எளிமையான படைப்புகள்

அன்புள்ள ஜெ

நான் தொடர்ச்சியாக இலக்கியங்களை வாசித்துவருபவன் என் வாசிப்புக்கு எளிமையான நடையும்,நேரான அமைப்பும் கொண்ட படைப்புக்களையே விரும்ப முடிகிறது. பெரியநாவல்கள், சிக்கலான நாவல்களை வாசிப்பது சலிப்பை அளிக்கிறது. அவை அறிவார்ந்தவை என்றும் எளிமையான சின்ன படைப்புக்களே கலைப்படைப்புக்களுக்கு உரிய ஓர்மை உள்ளவை என்றும் ஓர் எண்ணம் உருவாகியது. இதை நண்பர்களிடம் சொல்லியபோது நீங்கள் இதை மறுப்பீர்கள் என்று சொன்னார்கள். ஆகவே நீங்கள் என்ன சொல்வீர்கள் என அறியும் ஆர்வம் ஏற்பட்டது.ஆகவே இதை எழுதுகிறேன். உங்கள் பதிலை எதிர்பர்க்கிறேன்

ஆர்.மகாதேவன்

***

அன்புள்ள மகாதேவன்

இலக்கியவாசகர்கள் கூட சில தற்பாவனைகளுக்குள் சிக்கிக் கொள்வார்கள். அதில் முதன்மையானது, சிக்கலில்லாத, எளிமையான, சாதாரணமான எழுத்து சிறந்தது என்னும் பாவனை. இலக்கிய வாசிப்புக்கு இத்தகைய எளிமையான, தன்வயமான முடிவுகள் மிகப்பெரிய தடை. உங்களுக்கு வயது ஐம்பதுக்கும் மேலே என்றால் பிரச்சினை இல்லை. உங்கள் சாய்வுநாற்காலியில் நீங்கள் சௌகரியமாக அமர்ந்துகொள்ளலாம். இளைஞர் என்றால் இந்தப்பதிலை படிக்கவும்,

மாபெரும் ஆசிரியர்களில் சிக்கலில்லாமல் எளிதாக எழுதியவர்கள் உண்டு. அது அவர்களின் எழுத்தின் மேல்மட்டம் மட்டுமே. அவர்களேகூட அச்சூழலில் உள்ள சிக்கலான செறிவான விரிவான எழுத்தின் பின்புலத்திலேயே பொருள்படுகிறார்கள். அச்சிக்கலுக்கும் செறிவுக்கும் எதிர்வினையாக அமையும்போதே அவர்களின் தொடர்புறுத்தல் நிகழ்கிறது. சிக்கலான செறிவான அறிவார்ந்த தேடலுடன் அங்கே வருபவர்களுக்குரிய ஆசிரியர்கள் அவர்கள்

வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று சிக்கிப்பிரிந்து விரியும் மாபெரும் இயக்கம். அதற்கு எளிய விளக்கங்கள் இல்லை. அதை எளிமையாகச் சொல்லிவிடவும் முடியாது. இலக்கியம் என்பதே அன்றாடவாழ்க்கையில் நாம் அறிபவற்றை மேலும் சிக்கலாக அறிவதற்கான முயற்சிதான். சிக்கலே ஆழம் எனப்படுகிறது.சிக்கல் என நீங்கள் சொல்வது எதை? ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று தொடர்புற்றிருக்கும் பின்னலை. உள்முரண்களை,முரணியக்கத்தை. அதை நீவி ஒற்றைச்சரடாக ஆக்கி ‘இதோ இவ்வளவுதான்’ என்று காட்டுவதையே நீங்கள் எளிமை என்கிறீர்கள். இலக்கியப்படைப்புக்கள் அதைச் செய்வதில்லை. அவை விரிவு ஆழம் என்றெல்லாம் தேடிச்செல்வன.

நம் அன்றாடவாழ்க்கையில் உறவுகளை மானுட உள்ளம் என்னும் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பதில்லை. நிகழ்வுகளை வரலாற்றில் வைத்துப் பார்ப்பதில்லை. அந்தந்த கணத்தில், நம் தேவைகளுக்கு ஏற்ப எல்லாவற்றையும் புரிந்துகொள்வதே நம் வழக்கம்.  இலக்கியம் அவ்வெல்லைகளை உடைக்கிறது. ஒவ்வொன்றும் எத்தனைபெரிய பின்புலத்தில் நிகழ்கிறது என்றும் எத்தனையெத்தனை சரடுகள் அதில் பின்னிப்பிணைந்துள்ளன என்றும் காட்டுகிறது. ஆகவே இலக்கியம் என்றாலே அது மேலும் மேலும் உட்சிக்கல் அடர்ந்துசெல்வதுதான்.

