ஆம்புலன்ஸில் அம்மாவை ஏற்றிக்கொண்டு கோபாலப்பிள்ளை ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். இளம் டாக்டர் ஆம்புலன்ஸிலேயே ஏறிக்கொண்டார். நான் மாணிக்கத்திடம் ‘ரைட் பாக்கலாம்’ என்றேன். ‘நானும் வரேன் சார்…அங்க ஒரு ரிப்போர்ட் குடுக்கறேன்’ ‘வாங்க’ என்று ஏற்றிக்கொண்டேன். ‘யூரின் வெளியே எடுத்தாச்சு சார்… டிரிப்ஸ் போகுது. கிட்னி வேலைசெய்றமாதிரியே தெரியலை. நாலஞ்சுநாளா எங்கியோ காய்ச்சல் வந்து கெடந்திருக்காங்க’ நான் ஒன்றும் சொல்லாமல் இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன்.
ஆஸ்பத்திரிக்குள் அம்மாவை கொண்டு செல்லும்போது கவனித்தேன். வயிறு நன்றாக சுருங்கியிருந்தது. வெண்ணிறமான உடை அணிந்திருந்தாள். வெண்ணிறப்போர்வையில் மஞ்சளாக குருதியோ நிணமோ வடிந்து பரவிக்கொண்டிருந்தது. டாக்டரே இறங்கிச்சென்று பேசி அம்மாவை உள்ளே கொண்டு சென்றார். நான் வரவேற்பறையில் காத்திருந்தேன். ஒருமணி நேரத்தில் டாக்டர் இந்திரா என்னை அவரது அறைக்குள் அழைத்தார். நான் அமர்ந்ததும் ‘ஸீ, நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை. மாணிக்கம் டோல்ட் எவ்ரிதிங். ஷி இஸ் சிங்கிங்..’ என்றார். நான் தலையசைத்தேன். ‘பாக்கிறோம். நினைவு திரும்பினா அதிர்ஷ்டம் இருக்குன்னு அர்த்தம்…இஸ் ஷி அவுட் ஆஃப் மைண்ட்?’ நான் தலையசைத்தேன். ‘வெல், சிலசமயம் கடைசி நினைவுகள் தெளிவா இருக்கும். பாக்கலாம்’
இரவாகிவிட்டிருந்தது. நான் எழுந்தேன். டாக்டர் ‘இங்க யாரும் இருக்கவேண்டியதில்லை. ஏதாவது இருந்தா நான் ஃபோன்பண்றேன்’ என்றார். வெளியே மாணிக்கம் இருந்தார். ‘நான் ஸ்டீபனை இங்க நிப்பாட்டியிருக்கேன் சார். அவரு பாத்துக்குவார்’ என்றார். ‘இல்லை மாணிக்கம். பரவாயில்லை. அவர் போகட்டும். இங்கேயே பாத்துக்குவாங்க’ என்றேன். காரைக் கிளப்பியபோதுதான் மூன்றுமணிநேரமாக நான் டீ கூடக் குடிக்கவில்லை என்று நினைவுக்கு வந்தது. உடனே பசிக்க ஆரம்பித்தது.
காரை நிறுத்திவிட்டு காரேஜில் இருந்தே உள்ளே நுழைந்தபோது சுபா வந்து ‘என்ன? சொல்லவேயில்லை’ என்றாள். நான் ஒன்றும் சொல்லாமல் சோபாவில் அமர்ந்து பூட்ஸ்களை கழற்றினேன். ‘சாப்பிடறீங்களா?’ ‘இல்லை குளிச்சிடறேன்’ அவளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. உடைகளைக் கழற்றி அழுக்குக் கூடையில் போட்டுவிட்டு நேராக பாத்ரூம்சென்று ஷவரில் நின்றேன். ஈரத்தைத் துடைத்துக்கொண்டிருந்தபோது மனம் அமைதியாகிவிட்டதை உணர்ந்தேன்
டைனிங் டேபிளில் சுபா தட்டு பரப்பியிருந்தாள். ‘நீ சாப்பிடலையா?’ ‘இல்லை. குட்டி இவ்ளவு நேரம் இருந்தான். இப்பதான் தூங்கினான்’ நான் அமர்ந்ததும் அவளும் எதிரே அமர்ந்தாள். நாகம்மா சூடாகச் சப்பாத்தி போட்டு எடுத்துக்கொண்டு வந்து என் தட்டில் போட்டாள். ‘சுபா’ என்றேன். ‘அம்மாவைப் பாத்தேன்’ அவள் கண்கள் நிமிர்ந்து என்னை நோக்கி உறைந்திருந்தன. ’இங்க சர்க்கார் ஆஸ்பத்திரியிலே…பிச்சைக்காரங்களுக்கான கொட்டகையிலே’ அவள் ஒன்றும் சொல்லாமல் உதட்டை மட்டும் அசைத்தாள். ‘ரொம்ப மோசமான நெலைமை. பலநாள் எங்கியோ காய்ச்சலா கெடந்திருக்கா. எல்லா ஆர்கன்ஸும் செத்திட்டிருக்கு. இன்னிக்கோ நாளைக்கோ ஆயிடும்னு சொன்னாங்க’
‘எங்க இருக்காங்க?’ என்றாள். நான் ‘கோபாலபிள்ளையிலே சேத்திருக்கேன்’ அவள் பேசாமல் சரிந்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள். நான் இரண்டாவது சப்பாத்தியை பாதியில் விட்டு எழுந்தேன். ‘நாகம்மா அய்யாவுக்கு பால் கொண்டா’ ‘வேண்டாம்’ என்றேன் ‘சாப்பிடுங்க அப்றம் காலம்பற அசிடிட்டி ஏறிடப்போகுது’ நான் ஒன்றும் சொல்லாமல் படுக்கையறைக்குச் சென்றேன். பாதி போர்த்திக்கொண்டு பிரேம் படுத்திருந்தான். நான் அவனருகே படுத்து அவன் கால்களை மெல்ல வருடிக்கொண்டு மின்விசிறியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சுபா இரவு உடை அணிந்து கையில் பாலுடன் வந்தாள். என்னருகே டீபாயில் வைத்து ’குடிங்க’ என்று சொல்லிவிட்டு கண்ணாடிமுன் நின்று தலையை பெரிய சீப்பால் சீவி கொண்டை போட்டாள். நான் அவளுடைய வெண்ணிறமான பின்கழுத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். திரும்பி ‘என்ன?’ என்றாள். நான் இல்லை என்று தலையாட்டிவிட்டுப் பாலைக் குடித்தேன். எழுந்து பாத்ரூம் சென்று லேசாகப் பல்லைத்தேய்த்து கொப்பளித்துவிட்டு வந்தேன். அவள் படுக்கையில் படுத்துக்கொண்டு ‘நான் வரணுமா?’ என்றாள்.
