கட்சி, அரசியல் அனைத்துக்கும் அப்பால் பொன்னீலன் குமரிமாவட்டத்தின் அறிவுச்செயல்பாட்டின் முகம். நான் அவரைப் பார்க்கத்தொடங்கி முப்பதாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. 1988ல் அவரை சுந்தர ராமசாமியின் இல்லத்தில் சந்தித்தேன்.1994 ல் அவருடைய புதியதரிசனங்கள் நாவலின் விமர்சனக்கூட்டத்திற்காக நாகர்கோயில் சென்றிருந்தபோது அவருடைய இல்லத்திற்கும் சென்றேன். அவருடைய புனைவுலகம் அறம்,சமூக மாற்றம் என்னும் விழுமியங்களின் அடிப்படையில் அமைந்தது. அவருடைய அன்பில் வாழ்த்தில் உருவாகி வந்த இரண்டாவது தலைமுறை எழுத்தாளன் நான். இன்று அவருடன் மூன்றாவது தலைமுறை உரையாடிக்கொண்டிருக்கிறது
அவருடைய எண்பதாவது அகவைநிறைவு விழாவை அவர் சார்ந்திருக்கும் கட்சியோ, அதன் இலக்கிய அமைப்போ நடத்துவதை விட அவரால் தூண்டுதல் பெற்ற மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள் முன்னின்று நடத்துகிறார்கள் என்பது ஒரு படி மேலாகவே பொருள் மிக்கது. ஒருங்கிணைக்கும் ராம் தங்கம் [திருக்கார்த்தியல் தொகுப்பு] மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் இத்தகைய விழாக்களை அனைத்துத் தரப்பினரும் கூடியே நடத்தவேண்டும். எல்லா முகங்களும் அமைந்த அழைப்பிதழ் பொன்னீலனின் பயனுறு வாழ்வுக்கான சான்று.
நாள் 16 நவம்பர் 2019
பொழுது காலை 930 மணி
இடம் நாகர்கோயில் சீதாலக்ஷ்மி திருமண மண்டபம், இருளப்ப புரம்