தம்பி ஒருவர் நீண்ட பாக்ஸ் கட்டிங் தலையும், அதில் கோழிச்சாயமும், விந்தையாக வழிந்த கிருதாவும், கிழிசல் ஜீன்ஸும் முடிச்சிட்ட சட்டையுமாக உற்சாகமாக இருந்தார்.
“படம் எப்டி தம்பி?” என்றேன்
“தெறி சார்” என்றார்
அருகிருந்த மலையாளி “ஆரு தெறி பறஞ்ஞு?” என்றார்.
அவரை ஒதுக்கி ”இல்ல படம் எப்டி இருக்குன்னு கேட்டேன்”
“மாசு” என்றார். “செம மாசு”
எனக்கு புரியவில்லை. “இல்ல தம்பி, நான் படம் எப்டீன்னு கேட்டேன்” என்றேன்
“மரணமாசு” என்றார்
“அதாவது?” என்றேன்
“படம் செம லோக்கலா இருக்கு சார்”
“நம்ம ஊரு கதையோ?’ என்றேன்.
”தர லோக்கலு”
‘தரை டிக்கட்னுன்னா..”
”செம மிரட்டல்”
”திகில்படமோ?” என்றேன்
“சும்மா டப்பா டான்ஸ் ஆடிருச்சில்ல?”
“ஓகோ” என்றேன். “அப்ப படம் நல்லாருக்கு?”
“படம் வேற லெவல் சார்” என்றார் மேலும் உற்சாகமாக
“வேறன்னா?”
“சும்மா வேற லெவல்”
”அப்டியா?” என்றேன்
“ தீயா இருக்கு சார்”
“இல்லே, நான் கேட்டது அதில்லை. படம் எப்டி தம்பி?”
“சான்ஸே இல்ல சார்”
“சரிதான் படமே பாக்கலையா?”
“கலக்கல்….”
“ஓ” என்றேன் மையமாக
“வெறித்தனம் சார்! சர்ரியான வெறித்தனம்!”
“நான் படத்தப்பத்தி கேட்டேன் தம்பி”என்றேன்
அவர் உச்சகட்ட உற்சாகத்துடன் “சூறையாடியாச்சு… கொன்னு புதைச்சாச்சு” என்றார்
“நல்ல கதையோ?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டேன்.
“படம் தாறுமாறு தக்காளிச்சோறு சார்”
நான் பெருமூச்சுவிட்டேன்
“வெச்சு செஞ்சுட்டாங்க சார்!”
“யாரு?” என்றேன்
“சும்மா அதிரிபுதிரியா இருக்கு சார்”
நான் “அப்டியா?” என்றபோது காற்றுதான் வந்தது
“சம்பவம் பண்ணிட்டாங்க சார்”
“ஓகோ” என்றேன்
“சும்மா தட்டி எறிஞ்சாச்சு”
”ம்ம்” என்றேன்.
“கொலவெறி சார்”
“யாருக்கு?”என்றேன்
அவர் பதில் சொல்லவில்லை. இன்னொரு பையனைப் பார்த்து “மாப்ள படம் பாத்தியா.சும்மா அதிருதுல்ல?” என்றபடி சென்றார்
டீக்கடைக்காரர் “இதெல்லாம் நீங்க அவங்கிட்ட பேசலாமா? பேசத்தெரியாத பயக்கசார். பாஷையே தெரியாது… அலையுதானுக” என்றார்
“நீங்க படம் பாத்தியளோ?’
“ஆமா சார். அம்சமா இருக்கு”
***