கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 [முன் தொடர்ச்சி]
எந்த கலைரசனையிலும் அக்கலையை வகைபிரித்து அழகியல் ரீதியாக வரையறை செய்து அதற்கேற்ப உளநிலைகளை உருவாக்கிக்கொள்வதும் அதற்குரிய தொடர்பயிற்சியை மேற்கொள்வதும் இன்றியமையாதது. இலக்கியத்துறையில் இந்நோக்கத்துடனேயே வணிக எழுத்து – இலக்கியம் என்னும் பிரிவினை உருவாக்கப்பட்டது.
இலக்கியத்திலேயே செவ்வியல், கற்பனாவாதம், யதார்த்தவாதம், இயல்புவாதம் போன்ற அழகியல் வேறுபாடுகள் உருவாக்கப்பட்டன. நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற காலகட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவற்றுக்குள் பல்வேறு வடிவத்தனித்தன்மைகள் வரையறை செய்யப்பட்டன. இவற்றை அறிந்துகொள்ளுதல் ரசனைக்கு மிகமிக இன்றியமையாதது.
உதாரணமாக, ஓர் செவ்வியல்- இயல்புவாதப் படைப்பு எந்தவகையிலும் உத்வேகம் அளிக்காது. அது நம்பகத்தன்மையை, ஒட்டுமொத்த உணர்வை மட்டுமே அளிக்கும். ஒரு நவீனத்துவ- யதார்த்தவாதப் படைப்பு அளிக்கும் விறுவிறுப்பான வாசிப்பை அதில் எதிர்பார்க்கவே முடியாது. இலக்கியத்தில் இரு உதாரணங்கள் சொல்லலாம் என்றால் நீல பத்மநாபனின் உறவுகள் செவ்வியல்- இயல்புவாதப் படைப்பு. சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நவீனத்துவ யதார்த்தவாதப் படைப்பு
இங்கே சினிமா சார்ந்தும் இத்தகைய அழகியல் வரையறைகளை பேசிப் புரியவைத்திருக்கவேண்டும். அதுவே ஒவ்வொரு படைப்பையும் அதனதன் உத்தேசிக்கப்பட்ட ரசிகனாக அமைந்து ரசிப்பதற்குரிய பயிற்சியில் முதன்மையானது. அது இங்கு நிகழவில்லை என்பதற்கு இங்கே சினிமா பற்றிப் பேசப்படும் பேச்சுக்களே சான்று.
உதாரணமாக, சென்ற ஆண்டு திருவனந்தபுரம திரைவிழாவில் காட்டப்பட்ட மில்கோ லாசரோவின் Aga இயல்புவாத அழகியல் கொண்ட திரைப்படம். அதில் பெரிதாக ஒன்றுமே நிகழ்வதில்லை. அந்நிலப்பரப்பின் பார்வையாளனாக நாம் அமர்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆல்வாரோ பிரெச்னரின் A Twelve-Year Night ஒரு நவீனத்துவ யதார்த்தவாத படைப்பு. அதை கிட்டத்தட்ட இருக்கைநுனியில் அமர்ந்து பார்க்கமுடியும்
கலைப்படம்- இடைநிலைப் படம்- வணிகப்படம் என்னும் இந்த வரையறை எப்படி மேலைநாடுகளில் அழிந்தது என்பதைப்பற்றி நாம் பேசுவதில்லை. எவரேனும் எங்கேனும் சொன்ன ஒற்றைவரியை ’இப்ப இப்டித்தான்போல’ என்று எடுத்துக்கொள்கிறோம். அதை அப்படியெ மேற்கோள் காட்டுகிறோம்.
அமெரிக்கச் சூழலில் கலைப்பட இயக்கம் என ஒன்று உருவாகவே இல்லை. ஏனென்றால் அங்கே சினிமா முழுக்கமுழுக்க திரைநிறுவனங்களின் கையில் இருந்தது, இருக்கிறது. தயாரிப்பு வினியோகம் இரண்டுமே. கலைப்பட இயக்கம் என்பது தனிநபர்களைச் சார்ந்தது. ஆகவே அமெரிக்காவில் அதற்கான களமே இல்லை.
