நீங்கள் மகன் உறவைச் சொல்லும்போது “தந்தைக்கும் மகனுக்குமான உறவென்பது தொடுதலின் வழி நிகழ்வது’ எனக் குறிப்பிடுவீர்கள். தன் மகனை குளிக்கவைத்த ஒவ்வொரு தந்தையும் ஒப்புக்கொள்ளும் நிஜமிது. வழக்கமாக, ஒரு குழந்தை தன்னுடைய அப்பாவின் உடல்வாசனையை உட்பெற்றே இளம்பிராயத்தைக் கடக்கும். ஆனால், ஞாபகங்களை குடிக்கத்துவங்கிய நாள் முதல் நான் என்னுடைய அப்பச்சியின் உடல்வாசனையைத்தான் அதிகம் தன்வசப்படுத்தியிருக்கிறேன். அப்பாவிடமிருந்து நான் புறக்கணிப்படைந்த நாள்தொட்டு, அவர்தான் என்னை கைகால்களை நீவிக்கொடுத்து குளிக்க வைப்பார். என்னுடைய அப்பச்சியின் பெயர் அய்யாவு. விபூதியும் வியர்வையும் கலந்த கருத்த தோல். என் வாழ்வுமுழுமைக்குமான ஆதர்சனமாக அய்யாவு அப்பச்சி இன்றுவரை மனதுள் நிறைந்திருக்கிறார்.
வாய்த்தவறிகூட ஒரு வார்த்தை பொய்சொல்லாத அப்பச்சியின் வாழ்வியலை எனது அந்த அச்சிறுவயதில் நான் அறிந்திருக்கவில்லை. எதற்காகவும் அறத்திற்கு எதிராக நிற்காத, அவர் கடைபிடித்த அந்த சத்தியத்தை, அதன் தீவிரத்தை யோசித்துப்பார்க்கையில் நிறையநிறைய சம்பவங்களும் எண்ணற்ற நல்மனித முகங்களும் இத்தருணத்தில் நெஞ்செழுகிறது.
நம்பகமாக நம்மோடு இருந்த உறவுகள் காலச்சூழ்நிலையைக் காரணம்காட்டி நம்மைவிட்டுப் பிரிந்துவிலகும் நேரங்களில், ஒவ்வொரு எளியவனின் உள்ளுக்குள்ளும் உண்டாகும் துயர் அளவற்றது. எதிர்மறைகளை நம்மீது சுமத்தி அவர்கள் அடுக்கும் தீச்சொற்களை தாங்கவியலாது மனது தகிக்கும். எதையெதையோ தேடித்தேடி எங்கெங்கோ அலைந்து திரியும். அப்படியானதொரு, நொடித்த மனதை சுமந்துகொண்டுதான் சில வருடங்கள் முன்பு, பூமிதான இயக்கத்தினை தமிழகத்தில் முன்னின்று நடத்திய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைச் சந்திக்க நண்பர்களுடன் சென்றிருந்தேன். தன்னியல்பாக அச்சந்திப்பு உருவாகி நிகழ்ந்தது.
கெளசிக், திருமலை, நவீன், தீபா உட்பட நண்பர்கள் சேர்ந்து செங்கல்பட்டில் உள்ள அம்மாவுடைய வீட்டுக்குச் சென்றோம். ஒவ்வொருத்தர் குறித்தும் அறிமுகமாகி பேசிக்கொண்டிருந்தோம். சென்றிருந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊரைச் சார்ந்தவர்கள். ஒவ்வொரு ஊரின் பெயரைக் கேட்கும்போதெல்லாம், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவ்வூரின் மேடுபள்ள நிலவியல் பற்றியும், அவ்வூரின் முக்கிய மனிதர் பற்றியும், அங்கிருக்கும் சில மலைக்குன்றுகள், மரங்கள், பாறைகள் பற்றிக்கூட தனக்குத்தெரிந்த தகவல்களைச் சொன்னார். அதுசார்ந்த கதைகளையும் அம்மா எங்களுக்குச் சொன்னார். அவ்வளவு ஆத்மார்த்தமான உரையாடல்!