நான் அவளை வெறுமே பார்த்தேன். ’நான் வந்தாகணும்னா வரேன். ஆனா வரதுக்கு எனக்கு விருப்பம் இல்லை’ எப்போதுமே அவள் மிகுந்த நடைமுறைத்தன்மையுடன் பேசுபவள். ‘எனக்கு நாளைக்கு ரெண்டு மீட்டிங் இருக்கு…ஒண்ணு மினிஸ்டரோட புரோக்ராம். அதை நான் ஒண்ணும் பண்ணமுடியாது. சாயங்காலம் வேணுமானா வர்ரேன்’ நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்? ’ நான் ‘எனக்கு ஒண்ணும் தோணலை’ என்றேன்
‘இங்க பாருங்க, இதை ஒரு பெரிய இஷ்யூவா ஆக்கினா உங்களுக்குத்தான் பிரச்சினை. எப்டியும் அவங்க இன்னைக்கோ நாளைக்கோ போயிடுவாங்க கௌரவமா செய்யவேண்டியதைச் செஞ்சு முடிச்சிடலாம். நானும் வந்து இத ஒரு பெரிய ஷோவா ஆக்கினா அப்றம் எல்லாருக்கும் சங்கடம். துக்கம் விசாரிக்க வர ஆரம்பிச்சிருவாங்க. ஆளுக்கொண்ணா கேட்டிட்டிருப்பாங்க. உங்களுக்கும் சங்கடமா இருக்கும்’ நான் ‘சரி’ என்றேன். ’அப்ப பேசாம படுங்க. ஃபோன் வந்தா எழுப்பறேன். மாத்திரை போட்டுக்கங்க’ நான் பெருமூச்சுடன் மாத்திரை ஒன்றைப் போட்டுக்கொண்டேன்
‘குட்நைட்’ என்றாள் சுபா. நான் ‘ஒருவேளை அம்மா முழிச்சுகிட்டு பிரேமை பாக்க விரும்பினா?’ என்றதும் சுபா கோபமாக எழுந்து அமர்ந்துவிட்டாள். ‘நான்சென்ஸ்!’ என்றாள். ‘லுக் அவன் என் பிள்ளை. அந்த பிச்சைக்காரிதான் அவன் பாட்டின்னு அவன் மனசிலே ஏத்தறதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்’ நான் கொஞ்சம் கோபத்துடன் ‘என்ன சொல்றே? அவன் எனக்கும் மகன்தான். அந்த தெருப்பிச்சைக்காரி பெத்த பிள்ளைதான் நான்’
நான் கோபம் கொண்டால் உடனே நிதானமாக ஆவது அவள் இயல்பு. கண்களில் கூர்மை வந்தது. திடமான மெல்லிய குரலில் ‘இப்பச் சொன்னீங்களே, இதான். இதான் உங்க பிரச்சினை. எப்பவுமே உங்க பிறப்பும் வளர்ப்பும் சாதியும் உங்க மனசிலே இருந்திட்டிருக்கு. அந்த தாழ்வுணர்ச்சியாலதான் உங்க வாழ்க்கைய நீங்க நரகமா ஆக்கிட்டிருக்கீங்க. உங்க கெரியரை டோட்டலா ஸ்பாயில் பண்ணியிருக்கீங்க. அந்த தாழ்வுணர்ச்சிய பிரேம் மனசிலேயும் புகுத்தணுமா? அப்டீன்னா செய்ங்க’
நான் தளர்ந்து பின்னால் சரிந்தேன். ‘லூக், ஸ்டில் யூ கன் நாட் ஸிட் ஃபர்ம்லி இன் எ சேர்’ என்றாள் சுபா. ’உங்க படிப்பு, அறிவு ஒண்ணுமே பிரயோசனமில்லை. ஒருத்தர்கிட்ட கட்டளை போட நாக்கு வளையாது. ஒருத்தர் கண்ணைப்பாத்து பேசமுடியாது. எல்லாரும் முதுகுக்குப் பின்னாடி ஏதோ பேசி சிரிக்கிறாங்கன்னு எப்பவும் ஒரு காம்ப்ளெக்ஸ். என் பையனாவது அவன் ஜெனரேஷன்லே இதிலே இருந்து வெளியே வரட்டும். ப்ளீஸ். செண்டிமெண்ட் பேசி அவன் வாழ்க்கைய அழிச்சிராதீங்க. நீங்க படற சித்திரவதை அவனுக்கும் வரக்கூடாதுன்னா லீவ் ஹிம் அலோன்’
நான் ‘ஓக்கே’ என்றேன். சுபா கனிந்து என் நெற்றியில் கையை வைத்து ‘ஸீ..நான் உங்களப் புண்படுத்தறதுக்காகச் சொல்லலை. இட் இஸ் எ ஃபேக்ட். ப்ளீஸ்’ என்றாள். நான் ‘தெரியும்’ என்றேன். ‘அம்மா உங்களுக்கும் எனக்கும் எல்லா கெட்டபேரையும் வாங்கி குடுத்தாச்சு. சிரிக்க வேண்டியவங்க எல்லாரும் சிரிப்பா சிரிச்சாச்சு. இனிமேலாவது கொஞ்சம் கொஞ்சமா அந்த சிரிப்பு இல்லாம போகட்டும்…’ என் தலை தூக்கத்தில் கனத்தது. ‘சரிதான்…ஓக்கே’ என்றபின் கண்களை மூடிக்கொண்டேன்.