பொத்தாம்பொதுவாகச் சொல்லப்போனால் அமெரிக்க கலைப்பட இயக்கம் என ஒன்று இல்லை. அது முழுக்கமுழுக்க ஐரோப்பிய பண்பாட்டியக்கமாகவே தொடங்கி வலுப்பெற்றது.அவ்வியக்கத்தின் செல்வாக்கால் அமெரிக்காவில் உருவானகலைக்கூறுகள் கொண்ட சிறிய படங்கள்கூட கலைஞர்கள் பெரிய நிறுவனங்களுக்குள் சென்றே எடுக்கப்பட்டன.
அமெரிக்கச்சூழலில்தான் ‘கலைப்படம் என ஒரு தனிப் பிரிவு இல்லை’ என்னும் கூற்று உருவாகியது– சொல்லப்போனால் உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் கொண்டுசெல்லவும் பட்டது. அது கூறப்பட்டபோது அத்தனை பெரிதாக தோன்றவில்லை. ஆனால் முப்பதாண்டுகளில் உலகமெங்குமே கலைப்பட இயக்கத்தை நொறுக்கிவிட்டிருக்கிறது அந்த வரி.
இன்று உலக அளவிலேயே கூட கலைப்பட இயக்கம் சரிவு கண்டிருக்கிறது. இந்தியக் கலைப்பட இயக்கம் ஏறத்தாழ நின்றே விட்டது. கலைப்பட இயக்கத்தின் காட்சிக்கூடங்களாக உருவாக்கப்பட்ட கான்ஸ், கார்லேவாரி போன்ற உலகத்திரைவிழாக்கள் எல்லாமே சோர்வுற்றிருக்கின்றன இன்று. அங்கே நாலாந்தர வணிகப்படங்களும் திரையிடப்படுகின்றன.
இந்த வேறுபாடு அழிக்கப்பட்டமையால் என்னென்ன விளைவுகள் நிகழ்ந்தன? இவ்வாறு பட்டியலிடுவேன்
அ. சினிமாவின் காட்சிசார் அழகியல், அதன் உணர்வுநிலை, அதன் தரிசனம் ஆகியவற்றுக்குப் பதிலாக அதன் தொழில்நுட்பத்தை விதந்தோதி ரசிக்கும் மனநிலை உலகமெங்கும் உருவானது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவை மட்டும் அல்ல திரைக்கதை, நடிப்பு ஆகியவையும் தொழில்நுட்பங்களே. தொழில்நுட்பத்தை ரசிக்கும் மனநிலை அடிப்படையில் கலைப்படத்துக்கே எதிரானது. உலகப்புகழ்பெற்ற கலைப்படங்கள் குறைப்பட்ட தொழில்நுட்பம் கொண்டவைதான்.
ஆ. கலைப்படங்களைப் பார்ப்பதற்குரிய உளநிலை இல்லாமலாக்கப்பட்டது. பெரிய தொழில்நுட்பம் கொண்ட கேளிக்கைப் படத்தைப் பார்க்கும் ஒருவர் கலைப்படங்களைப் பார்க்கும் பொறுமையுடன் இருப்பதில்லை. நீங்கள் குறிப்பிடுவது இதைத்தான்.
இதை நீங்கள் கோவா, சென்னை திரைவிழாக்களை திருவனந்தபுரம் திரைவிழாவுடன் ஒப்பிட்டால் அறியலாம். கேரளம் இன்னமும்கூட கலைப்படங்கள் என்னும் தனி அழகியலை நம்புவது, பேணுவது. அந்த ரசனையும் அங்கே நீடிக்கிறது. மாறாக சென்னையிலும் கோவாவிலும் திரைவிழாக்களுக்கு வருபவர்கள் தங்களை திரைரசிகர்கள் என எண்ணிக்கொண்டிருந்தாலும் தொழில்நுட்பத்தேர்ச்சியை ரசிக்க மட்டுமே கற்றவர்கள். ஆகவே கலைப்படம் பார்க்கும் பொறுமை அற்றவர்கள். திருவனந்தபுரம் திரைவிழாவில் பார்வையாளர்களிடமிருக்கும் கவனம் பிற இடங்களில் இல்லாமல் ஆகிவிட்டது இவ்வேறுபாடு அழிக்கப்பட்டமையால்தான்.