அவரவர் தங்களை சுயஅறிமுகம் செய்துகொள்ளும் நேரத்தில் என்முறை வந்தபொழுது, நான் ‘ஈரோடுக்குப் பக்கத்தில் அறச்சலூர்’ என்றேன். உடனே, அம்மா ‘அங்க நாகமலைன்னு ஒரு மலை இருக்கே?’ என்றார். ‘ஆமாம்மா’ என நான் பதிலுரைக்க, அம்மா அவ்வூர்பற்றி தொடர்ந்து பேசினார். ‘அங்கதான் நாங்க தமிழ்நாட்டுலேயே மிகத்தீவிரமான நிலவுரிமை கேட்டுப் போராடினோம். அங்க மன்றாடியார்ன்னு ஒருத்தர் இருந்தாரு. பழையகோட்டை பட்டக்கார், ஜமீன் பரம்பரை. அவருக்கு எதிரா தான் நாங்க முதல்ல போராட்டங்களத் துவங்குனோம். ஈரோட்டுல சக்திவேல் தெரியுமா? டாக்டர் முத்துச்சாமி தெரியுமா?’ எனத் தானறிந்த பெயர்களைச் சொல்லிக் கேட்டார். ‘இல்லம்மா. எனக்கு அங்க டாக்டர் ஜீவானந்தம் அய்யாவத்தான் தெரியும்’ என்றேன்.
கடைசியாக ‘அய்யாவு?’ என்று கேட்டார். ஊரில் எவ்வளவோ அய்யாவு இருப்பார்கள் என்ற யூகத்தில், ‘எங்க அப்பச்சி பேர்கூட அய்யாவுதாம்மா’ என்றேன். உடனே அம்மா, தான்றிந்த அய்யாவுவின் உருவத்தோற்றத்தை அடுக்கடுக்காகச் சொன்னார். அப்பொழுது நான் உறுதியாகச் சொன்னேன், ‘ஆமாங்கம்மா அது எங்க அப்பச்சிதான்’. மெல்லமெல்ல அப்பச்சியின் உருவத்தை பற்றியும் இயல்புபற்றியும் பேசியபடியே நினைவிலிருந்து தன் பழங்காலத்தைக் கசியச்செய்தார்.
அதிர்ந்து நிமிர்ந்து நான் கண்ணழுத கணம் அது! அவருடைய மகள்வயிற்றுப் பேரனாக இருந்தும்கூட, நண்பர்களைப்போல எனக்கும் அச்செய்தி வியப்பாக இருந்தது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனோடு எனது அப்பச்சி, பூமிதான யாத்திரைக்காக அவ்வளவு தூரங்கள் நடந்துசென்றிருக்கிறார். நிறைய நாட்கள் அவர்களோடு தங்கியிருக்கிறார். ஆனால், தன் வாழ்வில் ஒருமுறைகூட அதைப் பெருமிதம் ததும்ப வெளியில் சொன்னதில்லை. சிறுவயதிலிருந்து அவராலேயே தூக்கிவளர்க்கப்பட்ட நானும் அவ்வுண்மையை அறிந்திருக்கவில்லை.
ஒரு சின்ன மளிகை கடை நடத்திக்கொண்டு, அதில் பீடி சிகரெட் விற்காமல், செக்கு எண்ணெய் மட்டுமே விற்று, கலப்படமற்ற மளிகைசாமான்களைத் தேடிச்சென்று வாங்கிவந்து… அறம்மீறக் கூசுகிற ஒரு தர்மவாழ்வையே அவர் வாழ்ந்தார். ஐந்தாவது ஆறாவதுவரை என்னைக் குளிப்பாட்டி தலைதுவட்டிவிட்ட என் அப்பச்சியை இக்கணம் என் நினைவுமுழுக்க நிறைத்துக்கொள்கிறேன்.
ஒரு எளிய மனிதன் தனது வாழ்வு முழுமையும் கடைபிடித்த சத்தியம் தன்னளவில் உண்மையானது. முழுமையுற்றது. அது புறவுலகின் தர்க்கங்களுக்கு அப்பாலான வெளியில் அமைதியாக சுடர்கொள்கிறது. வாழ்வு படிந்த அந்நெறிமுறைக்கு விளம்பரம் எதுவும் அவசியமற்றதாகிறது. ஒட்டுமொத்த சமூகமும் நெஞ்சில்வைத்துக் கொண்டாடும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் தொண்ணூற்றைந்து வயது இதயத்துக்குள்… எவ்வளவு கதகதப்பாக என் அப்பச்சியும் உள்ளிருந்து சொல்லாக துடித்துக்கொண்டிருக்கிறார்! வேறெதன் பொருட்டும் ஈடுசெய்ய முடியாத நிறைவிது.
