அபியின் வடிவ எளிமையும், பொருள் வலிமையும்

 

 

அபி புகைப்படங்கள்

அபி கவிதைகள் நூல்

அன்பு ஜெயமோகன்,

 

கவிஞர் அபியின் சில கவிதைகளை முன்னரே வாசித்திருக்கிறேன். ஆனால், ஊன்றிக் கவனித்ததில்லை. சமீபமாய்த்தான், அம்மனநிலை வாய்த்தது.

 

நேற்று இருந்த ’நான்’ இன்றில்லை. இன்று இருக்கும் ’நான்’ நாளை இருக்கப்போவதும் இல்லை. இவ்வுண்மைக்குத் தலையாட்டும் நம்மால் அதை அப்படியே ஒப்புக்கொள்ள இயல்வதில்லை. ‘மாறாத நான்’ எனும் கனவை உருவாக்கத் தலைப்படுகிறோம். அதிலும் ‘நான் விரும்பும் வகையிலான மாறாத நான்’ என்பதைக் கனவின் விதையாக்கவும் துடிக்கிறோம். இம்மனநிலை கொண்ட நம்மை, அபியின் கனவு திகைக்க வைக்கிறது. ”மாற்றல் நிரந்தரப் படுகிறதா / உடனே மாற்றிக் கொள்வோம் / மாற்றல்களை” எனும் அவரின் கவிதையைக் கண்டு நம் கனவு கோபம் கொள்கிறது; திமிறித் தவிக்கிறது. அதைத்தானே அபியும் விரும்புகிறார்.

 

வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது / இல்லை என்பதான வியாக்கியானங்களை ஆயிரக்கணக்கில் கடந்தாயிற்று. இருந்தும் உள்ளுக்குள் குமுறல் குறையவில்லை. மகிழும் சம்பவங்களை வாழ்வின் அர்த்தமாகவும், துயர் கொள்ளும் நிகழ்வுகளை வாழ்வின் வெறுமையாகவும் உணரும் சுயத்தைக் கவனிக்க மட்டுமே செய்திருக்கிறேன். ”உண்டு – இல்லை என்பவற்றின் மீது / மோதிச் சிதறி / அகண்டம் / ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது” எனும் அபியின் கவிதையே சுயம் உணர்வதைக் கேள்வி கேட்கத் தூண்டுகிறது. அக்கேள்விக்கு பதில் இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை என்பதும் விளங்குகிறது.

 

சமூக அடையாளங்களின் மயக்கத்தில் இருந்த என்னை நிர்வாணமாக்கின இலக்கியங்கள். ஒற்றைத் தன்மையிலான  தட்டை வியாக்கியானங்களில் உழன்று கொண்டிருந்த என்னைப் படைப்புகளே ஆசுவாசப்படுத்தின. வாழ்வின் வெளிச்சத்தையும் இருட்டையும் எனக்கு நெருக்கமாக்கிய கதைகளையே இன்றும் ஆசான்களாகக் கொண்டிருக்கிறேன்.  “அலங்கரித்த விநோதங்களை / அகற்றிவிட்டு / எளிய பிரமைகளின் வழியே / என்னைச் செலுத்தும் / இது எது?” எனும் அபியின் கவிதைக் கேள்விக்கு இலக்கியம் எனும் பதிலே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

 

தீர்மானங்களுக்கு எளிதில் வந்து விடுகிறேன். ஆனால், அவற்றில் நீடிக்க முடிவதில்லை. அக்கணத்தில், தீர்மானம் தவறோ என்றும் யோசிக்கிறேன். நிதானித்துக் கவனிக்கையில் தீர்மானங்கள் அப்போதைக்குச் சமாதானம் அளிக்க வந்தவை என்பது தெளிவாகிறது. அவை தவறன்று என்று புரிந்து கொள்கிறேன். ”நான் வெட்டவெளியாகுமுன்பே  / என் தீர்மானங்கள் / கசிந்து வெளியேறிப் / போய்விட்டதை / உணர்ந்தேன் / ஆ! மிகவும் நல்லது” எனும் அபியின் கவிதை வரிகளில் என் மனநிலை நேரடியாக ஒளிந்திருப்பதாகவே ஊகிக்கிறேன்.

 

கையில் ஒரு சொல்லை வைத்திருக்கிறேன். அதற்கு ஒரு அர்த்தத்தை வழங்கி விடவும் செய்கிறேன். பிறிதொரு சூழலில், அச்சொல்லுக்கு வேறொரு அர்த்தம் இன்னொருவரால் வழங்கப்படுகிறது. என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவருடன் சண்டை போடத் துவங்குகிறேன். சொல் காணாமல் போய், எங்கள் சண்டையே முக்கியமானதாகிறது. ”வெறுமைப் பாங்கான / எனது வெளியில் / ஒளியும் இருளும் முரண்படாத / என் அந்தியின் த்வனி / த்வனியின் மீதில் / அர்த்தம் எதுவும் சிந்திவிடவும் / விடமாட்டேன்” எனும் அபியின் கவிதையில் இருக்கும் ’த்வனி’ எனும் சொல் எங்கள் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருகிறது. சண்டையைத் தவிர்த்துவிட்டு சொல்லைத் தேடத் துவங்குகிறோம்.