காலையில் என் மனம் அலையற்றிருந்தது. ஆனால் கொஞ்சநேரம்தான். காலையில் ஆஸ்பத்திரிக்கு ஃபோன்செய்து விசாரித்தேன். அம்மா நிலையில் மாற்றம் ஏதும் இல்லை என்று தெரிந்தது. ஒன்பது மணிக்குக் கிளம்பி ஆஸ்பத்திரியை நெருங்க நெருங்க பதற்றம் ஏறி என் கைகள் ஸ்டீரிங்கில் வழுக்கின. சுந்தர ராமசாமியின் வீட்டு முகப்பை அடைந்தபோது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று கொஞ்சநேரம் அவரிடம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று நினைத்தேன். அவர் தன் முகப்பறைக்கு வந்து அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரம்தான்.பிறர் குரலைக் கூர்ந்து கேட்பதில் அவருக்கு நிகராக இன்னொருவரைக் கண்டதில்லை. எத்தனையோ பேர் எதையெதையோ முறையிட்டும் அந்தக் கவனம் அழியவில்லை
அவரது வீட்டுக்குள் இருந்து அவரது சீடனான இளம்எழுத்தாளன் லுங்கியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு வெளியே வந்து கேட்டை பாதி திறந்து போட்டுக்கொண்டு செல்வதைக் கண்டேன். வடகேரளத்தில் காசர்கோட்டில் ஏதோ வேலைபார்ப்பவன். அவர் வீட்டு மாடியில்தான் தங்கியிருக்கிறான் போல. சுந்தர ராமசாமியிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது சிலதடவை அவனும் கலந்துகொண்டிருக்கிறான். அப்போது அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்று ஆசைப்பட்டேன். உள்ளே செல்லவேண்டுமென நினைத்தாலும் கார் அதுவே செல்வதுபோல தாண்டிச்சென்று கோபாலபிள்ளை ஆஸ்பத்திரிமுன்னால் நின்றது.
டாக்டர் இந்திரா வரவில்லை. பயிற்சி டாக்டர் என்னை நோக்கி வந்து பணிவாக வணக்கம் சொன்னான். ’எப்டி இருக்காங்க?’ என்றேன். ‘அப்டியேதான் சார்’ என்றான். அம்மாவின் அறையில் இருந்து குஞ்சன்நாயர் என்னை நோக்கிப் பெருச்சாளி வருவது போலக் குனிந்தபடி ஓடிவந்தான். ‘நான் காலத்தே வந்திட்டேன் சார். அம்மைக்கு இப்பம் கொஞ்சம் கொள்ளாம். மூத்திரம் எடுத்த பிறகு முகத்தில் ஒரு ஐஸ்வரியம் உண்டு’ என்றான். நான் அவனிடம் ‘நீங்க ஆபீஸிக்குப்போய் நான் டிரேயிலே வச்சிருக்கிற பேப்பரை எல்லாம் எடுத்து கனகராஜ்ட்ட குடுங்க’ என்றேன். ‘நான் இங்க?’ என்றான். ‘நான் இருக்கேன்’ ‘அல்ல சார், நான் இங்க துணையாட்டு…’ ‘வேண்டாம்’ ‘ஓ’ என்று பின்னால் நகர்ந்தான்
அறைக்குள் சென்றேன். அம்மா அதேபோல படுத்திருந்தாள். கிட்டத்தட்ட சடலம்தான். சலைன் இறங்கிக்கொண்டிருந்தது. இன்னொருபக்கம் துளித்துளியாக சிறுநீர். அருகே போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துகொண்டு அம்மாவையே பார்த்தேன். நெற்றியிலும் கன்னத்திலும் தோள்களிலும் கைகளிலும் முழுக்க ஏராளமான புண்ஆறிய வடுக்கள். சில வடுக்கள் மிக ஆழமானவை. நெற்றியில் ஒருவடு மண்டை ஓடே உடைந்தது போலிருந்தது. வாழ்நாளில் எப்போதுமே ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்க மாட்டாள். எல்லா புண்களும் பழுத்து சீழ்வைத்து சிலசமயம் புழுகூட வைத்து தானாக ஆறியிருக்கவேண்டும். நாய்களுடனும் சக மனிதர்களுடனும் சண்டையிட்ட காயங்கள். யார் யாரோ கல்லால் அடித்தவை, குச்சிகளால் அடித்தவை, டீக்கடைகளில் வெந்நீர் ஊற்றியவை..
நான் சுபாவை காதலிக்கும் நாட்களில் அந்தரங்கமான தருணம் ஒன்றில் என் சட்டையை கழற்ற நேர்ந்தபோது அவள் விக்கித்துப்போனாள். ‘மை குட்நெஸ்..இதென்ன இவ்ளவு காயம்?’ நான் வரண்ட சிரிப்புடன் ‘சின்னவயதிலே நான் புண்ணில்லாம இருந்ததே கெடையாது…’ என்றேன். அவள் என் முதுகில் இருந்த நீளமான தழும்பை விரலால் தொட்டு மெல்ல வருடினாள். ‘புறமுதுகு காயம்ல அது…. மார்பிலே நல்ல விழுப்புண் இருக்கு’ என்றேன். சட்டென்று அவள் விசும்பி அழுதபடி என்னை தழுவிக்கொண்டாள். என் தோள்களிலும் புஜங்களிலும் இருந்த வடுக்களில் முத்தமிட்டாள்.
