மீறலுக்கான தண்டனையின் மூலம் எங்கிருந்து பெறப்படுகிறது?

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

 

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?  மீதான என்  எண்ணங்கள்

 

மதுரையில் தெருவெங்கும் குட்டி குட்டி அழகான கோயில்கள் , மாதந்தோறும் பூக்களால் அலங்கரிங்கப்பட்டு பல்லக்குளில் மாசி வீதிகளில் இறைவன், இறைவியின் ஊர்வலம், வருடந்தோறும் ஊரை மக்கள்திரள்களால் நிரப்பும்  திருவிழாக்கள் என இருந்தாலும்,  மார்க்ஸிய மதத்தை தவிர  அனைத்தையும்  ஐயத்தோடு அணுகும் சூழலில் தான் வளர்ந்தேன்.   நான்  முதன் முதலில் அறிய நேர்ந்த கீதை  பிராமணிய அதிகாரத்தை  நிறுவ, சாதிய அமைப்பை வலியுறுத்தும் தீண்டப்படக்கூடாத நூலாகவே இருந்தது. இப்போதைய எனது வாசிப்பின்  புரிதலின் படி.  சக மனிதர்களிடம் எதனையும் பறிக்காமல். படைத்தல்,  பகிர்தல் என்னும் இரணடு கர்மங்களை மட்டும்  பற்றில்லாமல்  மேற்கொள்ள தூண்டும் நூலாகப்  பார்க்கிறேன்.

 

கொசுக்கள் மொய்க்கும், பெரும் துர்நாற்றத்துடன் வழிந்தோடும் சாக்கடை வாய்க்காலின் அருகே  வாசலமைந்த வீடுகளில்  நான் வசிக்க நேரந்தாலும்,   அந்த சாக்கடை கழிவினை அள்ளுபவரும்,  என் வீட்டில் இறந்த கன்றுக்குட்டியின் உடலினை  காசு கொடுத்து  வாங்கிச்  சென்ற பட்டியல் இனத்தவரும்,  என் மதத்தைச் சேரந்த சகமனிதனாலும், அவர்களை  விட நான்  அடுக்கில் உயர்ந்தவன்.   என் வீட்டிற்குள் அவர்களுக்கு இடமில்லை. அவர்களைப் பற்றிய பேச்சை தவிர்க்க மட்டுமே முதன் முதலில் கற்பிக்கபபட்டிருந்தேன்.  மூணாறில் எனக்கு காரோட்டியாக வந்த  அம்பேத்கார் தெருவில் வாழும் தலித் இளைஞ

அங்கு  காட்டில் வாழும் பழங்குடி மனிதர்  விலங்கினை விட கீழானவர். உரையாடுவதற்கு  கூட  தகுதி இல்லாதவர்.  இந்த நடைமுறை  கற்பிதம் எவ்வாறு நூற்றாண்டுகள் கடந்து என்னை வந்தடைந்தது ?

 

தொழில்,  இயல்பு , செயல்   அல்லது தகுதியின்  அடிப்படையில்  ஆரம்பத்தில் உருவாகி அமைந்திருக்க சாத்தியமிருக்கும் வர்ண அமைப்பு,  பின்னர் பிறப்பின் அடிப்படையில் ஆனதன் சிக்கலான வரலாறு பற்றிய  ஒரு கருதுகோளை அம்பேத்கார் வைக்கிறார்.  சாதிய அமைப்பும்  முக்கியமாக  த‍லித் என்கிற  தனித்த வகைப்பாடு இந்து மதத்திற்கே உரியது என்கிறார்.

 

மேற்குலகில் அடிமை முறையில் ஒருவர் தன் எஜமானுக்கு உடைமையாகிறார். ஆகவே அடிமைகளை சிறிதளவேனும் பேணும் கடமை எஜமானனுக்கு உண்டு.  தன் உழைப்பின் ஒரு பகுதியைக்  கொண்டு    பொருளீட்டி  அதைக்கொடுத்து அவன்  விடுதலைக்கான  வாய்ப்புண்டு.   நைஜீரியாவின் பின்புலத்தில் நீங்கள்  எழுதிய  ‘தேவதை’ சிறுகதையிலும் அபாச்சா தான் ஈட்டிய பணத்தினைக்  கொண்டு அடிமை வாழ்விலிருந்து விடுபடுகிறார்.

 

இந்திய சாதி அமைப்பில்  தலித் மற்றும் பட்டியல் இனத்தவரிடம் உழைப்பினை மட்டுமே சுரண்டிப் பெற்று அவர்களை பேணுவதற்கான எந்த பொறுப்பினையும் ஏற்காமல் . இந்த இறுகிய அமைப்பினை மீறும் தருணங்களில் மட்டும் முழு விழிப்புடன் தண்டனை  தரப்படுகிறது. இதற்கான மேற்கோள்கள்   மத நூல்களிலிருந்து  காட்டுப்படுகின்றன. உங்கள் நச்சவரம் சிறுகதையிலும்,  தெருவில் நடமாடியதால் பாம்புத்தோலை கொண்டு தென்னை மரத்தில்   கட்டப்பட்ட அவர்ண  சாதியினரைப்பற்றிய சித்திரம்  வருகிறது.

 

சாதி என்பது மேலிருந்து கீழே கருத்தியலால் திணிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை  என்பதை ஒப்புக் கொண்டாலும்.   இந்த இறுகிப்  போன  அமைப்பு தொடர்வதற்கான முக்கிய  காரணமான மீறுபவர்களுக்கான தண்டனைகளான சாதி விலக்கம் போன்றவைகள் மதத்தின் பெயரிலே  வழங்கப்படுகிறது என்பது  உண்மைதானே.  இந்துக்களாக இருந்தாலும்  மகராஷ்டிராவில்  மஹர் இனமும்,  கேரளாவின் புலையரும், தமிழ்நாட்டில் பறையர்களின்  நிலையும்  ஒன்றுதானே?

 

 

புதியவற்றை ஏற்று முன்னேற எத்தனிக்கும் எந்த  ஒரு சமூகத்திற்கும்  உதற வேண்டிய பெருஞ்சுமை இது.  இந்த இறுகிய கட்டமைப்பு நூற்றாண்டுகள்கள்  கடந்து நம்மை வந்தடைவதற்கான சிக்கலான காரணத்தை எவ்வகையிலேனும் அறிய முயல்வது எனது கடமை என நினைக்கிறேன்.

 

 

 

என்றும்  அன்புடன்

உங்கள்  வாசகன்

சிவமணியன்

முந்தைய கட்டுரைகூண்டுக்குள் பெண்கள்
அடுத்த கட்டுரைநாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?