பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 1
சகதேவன் கண்விழித்தபோது அருகே சுருதசேனன் நின்றுகொண்டிருந்தான். அவன் அசையாமல் மைந்தனை உணர்ந்தபடி படுத்திருந்தான். அவனுடைய உடலின் வெம்மை. மூச்சின் மெல்லிய ஓசை. அதற்கும் அப்பால் அருகே ஓர் உயிர் இருப்பதை உயிர் அறியும் நுண்ணுணர்வு. சற்றே அசைந்தால்கூட அக்கணம் கலைந்துவிடும் என அவன் அறிந்திருந்தான். கலைவதற்கு முன்புவரை அது முற்றிலும் உண்மை. கலைந்த கணமே கனவு அல்லது மாயை. இமையசைவுபோதும். அல்லது உள்ளம் அசைந்தாலே போதும்.
பெரும்பாலான நாட்களில் சுருதசேனன் அவனருகே தோன்றினான். துயில்விழித்தெழுகையில் எப்போதுமே அவனிடம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பு கூர்கொண்டிருந்தால் சுருதசேனன் தோன்றுவதில்லை. எண்ணி ஏங்கினால், எழுவான் என உறுதிகொண்டிருந்தால் அவன் வருவதில்லை. வெறுமையும் சலிப்பும் மிகுந்து உள்ளம் எண்ணங்களை கோக்கக்கூட ஆற்றல் அற்றிருக்கவேண்டும். வேறெங்கோ உளம்திரும்பியிருக்கவேண்டும். ஓர் ஆறுதல்மிக்க தொடுகைபோல அவன் தோன்றினான். மிக அருகே, ஒரே கணத்தில்.
இருப்பும் இன்மையும் ஒரே கணத்தில்தான் வேறுபடுகின்றன போலும். அவன் அணுகி வருவதில்லை. அகன்று மறைவதுமில்லை. அவன் தொலைவிலெங்கும் இல்லை. மிக அருகேதான் இருந்துகொண்டிருக்கிறான். உடனிருந்துகொண்டிருக்கிறான். ஒளி மாறுபடுகையில் வலமிருந்து இடமும் பின்பிருந்து முன்பும் தோன்றும் நிழல் என. அவன் பேசுவதில்லை. அவனிடம் அவன் ஒரு சொல்லும் உரைத்ததில்லை. அவன் நோக்கை எப்போதும் உடல்மேல் உணர்ந்திருந்தாலும் அவன் விழிகளை சந்தித்ததில்லை. அவன் முகத்தை ஏறிட்டதுகூட இல்லை.
இருமுறை அவன் காட்டில் தனித்திருக்கையில் அருகே எழுந்தான். ஒருமுறை கங்கைக்கரையினூடாக நடக்கையில் உடன் நடந்தான். ஒவ்வொரு முறை அவன் தோன்றும்போதும் சகதேவன் தன்னுள் இருந்து எடை முழுக்க எழுந்தகல்வதை உணர்ந்தான். கடுவலி நின்றுவிடுவதுபோல. அக்கணம் அகத்தில் இருக்கும் சொல் பொன்னொளி கொள்ளும். அது அனைத்தையும் ஒளிரச்செய்யும். புவியும் வானும் இனிதாகும். உயிர்க்குலங்கள் இனிதாகும். சென்றவையும் நிகழ்வனவும் வருவனவும் அமுதென்றாகும்.
முதல்முறை அவன் சுருதசேனனைக் கண்டது அங்கு வருவதற்கு முன்பு காட்டுக்குள் குடிலில் தங்கியிருந்தபோது. ஓயாது வீழ்ந்துகொண்டிருந்தது மழை. நின்று துளியுதிர்த்து பின் எண்ணிக்கொண்டு வீறிட்டெழுந்தது. குளிரில் குடில்சுவர்கள் விறைத்திருந்தன. நிலம் நனைந்து ஊறியிருந்தது. ஓயாது ஒற்றைச் சொல்லையே சொல்லிக்கொண்டிருந்தது உள்ளம். அச்சொல்லை நேருக்குநேர் கண்டு திகைத்து அதை உந்தி அப்பால் செலுத்தினால் மேலும் சில சொற்கள். சென்று தேய்ந்து ஒரு சொல்லில் முட்டி நின்று மீண்டும் அச்சொல்லே என திகழ்ந்தது அகம்.
சொல் பேய் என ஆகி அச்சுறுத்தியது. ஆறாத புண் என வலி அளித்தது. அனலென எரித்து எரித்து உள்ளிறங்கியது. எச்சொல்லும் நஞ்சே. உயிருள்ளவை அனைத்தும் ஒருநிலையில் நஞ்சாகக்கூடும் என்கின்றன நூல்கள். அழுகியவை அனைத்தும் நஞ்சே. செரிக்காத உணவு நஞ்சு. கருவறைக்குள் உயிர்துறக்கும் குழவி நஞ்சாகி அன்னையைக் கொல்லும். சொல்லின் உயிர் என்பது பொருள். பொருளிழந்த சொல் இலக்கற்றது, எழுந்த கருவறையைக் கொல்லும் நஞ்சென்று ஆவது.