 

என் மூளைக்கு அதற்கு இணக்கமான தருக்கம் தேவையாய் இருக்கிறது. உலகியல் வாழ்வின் நிகழ்வுகளைத் தருக்கங்களின் வழியாகத் தொகுத்துக் கொள்ள மூளை முயன்றபடியே இருக்கிறது. தருக்கங்கள் தொடர்ச்சியற்று இருப்பதாக உணரும் சமயம் அதிர்ச்சி கொள்கிறது மூளை. அதிர்ச்சியை மறைப்பதற்கான தருக்கங்களை அது அலசத் தொடங்குகிறது. “இடம் இல்லாதிருந்ததில் / இடம் பரவிக்கொண்டது, / காலியிடம்” எனும் அபியின் கவிதையில் ’காலியிடம்’ எனும் படிமம் தன்னைத்தான் குறிக்கிறதா என என்னிடம் கோபமாகக் கேட்கவும் செய்கிறது மூளை.

 

சமூகவாழ்வின் பொதுப்புத்திச்சட்டகத்தில் பொருந்திக் கொள்ளும் முகத்தைப் பாவிப்பதே வெற்றி; பாவிக்க முடியாதது தோல்வி. சில நேரங்களில் அதில் எனக்கு வெற்றி; பல நேரங்களில் அது அதலபாதாளத் தோல்வி. வெற்றியையும், தோல்வியையும் அணுக மனது பாடாய்ப்படுகிறது “வெற்றியும் தோல்வியும் / எல்லாம் விளையாட்டு / அடிபடும் பந்துக்கோ / அத்தனையும் வினை” எனும் அபியின் கவிதை மனதின் பொருமலைக் கொஞ்சம் இலகுவாக்குகிறது.

 

நான் வீட்டைச் சரியாக வரையவில்லை என்று குற்றம் சாட்டுகிறாள் ஒரு சிறுமி. வானத்தைச் சிறப்பாக வரைவேன் என்று அவளிடம் தெரிவிக்கிறேன். வரையச் சொல்கிறாள். என் வானத்தைப் பார்த்துவிட்டு வீடே பரவாயில்லை என்கிறாள். பிறகு, வீட்டையும் வானத்தையும் அவளே வரைகிறாள். அதில் வீடும் இல்லை, வானமும் இல்லை. கோடுகளும் கிறுக்கல்களும்தான் இருக்கின்றன. இப்படி வரையணும் என்று தலையில் குட்டுகிறாள். ”அங்கே / வானத்துப் பூக்களுக்காகக் / கை நீட்டும் குழந்தைகளை / இந்த மண்ணின் முனங்கலைத் / தாலாட்டாக்கி / உறங்க   வைப்பேன்” எனும் அபியின் கவிதையை அவளுக்குப் பரிசளிக்க முடிவு செய்கிறேன்.

 

சிலநேரங்களில், ஒரே கவிதையைப் பலமுறை படித்தபடி இருக்கிறேன். அதே வாக்கியங்களைத் திரும்பத் திரும்ப வாசிப்பது சலிக்கவில்லையா என புத்தி கேட்கிறது. வானில் நகர்ந்து கொண்டே இருக்கும் மேகங்களைப் புத்திக்குக் காட்டியபடி, அது ஒரே வானில்தான் சலிப்பில்லாமல் ஊர்ந்தபடி இருக்கிறது என்று பாடம் எடுக்கிறேன். புத்தி கோபித்துக் கொள்கிறது. ”நான் ஒன்றும் பிரயாணம் செய்பவனல்ல/ எனினும் / என் இடம் ஒன்றல்ல” எனும் அபியின் கவிதையைப் புத்திக்குப் படித்துக் காட்டிவிடக்கூடாது என முடிவு செய்கிறேன்.

அபியின் கவிதைகள் வடிவ எளிமையானவை; பொருள் வலிமையானவை. தன்விருப்பத்துக்காக மட்டுமே கவிதைகள் எழுதிய அக்கவிஞனுக்கான விஷ்ணுபுரம் விருது அவருக்குப் பெருமை அளிக்குமா, தெரியாது. ஆனால், அவரின் கவிதைகளுக்குக் கொண்டாட்டத்தைத் தரும். அதுவே கவிஞன் விரும்புவது.

 

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

சாயல்- அபி

அபி- அந்தியின் த்வனி

ஊட்டி, அபி, இளவெயில், குளிர்

அபியை அறிதல்- நந்தகுமார்

அபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்

அபியின் லயம்

அபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்

அபியின் தெருக்கள்

மந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி– ராதன்

 

முந்தைய கட்டுரைஓர் அறைகூவல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம், ஒரு நம்பிக்கை