ஏழுவயதில் முழு நிர்வாணமாக அம்மாவுடன் தெருவில் அலைந்துகொண்டிருந்தபோது என் உடம்பெங்கும் பொளிபொளியாக சொறியும் சிரங்கும் நிறைந்திருந்தன. விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இமைகள் ஒட்டி தோலே தெரியாதவனாக இருந்தேன். எந்நெரமும் பசியாலும் வலியாலும் சிணுங்கி அழுதுகொண்டு கண்ணுக்குப்பட்ட எதையும் எடுத்து வாயில் வைத்து சாப்பிடமுயன்றுகொண்டு நடந்தேன். எங்கோ ஒரு தாடிக்காரர் தெருப்பிள்ளைகளுக்குச் சோறு போடுகிறார் என்று கேள்விப்பட்டு அக்காவின் கையைப்பிடித்துக்கொண்டு சென்றிருந்தேன். பிரஜானந்தர் கரமனை ஆற்றின் கரையில் உருவாக்கியிருந்த குருகுல ஆசிரமம்.
ஏற்கனவே அங்கே ஏராளமான தெருப்பிள்ளைகள் கூடி நின்றார்கள். கரமனை ஆற்றில் இறங்கி குளித்து உடல்புண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டு அவர்கள் தரும் நல்ல ஆடையை அணிந்துகொண்டு ஒரு பெரிய கூடத்தில் அமர்ந்து பிரார்த்தனைப்பாடல்களைப் பாட வேண்டும். ஒருமணிநேரம் அங்கே சொல்லிக்கொடுக்கப்படும் பாடங்களைப் படிக்கவேண்டும். அதன்பின் சோறு போடுவார்கள். முன்னரே வந்த பிள்ளைகள் ஆற்றில் இறங்கி மணலை அள்ளி தேய்த்து குளித்தனர். காவிவேட்டியை முழங்காலுக்கு மேலே ஏற்றிக்கொண்டு நின்ற இளம் துறவி ஒருவர் ‘டே, அவன்…அவன் கறுப்பன்..அவன் நல்லா தேய்ச்சில்ல…தேய்க்கடே’ என்றெல்லாம் சத்தம் போட்டு அவர்களைக் குளிக்கச்செய்துகொண்டிருந்தார்.
நான் நீரைப்பார்த்ததுமே நின்று விட்டேன். அவர் என்னைத் திரும்பிப்பார்த்ததும் அலறியபடி திரும்பி ஓடினேன். ‘டே, அவனப் பிடிடே’ என்று அவர் சொன்னதும் நாலைந்து பெரிய பையன்கள் என்னைத் துரத்திப்பிடித்து மண்ணில் இழுத்தும் தூக்கியும் கொண்டுவந்து அவர் முன்னால் போட்டார்கள் . சுவாமி என் கையைப்பிடித்து கழுத்தளவு நீரில் தூக்கிப்போட்டார். மீன்கள் சரமாரியாக மொய்த்து என்னைக் கொத்த ஆரம்பித்தன. நான் கதறித் துடித்தேன். அவர் என்னைத் தூக்கிக் கல்லின்மேல் அமரச்செய்து தேங்காய்நாரால் தரதரவென்று தேய்த்தார். நான் அலறி விரைத்து அவரது கையை அழுத்திக்கடித்தேன். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை
உடம்பெங்கும் ரத்தம் கொட்ட நின்ற என்னை கையை விடாமலேயே இழுத்துச்சென்று என் உடம்பெங்கும் நீலநிறமான ஏதோ திரவத்தைப் பூசினார். அது பட்டதும் முதல்கணம் குளிர்ந்து மறுகணம் தீப்பிடித்தார்போல எரிந்தது. கையை உதறிக்கொண்டு அழறியழுதபடி ஓடினேன். அவர் என் பின்னால் வந்து ‘ஓடினால் சோறு இல்லை…ஓடினால் சோறு இல்லை’ என்றார். நான் திகைத்து நின்றேன். மேலே கால் எடுத்துவைக்க என்னால் முடியவில்லை. ‘ காப்பய்க்கு சோறு வேணுமே.. சோறூ’ என்று அங்கே நின்று அழுதேன்.
என் உடம்பில் எரிச்சல் குறைய ஆரம்பித்தது. பல இடங்களில் அமர்ந்தும் நின்றும் மீண்டும் ஆசிரமத்தை நெருங்கி வந்து திண்ணையைப்பற்றிக்கொண்டு நின்று ‘தம்றா சோறு தா .. தம்றா சோறு தா.. தம்றா…’ என்றேன்.
சுவாமி என்னை நேராகத் தூக்கிக்கொண்டுசென்று உள்ளே ஒரு பெரிய கூடத்தில் அமரச்செய்தபின் என் முன் நானே படுக்கும் அளவுக்கு பெரிய இலையை விரித்து அதில் பெரிய சிப்பலால் சோற்றை அள்ளி வைத்தார். நான் ‘னின்னும்’ என்றேன். மேலும் வைத்தபோது உடனே ‘னின்னும்’ என்றேன் ‘இதை தின்னுடா தீக்குச்சி..அதுக்கு பிறகு தரும்’ என்றார் சுவாமி.
நான் இலையுடன் சோற்றை அள்ளிக்கொண்டு எழப்போனபோது என் மண்டையில் அடித்து ‘இருந்து தின்னுடா’ என்றார். அப்படியே அமர்ந்து கொண்டு சோற்றை உருட்டினேன். அதை வாயில் வைக்கும்போது அதட்டலுக்காக காதும் உதைக்காக முதுகும் துடித்துக் காத்திருந்தன. முதல் கவளத்தை உண்டு விட்டு ஏனென்று தெரியாமல் எழப்போனேன். சுவாமி ‘தின்னெடே’ என்றார். மீண்டும் அமர்ந்துகொண்டு கொதிக்க கொதிக்க அள்ளி வாய்க்குள் போட்டுக்கொண்டே இருந்தேன்.
