கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…3
கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2
கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 [முன் தொடர்ச்சி]
இன்று தமிழ்ச்சூழலில் கலைப்படங்கள் உருவாவதற்கு இருக்கும் முதன்மையான அகவயமான தடைகளையே குறிப்பிட்டேன். கலைப்படங்களுக்குரிய ரசனைச்சூழலே இல்லை. அதை உருவாக்காமல் படங்களை உருவாக்கி பயனில்லை. இன்று தமிழில் இடைநிலைப் படங்கள் மட்டுமே சற்றேனும் கொண்டாடப்படுகின்றன. அல்லது தரமான வணிகப்படங்கள். கலைப்படங்கள் இடைநிலைப்படங்கள் வணிகப்படங்கள் என்னும் வேறுபாடு நிலைநிறுத்தப்படவேண்டும் ஒவ்வொரு வகைமைக்கும் உரிய ரசனைமுறை உருவாக்கப்படவேண்டும். அதற்குரிய ஓர் அறிவுச்சூழல் அமையவேண்டும்
அதற்கு அப்பால் அரசு மற்றும் திரையுலகம் சார்ந்த பல தேவைகள் உள்ளன. கேரளச்சூழலை ஒப்பிட்டே இதையும் சொல்கிறேன். சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் சினிமா வெளியீட்டு மேடையில் பேசியதைப் பார்த்தேன். அந்தப்படம் ஓடாது, இரண்டு மூன்று கோடி நட்டம் வரும் என தெரிந்தே அதை எடுத்ததாகச் சொன்னார். ஆனால் சமூகத்திற்கு ஒரு கருத்தை சொல்லும் படம் என்று நம்பி எடுத்ததாராம். இப்படி நானறிய லாபநோக்கம் இல்லாமல் தாங்கள் ‘நல்லபடம்’ என நம்பும் படங்களுக்காகச் செலவிடும் பலரை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் அவர்களுக்கு நல்லபடம் என்றால் என்ன என்று தெரியாது. நல்ல கருத்து நல்லபடம் என்று நம்புகிறார்கள். இங்கே பிரபல இயக்குநர்கள் பலர் சொந்தப்பணம் போட்டு சினிமா எடுத்திருக்கிறார்கள் – உதாரணம் பாலு மகேந்திராவின் தலைமுறைகள். அவை எல்லாமே நல்ல கருத்து சொல்லும் முயற்சிகள் மட்டுமே. நல்லபடம் என்பது வேறு என அவர்களிடம் சொல்லிப்புரியவைக்க முடியாது. ஏனென்றால் சூழலில் அத்தகைய பேச்சே இல்லை
மலையாளத்தில் ரவீந்திரன்நாயர் [ஜெனரல் பிக்சர்ஸ் ரவி] பல மலையாளக் கலைப்படங்களின் தயாரிப்பாளர். முதல் படத்துக்கு அவர் செலவழித்தது மிகச்சிறு தொகை. அவர் ஒரு பேட்டியில் சொன்னதுபோல ஆண்டுக்கு அவர் விருந்தினரை உபசரிக்கும் தொகையை விட சிறிது. ஆனால் அந்தப்பணம் திரும்ப வந்தது. அந்தப்பணம் தீரும்வரை கலைப்படம் எடுக்க தீர்மானித்தார். படம் எடுத்துக்கொண்டே இருந்தார், பணம் பெரும்பாலும் திரும்பவந்தது. வயதாகும் காலம் வரை படம் எடுத்துக்கொண்டே இருந்தார். மலையாள ரசனையை மாற்றியமைத்தார். அவருடைய வீட்டின் வரவேற்பறையை அடுக்கடுக்காக ஜனாதிபதிப் பரிசுகள் அலங்கரித்தன[சினிமாவின் பாரி ]
தமிழ்நாட்டில் ரவீந்திரன் நாயரைவிட பெரிய கோடீஸ்வரர்கள் ஆயிரம்பேராவது எனக்குத்தெரிந்து உள்ளனர். இங்குள்ள இருபது நிறுவனங்கள் ஆளுக்கு இரண்டுகோடியை கலைப்படம் எடுக்க முதலீடு செய்வார்கள் என்றால் இங்குள்ள திரைச்சூழலையே மாற்றலாம். ஆனால் செய்யமாட்டார்கள். அதற்கான புரிதல் இல்லை. அதை உருவாக்குவதைத்தான் நான் அறிவியக்கம் என்கிறேன்.