இ. கலைப்படங்களை வணிகப்படங்களின் உளநிலையுடன் சென்று பார்ப்பதன் பொருளின்மையைப் போலவே வணிகப்படங்களை அவற்றுக்குரிய உளநிலையுடன் பார்க்க மறுத்து தன்னை ஒரு படி மேலாக நிறுத்திக்கொண்டு ’அறிவார்ந்த’ விமர்சனம் செய்வதும் கேலிசெய்வதும் நிகழ்கிறது. என் திரைநண்பர் ஒருவர் சொன்னார். “தமிழ் ‘தீவிர’ திரைரசிகன் தீவிர சினிமாக்களைப் பார்க்கமாட்டான். வணிக சினிமாக்களை தீவிரமாக விமர்சிப்பான்” என்று. அதை நீங்கள் பார்க்கலாம்.
இதோ பிகில் வந்துவிட்டது. எவ்வளவு ‘கலை’ ஆய்வுகள், எவ்வளவு சமூகவியல் ஆய்வுகள், எவ்வளவு கொந்தளிப்புகள் நிகழும் என பாருங்கள். எல்லாமே வெற்றுப் பாவனை. உலகின் நல்ல சினிமாக்கள் பற்றி மிகமிகமிக அரிதாகவே எவரேனும் தமிழில் எழுதுகிறார்கள். பெரும்பாலும் அவை வேறெங்கோ எழுதப்பட்டவற்றின் தழுவல்வரிகள். அரிதாகவே மெய்யான ஆய்வுகள், உரையாடல்கள் உள்ளன. அவை வாசிக்கப்படுவதுமில்லை.
இந்த மழுங்கல்தான் இங்கே கலைப்பட இயக்கம் என ஒன்று உருவாகாமல் போவதற்கான முழுமுதற் காரணம். ஒரு வகையில் பார்த்தால் இது இயல்பே. இலக்கிய ரசனையில் இங்குள்ள மிகப்பெரும்பான்மையினர் முழுச்சுழியத்திற்கும் கீழே மதிப்பெண் பெறுபவர்கள். அவர்களிடம் திரைரசனையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஓரளவு இலக்கிய வாசிப்புள்ளவர்களின் திரைரசனைகூட துல்லியமான வேறுபாடுகள் இன்மையால் மழுங்கியே உள்ளது.
சுருக்கமாகச் சொல்வதென்றால் இங்கே சினிமா பற்றிய பேச்சுக்களில் சினிமா என்னும் கலைவடிவம் குறித்த பிரக்ஞை உள்ள பேச்சுக்கள் அரிதினும் அரிது. ஒரு சினிமாப் பார்வையாளன் எங்கே நிற்கவேண்டும், எங்கே மீறக்கூடாது என்ற புரிதல்கூட இல்லாத அரட்டைகள். பாலாவின் பரதேசி வந்தபோது ஒரு விமர்சகர் எழுதினார். அதில் பஞ்சம் காரணமாக தோட்டத்திற்கு பணிக்குச் செல்லும் தொழிலாளர்களின் மீசைதாடி வளர்ந்த அளவு தலைமுடி வளரவில்லை, அது ஒரு கலைக்குறைபாடு என்று. அதில் ஒரு ஏகத்தாளம், எனக்குத் தெரியுது உனக்குத்தெரியலையே என்னும் பாவனை.
நமக்கு வரும் விமர்சனங்கள் இத்தகையவை. ஒன்று, மீசைதாடி வளர்வதைவிட மெல்லத்தான் தலைமுடி வளரும். தலைமுடியை எவரும் அவிழ்த்து தொங்கவிடுவதுமில்லை. அப்படியே இருந்தாலும் அது ஒப்பனையாளரின் ஒரு பிழை. விமர்சகனின் வேலை இதையெல்லாம் நோக்கிக் கொண்டிருப்பது அல்ல. அந்தப்படத்தில் அந்நீண்ட பயணமே ஒரு மிகை யதார்த்தம்தான். அதை ஒரு உருவகமாக ஆக்க படத்தின் ஆசிரியர் விரும்புகிறார். அத்தனை நாள் நடந்துபோகும் அந்த தோட்டம் எது என ஆராய்பவனுக்கு சினிமா என்னும் கலையின் அறிமுகமே இல்லை என்றுதான் கொள்ளவேண்டும்