சோற்றுமலை, சோற்று மணல் வெளி, சோற்றுப்பெருவெள்ளம், சோற்றுயானை… உலகமில்லை. சூழல் இல்லை. சோறும் நானும் மட்டுமே அப்போது இருந்தோம். ஒருகட்டத்தில் என்னால் மேற்கொண்டு உண்ண முடியவில்லை. வாய்வரை உடம்புக்குள் சோறு மட்டுமே நிறைந்திருப்பதாகத் தோன்றியது. என் வயிறு பெரிய கலயம்போல பளபளவென்றிருந்தது. மீசைக்காரர் ஒருவர் ‘லே, தாயளி உனக்க வயறும் நிறைஞ்சு போச்சேலே… வயற்றிலே பேனு வச்சு நசுக்கலாம்ணு தோணுதே…’ என்றார்
நான் அவர் என்னை அடிக்கப்போகிறார் என்று எண்ணி எழுந்து ஓரமாக நகர்ந்தேன். ‘லே லே இரி…உன்ன ஒண்ணும் ஆரும் செய்ய மாட்டா. இருந்துக்கோ. இன்னும் சோறு வேணுமால?’ என்றார் ஆம் என்று தலையசைத்தேன். ‘இன்னும் சோறு திண்ணா நீ எலவங் காயி மாதிரி வெடிச்சு ஒடைஞ்சு சோறா வெளிய வரும் கேட்டியா? நாளைக்கு சோறு வேணுமா?’ ஆம் என்று தலையசைத்தேன். ‘நாளைக்கும் வா…இங்கவந்து சாமி சொல்லிக்குடுக்குத பாட்டும் அட்சரமும் படிச்சேண்ணாக்க நிறையச் சோறு தருவாரு…’
அவ்வாறுதான் நான் பிரஜானந்தரின் ஆசிரமத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கே அப்போது முப்பதுக்கும் மேற்பட்ட தெருப்பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு ஆள்சேர்க்கவே அந்தச் சாப்பாடு போடப்பட்டது. அதில் மயங்கி வரும் பிள்ளைகளைச் சுவாமி போதானந்தர் பள்ளியில் சேர்த்துவிடுவார். சுவாமி பிரஜானந்தரால் நிறுவப்பட்டாலும் பள்ளியை நடைமுறையில் போதானந்தர்தான் நடத்திக்கொண்டிருந்தார். கன்னங்கரேலென்ற நீண்ட தாடியும் தோளில்புரளும் சுருண்ட குழலும் பயில்வான் போன்ற உடலும் கொண்ட குட்டையான இளைஞர்.
அவரது கைகளின் வலிமை அந்த வயதில் எனக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்தது. என்னை முதலில் அவர் குளிப்பாட்டிய பின்னர் அவர் என்னை தூக்குவதற்காக எப்போதும் ஏங்கினேன். அவர் அருகே சென்று பார்த்துக்கொண்டு நிற்பேன். அவர் கவனிக்காவிட்டால் உடலில் மெல்ல உரசுவேன்.என்னை அவர் கவனித்தாரென்றால் சட்டென்று சிரித்துக்கொண்டே இடுப்பில் பிடித்து சட்டென்று மேலே தூக்கி இறக்குவார். எடையிழந்து பறவைபோல வானைநோக்கி பாய்ந்துசென்று மிதந்திறங்குவேன். சிரித்துக்கொண்டே ’னின்னும் னின்னும்’ என்று சிணுங்கியபடி அவர் பின்னால் செல்வேன்.
என்னை அவரது பள்ளியில் சேர்த்துக்கொண்டார் போதானந்தர். கொஞ்சநாள் பூஜைகளில் கலந்துகொண்டு ‘தெய்வமே காத்துகொள்க கைவிடாதிங்கு ஞங்ஙளே’ என்ற நாராயணகுருவின் பாடலைப் பாடிக்கொண்டிருந்தேன். அதன்பின் பூஜை நடந்து அனைவருக்கும் சுண்டலோ சர்க்கரைப்பொங்கலோ தருவார்கள். பூஜைக்குமட்டும் சுவாமி பிரஜானந்தர் வந்து அமர்வார். சுருண்ட வெண்ணிறத்தாடி பூஜையில் வைக்கப்பட்டிருந்த பெரிய சங்கு போல அவர் முகத்தில் இருக்கும். கூந்தல் இரு தோளிலும் வெள்ளைத்துணி மாதிரித் துவண்டு கிடக்கும். மெலிந்த சின்ன உடல் கொண்ட மனிதர். மெல்லிய குரலில் பேசுவார்.
பிரஜானந்தரின் அந்தக் குருகுலம் வெற்றியா தோல்வியா என்று என்னால் சொல்லமுடியவில்லை. அங்கே எப்போதும் இருபது முப்பது பிள்ளைகள் இருந்தார்கள். தினமும் நூறுபேர்வரை சாப்பிட்டார்கள். ஆனால் தொடர்ச்சியாகப் பத்துபேர்கூடக் கல்விகற்கவில்லை. பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள் வந்து சண்டைபோட்டு அவர்களைக் கூட்டிச்சென்றார்கள். சிலநாட்கள் தங்கியதும் சலித்துப்போய் பிள்ளைகளே தப்பி ஓடிவிட்டு கொஞ்சநாள் கழித்து உடலெங்கும் சொறியும் அழுக்கு உடையும் காந்தும் பசியுமாக திரும்பிவந்தார்கள்.
