‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-41

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 2

சகதேவன் விதுரரின் குடில் நோக்கி மூச்சிரைக்க ஓடினான். அவனை வழியில் கண்ட ஏவலர்களும் இளம் அந்தணர்களும் திகைத்து விலகினார்கள். விதுரரின் குடில்முன் ஏவலர் சிலர் நின்றிருந்தார்கள். அவன் அவர்களிடம் ஒப்புதல் பெறாமல் குடிலுக்குள் நுழைந்து “அமைச்சரே” என்று கூவினான். விதுரர் அவனை திகைப்பில்லாமல் நோக்கி “அமர்க, அரசே!” என்றபின் பிறரிடம் வெளியேறும்படி கண்காட்டினார். சகதேவன் அவர் கைகளை பற்றிக்கொண்டு “இந்த நீர்ச்சடங்கு நிகழலாகாது… இதை எவ்வண்ணமேனும் தடுத்து நிறுத்தியாகவேண்டும்” என்றான்.

விதுரர் “பொறுங்கள்… உங்கள் உணர்வுகள் எனக்குப் புரியவில்லை” என்றார். “அமைச்சரே, நான் என் மைந்தர்களை பார்த்தேன். சற்றுமுன் அருகில் பார்த்தேன். அவர்களுடன் உரையாடினேன். அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள்” என்றான் சகதேவன். பதற்றத்துடன் “அவர்கள் நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். இச்சொற்களைக்கூட அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்… அமைச்சரே, நாம் நீர்க்கடன் செய்து அவர்களை கங்கையில் கரைக்கிறோம். மண்ணிலிருந்து அறுத்து விண்ணுக்குச் செலுத்துகிறோம்… அதன்பின் அவர்கள் இங்கிருக்க இயலாது. அவர்களை நாம் முற்றாகவே இழந்துவிடுவோம்” என்றான்.

அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார். தணிந்த குரலில் “அமர்க… முதலில் அமர்க!” என்று அவன் கையைப் பிடித்து பீடத்தில் அமரவைத்தார். “சுக்ரா” என அழைத்தபோது ஏவலன் தோன்றினான். “இன்நீர்” என்றார். அவன் தலைவணங்கி அகன்றான். சகதேவன் அவர் கைகளைப் பிடித்து அசைத்தபடி “அது வெறும் உளமயக்கு அல்ல. கனவு அல்ல. மெய். இதோ உங்களிடம் பேசுவதுபோல அவர்களிடம் பேசினேன். அவர்கள் இங்கிருந்து செல்ல விரும்பவில்லை. நம்முடன் இருக்க விரும்புகிறார்கள். அமைச்சரே, அவர்களுக்கு இப்புவி மீதான பற்று இன்னமும் அகலவில்லை” என்றான்.

“அது இயல்பு. அவர்கள் இங்கே வாழ்ந்து நிறையவில்லை. குருத்துக்களாகவே வீழ்ந்தவர்கள். ஆனால் அவர்கள் இவ்வுலகு சார்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு இனி இங்கே எந்த இன்பமும் இல்லை. நாம் அறிவதுபோல் வெறுமனே இருந்துகொண்டிருக்கலாம், அவ்வளவுதான்” என்றார் விதுரர். அவர் அவன் அருகே அமர்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டார். “சொல்லுங்கள் அரசே, நம் நலனுக்காக அவர்களை வெறுமனே இங்கே நிலைநிறுத்தியிருப்பது நன்றா?” சகதேவன் சொல்லிழந்து அமர்ந்திருந்தான். “கூறுக, அவர்கள் என்ன சொன்னார்கள்? அவர்கள் இங்கிருப்பது எப்படி? நம்மைச் சாராமல் அவர்களுக்கு இருப்பும் இன்பமும் உண்டா?”

