பகுதி ஏழு : தீராச்சுழி – 1
முதுசேடி பூர்ணை தன் அரசி தேவிகையின் ஆடைகள் அடங்கிய மென்மரப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிவந்தாள். ஏவலன் அவளை நோக்கி ஓடிவந்து அதை வாங்கிக்கொண்டு தேரில் வைத்தான். தேவிகையும் பலந்தரையும் விஜயையும் அருகருகே நின்றிருந்தனர். மூவரின் முகங்களும் மேலாடையால் மூடப்பட்டிருந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. முகத்தின்மீது மேலாடையை இழுத்துவிட்டுக்கொள்வது பல நாட்களாகவே அவர்களின் வழக்கமாக ஆகிவிட்டிருந்தது. முகத்திரை சரிந்தாலே தலையும் குனிந்துவிடுகிறது. முகத்திரை அவர்களை புறஉலகத்திலிருந்து பிரித்தது. ஓசையில்லாமல் பொழிந்த அருவி ஒன்றிற்குள் நின்றிருப்பதுபோல. அவ்வப்போது அவர்கள் அதற்குள் இருந்து வெளிவந்து அறியா உலகைக் கண்டு திகைப்படைந்தனர்.
முற்றாகவே ஆடையால் மூடி அமர்ந்திருக்கையில் அது அவர்களை மண்ணுக்குள் புதைந்திருப்பதுபோல உணரச்செய்தது. வால்மீகி அமர்ந்த புற்று அது. அவர்களை உள்ளிட்டு மூடிக்கொண்ட வாயில் இல்லாச் சிறை. எவ்விழிகளையும் பார்க்க வேண்டியதில்லை, எவ்விழிகளும் அவர்களை பார்க்கப்போவதும் இல்லை. அந்தத் தனிமை துயரை பெருக்கியது. ஆனால் அது உகந்ததாகவும் இருந்தது. அத்திரைச்சீலையை இழுத்து அகற்றி தலைநிமிர்த்தி பிறரை நோக்கத் தொடங்கினால் அத்தனிமையை கடந்துவிடலாம். அதை அவர்களால் இயற்ற இயலவில்லை. அதற்குள் காலமிருக்கவில்லை. ஆகவே அவர்கள் பகலிரவுகளை அறியவில்லை. அத்திரை வெண்ணிற வான்வெளிபோல் அவர்களைச் சூழ்ந்திருந்தது. அவர்களிடம் சொல்லப்படும் சொற்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து அவர்களைச் சென்றடைந்தன.
நீர்க்கடனுக்கு அவர்கள் கிளம்பிச்செல்லவேண்டுமென்ற ஆணையுடன் துணையமைச்சர் சந்திரசேனர் வந்தணைந்தபோது உபப்பிலாவ்யத்தின் முகப்புக்கூடத்தில் அவர்கள் அமர்ந்திருந்தனர். சந்திரசேனர் அதைக் கூறி தலைவணங்கி இரண்டடி பின்வைத்தார். மூவரும் தங்கள் திரைகளுக்குள் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். நெடும்பொழுதுக்குப் பின் தேவிகை பெருமூச்சுவிட்டு அசைவுகொண்டாள். அவள் சொற்கள் என பூர்ணை “நன்று, இன்றே நாங்கள் கிளம்புகிறோம்” என்றாள். சந்திரசேனர் அச்சொற்களை தேவிகை பேசினாளா என திகைப்பவர்போல நோக்கிவிட்டு “இன்றல்ல, நாளை புலரியில்கூட கிளம்பலாம், பொழுதிருக்கிறது” என்றார்.
“இல்லை, இவ்வாணை வந்த பின்னர் இங்கே காத்திருப்பதுதான் கடினமானது” என்று பூர்ணை கூறினாள். “இங்கு காத்துக்கொண்டிருப்பதே எங்கள் ஊழென்றாகி நெடுநாட்களாகிறது. ஆயினும் இனிமேல் காத்திருக்க இயலாது.” சந்திரசேனர் திகைப்புடன் மீண்டும் அரசியரை நோக்கிவிட்டு “அவ்வாறே” என்று தலைவணங்கி வெளியே சென்றார். அதன் பின்னர் மூவரும் அவ்வறையில் அசைவிலாது அமர்ந்திருந்தனர். மீண்டும் நெடும்பொழுது கழிந்து பூர்ணை வேண்டுமென்றே காலடி ஓசை எழுப்பி அருகணைந்து தலைவணங்கினாள். விஜயை மூடுதிரையை விலக்கி சற்றே அவளை பார்த்தாள். “நாம் இங்கிருந்து உடனே கிளம்ப வேண்டும், அரசி. காவலர்தலைவரிடம் ஆணைகளை அளிக்கிறேன்” என்றாள். அவள் தலையசைத்தாள்.
