பூதான் சாதி
திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்
ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி
இரு காந்திகள்.
இன்றைய காந்திகள்
சுதந்திரத்தின் நிறம்
அன்புள்ள ஜெ
நலம்தானே
மேலே கண்ட புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. எந்த சம்பிரதாய நிகழ்வாக இருந்தாலும் அதிலொரு செயற்கைத்தன்மையும் ஒரு சின்னத் தடுமாற்றமும் வந்துவிடும். கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அருகே நிற்க நீங்கள் ஊழியரகத்தின் விழாவை திறந்து வைக்கும் படத்தில் அந்தச் சின்னப்பையன் சுவாதீனமாக உள்ளே மண்டையை நுழைக்கும் படம் அந்தச்சூழலையே அழகாக இயல்பாக ஆக்கிவிட்டது. அழகான படம். அந்த நிகழ்ச்சியின் இயல்பான உற்சாகம் அதில் இருக்கிறது. கிருஷ்ணம்மாள் ஒரு பெரிய வரலாற்று அடையாளம். ஆனால் இந்தப்படம் அவரை ஒரு அம்மாவாக காட்டிவிட்டது. நீங்கள் வெண்முரசில் எழுதுவதுபோல பேரன்னை,
மீனாக்ஷி தர்மராஜன்
***
அன்புள்ள மீனாட்சி அவர்களுக்கு,
நல்ல படம், நானும் முன்னரே பார்த்தேன். இளைய தலைமுறை காந்தியத்திற்குள் [தலைகுப்புற] நுழையும் காட்சி.
பொதுவாகவே ஊழியரக நிகழ்ச்சி உற்சாகமான கொண்டாட்டமாக இருந்தது. ஒன்று, பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தமையால் ஏராளமான குழந்தைகள். இரண்டு, பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதனால் ஒரே கூச்சல் சிரிப்பு. நன்பர் ஒருவர் சொன்னார், ஒரு காந்திய நிகழ்வில் பெரும்பாலானவர்கள் ஜீன்ஸ் போட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது என்று. காந்தியத்தை ஒரு பழைய அரசியலாகவோ, ஆசாரமாகவோ, ஒரு நவீன மதமாகவோ அன்றி ஒரு தரிசனமாகக் கண்டு வளர்த்தெடுப்பவர்களின் கூட்டம். அதை ஒரு வாழ்க்கைமுறையாக கொண்டு தங்களை அதில் செலுத்திக்கொள்பவர்களின் திரள்
ஜெ
***