“இல்லை” என்று சகதேவன் சொன்னான். அவன் உள்ளம் தவிக்கத் தொடங்கியது. விதுரர் “ஆம், அதையே முன்னோரும் சொல்லியிருக்கிறார்கள். நாம் இப்போது காணும் அவர்களின் உருவம் நம்மால் அளிக்கப்படுவது. இறுதியாக அவர்கள் நம் விழியிலும் உள்ளத்திலும் எஞ்சிய வடிவத்திலேயே அவர்கள் நம் முன் எழமுடியும். நாம் முதிர்வோம், அவர்களுக்கு அகவையும் மாற்றமும் இல்லை. நம் விழைவால் மட்டுமே அவர்கள் தோன்றமுடியும்” என்று விதுரர் சொன்னார். “ஆம்” என்றான் சகதேவன். “உண்மையில் சற்று அகவை முதிர்ந்த அனைவரும் அறிந்த உண்மைதான் இது.” சகதேவன் பெருமூச்சுவிட்டான்.

“அரசே, நாம் ஏன் அவர்களை எழுப்பிக்கொள்கிறோம்?” என்று விதுரர் கேட்டார். “அவர்கள் தோன்றவில்லை, நம் விழைவால் அவர்கள் திரட்டப்படுகிறார்கள். சொல்க, ஏன் அவர்களை திரட்டிக்கொள்கிறோம்?” சகதேவன் “எனக்குத் தெரியவில்லை, அமைச்சரே” என இடறிய குரலில் சொன்னான். விதுரர் “நாம் அவர்களிடமிருந்து அகன்று செல்கிறோம். நாம் பேரொழுக்கொன்றில் செல்பவர்கள். நம்மை மீறியது அது. அதை காலம் என்கிறோம். நம் உள்ளத்தில் சொற்பெருக்கென நிகழ்வது காலமே. நம் உடலில் அகவை முதிர்வென அது நிகழ்கிறது. அதைக் கடந்து உள்ளம் செலுத்த, கற்பனையை ஏவ எவராலும் இயலாது” என்றார்.

“ஆனால் அவர்கள் இப்பெருக்கின் கரைப்பாறைகள் என நின்றிருப்பவர்கள்” என விதுரர் தொடர்ந்தார். “அவர்களை விட்டு நாம் அகன்றுசென்றே ஆகவேண்டும். வேறுவழியே இல்லை. ஆனால் அதில் நாம் குற்றவுணர்வு கொள்கிறோம். ஆகவே கற்பனையை திருப்பிச் செலுத்துகிறோம். சொற்களால் காலத்தை உந்துகிறோம். சொற்கள் அவ்விசையால் சிதைவுறுகின்றன. அவை தேங்கித் திகைத்து நிற்கையில் மட்டுமே அவர்களை அழைக்கிறோம்.” சகதேவன் “நான் அழைக்கவில்லை…” என்று கூவினான். “உங்கள் உள்ளம் அழைக்கவில்லை. ஆழம் அழைக்கிறது.”

சகதேவன் “வெறும் சொற்கள், இவற்றால் எதையும் விளக்கிவிட முடியும். எந்த உண்மையையும் தொடமுடியாது” என்றான். “இவை உண்மை என நீங்களே அறிவீர்கள்” என்றார் விதுரர். “அவர்கள் எப்போது எழுகிறார்கள் என்பதை நோக்கினாலே உணரலாம். உங்கள் வழிகள் முட்டிக்கொள்ளும்போது. நீங்கள் சலித்து செயலற்றிருக்கையில்.” சகதேவன் இல்லை என்பதுபோல் தலையை அசைத்தான். அவன் உள்ளம் எரிச்சலடைந்தது. எழுந்து சென்றுவிடலாமெனத் தோன்றியது. ஆனால் அங்கிருந்து எழவும் உடல் உயரவில்லை.

“எண்ணுக, நாம் உளநெகிழ்ச்சிகளை அடைவதுகூட இவ்வாறுதான்!” என விதுரர் தொடர்ந்தார். “பொருளின்மையும் சலிப்பும் கொண்டு நம் அகம் செயலிழக்கையில் இயல்பாக நகர்ந்துசென்று கண்ணீர் துளிக்கும் ஒரு நெகிழ்ச்சியை அடைகிறோம். அதில் திளைக்கிறோம். அனைத்தையும் அதன் ஒளியில் விளக்கிக்கொள்கிறோம். ஆனால் அகத்தே ஒரு துளி ஐயம் எஞ்சியிருக்கிறது. மெல்லிய குருதித்தீற்றல் என அது உடன் வருகிறது. அது மேலெழுந்து நெகிழ்ச்சியை வெல்லும்போது அந்தத் தோல்வியை ஒரு நகையாடலாக மாற்றிக்கொள்கிறோம். சிரித்து அதை கடக்கிறோம். நெகிழ்ச்சிக்குப் பின் எத்தனை விரைவில் நகையாடலுக்கு மீள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் அறிவார்ந்தவர்கள், நம்மை நாமே நோக்கும் நுண்ணுணர்வு கொண்டவர்கள். அவ்வாறுதான் இதுவும் நிகழ்கிறது…”