ஏவற்பெண் சந்திரிகை வந்து தலைவணங்கினாள். “நாம் உடனே கிளம்புகிறோம். அனைத்து ஒருக்கங்களையும் செய்ய காவலர்தலைவரிடம் கூறுக!” என்றாள் பூர்ணை. “பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?” என்று சந்திரிகை கேட்டாள். பூர்ணை “பொருட்கள் என எதை எடுத்துக்கொள்வது?” என்றாள். சந்திரிகை “எப்படியும் ஆடைமாற்றியாகவேண்டும். மருத்துவப் பொருட்கள் உள்ளன… என்றாள். பூர்ணை தேவிகையை திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு அகிபீனா அளிக்கலாமா என்று அவள் மருத்துவரிடம் கேட்டபோது அவர் புன்னகைத்து “அகிபீனா உண்டு வரும் நிலையில்தான் இப்போதே இருக்கிறார்கள்” என்றார். தேவிகையின் உடலில் அசைவு ஏதும் தென்படவில்லை. அவள் வெளியே செல்ல அவர்கள் மூவரும் அசைவில்லாது அங்கேயே அமர்ந்திருந்தனர்.
சாளரத்துக்கு வெளியே வெயில் அணைந்து நிழல்கள் நீண்டு அறைக்குள் சரிந்தன. பூர்ணை உள்ளே வந்து “தேர்கள் ஒருங்கியிருக்கின்றன, அரசி. இங்கிருந்து உஜ்வலம் எனும் துறை வரை தேர். அங்கிருந்து படகில் முக்தவனம் வரை சென்றுவிடலாம்” என்றாள். விஜயை எழுந்து தன் அறைக்குச் செல்வதற்கென திரும்ப, தேவிகையும் எழுந்து உடன் சென்றாள். “பொருட்கள் அனைத்தும் தேரில் ஏற்றப்பட்டுவிட்டன, அரசி” என்றாள் பூர்ணை. தேவிகை நின்று திரும்பி அங்கிருந்தே தேர்முற்றத்தை நோக்கி சென்றாள். பலந்தரை எழுந்து தேவிகைக்குப் பின்னால் செல்ல விஜயை திரும்பி அவர்களைத் தொடர்ந்தாள். அவர்கள் நிழல்கள்போல நடந்தனர். அவர்களின் ஆடைகள் காற்றில் மெல்ல உலைந்தன.
அவர்கள் மூவரும் தேர்முற்றத்தில் நின்றிருந்த மூடுதிரையிட்ட தேரில் ஏறி மஞ்சங்களில் அமர்ந்தனர். பூர்ணை வெற்றிலைப் பேழையுடன் தேருக்குள் ஏறிக்கொண்டாள். திரைகள் சரிந்து அவர்களை மூடின. மூடுதிரையிட்ட தேருக்குள்ளும் அவர்கள் முகத்திரையுடனே இருந்தனர். அதை விலக்க வேண்டுமெனும் எண்ணம் அவர்களுக்கு எழவில்லை. அவர்களின் சொல்லின்மை பூர்ணையையும் பற்றிக்கொண்டது. நெடும்பொழுதுக்குப் பின் நீள்மூச்சுடன் கலைந்து தேரின் முகப்புத்திரையை விலக்கி அமரத்திலிருந்த ஏவலனை பார்த்தாள். “காவல் வீரர்கள் அணிநிரந்து கொண்டிருக்கிறார்கள், அரசி. இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடலாம்” என்று அவன் கூறினான். அவள் மறுமொழி எதுவும் சொல்லாமல் திரையை மூடினாள்.
தேர் திடுக்கிட்டு கிளம்புவது வரை அவர்கள் அங்கிலாததுபோல் இருந்தனர். தேரின் அசைவுகளுக்கு ஏற்ப அவர்கள் உடல் அசையத் தொடங்கியது. அதுவரை சொல்லின்றி இருந்த அவள் உள்ளமும் அசையத் தொடங்கியது. ஒன்றுடன் ஒன்று பொருந்தாத நினைவுகள் தொட்டுத் தொட்டு ஓடத்தொடங்கின. விஜயை நெடும்பொழுதுக்குப் பிறகு நீள்மூச்செறிந்து கால்களை நீட்டி கைகளை மார்பில் கட்டிக்கொண்டு தலையை தேர்த்திண்டில் சாய்த்தாள். தேவிகையும் உடலை எளிதாக்கிக்கொண்டாள். பலந்தரை தொடக்கம் முதலே மரப்பாவை என்று அமர்ந்திருந்தாள். தேர் குலுக்கிக்கொண்டபோது கூண்டுகளிலும் விளிம்புகளிலும் அவள் உடல்தான் மிகுதியாக முட்டிக்கொண்டது. அவள் அதை அறியவே இல்லை என்று தோன்றியது.
