பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 9
எப்போதுமே தனிமையை ஓர் அழுத்தமாகவே யுயுத்ஸு உணர்ந்து வந்தான். ஆனால் ஒன்று நிகழ்வதற்கு முன் அமையும் தனிமையை அவன் வியப்புடன் மீளமீள எண்ணிக்கொள்வதுண்டு. அப்போது மானுடர் அனைவருமே சற்று கைவிடப்பட்டவர்களாகத் தெரிவார்கள். அவர்களை ஆட்டுவித்த சரடுகள் அனைத்தும் தளர்ந்துவிட, செய்வதறியாமல் தளர்ந்து நின்றிருப்பார்கள். செயல் அவர்களில் விண்ணிலிருந்து மின் இறங்கி மரங்களைப் பற்றி எரியச்செய்வதுபோல நிகழ்கிறது. செயல்கள் அனைத்தையும் அவற்றுக்குரிய தெய்வங்களே இயற்றுகின்றன. பெருஞ்செயல்களை பெருந்தெய்வங்கள்.
அவன் அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் போருக்குரிய சடங்குகளைச் செய்வதை நோக்கி நின்றிருந்தான். அவர்கள் இருவருமே தளர்ந்துபோய், ஆர்வமற்றவர்களாகவே தெரிந்தனர். தொய்ந்த நடையில் சென்று கொற்றவையையும் பின்னர் பரசுராமரையும் வணங்கினர். இரு எல்லைகளிலாக நின்றுகொண்டனர். பரசுராமரின் மாணவர்கள் மேலும் விரிந்து அந்தக் களத்தை விரிவாக்கினர். பறவைகளின் ஒலி மட்டும் அங்கே கேட்டுக்கொண்டிருந்தது. அஸ்வத்தாமனின் வில் அவனுடைய தலைக்குமேல் புலியின் வால் என எழுந்து தெரிந்தது. காண்டீபம் அத்தனை உயரம் கொண்டதாக இருக்கவில்லை. இருவரும் கால் அகற்றி நிலைகொண்டனர்.
யுயுத்ஸு இருவரின் கால்களையும் நோக்கிக்கொண்டிருந்தான். வில்லவர்களின் கால்கள் பறவைக்கால்களைப்போல, மண்ணில் ஊன்றியிருந்தாலும் அவை மண்ணுக்குரியவை அல்ல. அவை காற்றிலெழும் கணம் தேடியே மண்ணில் தொட்டுத்தாவுகின்றன. பறவைக்கால்களால் மட்டுமே நடனமாட முடியும். அனைத்துப் பறவைகளும் நடனமாடுகின்றன. நடனமாடும் விலங்கு பறவையாகிவிடுகிறது. இந்த வில், இது விசைகொண்டு வளைந்த கிளை. அந்த அம்புகள் பறவைகள். பறவைகளை ஆள்பவர்கள் வில்லவர். அவர்கள் பறத்தலை உன்னி ஊழ்கம் செய்து தேர்ந்து தாங்களும் ஒருவகை பறவைகளாக ஆகிவிடுகிறார்கள்.
பரசுராமரின் மாணவர் லிகிதர் போருக்கான நெறிமுறைகளை அறிவித்தார். அதன்பின் பரசுராமரை வணங்கி வலப்பக்கம் சென்று நின்றார். பரசுராமர் போர் தொடங்குக என கைதூக்கினார். ஒரு சங்கொலி தேம்பி அணைந்தது. அவ்வொலி கேட்டு பறவைகள் கலைந்து வானில் எழுந்து கூச்சலிட்டபடி சுழன்றன. வானிலிருந்து மெல்லிய புலரொளி விழுந்து களமுற்றம் துலங்கியது. கூழாங்கற்கள் முழுத்து எழுந்து தெரிந்தன. இளங்காற்று ஒன்று கடந்துசென்றபோது மேலாடைகள் வண்ணங்களுடன் அசைந்தன. உதிர்ந்த சருகொன்று எழுந்து இடம் மாறியது.