சகதேவன் பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டான். “அவர்கள் இங்கிருக்கும்வரை மட்டுமே நம்மவர். நம் குருதியிலிருந்து எழுந்தது அவர்களின் உடல் மட்டுமே. குருதியே நமக்கும் அவர்களுக்குமான உறவனைத்தையும் உருவாக்குகிறது. அவ்வுறவிலிருந்து எழும் அத்தனை உணர்ச்சிகளும் அக்குருதியாலானவை மட்டுமே” என விதுரர் தொடர்ந்தார். “ஆகவேதான் நாம் உடலை எரிக்கிறோம். அது உப்பாகி மண்ணில் கரைந்தழிக என எண்ணினர் மூதாதையர். இங்கு ஒவ்வொன்றும் எஞ்சாதொழிவதென்பது இயற்கைக்கு ஆணையிடும் தெய்வங்களின் நெறி. கண்ணெதிரே எஞ்சாதழிபவை கோடிகோடி. கைகூப்பி வணங்கும் சுடர் அணைந்த அக்கணமே இல்லை என்றாகிறது. மட்கி அழிகின்றன மாமரங்கள். மலைகளும் மறைந்துகொண்டிருக்கின்றன என்கின்றனர் நூலோர். எஞ்சாதழிவதை ஏற்றுக்கொள்வதொன்றே மானுடன் அடையும் மெய்மைகளில் தொன்மையானது.”

“யவனரும் பீதரும் காப்பிரிகளும் நீத்தாரை மண்ணிலிருந்து நீங்கவிடுவதில்லை. நீத்தாருக்கு நினைவிடங்கள் அமைக்கிறார்கள். புதைக்கும்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் உடன் வைக்கும் வழக்கம் அவர்களிடமுண்டு. இங்கு அரக்கர்களும் அசுரர்களும்கூட அதை செய்கிறார்கள். அதனால் என்ன பயன்? அவர்கள் செய்வது எத்தனை பெரிய அறிவின்மை! உயிருடன் இருந்தவர்களுக்கு நிகராக ஒரு பருப்பொருளை நிறுத்திக்கொள்வதனால் என்ன ஆகப்போகிறது? அப்பருப்பொருட்கள் அவர்கள் அல்ல, அவர்களின் அடையாளங்கள் மட்டுமே. அவ்வடையாளங்கள் நிறுவப்பட்ட கணம் முதல் பொருள் மாறுபடத் தொடங்குகின்றன. சொல்லிச்சொல்லி அவற்றை பிறிதொன்று ஆக்குவார்கள். எண்ணி எண்ணி புதிதென சமைப்பார்கள்.”

“ஓராண்டுகாலம் அவை அன்றாட உணர்வென நீடிக்கும். ஏழாண்டுகாலம் அவை அவ்வப்போது எழும் நினைவென எஞ்சும். ஒருதலைமுறைக்காலம் அடையாளமென பேணப்படும். பின்னர் எவருடையதோ என ஆகி நின்றிருக்கும். இப்புவியிலுள்ள பொருட்பெருக்கில் ஒரு துளியென அமைந்திருக்கும்” என்றார் விதுரர். “நாமோ பெயரினை நீக்குகிறோம். சூரையங்காட்டிடைச் சுடுகிறோம். நீரில் மூழ்கி நினைப்பொழிகிறோம். அன்னமும் நீரும் அளித்து விண்செலுத்துகிறோம். மைந்தர் என அவர்களின் ஊன்வடிவம் மீண்டெழுவதில் முடிவிலாச் சுழற்சி ஒன்றைக் கண்டு அகம் நிறைகிறோம். பெயர் சூட்டி அவர்களை மீண்டும் நிகழச்செய்கிறோம். எதுவும் எஞ்சுவதில்லை என்றும் எதுவுமே அழிவதுமில்லை என்றும் ஒரே தருணத்தில் உணர்வதே நமக்கு வேதமெய்மை என அளிக்கப்பட்டுள்ளது.”