சில படைப்புக்களுக்கு மேலோட்டமான ஓர் எளிமை தேவையாகும். அது ஒரு புனைவுப் பாவனை மட்டுமே. ஒரு பேரிலக்கியவாதியின் ஆக்கம் எளிமையானது என்னும் புனைவுப்பாவனை கொண்டிருக்கிறது என்பதனால் எளிமையான படைப்புகளே சிறந்தவை என்னும் எண்ணத்தை அடைந்து அவற்றில் திளைப்பது மூளைச்சோம்பலுக்கு, முன்னகர விழையாமல் நின்றிருக்கும் இயல்புக்கான சாக்காகவே கொள்ளப்படவேண்டும்

எளிமையான வாசிப்பு என்பதற்கு இன்னொரு பொருள், படைப்புடன் உரையாடாமலிருப்பது என்பது. பெரும்படைப்புக்கள் நம்மை உடைக்கின்றன.நிலைகுலையச் செய்கின்றன. நாம் நின்றிருக்கும் இடத்திலிருந்து முன்னகரச் செய்கின்றன. ஆகவே பேருருவம் கண்ட பிரமிப்பு, சிந்தைசெயலிழக்கும் சோர்வு, ஆளுமை புண்படும் எரிச்சல் , ஒவ்வொன்றாக உடைத்து மறுவார்ப்புசெய்வதன் சலிப்பு, அவ்வப்போது நீண்ட அலுப்பு எனத்தான் பேரிலக்கியங்கள் இருக்கின்றன.

ஒரு படைப்பை வாசித்தபின் நீங்கள் ஒரு பெரிய உளச்சோர்வை, வெறுமையைச் சென்றடைகிறீர்கள் என்றால் மட்டுமே அது உங்களுடன் ஆழமாக உரையாடுகிறது என்று பொருள். ஏனென்றால் நீங்கள் கொண்டிருக்கும் அனைத்தையும் அது கரைத்தழித்துவிடுகிறது. நம்பிக்கைகளை கருத்துநிலைகளை ஆழ்படிமங்களை. அதன்பின் நீங்கள் மெல்லமெல்ல உங்களை மீண்டும் கட்டியெழுப்ப தொடங்குகிறீர்கள். படைப்பு அளிக்கும் சிந்தனை என்பது அப்போது நிகழ்வதுதான். மீண்டும் உருவாக்கிக்கொண்ட உங்கள் அகம் முன்பிருந்ததிலிருந்து சற்று மாறுபட்டிருக்கும். அந்த மாறுபாடே அப்படைப்பு அளிக்கும் பங்களிப்பு

அவ்வாறு ஒன்று நிகழவில்லை என்றால் ஓர் எளிமையான இன்பத்தை மட்டுமே அடைந்திருக்கிறீர்கள் என்றுதான் பொருள். நீங்கள் அக்குளில் வைத்திருப்பன கீழே விழாமல் ஒரு ஆட்டத்தை ஆடிமுடித்துவிட்டீர்கள். பெரும்பாலும் இத்தகைய படைப்புக்கள் மூன்றுவகை. இளமையில் வாசிப்பவர்களுக்கு அவர்களின் பகற்கனவுகளுக்கு தீனிபோடுவன. [பகற்கனவுகள் பெரும்பாலும் பாலியல்சார்ந்தவை] பின்னர் உங்கள் நனவிடைதோய்தலை தூண்டுபவையும் உங்கள் வாழ்க்கைசார்ந்த நம்பிக்கைகளை ஆமோதிப்பவையுமான படைப்புக்கள். அவற்றில் சுகமாக அமர்வதற்குப்பெயர் இலக்கிய வாசிப்பு அல்ல. அது உள்ளத்திற்கு ஒரு ‘மஸாஜ்’  அவ்வளவுதான்.

இவ்வாறு நம்மை உடைத்து மறுஅமைப்பு செய்யும் படைப்புக்கள் இருவகை. கூரிய சிறுபடைப்புக்கள் அவற்றில் உண்டு, அவை நம் ஆழத்திலுள்ள மிக வலுவான ஒன்றை அறைந்து உலுக்குபவை. அவை வெறுமையை உருவாக்காமல் கொந்தளிப்பை மட்டுமே உருவாக்குகின்றன. கொந்தளிப்பு மெல்ல அமைகையில் நாம் சிந்தனையினூடாக நெடுந்தொலைவு சென்றிருப்போம். ஆனால் நம்மை வெறுமைநோக்கி செலுத்தும் படைப்புக்கள் அளவிலும் பெரியவை. அவை நாம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லிவிடும். எல்லா சமாதான்ங்களையும் அழித்துவிடும். அதன்பின் எஞ்சியிருப்பது நம்மால் எளிதில் கடந்துவிடமுடியாத்தாக இருக்கும்.

அத்தகைய படைப்புக்களையே பேரிலக்கியம் [ கிளாசிக்] என்கிறோம். மென்மையாக வருடிக்கொடுக்கும்பேரிலக்கியம் என ஏதுமில்லை. நம்மை மாற்றியமைக்காதவை பேரிலக்கியம் அல்ல. எளிமையான பேரிலக்கியம் என ஏதும் இன்றுவரை உலகில் எழுதப்படவில்லை. பேரிலக்கியம் வாசிக்காதவன் இலக்கியவாசகன் அல்ல, வெறும் வாசகன். அப்படியும் பலர் இருக்கலாம், அதில் பிழையொன்றும் இல்லை. அவர்களின் தகுதியும் இயல்பும் அவ்வண்ணம். ஆனால் இலக்கியம் இலக்கியவாசகனை நோக்கியே செயல்படும். எல்லா நல்ல படைப்பும் ஓர் இலட்சிய வாசகனையே உத்தேசிக்கிறது

ஜெ

***

முந்தைய கட்டுரையுவன் நிகழ்வு – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-52