இன்றும் தரமான கலைப்படங்களுக்கு உலகமெங்கும் ஒரு சிறு சந்தை உள்ளது. அதிலிருந்து 2 கோடி ரூபாய் வரை ஈட்ட முடியும். ஒன்றரைகோடிக்குள் ஒரு கலைப்படம் எடுக்கமுடிந்தால் மெல்லமெல்ல அந்த முதலீடு மீண்டு வந்துவிடும். அடூர் கோபாலகிருஷ்ணனின் ஒரு படம்கூட பொருளியல் ரீதியாகத் தோல்வி அல்ல. ஏனென்றால் அவருடைய முதலீடும் மிகச்சிறிது. அப்படி ஒரு குறைந்த முதலீட்டுச் சினிமா இயக்கம் இங்கே உருவாகவேண்டும்
ஆனால் அதைஅனைவரும் எடுக்க முடியாது.அதற்குரிய தொழில்நுட்பத்தேர்ச்சி தேவை. மங்கட ரவிவர்மா, ஷாஜி என் கருண், ராதாகிருஷணன் போன்ற அற்புதமான ஒளிப்பதிவு நிபுணர்கள் மிகக்குறைந்த ஒளியில் குறைந்த செலவில் படம் எடுத்தமையால்தான் மலையாளத்தின் கலைப்பட இயக்கம் நிகழ்ந்தது, நிகழ்கிறது. நானறிந்து செழியன் தமிழில் அப்படிப்பட்ட திறனும் பயிற்சியும் கொண்ட திரைப்பட ஒளிப்பதிவாளர்.
இன்று நாற்பது லட்சம் ரூபாயிலேயே ஒரு தரமான படத்தை எடுக்கமுடியும் என, உலக மேடைக்கு அதைக் கொண்டுசெல்லமுடியும் என அவர் நிறுவியிருக்கிறார் [ஆனால் அதற்கு வந்த விமர்சனங்கள் என்ன? ஒரு வழக்கமான தொழில்நுட்பப் படம் பார்க்கும் மனநிலையில் எழுதப்பட்டவையே மிகுதி. இதுதான் முதன்மைச்சிக்கல் என நான் சொல்கிறேன் ] இந்த சிறு தொகை உருவாக்கியளிக்கும் கௌரவம் குறித்த ஒரு பிரக்ஞை தமிழில் உருவானாலே போதும், சிலரேனும் தயாரிப்புக்கு முன்வருவார்கள்.
இதற்கும் மேல் நிறுவன ஆதரவு சினிமா போன்ற முதலீடு தேவையான படங்களுக்கு இன்றியமையாதது. அரசின் உதவி குறிப்பாக. ஆனால் கலைப்படம் என்றால் என்ன என்ற தெளிவை உருவாக்கினால், அது உருவாக்கும் சர்வதேசக் கவனம் என்ன என்பதைக் காட்டினால், மட்டுமே அவ்வுதவியை எதிர்பார்க்க முடியும்
கேரளத்தில் கலைப்படத்துக்கு அரசின் உதவி உண்டு. கேரள திரைவிழா அவர்களுக்கு மிகச்சிறந்த காட்சிக்கூடம். கேரள அரசு நடத்தும் தரமான திரையரங்குகளில் அப்படங்கள் வெளியாகும். பல்வேறு சிறிய திரைவிழாக்கள் வழியாக கேரளம் முழுக்க சில ஆயிரம்பெர் அந்தப்படங்களைப் பார்ப்பார்கள். ஆகவே கலைப்படம் முதலீட்டை ஈட்டிவிடும். தொடர்புறுத்தலும் நிகழும். ஆனால் இந்த தொடக்கம் அங்கே அடூர் கோபாலகிருஷ்ணன் வழியாகவே நிகழ்ந்தது.
தமிழக அரசிடம் கலைப்படங்களுக்கான கோரிக்கை இன்றுவரை வைக்கப்பட்டதில்லை. வணிக சினிமாவுக்கு மேலும் நிதியுதவிசெய்யவேண்டும் என்னும் கோரிக்கையே திரும்பத்திரும்ப முன்வைக்கப்படுகிறது. உண்மையில் நல்ல சினிமா நல்ல கலை என்றால் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்ட சிலர் இன்றைய அரசில் உள்ளனர். முன்பிருந்ததுபோன்ற மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் இல்லை. இன்றைய அரசில் இருப்பவர்களுக்கு ஊடகத்துறையில் வணிகநோக்கமும் இல்லை. இன்று ஒர் இயக்கமாக கலைப்பட இயக்கத்தை முன்னெடுக்கலாம்
ஆனால் முதன்மையான தடை என்ன?இங்கே கலைப்பட இயக்கம் என்று பேசத்தொடங்கி பத்தாம் நிமிடத்திலேயே எளிய தெருமுனை அரசியலை பேச ஆரம்பித்துவிடுவார்கள். கலை என்றால் என்னவென்றே இவர்களுக்கு தெரியாது. அந்த அரசியல்முகம் உருவானதுமே அரசின் உதவியோ நிறுவன ஆதரவோ இல்லாமல் ஆகிவிடும். தெருமுனை அரசியலுக்கு என்ன இடமோ அது மட்டுமே எஞ்சும். தெருமுனை அரசியல் பேசுபவர்கள் மட்டுமே இன்று ‘நல்ல சினிமா’ என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உத்தேசிப்பது மோட்டாவான அசட்டுப் பிரச்சார சினிமாவைத்தான்
சினிமாவில் அரசியல் தேவையில்லையா? எந்தக் கலைவடிவிலும் அதற்கான அரசியல் உண்டு. ஆனால் சினிமா பிரச்சார ஊடகம் அல்ல. கலை ஊடகம். தமிழ் வாழ்க்கையின் பலநூறு நுட்பங்கள், பற்பல களங்கள் இன்னும் சினிமாவில் வரவே இல்லை. இயல்பான எளிமையான அழகுடன் அவற்றை திரையில் கொண்டுவருவதற்கும் அவற்றை உலகமெங்கும் கொண்டுசெல்வதற்கும்தான் நமக்கு கலைப்பட இயக்கம் தேவை. நம் வாழ்விலிருந்து நாம் அடையும் ஆன்மிகநிலைகள் நமது மரபுநிலைகள் நமது தரிசனங்கள் வெளிப்படும் சினிமாக்கள் நமக்குத்தேவை. தொழில்நுடப ஆர்ப்பாட்டங்கள் இல்லாமலேயே அவற்றை இயற்ற முடியும்.