“அமைச்சரே” என இடறிய குரலில் அழைத்தான் சகதேவன். “அவர்கள் ஏன் இவ்வண்ணம் எஞ்சுகிறார்கள்? ஏன் நம் முன் தோன்றுகிறார்கள்?” விதுரர் “சுடர் அணைந்த பின்னர் விழிகளில் கணப்பொழுது எஞ்சும் பாவை போன்றவர்கள் அவர்கள்” என்றார். “அது நம் தோற்றம். சுடரென இங்கே வந்தது அதற்கு முன்பு இருந்தது. பின்பும் இருக்கும். நாம் சுடரென அதை நம் விழிகளில் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறோம்.” சகதேவன் கைகளில் முகத்தை வைத்து உடல்மடித்து அமர்ந்தான்.

விதுரர் மேலும் அவன் அருகே வந்து அவனுக்கு மட்டுமான குரலில் “அவர்கள் சென்றே ஆகவேண்டியவர்கள். இங்கிருந்து எஞ்சாமல் சென்றாலொழிய அவர்கள் மீண்டும் எழவியலாது” என்றார். திடுக்கிட்டவன்போல சகதேவன் அவரை நோக்கினான். “இங்கே துளியும் எஞ்சாமல் அவர்களை நாம் அனுப்பி வைப்பது அதன்பொருட்டே” என்றார் விதுரர். “அணிந்த ஆடைகளை முழுமையாகக் களைந்தாலொழிய அவர்களால் புத்தாடை அணிய இயலாது.” சகதேவன் விதுரரின் முகத்தை நோக்கி இமையசையாமல் அமர்ந்திருந்தான். அவர் முகம் அன்னையின் கனிவைக் கொண்டிருந்தது.

“அமைச்சரே, என் தந்தையின் இடத்தில் இருப்பவர் நீங்கள். கூறுக, மெய்யாகவே மறுபிறப்பு என ஏதேனும் உண்டா?” என்று சகதேவன் கேட்டான். “பிறவிச் சுழலில் இருக்கின்றன உயிர்க்குலங்கள் என நினைவறிந்த நாள் முதலே கற்பிக்கப்பட்டவன் நான். ஆனால் மெய்யாகவே உள்ளதா? அந்தச் சிறு ஐயம் என்னுள் இல்லாமலிருந்ததே இல்லை.” விதுரர் “அந்த ஐயம் இல்லாதவர்களே இல்லை, மைந்தா” என்றார். அவன் தலையைத் தொட்டு குழலில் கைசெலுத்தி நீவியபடி “ஏனென்றால் இங்கு, இப்போது, இவ்வண்ணம் என்றே மானுட அகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று பிடிகளால் நாம் இங்கே நிறுத்தப்பட்டுள்ளோம். இங்கு உயிருடன் உணர்வுடன் இருக்கும் வரை முந்தைய பிறவியை நினைவுகூரவோ வரும் பிறவியை முன்னுணரவோ இயலாது. ஆகவே எந்நிலையிலும் பிறவிச் சுழல் என்பது சொல் என, எண்ணம் என மட்டுமே மானுடருக்குள் நின்றிருக்கும்” என்றார்.

“ஆனால் அறிதலென அது ஆகும் தருணம் ஒன்றுண்டு” என்று விதுரர் தொடர்ந்தார். “அது ஓர் அறிதல். விண்ணிலிருந்து மின் என நம் மீது இறங்குதல். நெற்றியில் மூன்றாம் விழியொன்று எழுதல். நாமறிந்த அனைத்தும் மாறிவிட்டிருக்கும். அறிவு அறிவின்மையென்றும் மாயை மெய்மையென்றும் மாறிவிடக்கூடும். அதன்பின் நாம் அறிகிறோம், அது சொல் அல்ல, எண்ணமும் அல்ல. அது மெய்மை. மாற்றோ மறுப்போ இல்லாதது எதுவோ அதுவே மெய்மையென்றறிக! அது மெய்மை.” சகதேவன் அவர் கைகளை தன் நடுங்கும் கைகளால் பற்றியபடி “நீங்கள் அறிவீர்களா?” என்றான். “ஆம், நான் அறிந்தேன்” என்றார் விதுரர்.