இரு வில்லவர்களும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு அசையாமல் நின்றிருந்தார்கள். அவர்களுக்குள் விசை முனைகொண்டு விழிகளில் ஒளித்துளியாகியது. கைவிரல்கள் விற்களை மலர்த்தண்டை என பற்றியிருந்தன. கால்களில் தசைகள் இழுபட்டிருந்தன. எக்கணம் போர் நிகழும் என எவராலும் சொல்லிவிட முடியாது. எவர் அம்பு எடுப்பார் என்றும். அது நூறுமுறை ஆயிரம் முறை நோக்கினாலும் கணிப்புகள் அனைத்துக்கும் அப்பாற்பட்டது. அவர்களில் இப்போது நிகழ்வதென்ன? எவரோ வந்து அமர்ந்துகொள்வதற்கு முன்பிருக்கும் பீடத்தின் வெறுமையின் தவிப்பு.
போர் தொடங்கிவிட்டிருந்தது. அஸ்வத்தாமன் முதல் அம்பை அர்ஜுனனை நோக்கி தொடுக்க அர்ஜுனன் அதை இயல்பாக உடல்வளைந்து ஒழிந்தான். கூட்டத்திலிருந்து ஒரு மென்முழக்கம் எழுந்தமைந்தது. அர்ஜுனனின் அம்பை அஸ்வத்தாமன் ஒழிந்தான். அர்ஜுனனிடம் இருந்த பெண்மை லாஸ்யமென வெளிப்பட அஸ்வத்தாமனிடம் வெளிப்பட்டது தாண்டவம். இருவரும் தேர்ந்தவர்களாக இருக்கையில் நிகழ்வது அம்பு என்னும் வடிவுக்கும் மானுட உடலென்னும் வடிவுக்கும் இடையேயான போட்டிதான். அம்பின் நேர்ப்போக்கும் உடலின் வளைதலும். அம்பின் சீற்றமும் உடலின் நடனமும். உடல் ஒழியும் அம்புகளை நிலம் வாங்கிக்கொள்கிறது. நிலமே உடலென்பர் நூலோர். அன்னம் கொள்ளும் இரு வடிவங்கள்.
அம்புகள் மின்னி மின்னி காற்று சீறும் ஒலியுடன் கடந்து சென்றன. மண்ணில் தைத்து நின்று சிறகசைந்தன. நாற்றுநட்ட வயல் என ஆயிற்று அக்களம். அவற்றில் ஏதேனும் வடிவம் உள்ளதா? ஒழுங்கற்றவை எனத் தோன்றினாலும் வடிவமென ஒன்று இருந்தாகவேண்டும். அர்ஜுனனுக்குப் பின்னாலிருக்கும் இந்த அம்புகளின் வடிவம் அவன் உடலால் ஒழியப்பட்டது. அவன் உடலின் இந்நடனத்தின் நிழலுருவம் அதில் இருந்தாகவேண்டும்.
யுயுத்ஸு புன்னகைத்தான். அவனால் போரை உள்ளம் பெருகி ஓடாமல் நிகழ்த்த முடிவதே இல்லை. ஆகவேதான் அவன் மிகத் திறன் குறைந்த வில்லவனாக ஆனான். அவனுக்குப் பயிற்றுவித்த கிருபர் “உனக்குரியது சொல் மட்டுமே” என்றார். துரோணர் “நீ களத்திற்கே வரவேண்டியதில்லை. அரசநெறிகள் உசாவுகையில் மட்டும் வந்து அமர்ந்துகொள்” என்றார். அவன் குருக்ஷேத்ரத்திலும் சொல்பெருகும் உள்ளத்துடன்தான் நின்றிருந்தான்.
அவனை எந்த அம்பும் தாக்கவில்லை. ஏனென்றால் அவன் பெரும்பாலும் களத்திற்குப் பின்னணியிலேயே இருந்தான். யுதிஷ்டிரனும் அவனும் படைசூழவே நின்றிருந்தனர். அங்கும் அம்புகள் வந்து கவியத்தான் செய்தன. ஆனால் எந்த அம்பும் அவனை அடையவில்லை. சொல்பெருகி ஒரு அரண் என அம்புகளை தடுத்திருக்கலாம். அந்தப் படைப் பின்னணிநிரை என்பது ஓர் ஆழம். மேல்தட்டில் அம்புகள் கொந்தளித்தன. அவையே சொற்களென ஆகி அடித்தட்டில் படிந்துகொண்டே இருந்தன. சேறுபோல. குப்பைபோல. அவன் அங்கே திகழ்ந்தான். கடலடியின் கரிய அட்டைபோல. நீந்தல் அறியாதது. விழியிலாதது.
