திருவிழாவில் வாழ்தல்

பல ஆண்டுகளுக்கு முன் கோணங்கியின் நண்பரான ஒரு கிழவரைச் சந்தித்தேன். அவர் கோயில்பட்டி இனிப்பு செய்பவர். ஓய்வுபெற்றுவிட்டார். பிள்ளைகள் ‘செட்டில்’ ஆனபின் திருவிழா விற்பனைக்குச் செல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். காலில் வாதம் வேறு. ஆனால் வாழ்க்கையே அழிந்துவிட்டது, இனி சாவுதான் கதி என சோர்வுடன் சொன்னார்.

அவர் சொன்ன காரணம் வியப்புக்குரியதாக இருந்தது. தன் வாழ்க்கை முழுக்க அவர் திருவிழாக்களில்தான் கழித்திருக்கிறார். ஒரு விழா முடிந்ததும் அப்படியே அடுத்த விழா.  ‘திருவிழாவிலே வாழணும்னாக்க குடுத்துல்லா வச்சிருக்கணும்’ என்றார். “ஏன், என்ன வித்தியாசம்?” என்றேன். “ஐயா இங்கிட்டுப்பாருங்க. சங்சனிலே போறவன் முகத்திலே எத்தனை முகத்திலே அருளிருக்கு? எல்லாம் சோலியா போறவன். பல கவலைகள் உள்ளவன். திருவிளாவிலே அப்டியா? அம்புட்டு முகமும் பூத்தில்லா இருக்கும்?”

அத்தனை முகங்களும் பூத்திருக்கும் திருவிழாக்கள் வழியாக மட்டுமே செல்லவேண்டும் என ஓர் எண்ணம் எனக்கிருந்தது. நானும் ஈரோடு கிருஷ்ணனும் திட்டமிட்டோம், ஓராண்டு தமிழகத்தில் நிகழும் எல்லா திருவிழாக்களுக்கும் சென்றுவிடுவது என்று. அழகர் ஆற்றில் இறங்குவது முதல் காஞ்சி கருடசேவை வரை. பல விழாக்களுக்குச் சென்றதே இல்லை என்பது ஒரு பெரிய இழப்பு. வாழ்க்கை குறுகிக்கொண்டிருக்கிறது

நண்பர் மயிலாடுதுறை பிரபு 2020 க்கான ஒரு வாழ்க்கைத்திட்டம் வைத்திருக்கிறார். திருவிழாவில் வாழ்தல்!அதை விரிவாக எழுதியிருக்கிறார்.

வாழ்க்கை ஒரு திருவிழா

அற்புதமான திட்டம். நானும் கூடுமானவரை கலந்துகொள்ள முடியுமா என பார்க்கிறேன். அடுத்த ஆண்டின் முதன்மையான தமிழகத்திருவிழாக்கள் அனைத்திலும் கலந்துகொண்டாலென்ன என்று தோன்றுகிறது. ஜனவரி முதலே திட்டமிடவேண்டும். நண்பர்களும் இணைந்துகொள்ளலாம். ஒரு வரைவு போட்டு பார்த்தால் என்ன?

பிரபு தொடர்புக்கு [email protected]

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-46
அடுத்த கட்டுரைநுழைவு