சற்றுநேரம் சகதேவனால் ஒன்றும் பேச முடியவில்லை. விதுரர் மேலும் ஏதோ சொல்வார் என அவன் எதிர்பார்த்தான். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவன் முனகலாக “அவர்கள்…” என சொல்லத்தொடங்கி தயங்கினான். “எங்கு எவ்வண்ணம் மீண்டும் நிகழ்வார்கள் என நாம் அறியமுடியாது. அறியக்கூடுபவர்கள் உண்டு. அவர்களில் ஒருவரையேனும் நான் அறிவேன்” என்றார். சகதேவன் பெருமூச்சுவிட்டான். “அரசே, அதை விட்டுவிடுங்கள். அது உங்களை மேலும் துயர்கொள்ளவே செய்யும். இனியதாயினும் அழுகிய உணவு நஞ்சே” என்றார் விதுரர்.

“நான் துயரை விலக்க விரும்பவில்லை…” என்றான் சகதேவன். “அதுதான் உங்கள் உளச்சிக்கல். உங்கள் மைந்தரின்பொருட்டு குற்றவுணர்ச்சி கொள்கிறீர்கள். ஆகவே அவர்களை எண்ணி துயருற்றாகவேண்டும் என எண்ணுகிறீர்கள். துயருறுகையில் உண்மையில் அவர்களுக்கு எதையோ நீங்கள் அளிப்பதாகவே கருதிக்கொள்கிறீர்கள். அதைப்போல் அறிவின்மை வேறில்லை. இத்துயர் என்றல்ல, எத்துயரும் பொருளற்றதே. உயிரின் இயல்புநிலை மகிழ்ச்சி. துயர் என்பது திரிபு” என்றார் விதுரர். “இத்துயரால் எவருக்கும் எந்தப் பயனும் இல்லை. இது ஒரு வீண்நடிப்பு அன்றி வேறல்ல.”

சகதேவன் சீற்றத்துடன் முகம் தூக்க “எல்லைகடந்து நீடிக்கும் எந்தத் துயரும் நடிப்பே” என்றார் விதுரர். சகதேவன் எழப்போனான். விதுரர் அவன் கையை பிடித்துக்கொண்டார். “எண்ணிநோக்குக! அதை நாம் ஏன் வளர்த்துக்கொள்கிறோம்? அது குறையும்போது ஏன் நிறைவின்மை கொள்கிறோம்? அது நாமறியாத பிறிதெதையோ நமக்கு அளிக்கிறது. எதையோ மறைக்கிறது. எதையோ நிகர்செய்கிறது. பிறிதொன்றின்பொருட்டு தான் நின்றிருக்கிறது” என்றார். சகதேவன் தளர்ந்து “ஆம்” என்றான்.

“நாம் ஏன் துயரை நேர்கொண்டு நோக்குவதே இல்லை? நாம் நேர்நோக்கினால் துயர் ஏன் கூச்சமடைந்து முகம்திருப்பிக்கொள்கிறது? சற்றே தொட்டால்கூட ஏன் சுருண்டுகொள்கிறது? துயர் என்பது எந்நிலையிலும் துயர் மட்டும் அல்ல” என்றார் விதுரர். சகதேவன் தலைகுனிந்து அமர்ந்திருக்க மீண்டும் அவன் தலையை வருடி “நீர்க்கடன்கள் நிகழட்டும், மைந்தா. நம் சிறுவர் விண்ணேகட்டும். இங்கு அவர்கள் ஒருதுளியும் எஞ்சாதொழியட்டும். எழுமுலகில் அவர்கள் நிறைவுகொள்ளட்டும். நம்மிலிருந்து அவர்கள் முற்றிலும் மறையட்டும். வான்பறவைத் தடம்போல் ஆகுக அவர்கள் சென்ற பாதை!” என்றார். சகதேவன் “ஆம்” என்றான்.

