கண்டிப்பாக டெக்சாஸ் வரவேண்டும்.
அன்புடன்
சங்கர்
அன்புள்ள சங்கர்,
அறம் கதைகள் வாசிப்பினூடாக தொடர்ந்து வளர்ந்து வருவது நிறைவை அளிக்கிறது. இம்முறை அமெரிக்கா வருகை நண்பர்களைப் பார்க்க மட்டும். இலக்கிய விழாக்களை தவிர்க்கும் எண்ணம இருந்தது. டெக்ஸாஸுக்கு 2015ல் வந்தேன். மீண்டும் வரலாம்
ஜெ
அன்புள்ள ஜெ
தாங்கள் எழுதிய அறம் சிறுகதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கின்றேன். எடுத்தவுடன் நூறு நாற்காலிகள்,அறம், வணங்கான் கதைகளை படித்துக் கொண்டிருக்கின்றேன். கடந்த காலங்களில் சமூக அமைப்பு எவ்வாறெல்லாம் இருந்தது தற்சமயம் எப்படி உள்ளது அத்தகைய காலகட்டங்களில் சில தனிநபர்கள் வீரமாக எவ்வாறு பழைய சமூக கட்டமைப்பை உயிரை பணயம் வைத்து உடைத்து எறிந்தார்கள், என்பது வணங்கான் கதையிலும் ஒரு எழுத்தாளனுக்கு நேர்ந்த துன்பத்தை அறத்திலும், கேரள நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் வார்த்தையால் வர்ணிக்க முடியாத துன்பகரமான வாழ்க்கையை எப்படி வாழ்ந்தார்கள், அதிலிருந்து ஒரு ஐஏஎஸ் எப்படி உருவானார் அவர் காதல் திருமணம் செய்துகொண்டு தன் மனைவியையும் தன் தாயையும் எப்படி கையாளுகிறார் என்பதை மிகத் துல்லியமாக அந்த பாத்திரம் போலவே எழுதி உள்ளீர்கள் . சிறப்பாக உள்ளது .ஆனால், இந்த 21ம் நூற்றாண்டிலும் கூட நூறு நாற்காலிகள் என்ன ஆயிரம் நாற்காலிகள் போட்டாலும் அசைந்து கொடுக்காது என்பது போல சாதியம் மறு உருவாக்கப்பட்டு விட்டது நன்றி . எந்த நாடார்கள் தங்களுடைய சமூக அடிமைத்தனத்தை உடை தெரிவதற்காக போராடினார்களோ அவர்களிலிருந்து ஒருவர் தான் தமிழ்நாட்டில்,இந்து முன்னணியின் முதல் தலைவராக தாணுலிங்க நாடார் உருவெடுத்தார் வாழ்த்துக்கள்
இவண்
இராஜசேகரன்
திருச்சி.
அன்புள்ள இராஜசேகரன்
நன்றி
அறம் சிறுகதைகள் சமூக மாற்றம் தனிமனித வாழ்க்கை ஆகியவற்றினூடாக ஓடும் அழியாத சரடாக அறம் என்னும் விழுமியத்தை உருவகித்துக்கொள்ள முயல்பவை. உங்களுக்கு அக்கதைகள் நிறைவளித்தமை மகிழ்ச்சி அளிக்கிறது
ஜெ