அவன் துயின்று நாட்கணக்காகிவிட்டிருந்தது. துயில் துயில் என விழித்திருக்கும் கணமெல்லாம் சித்தம் தவித்தது. விழியிமைகள் இறங்க அகச்சொல் குழம்பித்தவிக்க நாகுழைய கைகள் தளர்ந்து சரிய துயில் எடைகொண்டு அவனை மூடியது. அழுந்தி நிலம்படிந்த கணமே கூரிய முள்ளால் குத்தியதுபோல் அவனை எழுப்பியது ஒன்று. திடுக்கிட்டு எழுந்து உடல்நடுங்குவான். அது என்ன என்று நெஞ்சை துழாவுவான். சிக்குவது பிறிதொரு சொல். பொருளிலாத சொல். மழை, மரம், மீன், நீர்… பொருளில்லாவிடில் சொற்களுக்கிடையே வேறுபாடென ஏதுமில்லை.
எழுந்ததும் கண்முன் பேருருக்கொண்டு நின்றிருக்கும் அச்சொல். வழிமறிக்கும் பாறைபோல் சித்தம் திகைக்கச் செய்யும். மீண்டும் துயில்கொள்ள நெடும்பொழுதாகும். துயிலவேண்டும் என எண்ணும்போதே அச்சொல் பெரிதாகத் தொடங்கும். சூழ்ந்துகொள்ளும். அச்சொல்லுடன் படுக்க இயலாது. படுத்து துயிலவே இயலாது. படுத்த கணமே உள்ளம் முழு விழிப்பை அடைந்துவிடும். மஞ்சத்திலேயே எழுந்து அமர்ந்திருப்பான். துயில் மேலோங்க சரிந்து மஞ்சத்தில் விழவேண்டும். கால்நாழிகைப்பொழுதுகூட துயில் நீடிக்காது. அது துயிலே அல்ல.
துயிலின்மையால் வாய் கசந்தது. கண்கள் எப்போதுமே வெம்மைகொண்டு நீர் பெருக்கின. பசியென்பதையே அறிய முடியவில்லை. உண்ணும் உணவு அழுகிய குருதியின் மணம் கொண்டிருந்தது. உடல் எப்போதும் நடுங்கிக்கொண்டே இருந்தது. கைகளில் சிறுபொருட்களைக்கூட வைத்திருக்க இயலவில்லை. நடப்பதும் கடினமாகியது. மூச்சிளைக்க நின்று, அவ்வப்போது நிலைதடுமாறி அருகிருப்பனவற்றை பற்றிக்கொண்டு மெல்லத்தான் செல்ல இயன்றது. மஞ்சத்தில் படுத்திருப்பதையே உடல் விழைந்தது. செயலிழந்து, மஞ்சத்துடன் ஒட்டிக்கொண்டு, பெரும்பகுதி உயிரிழந்ததுபோல் தன்னை இழந்திருக்க உடல் கிடப்பதை அவன் அதற்குள் ஒரு மெல்லிய தன்னுணர்வு என அமைந்து நோக்கிக்கொண்டிருந்தான்.
அன்று அந்தியில் மஞ்சத்தில் விழித்தெழுந்தபோது அவன் உணர்ந்தான், அவன் மைந்தர்களை எண்ணிக்கொள்ளவேயில்லை என்று. அவர்களின் முகங்களை நினைவில் திரட்ட முயன்றான். அவை தொலைவில் நின்றிருந்தன. அணுகும்தோறும் கலைந்தன. சுருதசேனனின் முகத்தையாவது அருகே கொண்டுவர முயன்றான். அது முழுமையாகவே மறைந்துவிட்டிருந்தது. எங்கிருக்கிறார்கள் அவர்கள்? உறுதியாக ஏன் முகம் காட்டுவதை மறுக்கிறார்கள்?
பின்னர் ஒரு நடுக்குடன் அவன் உணர்ந்தான், அவன் குருக்ஷேத்ரத்தையும் முற்றாகவே மறந்துவிட்டிருந்தான். எண்ணி எண்ணி முயன்றபோது குருக்ஷேத்ரப் போருக்குக் கிளம்பிவந்தது நினைவில் சில உதிரி ஓவியங்களாக தெளிந்தது. படைகளை அவனே நெடுந்தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருப்பதுபோல. ஒழுகும் மானுடப்பெருக்கு. பருப்பொருள் நீர்மைகொண்ட நெளிவும் அலைவும். பின்னர் பலகை விரிக்கப்பட்ட பாதைகள். அதன்மேல் சகடங்களின் ஒலி. குளம்புகளின் தாளம். போர்க்களம் என சொல்லிப்பார்த்தான். அது பொருளிலாச் சொல்லென திகழ்ந்தது. எந்தக் காட்சியையும் நினைவிலெழுப்பவில்லை. குருதி, சாவு, எரி, சிதை என சொல்லிச் சொல்லிப் பார்த்தான். அவையனைத்துமே வெற்றுச் சொற்களென்றே திகழ்ந்தன. எவ்வகையிலும் காட்சியாகவில்லை.