நான் அங்கே தங்க ஆரம்பித்த நான்காம்நாளே என் அம்மா வந்து என்னை இழுத்துச்சென்றுவிட்டாள். அவளுடன் நகரமெங்கும் அலைந்து திரிந்தேன். நகரம் முழுக்க ஒருகாலத்தில் எடுப்புக்கக்கூஸுக்காக இரண்டாள் செல்லும் அகலத்தில் சிறிய சந்துப்பாதை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆற்றிலோ ஓடையிலோ ஆரம்பிக்கும் அந்த பாதை பெருவீதிகளுக்கு சமாந்தரமாக எல்லா வீடுகளுக்கும் பின்பக்கம் வழியாக ஓடி நகரையே சுற்றிவரும். எங்கள் ஆட்கள் முழுக்க அதன்வழியாகவே நடமாடுவார்கள். அங்கேதான் எங்களுக்கான உணவு முழுக்க கிடைத்தன. குப்பைகள், பெருச்சாளிகள், ஓட்டலின் எச்சில் இலைக்குவியல்கள்..
அந்தக்காலத்தில் திருவிதாங்கூரின் மொத்த நாயாடிகளும் திருவனந்தபுரத்திற்கே வந்துவிட்டிருந்தார்கள் என்று தோன்றுகிறது. உண்மையில் நாயாடிகளைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது,நாயாடிகளுக்கேகூட. நாகம் அய்யா எங்கள் சாதியை கண்ணால் பார்த்து தீட்டுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. பிறரது மனப்பதிவுகளையே அவர் எழுதியிருக்கிறார். ஆனால் எங்களைப்பற்றி மிக விரிவான குறிப்பு அவருடையதே.எட்கார் தர்ஸ்டன் கூட சில வரிகளே எழுதியிருக்கிறார். 1940ல் மேலும் விரிவான மானுவலை தயாரித்த ’சதஸ்யதிலகன்’ திவான் வேலுப்பிள்ளை நாகம் அய்யாவின் அதே வரிகளை அப்படியே சேர்த்துக்கொண்டார். எண்ணிக்கையைமட்டும் எழுபதாயிரம் என்று கூட்டிக்கொண்டார்.
ஆனால் அப்போது எங்கள் சாதியில் பெரும்பாலானவர்கள் செத்து அழிந்திருக்கக்கூடும். அக்காலகட்டத்தில் காலராவால் திருவிதாங்கூரில் கூட்டம் கூட்டமாக மக்கள் செத்துக்கொண்டிருந்தார்கள். ஊரும் அடையாளமும் அரசுக்கு வரிக்கணக்கும் உள்ள மக்களே செத்து அனாதைப்பிணங்களாக நாறியபோது நாயாடிகளை யார் கவனித்திருக்கப் போகிறார்கள். மண்ணுக்கடியிலேயே செத்து அங்கேயே மட்கும் பெருச்சாளிகளைப்போல இறந்து மறைந்திருப்பார்கள்.
எஞ்சியவர்கள் திருவனந்தபுரம் கொல்லம் போன்ற பெருநகரங்களுக்கு குடியேறியிருந்திருக்க வேண்டும். அங்கே அவர்கள் ஏற்கனவே தெருவில் வாழ்ந்த பல்வேறு குறவச்சாதிகளில் ஒன்றானார்கள். பாதிக்குமேல் குடியேறிகளால் ஆன பெருநகர்களில் நாயாடிகளைப்பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. பகல்ஒளியில் பிச்சை எடுக்க வாய்ப்புகிடைத்ததை பெரும் சமூகப்பாய்ச்சலாக எங்கள் முன்னோர்கள் உணர்ந்திருக்கலாம். நகரம் குப்பைகளை வெளியே தள்ளிக்கொண்டே இருந்தது. அவர்கள் அதில் புழுக்களைப்போல குட்டிபோட்டுச் செழித்து வளர்ந்தார்கள்.
சிலநாட்கள் கழித்து சோறு நினைவு வந்து நான் அம்மாவிடமிருந்து தப்பி மீண்டும் ஆசிரமத்திற்குச் சென்றேன். போதானந்தர் மீண்டும் என்னைக் கரமனை ஆற்றில் தூக்கிப்போட்டு குளிப்பாட்டி இலைபோட்டுச் சோறுபரிமாறினார். கொஞ்சநாளில் அவருக்கு என்னிடம் ஒரு தனிப்பிரியம் உருவாகியது. நான் பாடலை விரைவிலேயே மனப்பாடம் செய்துவிட்டேன் என்பதே அதற்கான முதல் காரணம். எனக்கு ஆசிரமத்தில் தர்மபாலன் என்று பெயரிட்டார்கள். பிரார்த்தனைக்காக பிரஜானந்தர் வந்து அமர்ந்ததும் போதானந்தர் ’தர்மா பாடுடே’ என்று சொல்வார். நான் எழுந்து சென்று கைகளைக் கூப்பிக்கொண்டு உரக்க ‘தெய்வமே காத்துகொள்க’ என்று பாடுவேன்.
தொடர்ச்சியாக என் அம்மா என்னை வந்து கூட்டிச்செல்ல ஆரம்பித்தபோது போதானந்தர் தடுத்தார். அம்மா கைகளைக் கூப்பியபடி ‘சாமி புள்ளேயே தா சாமி’ என்று கதறியபடி ஆசிரமத்தின் படிக்கட்டுகளிலேயே அமர்ந்துவிடுவாள். அவளிடம் என்ன சொன்னாலும் புரியாது. ’புள்ளேயே தா சாமீ’ என்று அழுதுகொண்டிருப்பாள். அவளுக்கு நிறைய பிள்ளைகள் பிறந்து பெரும்பாலும் இறந்துவிட்டன. நான் கைகளைப்பற்றிக்கொண்டு அலைந்த என் அக்கா கூட ஒரு ஆடிமாத மழையில் கடைத்திண்ணை ஒன்றில் செத்துகிடந்திருக்கிறாள். ஆகவே என்னை விட்டுவிட அம்மாவுக்கு மனமில்லை.