போர் விசைகொண்டபடியே சென்றது. இரு வில்லவர்களும் இரு எல்லைகளிலும் நின்று சுழன்றனர். விழிதொட முடியாத விரைவுகொண்டிருந்தன அவர்களின் கைகள். யாழ்க்கலைஞனின் விரல்கள்போல. அவை பருவடிவம் அழிந்து நீர்வடிவம் கொள்கின்றன. பின்னர் காற்றென்றே ஆகிவிடுகின்றன. அவன் இசை நுகர்பவன் அல்ல. ஆனால் இசையெனும் விந்தையை எப்போதுமே திகைப்புடன் நோக்கிவந்தான். மானுட உடல் தன் எல்லையை மீறும்போதே மெய்யான இசை எழுகிறது. அம்புகளும் அவ்வாறே. எந்தக் கலையும் அவ்வகையான மீறல் மட்டுமே.
எத்தனை முறை கண்டிருப்போம் இரு இணைவில்லவரின் போர்களை. இமையசைக்காமல் காலமில்லாமல் நோக்கி நின்றிருப்போம். அவை எழுகையில் வெவ்வேறு. முடியும்போது அறியமுடியாமை நிகழ்ந்து நின்ற கணம். ஆனால் நடுவே நிகழ்வென அவை ஒன்றே. ஒரே அசைவுகள், எழுப்பும் உணர்ச்சிகளும் ஒன்றே. ஆனாலும் அவை சலிப்பதில்லை. ஏனென்றால் அவற்றில் என் உள்ளமும் சென்று சேர்ந்துவிடுகிறது. இதோ இரண்டெனப் பிரிந்து நின்று போரிடுவது நானே. ஓர் எண்ணம் இன்னொரு எண்ணத்தை அறைவதுபோல. ஓர் உணர்வு இன்னொரு உணர்வால் அறைந்து சுழற்றப்படுவதுபோல.
நோக்க நோக்க சலிக்காதிருப்பது எதுவோ அதுவே இறைநிகழ்வு போலும். கடலோ காடோ முகிலோ யானையோ. இதில் சலிக்காதிருப்பது என்ன? விரைவா? கைசுழல கால்கள் தொட்டுத்தாவ நிகழும் எளிதான இயல்கையா? இரு மானுடர் இறகென அனலென ஆகிவிடும் விந்தையா? பிறிதொன்று. அவர்கள் ஒருவரை ஒருவர் உள்ளத்தால் கவ்விக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மற்றவரை எண்ணி எண்ணி உட்புகுந்து ஒருவர் பிறிதொருவராகவும் மாறி நின்று போரிட்டுக்கொள்கிறார்கள். உடலென்றும் உள்ளமென்றும் இருப்பென்றும் ஆன எல்லைகளை கடந்துசெல்கிறார்கள். உருவமே உடலின் எல்லை. உருவத்தை உதறிச்செல்ல அதற்கிருக்கும் ஒரே வழி விசைகொள்ளுதல்தான்…
யுயுத்ஸு அவனுடைய உள்ளத்தின் கட்டற்ற சொற்பெருக்கு அணைந்துகொண்டே இருப்பதை உணர்ந்தான். சொற்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு விசையழிந்தன. தேங்கிய சொற்கள் பிற சொற்களை தடுத்தன. சொற்கள் குழம்பிக்கொள்ள ஓர் ஓலமென ஆகியது அகம். பின்னர் ஒன்றும் நிகழவில்லை. ஓடி எழுந்து மலைவிளிம்பிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்துவிட்டதுபோல. அவன் அமைதியில் விழுந்து விழுந்து இறங்கிக்கொண்டே இருந்தான். அனைத்தும் ஒரு ரீங்காரமாக மாறி அகல முழுமையான அமைதி.