செங்கல்பட்டில் நிகழ்ந்த அச்சந்திப்பில் அம்மா சொன்ன சம்பவங்கள், கதைகள், மனிதர்கள், போராட்டங்கள் என ஒவ்வொன்றுமே அத்தனை உள எழுச்சி தரக்கூடியவை. சொல்லப்போனால் சொல்லத்தெரியாத தொந்தரவுக்குள் மனது அன்று சுற்றிச்சுற்றி வீழ்ந்தது. அப்படியே சிறிதுகால இடைவெளிக்குள் இரண்டு,மூன்று சந்திப்புகளை நாங்கள் நிகழ்த்திக்கொண்டோம். நான்காவது சந்திப்பில், குக்கூ காட்டுப்பள்ளிக்கு வருகைதர அம்மா விருப்பம் தெரிவித்தார். அதன்படியே நண்பர்களின் கூடுகை நிகழ்வொன்று இருநாட்கள் குக்கூவில் அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் சுயக்கதை கேட்கும் நன்நிகழ்வாக அமைந்தது.
அந்நிகழ்வில் அம்மா பேசும்போது, ‘இங்க பக்கத்துல இருக்க திருப்பத்தூர்ல தான் ஜெகந்நாதன் அய்யா கொஞ்சகாலம் இருந்தாரு. ஒரு கிறிஸ்துவ ஆஸ்ரமத்துல தங்கி வேல செஞ்சு சுத்துப்பட்டு கிராமங்கள் முழுக்க அலைஞ்சாரு…
இப்ப…இந்த மண்கட்டிடத்துல முழுக்கமுழுக்க நான் மனசு நிறைஞ்சிருக்கேன். அவரோட அதிர்வலைகள என்னால இங்கயும் உணரமுடியுது. மண்ணு மருந்தாகும்னு சொல்லுவாங்க. அதேமாதிரி இந்த மண்கட்டிடமும் நோய்தீர்க்கும் இடம் மாறும். அதுக்கான பிரார்த்தனைய நான் வைக்குறேன்’ என நெகிழ்ந்துருகிப் பேசினார். அந்தச் சத்தியச்சொல் இன்று நிறைவேறியுள்ளது.
அதன்பின் சிலகாலங்கள் தள்ளி, சமூக வலைத்தளங்களிலும், காட்சி ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும், சகமனித அரசியல் உரையாடல்களிலும் பெரும் வெறுப்பும் கசப்பும் ஊடுபாய்ந்திருப்பதை நேருணர முடிந்தது. குக்கூ நிலத்திற்கு இந்தியாவின் வெவ்வேறு பகுதியிலிருந்து இளைஞர்கள் வந்தடைகிறார்கள். ஆனால் அவர்களிடம் சேர்ப்பிக்க, ஒரு சாட்சியாக… ஒரு நம்பிக்கையாக… ஒரு சொல்லாக ஏதுமற்று நாங்கள் தவித்திருந்தோம். எதை இவர்களுக்காக அளிப்பது? என்ற கேள்வி துளைத்தெடுத்தது. ஏதோவொருவகையில் எல்லாம் இறந்தவர்களின் வரலாறாகவே பகிரப்பட்டுவந்த சூழலில், கைநீட்டிச் சொல்லும் கண்முன் நிற்கும் சாட்சியாக ‘கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்’ எங்களுக்குத் தெரிந்தார். இரத்தமும் சதையுமான சமகாலம்!
உங்களுடைய ‘இருகாந்திகள்’ கட்டுரையில் நீங்கள் மனதிலிருந்து அழுந்தச்சொன்ன (இவர்களைப் பற்றிய ஒரு உருப்படியான வரலாறு தமிழில் கிடைப்பதில்லை) என்ற ஒரு வரி, கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதனின் வாழ்க்கை வரலாற்றினை புத்தகமாக ஆவணப்படுத்த வேண்டும் என்ற கனவுக்கு எங்களை இட்டுச்சென்றது. அந்த விருப்பத்தின் பின் நாங்கள் அடைந்த நெருக்கடிகளும் ஏராளம். காலங்கள்தாண்டி கடந்துநிற்கிற இவ்வரலாறைச் சுமக்கப்போகிற இப்புத்தகம், எவ்விதத்திலும் மற்ற தரமான புத்தகங்களைவிட நிலைதாழக் கூடாது என்பதே எங்களனைவரின் ஒற்றை விருப்பமாக இருந்தது. கெட்டி அட்டை, முதல்தர அச்சுக்காகிதம், தேர்ந்த அச்சகம் என எவ்விதச் சரமசங்களுமற்று இப்புத்தகத்தை அச்சாக்கத் துணிந்தோம். காரணம், இதன் உள்ளடக்கம்!