தேர் செல்லச் செல்ல அவர்கள் துயின்று ஆளுக்கொரு திசைக்கு சாய்ந்தனர். தேர் குழியொன்றில் விழுந்தெழுந்தபோது பலந்தரையின் நெற்றி விசையுடன் கூண்டில் மோதியது. அவள் கண்களை விழித்து பொருளின்றி அந்தக் கூண்டு விளிம்பை நோக்கியபின் விழிமூடிக்கொண்டாள். சற்று நேரத்தில் பிறிதொரு குழியில் சகடம் விழ தேவிகையின் தலை தேர்க்கூண்டில் மோதியது. அவள் அரைவிழி திறந்து நேர் நோக்கில் அவ்வண்ணமே நெடுநேரம் நிலைத்து மீண்டும் விழி மூடினாள். தேரின் மூங்கில்தூண்கள் கழிகளாகி அவர்களை அறைந்துகொண்டிருப்பதுபோல பூர்ணை எண்ணினாள். எண்மர் சூழ்ந்து நின்று அவர்களை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லின்றி ஒலியின்றி அவர்கள் அந்த அடிகளை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.
மறுநாள் புலரியில் அவர்கள் கங்கைக்கரையை சென்றடைந்துவிட்டிருந்தனர். தேர் நின்றதும் ஏவலன் பின்னால் வந்து நின்று “அரசியருக்கு வணக்கம்” என்று மும்முறை கூறி தேர்க்கூண்டில் கையால் தட்டியபோது அவர்கள் விழித்துக்கொண்டார்கள். பூர்ணை முதலில் இறங்கினாள். தேவிகை மேலாடையை நன்றாக இழுத்துவிட்டு நிலத்தில் இறங்கி நின்றாள். பலந்தரையும் விஜயையும் இறங்கியபின் அவர்கள் ஒன்றும் சொல்லாமல் தேர் மேடையிலிருந்து நீர்முகப்பு நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அங்கே தொன்மையான படகுத்துறை இருந்தது. தடித்த மரங்களை கங்கைக்குள் நிறுத்தி அவற்றுக்கு மேல் மரப்பலகை வேய்ந்து அமைக்கப்பட்ட துறைமேடைக்கு அப்பால் அவர்கள் செல்ல வேண்டிய படகு பாய் தளர்த்தி நீரில் அசைந்தபடி நின்றது. அதன் படகோட்டிகள் துடுப்புகளுடன் படகில் நின்றிருக்க நான்கு காவலர்கள் துறைமேடையில் வேல்களுடன் நின்றனர்.
அவர்கள் அணுகியதும் ஒருவன் திரும்பி கொம்போசை எழுப்பினான். அவர்களுக்குப் பின்னால் வந்த ஏவலன் “அரசியர் ஓய்வெடுத்துக் கொள்வதென்றால்…” என்று திரும்பிச் சுட்டிக்காட்டி “இங்கே ஒரு சிறு ஓய்விடம் உள்ளது. மஞ்சங்களும் உள்ளன” என்றான். “தேவையில்லை” என்று பூர்ணை கையசைத்தாள். அவர்கள் படகில் ஏறிக்கொண்டதும் காவலர்களின் விரைவுப்படகு முன்னால் அலைகளில் ஏறிச் சென்றது. தொடர்ந்து அவர்களின் படகு பாய்விரித்து காற்றில் தன்னை தொடுத்துக்கொண்டது. படகின் அசைவுகளுக்கு ஏற்ப உடல் அசைய மூவரும் பலகைப் பீடத்தில் அமர்ந்தனர். தேவிகையும் விஜயையும் மீண்டும் துயில் கொண்டதுபோல் தோன்றியது. பலந்தரை தன் நெற்றியை தடவிக்கொண்டாள். பல இடங்களில் மூங்கிலில் முட்டிக்கொண்ட முழைகள் இருந்தன.
தேவிகை சற்று நேரத்திலேயே ஆழ்ந்துறங்க விஜயை தன் முகத்தின் மேல் படபடத்த மெல்லிய வெண்பட்டுத் திரைச்சீலையினூடாக காலைஒளி எழுந்து கொண்டிருந்த கங்கையை பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று பகல் முழுக்க அவர்கள் கங்கையிலேயே விழிநட்டு படகில் அமர்ந்திருந்தனர். ஏவலர் இன்நீர் கொண்டுவந்து அளித்தனர். பல நாட்களாகவே வெல்லமும் கருக வறுத்த பயறுமாவும் கலந்து காய்ச்சப்பட்ட கொழுவிய இன்நீரை மட்டுமே அவர்கள் உணவென அருந்திக்கொண்டிருந்தனர். அன்னம் உண்பது அவர்களால் எண்ணியும் பார்க்க இயலாததாகியிருந்தது. பலமுறை பூர்ணை உணவைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தாள். பெரும்பாலான தருணங்களில் அவர்களிடம் ஆழ்ந்த பசியும் இருந்தது. ஆனால் உணவு முன் அமர்ந்து அன்னத்தை கையில் எடுத்து வாயில் வைக்கும்போதே தொண்டை இறுகி அடைத்துக்கொண்டது. ஒருவாய் உணவைக்கூட உள்ளிறக்க இயலவில்லை.