சலிப்புடன் அவன் எண்ணத் திசையை திருப்பிக்கொண்டான். கண்களை மூடி இமையின் அடிப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் ஒட்டுமொத்தமாகவே மறந்துவிட்டிருந்தான். மிகமிக எச்சரிக்கையாக உள்ளத்தின் ஆழத்தில் இருந்த நினைவுகளை எடுக்கத் தொடங்கினான். மைந்தர்களின் குழவிப்பருவம். அவர்கள் சிறுவர்களாகி கூச்சலிட்டு, பூசலிட்டு விளையாடிய காலம். அவற்றை அழுத்தி அழுத்தி அப்பால் என மறைத்திருந்தான். அவற்றில் ஒரு துளி மீண்டாலே உள்ளம் அழிந்து சாவு நிகழ்ந்துவிடும் என அஞ்சியிருந்தான். ஆனால் அவையும் மீண்டு எழவில்லை. சொற்கள் மட்டுமே எழுந்துவந்தன. நீரடியில் படிந்த வெற்றுச் சகதிச்சருகுகளைப்போல.
அன்று அவன் எழுந்து இருளில் விரைந்தான். தன் உள்ளமெங்கும் நிறைந்திருப்பவை வெறும் சொற்கள். அனைத்துச் சொற்களும் பொருளிழந்துவிட்டன. வெற்றோலமிட்டுச் சுழன்றலைகின்றன. அவனால் நின்றிருக்க இயலவில்லை. சுழலும் சொற்களை தன் உடலைச்சுற்றிப் பறப்பவையாகவே உணர்ந்தான். அவற்றைத் தொட்டு கைகளால் அள்ளிவிடமுடியும் என்பதுபோல. இது பித்து. இப்போது பித்து என இதை உணரும் தருணத்தில் இருக்கிறேன். மேலும் ஒரு அடி முன்னகர்ந்தால் போதும். ஒருகணம் போதும். அந்தத் தன்னுணர்வையும் இழந்துவிடுவேன். பின்னர் சொற்சுழல் என்னை தூக்கிக்கொண்டு செல்லும். என்னை மண்மீதெங்கும் அலைக்கழிக்கும்.
அவன் தானறிந்த பித்தர்களை நினைவுகூர்ந்தான். அவர்களின் நாவில் ஒலிப்பதே அப்போது தன் சித்தமென ஓடிக்கொண்டிருப்பதாக அறிந்தான். செல்லச்செல்ல அவன் காலடிகளில் விசை கூடியது. நடுக்காட்டில் சென்று நின்றான். அப்போது அவனுள் சொற்கள் மேலும் விசை கொண்டிருந்தன. என்னென்ன சொற்கள்! இவையெல்லாம் எங்கிருந்தன? எத்தனை பயனற்றவை சொற்கள்! இத்தனை சொற்களை ஏன் உருவாக்கினார்கள்? இவற்றை அள்ளித்திணித்து ஏன் உள்ளமென்று தொகுத்துக்கொண்டேன்?
அவன் தன் இடையிலிருந்து குறுவாளை எடுத்து கழுத்து நரம்பில் வைத்துக்கொண்டபோதுதான் அருகே ஓர் இருப்புணர்வென சுருதசேனனை உணர்ந்தான். திரும்பி நோக்க அஞ்சி நடுங்கும் கைகளுடன் அசையாமல் நின்றிருந்தான். மெல்லமெல்ல அத்தனை சொற்களும் அடங்கின. உள்ளம் விடுதலை கொண்டது. உடல் தளர்ந்தது. கைகள் இருமருங்கும் விழுந்தன. அவன் மைந்தனை உணர்ந்தபடி அங்கேயே நின்றிருந்தான். பின்னர் அந்த மரத்தடியிலேயே படுத்து ஆறுநாழிகை தன்னை மறந்து உறங்கினான்.