அம்மாவுக்குத் தெரியாமல் என்னை நாராயணகுருவின் ஆலுவா அத்வைத ஆசிரமத்திற்கும் அங்கிருந்து பாலக்காடு உறைவிடப்பள்ளிக்கும் அனுப்பினார்கள். சில வருடங்களில் நான் முழுமையாக மாறினேன். திடமான கைகால்களும் சுருண்டமுடியும் பெரிய பற்களும் கொண்டவனாக ஆனேன். என்னுடைய பசி முழுக்க படிப்பில் ஊன்றியது. பேசுவது அனேகமாக இல்லாமலாகியது. எனக்கு ‘மூங்கை’ என்றே பள்ளியில் பெயர் இருந்தது. அதாவது கூகை. விழித்துப்பார்த்துக்கொண்டு அசையாமல் வகுப்பில் அமர்ந்திருக்கும் கரிய உருவம்.
போதானந்தர் கோழிக்கோடு கடற்கரையில் காலராவில் சிக்கியவர்களுக்குச் சேவைசெய்யச்சென்ற இடத்தில் மரணமடைந்தார். பிரஜானந்தரின் பள்ளி அரசாங்கத்தின் பழங்குடிநலத்துறையால் ஏற்றெடுக்கப்பட்டது. பிரஜானந்தரின் டிரஸ்டில் இருந்து மாதம்தோறும் சிறிய பணம் வந்தது. என்னுடைய சாதிக்குரிய உதவித்தொகையும் இலவசங்களும் இருந்தன. நான் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் பழங்குடி விடுதியில் இருந்த அத்தனை பேரும் எதையாவது படித்துக்கொண்டுதான் இருந்தார்கள். படிப்பை நிறுத்திவிட்டால் வேலை தேடவேண்டியிருக்கும். படிக்கும்போது சோறு போடுவதாக இருந்த சாதி முத்திரை வேலைதேடும்போது தடையாக ஆகிவிடும். கிடைத்தால் அரசு வேலை, இல்லையேல் வேலையே இல்லை.
என் விடுதியிலும்கூட நான் தனியனாகவே இருந்தேன். பழங்குடிகளுக்கான விடுதியில் இருந்த ஒரே நாயாடி நான்தான். என்னுடன் அறையைப் பங்கிட்டுக்கொள்ளக்கூட எவருமில்லை. நான் மட்டும் கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதிகாலையில் எழுந்து ரயில்பாதையோரமாக சென்று மீள்வேன். சிறுநீர் கழிப்பதற்குக் கூட அருகே உள்ள பொட்டலுக்குச் செல்வேன். என்னிடம் பேசும் எவரிடமும் இயல்பாகவே அதட்டல் தொனி உருவாகிவிடும். எந்த அதட்டலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள நானும் பழகிவிட்டிருந்தேன்.
அந்நாட்களில் நான் என் அம்மாவை பார்த்ததே இல்லை. அவளைப்பற்றி நினைத்ததும் இல்லை. என்னை ஒரு எலிபோலவே உணர்ந்த நாட்கள் அவை. பதுங்கி ஒதுங்கி உயிர்வாழக் கொஞ்சம் இடத்தை தேடிக்கொண்டே இருக்கும் ஜீவன். ஓடும்போதுகூட பதுங்கிக்கொண்டே ஓடக்கூடியது. உடலே பதுங்கிக்கொள்வதற்காக கூன்முதுகுடன் படைக்கப்பட்டது. எப்படியாவது எவர் கண்ணிலும் கவனத்திலும் விழாமல் இருந்துகொண்டிருப்பதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன்.
பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு படித்ததும் என்னை பிரஜானந்தர் பார்க்க விரும்புவதாகச் சொல்லியனுப்பினார். நான் திருவனந்தபுரம் சென்றேன். அவரது ஆசிரமத்தில் அதிக ஆட்கள் இல்லை. ஓரிரு வெள்ளையர் மட்டுமே கண்ணில் பட்டனர். வயதாகி முதிர்ந்த பிரஜானந்தரை நீண்ட இடைவெளிக்குப்பின்னர் பார்த்தேன். அவரை ஒரு வெள்ளை இளைஞன் தன் பெரிய கைகளால் பற்றிக் கிட்டத்தட்டத் தூக்கிக்கொண்டுவந்து நாற்காலியில் அமரச்செய்தான். அவரது தலை நடுங்கிக்கொண்டிருந்தது. முடி நன்றாகவே உதிர்ந்து வழுக்கை நிறைய மச்சங்களுடன் இருந்தது. கூன் காரணமாக முகம் முன்னால் உந்தி வந்து நின்றது. மூக்கு வாய்நோக்கி மடிந்து உதடுகள் முழுமையாகவே உள்ளே சென்று வாய் ஒரு மடிப்பு போல தெரிந்தது.