பல நாட்களுக்கு முன் அபிமன்யு மறைந்த செய்தி வந்த அன்று உணவின் முன் அமர்ந்து அன்னத்தை வாயிலிட்ட தேவிகை தாலத்திலேயே அதை உமிழ்ந்துவிட்டு நெஞ்சடைக்க இருமி மூச்சுத்திணறி மயங்கி பக்கவாட்டில் விழுந்தாள். ஏவற்பெண்கள் அவளைத் தூக்கி அமர்த்தி வாய்திறந்து சங்கில் சிறிதளவு இன்னீரை அவள் தொண்டையில் ஊற்றி மூச்சை சீரமைத்து நினைவு மீளச்செய்தனர். அதன் பின்னர் வெவ்வேறு வகையான உணவுகளை அவர்கள் கொண்டுவந்து அவர்களுக்கு அளித்தனர். இன்கூழைக் கூட அவர்களால் உண்ண இயலவில்லை. இன்நீரை அருந்தும்போது கூட பெருவிடாயுடன் இரு கைகளாலும் குவளையை வாங்கி வாயிலழுத்தி சிலமுறை அருந்தி மூச்சுத் திணற கலத்தை கீழிறக்கினர். பிறிதொரு முறை பூர்ணை அவர்கள் முன் கலத்தை தூக்கி வாயில் பொருத்தி “அருந்துக, அரசி!” என்றாள். மீண்டும் இருமுறை விழுங்கிவிட்டு மூச்சு இரைக்க போதும் என்று கைகாட்டி நிறுத்தினார்கள்.
சில நாட்களிலேயே அவர்கள் உடற்தசைகள் வற்றி, கண்கள் மங்கலடைந்து குழிந்து, உதடுகள் மடிந்து வாய்க்குள் செல்ல, முதுமையும் நோய்மையும் வந்து மூட, முற்றிலும் பிறராக மாறிவிட்டிருந்தனர். உடலுக்குள் குடிகொள்ளும் தெய்வம் தனக்கேற்ப உடலை உருமாற்றிக் கொள்கிறதென்று சூதர் சொல்லி பூர்ணை கேட்டிருந்தாள். காதல் கொண்ட பெண் அழகில் பொலிந்தெழுவதுபோல் துயர் கொண்டவள் மெலிந்து உருகி உருமாறுகிறாள். கண்ணெதிரே அவர்கள் உயிரிழந்து மட்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவள் எண்ணினாள். முதுசெவிலி “உள்ளிருந்து உடலை உண்கின்றது ஒரு தெய்வம்” என்றாள். “அது நன்று, தெய்வங்களுக்கு அளிப்பதற்கு நம்மிடம் உடலாவது உள்ளதே” என்று இளம் சேடி ஒருத்தி சொன்னாள்.
பூர்ணை விஜயையின் முதுசேடியான அபயையை எண்ணிக்கொண்டாள். நச்சுநா கொண்டவள் என அவளை சொல்வார்கள். “பெண்டிர் அன்னத்தை அளிப்பவர்கள்” என்று அவள் சொல்வதுண்டு. “அல்குலை கணவர்களுக்கு. முலைப்பாலை மைந்தருக்கு. முழு உடலையும் அளித்தபின் விண்புகுகிறார்கள்.” இந்திரப்பிரஸ்தத்தின் அகத்தளத்தில் இருண்ட அறையொன்றில் உடல்நலிந்து மறைந்தாள். சாவின் கணத்தில் அவள் உடனிருந்தாள். “சேடியர் பரத்தையரைப்போல. உடலை எவரெவரோ உண்ணக்கொடுப்பவர்கள்” என்று அவள் சொன்னாள். “இறுதியாக வருபவன் இக்காதலன்” என்று அவள் புன்னகைத்தபோது அவளுடைய மட்கிய உடலின்மேல் அமைந்திருந்த வெற்றுக்கூடு போன்ற முகத்தில் பற்கள் வெளிப்பட்டன. கண்கள் விந்தையான குழிவிலங்குபோல் ஒளிகொண்டிருந்தன.