அதன்பின் சுருதசேனன் மீண்டும் மீண்டும் அவன் முன் தோன்றினான். அவன் தோன்றிய நாளில் அனைத்தும் எளிதாகவும் இனிதாகவும் அமையும். அவனை எக்கணமும் மீண்டும் கண்டுவிட முடியும் என்பதுபோல் ஓர் எண்ணம் எப்போதும் அகத்தே திகழும். காட்டுக்குள் சென்று அமர்ந்திருப்பான். கங்கை ஓட்டத்தை நாள் முழுக்க வெறுமனே நோக்கியபடி இருப்பான். மெல்ல மெல்ல உள்ளத்தில் சொல் ஊறத்தொடங்கும். சொல்பெருகும். சொற்பெருக்காகும். சொற்சுழிப்பு அவனை அள்ளிச்சென்று விசைகொள்கையில் மீண்டும் அவன் தோன்றுவான்.
சகதேவன் ஒரு சொல்லேனும் மைந்தனிடம் பேச விழைந்தான். ஒரு சொல், அது எச்சொல்லாக இருப்பினும் சரி. வேறென்ன சொல்? அவன் பெயர்போல் இனிய சொல் வேறில்லை. அவன் பெயர்போல் இனியது ஏதுமில்லை. அவன் “சுருதசேனா!” என்றான். அச்சொல்லே அனைத்தையும் கலைக்க அவன் எழுந்தமர்ந்தான். பெருமூச்சுவிட்டு குடிலை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து வெளியே சென்றான். உடலில் களைப்பு அகன்றிருந்தது. உள்ளத்தில் இனிய சலிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. அவன் கங்கையை அடைந்து கரையில் வெறுமனே நீரொழுக்கை நோக்கி அமர்ந்திருக்கவே விழைந்தான்.
அவனுக்காக ஏவலன் காத்து நின்றிருந்தான். தலைவணங்கி “தாங்கள் துயின்றுகொண்டிருந்தமையால் எழுப்பவேண்டாம் என எண்ணினேன், அரசே” என்றான். “சொல்” என்றான் சகதேவன். “அரசர் தங்களைக் காண விழைகிறார். உடனே வரச்சொல்லும்படி ஆணையிட்டார்” என்றான். அவன் மேலும் சொல்லும்பொருட்டு சகதேவன் காத்திருந்தான். “நேற்றிரவே இளைய அரசர் அர்ஜுனனும் பீமசேனனும் இளைய யாதவரும் மீண்டு வந்துவிட்டனர். உடன் யுயுத்ஸுவும் வந்தார். அவர்கள் அஸ்வத்தாமனின் அருமணியுடன் வந்தனர். ஆகவே நாளை முதல் நீர்க்கடன்கள் தொடங்கப்படும் என தெரிகிறது. அதன்பொருட்டுதான் அரசர் தங்களை அழைக்கிறார்.”
“அருமணியை இளையவர் வென்றாரா?” என்று சகதேவன் கேட்டான். “அஸ்வத்தாமனை வென்றவர் பார்த்தன். அருமணியுடன் வந்தவர் பீமசேனன். நேற்றிரவே அந்த மணியை கொண்டுசென்று அரசிக்கு அளித்திருக்கிறார். அதை நாளை நீர்க்கடனின்போது மைந்தர்களுக்கான படையலாக வைக்கும்படி அரசி ஆணையிட்டிருக்கிறார்” என்று ஏவலன் சொன்னான். சகதேவன் சலிப்புடன் “நன்று” என்றான். பின்னர் கைவீசி அவன் செல்லலாம் என்று காட்டினான். ஏவலன் தலைவணங்கி அகன்றான்.
சகதேவன் யுதிஷ்டிரனின் அவையை அடைந்தபோது அங்கே ஏற்கெனவே தௌம்யரும் மாணவர்களும் கூடியிருந்தனர். சகதேவனின் விழிகள் நகுலனை இயல்பாகத் தேடி கண்டுகொண்டன. நகுலன் யுதிஷ்டிரனுக்குப் பின்னால் மறைந்ததுபோல் நின்றிருந்தான். பீமனும் அர்ஜுனனும் இளைய யாதவரும் அங்கிருப்பார்கள் என அவன் எதிர்பார்த்தான். அவர்கள் இல்லை என்பது சற்று ஏமாற்றத்தை அளித்தது. நீராடி ஆடைமாற்றிக்கொண்டிருக்கையில் எல்லாம் அவன் அவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் ஓர் அவையை கனவு கண்டிருந்தான்.
அவர்கள் அவனை திரும்பி நோக்கினர். யுதிஷ்டிரன் அவனைக் கண்டு முகம் மலர்ந்து ஏதோ சொல்ல தௌம்யர் புன்னகைத்தார். அவன் அணுகி வாழ்த்துரைத்தான். யுதிஷ்டிரன் அவ்வாழ்த்தை ஏற்றுக்கொண்டு அவனை கைதூக்கி வாழ்த்தியபின் சிப்பிமூடியிட்ட சிறுபேழையிலிருந்து அருமணி ஒன்றை எடுத்துக் காட்டி “இளையோனே, இதை பார்த்ததை நினைவுறுகிறாயா?” என்றார். சகதேவன் தலையசைத்தான். “அஸ்வத்தாமனின் நுதல்மணி. இளையோர் அவனை வென்று இதை கொண்டுவந்தார்கள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இனி நீர்க்கடன்களுக்கு எந்தத் தடையும் இல்லை” என்றார்.