‘நல்லா வளர்ந்து போயாச்சு..இல்லியா?’ என்றார். நான் பேசுவது தமிழ் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. உண்மையில் என்ன காரணத்தாலோ நானும் என்னை முடிந்தவரை மலையாளத்தில் இருந்து விலக்கிக்கொண்டிருந்தேன். என் நிறமும் தோற்றமும் தமிழ்நாட்டுடன் என்னை அடையாளம் காணச்செய்திருக்கலாம். அவரது கைகளும் தலையும் வேகமாக ஆடிக்கொண்டே இருந்தன. அவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் என்னிடம் ‘எம்.ஏ முடிவுகள் எப்போது வரும்?’ என்றார். நான் ‘ஜூனில்’ என்றேன். ‘என்ன செய்யப்போகிறாய்?’ நான் பேசாமல் நின்றேன். ‘நீ சிவில் சர்வீஸுக்கு போ’ என்றார். அவர் கையை தூக்கியபோது கிட்டத்தட்ட வலிப்புவந்தது போல கை ஆடியது. நான் பேசமுற்பட்டாலும் வார்த்தை வரவில்லை. ‘என்ன பேச்சே இல்லை?’ நான் ‘மன்னிக்க வேண்டும் குரு’ என்றேன்
‘ஆங்கிலம் உன் வாயில் வரவில்லை. அதுதான் உளறுகிறாய். ஆங்கிலம் பேசினால்தான் நீ மனிதன். சரளமாக ஆங்கிலம் பேசாவிட்டால் என்ன படித்தாலும் நீ வெறும் நாயாடிதான். நாராயண குருதேவன் எல்லாரிடமும் ஆங்கிலம் படிக்கச்சொன்னது சும்மா அல்ல. ஆங்கிலம் படி…முடிந்தால் நாற்பது வயதுக்குமேல் சம்ஸ்கிருதமும் படி…’ நான் சரி என்றேன். பேச்சின் அயற்சியால் அவரது கைகள் நன்றாக ஆடவே அவற்றைத் தொடைகளுக்கு அடியில் வைத்துக்கொண்டார். இப்போது இரு முழங்கைகளும் வெடவெடத்தன. ‘சிவில் சர்வீஸ் எழுது. சும்மா ஜெயித்தால் போதாது. ரேங்க் வேண்டும். எவனும் உன் விடைத்தாளைக் குனிந்து பார்க்கக்கூடாது’ ‘ஆகட்டும் குருதேவா’ என்றேன் ‘ஜேம்ஸிடம் சொல்லியிருக்கிறேன். டிரஸ்டில் இருந்து உனக்கு நான்குவருடங்களுக்கு பணம் கொடுப்பார்கள்’
நான் திடமாக ‘நான்கு வருடங்கள் தேவைப்படாது. இரண்டு வருடம் போதும்’ என்றேன். அவர் நான் சொல்வதை புரிந்துகொண்டு மெல்ல புன்னகை செய்தார். ஆமாம் என்பது போல தலையாட்டி, அருகே வரும்படிக் கையைக் காட்டினார். நான் அருகே சென்றதும் என்னைத் தோளில் தொட்டு மெல்ல கழுத்தில் கைசுழற்றி அணைத்துக்கொண்டார். அவரது கரம் என் தோளில் ஒரு முதிய பறவையின் இறகுதிர்ந்த சிறகு போல அதிர்ந்தது. நான் முழந்தாளிட்டு அவரது மடியில் என் தலையை வைத்துக்கொண்டேன். என் தலையை மெல்ல வருடி ஆடும்குரலில் ‘தைரியம் வேண்டும்’ என்றார். ‘நூறுதலைமுறையாக ஓடியாகிவிட்டது. இனிமேல் அமர வேண்டும்’ நான் விம்மிவிட்டேன். என் கண்களில் இருந்து அவரது மடியில் காவிவேட்டியில் கண்ணீர் கொட்டியது
அவரது கைகள் என் காதுகளை மெல்ல பிடித்து விட்டன. என் கன்னங்களை வருடின. ‘அம்மாவைக் கைவிடாதே. அம்மாவை வைத்துக்கொள். அம்மாவுக்கு இதுவரை நாம் செய்தது பெரிய பாவம். அவள் ஒன்றுமறியாத தூய மிருகம் போல. மிருகங்களின் துயரத்தை ஆற்றுவிக்கவே முடியாது. ஆகவே அது அடியில்லாத ஆழம் கொண்டது. அம்மாவுக்கு எல்லா பிராயச்சித்தமும் செய்…’ என்றார். நான் பெருமூச்சு விட்டு கண்களை துடைத்தேன். ‘நான் சீக்கிரமே குருபாதம் சேர்வேன். நீ வரவேண்டியதில்லை’ நான் நிமிர்ந்து அவரைப்பார்த்தேன். மெழுகுபோல உணர்ச்சிகளே இல்லாமலிருந்தது முகம். நான் ‘சரி’ என்றேன்.
அன்று திருவனந்தபுரத்தில் அம்மாவை தேடிக்கண்டுபிடித்தாலென்ன என்று எண்ணிய்படி இரவு முழுக்க நகரில் அலைந்தேன். அவளைத் தேடிப்பிடிப்பது மிக எளிமையானது. ஏதாவது ஒருநாயாடியிடம் கேட்டால் போதும். ஆனால் கண்டுபிடித்து என்ன செய்வதென்று தோன்றியது. மனம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தமையால் என்னால் எங்கும் நிற்கவோ அமர்ந்திருக்கவோ முடியவில்லை. விடிய விடிய தெருக்கள் தோறும் சந்துகள் தோறும் நடந்தேன். இருளில் மெல்லிய அசைவாகத்தெரிந்த ஒவ்வொரு உடலும் என்னை விதிர்க்கச் செய்தன. குழந்தையுடன் ஒருத்தி ஆழமான விரிந்த சாக்கடைக்குள் ஈரமில்லாத இடத்தில் படுத்திருந்தாள். குழந்தை நிமிர்ந்து மின்னும் சிறு கண்களால் என்னைப்பார்த்தது. என்னை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
விடிவதற்குள்ளாகவே நான் பாலக்காடு சென்றேன். அங்கிருந்து சென்னை. தேர்வு முடிந்து காத்திருந்த நாட்களில் மீண்டும் மீண்டும் சுவாமி சொன்ன சொற்கள் மீது சென்று மோதிக்கொண்டிருந்தது மனம். அம்மாவுக்கு நான் என்ன பிராயச்சித்தம் செய்ய முடியும்? நாட்கணக்காக வருடக்கணக்காக ஆறவேஆறாத துக்கத்துடன் என்னை தேடியிருப்பாள். ஆசிரமவாசலிலேயே கண்ணீருடன் பழிகிடந்திருப்பாள். எனக்கு என்ன ஆயிற்று என்று அவளுக்கு எப்படி புரியவைப்பதென்றறியாமல் அவர்கள் திகைத்திருப்பார்கள். ஆனால் நான் என்ன செய்யமுடியும்?