 

விதுரர் “நான் பேரரசரை சந்திக்கும்பொருட்டு செல்லவிருந்தேன்” என்றார். இன்நீரை அருந்தி முடித்து எழுந்துகொண்ட சகதேவன் “கிளம்புக!” என்றான். “இல்லை, நீயும் உடன்வரலாம்” என்றார். “நானா? எனக்குரிய பணிகள்…” என்றான் சகதேவன். “இன்று இதுவே உனக்குரிய பணி. வருக!” என்று விதுரர் அவன் தோளை தட்டினார். சகதேவன் “அவரை தாங்கள் இன்னமும் சந்திக்கவில்லையா?” என்றான். “இல்லை, நான் நேற்று மாலைதான் வந்தேன். மூத்தவர் மாலையிலேயே துயில்கொள்வார் என்றனர். இன்று கிளம்புவதற்குள் தௌம்யர் அளித்த பணிகள் சூழ்ந்துகொண்டன” என்றார் விதுரர்.

அவர் தன் தலைப்பாகையை அணிந்து மேலாடையை சுற்றிக்கொண்டார். சகதேவன் அவருடன் கிளம்பினான். “நடந்தே செல்வோம். இப்பகுதியை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. இதன் அமைப்பு தெரியாததனாலேயே என்னால் உரிய முறையில் பணியாணைகளை விடுக்க இயலவில்லை” என்றார் விதுரர். சகதேவன் “ஆம், இடத்தின் அளவுகளை அறியாமல் ஆணையிட முடியாதென்பதை குருக்ஷேத்ரத்தில் அறிந்தேன். அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் என் அகத்தே இருந்தமையால் இயல்பாக ஆணையிட்டேன். குருக்ஷேத்ரத்தில் நான் இட்ட ஆணைகள் பிழையாக ஆனபோது ஒன்றை அறிந்தேன், நான் அந்நிலத்தைப்பற்றிய ஓர் உளப்பதிவையே மெய்யெனக் கொண்டிருந்தேன். அவ்வுளப்பதிவுக்கு எந்த அறிதற்பின்புலமும் இல்லை. சொற்களில் இருந்து எழுந்த வெறும் கற்பனை” என்றான்.

விதுரர் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஒரு சில கணங்களுக்குப்பின் “நான் குருக்ஷேத்ரத்தைப் பற்றிப் பேசியதை நீங்கள் விரும்பவில்லையா, அமைச்சரே?” என்றான். “இல்லை” என்று விதுரர் சொன்னார். சகதேவன் “நீங்கள் செவிகொள்ளாமலிருந்திருக்க இயலாதே?” என்று சொன்னான். “செவிகொள்ளாத இடத்தில் செவிகொள்ளாத வாழ்வில் இருந்தேன்” என்றார் விதுரர். “அங்கிருந்து கிளம்புவதற்குமுன் என்ன நிகழ்ந்தது என்று கேட்டறிந்தேன்.” சகதேவன் “ஒரே நாளிலா?” என்று திகைப்புடன் கேட்டான். “ஒரு நாழிகையில்” என்றார் விதுரர். “பதினெட்டுநாள் போரையுமா?” என்றான் சகதேவன். “பதினெட்டு மானுடவாழ்வுக்காலம், பதினெட்டு யுகங்கள் என்கிறார்கள்…”

“பதினெட்டு வரிகளுக்கு அப்பால் அதில் சொல்வதற்கொன்றுமில்லை” என்றார் விதுரர். “இறுதியில் என்ன எஞ்சியது என்று மட்டுமே கேட்டறிந்தேன்.” சகதேவன் “ஆம், அதுவும் உண்மையே” என்றான். “இப்போர் சொல்லிச்சொல்லிப் பெருகும் என்பதே என் எண்ணமாக இருந்தது. எண்ணி எண்ணிச் சுருங்கும் என்பதை கருதவில்லை.” பின்னர் “ஆனால் நான் எண்ணிக்கொண்டே இருக்கிறேன். எண்ணலாகாதென்று தடுத்தாலும் எண்ணம் எழுகிறது. நினைவுகூர்தல் சிலபோது. மெய்யென அதில் சென்று வாழ்தல் சிலபோது” என்றான்.