தௌம்யர் “இத்தனை எளிதாக இது முடியுமென நான் எண்ணவில்லை. எதுவாயினும் நன்று…” என்றார். “எஞ்சும் பகையுடன் நீர்க்கடன் முடித்தோமென்னும் இழுக்கு இனி இல்லை. நோக்கினால் அரசி சொன்னதும் உண்மை. மைந்தரில் எவருக்கேனும் வஞ்சம் சிறிது எஞ்சியிருந்தாலும் நீர்க்கடன் வீணாகும்” என்றார். யுதிஷ்டிரன் “ஆம், நாம் அஞ்சிவிட்டிருந்தோம். இப்பெரும்போர் நம் அகத்தை தளர்த்திவிட்டிருந்தது. அவள் நெஞ்சு தளரவே இல்லை. ஐந்து மைந்தரை கண்முன் இழந்தும் அரசியென்றே நிமிர்ந்து நிற்கிறாள். ஐயமின்றி அவளே பாரதவர்ஷத்தை ஆளத் தக்கவள்” என்றார்.
சகதேவன் பெருமூச்சுடன் அந்த அருமணியை பார்த்தான். அதன் ஒளி குறைந்து கூழாங்கல் என மாறிவிட்டிருந்தது. உண்மையில் அதற்கிருந்த ஒளியெல்லாம் அஸ்வத்தாமனின் நுதலில் அது அமைந்திருந்தமையால்தானா? யுதிஷ்டிரன் “எங்கே இளையோர்?” என்றார். நகுலன் “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரன் எரிச்சலுடன் “எங்கே சென்றார்கள்?” என்றார். “பணிகள் மலைபோல் எஞ்சியிருக்கின்றன.” தௌம்யர் “பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. அரசியர் வந்துவிட்டார்கள். விதுரர் பொறுப்பேற்றுக்கொண்டுவிட்டார்” என்றார்.
சகதேவன் அப்பால் பீமன் வருவதை கண்டான். நோக்கிய முதற்கணத்திலேயே அவனிடமிருந்த மாற்றம் நெஞ்சில் அறைந்தது. பீமனிடம் கைவீசி யானைபோல அசைந்து வரும் அந்த வழக்கமான நடை மீண்டுவிட்டிருந்தது. அருகணைந்தபோது அவன் முகம் மலர்ந்திருப்பதை, இளமைந்தர்களுக்குரிய முறையில் அவன் இருபுறமும் காட்டை நோக்கியபடி வருவதை அவன் கண்டான். சிரித்தபடி “அசைந்தாடி வருகிறான், அறிவிலி” என்றார் யுதிஷ்டிரன். பீமன் வந்து பணிந்தபோது “நலம் சூழ்க!” என்று வாழ்த்தியபின் “நாம் நம் கடன்களை இயற்றவேண்டியிருக்கிறது, இளையோனே. அனைத்தும் ஒருங்கியாகவேண்டும்” என்றார்.
பீமன் “ஆம்” என ஆர்வமின்றி சொல்லி அப்பாலிருந்த பாறைமேல் அமர்ந்தான். தொலைவில் இளைய யாதவரும் அர்ஜுனனும் வருவது தெரிந்தது. அவர்களும் இயல்பான உடலசைவுகளுடன் மெல்லிய சொல்லாடலுடன் அணுகினர். சகதேவன் அர்ஜுனனை கூர்ந்து நோக்கினான். அவனிடம் என்ன நிகழ்ந்திருக்கிறது என்று உணர முடியவில்லை. அவன் பீமனைப்போல இளமைக்கு மீளவில்லை. முன்பிருந்த இயல்புகள் எவையும் அவனிடம் இல்லை. ஆனால் அவன் அசைவுகளில் விடுதலை இருந்தது. தன்னை முற்றாக காற்றுக்கு ஒப்புக்கொடுத்த சருகுகளில் இருக்கும் விடுதலை.