முக்தவனம் நெருங்கியதும் காவலர் படகிலிருந்து கொம்பொலி எழுந்தது. பூர்ணை தேவிகையை அணுகி தலைவணங்கி “முக்தவனம் அணைந்துள்ளது, அரசி” என்றாள். தேவிகை பாவைபோல் எழுந்துகொள்ள “இல்லை, இன்னும் படகு துறைமேடையை அணைய அரைநாழிகைக்கு மேலாகும். தாங்கள் அமரலாம்” என்றாள். தேவிகை மீண்டும் அமர்ந்துகொண்டாள். படகு துறைமேடையை அணுகியபோது அவர்கள் மூவரும் துயிலிலாழ்ந்ததுபோல் அமர்ந்திருந்தனர். பூர்ணை “அரசி! அரசி!” என்று பலமுறை அழைத்த பின்னரே தேவிகை கண் திறந்தாள். “படகுகள் துறையணைந்துவிட்டன. இறங்கும் பொழுது!” என்றதும் உணர்ச்சியற்ற விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். “தாங்கள் கரையிறங்கலாம், அரசி” என்றாள் பூர்ணை.
தேவிகை எழுந்து திரும்பி எவரையும் பார்க்காமல் படகு விளிம்பை அடைந்து துறைமேடை நோக்கி போடப்பட்டிருந்த பலகை மேல் நடந்து கரையணைந்தாள். அவளைத் தொடர்ந்து பலந்தரையும் விஜயையும் இறங்கினர். மூவரும் நிரையாக நடந்து செல்ல அவர்களை வரவேற்கும் பொருட்டு துறைமேடைக் காவல்மாடத்திலிருந்து சங்கொலி எழுந்தது. காவலர்தலைவன் வந்து வணங்கி “அரசியருக்கு வணக்கம். தங்களுக்குரிய குடில்கள் ஒருங்கியிருக்கின்றன. சற்று ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம். இன்நீரும் உணவும் உள்ளது…” என்றான். “அவர்கள் உடனே செல்லவே விரும்புகிறார்கள்” என்று பூர்ணை சொன்னாள். “தேர்கள் வந்துள்ளனவா?” காவலன் அவள் முந்திச்சொல்வதை விரும்பவில்லை “ஆம், ஒருங்கியிருக்கின்றன” என விழிநோக்காமல் சொன்னான்.
அரசியர் செல்லவேண்டிய எடையற்ற சிறிய வண்டி பாதையில் நின்றது. “அந்த வண்டிகள்தான், அரசி” என்றாள் பூர்ணை. தேவிகை திரும்பிப்பாராமல் நடந்துசென்று அதில் ஏறிக்கொள்ள பலந்தரையும் விஜயையும் தொடர்ந்து ஏறிக்கொண்டனர். தேர் கிளம்பி குடில்நிரைகளினூடாக சென்றபோது கூட அவர்கள் எதையும் பார்க்கவோ எங்கிருக்கிறோம் என்று உணரவோ இல்லை. தொலைவில் அஸ்தினபுரியின் கொடியைப் பார்த்ததும் பலந்தரை “இங்கு வண்டியை நிறுத்துங்கள்” என்றாள். தேர் நின்றதும் அவள் மறுமொழி கூறாமல் தேரிலிருந்து கீழிறங்கி ஏவலரிடம் “அது அஸ்தினபுரியின் அரசியரின் குடில் அல்லவா?” என்றாள். அவள் குரலை நெடுநாட்களுக்குப் பின்னர் கேட்கிறோம் என்று பூர்ணை எண்ணிக்கொண்டாள்.
“ஆம் அரசி, அங்குதான் அஸ்தினபுரியின் அரசி பானுமதியும் இளையவர் அசலையும் தங்கியிருக்கிறார்கள். அதற்கப்பால் உள்ள குடிகளில் கௌரவ அரசியரும் இளவரசியரும் தங்கியிருக்கிறார்கள்” என்றான் காவலர்தலைவன். “என்னை அங்கு அழைத்துச்செல்க!” என்று பலந்தரை கூறினாள். “அரசி, நீங்கள் செல்லவேண்டிய இடம் அது அல்ல” என்றாள் பூர்ணை. அவள் சொற்களை பலந்தரை கேட்காததுபோல் தோன்றியது. தேருக்குள்ளிருந்து தேவிகையும் விஜயையும் வெற்றுவிழிகளுடன் அவளை நோக்க பலந்தரை அவர்களை வெறுமனே நோக்கி ஏதோ சொல்வதற்கென இதழ்கள் அசைத்தபின் திரும்பிக்கொண்டாள்.