ஆனால், இக்கனவை நிறைவேற்ற நடைமுறையில் நாங்கள் இதுவரை கண்டிராத ஒரு பெருந்தொகை எங்கள் முன்வந்து நின்றது. அதை முகநூலில் பதிந்தோம். எவ்விதச் சிறுதயக்கமும் இல்லாமல் நீங்கள் அதை உங்கள் வலைதளத்தின் முதல்முகப்பாக சிலநாட்கள் வைத்திருந்தீர்கள். புற்றுக்கு மீளும் எறும்புகளென வெவ்வேறு திசைகளிலிருந்து உதவிகள் சேரத்துவங்கின. அச்சுக்கான உரியதொகையை நாங்கள் அதன்வழி அடைந்தோம்!
ஜோதி அச்சக கணேசமூர்த்தி அண்ணன், வடிவமைப்பாளர் சங்கர் அண்ணன், வடிவமைப்பாளர் தியாகராஜன், பழனியப்பன் அண்ணன், நேசன் உள்ளிட்ட நிறைய நண்பர்களின் செயல்பிரார்த்தனை இச்சாத்தியத்தை நினைத்த வடிவத்தில் நிறைவேற்றிக் கொடுத்தது. நிறைகர்ப்பம் முடித்து சுகமகவு அடையும் தலைச்சம்பிள்ளையாக ‘சுதந்திரத்தின் நிறம்’ கைவந்து சேர்ந்தது. பெருநிம்மதியோடு புத்தக வெளியீட்டிற்கான நிகழ்வினை திட்டமிடத் துவங்கினோம்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை நிகழ்வுக்கு அழைக்க அணுகியபோது, அம்மாவுடனிருந்த உதவியாளர்கள் சிலர் ராகுல் காந்தியை, கமலஹாசனை பரிசீலுத்து எங்களிடம் பரிந்துரைத்தார்கள். அவர்கள் இருவரும் அம்மாவைச் சந்திக்க தொடர்ச்சியாக நிறையமுறை நேரம் கேட்டுள்ளதாகவும், இப்புத்தகம் வெளியீட்டு நிகழ்வினையும் அதோடு இணைத்துக்கொண்டால் இன்னும் பரவலாக வெளிச்சப்படலாம் என்றார்கள். ஒரு எளிய புன்னகையுடன் அப்பரிசீலனையை நிராகரித்தோம். புகழ்வுக்காகச் சொல்லவில்லை, நாங்கள் தீர்க்கமாகவும் வலுவாகவும் நம்பியது நிகழ்வில் உங்களுடைய இருப்பு நிகழவேண்டும் என்பதுதான். நீங்கள் இப்புத்தகத்தை வெளியிட வேண்டும் என்றும், உங்களின் கைப்பிடித்த ஒரு அருகாமை எங்கள் எல்லோருக்கும் அமையவேண்டும் என்றும் நினைத்தோம்.
இவ்வளவு வசவுகளைக் கடந்து, இத்தனை நெருக்கடிகளைத் தாண்டி, எதிர்மறை விமர்சனங்களின் பேரழுத்தத்தைப் புறந்தள்ளி, ஏதோவொருவகையில் நேர்மறையான விடயங்களை மொழிவழி உரத்துப்பேசுகிற ஒரு கர்ப்பச்சொல் உங்களிடமிருந்தே எங்கள் நெஞ்சு புகுகிறது. எல்லாத் துயர்களையும் நீ கடந்துசெல், வெளிச்சம் வெகுதூரமில்லை என்ற மனதுக்குள் அசரீரியாக ஒலிக்கின்றன அச்சொற்கள். ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாள் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் தலைக்கல் சுமந்து கட்டிய ஊழியரகக் கட்டிடத்தில் இப்புத்தகம் வெளியீட்டுச் சந்திப்பு நிகழவேண்டும் என்பது அனைவரின் விருப்பமாயிருந்தது.
உங்களுடைய வருகை உறுதியான சில தருணங்களுக்குள் எங்கிருந்தோ ஓர் எண்ணயோசனை மனதை வந்தடைந்தது. அம்மாவுடைய வாழ்வியலைச் சுமக்கிற ஒற்றைப்புகைப்படம் ஒரு வரலாற்றுப் பின்னணியைச் சொல்வதாக இருந்தது. அப்படியானால், அய்யா அம்மாவுடைய வாழ்வுப்பயணத்தின் புகைப்படங்களை சட்டகமாக்கிக் காட்சிப்படுத்தினால் அதன் வீச்சும் தாக்கமும் நெடுங்காலம் உள்ளம் உறைந்திருக்கும் எனத் தோன்றியது. வாழ்வுக்குறிப்புகள், வரலாற்றுப் புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளடங்கிய அருங்காட்சியமாக மாற்றி, அத்தோடு தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து பயிற்சிகள் நிகழும் ஒரு பயிற்சிக்கூடமாக அதை மாற்றுவதென அனைவரும்கூடி முடிவெடுத்தோம். அதைத் தொட்டுத் திறந்துவைக்கும் கரங்களாக உங்களுடைய கரங்கள் இருக்கவும் நாங்கள் விழைந்தோம்.எங்களைப் பொறுத்தவரையில், இன்றையச் சமகாலகட்டத்து இளைஞர்களிடம் துவழாத செயல்தீவிரத்தையும், நேர்மறை நம்பிக்கையையும் துவக்கிவைக்கும் உரையாடலை அனேகமுறை நீங்கள்தான் துவக்கியுள்ளீர்கள். அல்லது உங்களின் வழி அது இன்னும் ஆழமாக விரிவடைகிறது.