ஆனால் அந்தத் தெளிவுள்ள இளைஞர்களை நான் மிக அரிதாகவே காண்கிறேன்.” நல்ல படம் பண்ணணும் சார்” என்று சொல்லி வருபவர்கள் ஹாலிவுட் படங்களையோ கொரியப் படங்களையோதான் பார்த்திருக்கிறார்கள். அவற்றின் தொழில்நுட்பத்தையே விரும்புகிறார்கள். இந்தியக் கலைப்பட இயக்கம் பற்றி அறிந்திருப்பதில்லை. அவற்றின் தொடர்ச்சியாக நிலைகொள்ளும் ஆர்வமும் பயிற்சியும் இருப்பதில்லை.
நான் சொல்லிக்கொண்டிருப்பது வணிகசினிமா வேறு கலைப்படம் வேறு என்பது. இரண்டின் பார்வையாளர்களும் முற்றிலும் வேறானவர்கள். இருவரின் நோக்கங்களும் வேறு. வணிகப்படம் பார்க்கவருபவர் பொழுதுபோக்குக்காக வருகிறார். அவரை உள்ளே இழுத்து தக்கவைக்கும் பொறுப்பு திரைப்படத்தை உருவாக்குபவர்களுக்கு உரியது. அவருடைய அங்கீகாரம் அந்த படைப்பாளிக்கு தேவை. ஆகவே வணிகப்படத்தின் கட்டமைப்பே முழுக்கமுழுக்க பார்வையாளர்களின் ஏற்பை அடியொற்றியது. அதைக்கொண்டு பார்வையாளர்களின் உளநிலை, பண்பாடு ஆகியவற்றை ஆராயலாமே ஒழிய அது இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று சொல்வது அறிவின்மை அதில் யதார்த்தத்தை தேடுவதும் தாறுமாறாக விமர்சிப்பதும் எல்லாம் ஒரு வகை அசட்டு மேட்டிமைத்தனம். பிடிக்கிறது, பிரிக்கவில்லை அவ்வளவுதான் அதன்மேலான எதிர்வினையாக இருக்கமுடியும்.
ஆனால்.கலைப்படத்தை பார்க்க வருபவன் அறிதல், உணர்தல் என்னும் கலையனுபவத்திற்காக வருபவன் அதற்காக தன்னை தயார் செய்துகொள்பவன். படத்தை புரிந்துகொள்ள முயற்சி எடுத்துக்கொள்பவன். படத்துடன் மோதவும் படத்தை கடந்துசெல்லவும் முயல்பவன். அவனுக்கான படங்களை எடுப்பதே இங்கே செய்யவேண்டியது., நான் சொல்வது இதுமட்டுமே.
சுருக்கமாக வணிகசினிமாவில் கலைப்படத்தை நிகழ்த்தமுடியாது என்பதே நான் சொல்லிக்கொண்டிருப்பது. கலைப்படம் ஒன்றை எடுத்துவிட்டு அதற்கு திரையரங்குகள் அளிக்கப்படவில்லை என பிலாக்காணம் வைப்பதில் பொருளே இல்லை. இருக்கும் வாய்ப்புகளுக்குள் கிடைக்கும் எல்லாவற்றையும் பயன்படுத்திக்கொண்டுதான் ஒரு கலைப்பட இயக்கம் நிகழமுடியும். மலையாளத்தில் அப்படித்தான் நிகழ்கிறது. நான் சுட்டிக்காட்டுவது பிழையான சில புரிதல்களை. அதன் நோக்கம் சரியான சில வாய்ப்புகளை அடையாளம் காட்டுவது மட்டுமே
எதிர்காலத்தில் சரியான புரிதல்களுடன் , தேவையான உறுதிப்பாட்டுடன், நல்ல படம் எடுப்பதற்கான நுண்ணுணர்வுடன், இன்றியமையாத தொழில்நுட்ப அறிவுடன் இங்கும் திரைக்கலைஞர்கள் பலர் வருவார்கள். சின்னஞ்சிறு சிங்களச்சூழலிலேயே அற்புதமான படங்கள் வருகின்றன. நமக்கு சிக்கல் நாம் செல்லவேண்டிய திசை என்ன என்று தெளிவில்லாமலிருப்பதே
அன்புடன்
ஜெ
[நிறைவு]
***