அவர்கள் வந்து யுதிஷ்டிரனைப் பணிந்து வாழ்த்து பெற்றனர். அவர்களை அழைக்கச் சென்றிருந்த யுயுத்ஸு அவர்களை தொடர்ந்து வந்து அப்பால் நின்றான். அர்ஜுனன் விலகிச் சென்று பீமனின் அருகே அமர இளைய யாதவர் யுதிஷ்டிரனின் அருகே அமர்ந்தார். யுதிஷ்டிரன் “நான் உங்களுக்காகவே காத்திருந்தேன். நாம் நீர்க்கடன் செய்ய இனி எந்தத் தடையும் இல்லை. தௌம்யரிடம் ஆணையிட்டுவிட்டேன். இனி நாம் ஒவ்வொருவரும் இங்கு நிகழும் எவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்பதை மட்டும் பிரித்துக்கொள்வோம். தௌம்யர் அவற்றை உரைக்கட்டும். அவர் சொல் என் ஆணை எனக் கொள்ளப்படும்” என்றார். இளைய யாதவர் “ஆம், பணிகளை தொடங்கவேண்டியதுதான். நமக்கு இன்னமும் ஒரு பகலும் ஓர் இரவுமே எஞ்சியிருக்கின்றன” என்றார்.
யுயுத்ஸு மெல்ல கனைத்தான். யுதிஷ்டிரன் திரும்பி அவனை பார்த்தார். அவன் தாழ்ந்த குரலில் “அதற்கு முன் ஒன்று எஞ்சியிருக்கிறது. மூத்தவர்கள் தங்கள் அரசியரிடம் ஒரு சொல்லேனும் பேசியாக வேண்டும்” என்றான். யுதிஷ்டிரன் சினத்துடன் “அனைத்தையும் பேசிவிட்டோமே? அரசியின் ஆணைப்படிதான் இங்கே அஸ்வத்தாமனின் நுதல்மணி வந்துள்ளது” என்றார். “ஆம், அது முதல் அரசியிடம் நாம் பேசியது. இன்னமும் பிற அரசியர் எஞ்சியிருக்கிறார்கள்” என்று யுயுத்ஸு சொன்னான். “அவர்கள் நேற்று மாலைதான் இங்கே வந்திறங்கியிருக்கிறார்கள். அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் இன்னமும் அறியோம்.”
“அவர்கள் இருக்கும் உளநிலையை அறிய பெரிய கற்பனை ஏதும் தேவையில்லை” என யுதிஷ்டிரன் எரிச்சலுடன் சொன்னார். “முறைப்படி அவர்களிடம் சொல்பெற்று நீர்க்கடன் நிகழட்டும். அவர்களிடம் சொல்பெற நாளை முதற்காலைப் பொழுதில் வருவோம் என்னும் செய்தியை மட்டும் அவர்களிடம் தெரிவிக்கலாம். மற்றபடி இப்போது நாம் செய்வதற்கொன்றுமில்லை.” அவர் ஏனென்றறியாமல் சீற்றம் கொண்டார். “ஒருவேளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் திரௌபதியைப்போல வஞ்சினங்கள் இருக்குமென்றாலும் இனி நாம் அவற்றை பொருட்படுத்தப்போவதில்லை.”
யுயுத்ஸு “அவர்களிடம் வஞ்சினம் இருக்கும், எதிரிகள் என நாம் அமைவோம்” என்றான். யுதிஷ்டிரன் சீறித்திரும்பி “என்ன சொல்கிறாய்?” என்றார். யுயுத்ஸு “அவர்களிடம் சில சொற்களேனும் நமக்கென இருக்கும். நாம் அவற்றை கேட்டாகவேண்டும். அரசே, நீங்களும் மூத்தவர்களும் தங்கள் பிற அரசியரையும் சந்தித்தாகவேண்டும். அதுவே முறை” என்றான். “ஒருவேளை அவர்கள் தீச்சொல்லிடலாம். எனில் நாம் அதைப் பெற்றே ஆகவேண்டும்.”
யுதிஷ்டிரன் “வீண்பேச்சு… இனி இதை நாம் தொடங்கினால் இந்த நீர்க்கடன் சடங்கு நிகழவே போவதில்லை” என்றார். “அவர்கள் இரண்டாமிடத்தில் இருப்பவர்களே. இப்போர் நிகழ்ந்தது திரௌபதிக்காக. வேறு எவருக்காக என்றாலும் இவை நிகழ்ந்திருக்காது. அதை அவர்களும் நன்கறிவார்கள்.” யுயுத்ஸு “அதையும் அவர்களிடமே சொல்லலாமே” என்றான். “நீ உன் இடமறிந்து பேசு… போதும்” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு “ஆம்” என தலைவணங்கினான்.
சகதேவன் அர்ஜுனனையே நோக்கிக்கொண்டிருந்தான். அவனிடம் இருக்கும் விடுதலை என்ன? எதிலிருந்து அடைந்த விடுதலை? அவன் அதுவரை அமர்ந்திருக்கும் கோலம் நினைவுக்கு வந்தது. தலைகுனிந்து முடிக்கற்றைகள் விழுந்து முகம் மறைக்க, விரல்கள் பின்னி நெளிந்துகொண்டே இருக்க, உதடுகள் வலிகொண்டவை என நெளிய, புருவங்கள் நெரிபட எக்கணமும் எழுந்து எதையோ சொல்லிவிடுபவன்போல, அல்லது எழுந்து அகன்றுவிடுபவன் என தோன்றுவான். அப்போது அவன் முழுதமைந்திருந்தான். அங்கிருக்கும் அந்தக் கல்லைப்போல குளிர்ந்து, பதிந்து, காலம் கடந்து.