“தேர்” என்று ஏதோ சொல்ல காவலன் நாவெடுக்க “தேவையில்லை, நான் நடக்கிறேன். காசிநாட்டு அரசியரின் குடிலுக்கு என்னை அழைத்துச்செல்க!” என்று பலந்தரை சொன்னாள். அவள் நடந்தகல்வதை நோக்கியபடி தேவிகையும் விஜயையும் அமர்ந்திருந்தார்கள். “கிளம்பலாமா, அரசி?” என்று பாகன் கேட்டான். “கிளம்புக!” என்றாள் பூர்ணை. தேர் அசைவு கொண்டு முன்னால் சென்றது. தேவிகையும் விஜயையும் மீண்டும் விழிமூடி மெல்ல அசைந்து கொண்டிருந்தனர். பூர்ணை அவர்களின் முகங்களை திரைகளினூடாக நோக்க முயன்றாள். அவர்கள் உள்ளே இல்லை என்று தோன்றியது. உள்ளிருப்பது வேறெவரோ. இறந்து மட்கிய விழிகள் கொண்ட இரு உடல்கள்.
அவர்கள் இருவருக்கும் ஒரே குடில்தான் அளிக்கப்பட்டது. அவர்களுக்காக அது ஒருக்கப்பட்டிருக்கவில்லை. அங்கே குடில்கள் நிறைந்து புதிய குடில்கள் கட்டப்பட்டுக்கொண்டிருந்தன. பூர்ணை குடிலுக்குள் நுழைந்து பார்த்தாள். அதன் செவ்வக வடிவ அறைக்குள் நெருக்கமாக இரு மூங்கில் மஞ்சங்கள் போடப்பட்டிருந்தன. பொருட்களை வைப்பதற்கான பீடங்கள் எதுவும் இல்லை. கூரையிலிருந்து தொங்கவிடப்பட்ட கொக்கிகளிலும் சரடுகளிலுமே அரசியரின் பெட்டிகளையும் ஆடைப்பொதிகளையும் தொங்கவிட வேண்டியிருந்தது. அறை நடுவே மேலிருந்து தொங்கிய சரடில் மண்ணாலான ஐந்து திரிகளிடப்பட்ட விளக்கு தொங்கியது. பகலில் அதில் ஒரு திரியில் மட்டும் சுடர் எரிந்தது.
பூர்ணை பொருட்களை உள்ளே கொண்டு வந்து வைத்தபின் “இங்கு குறைவான இடமே உள்ளது. ஆனால் நாம் இங்கு நெடுநாள் தங்கப்போவதில்லை. நாளை காலையிலேயே நீர்க்கடன்கள் தொடங்கும் என்கிறார்கள். எனில் நாளை மாலையே நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும்” என்றாள். தேவிகை மறுமொழி கூறாமல் மஞ்சத்தில் அமர்ந்து தலைகுனிந்து கைகளை மடியில் சேர்த்து அசைவிழந்தாள். பிறிதொரு மஞ்சத்தில் விஜயை அவ்வாறே அமர்ந்தாள். பூர்ணை “தங்களுக்கு இந்த அறை போதுமானது, இங்கே இருவரும் சேர்ந்திருப்பதே நன்று” என்றபின் “அருந்துவதற்கு இன்நீர் கொண்டுவருகிறேன்” என்றபடி வெளியே சென்றாள்.
அவர்களிருவரும் அசைவிலாது பாவைகளென அமர்ந்திருந்தனர். உள்ளமிலாதாகி அருகில் கேட்கும் ஒலியிலோ அசைவிலோ மீள்வதும் திகைப்பும் பதைப்புமென அவற்றை எதிர்கொள்வதும் மீண்டும் உட்புகுந்துகொண்டு அகமிலாதாகி அமைவதும் அவர்களின் வழக்கமாக இருந்தது. பூர்ணை வெளியே சென்றபோது விஜயையின் பணிப்பெண்ணாகிய சந்திரிகை வந்து நின்றிருந்தாள். “அரசியருக்கு இன்நீர் கொண்டுவருக!” என பூர்ணை ஆணையிட்டாள். சந்திரிகை சென்றபின் தேரில் எஞ்சிய பொருட்களை குடிலுக்குள் கொண்டுசென்று வைத்தாள்.