கனவின் கனிவுதினமான அக்டோபர் 18ம் தேதி காந்திகிராம் ஊழியரகத்தில் நிகழ்ந்த ‘செயல்வழி ஞானம்’ கூடுகைக்குத் தமிழகம், பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களிலிருந்தும்கூட கிளம்பி வந்திருந்தார்கள். ‘தன்மீட்சி’ புத்தகத்தை வாசித்துவிட்டு மிகப்பெரிய அகச்சலனத்துக்கு ஆளான நண்பர் பரமகுரு தனது கைக்குழந்தையோடும், கர்ப்பிணி மனைவியோடும் உங்களைச் சந்தித்து ஆசிபெற்று நிறைவோடு ஊர்சென்றார். வெண்முரசைத் தொடர்ச்சியாக வாசிக்கிற, கேட்கிற அருண்குமார் அவ்வளவு சிக்கல்களையும் கடந்து குழந்தையை எடுத்துவந்து, உங்கள் கரங்களில் கொடுத்து பெயர்வைத்து நிறைவுற்றான். கட்டிடக்கலை, கணிப்பொறியியல், இசைஞர்கள், எழுத்தாளர்கள், களச்செயல்பாட்டாளர்கள், சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், முதியவர்கள், சாமானியர்கள் என அனைத்து பிரிவுகளிலிருந்தும் நிறைய மனிதர்கள் நிகழ்வுக்கு வந்திருந்து அகம்நிறைந்து சென்றார்கள்.
இச்சந்திப்பின் ஆழத்தை இன்னும் அதிகப்படுத்தியது தோழமை பாலாவின் ‘இன்றைய காந்திகள்’ புத்தக வெளியீடு. கிட்டத்தட்ட, இரட்டைக்குழந்தையை ஈன்றதாயின் இரட்டிப்பு மகிழ்வினை இப்புத்தகம் எங்களுக்களித்தது. கண்ணெதிர் சாட்சி கிருஷ்ணம்மாள் என்றால், கண்ணெட்ட வேண்டிய தொலைதூர இந்தியச்சாட்சிகளை ஒவ்வொன்றாக பாலா அறிமுகப்படுத்திய இக்கட்டுரைகள் நிச்சயம் விரிவான தளத்தில் செயல்விளைவை உண்டாக்கும். அவருடைய விடுப்பு காலத்தில் இவ்விரண்டு புத்தகத்தின் வெளியீடு ஒருசேர நிகழ்ந்ததுகூட தற்செயல் அற்புதந்தான்.
நிகழ்வின் இன்னொரு மகிழ்வுச்சமாக பொன்னுத்தாய் அம்மாவுக்கு நாமளித்த ‘முகம்’ விருது. திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் சொத்தை தன்வசப்படுத்த, அந்நிர்வாகத்துக்கு உள்ளிருந்தவர்களே உண்டாக்கிய துர்ச்சூழலை நேரிலுணர்ந்த எங்களுக்கு ‘காந்திஜி பொன்னுத்தாய் அம்மா’ பள்ளிக்கூடத்தை கல்விக்கான ஒளிவிளக்காகவே கருதமுடிகிறது. சுதந்திரக் காலகட்டத்திலிருந்து இப்பவரை தலைமுறைகளாகப் பேணப்பட்டுவரும் அக்கல்விக்கூடம், ஒடுக்கப்படும் மக்களின் கல்விக்காக அரணமைத்து நிற்கிறது. அத்தைகைய பெருந்தாயின் புதல்வர்கள் மற்றும் பேரக்குழந்தைகளின் கைகளில் நீங்களும் கிருஷ்ணம்மாளும் இணைந்து முகம் விருதை ஒப்படைத்த கணம்… ஆன்மாவுக்குள் இழையோடும் பரவசத்தைக் கொடுத்து உள்நின்றது.
சிவராஜ்
குக்கூ குழந்தைகள் வெளி