விதுரர் “அதை உன்னால் தவிர்க்க முடியாது” என்றார். “ஆம், இழப்புகள் எங்களை தொடர்கின்றன” என்றான் சகதேவன். “இழப்புகளை மானுடர் கடக்கவே விழைவார்கள், எளிதில் கடந்தும் விடுவார்கள்” என்றார் விதுரர். “உங்கள் வெற்றிகள் அதிலுள்ளன. வெற்றிகளை எவரும் மறப்பதில்லை. ஏனென்றால் வெற்றிகளினூடாக அவர்கள் வளர்கிறார்கள். பெருகி விரிகிறார்கள். பிறிதொருவரென்றாகிறார்கள். ஒவ்வொரு வெற்றியிலும் தாங்கள் என தாங்களறிந்த எல்லையை தாங்கள் கடந்திருப்பதை உணர்கிறார்கள். தங்களை கடத்தலையே மானுடர் பேரின்பம் என்று உணர்கிறார்கள். உள்ளமைந்து இறுகி சுவர்களை முட்டிக்கொண்டிருக்கும் ஆணவத்திற்கு மேலும் புழங்க இடம் கிடைக்கிறது. அது துள்ளிமகிழ்கிறது. அந்த இடத்தை மீண்டும் நிறைத்துக்கொள்கிறது.”

சகதேவன் “நான் அவ்வண்ணம் வளர்ந்தேன் என்கிறீர்களா?” என்றான். “சற்றுமுன் நீ சொன்னது அத்தகைய ஒரு வெற்றியை. அந்நிலத்தை சித்தத்தால் ஆளத்தொடங்கிய கணத்தை நீ மறக்கவில்லை. அவ்வண்ணம் பெரிதும் சிறிதுமாகிய பலநூறு கண்டடைதல்கள் அங்கே நிகழ்ந்திருக்கும். கண்டடைதல் இல்லாத வெற்றி இல்லை. வெற்றி நிகழாது கண்டடைதலும் நிகழ்வதில்லை. அறிதலென்பது கடந்து செல்லல் என்று அதனால்தான் சொல்லப்படுகிறது” என்றார் விதுரர். “நீங்கள் அங்கே மீண்டு சென்றுகொண்டேதான் இருப்பீர்கள். நீங்கள் புதுப் பிறவி கொண்டு எழுந்த கருவறை அது. இனி உங்களை அங்கிருந்துதான் தொடங்குவீர்கள்.”

சகதேவன் பேச்சை ஒழிய விழைந்தான். விதுரர் மாறிவிட்டிருந்தார். இனியவையே சொல்லும் அமைச்சரையே அவன் அறிந்திருந்தான். அத்தனை கூரிய சொற்களால் உள்கிழித்துச் செல்லும் நாவலரை அவன் கண்டிருக்கவில்லை. அவருக்கு என்ன ஆயிற்று? போரில் ஈடுபட்டவர்கள் அனலிடை புகுந்தவர்கள் என உருகி உருவழிந்து மீண்டும் எழுந்தனர். போரிலிருந்து அகலும்பொருட்டு ஐம்புலன்களையும் உள்ளிழுத்துக்கொண்டவரும் பிறிதொருவர் என்றாகிவிட்டிருக்கிறார்.

அவர்கள் குடில்நிரைகளின் ஊடாகச் சென்றனர். எதிரே வந்தவர்கள் தலைவணங்கி ஒதுங்கினர். விதுரர் அவர்கள் ஒவ்வொருவரையும் நின்று வாழ்த்தி முன் சென்றார். முன்பு அவர் தலைவணங்குபவர்களுக்கு உளமறியாத மறுவணக்கம் ஒன்றை அளிப்பார். அவன் அவரை அணுக்கமாக அறிந்த அந்நாட்களில் எப்போதும் அவர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருப்பவர் எனத் தோன்றுவார். இரு இடங்களும் அவரிடமிருக்கும். அப்போது துயர் முழுத்திருந்த தன் மூத்தவரை சந்திக்கச் செல்கையிலும் செல்லுமிடத்தை மறந்துவிட்டவர் போலிருந்தார்.