ஒரு கணம் அவனுக்கு விந்தையானதோர் உணர்வு ஏற்பட்டது, அர்ஜுனன் ஒரு முனிவராக மாறிவிட்டதாக. நோக்க நோக்க அவ்வுணர்வு மீறி எழுந்தது. விழிவிலக்கி அவ்வெண்ணத்தை ஆராய்ந்து மீண்டும் நோக்கினான். அந்த எண்ணம் மேலும் வலுத்தது. அவனை யோகி என்பதுண்டு. வில்லை ஊழ்கமெனக் கொண்டவன். யோகியர் முனிவர்களாவது எப்போது? யோகமெனப் பயிலும் அந்தப் பாதையையும் அவர்கள் கடந்துவிடும்போதா?
யுதிஷ்டிரன் பெருமூச்சுடன் எழுந்துகொண்டு “அனைத்தும் இனி தௌம்யரின் எண்ணப்படி ஆகுக. நாளை காலை நம் குலத்து மாண்டோர் விண்புகுக!” என்றார். தௌம்யர் “ஆம், அனைத்தும் நிறைவுறுக!” என்றார். யுதிஷ்டிரன் விழிகளை அப்பால் வெயில் விரிந்த பாதை நோக்கி திருப்பிக்கொண்டு “நீ கூறுவதும் ஒருவகையில் சரிதான். நாம் அவர்களைச் சென்று நோக்கியாகவேண்டும்… இளையோர் தங்கள் மறுதுணைவியரைச் சென்று கண்டு சொல் பெறட்டும்” என்றார்.
பீமன் “அதற்கான தேவை உண்டா?” என்றான். யுதிஷ்டிரன் “உனக்கு தனியாக நான் ஆணையிடவேண்டுமா என்ன?” என்றார். பீமன் சலிப்புடன் தலையசைத்தான். நகுலன் “நாம் செய்யவேண்டியவைதான், மூத்தவரே” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் அமர்ந்திருக்க யுதிஷ்டிரன் அவனை ஒருகணம் நோக்கிவிட்டு மேலாடைக்காக கைநீட்டினார். ஏவலன் மேலாடையை எடுத்து அளிக்க அதை சுற்றிக்கொண்டு நடந்தார். நகுலனும் யுயுத்ஸுவும் அவருக்கு இருபுறமும் சென்றனர். பீமன் தனியாக நடக்க இளைய யாதவரும் அர்ஜுனனும் உடன் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து தௌம்யரும் மாணவர்களும் அகன்றனர்.
ஏவலரும் சென்றபின் சகதேவன் தலைகுனிந்து ஒரு சிறு குச்சியால் மண்ணை கீறியபடி அங்கேயே அமர்ந்திருந்தான். உள்ளத்தில் சொற்கள் ஊறிக்கொண்டிருந்தன. அர்ஜுனனின் நிறைவுமுகம். பீமனின் இளமை மீண்ட முகம். திரௌபதியின், யுதிஷ்டிரனின் முகம். அவன் சொற்கள் வழியாக சென்றுகொண்டிருந்தபோது அருகே மீண்டும் சுருதசேனனை உணர்ந்தான். அவன் உள்ளம் முற்றாக செயலிழந்திருக்கவில்லை. ஆகவே திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். சுருதசேனன் துயரம் நிறைந்த விழிகளுடன் நின்றிருந்தான்.
இது உளமயக்கல்ல, கனவும் அல்ல. இது மெய். இந்த மரங்களைப்போல, இந்த பாறைக்கல்லைப்போல. அவன் அவ்வுருவை கலைக்க எண்ணினான். ஏனென்றால் அது அவனை பதறச் செய்தது. அதன் அந்த வெளிப்படைத் தன்மையில் பிழை என ஏதோ தோன்றியது. “மைந்தா!” என்றான். “தந்தையே!” என்று சுருதசேனன் சொன்னான். “நீயா? நீ இங்குதான் இருக்கிறாயா?” சுருதசேனன் “ஆம் தந்தையே, நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்” என்றான்.