சந்திரிகை அவர்களுக்கு இன்நீர் கொண்டுவந்தாள். அதை வாங்கி பூர்ணை அவர்கள் இருவரையும் சில மிடறுகள் குடிக்க வைத்தாள். “தாங்கள் ஆடைமாற்றிக்கொள்ளலாம், அரசி” என்றாள் பூர்ணை. அதை பலமுறை அவள் சொன்ன பின்னரே தேவிகை உணர்ந்து தலையசைத்தபின் எழுந்து நின்றாள். பூர்ணை தேவிகையை கைபற்றி அழைத்துச் சென்று சிறிய மூங்கில் பீடத்தில் அமரச்செய்தாள். மரவுரியை குடில்சுவரிலிருந்து இழுத்துக்கட்டி சிறிய மறைப்பை உருவாக்கினாள். அவள் தேவிகையின் ஆடைகளை களைந்துகொண்டிருக்கையில் சந்திரிகை குடுவையில் கொதிக்கும் நீர் கொண்டுவந்து வைத்தாள். தேவிகையின் ஆடைகளை முழுமையாகக் களைந்து வெற்றுடலுடன் அமரச்செய்து மரவுரிச்சுருளை வெந்நீரில் முக்கி அவளை துடைத்தாள் பூர்ணை.
தேவிகையை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நீராட்டி பணிவிடை செய்யும் பழக்கம் கொண்டிருந்தவள் பூர்ணை. தேவிகையைவிட பதின்மூன்று ஆண்டுகள் மூத்தவள். தேவிகையை வயற்றாட்டி கொண்டுவந்து அகத்தளத்துப் பெண்டிருக்குக் காட்டுகையில் அவளும் இரு இடைகள் நடுவே புகுந்து நோக்கினாள். தன் கைகள் வழியாகவே அவ்வுடல் மாறி வந்திருப்பதை அவள் அறிந்தாள். யுதிஷ்டிரனின் அரசி என அஸ்தினபுரிக்கு அவள் வந்தபோது அவளும் உடன்வந்தாள். அன்று அவள் சிறிய தோள்களும், அடுக்கடுக்கான கழுத்தெலும்புகளும், விலாஎலும்புகள் நிரை கொண்ட மெலிந்த உடலும் கொண்டிருந்தாள். அவள் மிக மெலிந்திருக்கிறாள் என்று சிபி நாட்டில் பேச்சிருந்தது. அவளை அஸ்தினபுரிக்குக் கொண்டுவந்ததும் சாளரங்களில் குவிந்த பெண்களும் அப்படி பேசிக்கொண்டனர்.
எனினும் அவள் தோலில் உயிர் மெருகும், மென்மயிர்ப் பரவல்களில் பொன்மினுப்பும் இருந்தது. நீண்ட முகமும் செந்தளிர் நிறமும் கொண்டிருந்தாள். அவளை முதல்முறையாக நீராட்ட வந்த அஸ்தினபுரியின் முதுசெவிலி “அரசி, புதுமுளைகள் எழவிருக்கும் மூங்கில் போலிருக்கிறார்” என்றாள். அதுவே பெயர் என்றாகி அவளை அகத்தளப்பெண்டிர் மூங்கில் என்றே அழைத்தனர். பின்னர் அன்னையாகி தசைப்பூச்சு கொண்டதும் கழுத்தெலும்புகள் மறைந்தன. பொற்சங்கிலி தசைமேல் வரையப்பட்டதுபோல் பதிந்தது. முலைகள் திரண்டு ஒளிகொண்டன. முலைக்கண்கள் கருமை அடைந்தன. மைந்தன் பிறந்த பின் அவள் வயிற்றின் இருபுறமும் பூர்ஜமரத்தின்மேல் வரிகளென மென்கோடுகள் விழுந்தன. ஒவ்வொரு மாற்றமும் அவளை மேலும் மேலும் அழகியென்றாக்குவதாகவே அவளுக்கு தோன்றியிருந்தது.
பூர்ணையின் கைகள் அவள் உடலை தொடத் தயங்கி நடுங்கின. ஓரிரு நாட்களில் ஒரு மனித உடல் அவ்வாறு ஆகமுடியும் என்று அவள் எண்ணியதே இல்லை. முன்பு ஒருமுறை அவள் உறவினளான முதியவள் ஒருத்தி அவ்வாறு உடல் நைந்து இறந்ததை அவள் கண்டதுண்டு. அவ்வுடல் உயிர்நீத்த பின்னர் ஒரு நாள் முழுக்க காத்திருக்க வேண்டியிருந்தது. அன்று ஆடி மாத கருநிலவு நாள். சிபிநாட்டு வழக்கப்படி அந்நாளில் எவரையும் சிதையேற்றுவதில்லை. ஆகவே உடலை கொண்டுசென்று ஊருக்கு வெளியே ஒரு விடுதியில் வைத்து முழுநாளும் காத்திருந்தார்கள். உடலைச் சுற்றி தேவதாருப் பிசின் இட்டு புகையெழுப்பினார்கள். சூழ்ந்திருந்தவர்கள் நீத்த உடலை நாடிவரும் பாலைநிலத்துப் பேய்களை அகற்றும் பொருட்டு பாடிக்கொண்டிருந்தனர்.