அவன் வேறெங்கோ நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அஸ்வத்தாமனின் தோற்றம் என கர்ணன் எழுந்துவிட்டிருப்பதை கண்டான். அழகிய கரிய நீளுருவம். நெளியும் பெருங்கைகள். கூரிய விழிகள். “அங்கர்! அங்கர்!” என கொந்தளித்துக் கூச்சலிடுவது யார்? அங்கரை எதிர்த்துப் போரிடுவது அர்ஜுனன் அல்ல என அவன் கண்டான். “பீஷ்மர்!” பிதாமகரின் கைகள் அமைதியாகச் சுழல அம்புகள் சீராக எழுந்துகொண்டிருந்தன. அவை கர்ணனின் அம்புகளை மணியோசையுடன் அறைந்து வீழ்த்தின. பீஷ்மரின் உடலை கர்ணனின் நீளம்பு ஒன்று தைத்தது. அவர் உறுமியபடி எடுத்துத் தொடுத்த அம்பு கர்ணனின் நெஞ்சிலறைந்து அவனை தூக்கி வீசியது.
கைஊன்றி புரண்டு தாவி எழுந்தவன் ஜயத்ரதன் என்று யுயுத்ஸு கண்டான். இது என்ன விந்தை, என் விழிமயக்கா என அவன் வியந்தான். ஆனால் அது நிகழ்ந்துகொண்டிருந்தது. ஜயத்ரதனை எதிர்ப்பது யார் என அவன் நோக்கினான். அர்ஜுனனின் உடல் மருவி பூரிசிரவஸாக தெரிந்தது. என்ன நிகழ்கிறது? நான் மயங்கி விழுந்துவிட்டேனா? அஸ்வத்தாமன் உடல் உருகி பிறிதொன்றாகியது. அங்கே துரோணரை அவன் கண்டான். அவரை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்தவர் கிருபர். அவன் அந்த உளமயக்கை உதறி மீள முயன்றான். ஆனால் அது உளமயக்கல்ல, விழிமுன் நிகழ்ந்துகொண்டிருந்தது.
ஒவ்வொரு உருவாக மாறி மாறி எழுந்தது. அஸ்வத்தாமனாக பீமன் எழ அவனை எதிர்த்து அர்ஜுனன் போரிட்டான். எவரை எதிர்த்து எவர் எழுகிறார்கள்? எவர் வெல்கிறார்கள்? கொல்பவரும் கொல்லப்படுபவரும் எவர்? அறுதியாக எழுந்த துரியோதனனை எதிர்ப்பவர் இளைய யாதவரா என்ன? அர்ஜுனன்தான், ஆனால் பீலி சூடியிருந்தான். முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.
யுயுத்ஸு தனிமையை மீண்டும் உணர்ந்தான். இதுவரை போர் தொடங்கவில்லை என்பதுபோல. இன்னும் போர் எழவிருக்கிறது என்பதுபோல. போர் உண்மையில் நிகழ்கிறதா? ஏதேனும் நூலில் படித்துக்கொண்டிருக்கிறேனா? எந்த நூல்? அவன் கனவில் ஒரு நூலை அடிக்கடி படிப்பதுண்டு. பல ஆயிரம் பாடல்கள் கொண்டது. வாழ்க்கையின் அத்தனை உணர்வுகளையும் உரைப்பது. அத்தனை எண்ணங்களையும் உள்ளடக்கியது. நெறிகளனைத்தையும் ஒன்றுவிடாமல் உரைப்பது. பிறிதொரு நூல் புவியில் தேவையில்லை என தான் நிலைகொள்வது.