“நீங்கள் ஊழ்கம் பயின்றீர்களா, அமைச்சரே?” என்று சகதேவன் கேட்டான். “இல்லை” என்றார் விதுரர். “ஊழ்கத்திலமர்ந்து அனைத்தையும் கடந்துசெல்ல என்னால் இயலுமென்று எண்ணியிருந்தேன். அதன்பொருட்டே சென்றேன். ஊழ்கம் எனக்குரியதல்ல என்று கண்டுகொண்டேன்.” சகதேவன் “பிறகென்ன செய்தீர்கள்?” என்றான். “வெறுமனே இருந்தேன். நினைவறிந்த நாள் முதல் அஸ்தினபுரியை இயற்றுபவன் நான் என எண்ணியிருந்தேன். அனைத்திலிருந்தும் ஒதுங்கிய பின்பு என் அகம் மேலும் விசைகொண்டு அனைத்தையும் ஆற்றிக்கொண்டிருந்தது. அவற்றில் இருந்து அகன்றேன்.”

“இடத்தை அகற்றுவது உள்ளத்தை அகற்றுவதற்கு எளிய வழி என கண்டுகொண்டேன். சிறுகுடிலில் கிழங்குகளையும் கனிகளையும் மட்டுமே உண்டு எவரிடமும் சொல்லாடாமல் எவர் முகத்தையும் நோக்காமல் அமர்ந்திருந்தேன். நூல் நவிலவில்லை. இசை கேட்கவில்லை. என்ன செய்தேன் எனில் வெறுமனே அமர்ந்திருந்தேன். என் வாழ்நாளில் முதல்முறையாக.” அவர் புன்னகைத்து “வெறுமனே இருக்கையில் முதலில் உள்ளம் ஓலமிடுகிறது. வெளிச்செயலுக்கு அது ஆற்றிப்பழகிய எதிர்விசையை அளிக்கிறது. அக்கூச்சலே நம்மை வெறுமனே அமரவிடாமல் தடுக்கிறது. அது ஓய்ந்தபின் நம்மால் ஒன்றும் செய்யாமல் அமர முடியும்” என்றார்.

“ஆம்!” என்று சகதேவன் ஊக்கத்துடன் சொன்னான். “குருக்ஷேத்ரப் போர்களத்தில் நான் அதை கண்டுகொண்டேன். சூழ்ந்திருக்கும் பேரோசைக்கு நிகரான ஓசை ஒன்றை எழுப்பியே நம் உள்ளம் நிகர்நிலை கொள்கிறது. அப்பேரோசைக்கு என் அகம் எதிரோசை எழுப்புவதை தவிர்த்தேன். ஒவ்வொரு நாளும் என அதை பயின்றேன். என் அகத்தின் ஓசை அவிந்ததும் புறவோசை கேட்காமலாகியது. புயலெனக் கொந்தளிக்கும் அந்தக் களத்தில் நான் முற்றிலும் நிகர்நிலை கொண்டிருந்தேன்.”

நகைத்தபடி அவன் தொடர்ந்தான். “ஓசைகளில் மிதப்பவர்கள் அங்கிருந்த வீரர்கள் அனைவருமே. ஓசையற்ற அகம் கொண்டவன் கொந்தளிக்கும் நீர் நடுவே நிலைத்த பாறை போன்றவன். போர்க்கொந்தளிப்பில் இருந்தவர்கள் என்னை வந்து வந்து அறைந்து மீண்டனர். அவர்கள் என் கண்களை சந்திக்கையில் அடைந்த திகைப்பை நினைவுகூர்கிறேன்.” விதுரர் அவனை திரும்பி நோக்கினார். சகதேவன் “புறம் என்பது ஓசையால் கோக்கப்பட்டிருக்கிறது. ஒசையில்லையேல் அவை ஒவ்வொன்றும் தனித்தனியானவை. ஓசையற்ற குருக்ஷேத்ரம் அச்சமூட்டும் பெரும்பரப்பு அல்ல என்று கண்டேன். அது தனித்தனியாக அசையும் மானுடர்களும் விலங்குகளும் கொண்டது. அதை அறிந்த கணமே அச்சமொழிந்தேன்” என்றான்.

விதுரர் புன்னகைப்பதைக் கண்டு அவன் பேச்சை நிறுத்தினான். “என்ன எண்ணுகிறீர், அமைச்சரே?” என்றான். “கற்பது இனிது” என்ற விதுரர் “நாம் அணுகிவிட்டோம் அல்லவா?” என்று கேட்டார். “ஆம், இங்குதான்” என்றான் சகதேவன்.

முந்தைய கட்டுரைகூடல்நாதனின் தாலாட்டு
அடுத்த கட்டுரைஅரசனும் தெய்வமும்- கடிதம்