குருதி [சிறுகதை]
நிலம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் தங்கள் வலைதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்ட ‘குருதி’ சிறுகதையை வாசித்தேன். அதில் மையக் கதாப்பாத்திரமாக வரும் பெரியவரை வெக்கையிலும் வாசித்ததாக நினைவு. சுவாரசியத்திற்காக வெக்கையைப் புரட்டுகையில், அய்யா பனைமரத்தின் அடியில் செலம்பரத்திடம் அந்தப் பெரியவரின் கதையைக் (ப. 99) கூறுகிறார். குருதி சிறுகதையில் வந்த அதே பெரியவர். நிலத்திற்காக அதே இரட்டைக் கொலை. சிறையில் அதே கம்பீரம். நீங்கள் சற்று மேலாக பெரியவரின் பின்புலத்தைக் கூறியிருக்கிறீர்கள். வெக்கையில் வரும் அந்த சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட சிறுகதைதானா ‘குருதி’ என்றறிய ஆவல்.
அன்புடன்
தமிழ்ப்பிரபா
***
அன்புள்ள தமிழ்ப்பிரபா,
அவை வெக்கை நாவலுக்கான தொடர்ச்சியாக எழுதப்பட்டவைதான். இலக்கிய வகைமையில் tribute என்னும் ஒன்று உண்டு. ஏற்கனவே எழுதப்பட்ட முதன்மையான படைப்புக்கு தொடர்ச்சி- எதிர்தரப்பு என எழுதுவது. இலக்கியத்தின் இன்றியமையாத நீட்சியாக அவை உருவாகின்றன
இவை இரண்டு வகை. ஒரே கருவை இரு எழுத்தாளர்கள் எழுதுவது. அதில் முதல்படைப்பின் செல்வாக்கு இரண்டாம்படைப்பில் உள்ளடங்கித்தெரியும். உதாரணம் மௌனியின் ஒரு கதையைத்தான் புதுமைப்பித்தன் செல்லம்மாள் என்றபேரில் மீண்டும் எழுதிப்பார்த்திருக்கிறார். மனைவியின் சடலத்தருகே அமர்ந்திருக்கும் கணவன்
இன்னொருவகை, முதல் ஆசிரியன் உருவாக்கிய கதைமாந்தர், களம் ஆகியவற்றை அப்படியே பயன்படுத்துவது. க.நா.சு. புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நரகத்தை’ மீண்டும் எழுதியிருக்கிறார். ‘தெய்வஜன்னம்’ என்று பெயர். புதுமைப்பித்தன் பாரதியின் கதை மாந்தர்களை ’கோபாலய்யங்காரின் மனைவி’ என்றபேரில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்
நான் பின்தொடரும் நிழலின் குரலில் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை நாவலில் வரும் புகழ்பெற்ற கதாபாத்திரமான ;இசக்கியை’ மறு ஆக்கம் செய்திருக்கிறேன். இதுவும் அவ்வாறே. வெக்கைக்கு தொடர்ச்சியான நான்கு கதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் பூமணி எழுதிய உலகின்மீதான என்னுடைய நுட்பமான ஒரு ஊடாட்டம் ஒன்று உள்ளது. உலக இலக்கியத்தில் இப்படி ஏராளமான ஆக்கங்கள் உள்ளன
ஜெ
***