அவன் மெய்ப்புகொண்டான். அந்நூலைத்தான் இதோ பார்த்துக்கொண்டிருக்கிறேன். இவை அந்நூலில் சொல்லெனத் திகழ்பவை. அப்பேராசிரியனின் கைபட்டு ஏட்டில் மலர்பவை. அவன் எழுதிக்கொண்டே இருக்கிறான். தலைமுறைகளுக்கு முன் அஸ்தினபுரியில் இருந்து மறைந்த வியாசனாகிய கிருஷ்ண துவைபாயனன் மறையவில்லை என்று சொல்லப்படுவதுண்டு. அவர் எங்கிருந்தோ அனைத்தையும் அறிகிறார். அனைத்தையும் எழுதிக்கொண்டிருக்கிறார். இங்கு நிகழும் ஒரு நிகழ்வுகூட மறையப்போவதில்லை. சொல்லப்படும் ஒரு சொல்கூட வீணாக ஆவதில்லை.
யுயுத்ஸு தன் எதிரே வியாசரை பார்த்தான். அவர் தர்ப்பைப்புல் விரிக்கப்பட்ட மரத்தாலான மேடையில் அமர்ந்திருந்தார். எதிரே பெரும்பள்ளத்தாக்கு கீழிறங்கி அலையென மடிந்தெழுந்து மலையடுக்குகளாக மேலேறிச் சென்று ஒளிரும் உச்சிப்பாறைகளை சூடியிருந்தது. முகில்கள் ஒளிகொண்டிருந்தன. அவர் கண்களை அவ்வெளி நோக்கி நிலைக்கவிட்டு கைகளால் தாடியை தடவிக்கொண்டிருந்தார்.
அவருடைய வலப்பக்கம் கரிய, பெருத்த உடல்கொண்ட ஓர் கற்றுச்சொல்லி அமர்ந்திருந்தான். மிக இளையவன். அவருக்கு முன்னால் நான்கு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். வைசம்பாயனன் அவர்களில் அகவை மூத்தவன். சுமந்து, ஜைமினி, பைலன் மூவரும் இளையோர். அப்பால் கையில் யாழுடன் தனித்து அமர்ந்திருப்பவன் அவருடைய சூத மாணவன்.
வியாசர் “சொல்க!” என்றார். “நான் எப்படி அதை சொல்லமுடியும்? நான் கவிஞன் அல்ல, சொல்வலனும் அல்ல” என்றான் யுயுத்ஸு. “நீ அதை விழிகளால் பார்த்தாய்” என்றார் வியாசர். “ஆம், நான் பார்த்தேன்” என யுயுத்ஸு பெருமூச்சுவிட்டான். “நீ உன் அகவிழிகளாலும் பார்த்தாய். நிகழ்வுகள் எளியவை. அவற்றின்மேல் சென்று படியும் அகமே அவற்றை பொருள்கொண்டவை என ஆக்குகிறது. பாறைமேல் பவளப்பூச்சிகள் பல்லாயிரமாண்டுகளாக படிகின்றன. ஒன்றின்மேல் இன்னொன்று படிகிறது. அவை படிகமாகி பவளமாகின்றன. பாறை அதற்கு அடியில் வெறும் முதல் வடிவம் என அமைந்துள்ளது” என்றார் வியாசர்.
“ஆம், நான் என் முழுச் சொற்களாலும் அந்நிகழ்வின்மேல் அறைந்தேன். என்னை சிதறடித்துக்கொண்டேன். நான் அறிந்தவற்றை, நான் என தொகுத்துக்கொண்டவற்றை… ஒரு துளி எஞ்சாமல் அங்கே இருந்தேன்” என்று யுயுத்ஸு சொன்னான். “அதுவே உன்னை சொல்லும் தகுதி கொண்டவனாக்குகிறது” என்றார் வியாசர். யுயுத்ஸு சொற்களை திரட்டிக்கொள்ள முயன்றான். முதற்சொல் என எழுவது எது? முதற்சொல்! முதற்சொல்! அவன் அகம் தவித்தது. பின்னர் சலித்தமைந்தது. சோர்ந்து என்னால் இயலாது என எண்ணிக்கொண்டான். அவன் பின்வாங்கிய கணம் ஒரு சொற்றொடர் அவனை வந்தடைந்தது.
