நீ மது பகரூ – கடிதம்

நீ மதுபகரூ…

நீ மதுபகரூ – காலையில் தலைப்பை வாசித்ததிலிருந்து மனதிற்குள் இந்த ஒற்றை வார்த்தை குடி கொண்டுவிட்டது. எங்கோ கேட்ட வார்த்தை எங்கோ கேட்ட வார்த்தை என மனம் அதற்றிக் கொண்டேயிருந்தது. பின் கட்டுரையை வாசிக்க வாசிக்க ஞாபகங்கள் ஒவ்வொன்றாக மேகத்திலிருந்து வெளி வரும் நீல நிலா போல் தெளியத் தொடங்கின.

 

பொதுவாகத் தமிழ் மண்ணிற்கு இல்லாத சில நல்ல விஷயங்கள் என மற்ற மாநிலத்தவருக்கு சில பண்புகள் உண்டு. அவற்றில் ஒன்று கூடிப் பாடுவது.  நம்மவர்களுக்குக் கூச்சம் சற்று அதிகம், ஆதலால் பொது இடங்களிலோ அல்லது நான்கு பேர் கூடி உள்ள இடத்திலோ வாயைத் திறந்து பாடுவதென்பது தற்கொலைக்குச் சமமான ஓர் விஷயம். அப்படியே பாடத் தொடங்கினாலும் துணிந்த இதயமென ஒன்று மட்டுமே இருக்கும். கூடிப் பாடல் பாடுவதென்பது நம் மண்ணில் என்றும் கண்டிராத அறிய விஷயம்.

ஆனால் எனது பிற மாநிலத்து நண்பர்கள் அனைவரும் கூடிப் பாடுவதை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக மலையாள நண்பர்கள் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது  விஷயங்களிலிருந்தோ, இடங்களிலிருந்தோ, எதேச்சையாகவோ ஏதேனும் ஒரு பாடல் அவர்களுள் குடி கொண்டுவிடும்.

 

இதற்குப் பல சந்தர்ப்பங்கள் என்னால் உதாரணம் சொல்ல முடியும். அஜி என்னோடு பயணம் செய்யும் போது எப்படியாவது பத்து நிமடத்துள் ஒரு பாட்டுப் பாடாமல் அஜியால் பயணத்தை நகர்த்த முடியாது.

 

தாஜ்மகாலுக்குப் பின் யமுனை ஆற்றைப் பார்த்துக் கொண்டே நீங்களும், கே. பி. வினோத்தும் பாடிய  “காளிந்தி… காளிந்தி… கண்ணன்டே பிரியசகி காளிந்தி” பாடல் என் நண்பர்கள் அனைவரும் அறிந்த பாடலாய் பின் மாறியது. இன்று வரையிலும் எனக்கு அந்த பாடல் உங்கள் இருவரின் குரல் வழியாகவே ஞாபகத்திலுள்ளது. இதைப் போல் எண்ணற்ற பாடல்கள் நண்பர்கள் பாடி அவர்கள் குரலின் மூலம் என்னுள் நினைவில் நிற்கிறது.

 

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் என் நினைவில் நிற்கும் எந்த பாடலும் சங்கீதம் முறையாக பயின்றவர்கள் பாடியதில்லை. சங்கீதம் அறியாதவர்கள் பாடும் பாடல்களில் தனியாக ராகமும் பாவமும் பயின்றுவரும். இங்கே எந்த இசையுமில்லாமல், சுருதியுமில்லாமல் சொல்லினால் மட்டுமே வலுப்பெற்று நிற்பன இவை. ஆகையால் அதற்கான கனமும், புதிர் தன்மையும் தேவைப்படுகிறது. பல சமயம் இவர்கள் கத்துவது போன்றே தோன்றும் ஆனால் அந்த சொற்கள் நம் காதை சுற்றிக் கொண்டேயிருக்கிறது. மூளையின் ஏதோ ஓர் எல்லையில் அது சென்று சேர்ந்து கொண்டேயிருக்கிறது.

 

இன்று தளத்தில் வந்த பாடலை முதல் முறையாக நான் கேட்கிறேன். அதாவது மூலப்பாடலை முதன் முதலில் கேட்கிறேன். முதலில் கட்டுரையை வாசித்த போது,

 

“நீ மதுபகரூ மலர் சொரியூ

அனுராக பௌர்ணமியே

நீ மாயல்லே மறையல்லே

நீல நிலாவொளியே”

 

முதல் இரு வரிகள் எனக்கு எங்கெங்கோ கேட்ட குரல்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன. “நீ மாயல்லே, மறையல்லே” என்ற வரி அந்த அத்தனை குரல்களையும் என் நினைவிற்குக் கொண்டு வந்தன.

 

கல்லூரி நாட்களின் இரண்டாம் ஆண்டில், என் அறையின் நண்பர்களில் நேர் பாதி மலையாளிகள். அவர்கள் சந்தோஷமான நேரங்களில் இந்தப் பாட்டை பாடக் கேட்டிருக்கிறேன். கனமான குரலில் ஓர் மென்மைக் கூடி ஒலி எழுப்பும் சப்தங்கள். ஆனால் அதே பாட்டை இன்று வாசிக்க நேர்ந்ததும் நான் அதிர்ந்துவிட்டேன்.

 

ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. அன்று எனக்கு மலையாளத்தில் அ, ஆ கூடப் பொருள் தெரியாத நாட்கள். ஆனாலும் இந்த பாடல் என்னுடனே இத்தனை ஆண்டுகள் பயணம் செய்து வந்திருக்கின்றது. பொருள் அறியாத இந்த சொற்களே என்னுள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

 

நீங்கள் சொல்வது போல் சினிமா பாடல்களின் வரிகளில், “பொருள்முழுமை பெறாத குழந்தைத்தனம் இருக்கவேண்டும்.” என்பது உண்மை தான் அந்த குழந்தைத்தனமே நம்மை நினைவிலிருந்து நினைவிற்கு இட்டுச் சென்று விளையாடுகின்றன.

 

இன்று இந்த பாட்டை மேலே புகைப்படத்திலுள்ள எல்லோருக்கும் அனுப்பினேன். அனைவரும் அந்த பாடலை ஞாபகம் வைத்துள்ளனர். ஒருவன் எனக்கு கைப்பேசியில் அழைத்து மீண்டும் பாடிக் காட்டினான். அதே கனமான குரலில் துளிர்ந்து வரும் மென்மை.

 

நீ மது வனமோ மலர் மனமோ

அழகிய முழு நிலவே

நீ மாயல்லே மறையல்லே

நீல நிலாவொளியே

 

மணி விளக்கு இல்லாத

முகில் காண வேண்டாத

நம் காதல் சல்லாபம்

களி சொல்லி நிற்கும்

கிளி தொடங்கியதாய்

தன் ராக சங்கீதம்

 

வானம் கதைப்பாடி நிலா கேட்டிருந்து

ஆகாய மணியறையில்

நீ அறியாத உன் இருதயத்தில்

நான் கள்வனாய் கிடந்து

உடலறியாதே உலகறியாதே

உன் மனதைக் கவர்ந்து

நீ மாயல்லே மறையல்லே

நீல நிலாவொளியே

நீ மாயல்லே மறையல்லே

நீல நிலாவொளியே

 

 

நன்றி,

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42
அடுத்த கட்டுரைதீமை, அழகு- கடிதங்கள்