அந்த உடல் மலைத்தேன் பூசப்பட்டு தாலிப்பனை பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. அது கண்ணெதிரே ஒவ்வொரு கணமுமென நைந்து நிறம் மாறிக்கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். மறுநாள் காலை உடலை சிதைக்கு கொண்டு செல்லும்போது அது மண்ணால் செய்யப்பட்டதுபோல் மாறிவிட்டிருந்தது. அதன் விழிகள் மட்கி உள்ளிழுத்துக் கொண்டிருந்தன. உதடுகள் வீங்கி சற்றே திறந்திருக்க உள்ளிருந்து பழுப்பேறிய பற்கள் நீட்டியிருந்தன. அது சற்று வீங்கியதுபோல், அதன் தோல் நைந்து உள்ளிருக்கும் நீர் வழியவிருப்பதுபோல் தோன்றியது. அதன் அனைத்து துளைகளிலிருந்தும் சேற்றுப்பிளவினூடாக எழும் மூச்சடைக்க வைக்கும் எரியாவி எழுந்தது. அவள் அன்று மயங்கிவிழுந்தாள். அவள் அந்த ஒருநாளை தன் சித்தத்திலிருந்து முற்றாக மறைத்துக்கொண்டிருந்தாள். ஒருபோதும் அதை அவள் நினைவுகூர்ந்ததில்லை. எப்போதேனும் கனவில் அது எழுகையில் திடுக்கிட்டு விழித்தெழுந்தாள்.
தேவிகையின் உடலும் தோலும் அவ்வாறாக மாறிக்கொண்டிருந்தன. கழுத்திலும் முலையிடுக்குகளிலும் தூள்பாசி போலவோ தேமல் போலவோ ஏதோ படிந்திருந்தது. உடலுக்குள் இருந்து தோல்நெய் ஊறி பரவவில்லை. ஆகவே தோலில் செதில்கள் எழுந்தன. உதடுகளின் இணைப்புகள் புண்ணாகியிருந்தன. செவிகளுக்குப் பின்னும் விரலிடுக்குகளிலும் புண் எழுந்திருந்தது. எலும்பு வளையங்களாக அடுக்கப்பட்ட கழுத்தும் புடைத்தெழுந்து தோலை கிழித்துவிடுமெனத் தோன்றிய விலாஎலும்புகளும் அவள் கைபடும் உணர்வைக்கூட அடையவில்லை. அவள் கைக்கு வந்த தொடுவுணர்வு அவ்வுடலை உயிருள்ளது என்று காட்டவில்லை.
நீரள்ளி விட்டு, காரமணலிட்டு தேய்த்துக் கழுவி நறுஞ்சுண்ணமிட்டு அவளை மீட்கமுடியுமென்று அப்போதும் தோன்றியது. அதுவரை இருந்தது அரண்மனையின் இருளில். நாளை வருவது அரசநிகழ்வு. ஆனால் அத்தருணத்தில் அதற்கான வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. உடலை அழுத்தித் தொடும்போது அது உடைந்துவிடுமென்ற அச்சம் ஏற்பட்டது. நீராட்டி துடைத்து மாற்றாடை அணிவித்து தேவிகையை கொண்டு சென்று மஞ்சத்தில் அமரச்செய்தாள். விஜயையின் ஏவல்மகள் சந்திரிகை அவளை கைபற்றி அழைத்துச் சென்றாள். அவளை நீராட்டும்போது பூர்ணை சென்று நோக்கினாள். அவள் உடலும் தேவிகையின் உடல்போலவே இருந்தது.
இருவரையும் மஞ்சத்தில் அமரவைத்த பின்னர் மீண்டும் ஒருமுறை இன்நீரளித்து அவர்கள் இருவரும் தலைவணங்கி வெளியே சென்றனர். தங்கள் குடில்களுக்குச் சென்று நீராடி ஆடைமாற்றி நெடும் பொழுது கழித்து அவர்கள் வந்து பார்த்தபோதும் இருவரும் மஞ்சத்திலேயே அசையாமலிருக்கக் கண்டனர். பூர்ணை தேவிகையை மெல்ல பற்றி சரித்து “படுத்துக்கொள்ளுங்கள், அரசி” என்றாள். அவள் கையில் உடல் தந்து தளர்ந்து சரிந்த தேவிகையை பற்றிச் சாய்த்து மஞ்சத்தில் படுக்க வைத்து தலையணையை தலையில் வைத்து மரவுரிப் போர்வையை இழுத்து போர்த்தினாள். விஜயையையும் அவ்வாறே அவள் படுக்க வைத்தாள். பின்னர் குடில்படலை மெல்ல சார்த்தி வெளியே வந்தாள். சந்திரிகை அவளுக்குப் பின்னால் காலடி ஒலிக்காமல் வெளியே வந்தாள்.