“தெய்வம் மானுடனுக்கு அருள்கையில் அவனை தெய்வமாக்குகிறது. தெய்வத்தை ஒருகணம் மானுடனாக்கி அவ்வருளை மானுடன் பெற்றுக்கொள்கிறான்” என்று அவன் சொன்னான். வியாசரின் முகம் மலர்ந்தது. கனிந்த விழிகள் அவனை நோக்கின. மாணவர்களும் முகம் மலர்ந்து அவனை பார்த்தனர். அவன் தன் உள்ளம் சொற்பெருக்கென பொங்கி எழுவதை உணர்ந்தான். “ஆசிரியரே, நான் கண்டேன் அப்பெரும்போரை. நிகரிலாத பெரும்போர் ஒன்று முடிந்த பின்னர் அது நிகழ்ந்தது. அனால் அப்போரும் அதே விசைகொண்டிருந்தது. அதே அழிவையும் உருவாக்கியது” என அவன் சொல்லத் தொடங்கினான்.
அர்ஜுனன் போரிட்டுக்கொண்டிருக்கையிலேயே உருமாறி தெய்வங்களும் மானுடருமாக தோன்றி மறைவதை, மறுபக்கம் அஸ்வத்தாமன் அவ்வண்ணமே நிகர் உருமாற்றம் கொள்வதை நான் கண்டேன். எந்தப் போரும் இங்கு எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் போர் ஒன்றின் பகுதியே என்று உணர்ந்தேன். அப்போரை நான் நூறாக ஆயிரமாக உடைந்து பரவி பல்லாயிரம் விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தேன். எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற இடங்களில் அது நிகழ்ந்துகொண்டிருந்தது.
அஸ்வத்தாமன் தன் நெற்றியில் அணிந்த அந்த மூவிழி ஒளிகொண்டு சிவந்தபடியே செல்வதை கண்டேன். அது அவருக்குள் எரியும் பெருந்தழல் ஒன்று பீறிட்டு வெளிவரும் சிறுதுளை எனத் தோன்றியது. செஞ்சடைகள் கொழுந்துவிட்டெரிந்தன. அம்புகளைத் தொடுத்தபடி சுழன்ற கைகளில் மானும் மழுவும் தோன்றி மறைந்தன. முப்புரம் எரித்த வில் அவர் கையிலெழுந்தது. ஒற்றைக்கால் ஊன்றி மறுகால் தூக்கி சடை சுழன்று பறக்க அவர் எழுந்தாடியபோது ஊழித் தாண்டவத்தைக் கண்டேன்.
ஒரு கணத்தில் கைகளில் தோன்றி மறைந்தது பேரழிவின் முத்திரை. வடவை எழுந்தது. அழிகிறது புவி என ஓலமிட்டன பூதங்கள் ஐந்தும். ஆம் ஆம் ஆம் என முழங்கியது வானம். சூழ்ந்தமைந்த தேவர்கள் அஞ்சி ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டார்கள். வெற்புகள் பொடிபடும் என முழங்கிய இடியோசையை கேட்டேன். வெற்றுக்களியொடு பூதக்கூட்டம் பாடும் எக்காளம். துடியொடு முழவும் உடுக்கொலியுடன் இணையும் வெறிமிகு தாளம். ஆழியில் அலைஎழுவதுபோல் அனல்பொங்கி அணைவதை கண்டேன். எஞ்சாது இனி எதுவும் என எண்ணி உளம் சமைந்தேன்.
இவ்விந்தையை என்னால் விளக்க இயலாது. ஒற்றைக் காற்புள்ளியில் சுழலும் முக்கண்ணனின் உருவிலெழுந்தன அத்தனை தெய்வங்களும். அத்தனை தேவர்களும் முனிவரும் எழுந்தனர். மூதாதையர் முகங்கள் தோன்றின. மூதன்னையர் தோன்றினர். மறைந்த மாவீரர்கள், பேரரசர்கள் எழுந்தனர். கற்றோர் கலைதேர் சூதர் எழுந்தனர். ஆசிரியரே, நான் மீண்டுமொருமுறை கண்டேன். அத்தோற்றத்தில் கையில் வேய்குழலும் முடியில் பீலியும் புன்னகைக்கும் முகமும் சிறுவர்களுக்குரிய விழிகளுமாக அவரை.