அவனுக்குப் பின்னால் நிர்மித்ரனும் யௌதேயனும் சுருதகீர்த்தியும் சர்வதனும் சுதசோமனும் தோன்றினார்கள். பிரதிவிந்தியன் சற்று அப்பால் நின்றிருந்தான். அவனுடன் சதானீகன் நின்றான். அபிமன்யுவுக்காக அவன் விழிகள் தேட சுருதசேனன் “அபிமன்யு எங்களுடன் இல்லை. அவனுடைய வழி வேறு” என்றான். “ஏன்?” என்றான் சகதேவன். “அவனுடைய அகம் நிறைவுறவில்லை” என்றான் சுருதசேனன். “நீங்கள் நிறைவுற்றீர்களா, மைந்தர்களே?” என்றான் சகதேவன்.
“நாங்கள் எதையும் விழையவில்லை. எதையும் எஞ்சவிட்டும் செல்லவில்லை” என்று சுருதசேனன் சொன்னான். “அபிமன்யு அங்கிருக்கிறான்” என்றான் சதானீகன். “எங்கே?” என்றான் சகதேவன். சதானீகன் மறுமொழி சொல்லவில்லை. “எங்கிருக்கிறான்?” என்று மீண்டும் சகதேவன் கேட்டான். “தந்தையே, இனி நாங்கள் தங்களை பார்க்க இயலாது. எவ்வகையிலும் உடனிருக்க இயலாது. இன்று பகலிரவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆகவேதான் வந்தோம்” என்றான் பிரதிவிந்தியன். “இந்தப் புவியின் ஐம்பருக்களுடனும் எங்களுக்கு இன்று தொடர்பில்லை. ஆயினும் இந்த உலகம் எங்களை பற்றிக்கொண்டிருக்கிறது” என்று சதானீகன் சொன்னான். “ஒவ்வொரு கணமும் துயரையே உணர்கிறோம். எனினும் எங்களால் விலக இயலவில்லை” என்றான் சுருதசேனன்.
சுருதகீர்த்தி “உண்மையில் இது ஓர் அலைக்கழிப்பு… எங்களை ஒவ்வொரு கணமும் கலைத்துக்கொண்டிருக்கிறது வெளி. நாங்கள் உருவெடுக்க, நிலைகொள்ள போராடுகிறோம்” என்றான். “உங்கள் துயரமே எங்களை இங்கே தக்க வைத்திருக்கிறது. உங்கள் உள்ளத்தில் எஞ்சும் வடிவையே நாங்கள் கொள்ளமுடிகிறது. நீங்கள் துயரழிகையில் நாங்கள் மறைந்துவிடுவோம்.” பிரதிவிந்தியன் “துயர்கொண்டவர்கள் அனைவருமே அத்துயரை எவ்வகையிலேனும் கரைத்தழிக்கவே முயல்கிறார்கள். நீங்களும் நாளை அதை கரைக்கத் தொடங்குவீர்கள். அந்நிகழ்வு ஒரு தொடக்கம். பற்பல தலைமுறைகளாக செய்யப்பட்டு பொருளேற்றம் கொண்டது. எங்களை உங்கள் அகத்திலிருந்து கரைத்துவிடுவீர்கள்” என்றான்.
“என்ன?” என்றபடி சகதேவன் எழுந்துகொண்டான். “என்ன சொல்கிறாய்?” என்று கேட்டபடி அவன் கையை நீட்டினான். “நாளை காலை நீர்க்கடன் அளித்து எங்களை விண்ணேற்றிவிடுவார்கள்” என்றான் நிர்மித்ரன். “அதன்பின்? அதன்பின்?” என்றான் சகதேவன். உடலெங்கும் பரவிய பதற்றத்துடன் “அதன்பின் எங்கிருப்பீர்கள்? என் மைந்தர்களே, அதன்பின் எங்கிருப்பீர்கள்?” என்றான். “அதன்பின் விண்ணில் இருப்போம். ஆனால் உருவழிந்து, தன்னிலை கரைந்து. தந்தையே, மண்ணிலிருந்து விண்ணிலெழும் எதுவும் அவ்வாறே ஆகிவிடுகிறது.”
“என் செல்லங்களே, என் தெய்வங்களே!” என சகதேவன் கதறினான். “உங்களை எப்படி நான் விடுவேன்? அதன்பின் இப்புவியில் எனக்கு எஞ்சியிருப்பது என்ன?” அவன் அவர்களை பிடிக்க முன்னகர அவர்கள் இயல்பாக பின்னடைந்தார்கள். சுருதசேனன் “நாங்கள் சென்றேயாக வேண்டும், தந்தையே. அதுவே மாறா நெறி” என்றான். “இல்லை, நான் ஒப்பமாட்டேன். நீர்க்கடன் நிகழ விடமாட்டேன்…” என்று சகதேவன் கூவியபடி மைந்தனைப் பிடிக்கத் தாவினான். அவர்கள் துயர் நிறைந்த முகத்துடன் மேலும் பின்னடைந்தார்கள். “சுருதசேனா, மைந்தா!” என்று கதறியபடி முகம்படிய மண்ணில் விழுந்து நினைவழிந்தான் சகதேவன்.