அவரைக் கண்டதுமே திகைத்துத் துடித்து மறுபக்கம் அர்ஜுனனை நோக்கினேன். அவரும் உருமாறிவிட்டிருந்தார். மேலும் மேலும் அகவை பின்னடைய இளமையின் பொலிவும் அழகும் தோன்றிக்கொண்டிருந்தன. இளந்தோள்கள், இளைய மார்பு. இளையோருக்குரிய சிரிப்பு. விழிகளில் அச்சமின்மையின் ஒளி. அவர் பதினெட்டு அகவை கொண்டவராகத் தெரிந்தார். அவர் கையில் இருந்த வில் உருமாறிவிட்டிருந்தது. அது கரும்பாலான வில். அவர் அம்புகள் அனைத்தும் மலர்கள். உடலிலி அவர் உடலென எழுந்துவிட்டிருந்தான். தன் மெல்லிய விரல்களால் அவர் வெண்ணிற முல்லைமலர் ஒன்றை எடுத்து நாணில் தொடுத்து எய்தார்.
பேரலை என எழுந்து சுருண்டு அணுகிவந்த அனலை எதிர்கொண்டது குளிர்ந்த வெண்ணிற சிறுமலர். அக்கணம் அனல்பெருக்கு உறைந்தது. செந்நிற மலர்வெளி என மாறியது. அச்சுழி நடுவே நின்றிருந்த அஸ்வத்தாமனின் நுதலில் சுடர்ந்த எரிமணியும் ஒரு மலர் என ஆவதை கண்டேன். அவர் முகத்திலும் அனல் அணைந்தது. மென்முறுவல் எழுந்தது. அவர் தலையில் ஒரு வெண்சுடர் எழக்கண்டேன். அது கூனலிளம்பிறைக்கீற்று என தெளிந்தேன். அதன் குளிரொளி அவர் உடலெங்கும் வழிந்திறங்க அவர் மெய்ப்பு கொண்டார். கை தழைய வில் தாழ்ந்து நிலம் தொட்டது. ஆசிரியரே, அவர் உடலின் இடப்பகுதியில் பெண்மை எழுந்தது. இடக்கை அசைவு கொடியென மென்மைகொண்டது.
மறுபக்கம் அர்ஜுனனின் இளைய உடல் முதுமை கொள்வதை கண்டேன். தசைகள் வற்றிச் சுருங்கி கருமை கொண்டன. பின்னர் அவை தழல்கொண்டு எரியலாயின. அவர் தலையில் குழல்கற்றைகள் செந்தழலாக கொழுந்தாடின. காதுகளில் நாகங்கள் குண்டலங்களாக நெளிந்தன. ஆசிரியரே, அவர் நெற்றியில் ஓர் அனல்துளி விழிதிறந்தமைவதை கண்டேன். அவரிடம் என்றுமிருந்த பெண்மை முற்றிலும் அகன்றுவிட்டிருந்தது. கொடியொன்று மரமாகி வேர் இறுகி உறுதியடைந்ததுபோல.
அஸ்வத்தாமனுக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே எழுந்த பரசுராமர் இரு கைகளையும் விரித்து நின்றிருப்பதை யுயுத்ஸு கண்டான். இடமுணர்ந்து, பொழுதுணர்ந்து நடுக்குகொண்டு நின்றான். “இங்கு இப்போர் முடிகிறது. இருவரும் தொடுத்தவை இணையாற்றல் கொண்ட அம்புகள். அவை ஒன்றையொன்று நிகர் செய்துவிட்டன. இனி போரில்லை” என பரசுராமர் அறிவித்தார். “இருவரும் வென்றனர், இருவரும் தோற்றனர்” என்று அவர் கூறியதும் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் தலைவணங்கினர். “ஒருவரை ஒருவர் வணங்குக! ஒருவரில் எழுந்த தெய்வத்தை பிறிதொருவர் தொழுவதாகவே அதற்குப் பொருள்” என்று பரசுராமர் ஆணையிட்டார்.
அர்ஜுனன் சென்று அஸ்வத்தாமனின் அருகே காண்டீபத்தைத் தாழ்த்தி அவன் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தன் வில்லை அர்ஜுனன் முன் தாழ்த்தி அவன் கால்களைத் தொட்டு வணங்கினான். இருவரையும் வாழ்த்தி கூடியிருந்தவர்கள் குரலெழுப்பினர். இருவரும் சென்று பரசுராமரை வணங்கினர். அவர் இருவருக்கும் தலைதொட்டு வாழ்த்தளித்தார். “சில போர்கள் முடிவதில்லை என்று உணர்க! இப்போர் இனி உங்களிடையே நிகழலாகாது” என்றார் பரசுராமர். “ஆம்” என்று அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். அஸ்வத்தாமன் புன்னகைத்தான்.
அர்ஜுனன் தலைவணங்கி திரும்புகையில் அஸ்வத்தாமன் “நில், பார்த்தா” என்றான். தன் நெற்றியிலணிந்திருந்த அருமணியைக் கழற்றி நீட்டி “இதை உன்னிடம் அளிப்பதற்கே எந்தை உண்மையாக விழைந்தார். அதனால்தான் அதை நான் என் நெற்றியிலேயே சூடியாகவேண்டும் என உறுதி கொண்டிருந்தேன். இன்று இதை நான் கடந்துவிட்டிருக்கிறேன். இது உனக்குரியது” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “அது எனக்கு அரியது. ஆனால் அதைச் சூடும் தகுதியிலாதவன் நான்” என்று தலைவணங்கி பின்னடைந்தான்.
அக்கணம் முன்னால் எழுந்த பீமன் “நான் அதன்பொருட்டே வந்தேன். அந்த அருமணியை எனக்களியுங்கள், ஆசிரியரே” என்றான். அஸ்வத்தாமன் புன்னகையுடன் அதை அவனை நோக்கி வீச பீமன் பற்றிக்கொண்டான். அஸ்வத்தாமனின் நெற்றியில் அந்த அருமணியின் கூர் பதிந்திருந்த இடத்தில் கூரிய குருதிப்புண் ஒன்று தோன்றியிருந்தது. அது ஊறிக்கசிந்து நெற்றியில் வழிந்தது. அவன் இளைய யாதவரை ஒருகணம் நோக்கியபின் திரும்பி காட்டுக்குள் நடந்து மறைந்தான்.
யுயுத்ஸு அப்போதுதான் இளைய யாதவர் அங்கிருப்பதை உணர்ந்து அவரை பார்த்தான். அவர் அர்ஜுனன் தோளைத் தொட்டு செல்வோம் என உதடசைக்க அர்ஜுனன் தலை அசைத்து உடன் சென்றான். பரசுராமர் எழுந்து லிகிதருடன் நடந்து அகன்றார். பீமன் அந்த அருமணியை தன் கையில் வைத்து புரட்டி நோக்கிக்கொண்டு செல்வதை யுயுத்ஸு கண்டான். அந்நிகழ்வின் பொருளை வெவ்வேறு கோணங்களில் பேசியபடி அனைவரும் கலைந்துசென்ற பின்னரும் அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அந்நிகழ்வுக்கு முன்பிருந்த தனிமையை சென்றடைந்தான்.
அத்தருணத்தை ஒரு சிறுநூலாக ஆக்கவேண்டும். அதை வியாசரின் மாணவர்கள் எவரைக் கொண்டாவது படித்துப்பார்க்கச் செய்யவேண்டும். ஒரு நூல். அதன் பெயர் அவன் நினைவிலெழுந்தது. மல்லீஸ்வரவிஜயம். மலரம்பனின் வெற்றி. ஆனால் தன்னை அளித்து அடைவது வெற்றியா என்ன? தன்னை அளிக்காமல் வெற்றி என்பது உண்டா? அவன் அந்நூலை ஏற்கெனவே இயற்றி வியாசரிடமே படித்துக்காட்டிவிட்டதுபோல் உணர்ந்தான். அந்நூலின் முதல் வரிகூட நினைவில் இருந்தது. வானவில்போல வண்ணக்குழம்பலாக அது கரைந்துவிட்டிருந்தது. அவன் அதை நினைவிலிருந்து மீட்டெடுக்க முயன்றபடி நடந்தான்.